Skip to Content

12. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்

அன்னை இலக்கியம்

மனிதனும் மிருகமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சியாமளா ராவ்

தியானம் என்றால் என்ன என்பது தெரியாது. "கடவுள்” என்றறிந்ததை எந்தக் கோவிலுக்கும் சென்று வணங்கியவனில்லை, நினைவு தெரிந்த நாளிலிருந்து. ஆனால், இன்று, தன் தாயின் விருப்பத்திற்காக வந்தவன், எல்லோரையும் போல் உட்கார்ந்தான். அன்னை, ஸ்ரீ அரவிந்தரைப் பார்த்தான். மனதுள் என்ன நிகழ்கிறது என்பது புரியாமலேயே... பரப்பிரும்மமாய் அமர்ந்தவன், தன் இமைகளையும் மூடினான். அவ்வளவுதான் அவன் அறிந்தது.

சத்தமின்றி அனைவரும் தியானம் முடிந்து கலைந்தனர். பூ பேக்கட்டை எடுத்துக்கொண்டு, வணங்கிச் சென்றனர். அன்னம்மாவும் தியானத்திலிருந்து எழுந்தாயிற்று. திரும்பிப் பார்த்தாள். மகன் அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்தவளின் கண்கள் சொரிந்தன. அன்னையை நோக்கி வீழ்ந்து, சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்தாள். விழிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்தன. மனமும், மகனின் மனம் திருந்த வேண்டியபடியிருந்தது. அவளும் சத்தமில்லாமல் இன்னொரு புறத்தில் அமர்ந்தாள். அன்னையின் சரணத்தை விடாமல் சொல்லியபடியேயிருந்தாள். திடீர்என, யாரோ தட்டிவிட்டதுபோல், விதிர்விதிர்த்து கண்களைத் திறந்தவனின் சரீரமும் விதிர்விதிர்த்தது. எங்கு இருக்கிறோம்என்பதே புரியவில்லை. அன்னையின் படம், அவனுக்கு விஸ்வரூபமாகத் தெரிந்தது. ஆனால் மனதுள் ஒருவிதமான எண்ணமும் தோன்றாமல், அயோமயமாய் வீழ்ந்து வணங்கியவன் முதுகு குலுங்கியது.

புரிந்துகொண்ட அன்னம்மா, அவனை ஆசுவாசப்படுத்தி எழ வைத்தாள். சைகையாலேயே அவனை எழச்சொல்லி, புஷ்ப பிரசாதத்தையும் எடுத்துக்கொள்ளக் கூறி, மனமில்லாமலேயே வீட்டிற்கு வந்தாள். வழியில் இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. வீட்டிற்குள்ளும் வந்தாயிற்று. மனைவி சாப்பாடு பரிமாற, வேண்டும், வேண்டாம் என்பதைக்கூட சொல்லாமல் சாப்பிட்டு எழுந்தான். மௌனமாகவே படுத்தான். தூங்கியும்போனான்.

விடிந்தது. எப்போதும்போல் குளித்து, சாப்பிட்டு, தன் வேலைக்குக் கிளம்பினான். மனைவியும், பெற்றவளும் சந்தோஷமாகவே வழியனுப்பினர். மாலை நேரம் ஆயிற்று. வீட்டிற்கு இன்னும் வரவில்லை. சரி, வேலையிருக்கும் என பூக்கூடையை எடுத்துக்கொண்டு அன்னம்மா தியானமையத்திற்கும், மருமகள் வியாபாரத்திற்கும் சென்றார்கள். இரவு எட்டு மணி வரை வரவில்லை. பரிதவித்துப்போய் அன்னையை வேண்டினார்கள். வந்தான். வந்தவனின் கால்கள் தடுமாற, வாய் குழற, ஆடியபடி வந்தான். பெற்றவளும், தாலி கட்டியவளும் அப்படியே உறைந்துபோய் நின்றார்கள்.

******

அன்னையை எதை வேண்டுமானாலும் கேட்டு வணங்கலாம், பிரார்த்தனை செய்யலாம். ஆனால், அன்னைக்குத்தானே தெரியும்... எதெது, எப்பொழுது நமக்குத் தரவேண்டும் என்பது. அதை உணருவதேயில்லை மனிதர்களாகிய நாம். "நான் எதைக் கேட்டு வேண்டினேன்... நீ இதைத் தந்திருக்கிறாயேம்மா...'' என்று அசமாதானத்துடன் தான் அதை ஏற்றுக்கொள்கிறோம். "அன்னை" என்று நாம் எப்பொழுது உரிமையுடன் கூப்பிடுகிறோமோ.... அப்போதே நாம் உணர வேண்டியது, முக்கியமானது, "அன்னை" நம் அனைவருக்கும் பெற்ற தாய் போன்றவரென்று.

பெற்ற தாய் என்ன செய்வாள்? ம்... யோசித்துப் பாருங்கள். நம் உடலுக்கு எது நல்லதோ, எப்போது எதைத் தரவேண்டுமோ... அதை மட்டுமே யோசிப்பார், தருவார். ஆனால், நாம் குழந்தைகளைப் போல, நமக்கு வேண்டியதை மட்டுமேதான் கேட்கிறோம், எதிர்பார்க்கவும் செய்கிறோம், நாம் கேட்டது கிடைக்க வேண்டுமென்ற பிடிவாதத்துடன். இது சாதாரண மனிதர்களாகிய நம் மனதின், அதுவும் "பக்குவமே' அடையாத மனதின் இயல்புதான் அது. அதைக் கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக்கொண்டு, அன்னையின் முன் "சமர்ப்பணம" செய்துவிட்டு, அதைப் பற்றிக் கவலைப்படாமலிருப்பதற்கு நம்மை நாமே பதப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான பதத்திற்கு நம் மனம் வந்துவிட்டால்... நம் வாழ்வில் "முன்னேற்றம்" என்பது எப்படி, எந்த விதத்தில் வருகிறதுஎன்பது தெரியாமலேயே... கரைபுரண்டோடும் ஆற்று நீரைப் போல் "சலசல"வென வரும். இது சர்வ நிச்சயம். ஒரு தின்பண்டம் செய்யும்போது, பதம் தவறிவிட்டால் பதட்டப்படும் நாம், நம் மனதை சரியான பதத்தில் வைத்திருப்பது அவசியம் என்பதை உணர வேண்டாமா?

