Skip to Content

02.Nov.24, 1926 - சித்தி தினம்

Nov.24, 1926 - சித்தி தினம்

கர்மயோகி

பகவான் 1908இல் அலிப்பூரிலிருந்தபொழுது நாராயண தரிசனம் பெற்றார். அது சத்தியஜீவிய அனுபவம். ஆன்மீக இலட்சியம் மோட்சமில்லை, திருவுருமாற்றம் என விவேகாநந்தர் பகவானுக்கு சத்தியஜீவியத்தைச் சுட்டிக்காட்டி பகவத்கீதையைக் கையில் கொடுத்தார். இது சூட்சும உலகில் விவேகாநந்தர் பகவானுக்கு அளித்த சத்தியஜீவிய தீட்சையாகும்.

. தீட்சை இலட்சிய வாயிலைத் திறக்கும், பயணத்தை சிஷ்யன் மேற்கொள்ள வேண்டும். சூட்சுமத்தில் சுட்டிக்காட்டுவது முறை,விளக்கமாகக் கூறக்கூடாது என்பது மரபு. அப்படிக் கூறினால் அந்த சிஷ்யன் இலட்சியத்தை அடையமாட்டான்.

முடியாததை முடிய வைப்பது தீட்சை.

வழி வகையை அவரவரே கண்டறிய வேண்டும்.

தானே அறியாதது முடிவான பலன் தாராது.

"விவேகாநந்தர் சத்தியஜீவியத்தைக் காட்டினார். அடையும் வழியைக் கூறவில்லை. அதைக் கண்டுபிடிக்க எனக்கு 10ஆண்டுகளாயின" என்றார் பகவான்.

. மனிதன் மேல் மனத்தில் வாழ்கிறான். ஆழ்மனம் என்பது (superconscient) என்பது ஒளிமயமானது. பரமாத்மாவும், ஆழ்மனமும் சேர்ந்த முழுமை மனிதன். இவை சேருமிடத்தில் அடிமனம் ஏற்படுகிறது.

சைத்தியப்புருஷன் அதனுள் உறைகிறது.

. மேல்மனத்திற்கும் அடிமனத்திற்குமிடையே உள்மனம் உண்டு. மேல் மனம் காலத்திற்குரியது. உள்மனம் காலத்தைக் கடந்தது. அங்கு மனோமயப்புருஷன் உள்ளான். நிர்வாணக் கதவுண்டு. சைத்தியவாயில் உண்டு.

. ரிஷி தவத்தால் மேல்மனத்தினின்று உள்மனத்தில் மனோமயப் புருஷனை அடைந்து, மேலே உயர்ந்து தவசி, ரிஷி, யோகி, தெய்வ நிலைகளையடைகிறார். அவர் முடிவாகப் பெறுவது மோட்சம்.

. பூரணயோகி தேடுவது திருவுருமாற்றம், சத்தியஜீவியம், அதற்குரிய பாதையும் இதுவே. என்றாலும் பிரயாணத்தை உள்மனத்திலிருந்து தொடர்ந்தால் மோட்சத்தில் முடியும். அடிமனம் சென்று, அங்கு சைத்தியத்தை எட்டி, அதனின்று மேல்நோக்கி உயர்ந்து சென்றால் சத்தியஜீவியத்தை அடையலாம். இப்பாதையைக் கண்டுபிடிக்க பகவானுக்குப் 10 ஆண்டுகளாயின. 10,000 வருஷத்தில் காண முடியாதது. விவசாயத்தைக் கண்டுகொண்ட மனிதன் தொழிலைக் (manufacturing) காண 10,000 ஆண்டுகளாயின. வேதத்தினின்று உபநிஷதம்வர, வந்து அக்ஷர பிரம்மத்தைக் காண பல ஆயிரம் ஆண்டுகளாயின. அங்கிருந்து கீதை புருஷோத்தமனைக் கண்டது. காண மீண்டும் பல ஆயிரம் ஆண்டுகளாயின. அப்படிப்பட்ட பாதையில் 5 கட்டங்களைக் கடக்க பகவான் 10 ஆண்டு எடுத்துக் கொண்டார்.

