Skip to Content

07.இன்றைய தேசபக்தி

இன்றைய தேசபக்தி

N.அசோகன்

இன்று நாட்டில் நிலவுகின்ற விலைவாசி, குழந்தைகளின் படிப்புச் செலவு மற்றும் தவணை முறையில் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க வேண்டிய அவசியம் போன்றவை எல்லாம் ஒன்று சேர்ந்து நம் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரை மேலும் சம்பாதிக்க நிர்பந்தப்படுத்துகின்றன. ஆனால் மாதாந்திரச் சம்பளம் பெறுகின்ற அவர்களின் வேலையில் இத்தகைய வருமானப் பெருக்கத்திற்கு அதிக வாய்ப்பில்லை. எல்லாப் பணக்கார நாடுகளிலும் சம்பளத்திற்காகச் செய்கின்ற வேலை கௌரவக் குறைவாகக் கருதப்படுகின்றது. அதிலும் அரசாங்க உத்யோகமென்பது மேலைநாடுகளில் யாரும் விரும்பாத ஒன்றாகும். அந்நாடுகளில் சுயமாகத் தொழில் செய்யத் தெரியாதவர்கள் தாம் அடுத்தவரிடம் சம்பளத்திற்கு வேலைக்குப் போகின்றார்கள். மேலைநாடுகளில் சமூகமே தொழில் முனைவர்களை மதிக்கின்றது. ஆனால் இந்தியாவில் இது தலைகீழாக உள்ளது. அரசாங்க வேலை கிடைக்காதவர்கள்தாம் இங்குக் கடை திறக்கின்றார்கள். இருந்தபோதிலும் இங்கும் நிலைமை மெள்ள மெள்ள மாறிக்கொண்டு வருகிறது.

அன்னியரின் நீண்டகால ஆதிக்கமென்ற காரணம் ஒரு பக்கமிருக்க, இன்னுமோர் ஆன்மீகக் காரணமும் உள்ளது. வேதத்தில் இரண்டு பிரிவுகளுள்ளன. ஒரு பிரிவு ஆன்மீக அறிவை வழங்குகின்றது. மற்றொன்று, சடங்குகளைப் பற்றிச் சொல்கிறது. வேதம் வழங்கும் ஆன்மீக அறிவை நாடியவர்கள் ரிஷிகளாகவும், முனிவர்களாகவும் விளங்கினார்கள். தவசிகளும், சன்னியாசிகளும் இன்றும் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்கிறார்கள். சடங்குகள் சம்பந்தப்பட்ட அறிவை நாடியவர்கள் புரோகிதர்களாக மாறி, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்கள். ரிஷி என்பவர் ஆன்மீகத் துறையில் அபாரத் தைரியத்தை வெளிப்படுத்துகின்றவராவார். இல்லறத்தில் சுயமாகத் தொழில் நடத்த முன்வருபவர், ரிஷிக்கு ஈடாக இல்லறத் துறையில் தைரியத்தை வெளிப்படுத்துகின்றார். நாம் பாதுகாப்பை நாடும் பொழுது நாளடைவில் அது நமக்குள் பயவுணர்வை உண்டு பண்ணுகிறது. பயத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, சமூகத்தில் மரியாதை தரும் நிலையை மனிதன் தேடுகிறான். மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்லவும் முனைகிறான். கடந்த ஏழெட்டு நூற்றாண்டுகளாக இந்தியா அனுபவித்த அன்னிய ஆதிக்கம் இந்தியர்களிடையே இருந்த தொழில்முனைப்பை மழுங்கடித்துவிட்டது.

செல்வ வளமென்பது தொழிலால் வருவது. தொழில் செய்வதில் ரிஸ்க் (risk) உள்ளது. தொழிலில் தீவிரமாக ஈடுபடும்பொழுது முழுமையாக ரிஸ்க் எடுத்துத்தான் செய்ய வேண்டும். மேலும், ரிஸ்க் என்பதை எந்நேரமும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். ஆகவே வெற்றி என்பது தைரியசாலிகளுக்குத்தானேயொழிய, பயந்து பின்வாங்குகின்றவர்களுக்குக் கிடையாது. அப்படியென்றால் பயப்படுகின்றவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வழி கிடையாதா என்ற கேள்வி எழுகிறது. அவர்களுடைய அச்சத்தைக் கைவிட்டுவிட்டுத் துணிவையும், தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டார்களென்றால் முன்னேற்றமுண்டு. பொதுவாக அச்சப்படுபவர்கள் பொய்யும் சொல்வார்கள். ஆகவே பொய்யைத் தவிர்த்து, மெய்யை மேற்கொண்டார்கள்என்றால் அந்த மெய் தைரியத்தை வரவழைக்கும்.

ஆன்மீகம் உண்மையை வெளிப்படுத்துவது. பொய் பேசும் பயந்த சுபாவமுள்ளவர் உண்மை பேசத் தீர்மானித்து ஆன்ம சக்தியைத் துணைக்கு அழைத்தாரென்றால், அவ்வான்ம சக்தி அவர் அச்சத்தை எடுத்துவிட்டுத் தைரியத்தைக் கொண்டுவருவதைப் பார்க்கலாம். ஸ்ரீ அன்னை ஆன்ம சக்தியின் சின்னமாக விளங்குகின்றவர். இவ்விஷயத்தில் அவரது அருளை நாடுவது நம் முடிவைப் பொருத்தது.

அரசாங்கப் பணியில் ஒரு பாதுகாப்பும், மரியாதையும் இந்நாட்டில் கிடைக்கிறதென்றாலும், ஒரு சிலருக்கே இவ்வாய்ப்பு பலிக்கிறது. இவ்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், தாம் எந்நிலையில் உள்ளார்களோ அந்நிலையில் வாழ்க்கையைத் தொடங்க முன்வர வேண்டும். இப்படி முன்வாராதவர்கள் பிற்காலத்தில் தற்போதைய நிலையைவிட இன்னும் கீழிறங்கி வாழ்க்கையைத் தொடங்க நேரிடும்.

ஆகவே இப்பொழுதுள்ள நிலையிலிருந்து தொடங்கி முன்னேறுவது நல்லது. 1940இல் தேசபக்தி என்றால் சிறைவாசமாக இருந்தது. இன்று அதே தேசபக்தி கடின உழைப்பு, சுயதொழில் மற்றும் துணிச்சலான செயல்பாட்டை வலியுறுத்துகிறது.

இந்நேரம் நாட்டிற்குத் தேவையான இவற்றை வெளிப்படுத்த மறுப்பது என்பது நாட்டிற்கு நாமாற்ற வேண்டிய கடமையிலிருந்து தவறுவதாகும். சுபிட்சமென்பது அதிகபட்ச உற்பத்தித்திறனைக் குறிப்பதாகும். ஆகவே சுபிட்சத்தை நாடி, கடின உழைப்பை வெளிப்படுத்துவதுதான் இன்றைக்கு உகந்த தேசபக்தியாகும். இதுவே நம் ஜீவனின் ஆழத்திலுள்ள உண்மை ஆகும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிரபஞ்சத்தை சத்தியஜீவியம் நிர்ணயிக்கின்றது. நம் வாழ்வை அகந்தை நிர்ணயிக்கின்றது. சத்தியஜீவிய செயலைக் காண இன்று நம்மை நிர்ணயிக்கும் அகந்தையை அழித்து, சைத்தியப்புருஷனால் நாம் ஆளப்பட வேண்டும்.

அற்புதம் புலப்பட அனந்தனை வாழ்வில் காண வேண்டும்.


 


 


 


 



book | by Dr. Radut