Skip to Content

12. அன்னை இலக்கியம் - எந்த நேரமும் அன்னை வருவார்

அன்னை இலக்கியம்

எந்த நேரமும் அன்னை வருவார்

இல. சுந்தரி

எந்தச் சிறிய விஷயமாவது, நேரடியாகவோ மறைமுகமாகவோ இறைவனாகிய இந்த அற்புதப் பேருண்மையுடன் உன்னைத் தொடர்புறுத்தும் ஒவ்வொரு சமயமும், இதயம் ஒரு தீவிரமான, அற்புதமான மகிழ்ச்சியால், வேறெதனாலும் கிட்டாத ஓர் ஆனந்தச் சுவை தரும் நன்றியுணர்வால் நிரம்புகிறது.

ஸ்ரீ அன்னை

எந்த நேரமும் அன்னை வருவார். எந்த வடிவிலும் அன்னை வருவார்.

அவர் ஒரு பக்தர். பக்தி செய்வதையே தம் வாழ்வாகக் கொண்டவர் என்றும் கூறலாம். தெய்வீகத்தை எங்குக் கண்டாலும், பணியவும், தொண்டு செய்யவும் விரும்பும் பாங்குள்ளவர். பணி புரியும் இடத்திலும் உழைப்பு, நேர்மை இவற்றைக் கடைப்பிடிப்பவர். எப்பொழுதும் இவரைச் சுற்றி ஒரு நல்ல சூழல் இருப்பதுண்டு.

விதிவசத்தால் நேரும் துன்பங்களையும் சுயபச்சாதாபம் ஏதுமின்றி புன்னகையுடன் ஏற்கும் பக்குவம் பெற்றிருந்ததால் அவை அவரிடம் தலை வணங்கிச் சென்றுவிடும். அவருடைய பக்தியுணர்வைக் கண்டு பரவசப்பட்ட பரம்பொருள் அவருக்குக் காட்சிதரமனமுவந்தது. மன்னிக்க வேண்டும். பரம்பொருளுக்கு ஏது மனம்? எழுதும் என் சிற்றறிவிற்குத் தெரிந்த கருவி மனம் என்பதால் அதைப் பயன்படுத்திவிட்டேன்.

மேற்கூறிய பக்தர் தாம் பணிபுரிந்த நிறுவனத்திற்காக ஒரு இன்றியமையாத வேலையாய்த் தம் முதலாளியின் நம்பிக்கைக்குரியவராய்ப் புதுவை வந்தார்.

அன்றைய தினம் அவர் வாழ்வின் பிறவிப்பயன் அவருக்குக் கிடைக்கும் தினமாக அமைந்தது. அன்று பாண்டிச்சேரியில் தரிசன நாள். ஸ்ரீ அன்னையின் ஜென்மதினம்.

பக்தர் தம் நிறுவனத்தின் பொருட்டுத் தாம் வந்த பணிகளை முடித்துவிட்டு, சிறிது கடற்காற்றை அனுபவிக்க எண்ணி வந்தவர், மக்கள் திரள்திரளாகச் செல்வதைக் கண்டார். என்னவாக இருக்கும் என்று சிந்தித்த வண்ணம் வந்தவரின் செவியில் “ஆனந்தம்”“பரவசம்” போன்ற உயர் சொற்கள் கேட்ட வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர், “எத்தனை நாட்கள் தவம் இன்று பலித்தது. பிறந்த பயனை அடைந்து விட்டேன்” என்றார்.

இவருக்கு ஆர்வம் மிகுந்தது. ஒருவரை நெருங்கி “இன்று என்ன விசேடம்?” என்று விசாரித்தார்.

“நீங்கள் புதுவைக்குப் புதியவரா?” என்றார் அவர். “ஆமாம் ஒரு வேலையாக இன்று இவ்வூர் வந்தேன்” என்றார்.

“இன்றைக்கு இவ்வூருக்கு வருகின்றவர்கள் அன்னையின் ஜென்மதின தரிசன நாளை முன்னிட்டுத்தான் வருவார்கள். உங்களுக்கு அதுபற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.

“ஆமாம் இதுவரை தெரியாது. இன்று நான் வந்ததும் இறையருள்தான் போலும். தரிசன நாள் பற்றிச் சிறிது விவரம் கூறினால் நானும் அதைப் பெறுவேன்” என்றார்.

