Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

Dissolution of physical ego – absence of reaction, memories are gone, difficulty of using 'I'

– Agenda 1968, Volume-9

உடலின் அகந்தை கரைகிறது - எரிச்சலில்லை, நினைவழிகிறது, "நான்" எனக் கூற முடிவதில்லை

  • பல மகான்கள் தம்மைக் குறிப்பிடும்பொழுது மூன்றாம் நபர் போலப் பேசுவார்கள். இது நம் மரபுக்குரிய செய்தி. அகந்தையழிந்தபின் எழும் மனநிலையது.
  • நாம் என்பது புருஷன். நடைமுறையில் நம் சுயநலம் விஸ்வரூபமெடுத்து புருஷனை ஆக்கிரமித்து அகந்தையாகிறது.
    நான் சொல்வதே சரி என்பவர் மனத்தால் அகந்தையை வலியுறுத்துபவர்.
    தம் அநியாயத்தை நியாயம் எனக் கொள்பவர் உயிரின் அகந்தையை வெளிப்படுத்துகிறார்.
    உடலின் அகந்தை நம் பொருள்களின் மீதுள்ள பாசம், பற்றாகும்.
    • ஆன்மீகம் அகந்தைக்கெதிரானது.
      என்றாலும் அகந்தையழியாமல் எல்லா ஆன்மீக சித்திகளும் பெற முடிவதால் அகந்தை அழிய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுவது இல்லை.
    • பொய்யைக் கைவிடாமல் எல்லாப் பெரிய பட்டங்களையும் பெறலாம்.
      அதனால் பொய் சரி என்றாகாது.
    • பௌத்தம் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அகந்தைக்கு இடம் தருவதில்லை.
      நிர்வாணம் அகந்தை அழிவது.
      பகவத் கீதை அகந்தை அழிவதைப் பிரம்ம நிர்வாணம் எனக் கூறுகிறது.

      பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தின் முதல் நிபந்தனை சரணாகதி. முடிவான சித்தி அகந்தை அழிவது. அகந்தையுள்ளவரை இந்த யோகத்தை ஆரம்பிக்க முடியாது.

    • அறிவின் அகந்தையில்லாததற்கு அடையாளம், அடுத்தவர் கருத்தை ஏற்பது.
      உணர்வின் அகந்தை அழிந்த அடையாளம், எவர் மீதும் வெறுப்பு ஏற்படாதது.
      உடலின் அகந்தை அழிந்தால் எரிச்சல் எழாது.
      நிஷ்டையில் துணி கிழிவதைப்போன்ற சப்தம் கேட்டால்,
      உடலின் அகந்தை அழிகிறதுஎனப் பொருள்.
    • அகந்தை என்பது எல்லை.
    • உடலின் அகந்தை என்பது "நான் என்பது இவ்வுடல்" என அறிவது.
    • உலகில் உள்ளது ஓர் உடல். அதன் ஓர் அம்சம் என்னுடல் என்பது ஆன்மீக உண்மை.
      பிரபஞ்சம் முழுவதும் அன்னையின் சூட்சுமஉடல் பரவியது.
      உடலுக்கு அகந்தையிருந்தால் அதுபோல் பரவ முடியாது.
    • நமக்கு அழுக்கு, ஆபாசம் அருவெறுப்பை உற்பத்தி செய்கிறது.

      அருவெறுப்பு உடலின் அகந்தையின் உணர்ச்சி. எல்லாப் பொருள்களும் பிரம்மம் என்ற ஆன்மீக உணர்ச்சிக்கு அருவெறுப்பில்லை.

    • நினைவு என்பது காலத்தை மனத்தில் செயல்படச் செய்கிறது.
      நினைவு அழிந்தால் நாம் காலத்தைக் கடக்கிறோம்.
      மனத்தையும் கடந்து வருகிறோம்.
      அகந்தையின் அரங்கம் காலம், மனம்.
      நினைவுள்ளவரை காலமும், மனமும் உண்டு.
      நினைவழிந்தால், அவை கரைந்தனஎனப் பொருள்.
      அகந்தையின் முதல் தோற்றம் மனத்தில்.
      அடுத்தது உயிரில்.
      முடிவில் உடலில் அகந்தை குடி கொண்டுள்ளது.
      நினைவு அழிந்தால் அகந்தை அழிந்ததைக் காட்டும்.
      எரிச்சல்என்பது பழைய நிகழ்ச்சிகளின் உணர்வு.
      நினைவும், எரிச்சலும் அழிந்தால், அகந்தை எல்லா நிலைகளிலும் அழிந்துவிட்டதுஎன அறியலாம்.
      உடலின் அகந்தை அதிகமாகவுள்ளவர் நம் பொருளை எடுத்துப் பார்த்தால், அதைத் தொட்டவுடன் தம் பொருளாக நினைப்பார். திருப்பித் தரமாட்டார், வாங்குவது சிரமம்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிரபலமான பீச்சில் கடலைக் கண்டால், கடல் அங்கு மட்டுமன்று, கடற்கரை எங்கும் காணலாம். சித்தி பெற்றவரிடம் இறைவனைக் காணலாம். ஆனால் இறைவன் அவரிடம் மட்டுமல்லன், அனைவரிடமும் இருக்கிறான்.
 
எங்குமுள்ள பிரம்மம் மகானில்மட்டும் தெரிகிறது.
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூகத்திற்குத் தோற்றம் முக்கியமாகி, விஷயத்தையே கெடுத்துவிட்டது.
 
*******



book | by Dr. Radut