. மனிதன் இன்றுவரை உணர்ச்சியால் (vital) செயல்படுகிறான். பூமியின் நிலை சூடாகிறது, அது ஆபத்து என்றபொழுதும் பகுத்தறிவுடன் அவனால் செயல்பட முடியவில்லை. 20ஆம் நூற்றாண்டில் உலக நிகழ்ச்சிகளில் அவன் உணர்வால் செயல்பட்டிருகிறான். அறிவால் (rationality) செயல்பட அவனால் முடியவில்லை. சத்தியஜீவியம் என்பது அறிவைக் கடந்த 5ஆம் நிலை. பகவான், மனிதன் அதை 30 ஆண்டில் எட்ட வேண்டும் எனப் பாதையை வகுக்க முனைந்து 10 ஆண்டுகளில் வெற்றி பெற்றார்.

. கிருஷ்ணவதாரம் எட்டியது தெய்வீக மனம். கிருஷ்ண பரமாத்மா அந்த லோக அவதாரம். மனிதகுலம் உணர்ச்சி லோகத்திலிருக்கும் பொழுது கிருஷ்ண பரமாத்மா தெய்வீக மனத்தையடைந்தார். உலகில் மனமே மனிதகுலத்தை முழுவதும் எட்டவில்லை. பகவான் சத்திய ஜீவியத்தை 100 பேர் அல்லது 12 பேர் எட்டி, அதன் பலனாக சத்தியஜீவியம் உலகுக்குவர முயன்றார். அதற்குமுன் தெய்வீக மனம் உலகுக்கு வரவேண்டும். 1926இல் நவம்பர் 24இல் தெய்வீக மனம் பகவான் உடலில் வந்து இறங்கியது. இன்றுவரை மனித குலத்தை அது முழுவதும் எட்டவில்லை. அதற்கும்முன் யோகி மனம், ரிஷி மனம், முனிவர்மனம் உண்டு. அவை முதலில் மனிதனை எட்டி நிரப்ப வேண்டும். அதற்குமுன் உள்ள மனிதமனமே மனித குலத்தை இன்னும் நிரப்பவில்லை, எட்டியதாகவும் தெரியவில்லை.

புராணி என்ற சாதகர் நவம்பர் 24 அன்று பகவான் பெற்ற சித்தியைப் பற்றி எழுதுகிறார். அப்பொழுது ஆசிரமத்திலிருந்த சாதகர் எண்ணிக்கை குறைவு. 15 பேர் எனக் கேள்வி. பகவான் அனைவரையும் தியானத்திற்கு அழைத்தார். ஒருவர் பீச்சிலிருந்தார். மற்றவர் பல இடங்களிலிருந்தனர். செய்தி விரைவாக அனைவரையும் எட்டியது. 6 மணி, மாலையில் அனைவரும் பகவான் அறைக்கு அடுத்தாற் போலுள்ள வராண்டாவில் குழுமினர். அன்னை, பகவான் வலப்புறத்தில் ஒரு ஸ்டூலில் அமர்ந்தார். சாதகர்கள் கூடியபொழுது சூழலில் மௌனம் என்றுமில்லாதது போல் கனத்தது. கதவிடுக்கு வழியாக பகவானும் அன்னையும் வருவது தெரிந்தது. மௌனம் கனத்திருந்ததால் சிறிய அசைவும் பெரிய ஒலி எழுப்பும். டிக், டிக் என காலடி சப்தம் கேட்டது. அது பகவான் வருகை. அங்கு சுவரில் கறுப்புநிற சில்க்கில் 3 டிராகன் (dragon) படம் வரைந்தது தொங்கியது. டிராகன் வளைந்து வாலை வாயால் கௌவுகின்றது.

ஓர் அன்பர்,

. ஏன் கறுப்பு நிறம்?

. இது சீனப்படம். ஏன் சீனப்படம் வந்தது?

. டிராகன் வாலைக் கௌவுவதன் அர்த்தம் என்ன?

என்ற கேள்விகளை எழுப்பினார்.

1920 வாக்கில் சீனப்புரட்சி எழுந்தது. அன்னை அதற்குரிய சக்தியைத் தாம் அளித்ததாகக் கூறுகிறார். 1950க்குப் பின் சீனாவிலிருந்து அப்புரட்சியாளர் சிலர் அன்னையைக் காணவந்தனர். அன்னை குவிந்த கையை மேஜை மேல் வைத்து, அடுத்த கையையும் குவித்து அதன்மீது வைத்தார்.

