Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/74) மனத்தைச் சத்திய ஜீவியத்திற்கு நேரடியாக உயர்த்தும் அரிதான செயலை நிகழ்த்த முறைகளைக் கைவிட வேண்டும். இடையேயுள்ள நிலைகளின் அமைப்பைக் கடந்து செல்ல, முறைகள் பயன்படும். அவை மௌனத்தில் கரைந்தால் மனம் நேரடியாக சத்திய ஜீவியத்தைத் தொடும்.

  • நேரடியாக மனம் சத்திய ஜீவியத்தை அடைய முடியுமென்றாலும் அது அரிது.
  • உலகத்தில் எங்கும் உள்ள முறை படிப்படியாக உயர்வது.
  • சமயத்தில் சில படிகளைத் தாண்டலாம்.
  • இது ஆன்மீகம், அரசியல் பதவி, வேலை, கல்வி, செல்வம், விளையாட்டு, சங்கீதம் எல்லாவற்றிற்கும் பொதுவானது.
  • விதிவிலக்காக முதல் படத்திலேயே கதாநாயகனாவது, நேரடியாகப் பிரதமராவது, முதல்வராவது, இளம் வயதில் வைஸ்சான்ஸ்லராவதும் உண்டு.
  • அப்படிப்பட்டவர்கட்குத் திறமை பிறப்பிலேயே இருப்பதுண்டு.
  • மகாத்மா காந்தி ஆப்பிரிக்காவிலிருந்து 1915இல் வந்தார்.
    1919இல் அகில இந்தியத் தலைவரானார்.
  • அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் 20ஆம் வயதில், 30ஆம் வயதில் உலகத் தலைமைக்கு வந்துவிட்டனர்.
  • பிறப்பிலேயே திறமையில்லாவிட்டாலும், எளிதில் உடனே அனைத்தையும் கிரகித்துக் கொள்ளும் சக்தி இருப்பவருக்கு இது முடியும்.
  • பகவான் ஹட யோகம், ராஜ யோகம், மௌனம் ஆகியவற்றை 3 நாளில் பெற்றவர்.
  • அவர் அவதாரப் புருஷர், நேரடியாக ஆண்டவனே ஸ்ரீ அரவிந்தராக அவதரித்தார்.
  • மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடையே 4 நிலைகள் உள்ளன.
  • ஆன்மீக முன்னேற்றம் மோட்சம், சத்திய ஜீவியத்தை அடைதல் போன்று ஏராளமாக - சிறு சித்திகள் - உண்டு.
  • திருஷ்டி, மௌனம், பிறர் மனத்தை அறிவது, எதிர்காலத்தைக் கூறுவது, நடந்துபோன விஷயத்தை அறிந்து பரிகாரம் சொல்வது, தொலைந்த பொருளைப் பற்றிப் பேசுவது, ஆபத்தை விலக்குவது, எதைச் செய்தால் கூடிவரும் எனக் கூறுவது என ஆயிரம் சிறு சித்திகள் உண்டு.
  • இவற்றை ஒரு குருவிடம் கற்கலாம், சொந்தமாகவும் பெறலாம்.
  • அங்கெல்லாம் படிப்படியாக முன்னேறுவது, ஒரேயடியாய் முடிவை அடைவது என்பவை உண்டு.
  • அந்த முறை சத்திய ஜீவியத்திற்கும் உண்டு.
  • இதன் இரகஸ்யம்
    • சிறிய ஆத்மா முறையை நாடும்.
    • பெரிய ஆத்மா மூலத்தை நாடும்.
    • பெரிய ஆத்மாவாக இருந்து நேரடியாக மூலத்தை எட்டும் திறனிருந்தாலும், முறைகளை கடைபிடிப்பவருண்டு. அவர் பெறுவது பெரியது, perfect perfection.
  • டாக்டர் ஒவ்வொரு சோதனையாகச் செய்து பல நாளில் நோயைக் குணப்படுத்துகிறார்.
  • அதே நோயாளிக்கு ஒரே நாள் மருந்து கொடுத்து உடனே குணப்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம்.
  • எளிய முறையைக் கண்டுபிடிக்க அவர் பல ஆண்டு அனுபவம் பெற்றிருக்கிறார்.
  • பிரம்மத்தை அறிபவன் எதையும் அறியலாம் என்பது உபநிஷதம்.
  • முறைகள் பல, மனிதர்கள் பல வகை, பலன் பெறுவதும் பல வகை.
  • அவை சிகரமான சத்திய ஜீவியத்திற்கும் பொருந்தும் என்பதை பகவான் The Life Divineஇல் 3 அல்லது 4 இடங்களில் கூறுகிறார்.
  • லிடியாவுக்கு £200 சம்பாதிக்கும் விக்காமும், ஜேனுக்கு £4000 பெறும் பிங்லியும், எலிசபெத்திற்கு £10,000 பெறும் டார்சியும் என்பது சட்டம்.

******

II/75) சுயநலம் செயலை மூன்று நிலைகளில் - பெருந்தன்மை, சாதாரணம், கொடுமையான பாவம் - கணிக்கிறது. தான் பிறருக்குச் செய்யும் அதே காரியத்தைத் தனக்கு வேறொருவர் செய்தால் பெருந்தன்மை கொடுமையாகிறது. தான் சம்பந்தப்படாத இடங்களில் அது சாதாரணமான செயலிலும் தெரிகிறது.