அன்னம்மா, தன் மருமகளைப் பார்த்தாள். அவளும் மாமியாரைப் பார்த்தாள். இருவரின் விழிகளிலும் நீர் நிரம்பியிருந்தது. அப்படியே அன்னைக்கு ஊதுவத்தி ஏற்றி, மௌனமாகவே பிரார்த்தனை செய்தனர். கண்களைத் திறந்தனர். அவரவர் வேலையைப் பார்த்தனர். அன்னம்மா பொடிநடையாய் "தியான மையத்திற்குச" சென்றாள். உட்கார்ந்தாள்.

சரசரவென சத்தம் கேட்க, இமைகள் திறக்க, அன்னை அவளையே பார்ப்பது தெரிந்தது.

தலையையாட்டினாள். "இனி எனக்கு கவலையேயில்லையம்மா. ஆனா, அப்பப்ப உன்னைத் தொந்திரவு பண்ணறதைப் பொறுத்துக்கம்மா. உன்னைவிட்டா எனக்கு யாரிருக்கா? அம்மா... உனக்கே தெரியும். என் மவனை நீ நிச்சயமா சரி பண்ணிடுவே. அந்த நம்பிக்கை எனக்கு இருக்குதும்மா... உன்னையே நம்பி விட்டாச்சு. சரணம் தாயே...''

மனதுள் புலம்ப ஆரம்பித்தவள் சட்டென தன்னைத்தானே அடக்கிக்கொண்டாள்.

"அம்மாகிட்டே சொல்லியாச்சு. அதுக்குப்பிற்பாடும் நாம ஏன் மனசைக் கஷ்டப்படுத்திக்கணும். தப்பாச்சே! காலுலயோ, உடம்புலயோ, எந்த எடத்துல அடியோ, காயமோ பட்டாலும் நாம "அம்மா'ன்னுதானே கத்தறோம். அதுக்குப் பிற்பாடு, மருந்து போட்டுக்கினு, வாய மூடிக்கினுதானே இருக்கறோம். அப்படியிருக்கறப்ப... இப்ப மட்டும் நாம ஏன் புலம்பறோம்? தப்புதான்மா... தப்புதான். உங்கிட்டே அல்லாத்தையும் சொல்லியாச்சு. பிற்பாடு... நான் ஏன் ஔப்பறிச்சுக்கணும், தப்பு. தியானமையத்துல... புத்தகத்தைப் படிக்கிறாங்க. புரியாதவங்க... என்னையப்போல இருக்கிறவங்க... எவ்ளோ சந்தேகங்களையெல்லாம் கேக்கிறோம். எவ்ளோ அளகா... நமக்குப் புரியறாப்பல... எவ்ளோ நல்லா சொல்றாரு. நமக்குத்தான் எல்லாமே ஜல்தியா வேணுமே. அதனாலதானே "அன்ன"யையும் அடம் புடிச்சுத் தொந்திரவு செய்யிறோம். நாம திருந்தணும், நிதானமா நடந்துக்கணும், பொறுமையாயிருக்கணும். எப்போ... நமக்கு, எது தேவையோ... அது தானா கிடைக்கும். அது அன்னைக்குத்தான் தெரியும்னு... சொன்னாங்கதானே. அதை நாம ஏத்துக்க வேணாமா?... அம்மா... இனிமே உன்னைத் தொந்திரவு செய்யவேமாட்டேன்மா. நிச்சயமா... என் மவன் திருந்துவான். ம்... தப்பு. நீ... திருத்திடுவே. அது வரைக்கும் நான், உன்னை வேண்டிக்குவேனேகண்டி... தொந்திரவா எதுவும் செய்யமாட்டேன். மன்னிச்சுடும்மா. அன்னையே சரணம்... சரணம்... அன்னையே சரணம்''.

*****

சத்தியன் வந்ததிலிருந்தே... அவரும் மாமாவுமாக காலையிலேயே சீக்கிரம் எழுந்து, தியானமையத்தின் வேலைகளைப் பார்த்தனர். கூடவே சீனுவும், ராமுவும் பெருக்குவது, துடைப்பது, எல்லாவற்றையும் பொறுப்பாகச் செய்தார்கள்.

அன்னம்மா விடியலில் பூக்கூடையைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, வாசலைப் பெருக்கிக் கோலம் போடுவாள். அப்போதே குளித்துவிட்டுத்தான் வந்திருப்பாள்.

"நானு வூட்டெல்லாம் பெருக்கித் தொடைக்கிறேனே சாமி... பாவம் பசங்க செய்யுதுங்களே...''

உடனே ராமு கூறிவிட்டான். "ஆயா, நாங்க ரெண்டு பேரும் செய்யணும்னு நினைச்சுத்தான் செய்யிறோம். பாருங்க, நீங்க வாசல் தெளிச்சுக் கோலம் போடுறீங்க. எவ்ளோ அழகாயிருக்கு தெரியுமா? எங்களுக்கு அதெல்லாம் தெரியாதே... அதான் எங்களுக்குத் தெரிஞ்சதைச் செய்யிறோம். சரியா ஆயா...''

சொன்ன ராமுவின் கன்னங்களைத் தடவி நெட்டி முறித்தாள் அன்னம்மா. எட்டு மணியிலிருந்து பள்ளிச் செல்லுமுன், பள்ளிச் சிறுவர்களும், ஆபீஸ் போகும்முன் பெண்களும், ஆண்களுமாய், ஒரு ஐந்து நிமிடங்களாவது நின்று தியானித்துப் போவதால், வருபவர்கள் வருமுன், தியானமையம் சுத்தமாகயிருக்க சீக்கிரமே எழுந்து துப்புரவாகச் செய்தார்கள், சத்தியனும், மாமாவும். அதுவும் சீனுவும், ராமுவும் ஐந்து மணிக்கே இவர்களிருவருக்கும் காபி எடுத்துக்கொண்டு, தாங்களும் குளித்துவிட்டு வருவதால், மற்ற வேலைகளைக் கவனித்து, பூ அடுக்குவது, பேக்கட்டில் பூ போடுவது, பின்புறத் தோட்டத்திலிருந்து பூக்களைப் பறிப்பதுமாக, வேலைகளை முடித்து, தாங்களும் அமர்ந்து தியானம் செய்து முடித்து, வீட்டிற்குச் செல்வார்கள்.

