Skip to Content

02. எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

தாயார் : அன்னை நமக்குப் பலனைத் தரவில்லை, பலனை மட்டும் தரவில்லை. பலன்மூலமாக அன்னை தன்னையே நமக்குத் தருகிறார்.

கணவர் : இது எப்படிப் புரியும்?

சிறியவன் : சொன்ன பிறகு புரிகிறதா? எனக்குப் புரியவில்லை.

பெண் : பரிசு என்பது பிரியம். பரிசைப் பெற்றுப் பிரியத்தை மறக்கலாமா?

சிறியவன் : அன்னையின் பிரியம் நமக்குத் தேவைப்படவில்லை.

தாயார் : நமக்கு அன்னையின் பிரியம் தேவைப்படுவதும், அன்னை தேவைப்படுவதுமே விஷயம்.

கணவர் : குள்ளச்சாமி ஸ்ரீ அரவிந்தரை, "பெற்ற சித்தியை கைவிட்டபின் பெரிய சித்தி வரும்'' என்கிறாரே, அது போலவா?

பெரியவன் : பாக்டரியை விட்டுவிட வேண்டுமா?

தாயார் : பாக்டரி மீதுள்ள ஆசையை விடவேண்டும். பொய்க்கு மெய் மீது ஆசை வருவது யோகம்.

சிறியது தான் பெரியது என அறிவது யோகம்.

அனைவரும் படிக்க ஆரம்பித்தபின் சந்தித்து படித்ததை விவாதிப்பதால் வீட்டின் சூழல் உயர்ந்துவிட்டது. ஏற்கனவே இருந்த மட்டமான பேச்சு, அடிப்படை சந்தேகங்கள், எதிர்மாறான பழக்கங்கள் பெரும்பாலுமில்லை. அதனால் நயமான பேச்சு, உயர்ந்த நம்பிக்கை, பாராட்டுக்குரிய பழக்கங்கள் வந்துவிட்டதாக அர்த்தமில்லை. விவாதத்தின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்தபடியிருந்தது. அதுபோன்ற ஒரு விவாதம்,

பெரியவன் : அம்மா, அகந்தை கூடாது என்கிறோம். சரணாகதி வேண்டும் என்கிறோம். யார் சரணம் செய்வது, அகந்தையா? அதைச் சரணாகதிக்கு எதிர்பார்க்க முடியுமா?

தாயார் : அகந்தை கரையவேண்டும். சரணாகதியை செய்யவேண்டியது ஆத்மா.

சிறியவன் : ஆத்மாதான் சாட்சியாயிற்றே.

கணவர் : சைத்தியப்புருஷன்.

பெண் : சைத்தியப்புருஷனை அடையத்தானே நாம் சரணாகதியை மேற்கொள்கிறோம்.

தாயார் : சரணாகதிக்குக் கர்த்தா சைத்தியப்புருஷன் என்பது சரி.

பெரியவன் : எப்படி சைத்தியப்புருஷனை விடுவிப்பது?

தாயார் : நாம் என்பது ஆத்மா. சிருஷ்டியில் ஆத்மா, பரிணாமத்தில் சைத்தியப்புருஷன். மனிதன் மனத்தில் வாழ்பவன். அவன் மனத்தோடு ஐக்கியமாவதால் தன்னை மனம் என நினைக்கிறான்.

பெரியவன் : சிந்தித்தால் மனத்திலிருப்பதாகப் பொருள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

தாயார் : சிந்தனையை ஏற்காவிட்டால்?

பெரியவன் : "நாம்' - ஆத்மா ஏற்காவிட்டாலா?

தாயார் : ஆத்மா தன்னை மனம் என நினைக்கிறது. சிந்தனையை ஏற்காவிட்டால் தன்னை மனம் என நினைக்காது.

பெரியவன் : மனம் என நினைக்காவிட்டால், ஆத்மா என அறியுமா?

தாயார் : ஆம்.

பெரியவன் : அதற்கு மௌனம் வேண்டும்.

தாயார் : மௌனத்தை நாடினால் ஆத்மா, சாட்சிப்புருஷன் தெரிவான்.

பெரியவன் : சமர்ப்பணத்தை மேற்கொண்டால் சைத்தியப்புருஷன் வெளிவருமா?

தாயார் : சமர்ப்பணம் சைத்தியப்புருஷனை வெளிக்கொண்டு வந்தால், சைத்தியப்புருஷன் சரணாகதியை மேற்கொள்வான்.

பெரியவன் : எண்ணம் சுலபமாகச் சமர்ப்பணமாகமாட்டேன் என்கிறது.

தாயார் : எண்ணம் தன்னை நம்பினால் சமர்ப்பணமாகாது. வீட்டில் திருடு போனபடியிருக்கிறது. திருடும் வேலைக்காரனை நிறுத்தினால், அடுத்தவன் திருடுகிறான். சமர்ப்பணத்தால் திருடு போன பொருள் கிடைக்கிறது. திருடு நிற்கமாட்டேன் என்றால், திருடுபவனைக் கட்டி வைத்து அடிக்காமல், திருடு நிற்காது என்ற எண்ணத்தில் நம்பிக்கையுள்ளவரை அவ்வெண்ணம் சமர்ப்பணமாகாது.

பெரியவன் :அதை நம்பாமல் எதை நம்புவது?

தாயார்: கட்டி வைத்து அடித்தால் திருடு நிற்கும், அதற்குப் பதிலாகச் சமர்ப்பணம் செய்தால் திருடு நிற்கும் என்று நம்பினால் எண்ணம் சமர்ப்பணமாகும். சமர்ப்பணம் ஆகாத எண்ணத்தின் பின்னால் சமர்ப்பணத்திற்கு ஒவ்வாத எண்ணம் ஒன்றிருக்கும். அது இல்லாவிட்டால் சமர்ப்பணம் பலிக்கும்.