. அது சீனப்புரட்சியின் சின்னம்.

அதைக் கண்ட சீனர்கள், "இது எங்கள் புரட்சி சின்னமாயிற்றே, உங்களுக்கு இதில் பங்குண்டா?' என அன்னையைக் கேட்டனர்.உலகில் எங்கு புரட்சி எழுந்தாலும் அங்கு நாங்கள் இருப்போம் என அன்னை கூறியுள்ளார்.

. பாம்பு பரிணாமசக்தி. ஆதிசேஷன் நம் மரபு.

வாயால் வாலைக் கௌவினால் பரிணாமம் முடிவதைக் காட்டும்.

1956 வரை உலகின் சூழல் இருளில் இருந்தது. ஷேக்ஸ்பியர் எழுதிய பெருங்காவியங்கள் சோக முடிவானவை (tragedies). அன்றைய உலகில் உலகின் உண்மைகளை நல்ல முடிவால் எழுத முடியவில்லை. மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா யுத்தத்தை வெல்ல பொய்யான யுக்திகளைக் கையாண்டார். தர்மம் அன்று தழைக்கவில்லை.தெய்வமே உலகுக்கு அவதாரமாக வந்து தர்மத்தை நிலைநாட்ட முயன்றாலும் பொய் தேவைப்பட்டது. இந்தநிலை 1956இல் மாறி,நரகம் அழிந்தது. இனி தர்மம் வெல்லும். 1973க்குப் பின் உலகுக்குச் சுவர்க்கம் வந்துவிட்டது.

. சத்தியத்தை மட்டும் கருவியாக்கி மனிதன் முயன்றால், இனி சத்தியம் வெல்லும்.

. இது பகவான், அன்னை உலகுக்கு அளித்த வரம். மனிதன் கேட்காத வரம். மனிதனுக்குக் கேட்கத் தெரியாத வரம். மனிதன் சார்பில் பகவான் மிக உயர்ந்தசக்தியை பூமிக்காக அதிகபட்ச வரம் கேட்டார். சத்தியஜீவியம் பூமியைத் திருவுருமாற்ற வேண்டும் எனக் கேட்டார். இறைவன் அந்தவரத்தை உலகுக்கு அளித்துவிட்டார். பெறுவது நம்பங்கு. விலகியிருக்காமல் பெறுவது பாக்கியம்.

அன்பர் கேட்ட கேள்விக்குப் பதில் எழுதினேன். அவர் கேள்வியிலும் என் பதிலிலும் அன்னைக்குரிய சூட்சுமம் ஒன்றுளது.

அது அன்பர்கள் வாழ்வில் அன்றாடம் செயல்படுவது. பலர் பிரச்சினை தீர்ந்தபிறகு அறிவார்கள். மற்றவர் அதையும் அறிவதில்லை.

. அன்பனுக்குப் பிரச்சினை என்பதேயில்லை. அன்பனானபின் பிரச்சினையின் சுவடே அவன் வாழ்வில்லிலை. பிரச்சினைக்குரிய குணங்களை அவன் நாடினால் இல்லாத பிரச்சினை உற்பத்தியாகும். அல்லது பிரச்சினையை உண்டுபண்ணும் நபர்களை நாடினாலும் பிரச்சினை உற்பத்தியாகும். அப்படி அவனுடைய அறியாமையால் உற்பத்தி செய்த பிரச்சினையை அன்னை அவன் பிரார்த்திப்பதன் முன் தீர்த்துவிடுகிறார். மீண்டும் அன்பன் தன் பாணியில் உழன்று ஏற்கனவே தீர்ந்து போனதைப் பெற நாள் வளர்த்துவது வழக்கம்.

