Skip to Content

11. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

ஸ்ரீ அன்னையின் தியான மையத்தில் பொறுப்பில் இருக்கும் பெண்மணி தன் சேவைக்கான நேரம் நெருங்கவே தியான மையம் செல்ல ஆயத்தமானார். அப்பொழுது வெளியூர் சென்றிருந்த அவரது கணவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தான் இரயிலில் வந்து கொண்டிருப்பதாகவும் அவருடைய வண்டியில் இரயில் நிலையம் வந்து தன்னை அழைத்துப் போகும்படியும்கேட்டார். அவரும் வீட்டில் தாயாரிடம் சொல்லிவிட்டு தனது இரண்டு சக்கர வாகனத்தில் இரயில் நிலையம் சென்றார்.

அந்தப் பொழுது சாய்ந்த வேளையில், ரயில் நிலையத்தில் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் ஒரு தாயும் மகளும் அங்கு செல்பவர்களிடம் ஏதோ விசாரித்தபடி நின்று கொண்டிருந்தனர். தன் வண்டியை அங்கு நிறுத்திய அன்பரிடம், தாம் செல்ல வேண்டிய ஊர் பெயர் சொல்லி அடுத்த ரயில் எப்பொழுது என நின்றுகொண்டிருந்த தாய் விசாரித்தார். அன்பர், இரயில் நிலையம் உள்ளே சென்று விசாரித்து அதிகாலையில் அடுத்த இரயில் என அவருக்குப் பதில் கூறினார்.

கூறிக்கொண்டிருக்கும்போதே, ரயிலிலிருந்து இறங்கிய அவர் கணவர் அங்கு வந்து சேர்ந்தார். அன்பர் கணவரிடம் இவர்களைப் பற்றிய விவரம் சொல்லியபோது, “அவர்கள் எல்லோரிடமும்தான் கேட்கிறார்கள். வந்த வேலையைப் பார். நீ வீட்டுக்கே திரும்பிப் போ. எனக்குப் பேருந்து நிலையம் அருகில் வேலையிருக்கிறது. வேலை முடித்துவிட்டு நானே வந்துவிடுகிறேன்” என்றார்.

கணவர் சென்றவுடன், அன்பர் வண்டி நிறுத்திய இடத்தில், தயங்கியபடியே அந்தத் தாயும் மகளும் நின்றிருந்தனர். சிறிது பேச்சுக் கொடுத்ததில், அவர்கள் நவக்கிரக ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு ஊர் திரும்புவதாக அறிந்தார். மேலும் இரயில் நிலையம் புனரமைப்பிற்காக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கிறபடியால் பயணிகள் தங்குமிடமும் ஏற்றதாக இல்லை என்றும் அதிகாலை வரை எங்குத் தங்குவது என அச்சமாக உள்ளது என்றும் கையிலும் இரயில் பயணக் கட்டணம் தவிர ஏதும் பணம் இல்லை, தங்குவதற்கு ஏதேனும் வழி சொல்ல முடியமா என்றும் இவரைக்கேட்டனர்.

தனியாக நிற்கும் அவர்களை விட்டுச்செல்ல அன்பருக்கு மனம் வரவில்லை. அன்னைக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டு, தான் அன்னை படங்களை வைத்து வழிபட தன் வீட்டை ஒட்டியபடி ஏற்படுத்தியுள்ள ணிதtடணிதண்ஞு போன்ற இடத்தில் இவர்களை ஓரிரவு தங்க வைக்க எண்ணினார். அவர்களிடம் சற்றுப் பொறுங்கள் எனக் கூறி அருகிலிருந்த ஆட்டோ டிரைவரிடம் சென்றார். “இவர்கள் இருவரையும் என் வீடு வரை அழைத்துச் செல்ல வேண்டும். என்னிடம் பணமில்லை. இறக்கிவிடும் பொழுது பணம் தருகிறேன். வர முடியுமா?” எனக் கேட்டார். ஆட்டோ டிரைவரும் ஒத்துக்கொண்டு, “நீங்கள் முன்னே செல்லுங்கள். உங்களைத் தொடர்ந்து வருகிறேன்” என்றார்.

அன்னை அன்பர் வீடு வந்ததும் outhouse கதவைத் திறந்துவிட்டு, நீங்கள் உள்ளே இருங்கள். நான் உங்களுக்குச் சாப்பிட ஏதேனும் கொண்டு வருகிறேன் என்று வீட்டினுள் சென்றார்.