இருவரும், டிபனோ, இல்லையென்றால் எது இருக்கிறதோ, அதை, சாப்பிட்டு, மதியத்திற்கும் எடுத்துக்கொண்டு, அதற்குள் ஒரு வேலையாக இரண்டு வீடுகளுக்கு டிபனை எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டு, காலேஜுக்கும், பள்ளிக்குமாகக் கிளம்பி விடுவார்கள். இது தினந்தோறும் நடந்து வந்தது.

தினந்தோறும் கேஸடுப்பை மூட்டுமுன், குளித்துவிட்டு, அன்னைக்கு வத்தி ஏற்றி, பிரார்த்தித்த பின்புதான் மற்ற வேலைகள் என்பதில் உறுதியாகயிருந்தார்கள்.

மாலை பிரார்த்தனைக்கு வீட்டில் எல்லோரும் சென்றாலும், பார்வதி மட்டும் வீட்டிலேயே, அந்த "ஆறு மண" ஆனவுடன் ஊதுவத்தி ஏற்றி, தியானத்தில் அமர்ந்துவிடுவாள்.

சஞ்சலமற்ற மனம். நடந்ததைப் பின்நோக்கி மனதுள் சென்று நடந்து, அதைப் பற்றிய நினைவுகளைத் திரும்பத் திரும்பக் கொண்டு வருவதுஎன்பது அவளால் முடியாத காரியம். கடந்தவைகளும், நடந்தவைகளும் அவளைவிட்டு விலக்கியாயிற்று. மீண்டும் அது அவளுள் நுழைய அவள் அனுமதிக்காததால், அந்த சஞ்சலமோ, எண்ணங்களோ அவளிடம் இல்லாமல், அந்த வெற்றிடமான இடத்தில் அன்னையும், ஸ்ரீ அரவிந்தருமே "ஜம்"மென்று அமர்ந்திருந்தனர்.

தியானம் முடிந்து, "பரம்பொருள்" எடுத்து படிக்க ஆரம்பித்தாள். அவள் திறந்த பக்கம் 138ஆம் பக்கம். முதல் பாராவைப் படித்தாள்.

"சரியான உறவு பூரணத்திற்குரியது. இறைவனிடமிருந்து எழுந்து வருபவை அவை. வாழ்வின் அமைப்புகளை சத்தியத்தின் சட்டம் கடந்தது. வாழ்வு வையகத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. சத்தியமே அதன் பூரணம். அதுவே விடுதலை. அகந்தை அதனுடைய பண்புகளை உருவாக்கியது. அவற்றை அழிப்பதே இலட்சியம். ஆனால், அதுவே மகுடமன்று. துன்பம், தீமை, மடைமை, சிறுமை ஆகியவை உள்ளன. அவற்றைக் கடப்பதே சிகரம்''.

படித்துவிட்டு புத்தகத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, பின் அன்னை, ஸ்ரீ அரவிந்தரைக் கண்குளிரப் பார்த்தாள்.

தினமும் பார்க்கும் அதே ஸ்ரீ அரவிந்தர்தான், அன்னைதான். ஆனாலும் ஏதோ அன்றுதான் புதியதாகப் பார்ப்பதுபோல் பார்த்துப் பரவசப்பட்டாள் பார்வதி.

*****

"மனம், மனசு, உள்ளம்'' எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் எல்லாமே ஒரே அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது. ஆனால் அந்த மனம் என்பது... சாதாரணமானதன்று... அல்லவே அல்ல.

சின்னஞ்சிறிய உருவமுள்ள மனம் என்பதில் அடக்கமானது, சொல்ல முடியாத அளவிற்கு எண்ணங்களின் கூட்டங்கள். அதில் நல்லவைகள் மட்டுமன்று, அல்லாதவைகளும்தான் நிரம்பியுள்ளன. பல தரப்பட்டவைகள் நிரம்பியிருக்கும் அந்த மனம் என்னும் பாத்திரத்திலிருந்து நாம் நம் சமயத்திற்குத் தகுந்தது போன்றவைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். அதற்கு சளைப்பதும் இல்லை, யோசிப்பதுமில்லை.

"இது தவறா?'' என்கிற கேள்வி சரிதான். ஏனெனில் சரி, தவறு என்னும் இரண்டு விஷயங்கள் உள்ளபோது, நமது மனதின் யோசிப்பு மிகவும் சரியான, தீர்க்கமானதாகயிருக்க வேண்டாமா? இல்லையே, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அல்லவா நம் மனம் செயல்படுகிறது. ஒரு நல்லது நடக்க, சந்தர்ப்பத்தை உபயோகிக்கலாம். ஆனால்... அதே சந்தர்ப்பம் வேறுபடும்போது... நாம் சரியானதைக் கூற தயங்கக்கூடாது. அதுதானே சரி. உதாரணத்திற்கு...

நாம் ஒருவரைப் புகழும் போது, நம் மனதிற்கேற்ப வார்த்தைகளைத் தேடாமல் புகழலாம், பேசலாம்.

ஆனால், அதே ஒருவரைக் கோபித்துக்கொள்ளும் போது, நம் அதரத்திலிருந்து வரும் வார்த்தைகளில் ஜாக்கிரதையிருப்பது மிகமிக அவசியமானதாகயிருக்க வேண்டும்என்பதுதான், உணர வேண்டிய முக்கியமானதாகும்.

எந்த வார்த்தைகளையும் புகழ்ச்சியாகச் சொல்லும்போது ஏற்றுக்கொள்ளும் மனித மனம். ஆனால் அதே மனம், கோபித்து பேசும்போது வரும் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை நிச்சயம் மறுக்கிறார்கள்.

அதனால்தான் பழைய காலத்தில் "வஞ்சப் புகழ்ச்சி அண" என்று இகழ்வதை, வஞ்சமான புகழ்ச்சியாகக் கூறுவார்கள். அதைப் புரிந்துகொள்பவரும் உண்டு. புரியாமல், அந்த வஞ்சப் புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு, நிதானமாக யோசித்தப் பின், உள்ளர்த்தத்தை உணர்பவர்களும் உண்டு. அதனால் மனம் சங்கடப்பட்டு, தவிப்பதுதான் மிச்சம்.