இதை விளக்க இரண்டு உதாரணம் எழுதுகிறேன். ஒன்று

இந்திய சுதந்திரம். அடுத்தது அன்பர் அனுபவம். 1908இல் பகவான் இந்தியாவுக்குச் சூட்சும உலகில் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டார்.இறைவன் பகவானைப் புதுவைக்குப்போய் யோகத்தை மேற்கொள்ளும்படிப் பணித்தார். சூட்சுமத்தில் பகவான் பெற்ற இந்தியச் சுதந்திரத்தை அரசியலில் நாட்டுக்குத் தலைமை தாங்கி பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை இறைவன் ஸ்ரீ அரவிந்தருக்கு அளிக்கவில்லை. 1908முதல் 1915வரை இந்திய தேசீய காங்கிரஸ் தலைமையில்லாமலிருந்தது. 1915இல் காந்திஜீ வந்தார். நாடு ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மேற்கொண்டிருந்தால் குறுகிய காலத்தில் இந்தியா பிளவுபடாமல் சுதந்திரம் பெற்றிருக்கும். மகாத்மா அஹிம்சை,சத்தியாக்கிரகம் என்ற பாதைகளை மேற்கொண்டு அவர் பாணியில் போராட்டத்தை நடத்தி, 1947இல் நாடு துண்டாடப்பட்டு, சுதந்திரம் பகவான் பிறந்த தினத்தில் வந்தது. இது மனிதச் செயலின் முத்திரை.

1966இல் ஒரு கெஜட் பதவி ஆபீசர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.அவர் அன்பர். டைரக்டர் பதவி நீக்க உத்தரவை ஆபீசருக்கும்,அவருடைய மேலதிகாரியான செக்ரடரிக்கும் அனுப்பினார். செக்ரடரி ஆபீசில் அவ்வுத்தரவைப் பெற்ற கிளார்க்குக்கு இந்த ஆபீசரைத் தெரியும். அவருடைய ஊர்க்காரர். கிளார்க் உத்தரவை செக்ரடரியிடம் காட்டினார். செக்ரடரி "உத்தரவு செல்லாது. ஆபீசர் அப்பீல் வந்தவுடன் உத்தரவை ரத்துசெய்து, மறு உத்தரவு போடு' எனக் கூறிவிட்டார்.

. அன்பருக்கு வந்த பிரச்சினையை அன்னை அவர் பிரார்த்திப்பதின் முன் தீர்த்துவிட்டார்.

அன்பர் மனம் ஒடிந்து டைரக்டரையும், செக்ரடரியையும் பார்த்தார். டைரக்டர் "ஒன்றும் செய்ய முடியாது' என்றார். செக்ரடரி,

"பார்க்கலாம், I will do the needful' என்றார். இது உபசாரமான பாஷை என அன்பர் அதை நம்பாமல், சிபாரிசு தேடியலைந்தார். 3மாதம் கழித்து ஒரு IAS ஆபீசர் மூலம் HomeSecretaryயை அணுகினார். அவர் உரிய ஆபீசரைக் கலந்து ஆலோசித்ததில்,

 "எங்களுக்கு அப்பீல்வர 15 நாளாயிற்று. வந்தவுடன் ஆர்டரை ரத்து செய்துவிட்டோம். இன்னும் ஆபீசர் கையில் ஆர்டர் வரவில்லையா?'எனக் கேட்டார்.

ஆபீசர் மீண்டும் செக்ரடரி ஆபீசுக்குப் போனபொழுது சம்பந்தப்பட்ட கிளார்க்கைப் பார்த்தார். அவர் நடந்த விவரத்தைக் கூறினார். பிறகு ஆர்டர் கிடைத்து, வேலையில் சேர்ந்தார்.

பகவான் யோகம் பூர்த்தியாகி, உலகம் சூட்சுமத்தில் இருளிலிருந்து 1956இல் விடுதலை பெற்றுவிட்டது. இதை சீனா டேப்பிஸ்ட்ரி 1926இல் சுட்டிக்காட்டுகிறது. பகவான் பிறந்தவுடன், அன்னை பிறந்தவுடன், பூமாதேவிக்கு விடுதலை சந்தர்ப்பம் வந்துவிட்டது. அது

1956இல் சத்தியஜீவியம் உலகுக்கு வருவதாகப் பலித்தது.

1973இல் சுவர்க்கமும் வந்துவிட்டது. அன்பர்கள் பழைய எண்ணங்கள், நோன்பு, விரதம், சம்பிரதாயம், பழக்கம், ஆகியவற்றால் "விருதுபட்டிக்குப் போன சனியனை வீடுவரை வரச் சொல்லி' அழைக்கிறார்கள்.

மனித வாழ்வில் அன்னையின் முத்திரைகள் பல. அவற்றை எல்லாம் நாம் அறிவோம். இதுவரை நான் விளக்கமாகக் குறிப்பிடாத அம்சத்தை இக்கட்டுரையில் குறிப்பிட்டேன்.

