Skip to Content

05. நம்ப முடியாத உண்மைகள்

நம்ப முடியாத உண்மைகள்

N.அசோகன்

  1. தெய்வங்களிடம் இல்லாத சைத்தியப்புருஷன் மனிதனிடம் இருப்பதால் மனிதன் தெய்வங்களைவிட உண்மையில் உயர்ந்தவன்.
  2. சந்தேகம் என்பது சாதாரண மனிதர்களுக்குமட்டும் வருவதில்லை. பகவான் சமாதி அடைந்தபிறகு அவரால் சாதிக்க முடியாததை உங்களால் மட்டும் எப்படி சாதிக்க முடியும் என்று இடைவிடாமல் இரவு, பகலாக தீய சக்திகள் அன்னைக்கு சந்தேகத்தை எழுப்பிக் கொண்டிருந்ததாக அவரே சொல்லி இருக்கிறார்.
  3. பூவுலகில் நாம் கண்ட அன்னையினுடைய அழைப்பை ஏற்று யுனிவர்சல் நிலையில் இருக்கின்ற அன்னையும் பூமிக்கு வந்தார். ஆனால் மானிடச் சமூகம் தனக்குச் சரியான வரவேற்பை வழங்கவில்லைஎன்று வந்தவர் மீண்டும் தன்னிடத்திற்கே போய்விட்டார்.
  4. அன்னையினுடைய பெற்றோர்கள் ஜடம்தான் நிஜமென்று பேசும் நாத்திகவாதிகளாக இருந்தார்கள். இருந்தாலும் அன்னையினுடைய தகப்பனாரிடம் physical levelஇல் ஓர் அசாத்தியமான சமநிலை இருந்தது. அன்னை மேற்கொண்ட பூரண யோகத்திற்கு அத்தகைய சமநிலை மிகவும் உதவுமென்பதால் அவரை அன்னை தகப்பனாராகத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லி இருக்கின்றார்.
  5. அன்னையின் கருத்துப்படி ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர், இருவருமே சிவபெருமானின் அம்சங்களாகும். ஆனால் சங்கரர் மாயாவாதம் பேசினார். அடுத்தவர், வாழ்க்கை நிஜமானது. அதில் நாம் சாதிக்க வேண்டும் என்று பேசினார்.
  6. அன்னையினுடைய பெண் நண்பர் மேடம் அலெக்சாண்டரா டேவிட் நீல் என்பவர் ஓர் ஆன்மீகச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது புத்த பகவான் அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்ததை அன்னை தம் கண்களால் கண்டார்.
  7. நாம் பூவுலகில் தீமையின் கை ஓங்கி இருப்பதாக நினைத்தாலும், உண்மையில் தீய சக்திகளைவிட உண்மையைச் சார்ந்த சக்திகளின் கைதான் ஓங்கி இருப்பதாக அன்னை கூறி இருக்கிறார்.
  8. 1962ஆம் ஆண்டு சீன இராணுவம் இந்தியாவிற்குள் படை எடுத்து வந்தபொழுது அன்னையின் சக்திக்குக் கட்டுப்பட்டு பின் வாங்கினார்கள். அப்பொழுது இந்திய அரசாங்கத்தைவிட சீன இராணுவம் தான் தனக்குச் சரியான response வழங்கியதாக அன்னை கூறி இருக்கிறார்.
  9. ஸ்ரீ கர்மயோகி அவர்களின் கருத்துப்படி ஜட நிலையை விட சூட்சும நிலை மிகவும் சக்தி வாய்ந்தது என்று தெரிகிறது.
  10. ஆன்மீக ஒளியின் பிரகாசத்திற்கு முன்னால் பகல் வெளிச்சம் இருட்டாகத் தெரியும் என்பது அன்னையின் கருத்து.
  11. அன்னையின் கருத்துப்படி ஜடத்தாலான நம்முடைய உடம்பைவிட சத்தியஜீவிய உடம்பு மேலும் திடமானதாக இருக்கும்.
  12. அன்னையின் கருத்துப்படி நம்முடைய ஜீவனின் நான்கு பாகங்களான ஆன்மா, அறிவு, உணர்வு, உடம்பு ஆகியவற்றில் உடம்புதான் மிகவும் சிறியதாகும்.
