Skip to Content

10.யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

932) முழு ஆத்மசமர்ப்பணம் எழ சிறுகாரியங்களை முழுமையாகச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

சிறியதில் முழுமை சமர்ப்பணத்தை முழுமையாக்கும்.

. எந்த நிமிஷம் ஒரு வேலை (perfect) சிறப்பாக முடிகிறதோ, அதே நேரம் அவர் அடுத்த லெவலுக்குப் போய்விடுவார்.

அவர் அதே சிறப்பைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், சீக்கிரம் உச்சிக்கு வந்துவிடுவார். சட்டம் அனைவருக்கும் பொது என்றாலும்,நடைமுறையில் ஒரு சிலரே இதை எய்தினர். மற்றவர் இடையில் நின்றுவிடுகின்றனர்.

. இந்திய அரசியலில் 1915இல் வந்த காந்திஜி 1920இல் தலைமையை ஏற்றார். முடிவுவரை அதைப் பெற்றிருந்தார்.

ராஜாஜி இரண்டாம் இடத்திற்கு 1920இல் வந்தவர் அதை இழந்து,மீண்டும் 1947இல் அதைச் சிறிது பெற்று உடனே இழந்துவிட்டார்.

நேரு 30இல் வந்தவர் 40இல் தலைமையை எட்டி 1964 வரை - இறுதிவரை - அதைப் பெற்றிருந்தார்.

காமராஜ் 1964 வரை சுமார் 30 வருஷம் உழைத்து, கடைசி நேரத்தில் கட்சிக்குத் தலைவராகி, சர்க்காரில் தலைமையைப் பெறாமல் இறங்கி விட்டார்.

சுப்ரமணியம் தொடர்ந்து உயர்ந்து இரண்டாம் மட்டத்துடன் நின்று விட்டார்.

. வாழ்வில் நாம் உள்ளூரிலும், நாம் வேலை செய்யுமிடத்திலும், பொது வாழ்விலும், அரசியலிலும், சர்க்காரிலும் இந்நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். மேற்சொன்னது இவற்றைச் சரிவரப் புரிந்துகொள்ள உதவும்.

. மேற்கூறியதை மாற்றிக் கூறினால்,

சிறியதில் முழுமை பெறாமல் பெரியதை எட்ட முடியாது. .

. நாம் செய்வது எந்த வேலையானாலும் 90% முதல் 97, 98, 99%சிறப்பாகப் பலரும் செய்யலாம். 100% செய்வது அரிது. ஒருவர் (100%)முழுவதும் சிறப்பாகச் செய்தால் அவர் அடுத்த உயர்ந்த நிலைக்குப் போவார். டிரைவர் பஸ் ஓனராவார். எதுவரை இந்த சிறப்பை அவரால் கடைப்பிடிக்க முடிகிறதோ அதுவரை அவர் உயர்வது தடையின்றித் தொடரும்.

. சாப்பிடுவது, சைக்கிள் துடைப்பது, file பார்ப்பது, துணி சலவை செய்வது, ஒரு கட்டுரை எழுதுவது போன்றவை சிறுகாரியங்கள்.திருமணம், எலக்ஷன், பெரிய காரியங்கள். இச்சிறுகாரியங்களில் சமர்ப்பணம் முழுமையானால், அவரால் திருமணம், எலக்ஷன் போன்றவற்றுள் சமர்ப்பணத்தை முழுமையாகச் செய்ய முடியும்.அம்முழுமையை அவரால் தொடர முடியுமானால் நாட்டின் தலைவராக,உலகில் பிரசித்தி பெற்றவராகவோ, யோகசித்தி பெறவோ அவரால் முடியும்.

. சமர்ப்பணம் எந்த அளவிலும் முழுமை பெறுவது சிரமம்.

. முழுமை பெற்றால் அதே நேரம் உயர்வுண்டு.

. முழுமை தொடரும்வரை தடையற்ற உயர்வுண்டு.

. சிறியதில் முழுமை, பெரியதில் முழுமை பெற்றுத் தரும்.

யோகம் பலிக்க நாம் செய்யும் சிறிய, பெரிய காரியங்களை முழுமையாகச் சமர்ப்பணம் செய்தல் உதவும்.

****

933) ஞானம் பெரியதானாலும், பலன் நடைமுறையில் சிறியதாக உள்ளது - பிரம்மத்தில் மௌனத்தை அறிந்தாலும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை - என்பதால் முட்டுக்கட்டை போட்டு நெடுநாள் அப்படியேயிருக்க வேண்டியிருக்கிறது. அதற்குள்ள வழிகளில் ஒன்று, சிறு காரியங்களில் சிறு குறையிருந்தால் அதை நீக்குவது. அதைக் கவனித்து நீக்கினால் அங்குலம் அங்குலமாக வழிவிடும்.