அன்பர் திரும்ப வந்து பார்த்தபொழுது, உள்ளே ஸ்ரீ அன்னையின் திருவுருவப்படத்தின் முன் மகள் நின்று கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தாள். தன் நிலைமையை எண்ணி அழுகிறாள் என்று எண்ணிய அன்பருக்கு அவர் கூறியது பெரும் வியப்பைத் தந்தது.

“எனக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. குழந்தைக்கு ஜாதகம் கணிக்கச் சென்ற இடத்தில் சோதிடர் கணவனையும் குழந்தையையும் நான் பிரிந்திருக்க வேண்டும், நவக்கிரக ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் எனச் சொன்னார். அந்தப் பரிகாரம் நிமித்தமே நாங்கள் இங்கு வந்தோம். இவ்விவரத்தை என் கணவரிடம் சொல்லியபோது, அவர் தன் பையிலிருந்த அன்னையின் படத்தைக் காண்பித்து, “நான் இந்தம்மாவைத்தான் நம்பியிருக்கிறேன். எதுவாக இருந்தாலும் இந்தம்மாவிடம் சொல்லிவிட்டு என்னுடனே இரு. ஒன்றும் ஆகாது’’ என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். நான்தான் அவர் சொல்லைக் கேட்காது, என் அம்மாவுடன் பரிகாரத்திற்காகப் புறப்பட்டு வந்தேன். தெரியாத ஊரில் தனியாக மாட்டிக் கொண்டு தங்க இடமில்லாமல் நாங்கள் தவித்த போது புகலிடம் தந்தது இந்தம்மாதான். நான் என் கணவர் கூறியதையும் அன்னையையும் நம்பாமல் பரிகாரம் செய்ய வந்த போதும், நாங்கள் அழைக்காமலே எங்களைக் காப்பாற்றியது இந்த அன்னையே. இவர் எங்களுடன் இருக்கிறார். இனி எங்களுக்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை என்று மனம் நிம்மதியடைந்தது” என்றார்.

கணவரின் அன்னை பக்தி மற்றும் நம்பிக்கை, திக்கற்றுத் தவித்த மனைவியை நாடிவந்து ஸ்ரீ அன்னை அரவணைத்த விதத்தினை கண்ட அன்பரும் மனம் நெகிழ்ந்தார். இப்புதிய அனுபவத்தை எண்ணி, சொல்ல வார்த்தைகள் வராமல் பரவசத்தில் மூழ்கினார். யாரும் உதவிக்கு இல்லாமல் குழப்பத்தில் நிற்கும் இவர்களைக் காப்பாற்ற அன்னை தன்னை ரயில் நிலையத்திற்கு வரவழைத்த விதத்தை எண்ணி ஆச்சரியப்பட்டார்.

முகம் தெரியாத அன்னை அன்பர்களை ஒருவரோடொருவர் சேர்த்து இணைக்கும் அன்னை சக்தியை என்னென்று கூறுவது என்று வியந்து மகிழ்ந்தார்.

********

ஜீவிய மணி

உடலுக்கு நோய் இல்லை. வந்தால் தானே குணப்படுத்திக் கொள்ளவல்லது. ஒரு ஸ்பிரிங்கை அழுத்தினால் சுருங்கும். நாம் அதை நீட்ட முயல வேண்டியதில்லை. அழுத்தாமல் இருந்தால் தானே நீண்டுவிடும். உடல் அதைப்போன்றது.

டாக்டர்கள் உடலில் வியாதியை உற்பத்தி செய்து பிறகு குணப்படுத்துகிறார்கள் என்பது பகவான் வாக்கு.

நாம் உடலை அதிகமாகக் கவனித்தால் அது நோயுறும். சந்தோஷமாக இருக்கத் தீவிர முயற்சி எடுத்து உணர்வை அளவுக்கு மீறிப் பாராட்டினால் சோகம் எழுந்து நிலைக்கும். அதேபோல் மனத்தை அதிகமாகக் கவனித்தால் பைத்தியம் பிடிக்கும் என்கிறார் அன்னை. இவை அனைத்தும் பகுதிகள். நாம் என்பதும் பகுதியான அகந்தை. பகுதிகளை அவர்கள் போக்குக்கு விட்டுவிட்டால் இயல்பாக இயற்கையாக நல்ல ஆரோக்கியத்துடன் அவை இருக்கும். ஒரு பகுதியை அடுத்த பகுதி அதிகமாகக் கவனித்தால் அப்பகுதியின் குறை எழுந்து வளரும் என்பது தத்துவம்.

*******



book | by Dr. Radut