கணவர் : சமர்ப்பணம் எந்தக் கட்டத்தில் தடைபட்டாலும், அங்கு ஓர் எண்ணம், உணர்ச்சி, பழக்கமிருக்கும் - சொரணை sensitivity - எனக் கூறலாமா?

தாயார் : நமக்குச் சமர்ப்பணம் வேண்டாம் என அடி மனம் கூறும்பொழுது, மேல் மனத்தால் சமர்ப்பணம் செய்ய முடியாது. உதாரணமாகப் பெண், மாமியார் வீட்டிலிருந்து வந்து 6 மாதமானபின் தாயாருக்குப் பெண் திரும்பப் போகக்கூடாது என்ற எண்ணமிருந்தால், திரும்பிப் போவதைச் சமர்ப்பணம் செய்தால் சமர்ப்பணம் எதிராகப் பலிக்கும். மேலும் இரண்டு மாதம் திரும்பப் போகமுடியாத சந்தர்ப்பங்கள் எழும். சமர்ப்பணத்திற்குத் தடையேயில்லை. நாம் மட்டுமே தடை.

இதுபோன்ற உரையாடல்களால் சமர்ப்பணம் நகரப்போவது இல்லை. அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் மனத்தில் தெளிவுபடுவதால், வீட்டில் negative hostileவேண்டாத சூழல் கரைந்து வருகிறது. இதன் பயனை பாக்டரியிலும், வெளி விவகாரத்திலும் காண்கிறார்கள். தாயார் இந்த விளக்கத்தைப் பெரியவனுக்குக் கூறியபின், தம் சமர்ப்பணம் தடையாவது எதனால் என யோசனை செய்ததில், குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் போதும், அதைக் கடந்து அருளை நாடினால் பிள்ளைகட்கெல்லாம் திருமணம் செய்ய வேண்டுமே, அதற்கு அருளை நாடினால் சரி வருமா? ஒரு வேளை அருளை நாடினால் பிள்ளைகட்குத் திருமணமே ஆகாது போய்விடுமா என்ற பயம் அவருக்குண்டு. அவர் அறியாத விஷயம் ஒன்றுண்டு. அருளை நாடி பிள்ளைகள் தாங்களே திருமணத்தை விரும்பாவிட்டால் அது மிகப்பெரிய விஷயம். பிள்ளைகள் அன்னையின் குழந்தைகளாவர். அருளை நாடி திருமணமானால் அப்பழுக்கில்லாத இலட்சியத் திருமணமாக அவை அமையும். இது தாயார் அறியாதது. அவருக்கு முதலில் சொல்லியதைக் கேட்டுக் கொள்ளவும் முடியாது. இரண்டாவது நிலைமை இருப்பதாக அவரால் கற்பனை செய்யவும் முடியாது. திருமணம் வேண்டுமா, வேண்டாமா என யோசிப்பார். அவ்வெண்ணம் சமர்ப்பணமானால் இந்த மேற்சொன்ன இரண்டும் உயிர் பெறும். சில பிள்ளைகள் திருமணத்தை ஏற்பார்கள். மற்றவர் விலக்குவர். சமர்ப்பணம் செய்யாமல் இவை தெரிய வழியில்லை.]

இந்த மாதங்களில் நடந்தவை ஏராளம். கண்ணில் பட்டவை குறைவு. அக்குறைவான நிகழ்ச்சிகளிலும் 1) வாய்ப்பு, 2) ஆபத்து, 3) வம்பு, 4) வீண் வேலை, 5) அர்த்தமற்றவை என ஏராளமானவை நடந்துவிட்டன. அவை சம்பந்தமான கருத்துகள்:

1) வாய்ப்பை ஏற்காவிட்டால் வாழ்வு சுருங்கும். வாய்ப்பை மறுத்தால் உள்ளதும் போகும்.

2) ஆபத்து வருமுன் ஆயிரம் வகைகளாக, ஆயிரம் நிலைகளில் காட்டியபடி இருக்கும். அவற்றை அறிந்து விலகவேண்டும். கவனிக்காவிட்டாலும், அலட்சியமாக இருந்தாலும், அதற்குரிய தவறான பலன் தவறாமல் வரும்.

3) வம்பு நடப்பதைக் கண்டால், நம்மை நாடி வரும்.மனம் வம்பை ரசித்தால், தவறாமல் வம்பு நம்மை வந்து சீண்டும்.செயலிலும், நினைவிலும் வம்புக்கு இடம் தரமுடியாது.

4) வீண் வேலை செய்தால் அதுவே எதிர்காலத்தில் வேலையாகும்.வீண் வேலை என்பதும் ஒரு "வேலை". ஆரம்பித்தால் அனந்தமாகப் பெருகும்.

5) அர்த்தமற்றவை நம்மை அர்த்தமற்றவராக்கும்.