சிறுகாரியத்தில் சிறுகுறை நீங்கினால் பிரம்ம ஞானம் தடையின்றி பூர்த்தி பெறும்

(The significance of a small act.)

புரட்சிகரமான பெரிய மாற்றங்கள் வரும்பொழுது எந்த நிகழ்ச்சிகள் மூலம் அவை நிகழ்கின்றன என அனைவரும் அறிவர்.

அவை பெரிய நிகழ்ச்சிகள். அதேபோல் முக்கியமான சிறுநிகழ்ச்சிகள்

அம்மாற்றத்திற்குக் காரணமாக இருப்பதைப் பொதுவாக எவரும் அறிவதில்லை.

. மிகச் சிறிய நிகழ்ச்சிகள் மிகப் பெரிய மாற்றங்களுக்குக் காரணம்.

. பெரிய நிகழ்ச்சிகள் நல்லனவாக இருக்கும் - ஒரு நாட்டின் சுதந்திரம்,.நா. ஸ்தாபிதம் போன்றவை. அவை கெட்டனவாகவும் இருக்கும் -முதல் உலகப் போர் ஆஸ்த்திரிய ட்யூக் கொல்லப்பட்டதால் எழுந்தது.

. தத்துவத்திற்கு நல்லதும், கெட்டதும் சமமே.

. இத்தத்துவத்தை உலகில் ஏற்றால் உலகம் பெருமளவுக்குச் செழிக்க வழி செய்யலாம்.

எல்லா உலகப் பிரச்சினைகளையும் தீர்க்கும்வழி உடனே புரியும்.

ஒரு பல்கலைக்கழகத்தில் செனட் அமைப்பு, ஊழியர் காண்ட்ராக்ட், பாடதிட்டம் என எல்லா அம்சங்களையும் 60 ஆண்டுக்கு முன் திருத்தியமைக்க ஓர் இளம் ஊழியர் மேற்கொண்டார். 10வருஷமாக வேலையில்லாமலிருந்து அவர் பெற்ற வேலைக்கு அவர் சேவை உலை வைத்தது. சேவை இலட்சியச் சேவை என்பதால் உயிருக்கு ஆபத்து. அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக வேலை செய்து, அவர் வேலை போயிற்று. வேறு கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். இக்கருத்துகளை அவருக்கு அறிமுகப்படுத்தி அவரை உடனிருந்து ஊக்குவித்தது ஒரு மாணவன்.அவன் படிப்பு சேவையால் பலியானது. மீண்டும் அவன் படிப்பை வேறிடத்தில் தொடர இருக்கும்பொழுது இலட்சிய ஊழியர் அவனுக்கு அட்மிஷன் பெற முன்வரவில்லை. அவருடைய பிரின்ஸ்பால் மாணவனை லேசாக அறிவார். நல்லெண்ணத்தால் தாமே வலிய வந்து அவனுக்கு அட்மிஷன் வாங்கிக் கொடுத்தார். இதுவரை 10ஆண்டுகளாயின. பல்கலைக்கழக நிர்வாகம் இலட்சிய ஊழியரின் குழுவில் (12 பேர்) ஒருவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க முன்வந்தனர். எவரும் எதிர்பாராத வகையில் அது ஊழியரின் பிரின்ஸ்பாலுக்குப் போயிற்று. 10 வருஷ உழைப்பு, தியாகம் கொண்டு வந்த பலனை ஒரு சிறு காரியம் அவரைத் தவறவிட்டது. அதே சிறு காரியம் பிரின்ஸ்பாலுக்கு அதைப் பெற்றுக் கொடுத்தது.

Pride and Prejudiceஇல் தவறு நடக்க உதவும் சிறு காரியங்கள் பல. நல்லது நடக்க உதவும் சிறுகாரியங்கள் பல.லிடியாவைப் பற்றி எலிசபெத் படித்து முடித்தவுடன் அங்கு வரும் டார்சியிடம் எலிசபெத் அவள் ஓடிப்போன விஷயத்தைக் கூறுகிறாள்.அதுவே முடிவில் லிடியாவின் திருமணத்திற்கு உதவியாக இருக்கிறது.

. எலிசபெத் விக்காமின் ஊழலை மறைத்தது.

. மிஸஸ் பென்னட் டான்ஸ் ஹாலில் ஜேன் திருமணத்தைப்பற்றிப் பேசியது.

. லிடியாவும், கிட்டியும் ஆர்ப்பாட்டம் செய்தது ஆகியவை கெட்ட சிறு காரியங்கள்.

. ஜேனுக்கு காரலின் கெட்ட எண்ணம் புரிந்தது.

. மிஸ்டர் பென்னட் பொறுப்பேற்றது.

. எலிசபெத் மனம் மாறி தன் நிலையை ஏற்றது நல்ல சிறுகாரியங்கள்.

****

934) தெரிந்ததைக் கொண்டு தெரியாததை நம்புவது நம்பிக்கை.