“இன்று ஸ்ரீ அன்னையின் ஜென்ம தினத்தை முன்னிட்டு தரிசன நாள். இன்று ஸ்ரீ அன்னையின் அறையைத் தரிசனம் செய்து அவர் ஆசிகளைப் பெற முடியும். நேர்மையான பிரார்த்தனைகள் மிக எளிதாக நிறைவேறிடும்” என்றார்.

“அப்படியா? அன்னை என்பவர் அங்கிருக்கிறாரா? அவரைக் காண ஏதேனும் விதிமுறைகள் உண்டா?” என்றார்.

“அன்னை மானுடவடிவில் வந்த தம் அவதாரத்தைக் கலைத்துவிட்டார். ஆனால் சூட்சுமத்தில் ஆசி வழங்குகிறார். இப்போதே நேரமாகிவிட்டது. நீங்கள் விரைவில் சென்றால்தான் தரிசனம் பெற முடியும். முதலில் அதைச் செய்யுங்கள். உங்கள் ஆர்வத்திற்கேற்றவாறு அன்னை தன்னை உங்களுக்குப் புரியவைப்பார்” என்று கூறிச் சென்று விட்டார்.

அருகில் சென்று விசாரித்ததும் டோக்கன்கள் முன்பே கொடுத்து முடிந்ததும், அதற்குரிய தரிசன வரிசையும் முடிந்து விட்டதையும் அறிந்தார். இனி என்ன செய்ய?

வாய்விட்டு யாரையும் எதுவும் கேளாமல் “உங்கள் ஆர்வத்திற்கு ஏற்றவாறு அன்னை தன்னைப் புரிந்துகொள்ள வைப்பார்” என சற்றுமுன் ஓரன்பர் கூறிய சொற்கள் நினைவில் எழ அன்னையே! நீர் யார்? உங்களை நான் எப்படித் தரிசிப்பது. இவ்வளவு நல்ல செய்திகள் அறிந்தபின் தரிசனம் இழக்க மனம் இசையவில்லையே. நான் என்ன செய்ய வேண்டும்? என்று தமக்குள் பேசிய வண்ணம் நின்றிருந்தார்.

அழகிய உயர்ரக காரிலிருந்து இறங்கி ஒரு மேல்நாட்டுப் பெண்மணி இவரை நோக்கிப் புன்னகையுடன் வந்தார்.

இவரும் தம்மைப் போல தாமதமாக வந்து தரிசனம் பெறாமல் போகப் போகிறார் போலும் என்று எண்ணிய வண்ணம் அவர் தம்மிடம் வந்து என்ன கேட்பார்? என்று நின்றவரைப் பார்த்து, நீண்ட நாள் அறிமுகமான நண்பரைப் போல “தரிசனம் கிடைத்ததா?” என்றார்.

“இல்லை இதுபற்றி முன்பே ஒன்றும் அறிந்திராததால் முன்னதாக வந்து அனுமதிச் சீட்டுப் பெற்றிலேன். தரிசனம் முடிந்து விட்டதாம். நான் அதற்குப் பேறு பெறவில்லை போலும்” என்று ஏக்கத்துடன் கூறினார்.

“இறை தரிசனத்திற்கு முடிவேது? ஆனால் நமக்குத்தான் கண்ணெதிரே கடவுள் வந்தாலும் தெரிவதில்லை” என்றார் அந்தப் பெண்மணி.

“நீங்களும் தரிசனம் பெறவில்லையா?” என்றார். “ஏன் பெறவில்லை. நீங்கள் கடவுளைத் தேடுகிறீர்கள் நான் பக்தர்களைத் தேடுகிறேன்” என்றார் அந்தப் பெண்மணி.

“பக்தர்களையா? எதற்கு?” என்று வியப்புடன் கேட்டார் இவர்.

“ஓ! அதுவா? இறைவனைத் தம் இதயத்தில் வைத்திருப்பதால் பக்தர்கள் இறைவனைவிடப் பெரியவர்களல்லவா? அதனால்தான்” என்று புன்னகை மாறா முகத்துடன் எவ்வளவு அழகாய்க் கூறினார்.

“அப்படியானால் நீங்கள் அன்னையைத் தரிசிக்க ஆர்வப்படவில்லையா?” என்றார்.

“என்னைவிட உங்களுக்கு அதிக ஆர்வம் இருப்பதால் இந்தச் சிறப்பு அனுமதிச் சீட்டை தங்களுக்கே தருகிறேன்” என்று ஓர் சிறப்பு அனுமதிச் சீட்டைத் தந்தார். “நன்றி, மிக்க நன்றி. உங்கள் வாய்ப்பை எனக்கு விட்டுக்கொடுத்து விட்டீர்கள்” என்று மனம் நெகிழ்ந்து கூறினார் பக்தர்.