தாயாருக்கு மட்டும் நடந்தவை அனைத்தும் தெரியும். கணவருக்கு அவர் சம்பந்தப்பட்டவை தெரியும். பீச்சு கூட்டத்திற்கு 10 சிறுவர்களை அழைத்துப்போய் அழைத்துவருவது போன்றது வாழ்வு. மயிரிழை தவறாமல் சரியாக இல்லாவிட்டால் என்ன நடக்கும் எனக் கூறமுடியாது. செயலளவுக்கு விஷயம் வரும்வரை காத்திருக்க முடியாது. சூட்சும அறிகுறி தெரியும்பொழுதே மனத்தால் சமர்ப்பணம் செய்து காப்பாற்றுவது அவசியம். உண்மையாக ஆழ்ந்த ஒத்துழைப்பைக் கொடுத்தவர் பார்ட்னர். கம்பெனி நல்ல முறையில் நடந்துவருகிறது. எதிர்பார்த்ததைவிட ஏராளமாக வாய்ப்புகள் வந்தபடி இருப்பதாலும், எதிர்பார்த்த அளவுக்குப் பலன் வருகிறது. குடும்பத்தினர் தொந்தரவு தரவில்லை, பாஸிட்டிவ் ஒத்துழைப்பு இல்லை என்றாலும் நெகட்டிவ் ஒத்துழைப்பைத் தவறாமல் தந்து வருகிறார்கள். குடும்பம் தாயார் மனதில் நடக்கிறது.

Punctuality:

நேரத்தில் செயல்படுதல் என்பது நாம் நம்மைக் காலத்திற்குக் கட்டுப்படுத்திக்கொள்வது. நாம் நம்மைக் காலத்திற்குக் கட்டுப்படுத்தினால் காலம் நமக்குக் கட்டுப்படும். வாழ்க்கை காலத்திற்குட்பட்டது. வாழ்க்கை ஒருவருக்குக் கட்டுப்படுவது அதிர்ஷ்டமாகும். அதிர்ஷ்டம் வரும் அறிகுறிகள் பல. அவற்றுள் ஒன்று,

நாம் நேரத்தில் செயல்படுவது.

கேட்பாரில்லாமல் வாழ்ந்தவர்க்கு punctuality சிம்மசொப்பனம். அவர்கள் நேரத்தில் செயல்பட முனைந்தால் டென்ஷன் வரும். பயித்தியம் பிடித்துவிடும். இந்த வீட்டிற்கும் punctualityக்கும் சம்பந்தமில்லை. அடிக்கடி அதைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் வாழ்வு ஏற்கனவே இருந்ததுபோலவேயிருக்கும். இப்பொழுது தீவிரமாகப் பேசுகிறார்கள். ஆனால் ஆரம்பிக்கவில்லை. அதை ஆரம்பித்துப் பின்பற்றினால் ஒரு திருப்பம் எனப் புரியும். Punctuality என்பது காலத்தை organise செய்வதாகும். காலத்தை organise செய்ய நாம் நம்மை organiseசெய்யவேண்டும். Organiseசெய்வது அரிது.

அவர்கள் படும் பாடு பெரியது. இந்த நேரம் கணவருடன் பிறந்தவர் வீட்டில் ஒரு விபத்து நிகழ்ந்துவிட்டது. கணவருடைய தங்கையின் மருமகளுடைய தமக்கை வீட்டில் ரௌடிகள் புகுந்து கொள்ளையடித்துவிட்டனர். உயிருக்கு ஆபத்து, மயிரிழையில் தப்பியது.இந்த களேபரம், பீதி, அவர்கள் வீட்டிற்குப் போய் வந்தது, ஆகியவை அடங்க ஒரு வாரம், பத்து நாளாயிற்று. குடும்பத்திற்கும், இந்த அசம்பாவிதத்திற்கும் நேரடியான சம்பந்தமில்லை என்றாலும்,சூட்சுமம், ஆன்மீகரீதியான இதன் அர்த்தம் புரியவேண்டும்.

. ஒரு குடும்பம் - 100 பேர், 500 பேரானாலும் - அத்தனை பேரும் சேர்ந்திருந்தாலும் விலகியிருந்தாலும் அடிப்படையாக உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்களே. ஒருவருக்கு நடந்ததால் மற்றவர் அனைவருக்கும் அர்த்தமுண்டு. ஒரு குளத்தில் ஒரு மூலையில் மட்டும் நீர் மட்டத்தை உயர்த்த முடியாது. அது எல்லா இடங்களிலும் பரவும்.

. நீர் மட்டம் உயருவது சில இடங்களில் சௌகரியமாகவும், மற்ற இடங்களில் பாதகமாகவுமிருக்கும்.

. தாயார் குடும்பம் முன்னேறுவதால், அக்குடும்பத்திலுள்ள அனைவரும் (சில நூறு பேர்கள்) அதன் பலனால் பாதிக்கப்படுவார்கள்.

. அப்பாதிப்பின் குணத்தை நாம் அறியவேண்டும். ஏனெனில் அதுவே நாளைக்கு நமக்கும் வரும். நல்ல மாறுதலுக்கும், கெட்ட மாறுதலுக்கும் சட்டம் ஒன்றே.

. பாதிப்பின் வகை நாம் நம் குடும்பத்தில் செயல்படுவதைப் பிரதிபலிக்கும்.

. அவை முடிவாக குணம், தரம், பண்பில் வந்து முடியும்.

. கொள்ளையடித்த இடத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் நம் குடும்ப மனநிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இது முக்கியம். இதன்மூலம் இக்குடும்பம் மேலே போகலாமா, எந்த அளவுக்குப் போகலாம், எதற்கு மேலே போக முடியாது - போகக் கூடாது - என்பவற்றைத் துல்லியமாக அறிவது அவசியம்.

. அவரவர் செய்வது அவரவரைப் பாதிக்கின்றது என்பது ஒரு புறம். ஒருவர் செய்வது அனைவரிலும் பிரதிபலிக்கும் என்பது அடுத்தது. இரண்டையும் அறிந்து பிரித்து, பகுத்துணர்ந்து, மேற்கொண்டு செயல்பட வழிகாட்டியாகக்கொள்வது அவசியம் எனத் தாயார் அறிவார்.