தெரியாததைக் கொண்டு தெரிந்ததை மறுப்பது சந்தேகம்.
 

நம்பிக்கையும், சந்தேகமும் ஒன்றுபோல் தோன்றும்.

ஆத்மாவில் தெளிவிருந்து அறிவுக்குப் புலப்படாத காலத்தில்

அறிவு நம்புவதுண்டு. அதற்கு நம்பிக்கையெனப் பெயர். நம்பிக்கையை ஆத்மஞானம் எனக் கூறுகிறார் பகவான். குற்றத்திலேயே

சம்பந்தப்படாதவனை அனைவரும் முழுவதும் குற்றம்சாட்டும் நிலை உண்டு.

. இந்த நேரம் ஊரார் பேசுவதால் பயம் ஏற்பட்டு தண்டனை பெறுவது உண்டு.

. ஆத்மதெளிவால் அசையாமலிருந்து முழுவிடுதலை பெறுவதுண்டு.

. உண்மை பலிக்கும்.

நாம் நம் உண்மையை ஏற்றால் அது வலுப்பட்டுப் பலிக்கும்.

. எதுவும் நம்மைப் பொருத்தது. நம் மனம் எதை ஏற்கிறது என்பதைப் பொருத்தது.

வாழ்க்கையில் சந்தேகம் வரக்கூடாத இடம் உண்டு. அங்கு சந்தேகம் வந்து வாழ்க்கை பாழான மக்கள் ஏராளம். தகப்பனார் பையன் திருடியதாக நினைத்தால், அதன் பிறகு அங்கு உறவில்லை.பாசம் எழாது. பார்ட்னர் திருடாதபொழுது திருடுவதாக நினைத்தால்,அதன்பின் கூட்டில்லை. நட்பு முறியும் இடம் இது. கணவன், மனைவி உறவில் நடத்தையில் சந்தேகம் எழுந்தால் அதன்பின் தாம்பத்தியம் இல்லை.

ஏன் சந்தேகம் எழுகிறது?

. தோற்றத்தை உண்மையென நம்பினால் சந்தேகம் எழும். ஏன் அப்படி நம்புகிறார்கள்?

. நம்பிக்கைக்கு மனம் தூய்மையாக, வலுவாக இருக்க வேண்டும். தூய்மை, வலு குறைந்தால் சந்தேகம் வரும்.

. தூய்மை, வலு என்றால் என்ன?

நல்லதை மட்டும் மனம் ஏற்றால் மனம் தூய்மையாக இருக்கும்.

. சில்லறை விஷயத்தில் ஆசையெழாவிட்டால் மனம் பலமாக இருக்கும்.

. சில்லறை விஷயங்களைப் பிறருக்காக, சந்தர்ப்பத்திற்காக ஏற்பவர் பலம் இழந்தால், அவர் பலம்பெற வழியுண்டு.

. மனமே சில்லறையானால், கெட்டதை நம்பினால், அவர்கள் சந்தேகத்தை அழிக்கும் வலிமைபெற வழிகூறுவது எளிதன்று.

.வாழ்க்கையில் அவர்கட்கு வழிகிடையாது, வழியே இல்லை.

. அன்னையிடம் வழியுண்டா?

. இவர்கள் அன்னையிடம் வரமாட்டார்கள், வந்தால் தங்கமாட்டார்கள்,தங்கினால் அன்னையை ஏற்கமாட்டார்கள்.

. அப்படி ஒருவர் வந்து தங்கி, அன்னையை ஏற்றால் அவருக்கு என்ன வழி?

உலகில் எதை நம்பாவிட்டாலும், யாரை நம்பாவிட்டாலும், அன்னையை ஏற்றபின் அவர் மீது முழுநம்பிக்கை ஏற்பட வேண்டும்.

. அந்த எண்ணம் இந்தநபருக்கு உடன்பாடானால் வழியுண்டு. வழி - 3நாள் பிரார்த்தனை.

பிரார்த்தனை - "எனக்கு அன்னை மீது பூரணநம்பிக்கை வேண்டும்" என அவர் 3நாள் பிரார்த்தனை செய்தால் நம்பிக்கை வரும்.

. அந்த நம்பிக்கை வந்தபின், மனத்திலுள்ள சந்தேகம் அழிய வேண்டும்

- இது பொய்யான சந்தேகம், நிச்சயமாக அழியும் - என்ற பிரார்த்தனை பலிக்கும்.

. பிரார்த்தனைக்குரிய அடிப்படையிருந்தால் பிரார்த்தனை பலிக்கும்.

. அவ்வடிப்படை அன்னைமீது முழுநம்பிக்கை. அன்னைமீதுள்ள நம்பிக்கை சந்தேகத்தை அழிக்கும் வலுவுள்ளது.

தொடரும்.....

* * * *


 

ஜீவியமணி

தொண்டன் தலைவனானால் மக்கள் ஆள்வார்கள்.


 book | by Dr. Radut