. எல்லா நியாயமான பிரார்த்தனைகளும் பலிக்கும் என்று நான் இதுவரை எழுதினேன்.

. நம் செயலிலோ, மனத்திலோ குறையில்லாதவரை நமக்குப் பிரச்சினைகள் எழ அன்னை அனுமதிப்பதில்லை. அப்படி பிரச்சினைகள் எழுந்தால் நாம் அவற்றிற்காகப் பிரார்த்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

நாம் பிரார்த்தனை செய்யும்முன் அன்னை அப்பிரச்சினையைத் தீர்த்து விடுகிறார் என்பதை இப்பொழுது குறிப்பிடுகிறேன்.

அன்பருக்கு இனி வாழ்வில் பிரச்சினை என்பது இல்லை. பிரார்த்திக்கும் அவசியமுமில்லை.

. அது உண்மையானால், இனி அன்பருக்குரியது என்ன?

. 56ஆம் அத்தியாயத்தில் (The Life Divineஇல்) பகவான்,

"இனி பரிணாமம் அஞ்ஞானத்தினின்று ஞானத்திற்குப் போகும் அவசியம் இல்லை. சிறிய ஞானத்திலிருந்து பெரிய ஞானத்திற்குப் போவதே பரிணாமமாகும்" என்று கூறுகிறார்.

. அதையே அன்பர் வாழ்வுக்குப் பொருத்திக் கூறினால்,

. இனி பிரச்சினை தீர பிரார்த்தனை தேவையில்லை.

. வரும் வாய்ப்புகள் முழுவதையும் பெறும்தகுதி தேவை என்ற பிரார்த்தனைக்கு இடம் உண்டு எனலாம்.

. அன்பர் வாழ்வை வாழ்வாக ஏற்று, யோக சக்தியை வாழ்வு வளம் பெறப் பயன்படுத்தும்வரை வாய்ப்புக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த வாய்ப்புகள் வாழ்க்கையை வசதியுள்ளதாக்கும்.

. இதற்கடுத்த கட்டம்வர விரும்பும் அன்பர்கள் உண்டு.

. அவர்கள் நாடுவது வாழ்க்கை வசதிகளில்லை.

அவர்கட்கு வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் யோகம் பலிக்குமாறு அமைய வேண்டும் என்பது குறிக்கோள்.

. உதாரணமாக வாழ்வில் சச்சரவு எழாமலிருக்க மனிதன் விரும்புவான்.

யோகத்தை நாடும் அன்பருக்கு சச்சரவு வாராது. வந்தால், அது தீர்வதைவிட அது திருவுருமாறுவது முக்கியம். மனம் திருவுருமாற்றத்தை நாடுவதால் வாழ்வில் எழும் சச்சரவை எப்படி சுமுகமாக மாற்றலாம் என்பது அவர் நாடும் யோக வாய்ப்பு.

முதற்கட்டம் குறை நிறையாகத் திருவுருமாறுவது.

அடுத்த கட்டம் நிறை பெருநிறையாகத் திருவுருமாறுவது.

வெளியிலிருந்து எழும் சந்தர்ப்பம் முதல்நிலை.

உள்ளிருந்து எழும் சந்தர்ப்பம் அடுத்தநிலை.

இவையிரண்டையும் சரணம் செய்வது முடிவான நிலை.

. யோகம் பூர்த்தியாக யோகம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும்

அன்பர் மனநிலையிது.

. சிருஷ்டி, பரிணாமம்.

நாம் இதுவரை சிருஷ்டியை அறிவோம். இயற்கையின் இயல்பான வாழ்வை மனிதன் அறிவான். அந்நிலையில் அவன் சிகரமாக ஆன்மீகத்தைக் கண்டான்.

. அது அக்ஷர பிரம்மம், புருஷோத்தமன்.

. வேதத்தைக் கடந்து உபநிஷதம் கண்டது அக்ஷர பிரம்மம். அதைக் கடந்த கீதை கூறியது புருஷோத்தமன்.

. அக்ஷர பிரம்மத்தைத் தவத்தால் அடைபவன் ரிஷி.

அதைக் கடந்த புருஷோத்தமனை சரணாகதியால்பெற கீதை நம்மை அழைக்கிறது. அதற்குரியவர் உலகின் மாணிக்கங்களான மனிதர்கள்.