. அதன்படி ஒருவன் தன் முயற்சியால் சம்பாதித்துவிட்டால் ஊரார் அடித்துப் பெறும் மனநிலையிலிருக்கிறார்கள். அதனால் உயிருக்கும் ஆபத்து வரும் எனத் தாயார் புரிந்துகொண்டார். அதனால் சம்பாதிக்குமுன் உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பை அகத்திலும், புறத்திலும் தேடவேண்டும் என்பது படிப்பினை. புறப்பாதுகாப்பு அவசியம். அகம் தயாராக இல்லாமல் புறம் பாதுகாப்பைத் தாராது. அகமும், புறமும் தயாராக,

எண்ணமும், செயலும் அன்னைக்குகந்ததாக

இருக்கவேண்டும் என்பது அவசியம்.

. குடும்பம் பெருமுயற்சி எடுத்தாலும், வந்துகொண்டுள்ள முன்னேற்றத்தின் அளவுக்கு இம்முயற்சி போதாது என்பது தெளிவு.

. ஒருவர்க்குப் புரிவது போதும். அனைவரும் ஏற்றுச் செயல்படுவது அவசியம்.

. இத்தனை நாளில்லாதது எப்படி இப்பொழுது வரும் என்றால், இந்தக் குடும்ப அபிவிருத்தி இத்தனை நாளில்லை. இப்பொழுதுதான் வந்திருக்கிறது. அதனால் பெருமுயற்சி தேவை.

. குடும்பம் முன்னுக்கு வரும்பொழுது அதிகக் கட்டுப்பாடு வேண்டும் என்று தெரியும். அருளால் முன்னுக்கு வரும்பொழுது அருளுக்குரிய கட்டுப்பாடு வேண்டும், அதன் அடிப்படைகள்,

கனிவு, கருணை, சத்தியம்,

பரந்த மனம், சுறுசுறுப்பு,

இனிமை, இதம், இங்கிதம்

ஆகியவை. இவை இருப்பது அவசியம். இவையில்லாமல் அருள் செயல்படாது. அருளின் சிறு உருவம் அதிர்ஷ்டம். அது வர குறைந்தபட்சம் இவற்றிற்கு எதிரானவையிருக்கக் கூடாது.

கடுமை, கொடுமை, பொய்,

சுயநலம், சோம்பேறித்தனம்,

சிடுமூஞ்சி, அசம்பாவிதம்

ஆகியவை அதிர்ஷ்டத்திற்கு எதிரானவை. இவற்றுள் எதுவும் குடும்பத்தில் எவரிடமும் இல்லாவிட்டால், மேற்கூறியன போன்ற ஆபத்துகள் நம் குடும்பச் சூழலில் வாரா. வந்தால் அதற்குக் காரணமான குணத்தைக் கண்டு களைய முன் வரவேண்டும்.

அன்னை கொடுப்பது அபரிமிதமாகவேயிருக்கும். உடனேயும் வரும் என்பது இக்குடும்ப விஷயத்தில் நிதர்சனமாகத் தெரிகிறது. தொழில்ஓரிரு ஆண்டுகளில் 5 கோடியிலிருந்து 50 கோடியைத் தாண்டியதை இவர்கள் கண்டனர். தொடர்ந்து வரும் வாய்ப்புகளைக் கண்டு பிரமிக்கவேண்டியிருக்கிறது. முன் போலில்லாமல் குடும்பம் ஒத்துழைக்க முன்வந்தாலும் 1500 ரூபாயை வைத்துக்கொண்டு வீடு கட்ட முனைவது போன்றது அம்முயற்சி. தாயார் முன்னுள்ள எண்ணம்,

. தம் அளவுக்குக் குடும்பம் மனத்தால் வந்துவிட்டால் வந்த வாய்ப்புகள் பூர்த்தியாகும். அதுவே பெரியது.

. குடும்பத்திற்காகத் தாமே அதையும் செய்ய தமக்கு ஆதாய மனப்பான்மை மாறி அருளுக்குரிய மனப்பான்மை வேண்டும்.

. அதன் அடிப்படை சமர்ப்பணம். சமர்ப்பணம் யோகத்திற்கு முதற்படியானாலும், அது ஓரடி பூமிக்கு மேலே நடப்பது போன்றுள்ளது.

. தாயார், அதிர்ஷ்டத்திலிருந்து அருளுக்கும், வேலையிலிருந்து சமர்ப்பணத்திற்கும் நகர முடிவு செய்து மௌனமாகச் செயல்பட ஆரம்பித்தபொழுது இந்த விபத்துச் செய்தி தூரத்திலிருந்து வந்தாலும், தமக்கேயுரியது என்பதை மனதால் ஏற்று, என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறார். அதையும் சமர்ப்பணம் செய்வதே அன்னைக்குரிய முறை.

தாயார் விபரம் தெரிந்தவர் என்பதால் தம் குடும்பத்திற்குள் இந்த அசம்பாவிதங்கள் வாராமல் எப்படித் தடுப்பது என அறிவார். அத்துடன் தமக்குத் தொடர்புள்ளவர் அனைவருக்கும் அப்பாதுகாப்பு எப்படிக் கிடைக்கும் எனவும் அறிவார். அவற்றுள் சிறந்த முறை,

. வாய்ப்பைப் பெற்று அனுபவிக்கும் வழியை அறிந்தவருக்குத் தவற்றைத் தடுக்கும் அவசியமில்லை. அது தானே தடைப்படும்.

. தள்ளி உள்ளவர்க்கும் பாதுகாப்பு வேண்டுமானால், அவர்களுடன் நமக்குச் சுமுகமான தொடர்பு இருந்தால் போதும். அவர்களும் சுமுகமாக நினைத்தால் தவறு அவர்களுடைய சூழலில் வரவே வாராது.