அன்னையின் அருளும், அன்னையின் வழியில் சிறிதுகூட மாறாமல் நடந்த அந்தப் பெண்மணிகளின் வாழ்வில், அன்னையின் கோட்பாடுகள் தவிர வேறெதுவுமில்லை. ஒருவருக்கொருவர் இணைந்து, ஒத்துப்போய், ஒன்றுபோல இத்தனை வருடங்களாக இருப்பதும் அன்னையின் அருளால்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

முக்கியமாக எவரிடமும் பொய்மையும், பொறாமையுமில்லை. ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்துகொண்டு, அனுசரணையாக இருந்தபடி... அமைதியான வாழ்க்கையை நடத்தினார்கள்.

அன்னையின் மீதான பக்தி அவர்களுள்ளேயே பொதிந்து இருப்பதால், வேற்றுமை என்பதே அற்றுப்போய், ஓர் உன்னதமான ஒற்றுமையோடு, மனப்பாங்கோடுயிருந்ததால்தான், "அன்னை'க்காக ஒரு வீடே "தியானமையமாக" மாறும் அளவிற்கு அன்னை அவர்களுக்குச் செயல்பட்டார்.

"இது உண்மையான நிதரிசனம்".

இப்படியிருக்க முடியுமா? அதுவும் பெண்களாகவே, எல்லோரும் இருக்க, எப்படி ஒற்றுமையை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடிந்தது?

ஒருவருக்கொருவர் உறவோ, சுற்றமோ அல்லர். அப்போது, எப்படி அவர்களால் பாசமும், நேசமுமாகப் பழக முடிந்தது? காரணம்?

அவர்களனைவருக்கும் ஒரே ஆதாரம் அன்னை, ஸ்ரீ அரவிந்தர்தாம். அந்த ஆதாரம் அவர்களுக்கு மனோபலத்தைத் தந்தது. அதே ஆதாரம் அவர்களுக்குள் ஓர் உறுதியான பிணைப்பை ஏற்படுத்தியது. அந்த ஆதாரமே அவர்களைச் சுற்றி, மிகப்பெரிய ஆதாரச் சுருதியாக வளைய வந்தது. அந்த வளையமே, அன்னையால் பாதுகாப்பு வளையமாக மாறியது.

இப்படியும் நடக்குமா என்று கேட்பது காதில் விழுகிறது. இப்படியும் நிச்சயமாக நடக்கும், நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் நாம் நம் கண்ணாறப் பார்த்தும், காதால் கேட்பதுமாக இருக்கிற சத்தியம்.

"இப்படியும் நடக்குமா?'' என்கிற கேள்விகளைத் தவிர்த்து, "நாமும் இப்படி நடக்கலாமே...'' என்கிற எண்ணம் நமக்குள் எழும் வேளையே... நாம் அன்னையை நெருங்க, நமக்கும், அன்னைக்கும் உள்ள இடைவெளிகளைக் குறைக்கும் முதல் அடியாகும்.

எப்போதுமே "முதல் அடியை' எந்தக் காரியத்திற்கும், எண்ணத்திற்கும் நாம் உறுதியான மனதோடு, தைரியமாக, நம்பிக்கையாக எடுத்து வைத்தோமானால், அடுத்த அடி, அடுத்த அடி என மளமளவென்று வைத்து, நாம் வெற்றிப் பாதையில் நம்மை அறியாமலேயே முன்னேறுவோம்என்பது சத்தியமான நிஜம்என்பது உண்மையாகும். நம்மை அந்த விதத்தில் உணரும்போது ஏற்படும் விந்தையை நம்மால் உணர முடியும், உணர்வோம்.

வீடு என்று எடுத்துக்கொண்டால், அதிலிருக்கும் குடும்பத்தினர் எல்லோருமே ஒன்றுபோல இருப்பதுஎன்பது கடினம்தான்.

ஆனால், ஒன்றுபோலிருப்பதுஎன்பதில் ஸ்வாரஸ்யமிருக்காது. உடனே, அப்போது, ஒவ்வொருவர், ஒவ்வொரு விதமான எண்ணங்களுடனிருப்பது சரி வருமா?... அப்போது சண்டை, சச்சரவுகள் வாராதா? என்று நீங்கள் கேட்கத் தயாராகயிருப்பது புரிகிறது.

எண்ணங்களில் பல விதங்கள் இருக்கலாம். இருக்கலாம் என்பதைவிட இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நல்ல விதமாக பகிர்ந்துகொண்டு, எது நல்லதோ, அல்லது நடைமுறையில் சாத்தியமோ, அதை அனைவரும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் இங்கிதத்துடன் நடக்க வேண்டும். அப்போது அங்கு விரிசல் வருமா? யோசித்துப் பாருங்கள்.

இன்று ஒருவரின் யோசனையை ஏற்றுக்கொண்டால், இன்னொரு முறை, மற்றவர் அவரின் பேச்சை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்குத் தாமாகவே வருவார். அந்தப் "பக்குவம்” என்பதுதான், அன்னையை ஏற்றுக்கொண்ட நமக்கு தாரகமந்திரம் ஆகும்.

சமையலிலும், தின்பண்டங்களிலும், "பக்குவம்" தவறாமல் வெகு உன்னிப்பான கவனத்துடன் எவ்விதம் செயல்படுகிறோமோ, அது போலவே... மற்றவர்களுடன் பேசும்போதும், நடைமுறை வாழ்க்கையிலும் நம் மனோதர்மத்திற்கும், மனோபக்குவத்திற்கும் முக்கியமான இடத்தை நமக்குள் ஏற்படுத்திக்கொள்வதுஎன்பது மிக இன்றியமையாததாகும். அதனால் ஏற்படும் விளைவுகள் நிச்சயமாக நல்லவைகளாகவேயிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த இங்கிதமும், இணக்கமும், விட்டுக் கொடுத்தலும் இருந்தாலே போதுமே. எல்லாமே நல்லபடியாய் முடியுமே. அந்த விட்டுக் கொடுத்தலும், இங்கிதமும் உண்மையிலேயே சத்தியத்துடன் நடந்ததால்தான் "அன்னை ஸ்ரீ அரவிந்தருக்காக' ஒரு வீடே வரவேற்று, தியானமையத்துக்காக... தானம் தந்தது. எதிர்பாராத ஒன்று நடந்தது குறித்து அனைவரின் மனமும் ஒன்றுபட்டு, அந்த தியானமையம் வெகுவேகமாக எல்லோராலும் அறியப்பட்டதுதான் நிதரிசன உண்மையானது.

*****

அன்னம்மா விடியற்காலையிலெழுந்து தியானமையம் சென்றாள். எப்போதும்போல் வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டாள். உள்ளே சென்று, என்றும்போல் விழிகளை மூடியவள், அன்னையின் உலகத்திலேயே லயித்துவிட்டாள்.