  13. ஸ்ரீ அரவிந்தர் எந்தவிதச் சிந்தனையுமின்றி முழு மௌனத்திலிருந்து தான் The Life Divineஐ எழுதினார் என்று அன்னை தெரிவித்துள்ளார்.
  14. கிருஷ்ணபகவான் ஸ்ரீ அரவிந்தரின் உடலில் இறங்கியபொழுது அக்காட்சியைக் காண அன்னை பரபரப்புடன் கீழே இறங்கி வந்தார். ஆனால் பகவானோ எதுவுமே நடக்காததுபோல் அமைதியாக எழுதிக் கொண்டிருந்தார்.
  15. துர்க்கையை அன்னை சந்தித்தபொழுது தமக்குமேல் உயர்ந்த ஒரு பரம்பொருள் இருப்பதாகவே தமக்குத் தெரியவில்லை என்று அன்னையிடம் கூறியிருக்கிறார்.
  16. Physical levelஇல் matterலிருந்து எனர்ஜி வருவதைத்தான் நாம் பார்க்கின்றோம். ஆனால் ஆன்மீகரீதியாக பார்க்கும் பொழுது எனர்ஜி முன்னதாகவும், matter அதற்கு அடுத்தபடியாகவும் தான் உருவாகியுள்ளன.
  17. அன்னையின் அஜெண்டாவை எழுதிய சத்பிரேம் அவர்கள் ஆன்மீகத்தில் தாம் எதுவும் பெரிதாக சாதிக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அன்னை தாம் சொல்லிய ஆன்மீக உண்மைகளை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் சத்பிரேம் எழுதியதே ஒரு பெரிய ஆன்மீகச் சாதனை என்று அவருக்கு நினைவுபடுத்தினார்.
  18. பெற்றோர்கள் பிள்ளைகளின் கண்ணெதிரே அடிக்கடி சண்டை போட்டாலும், பிள்ளைகள் தங்களுடைய திருமண வாழ்க்கை இப்படியில்லாமல் இன்பகரமாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
  19. நாம் புலன்களால் உலகை உணர்வதாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நம்முடைய அறிவுதான் நம்முடைய புலன்களின் மூலம் உலகை உணர்கிறது.
  20. பிரச்சினையைப்பற்றி ஒரு நபர் எந்த அளவிற்குக் கவலைப்படுகின்றாரோ அந்த அளவுக்கு பிரச்சினை அவருக்கு அதிகமாகிவிடும். எந்த அளவுக்கு பிரச்சினையை மறக்கிறாரோ அந்த அளவுக்கு பிரச்சினையைத் தீர்ப்பது சுலபமாகிறது.
  21. வரம்பற்றது தன்னைச் சுருக்கிக்கொள்ளும்பொழுது வரம்பிற்குட்பட்ட சிறியதாகிவிடுகிறது. இப்பொழுது சிறியதாக நம் கண்ணிற்குத் தெரிவது மீண்டும் விரிந்ததென்றால் வரம்பற்ற பெரியதாகிவிடுகிறது.
  22. தன்னுடைய சைத்தியப்புருஷனுடன் தொடர்பு கொண்டிருப்பவர்களால் அடுத்தவர் சொல்லாமலேயே அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
  23. அழகு என்பதை நாம் ஒரு physical levelஇல் கண்களால் பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக நினைக்கிறோம். ஆனால் அழகினுடைய ஆன்மீக மூலத்தைப் பார்த்தோமென்றால் ஆனந்தம் நம்முடைய அறிவைத் தொடும்பொழுது நம் அறிவு ஆனந்தத்தை அழகாக உணர்கிறது என்பதுதான் பகவான் அளிக்கும் விளக்கம்.
  24. பகவானுடன் அன்னைக்கிருந்த 36 வருடத் தொடர்பில் ஒரு தடவைகூட அன்னை அவரை மறுத்துப் பேசியதில்லை, சவாலாகக் கேள்வி கேட்டதுமில்லை.
  25. நம்முடைய அடிமனம் என்பது பல விஷயங்களில் நம்முடைய மேல் மனத்திற்கு நேரெதிராக இருக்கும்.
  26. பணத்தைச் சேமித்து வைப்பதைவிட செலவு செய்யும் பொழுதுதான் அது அதிகம் வளர்கிறது.