. நமக்கு நல்லெண்ணமிருந்து ஒரு குடும்பம் நம்மீது நல்லெண்ணமில்லாமல் இருந்தால், அவர்கட்கு நாம் செய்யக்கூடிய பெரிய சேவை நாம் விலகியிருப்பதாகும்.

கம்பெனியில் 200 பேர்கள் எடுப்பதாகத் திட்டம். 200 ஆட்களிருந்தால், அதற்குரிய சூப்பர்வைசர், மானேஜர், இன்ஜினீயர், குமாஸ்தா தேவை. ஆட்கள் எடுத்து முடிக்குமுன் இண்டர்நெட்டின் வாரிசான இண்ட்ராநெட்டைக் கம்பெனியில் பயன்படுத்தலாம் என பார்ட்னர் அறிந்துவந்தார். அதற்குரிய அமைப்புகள் தமிழ்நாட்டில் இன்னும் வரவில்லை. பார்ட்னர் USAயை அணுகினார். அக்கம்பெனி ஏற்றுக்கொண்டதால் புதிய கம்ப்யூட்டர் அமைப்பில் 200 பேர்களுக்குப் பதிலாக 40 பேர்கள் போதும். அதற்கேற்ப மற்றவர்களும் குறைவார்கள் என்று தெரிந்தது. அதனால் உற்பத்தி விலை ¼பாகமாயிற்று. இதனால் கம்பெனிக்கு ஆண்டிற்கு உபரி இலாபம் 5 கோடி. இவற்றையெல்லாம் அனுபவிக்கும் தாயார் அன்னை சம்பந்தமாக அனைத்தையும் படித்தவர் தம்மைச் சோதனை செய்தால் காண்பது,

. முக்கிய நேரங்களில், தியானத்தில் அன்னைமீது நம்பிக்கை வளர்கிறது.

. பொதுவாக வேலை வந்தால் செய்யத் தோன்றுகிறதே தவிர, சமர்ப்பணம் நினைவு வருவதில்லை.

. சமர்ப்பணம் வேலை முடிந்தபிறகு அல்லது ஆரம்பித்தபிறகு நினைவு வருகிறது.

. எதுவும் செய்யாத நேரம் மனம் அன்னையை அறிய முன்னிருந்ததைப் போலிருக்கிறது.

. அந்த நேரம் சமர்ப்பணத்தை நினைவுபடுத்தினால் அன்னையுட்பட யார் மீதும் எரிச்சல் வருகிறது. இதுவே தன்னுள் உள்ள hostile force தீமை எனக் காண்கிறார். அதைச் சமர்ப்பணம் செய்யத் தோன்றி செய்ய முடிந்தால், இதுவரை நகராதவை நகர்வதைக் காண்கிறார்.

. அந்த ஆழத்தில் மனத்தைச் சோதனை செய்தால்,

. தனக்கும் மற்றவருக்கும் எந்த வித்தியாசமுமில்லை,

. சில சமயங்களில் அவர்களைவிடத் தாம் மட்டமாக இருப்பதாகவும்,

. எதைச் செய்யக்கூடாது எனப் பிறருக்குச் சொல்கிறோமோ, அவற்றைச் செய்ய ஆர்வம் எழுகிறது எனவும்,

. மனிதச் சுபாவத்தின் உண்மையான சொரூபத்தைத் தன்னுள் காண்கிறார்.

. இதனால் தம்மீது அவருக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

இந்தச் சோதனைக்குப்பின் ஏற்கனவே வந்த வாய்ப்புகள் உயிர் பெற்றுப் பூர்த்தியாவதைக் கண்டார். பெரிய வாய்ப்பு என வந்து கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது திடீரென எழுந்து தன்னைத் தானே பூர்த்தி செய்துகொள்வது தெரிந்தது.

. தம்மீது வெறுப்பு ஒரு புறமிருந்தாலும் கணவர் மனநிலை, குழந்தைகள் நடத்தை, வீட்டுச் சூழல், கம்பெனிச் செய்தி, பொதுவாக ஊரில், நாட்டில் நமக்குரிய சூழல் வெகுவாகப் பாஸிட்டிவாக மாறியுள்ளதையும், இந்த நேரம் ஓர் அடி பலமாக முன்னே எடுத்துவைத்தால், பிரம்மாண்டமானதைச் சாதிக்கும் எனவும், அதே சமயம் எதிராகப் (life force) போகவும் அதே அளவு சந்தர்ப்பமுண்டு எனவும் கண்டார்.

. இந்த நிமிஷம் தம் மனத்தில் human choice எடுக்கும் முடிவுக்குள்ள பெரிய திறனை - தமக்கும், ஊருக்கும் - நிதர்சனமாகக் கண்டார்.

. அதுவே சமர்ப்பணத்திற்குரிய அகச் சூழ்நிலை. அங்கிருந்து செய்யும் சமர்ப்பணம் பெரியது என்று பார்த்துவிட்டு சும்மாயிருந்தார்.

. தம்மை - தம் முடிவை - அந்நிலையில் நகர்த்தத் தம்மால் முடியாது, அருளால் மட்டுமே முடியும் எனவும் தெளிவாகப் புரிந்துகொண்டார்.

. 10 ஆண்டுகளாக அன்னையை வணங்கியதின் பலன் அன்னை தமக்கு இத்தெளிவைத் தந்திருப்பதையும், அந்த நிலையிலிருந்து செய்யும் சமர்ப்பணம் அனைத்தையும் அசைக்கும் என்று "பார்த்த'பொழுது, இப்பெரிய பேற்றை அன்னை தம்மை நாடிய அத்தனை அன்பர்கட்கும் வாரி வழங்கிய உண்மை அவர் மனக்கண்முன் தத்ரூபமாகத் தெரிந்தது.