. பகவான் ஸ்ரீ அரவிந்தர் இலட்சியம் வாழ்வாக வெளிப்படும் முழு பிரம்மம். இதையடைய மனிதன் இயற்கையைக் கடந்து, அது கட்டுப்படும் கர்மத்தையும் கடந்து ஜீவியத்திற்கும் ஜீவனுக்கும் வர வேண்டும். அது மனித யத்தனத்தைக் கடந்தது. இறைவனுக்கு உரியது. மனிதன் பங்கு சரணாகதி. வேத காலத்திலிருந்து மனிதன் இன்றுவரை தன் உடலையும், வாழ்வையும், அறிவையும், ஆத்மாவையும் போற்றிவளர்த்தான். இவை பகுதிகள்.

. உடல் ஆரோக்கியத்தைப் போற்றியவர் உடல் மூலம் இறைவனையடைய முயன்றனர். முதலில் போற்றியது உடல். அது நீண்ட ஆயுள். அதன் சிகரம் உடல் மூலம் மோட்சமடைவது. அப்படி எழுந்தது ஹடயோகம். ஹடயோகம் நாள் கணக்காக இதயத்தை நிறுத்தவல்லது. லகிமா - உடல் லேசாகி மேலெழுவது - ஹடயோக சித்தி.

. உயிரைப் பேணியவர் கர்மயோகத்தின் மூலம் - நிஷ்காம்ய கர்மத்தின் மூலம் - குந்தளினியில் ஆரம்பித்து ஸகஸ்ரதளம்வழி மோட்சம் அடைந்தனர்.

. பக்தியோகம் சைத்தியப்புருஷன் மூலமும், ஞானயோகம் மனோமயப் புருஷன் மூலமும் மோட்சம் பெற்றனர்.

. இவை பகுதிகள், ஒன்றன்பின் ஒன்றாய் செய்யப்பட்டவை.

. பூரணயோகம் முழுமை. இது நாடுவது வளரும் ஆன்மாமூலம் திருவுருமாற்றம், மோட்சமில்லை.

. இங்கு பலன் ஒரே சமயத்தில் எழும். அதாவது உடனே பலிக்கும்.

. இந்தியா ஆன்மீகத்திலும், கிரீஸ் அறிவிலும், ரோமாபுரி அதிகாரத்திலும், ஐரோப்பா விஞ்ஞானத்திலும் முன்னேறி நிலையை இழந்தனர். அமெரிக்கா டெக்னாலஜியில் முன்னேறுகிறது. வளரும் ஆன்மா அனைத்திலும் ஒரே சமயத்தில் முன்னேறும். 2500 ஆண்டுகளாக உலகம் இந்தியாவில் ஆரம்பித்து அதன் முன்னேற்றத்தை கிரீஸ், ரோமாபுரி, ஐரோப்பா, அமெரிக்கா வழி பின்பற்றுகிறது. இந்தியா வளரும் ஆன்மாவைக் கண்டால், உலகின் எல்லாப்பகுதிகளும் ஒரே சமயத்தில் வாழ்வை அற்புதமாகக் காண்பார்கள்.

தனிமனிதன் (individual) இதுவரை கர்மத்திற்குட்பட்ட காலத்தில் இயற்கையில் வளர்ந்து ஆயுள், வாழ்வு, அறிவு, ஆன்மாவைப் பேணினான். இனி வளரும் ஆன்மாவைத் திருவுருமாற்றத்திற்காக சரணாகதி மூலம் நாடினால் அவனுக்கு அனைத்தும் - உடலின் ஆயுள், வாழ்வின் வளம், மனத்தின் அறிவு, ஆன்மாவின் மோட்சம் -ஒரே சமயத்தில் உடனே (instantaneously) பலிக்கும்.


 

. இதுவரை நடந்தது சிருஷ்டி.

. இனி வருவது பரிணாமம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

Life Divineஐப் படிக்கும்பொழுது "விசாரத்தை'' பல்வேறு

கோணங்களில் மேற்கொள்ளலாம். (.ம்.) ஆதி மனிதனின்

ஆர்வமே இன்றும் நம் அபிலாஷையாக இருக்கிறது.

விசாரத்திற்குரிய நூல் Life Divine.


 


 book | by Dr. Radut