அன்னம்மா படிப்பறிவில்லாதவள். மிகமிக சாதாரணமான குடும்பம்தான். குடிகார மகனை திருத்த முடியாமல் கஷ்டப்படுபவள் தான். ஆனாலும் அனுசரணையான மருமகளும், பேரக் குழந்தைகளுமாக, சந்தடியில்லாமல்தானிருந்தார்கள். தினமும் தியானமையம் போய், தியானம் செய்யத் தவறுவதே இல்லை. அதில் ஒரு நல்லது நடந்ததுஎன்றால், அவ்வப்போது மகனும் தியான மையத்திற்கு வந்ததுதான். அதுவே... மாமியார், மருமகளுக்கு சந்தோஷத்தைத் தந்தது.

"மனித மனம்" என்பது எதை "வேண்டாம்” என்று கூறுகிறோமோ, அதை உடனே செய்ய வேண்டுமென்ற துடிப்பை உடனே ஏற்றுக்கொண்டு, அதன்படி நடக்க முயல்வதுதான் "இயல்பாக" உள்ள தன்மை. அதனாலேயே, பலவிதமான சமயங்களில் நாம் மௌனிப்பது மிகமிக நல்லதாகும். அது தெரிந்தும் மௌனத்தைத் தவிர்த்து, ஒரு கலகத்தை ஆரம்பிக்கும் அளவிற்கு வாயை மிகச் சுதந்திரமாகத் திறந்து, வார்த்தைகளை வெளியேற்று- கிறோம், பின்விளைவுகளைப்பற்றி நினைக்காமல்.

ஆனால், அன்னாம்மாவும், அவள் மருமகளும் அன்னையைப் பரிபூரணமாக, மனதார நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அதனால் வீட்டில் எது நடந்தாலும், உடனே அன்னையை நினைத்து "சமர்ப்பணம்' செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் "சமர்ப்பணம்" என்பது, அவர்களுக்குத் தெரிந்த முறையில், அன்னையிடம் அத்தனையையும் கூறுவதுதான். இரு கரம் கூப்பி, கண்களின் இமைகள் மூட, மனதிலிருப்பதை அப்படியே அன்னையிடம் கூறுவார்கள். சின்னதோ, பெரியதோ, சந்தோஷமோ, மனக்கலக்கமோ, எதுவாயிருந்தாலும் "அம்மா' என்று அழைத்து, அவரவர் மனதிலிருப்பதை அன்னையிடம் கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அது மட்டுமன்று, அன்னையிடம் சொன்னவுடன், அதோடு அந்த விஷயத்தைப்பற்றி நினைப்பதே இல்லை.

இது பாமரர்களின் மனோபாவம். காரணம், அவர்கள் தாங்கள் கடவுளிடம் வேண்டும்போது, எதைக் கூறினாலும், அந்தச் சமயத்தில் பயபக்தியோடு கொட்டிவிடுவார்கள். பிறகு அதைப்பற்றி நினைப்பது இல்லை. நினைப்பதில்லை என்பதைவிட, நினைக்க நேரமிருப்பதில்லை என்பதுதான் உண்மை. அது, அன்னையின் பக்தர்களுக்கு உகந்ததாகிவிடுகிறது, அவர்கள் அறியாமலேயே.

இப்போதும் அப்படித்தான். அன்னையை வேண்டும்போது, மகனின் வாழ்க்கை சீர்பட, அவன் குடியைத் தவிர்க்கத்தான் வேண்டும்என அன்னம்மா, அன்னையிடம் தன் சங்கடங்களை ஒப்படைத்துவிட்டதில், மனதில் ஒரு நிம்மதியோடு, மற்ற வேலைகளை ஆரம்பித்துவிடுவாள். அதைப்பற்றிய நினைவே அவளைவிட்டு அற்றுப் போய்விடும்.

அதுபோல் நம்மாலிருக்க முடிகிறதா? அன்னையைப் பார்க்கும் போதெல்லாம் மனம் நினைத்ததை புலம்பும், அடங்காது. முணுமுணுவென மனதில் எப்போதும் ஒரு தொணதொணப்புடன்தான் அன்னையை ஏறிட்டுப் பார்ப்போம்.

"ஏன், அன்னையிடம் நம் கோரிக்கைகளைக் கேட்பது தவறா?''

"யார் சொன்னது தவறுஎன்று? அன்னையிடம் கூறாமல் எவரிடம் கூற முடியும்? தவறே அன்று. ஆனால், நாம் அன்னையிடம் நம் எந்த கோரிக்கையையும் கேட்கலாமே. எதுவானாலும் தைரியமாக அன்னையிடம் கேட்கலாம். கேட்பதோடு நம் கடமை முடிந்ததுஎன இருக்க வேண்டும். சின்னஞ்சிறு குழந்தை பெற்றவர்களிடம் தாம் வேண்டியதைக் கேட்டு அடம்பிடிப்பது போல நடக்க வேண்டியது சரியா? பெற்றவள் எப்படித் தன் குழந்தைகளுக்கு எவ்வெப்போது, என்னென்ன தேவைஎன்று கவனித்துச் செய்வாரோ, அது போலத்தான் அன்னையும் நமக்கு அந்தந்த வேளையில் தேவையானதைத் தாமாகவே தந்து பிரமிக்க வைப்பார். நிதரிசனத்தில் இது கண்கூடு''.

*****

தியானமையம் இப்போது, தியான நேரத்தில் நிறைய பேர் வரத் தொடங்கியதால், வெளியிலிருந்த இடத்திலும், மேலே வெயிலும், மழையும் உணராமலிருக்க சுவரெழுப்பி, அதன் மேல் மொட்டை மாடி போல் கட்டடம் எழுப்பியாயிற்று. கட்டடம் எழும்பும்போதே பலர் உதவ விரும்பி பணம் கொடுத்தபோது, சத்தியனுக்கும், மாமாவிற்கும் கண்கள் துளிர்க்க, அன்னை, ஸ்ரீ அரவிந்தரை சாஷ்டாங்கமாக வணங்கினார்கள்.