. அவ்வளவு பெரிய ஆன்மீக ரூபத்தை அனைவருக்கும் கேட்காமல் வழங்கிய அன்னை எப்படி அதைச் செய்கிறார், அவர் யார்? அவரை எப்படிப் புரிந்து கொள்வது என நினைத்தபொழுது, "The Mother''இல் பகவான் அன்னையின் சக்திகளை வர்ணித்தது திரையாக எழுந்தன. அன்னையை அறிவது எனில் அதுவே என்று புரிந்து உடல் அவருக்குப் புல்லரித்தது.

. தன்னை மறந்து அன்னையில் இலயித்தபொழுது ஒரு கணம் உணர்ச்சி நெகிழ்ந்து உணர்ச்சிவசப்பட்டு அன்னை யார் என அறிவு புரிந்துகொண்டதை உணர்வும் ஏற்றுக் கொண்டதைக் கண்டுகொண்டு மனநிறைவு பெற்று ½ மணி தம்மை இழந்திருந்தார்

தியானத்திலிருந்து எழுந்தபின் உலகில் துன்பமேயில்லை, உலகம் ஆனந்தமயமாகிவிட்டது என்றதுபோன்ற உணர்வு அலையலையாகத் தம்மைக் கவ்வுவதைக் கண்டு மகிழ்ந்தார். மனம் லேசாகியது, உடல் காற்றில் பறப்பது போலிருந்தது. கணவரும், குழந்தைகளும், பார்ட்னரும் தமக்காக முகமலர்ந்து காத்திருப்பதைக் கண்டு பேச முயன்றால் பேச்சு எழவில்லை. ஏதோ பெரிய செய்தி எனவும் நினைக்கத் தோன்றவில்லை. அது நினைவழிந்த நிதர்சனம். மனம் எதையும் நினைக்க முடியாமல் நித்யானந்தத்திலிருப்பது தெரிந்தது.

தாயார் தம் கம்பெனியில் கம்ப்யூட்டர் செய்த அற்புதத்தைக் கண்டபின் கம்ப்யூட்டரைப் பற்றி மேலும் அறிய முயன்றார். ஏராளமான பயனுள்ள செய்திகள் கிடைத்தன. எதிர்ச் சாரியில் அதே தெருவில் அவருக்கு ஓர் நண்பருண்டு. அவர் கணவர் தொழில் 1 கோடிக்கு உட்பட்டது. சற்று நஷ்டத்தில் நடக்கிறது. அந்த நண்பரிடம் பேசியபொழுது அவர் தொழில் விபரங்களைச் சேகரித்துத் தாம் கம்ப்யூட்டரில் கண்டவற்றைப் பொருத்திப் பார்த்தார்.

. கணக்கு, உற்பத்தி, ஆபீஸ், நிர்வாகத்தில் இக்கம்பெனியில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால் நேரடியாக மாதம் 1½இலட்சம் செலவு குறையும்.

. வருஷ முடிவுக்குள் கம்பெனி நஷ்டத்திலிருந்து இலாபத்திற்கு மாறும்.

. தற்சமயம் நஷ்டம் 8 இலட்சம். இம்முறை 18 இலட்சம் உபரியைத் தருவதால் கம்பெனி 10 இலட்ச இலாபம் பெறும்.

இதைக் கணக்கிட்டவுடன் நண்பர் வீட்டிற்குப் போய் அவரிடமும், அவர் கணவரிடமும் இதைச் சொல்லத் தோன்றியது.

மனம் அளவுகடந்து அவசரப்பட்டது. அவசரம் கூடாது எனத் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டார். மனம் கட்டுப்பட்டவுடன் அவரே வந்தார். அவரே வந்துவிட்டதால் அன்னை சாங்ஷனிருக்கிறது. இது Life responseஆனதால் அவரிடம் கூறவேண்டாம் எனத் தோன்றியது. நமக்குத் தோன்றுவதைச் சமர்ப்பணம் செய்வதே முறை என்று சமர்ப்பணம் செய்ய முயன்றபொழுது, எண்ணம் சமர்ப்பணம் ஆகவில்லை. நண்பரைத் தேடிக்கொண்டு அவர் கணவர் வந்தார்.Life response தொடர்கிறது.

. இதை ஏற்று நம் எண்ணத்தைப் பேசுவது தவறில்லை. நல்லது நடக்கும். ஆனால் அது சமர்ப்பணமாகாது.

. சமர்ப்பணம் செய்தபின் உள்ளே உத்தரவு பெற்று அதன்படி நடப்பதே அதிகபட்சம் நல்லது. இதுவரை எந்த எண்ணமும் சமர்ப்பணமாகாதபொழுது எப்படி இதை மட்டும் செய்வது என்பது கேள்வி.

. மனம் போராடுகிறது. இதுவே வீட்டு விஷயமானால் இதற்குள் சொல் வாயை விட்டு வெளியில் வந்திருக்கும். வந்தவர் தம் நஷ்டத்தைப் பற்றிப் பேசுகிறார். "உங்கள் அபிப்பிராயமென்ன?'' எனக் கேட்டார். அப்பொழுதும் மனைவியின் எண்ணம் சமர்ப்பணமாகவில்லை. நண்பரின் கணவரே கேட்டபின் கம்ப்யூட்டரைப் பற்றிப் பேசினார். தங்கள் கம்பெனியில் நடந்ததை சொல்லத் தயக்கம். அதைச் சொல்லாமல் உபதேசம் செய்தால் எப்படி ஏற்பார்கள்? இருந்தாலும் தாம் போட்ட கணக்குப்படி 1½ இலட்சம் மாதம் செலவு குறையும் என்பதை நண்பரும், அவர் கணவரும் கேட்டுக்கொண்டார்கள். "ஏற்றதாகத் தெரியவில்லை. கம்ப்யூட்டர் என்றால் இலட்ச ரூபாயாகும். அதை பயன்படுத்த புது ஆள் 3000 ரூபாய் கொடுத்து வைக்கவேண்டும். மேலும் சாப்ட்வேர் வாங்க வேண்டுமே'' என்றார் நண்பருடைய கணவர்.