  • பிறரில் கொடுமையைத் தன்னில் பெருந்தன்மையாக நினைப்பது சுயநலம்.
  • மனிதன் அறிவு, பகுத்தறிவு, நியாயம், நடுநிலைமையெனப் பேசுகிறான்.
  • தனக்குச் சாதகமாக இருக்கும்வரை இதெல்லாம், பிறர் விஷயத்திலில்லை.
  • எளிய மனிதன், பெரிய மனிதன், தலைவர், சான்றோர், நாடுகள் உள்பட வழங்கும் நியாயம் இது.
  • மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற சொல்லுக்கே அவசியமில்லாமல் மாமியாரே வீட்டிலில்லை என்பது இன்றைய நிலை.
  • நன்றியறிதல் உலகில் இன்னும் பிறக்கவில்லை என்கிறார் அன்னை.
  • பெற்றதற்குப் பிரதிபலன் செய்ய மனிதனுக்குத் தோன்றாது என்கிறார் பகவான். யாராவது எடுத்துச் சொன்னால்தான் தெரியும்.
  • தமக்கை இரண்டாந்தாரமாகப் போனபின் பட்டதாரி மாப்பிள்ளை வருவது அதிசயமல்ல, எனக்குரியது என மனம் எடுத்துக் கொள்கிறது.
  • 7 ஆயிரம் கைமாத்து வாங்கியவர் 12 ஆயிரம் திருப்பிக் கொடுப்பது சரி என்பது மன நலம்.
  • உடன்பிறந்தவர் அனைவரும் அவர்கள் பங்கு சொத்தை என்னைக் கேட்கமாட்டார் என்பது மனத்தின் நியாயம்.
  • குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தபின் மனைவி குடும்பத்தை நடத்தி, குழந்தைகளின் படிப்பு, திருமணத்தை முடித்தால் அது சரி, ஒன்றும் பெரிய காரியமில்லை, நேரம் வரும் பொழுது கொடுமைப்படுத்துவேன்.
  • பென்ஷனில்லாமல் தகப்பனார் ரிடையர் ஆனபின் பட்டதாரி சம்பாதிக்க முயலவில்லை. குடும்பம் தன்னையும், தன் மனைவியையும் வைத்துக் காப்பாற்ற நினைக்கிறான். அவனுக்கு அது நியாயம்.
  • வறுமையில் உள்ள பால்ய நண்பருக்கு வசதியானவர் உதவ நினைக்கவில்லை. அடுத்தவரை அவர் வீட்டை வறுமையானவர்க்குத் தர வேண்டும் என எழுதி அனுப்ப மனம் வருகிறது.
  • 300 ரூ. செலவுக்கு அண்ணார் மகன் 3000 ரூபாய் கொடுத்து, நிர்வாகம் செய்தவர் எல்லாம் செலவாகிவிட்டது என அவனிடம் கூறத் தயங்கவில்லை, கூச்சப்படவில்லை.
  • தனக்குப் பெரிய சேவை செய்தவனுக்கு அந்தச் சேவையால் உயிருக்கு ஆபத்து வந்தது தெரிய வந்தபொழுதும் எச்சரிக்க மனம் வரவில்லை என்பது பூரணமான சுயநலத்தின் கொடுமை.
  • பிறர் பொருள், பிறர் உரிமை, பிறர் பணம் அழிய தான் தான்தோன்றித்தனமாக ஒரு முறை, பல முறை, பல ஆண்டுகள் நடக்க வெட்கப்படாத மனமுடையவருக்கு நல்ல பிள்ளை எனப் பெயர்.
  • பூரண யோகத்தில் பிறரைக் குறை கூற முடியாது. நமக்கே தீங்கு செய்தாலும் கூற முடியாது.
    இதுபோல் நாமிருக்கிறோமா என மட்டும் கருத வேண்டும்.
    ஏன் இது நமக்கு வருகிறது எனக் கேட்க வேண்டும்.
  • Mrs.பென்னட் பெண்களைக் கட்டுப்படுத்தாதது தவறு என அறியவில்லை. பொது இடத்தில் வீட்டுக்கு உரியவரைத் திட்டுவது சரியல்ல என அறியவில்லை. துருதுரு என அறிவற்ற காரியங்களால் நல்ல சிறந்த வாய்ப்பைக் கெடுத்ததும் தெரியவில்லை.
  • 17 கொலைக் குற்றம் சாட்டப்பட்டவன் பால தண்டாயுதம். பால தண்டாயுதம் சிறையில் இராஜாஜியுடனிருந்தபொழுது அந்த இளைஞரை இராஜாஜிக்குப் பிடித்துவிட்டதால், அவர் ஜனாதிபதி மூலம் கருணை காட்டி அவனை விடுவித்தார்.
    நல்லவர் பலர் வாழ்வில் இது போன்ற நல்ல காரியங்களைப் பலன் பெறுபவர் அறியாமல் செய்ததுண்டு. அதற்கு நன்றி தெரிவிக்க வழியில்லை. தெரிந்து செய்தவர்க்கு நன்றி உணர்ந்தவர் உண்டு என நான் கேள்விப்பட்டதில்லை.
    மனித சுயநலம் பூரணமானது, கண்மூடித்தனமானது,
    பலித்தால் மேலும் மேலும் தொடர்ந்து கேட்கத் தவறாது.
    ஏதோ ஒரு கட்டத்தில் கேட்ட உதவி கிடைக்காவிட்டால் சபித்துக் கரித்துக் கொட்டத் தவறுவதில்லை.
    மனித சுபாவத்தை அறிய விரும்புபவர் தம் சுபாவத்தை அறிதல் நன்று.

தொடரும்....

*******

 

ஜீவிய மணி
 
சிறியது தான் அகத்தில் பெரியது
என அறிவது மனிதன் தெய்வமாக மாறுவதாகும்.
 

 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வாழ்வை அருளாக ஏற்பது பேரருள்.
 
 
 
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நாடாதது நடக்கும்; தேடாதது கிடைக்கும்.
 
 
 

 

******

 



book | by Dr. Radut