Skip to Content

08.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

 ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

321. ஸ்ரீஅரவிந்தர் நம்மைப்போல் சிந்தித்து Life Divine புத்தகத்தை எழுதவில்லை. அவருக்கு உள்ளிலிருந்து வந்த எழுச்சிக்கு அவர் அப்படியே ஒரு வரிவடிவம் கொடுத்தார். அறிவு சார்ந்த முயற்சி என்று எதுவும் அங்கில்லை.

322. தாகூருடைய கவிதைப் படைப்புகள் எல்லாம் சச்சிதானந்தத்தில் இருந்து வந்ததாக அன்னை சொல்கிறார். அப்பட்சத்தில் அவருடைய கீதாஞ்சலிக்கு நோபல் பரிசு கிடைத்தது ஆச்சரியமில்லை.

323. ஸ்ரீ அரவிந்தருடைய சாவித்ரி காவியத்தை நாம் உலகிலேயே மிகச் சிறந்த கவிதைப் படைப்பாகக் கருத வேண்டும். உலகம் பாராட்டினாலும் சரி, பாராட்டவில்லை என்றாலும் சரி, சாவித்ரியின் பெருமையில் மாற்றம் இல்லை.

324. ஒரு புதிய கருத்தை ஒருவர் வெளியிடும்பொழுது விஞ்ஞானிகள்கூட கருத்தில் உள்ள உண்மையைக் கவனிக்காமல் சொல்கின்றவர்களுடைய சமூக அந்தஸ்து என்ன என்று பார்க்கிறார்கள். இப்படிச் செய்வதால் விஞ்ஞானிகள்கூட சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்று தெரிகிறது.

325. தனக்கு நிறையத் தெரியும் என்ற ஓர் இறுமாப்பு ஒருவருக்கு வந்துவிட்டால் அவருடைய அறிவு வளர்ச்சி அத்துடன் நின்றுவிடுகிறது.

326. பழைய குரு, சீடர் உறவுஎன்பது பூரணக் கீழ்ப்படிதலைச் சார்ந்தது.பழைய கால ஆன்மீகத்திற்கு அது சரி. ஆனால் தற்போதைய நவீன ஆன்மீகத்தில் சீடர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் அதிகரித்துள்ளது.

327. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நாம் கற்றுக்கொள்வதை வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பார்க்க வேண்டும். எவை எல்லாம் நடைமுறையில் பலிக்கிறதோ, அவற்றை நாம் வைத்துக்கொண்டு பலிக்காதவற்றை நாம் விட்டுவிடலாம்.

328. புள்ளி விவரங்களும், பரிசோதனைகளில் கிடைக்கின்ற தகவல்களும் மட்டும்தான் உண்மைகள் என்று ஆகிவிடாது. மூளையைக் கூறுபோட்டுப் பார்த்தால் அறிவு நம் கண்ணுக்குத் தென்படாது. தென்படவில்லை என்பதால் அறிவு இல்லைஎன்று ஆகிவிடாது.

329. நாம் பள்ளிகளில் படித்ததை வாழ்க்கையில் அப்படியே பின்பற்ற முடிவது இல்லை. புரிந்துகொள்வதும், செயல்படுத்துவதும் வெவ்வேறு வேலைகள் என்பதால் இந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் ஒன்றோடொன்று தொடர்புடையவைகளாகக் கருதப்பட வேண்டும்.

330. ஒருவர் ஓர் இடத்திற்குச் செல்லும்பொழுது அங்கே மின்தடை அதே சமயத்தில் நிகழ்கிறது என்றால், அவருக்கும் அந்தமின்தடைக்கும் ஏதோ சம்பந்தம் உண்டு என்று தான் அர்த்தம்.

331. மழை என்பது நம் உணர்ச்சிகளோடு தொடர்புடையது. மழை குறைகிறது என்றால் நம் உணர்வுகள் வறண்டு போயுள்ளன என்று அர்த்தம்.