  27. அன்னையின் கண்ணோட்டத்தில் உண்மையான அன்பு எந்த பிரதி பலனையும் தேடாது என்கிறார். பிரதிபலன் தேடுகின்ற எல்லா வகையான மானிட அன்பும் உண்மையான அன்பிற்குண்டான தகுதியை இழக்கின்றன.
  28. எண்ணங்களுக்கு வடிவம் இல்லை என்றாலும் சூட்சும நிலையில் அவை உண்மையான விஷயங்கள்தாம். ஓர் இலக்கை நோக்கி அம்பை எய்வதுபோல் குறிப்பிட்ட காரியத்தைச் சாதிக்கும் வகையில் நம் எண்ணத்தையும் அத்திசையில் செலுத்த முடியும்.
  29. ஆசைகளை பூர்த்திசெய்வதில் கிடைக்கும் இன்பத்தைவிட அவ்வாசைகளை முறியடித்து, அவற்றிலிருந்து விடுபடும்பொழுது கிடைக்கும் இன்பம் பெரியது.
  30. நம்முடைய அறிவு உண்மையில் அறியாமையால் நிரம்பி இருக்கிறது. இப்பொழுதுதான் நம்முடைய அறிவு உண்மையான அறிவைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறது.
  31. அன்னையின் கருத்துப்படி பார்த்தால் பிரபஞ்சம் ஒவ்வொரு நொடியும் தன்னுடைய எல்லா பாகங்களையும் புதுப்பித்துக் கொள்கிறது. ஆனால் நம்முடைய பார்வைக்கு இந்த மாற்றங்கள் தெரிவதில்லை. நாம் பிரபஞ்சம் அப்படியே இருப்பதுபோல் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
  32. அன்னையின் பாதுகாப்பு தவறும் இடங்களிலெல்லாம் சம்பந்தப்பட்ட நபர் தாம் தெரிந்தோ, தெரியாமலோ அன்னையின் பாதுகாப்பிலிருந்து வெளியேறுகிறார்.
  33. வருடங்கள் உருண்டு ஓடுவதால் நமக்கு வயதாவதைவிட நம்முடைய மனநிலை பழமையில் இறுகிப்போவதால்தான் முதுமை வேகமாக வருகிறது.
  34. நாம் அகம், புறம் என்று பிரிவுப்படுத்திப் பேசினாலும் வாழ்க்கை இந்த வேறுபாடுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அகம், புறம்என்ற இவ்விரண்டையுமே வாழ்க்கை ஒரே நிலையில் வைத்துதான் பார்க்கிறது. அதாவது அகத்தின் பிரதிபலிப்பு புறத்தில் தெரிவதால் வாழ்க்கைக்கு அகமும், புறமும் ஒன்றே என்று ஆகிவிடுகிறது.
  35. உணர்ச்சிவசப்பட்டு செயல்படுகின்றவர்கள் பல வருடங்கள் கஷ்டப்பட்டுக் கற்றுக்கொள்கின்ற வாழ்க்கைப் பாடங்களை புத்தி கூர்மையுள்ளவன் ஒரு சில நிமிடங்களில் புரிந்துகொள்வான்.
  36. பயம் என்பது மன உறுதி கெடுவதைக் குறிக்கும். நாம் ஒரு விஷயத்தை நினைத்து அதிகம் பயப்படும்பொழுது அந்த பயமே நெகட்டிவ் விருப்பம்போல் செயல்பட்டு அந்த விஷயத்தை நம்மை நோக்கி மேலும் வேகமாகக் கொண்டுவரும்.
  37. தைரியமும் பிரச்சினைகளும் தலைகீழ் தொடர்புள்ளவை. நமக்கு ஒரு பிரச்சினை பெரிதாகத் தெரிகிறதென்றால் அந்த அளவிற்கு நம்முடைய தைரியம் குறைந்திருக்கிறது என்று அர்த்தம். தைரியம் அதிகரிக்கிறது என்றால் முன்பு பெரிதாகத் தெரிந்த அதே பிரச்சினை இப்பொழுது சிறியதாகத் தெரியும்.
  38. ஜடப் பொருட்களை நாம் பிறருக்குக் கொடுத்தால், கொடுக்கும் அளவிற்கு அவை எண்ணிக்கையில் குறையும். ஆனால் அறிவு போன்ற சூட்சும விஷயங்களைப் பிறருக்குக் கொடுக்கும் அளவிற்கு வளரும்.