. அந்தப் பதில் கூறியவர் இந்த எண்ணத்தால் பயன்பெற மாட்டார் எனத் தாயார் அறிந்தார்.

. தமக்குப் பலிக்காத சமர்ப்பணம் செயலில் பலிக்கவில்லை எனப் புரிந்துகொண்டார்.

சமர்ப்பணம் செய்யத் தவறியதை இனி சமர்ப்பணம் செய்யத் தீவிரமாக முனைந்ததில் மனம் முன்போல் பெரு நிறைவு பெற்ற நேரம் கணவர், பெரியவன், பார்ட்னர் மூவரும் அகமகிழ்ந்து, முகம் மலர்ந்து விரைவாக வந்தனர்.

"கம்ப்யூட்டர் வைத்ததால் 5 கோடி என்ற உபரி இலாபம் 6 கோடியாகும் வாய்ப்பு வந்துள்ளது''


என மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள். நண்பர் விஷயத்தில் செய்த சமர்ப்பணத்திற்குத் தங்களுக்குப் பலன் வருகிறது எனத் தாயாருக்குப் புரிந்தது. ஏற்கனவே சமர்ப்பணம் தவறியதற்குக் காரணம்,

1) நல்ல செய்தியை உடனே சொல்லவேண்டும் என்ற அவசரம்.

2) தவறினாலும் சமர்ப்பணம் பலன் தரும் என்ற அனுபவம்.

இந்த இரண்டு எண்ணங்களையும் பூரணமாகச் சமர்ப்பணம் செய்வது கடமை என மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு,

1) இரவு தூங்கும் முன்னும்,

2) காலையில் எழுந்தவுடனும்,சமர்ப்பணத்தை நினைவு கூறிவந்தார்.

ஒரு நாள் மனம் மிகவும் அமைதியாகிச் சமர்ப்பணம் பலித்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.அது முழுச் சமர்ப்பணமில்லை எனத் தெரியும். அன்று மாலை தாமும்,கணவரும் வருவதாக நண்பரிடமிருந்து செய்தி வந்தது. மாலை அவர்கள் வந்தார்கள். நண்பரின் கணவர், "நான் உங்களைப் பார்த்துவிட்டுப் போனபின் என் நண்பர் என்னை ஒரு கம்ப்யூட்டர் கம்பெனிக்கு அழைத்துப்போய் நீங்கள் சொன்னதையே சொல்லி, அதே 1½ இலட்சம் மீதியாகும் எனக் கூறி, கம்ப்யூட்டரைத் தவணையில் தருவதாகக் கூறினார்'' என்று முடித்தார்.

"கம்ப்யூட்டரால் நஷ்டத்தை இப்படித் தவிர்க்கலாம். அடுத்த கட்டத்தில் கம்ப்யூட்டரை அடுத்த ஆண்டு பயன்படுத்தினால், கம்பெனியை அபிவிருத்தி செய்யலாம்'' என்று கம்ப்யூட்டர் கம்பெனியில் கூறியதாகவும் கூறினார்.

நண்பரும், கணவரும் வெகுநேரம்வரை பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு சந்தோஷமாகப் போனார்கள். தாயாருக்குச் சமர்ப்பணம் தவறிய பாரம் இறங்கியது. சமர்ப்பணம் பூரணமாகாத நிலைக்கு இதுவே பலனானால், பூரணமானால் எப்படி இருக்கும் என நினைத்தார். சமர்ப்பணம் பூரணமாகாததற்குக் காரணத்தைத் தமக்குத் தாமே கீழ்க்கண்டவாறு கூறிக்கொண்டார்.

பவித்திரமான சமர்ப்பணத்தைப் பயன் கருதிச் செய்தால்

பூரணமாகாதது ஆச்சரியமில்லை. .

தாயாருடன் படித்தவர் ஒருவர். அவர் கணவர் நல்ல பெரிய உத்தியோகத்திலிருக்கிறார். அவர் வேலையை இராஜினாமா செய்துவிட்டு ஒரு கம்பெனி ஆரம்பித்தார். தாயாரை அடிக்கடி சந்திப்பவர். அவருக்குக் கம்பெனியைப் பற்றிச் சொல்ல தாயாருக்கு ஆசை. அவரோ கேட்கவில்லை. அவரும் அன்னை பக்தர். கணவர் அன்பரில்லை. அவருடைய குடும்பமே அன்னை பக்தர்கள். மிகச் சிறிய அளவில் கம்பெனி நடந்தாலும் ஏற்கனவே இருந்த வசதியைவிட அதிகமாக வருகிறது. கம்பெனி 1 கோடியை எட்டவில்லை. தாயாரே முன்வந்து அவருக்கு மானேஜ்மெண்ட் முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். அதனால் சில இலட்சமிருந்த கம்பெனி, பல இலட்சங்களாயின. கோடியை எட்டவில்லை. தாயார் அவரை அவர் பிறந்த நாளில் சந்தித்தார். பிறந்த நாளில் அன்னையை நெருங்கவேண்டும். அன்னையை நெருங்கும் வழிகள் பல. தியானம், சமர்ப்பணம், நூல்களைப் பயில்வது, கோட்பாடுகளைப் பின்பற்றுவது, இடைவிடாத நினைவு, சேவை போன்றவை. அவர் உயர்ந்த விஷயங்களை ஏற்கும் சந்தர்ப்பத்தில்லை.