ராமுவும், சீனுவும் தவிர, வந்த அன்னையின் பக்தர்கள் தாங்களாகவே மனமுவந்து பல வேலைகளைக் கூடமாட செய்தார்கள். அதனால் நினைத்ததைவிட சீக்கிரமாகவே கட்டி முடிக்கப்பட்டது. ஒரு பெரிய "கூடம்' போல், சுமார் ஐம்பது பேர் உட்காரும் அளவிற்கு இருந்த இடத்தைப் பற்றி, அன்னையின் பக்தர் ஒருவர் சத்தியனிடம் பேச வேண்டுமென்றார். சத்தியன், மாமாவையும் அழைக்க, இருவருமாய் அந்த அன்னையின் பக்தரை ஆபீஸ் ரூமிற்குள் சென்று அமர வைத்தனர்.

அப்போது அந்த பக்தர் கூறியது:

"எனக்கு இந்த தியானமையத்திலேயே எப்பவும் இருக்கணும் போல் தோண்றது. நானும் உங்களோட சேவை செய்யணும்னு மனசு ரொம்பயிருக்கு. ஆனா, இன்னும் சில கடமைகள் எனக்கு இருக்கு. அதை முடிச்சுட்டுத்தான் வரணும். என் கடமையை முடிக்காம வர்றது அன்னைக்கு உகந்ததல்லன்னு எனக்குப் புரியறது. ஆனா, ஏதாவது செய்யணும், நானும் பங்குகொள்ளணும்னு மனசு துடிக்கிறது. அதனால... அதனால...'' தயங்கினார் மேலே பேச்செழாமல்.

"சொல்லுங்கோ... என்ன சொல்லணுமோ சொல்லுங்கோ. தயங்கவே வேண்டாம். எதுவானாலும் சொல்லுங்கோ...'' சத்தியன் கூறவும், அந்த பக்தர் கூறியது கேட்டு, பிரமித்தேபோயினர்.

ஆமாம், அவர் கூறியது: "எனக்கு, எனக்கு... இப்ப கட்டியிருக்கிற இந்த இடத்துக்கு "கிரானைட்' போட்டுத் தரணும்னு ஆசைப்படறேன். செய்யலாமா? அதற்கான செலவு முழுக்க நானே ஏத்துக்கணும்னும், அதுக்கு அன்னைகிட்டவே வேண்டிண்டேன். அப்புறமாத்தான் உங்ககிட்ட சொல்றேன். நான் சொன்னதுல ஏதாவது தப்பிருந்தா...'' மேலே பேச்சு வாராமல், கண்கள் துளிர்க்க, இரு கரம் கூப்பி நின்றவரை, சத்தியன் ஆசுவாசப் படுத்தினார். அவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

மூவருமாய், அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படத்தின் முன் நின்று, பிறகு அங்கேயே அமர்ந்தனர். தியானம் செய்ய ஆரம்பித்தனர்.

இதில் நடந்தது, அவர்களே அறியாமல் ஒன்றுபோல அமர்ந்தவர்கள், அன்னை, ஸ்ரீ அரவிந்தரின்முன் சம்மணமிட்டு அமர்ந்ததுதான் தெரியும். அதன் பிறகு அவர்களிடம் எந்த அசைவுமின்றி தியானம் அவர்களை ஆக்ரமித்தது.

அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அவர்களையே பார்ப்பது போன்று தோன்ற, மற்றவர்களும் துளிக்கூட சத்தமின்றி அமர்ந்து, அந்த அற்புதமான தியானத்தில் தாங்களும் சேர்ந்தனர்.

தியானம் முடிந்ததும் துளிக்கூட சத்தமின்றி எழுந்து சென்றார்கள் மற்றவர்கள். இவர்கள் மூன்று பேரும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வணங்கியபின், ஆபீஸ் ரூமுக்குள் சென்று அமர்ந்தனர். சில வினாடிகள் அமைதியாகவேயிருந்தனர். சத்தியனைப் பார்த்து, அந்த பக்தர் மீண்டும் பேசினார்.

"நான் இன்னும் கொஞ்சம் பேசணுமே... தியானத்தின்போது தான் ஒரு மின்னல்கீற்றுப்போல் அந்த எண்ணம் வந்தது, சொல்லலாமா?''

"சொல்லுங்கோ... அன்னையோட தியானத்துல வந்த மின்னல் எண்ணம், நிச்சயமா உங்க வாழ்க்கையையும் சுபிட்சமாக்கும். தயங்காம சொல்லலாம்... ம்...''

"கீழே இந்த ஹாலுக்கு "கிரானைட்" போட்டுத் தர அன்னையோட அனுமதி கிடைச்சுருக்கு. இப்போ இன்னொண்ணும் தியானத்துல தோணித்து. அன்னையோட சம்மதமில்லாம எனக்கு வந்துருக்காது. அதனாலதான் சொல்றேன். இப்ப மொட்டை மாடி கட்டியிருக்கு இல்லை, அதற்கு மேலே "ஆஸ்பெஸ்டாஸ்" வேண்டாமே, நல்ல கட்டிடமாவே பண்ணிடலாமே... தரையிலயும் கிரானைட் போட்டுடலாம். எத்தனை செலவானாலும் பரவாயில்லே. "அன்னை' நான் ஏத்துக்க அனுமதி தந்திருக்கிறதாலேதான் சொல்றேன். தப்பா நினைச்சுக்கக் கூடாது, சரியா? ஆனா, இந்த விஷயம் நமக்கும், அன்னை, ஸ்ரீ அரவிந்தருக்கும் மட்டும் தெரிஞ்சா போதும்''.

பவ்யமாகப் பேசும் அவரின் உணர்வுபூர்வமான பேச்சில், அவரின் சத்தியம் தெரிந்தது, பக்தி புரிந்தது, அடக்கம் பிரமிக்க வைத்தது. அந்தப் பண்பு அவர்களை உடனே ஒத்துக்கொள்ளவும் செய்தது. உடனே ஆமோதிக்கவும் தூண்டியது.

மளமளவென தியானமையம் மாடியிலும் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அமர, வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க, விசாலமான இடம் வெகுஅழகாக அமைந்தது. மாடியிலும் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் தெய்வீகமான சுடருடன், கண்களில் கருணை ததும்ப, எல்லோரையும் வரவேற்று அருள்புரிந்தனர் என்றால் மிகையாகாது.