“நான் ஏன் இதை விட்டுக் கொடுத்தேன் என்பதைத் தரிசனம் பெறும் போது புரிந்து கொள்வீர்கள்” என்று கள்ளமில்லாத குழந்தைச் சிரிப்பு சிரித்த வண்ணம் கையசைத்து விடைபெற்று, காரில் ஏறி மறைந்து விட்டார்.

நல்ல கோடையில் சில்லென்ற மழை நீரில் நனைந்த பரவசம் ஏற்பட்டது. வரிசையில்லை, கும்பலில்லை, நெரிசல் இல்லை. இலவச அனுமதி பெற்றவர் செல்லும் நேரம். வழி தெரியாத இவரை, இவர் கையிலுள்ள சீட்டைக் கண்டதும் வழிகாட்டி அழைத்துச் சென்றனர். ஸ்ரீ அன்னையின் திவ்ய சூழல் நிறைந்த அறையில் பிரவேசித்தவுடன் உடல் சிலிர்த்தார். அங்கு அழகிய இருக்கையில் வீற்றிருக்கும் திருவுருவப்படம் யாருடையது? அவர்தாம் ஸ்ரீ அன்னையா? சற்றுமுன் வெளியே அந்தச் சிறப்பு அனுமதிச் சீட்டை அளித்தவரல்லரோ இவர்? இவர் எப்படி இங்கே? அங்கு இவருக்கு அளித்த தரிசனச் செய்தி அட்டையில் கம்பீரமாய்ச் சிரித்தவர் தாம் சற்றுமுன் வெளியே கண்டவரல்லரோ? என்ன விந்தையிது! உடலே சிலிர்த்தது. நீங்கள் இறைவனைத் தேடுகிறீர்கள். நான் பக்தனைத் தேடுகிறேன் என்றாரே. அதன் பொருள் என்ன? நான் ஏன் இதை விட்டுக் கொடுத்தேன் என்பதை நீங்கள் தரிசனம் பெறும்போது புரிந்து கொள்வீர்கள் என்றாரே. ஸ்ரீ அன்னையே, நீரே வந்து எம்மைத் தடுத்தாட்கொண்டீரோ?

கால் நகர்ந்தது. நெஞ்சு அங்கேயே ஒட்டிக்கொண்டு வரமறுத்தது.

(கதையில் இங்கு சிறு இடைவெளி. அவர் பெற்ற பரவசத்தை நீங்களும் அனுபவிக்கத்தான்.)

இவர்யார்? இவரைப்பற்றி ஏதுமறியாத எனக்கு இவர் எப்படித் தரிசனம் தந்தார்? உங்கள் வாய்ப்பை எனக்கு விட்டுக் கொடுத்தீர்கள் என்று அவரிடமே கூறினேனே. அவரே அவரைத் தரிசிக்க வேண்டுமா என்ன? இவ்வாறு அன்னையில் தம்மைக் கரைத்துக் கொண்டிருக்கும் இவரை நோக்கி ஒருவர் வந்தார். “இன்று ஸ்ரீ அன்னையின் ஜென்ம தினம். ஒவ்வொரு ஜீவராசியும் அடுத்த உயர்ந்த நிலையில் ஜனிக்கும் நன்னாள். எனவே, இப்புத்தகத்தை (ஸ்ரீ அன்னை) ஓர் அன்பருக்குப் பரிசளிக்கத் தோன்றியது. உடன் நீங்கள்தான் என் கண்ணில் அகப்பட்டீர்கள்” என்று புன்னகையுடன் ‘தி மதர்’ என்ற புத்தகத்தை அவரிடம் கொடுத்தார்.

கண்கள் பனிக்க இரு கையேந்திப் பரவசத்துடன் பெற்றுக் கொண்டார். தான் அறிய விரும்புவதை ஆண்டவன் தருகிறான் என்றுணர்ந்தார்.

இனி ஊர் திரும்ப வேண்டியதுதான் என்று பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கியவுடன் மிக அழகிய மேலைநாட்டுக் கார் ஒன்று இவரருகே வந்து நின்றது.

‘கண்ணாடிக் கதவை கீழிறக்கி இவர் முகத்தைப் பார்த்த கார் டிரைவர் நீங்கள் எங்கே போக வேண்டும்?’ என்றார்.