  39. குருவிற்கு அருகிலேயே ஒருவர் இருக்கிறார் என்பதால் ஆன்மீக ரீதியாக அவரோடு நெருக்கமாக இருக்கிறார் என்று நாம் வைத்துக் கொள்ள முடியாது.
  40. அன்னையின் கருத்துப்படி பார்த்தால் நமக்கு வருகின்ற நெருக்கடிகள் தாம் நாம் வாழ்க்கையில் வேகமாக முன்னேற உதவுகின்றன.
  41. பாரதமாதா வெறுங்கற்பனை இல்லை. சூட்சும உலகில் அவர்கள் ஒரு ஜீவனாக உள்ளார்கள். அவர்கள் விரும்பினார்கள் என்றால், மானிட வடிவம் தாங்கி உலகில் பிறக்க முடியும்.
  42. பிருந்தாவனத்தில் கிருஷ்ணபகவான் குழல் ஊதுவதும், இராதா அங்கே இருப்பதும், தெய்வ லோகத்தில் சரஸ்வதி வீணை வாசிப்பதும் வெறுங்கற்பனை இல்லை. சூட்சும உலகில் இந்நிகழ்ச்சிகள் உண்மையாகவே நடக்கின்றன.
  43. யோகிகள் என்று சொன்னால் கோயில்களிலும், மடங்களிலும் இருக்கின்ற சாதுக்களையும், சாமியார்களையும்தான் நாம் நினைக்கிறோம். இவர்களைக் கருதாமல், உண்மையான யோகியை கருதினால், அவர் தத்துவஞானிகளுக்கும், கவிஞர்களுக்கும் மேலான பரிணாமநிலையில் இருப்பதாக ஸ்ரீ கர்மயோகி அவர்கள் கூறுகிறார்.
  44. நம்முடைய ஜீவியநிலை எந்த அளவிற்கு உயர்கிறதோ அந்த அளவிற்கு அது மென்மையாகிவிடுகிறது. புதிதாக முளைக்கும் செடியை நசுங்காமல் காப்பாற்றுவதைப்போல் நாம் அதைக் காப்பாற்ற வேண்டும்.
  45. பெரும்பாலான பிரச்சினைகளுக்குண்டான தீர்வு அந்தப் பிரச்சினைகளுக்கு உள்ளேயே இருக்கும்.
  46. சிறியதற்குள் அடைப்பட்டிருக்கின்ற பெரியது விடுபடும்பொழுது பிறக்கின்ற எனர்ஜிக்கு உதாரணமாக அணுவைப் பிளக்கும்போது வெளிப்படும் எனர்ஜியைச் சொல்லலாம்.
  47. முன்னோடிகளும், சீர்திருத்தவாதிகளும் சமூகத்தால் பைத்தியக்காரர்களைப்போல் கொடுமைப்படுத்தப்படுவதால் அன்னை இவர்களை ஒளிமயமான பித்தர்கள் என்று வர்ணிக்கிறார்.
  48. பிரம்மம் அசைவதில்லை என்று உபநிடதம் கூறுகிறது. ஆனால் அதே சமயத்தில் அது எப்பொழுதுமே நமக்கு எட்டாமல் முன்பே இருக்கிறது எனவும் சொல்கிறது.
  49. உலகம் பலவிதமாகக் காட்சியளிப்பதாகவும், பிரம்மத்தில் தான் ஒருமைப்பாடு உள்ளதாகவும் நாம் சொல்கிறோம். ஆனால் பகவானுடைய கருத்துப்படி பிரம்மம் ஒருமைநிலை மற்றும் பன்மை நிலை ஆகிய இரண்டையும் தாண்டிய நிலையில்தான் இருக்கிறது. ஒருமை, பன்மைஎன்பன பிரம்மத்தையும், உலகத்தையும்பற்றி நமக்குத் தெரிந்த வர்ணனைகள்தானேயொழிய பிரம்மத்தைப்பற்றிய உண்மையான வர்ணனை ஆகாது.
  50. மானிடச் சூழ்நிலையில் ஆண், பெண்ணைவிட அதிக சுறுசுறுப்பாக இயங்குகிறான். ஆனால் ஆன்மீக நிலையில் சக்திதான் ஈஸ்வரனைவிட அதிக இயக்கம் கொண்டதாகக் கூறப்படுகிறது.

*****



book | by Dr. Radut