அன்னம்மாவின் மகன், அன்னம்மாவோ, மனைவியோ சொல்லாமலேயே தியானமையத்திற்குத் தனக்குத் தோன்றிய போதெல்லாம் போனான். சில சமயம் அன்னம்மாவிற்குத் தெரிந்தது. பல சமயங்களில் அவளுக்குத் தெரியாது. ஆனாலும் எப்போதும் போல், அவள் வாசல் பெருக்குவதும், பூக்களைத் தருவதுமான தன்னுடைய இயல்பான வாழ்க்கையில் மாற்றமேயில்லாமலிருந்தாள்.

மருமகளும், பேரக் குழந்தைகளும் முடிந்தபோதெல்லாம் தியானமையத்திற்குப் போவதை வழக்கமாகக்கொண்டனர். அதுவும் "முதல் தேதி” மாதாமாதம் போவதை மட்டும் தவறாமல் செய்தனர்.

அன்னம்மாவின் மகன் அன்று, இரண்டு பேர் பிடித்து வர, வீட்டிற்கு வந்தவனை, கண்கள் அகல, பயத்தோடு மாமியாரும், மருமகளும் ஓடி வந்து பிடித்தபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அழைத்து வந்தவர்களுக்கும் நன்றி கூறினார்கள். அதிகம் குடித்துவிட்டதால் அவனால் நடக்க இயலவில்லை.

துவண்டு, சோர்ந்துபோனவன், வாய் திறந்து பேச முடியாதபடி களைத்து, படுத்தவன், தன்னையறியாமலேயே அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படத்தையே பார்த்தவன், இரு கரம் கூப்பி வணங்கியவன், வாய்விட்டுக் கதற ஆரம்பித்தான்.

"முடியலே... என்னால முடியலே... தப்பு பண்ணிட்டேன்... தப்பு பண்ணிட்டேன்... அம்மா... என்னை மன்னிச்சுடும்மா... ம்மா... முடியலயே... இனிமேல்பட்டு... அந்த இடத்துக்குப் போகவேமாட்டேன். என்னை நம்பும்மா... அம்மா... தாயே... அன்னையே... என்னை நம்பு... ம்மா... ம்மா...'' அப்படியே மயங்கியேபோனான்.

அன்னம்மா மகனை தன் மடியில் இருத்தி, "அன்னையே சரணம்" சொல்லியபடி மகனின் சரீரம் பூராவும் தடவிக் கொடுத்தாள். மருமகளோ... அன்னைக்கு உடனே ஊதுவத்தி ஏற்றி, வேண்டியவள், சம்மணமிட்டு அமர்ந்தேவிட்டாள். "அன்னையின் சரணம்" மட்டுமே அவளுள் புகுந்து, ஆக்கிரமித்தபடியால், எந்தவிதமான இடையூறும் இல்லாமல் "தியானம்" தீவிரமாகயிருந்தது. கலைந்து எழுந்தபோது, அவள் கணவன் வலி குறைந்து தூங்கியேபோயிருந்தான்.

"நல்ல குணத்தைப் பல உயர்ந்த கட்டங்களாகப் பிரித்து, மனிதர்களை நிர்ணயிப்பதுபோல், அன்னையிடம் உள்ள ஈடுபாட்டை அளவீட்டிற்குள் கொண்டு வர முயல்வது திட்டவட்டமான பலன் தாராது. பக்திக்கு அளவில்லை, அதனால் அளவீடும் இல்லை. அது இறைவனுக்கும், நமக்கும் இடையேயுள்ள பவித்திரமான தொடர்பு. கணக்கில் அகப்படக்கூடியதில்லை''.

எத்தனை அனுபவபூர்வமான, அறிவுபூர்வமானவைகள். "ஆத்ம சோதனை' என்னும் புத்தகத்தில் "பத்து கட்டங்கள்" என்னும் கட்டுரையிலிருந்து எடுத்து எழுதியது.

பத்து கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் வாழ்வின் நிதரிசனத்தில் நம்மை எந்த நேரத்திலும், எந்த விதத்திலும் பக்குவப்படுத்துவதாகும். இதை நாம், நிச்சயமாக உணர முடியும் என்பதே இந்த புத்தகத்தின் சாராம்சம்.

இந்த புத்தகத்தின் பொருளடக்கத்தைப் படித்தாலே நமக்கு கட்டுரைகளைப் படிக்கத் தூண்டும். காரணம் மனித மனத்திற்கு மிகமிகத் தேவையானவைகளே, மிகவும் அழகாக, மனதில் பதியும்படியாக எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது, நமக்காகத்தான். ஆம்... பாமரர்களான நமக்கேதான்.

கட்டுரைகளின் ஆரம்பமே "விவேகத்தில்"தான். அதன்பின் அந்த விவேகத்தை எப்படி "பாகுபாட்டோடு" நடத்த வேண்டுமென்- பதே. அப்படி நடந்தால் நம்மைத் "தேடி வரும் அதிர்ஷ்டம்". "ஜாதகம்", இது ஏன்? தேவையேயில்லை. அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் நம்முடன் இருக்கையில் "ஜாதகம்" என்பதை மறுக்கலாம், மறக்கலாம். "நினைவும், செயலுமே" நிச்சயம் ஒன்றுக்குள் ஒன்று தொடர்பு உடையவை. அதனால்... நம் "நினைவும், செயலும்" ஆன்மீகத்தில் அன்னையின் கோட்பாடுகளுடன் நடப்பதுதான் "பாதுகாப்பு". அன்னையின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு நடப்பவர்களுக்கு "பாதுகாப்ப" கவசமே கிடைக்கும். "கடந்த கால நினைவுகள்", இது யாருக்குத்தான் இல்லை? அதைப் பற்றிய கட்டுரை நமக்கு மிகவும் தேவை. "உறவும், உணர்வும" நம் மனிதர்களுக்கு மிகமுக்கியமானது. "பத்து கட்டங்கள்" படித்து, உணர்ந்து, நடக்க வேண்டியது. கடைசியில் "ஆத்ம சோதனை". சத்தியத்தில் இது நமக்கு மிகமிகத் தேவையானது, உகந்ததுமாகும். நம்மை நாமே புடம்போட்டு புனிதப்படுத்திக் கொள்வதாகும்.