தன்னூர்ப் பெயரைக் கூறிய இவர், “பஸ் பிடிக்க பஸ் நிலையம் போக வேண்டும்” என்றார்.

“உங்கள் ஊரைத் தாண்டித்தான் நான் போக வேண்டும். வழியில் இறக்கி விடுகிறேன். வண்டி காலியாக இருப்பதால் தரிசன நாளில் ஓரன்பருக்கு உதவ ஆர்வப்படுகிறேன்” என்றார். “அன்பனா? நானா?” என்று தமக்குத்தாமே உள் மனதில் கேட்டுக் கொண்டது டிரைவருக்கு எப்படித் தெரிந்தது என்று அதிசயக்கும்படி,

“எப்படி உங்களை அன்பர் என்று கண்டுபிடித்தேன் என்று நினைக்கிறீர்களா! கையில் ‘தி மதர்’ புத்தகம் வைத்திருக்கிறீர்களே அதைப் பார்த்துத்தான் கண்டுபிடித்தேன்” என்றார் சிரித்துக்கொண்டே.

டிரைவர் தம் பக்கத்து சீட்டில் இவர் அமருமாறு கதவைத் திறந்து விட்டார்.

இவ்வளவு உயர்தரக் காரில் டிரைவர் மட்டுமிருப்பதால் யாருடைய காரோ என்று நினைத்தார்.

“என்ன நினைக்கிறீர்கள்? காரின் சொந்தக்காரரைக் கேட்காமல் டிரைவர் இஷ்டப்பட்டவரை ஏற்றிக் கொள்கிறார் என்றா?” என்று பாதையில் கவனமாய், ஸ்டியரிங்கைப் பற்றிய கையுடன் புன்சிரிப்பு மாறாமல் கேட்கிறார்.

என்ன இவர்? மந்திரவாதிபோல் நாம் நினைப்பதையெல்லாம் சொல்கிறார் என்று எண்ணியவர் கண்ணில் காரின் முன்புறம் சற்றுமுன் தரிசன அட்டையில் பார்த்த அதே ஸ்ரீ அன்னையின் திருவுருவம் பொறித்திருந்தது.

“இந்தக் காரின் சொந்தக்காரர் ஸ்ரீ அன்னையின் பக்தரா?” என்று ஆர்வம் மேலிடக் கேட்டார்.

“அதுதான் இல்லை” என்றார் டிரைவர். பிறகு அவர் “திருவுருவம் இதில் பொறிக்கப்பட்டிருகிறதே?” என்றார்.

“உங்களை இறக்கிவிடும்போது அந்த இரகஸ்யத்தைச் சொல்கிறேன். யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்றார் சிரித்துக்கொண்டே.

இவர் அன்னை பக்தர் என்பதால் கார் சொந்தக்காரருக்குத் தெரியாமல் தாம் காரோட்டும் போது மட்டும் அந்த திருவுருவத்தைக் காரில் வைத்துக் கொள்வதாகச் சொல்வார் என்று எண்ணிக் கொண்டார்.

இறங்குமிடம் வந்தது. நன்றி கூறி இறங்கிக் கொண்டார். “கார் சொந்தக்காரர் அன்னை பக்தரா என்று கேட்டீர்களே அதற்கு விடை வேண்டாமா?” என்று குறும்பாய்ச் சிரித்தார்.

“ஆமாம் ஆமாம். மறந்தே போனேன். நீங்கள் சென்ற பிறகு கேளாது போனோமே என்று வருந்துவேன். சொல்லுங்கள். மிகவும் ஆர்வமாயுள்ளது” என்றார்.

கதவை மூடியவண்ணம் காரைக் கிளப்பிக்கொண்டு “எல்லோருமே இந்தக் கார் சொந்தக்காரரின் பக்தர்கள்தாம்’’ என்று கூறிப் பறந்து விட்டார்.

என்ன சொல்கிறார்? காரில் நெம்பர் பலகை ஏதுமில்லை. ஓ இது ஸ்ரீ அன்னையின் கார் என்றல்லவா சொல்லியிருக்கிறார். தாம் முதன் முதலில் சந்தித்தவர் ‘உங்கள் ஆர்வத்திற்கேற்ப அன்னை தன்னை உங்களுக்குப் புரிய வைப்பார்’ என்றாரே, அது எவ்வளவு பெரிய உண்மை. அவர் தாமேயல்லவா தம்மை எனக்குக் காட்டியிருக்கிறார் என்று வியந்தார்.