332. போட்டி, பொறாமை என்பது பல பேருக்கு இடையேயுள்ள உறவில் சம நிலையை நிலைநிறுத்த முயல்வதைக் காட்டுகிறது. அந்தப் பல பேரில் ஒருவர் மேலேபோய்விட்டால் அவருக்கு இணையாக மற்றவர்களும் மேலே எழுவதைவிட மேல்எழுந்தவரை மீண்டும் கீழ்இறக்குவது எளிது.

333. தங்கள் உரிமைகளையும், உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்ள கோபம் என்ற ஆயுதத்தைக் கையாளுகின்றார்கள். கோபித்துக் கொள்ளும் தைரியம் இல்லாதவர்களை மற்றவர்கள் நசுக்கிவிடுவார்கள்.கோபம் நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது என்றாலும், கோபத்தால் நிதானம் போவதால் ஆன்மீகத்தில் கோபத்தை ஒதுக்கி விடுகிறார்கள்.

334. வாழ்க்கையில் கடினமாக உழைத்து முன்னுக்குவர விரும்புவது பாராட்டிற்குரியது. ஆனால் கடின உழைப்பைத் தவிர்த்து பெரிய பலனை மட்டும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும்பொழுது அந்த ஆசை தவறான பேராசையாக மாறிவிடுகின்றது.

335. முடியாது, கடினமானது என்று தெரிகின்ற காரியங்களை வெற்றிகரமாக முடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கின்ற உணர்வுதான் தைரியம்.

336. ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க முடியாது என்று நினைக்கும்பொழுது நமக்கு பயம் வருகின்றது. அந்தபயம் உண்மையாகவும் இருக்கலாம் அல்லது தேவையற்றதாகவும் இருக்கலாம். அந்தபயம் உண்மையானது என்றால் சூழ்நிலையைவிட நம்முடைய மனோதிடத்தைப் பலப்படுத்திக் கொண்டால், பயம் நீங்கிவிடும். தேவையற்ற பயம் என்றால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்தாலும் பயம் நீங்கிவிடும்.

337. ஆன்மீகப் பாதையில் போகின்றவர்களுக்குச் சந்தேகம் முன்னேற்றத்திற்குத் தடையாகிவிடும். அசைக்க முடியாத நம்பிக்கைதான் சந்தேகத்திற்கு மாற்று மருந்தாக அமையும்.

338. நம்முடைய அறிவைவிட நம்பிக்கை உயர்ந்ததாகும். நம்முடைய அறிவுக்கு எட்டாத விஷயங்களை நம்முடைய ஆன்மா புரிந்துகொள்கிறது. அறிவைத் தாண்டி ஆன்மாவின்திறனை நாம் பாராட்டுவதை நம்பிக்கை வெளிப்படுத்துகிறது.

339. நம்முடைய சூழலில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகளால் பாதிக்கப்படாமல் இருப்பதைச் சமநிலை குறிக்கும். மகிழ்ச்சியால் பரபரப்படைவதும்,வருத்தத்தால் நிலைகுலைந்துபோவதும், இரண்டுமே சமநிலையை நாடுபவருக்குத் தவறுகளாகும்.

340. பொறுமை என்பது சரியான நேரம் வரும் வரை காத்திருக்கும் திறனைக் குறிக்கும். தம்முடைய ஆசைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்களால்தான் பொறுமையாக இருக்க முடியும். ஆசைகளால் உந்தப்படுபவன் எப்பொழுதும் பொறுமை இழந்துதான் இருப்பான்.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

கட்டுப்பாட்டை ஆனந்தமாக அனுபவிப்பவன் யோக வாழ்வுக்குரியவன். சாதாரண மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க முயல்வான். கட்டுப்பாடு உற்சாகமளிக்கும். அதன் கடுமை குறைந்து ஓர் attitude நோக்கமாகவும் பின்னால் மாறலாம். அதுவும் ஜீவியமாகும். இக்கட்டத்தில் வாழ்வே பரிணாமமாகி, பரிபூரண யோகமாகும்.

கட்டுப்பாடு நோக்கமாகி ஜீவியமாவது பூரணயோகம்.

 book | by Dr. Radut