இவை அனைத்தும் எழுதுவதும், படிப்பதும் மிகமிக சுலபம். ஆனால் நடைமுறையில்? ஆம், கேள்விக்குறிதான். ஆனால் அன்னை, ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக்கொண்ட நம்மால், ஆம், அன்னையின் பக்கபலத்தால், ஆசிகளால் நம்மை நாமே சரிப்படுத்திக்கொள்ள முடியும்என்பது சாத்தியமே. இதை மனமுவந்து, மனப்பூர்வமாய் நாம் ஏற்றுக்கொண்டு நடந்தால், நம் வாழ்க்கையின் உன்னதம்... நமக்கே... ஆம், நமக்கே ஆச்சரியமான மகிழ்வைத் தரும் என்பது சர்வ நிச்சயம்.

*****

அன்னம்மாவின் மகன் இந்த முறை ரொம்பவுமே குடியினால் குடல் வெந்து, மிகவும் அவஸ்தைப்பட்டுவிட்டான். அன்னம்மாவும், மருமகளும், அவரவர் மனதிற்கேற்ப அன்னையை வேண்டுவதே தங்கள் கடமைஎன்பதுபோல் ஊதுவத்தி ஏற்றி, மாறி, மாறி, நோயுற்றவனைப் பார்த்துக்கொண்டு, தியானமையத்தின் தியானத்திலும் தவறாமல் கலந்துகொண்டு, அங்கிருந்து பூக்களை எடுத்து அவன் வயிற்றின் மேல் பயபக்தியோடு வைத்தார்கள்.

நீர்த்தப் புழுங்கலரிசி கஞ்சிதான் அவன் வயிற்றுக்கு இதமாக இருந்தது. அதையே கொடுத்தார்கள். சத்தியன் விஷயத்தையறிந்து, அவனை வந்து பார்த்தவர், தம் காரை எடுத்து வந்து, அவனைக் குழந்தைபோல் தூக்கி, பின்னால் ஸீட்டில் படுக்க வைத்து, அவன் மனைவியையும் கூட அழைத்துக்கொண்டு, டாக்டரிடம் காட்டி, அவர் ஆஸ்பத்திரியிலேயே ஒரு வாரம் இருக்க வேண்டுமென்றதும், சரி என அட்மிட் செய்தார். சிகிச்சையும் அன்றே ஆரம்பித்தாயிற்று. அன்னையின் அருளால் அவனுடைய வயிற்றில் புண்கள்தானே தவிர, கேன்சரில்லைஎன ரிஸல்டில் வந்தது அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதியாயிற்று. சிகிச்சையும் ஆரம்பித்தாயிற்று.

அன்னம்மாவும், மருமகளும் மாறி, மாறி ஆஸ்பத்திரியில் இருந்தாலும், சமயம் வாய்த்தபோது, தியானமையத்துக்குப் போய் பிரார்த்திப்பதை மட்டும் விடாமல் தொடர்ந்தனர். அன்னையிடமே மகனை ஒப்படைத்துவிட்ட மனோபாவம் அவர்களிருவரிடமும் இருந்ததால், வேண்டும்போது, மனம் முழுவதும் அன்னையின் நினைவுகளால் நிரம்பி, வேண்டினர். பிறகு, அன்னையிடம் கூறிவிட்ட நிம்மதியில், வேலைகளைக் கவனித்தனர். சஞ்சலம் என்பதே அவர்களிடம் இல்லை.

"அன்னையிடம் கூறிவிட்டோம். அன்னை பார்த்துக்கொள்வார்", இந்த நம்பிக்கைதான் அவர்கள் மனம் முழுவதும் நிரம்பியிருந்ததில், எந்தவிதமான கிலேசமுமின்றி அன்றாட வேலைகளை செய்வதில் ஈடுபட்டனர்.

இது பாமரர்களுக்கே உரித்தான மனோபாவம். ஆம், அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் அவர்களின் மனம், எந்தத் தெய்வத்தை வேண்டுவதானாலும், அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தில், அதுவும் அந்த நேரத்தை வீணாக்காமல், மனம் நிறைந்து, கனிந்து, உருகி வேண்டுவதால், அது உடனே சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிடுகிறது. அதன் பிறகு அவர்களின் அன்றாட வேலைகளில் மூழ்கிவிடுகிறார்கள். ஆனால்... நாம்... ஹும்... அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமா? நம் மன உளைச்சலையே நம்மால் தள்ள முடிவதில்லை. அதனால், நம் வேண்டுதலை, வேண்டும் தெய்வத்திடமே விடாப்பிடியாக தொந்திரவு செய்து துளைத்து எடுத்துவிடுகிறோம். அப்போதும் நம் மனம் அடங்காமல், நம்மைத் துளைத்து, புரட்டுகிறது. "வேண்டுவதை அன்னையிடம் ஒப்படைத்து விட்டோம், இனி அன்னையின் பொறுப்பு" என நம்மால் இருக்க முடியாமல், ஒரு உளைச்சல் சதா மனதில் வைத்துக்கொண்டு, கஷ்டப்படுவது சரியா? இல்லை எனத் தெரிந்தாலும், புரிந்தாலும்... ஊஹும்... நம் மனதை நம்மாலேயே அடக்க முடியாமல், அதன் போக்கில் விட்டுவிடுகிறோம். அதனால் நம்முள் ஏற்படும் பலவித வேண்டாத எண்ணங்கள், யோசனைகள், அதற்கான வழிகள் எங்கே, எங்கே எனத் தேடித் துளைக்கும் மனதுள் நிம்மதி ஏற்படுகிறதா? வழி கிடைக்கிறதா? யோசனைகள் முற்றுப்பெறுகிறதா? ம்...ஹும்... இல்லை. எதுவுமே நமக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் நிஜம். சத்தியத்தின் உருவான நம் அன்னையின் அருகாமையை விட்டுவிட்டு, அன்னையின் முன்னிலையில் அமர்ந்து தியானம் செய்யும் நம் மனதில் எத்தனை தனித்தனியான பிரிவுகள், வெவ்வேறு வழிகளில் செல்கின்றன? ஒன்றுக்கொன்று சந்திப்பதேயில்லையே. "நாம் எதைத் தேர்ந்தெடுப்பது? எதை விடுவது?' இந்த இரண்டு கேள்விகள் மட்டுமே நம்மிடம் மிச்சமாக உச்சத்திலிருக்கிறது. பதில்!! ஆச்சரியக்குறிதான்!

தொடரும்.....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வேலையின் இரு பகுதிகள் இணைந்து செயல்பட ஒவ்வொன்றும் தன்னுள் முறையான அமைப்பை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்.
 
இருப்பவை சரியாக இருந்தால் இணைந்து செயல்படலாம்.

*****



book | by Dr. Radut