நடந்தவற்றையெல்லாம் நினைக்க நினைக்க ஏதோ ஓர் அற்புதவுணர்வு உள்ளே மலர்ந்தது. ஸ்ரீ அன்னை என்ற அந்தப் புத்தகத்தைப் படித்தார். தாம் இதுவரை இன்னது என்று அறியாமல் நாடிய பொருள் தன்னைத் தேடி வந்து உருக்காட்டியது எனப் புரிந்து கொண்டார்.

உறக்கம்கூட இனிமையாய் இருந்தது. “நான் ஏன் விட்டுக் கொடுத்தேன் என்பதைத் தரிசனம் பெறும் போது புரிந்து கொள்வீர். காரின் சொந்தக்காரர் யாரென்ற இரகஸ்யத்தை உங்களை இறக்கிவிடும்போது சொல்கிறேன்” என்ற தொடர்கள் அளித்த ஆனந்தம் ஆனந்தமாயிருந்தது.

விடியும் நேரம், இனிய தியானம் போன்ற உறக்கத்தில் திடீரென பொன்னாடை தரித்து பொன்மயமாய் ஸ்ரீ அன்னை காட்சி தந்தார். கனவா நனவா என்று அறிய முடியாது தவித்தார்.

ஸ்ரீ அன்னை சிரித்தார். “இன்னும் எத்தனை நாட்கள் பக்தி செய்யப் போகிறாய்? நீ நானாக வேண்டாமா?” என்று சிரித்தார். மறைந்து விட்டார்.

இனியவுணர்வுகளோடு கண் விழித்தார். “நீ நானாக வேண்டாமா?” என்றாரே, நானெப்படி அவராக முடியும். ஒரே குழப்பமாயிருந்தது. அதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் பெருகிற்று.

உள்ளே இந்த இனிய உணர்வுகளைச் சுமந்த வண்ணம், நேற்று தம் நிறுவனத்தின் பொருட்டு தாம் சென்று வந்த செய்தியைப் பொருட்களை ஒப்படைக்க, முதலாளியின் வீட்டிற்குச் சென்றார். தம் பணியை நிறைவேற்றியதைக் கூறினார். முதலாளி நன்றியால் பூரித்தார். “சற்று இருங்கள் இவ்வளவு திறமையாய்ச் செயலாற்றி வந்த உங்களைப் பாராட்டிப் பரிசளிக்கத் தோன்றுகிறது” என்று உள்ளே சென்றவர் ஒரு புத்தம் புதிய புத்தகத்துடன் வந்தார்.

“என் பையன் நேற்று ‘அன்னை தியான மையம்’ என்ற இடத்திற்குப் போயிருக்கிறான். அங்கு ஏதோ கேட்டறிந்து புத்தகச் சேவை என்று வண்டி புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறான். இதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதை விற்பனைக்காக விற்கக் கூடாது. ஏற்பவர் மனம் உவந்து ஏற்கும்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். அதை வாங்கும் தகுதி எனக்கில்லை. ஆனால் நீர் ஒரு கடவுள் பக்தராயிற்றே. இது உமக்குப் பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றுகிறது” என்று கூறி கொடுத்தார்.

நேற்று தரிசன அட்டையில் பார்த்த அதே ‘ஸ்ரீ அன்னையைப் பற்றிய அருளுரைகள்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. நன்றியுடன் பெற்றுக் கொண்டார்.

ஸ்ரீ அன்னை தம்மைத் தேடி வந்து ஏற்றுக் கொண்டு தம் கேள்விகளுக்கு விடை கூறித் தெளிவுபடுத்துகிறார் என்று புரிந்து கொண்டார்.

அன்னை என்பவர் வழிபாட்டிற்குரிய கடவுள் மட்டுமல்லர். மனிதனை இறைவனாக்க நம்மிடையே வந்துள்ள பரம்பொருள் சக்தி என்றுணர்ந்தார். மேன்மேலும் படித்துத் தான் அறிந்து கொள்ள வேண்டிய பரமனின் விருப்பம் எது என்று கண்டுகொண்டார்.

என்ன கண்டுகொண்டார் என்பதை அறிய வேண்டுமா? தாம் பரமனின் கைக் கருவியாகத் தன்னை விட்டுவிடுதலே இனி உள்ள பணி எனவும், சமர்ப்பணமும் சரணாகதியுமே வழி எனவும் கண்டுகொண்டார்.

(முற்றும்)

**********



book | by Dr. Radut