ஆபீஸுக்குப் போகின்றவர். அவர் தம்மால் சேவையை ஏற்க முடியும் என்றார். சேவை பல வகையின,

1) மையம் நடத்துவது,

2) அன்னையை அறியத் தகுதியுள்ள தூய ஆத்மா அதை விரும்பினால் அன்னையை அறிமுகப்படுத்துவது,

3) நூலைப் படித்துப் படிக்க முடியாதவர்க்கு விளக்குவது,

4) மனஸ்தாபமுள்ள இரு அன்பரிடையேயுள்ள பிணக்கைச் சுமுகம் ஆக்குவது.

5) காணிக்கை செலுத்துவது,

6) புத்தகம் விற்பது,

7) மையத்தில் சேவை செய்வது.

எந்தச் சேவையைத் தாம் எடுத்துக்கொள்ளலாம் என்று தாயாரைக் கேட்டார்.

தாயார் : எதை எடுத்துக்கொண்டாலும் அதை எப்படி நிறைவேற்றுவது எனக் கூறுகிறேன். சேவைக்கு அளவுண்டு, தரம் உண்டு. தரம் சிறிது உயர்ந்தால் அளவு பூர்த்தியானதற்குச் சமம். அனைவரும் செய்வதைவிடச் சற்று அதிகமாக எடுத்துக்கொண்டு அதை அபரிமிதமாகப் பூர்த்தி செய்தால், தொழில் பெருகும்.

நண்பர் : நான் புத்தகச் சேவையை ஏற்கிறேன்.

தாயார் : சாதாரணமாக 1000 பிரதிகள் விற்க 3, 4 வருஷங்களாகும். ஒரு நூல் 1000 பிரதியை 1 வருஷத்தில் விற்பது பெரிய சேவை.

நண்பர் : நானும், என் குடும்பத்தினரும் அதைச் செய்கிறோம். நண்பர் அடுத்த 48 நாளில் 1000 பிரதிகளை விற்றுவிட்டார். கம்பெனி அதேநேரம் கோடியைத் தாண்டிவிட்டது. சில மாதங்களில் 2, 3 கோடியையும் எட்டியது. 1000 பிரதிகள் விற்கவேண்டிய 1 வருஷத்தில் 5½ கோடிக்கும் வந்துவிட்டது. அந்த நேரம் அவருக்கு வந்த வாய்ப்புகளைச் சமாளிக்க முடியவில்லை. அத்தனையையும் ஏற்க முடிவு செய்தார். அதை ஏற்று நிறைவேற்றினால் ஆண்டு முடியும்முன் கம்பெனி 50 கோடியைத் தாண்டிவிடும். இதையறிந்த தாயார் தமக்கு வந்த அதே அதிர்ஷ்டம் தம் நண்பருக்கும் சுமார் அதே காலத்திற்குள் வந்ததைக் கண்டார். அன்னைக்கு அனைவரும் சமம். வருவது பெறுவதைப் பொருத்தது. அன்னை தருவதைப் பொருத்ததில்லை.

பூரணச் சமர்ப்பணம்:

கணவர் நடப்பவற்றையும், கேள்விப்படும் செய்திகளையும் யோசனை செய்து தாம் அன்னையை அதிகமாக ஏற்க முடிவு செய்தார். அவர் சுபாவம் சில்லரையானதாக இல்லாவிட்டாலும் பெரிய நிதானத்திற்குரியதன்று. மனைவியைச் சந்தித்துப் பூரணச் சமர்ப்பணத்தை ஏற்கவேண்டும் எனக் கேட்க வந்தார். நிதானமானவர்க்குச் சில்லரையானவரைவிடச் சமர்ப்பணம் அதிகமாகப் பலிக்கும் என்பது உண்மையானாலும்,

சமர்ப்பணம் ஆர்வத்தைப் பொருத்ததே தவிர

நிதானம் போன்ற நல்ல குணங்களைப் பொருத்ததன்று.

கணவர் : நான் பூரணச் சமர்ப்பணத்தை ஏற்க விரும்புகிறேன்.

தாயார் :அதைவிட உயர்ந்தது ஒன்றில்லை.

கணவர் :நான் கொஞ்ச நாளாக முயல்கிறேன். சமர்ப்பணமே மறந்துவிடுகிறது. பிள்ளைகட்குச் சமர்ப்பணம் என ஒன்றிருப்பதே தெரியவில்லை. ஒரு நாளைக்குப் பேசுகிறார்கள். பிறகு மறந்துவிடுகிறது. மறந்துவிட்டது என்பதே மறந்துவிடுகிறது.

தாயார்: அன்னை அதை unconscious கண்மூடி வாழ்வு என்கிறார்.

கணவர்: :பிள்ளைகள், முக்கியமாகப் பெரியவன் போக்கு சரியில்லை. நினைப்பு நல்லதாக இல்லை. எப்படிச் சமர்ப்பணம் வரும்?

தாயார் :நல்ல நினைப்புக்குச் சமர்ப்பணம் அதிகம் பலிக்கும். ஆனால் சமர்ப்பணம் நல்லவனா, கெட்டவனா என்பதைவிட அன்னையை நாடுகிறானா, இல்லையா என்பதைப் பொருத்தது.

கணவர் : நான் இதுவரை நல்லவனுக்கு அதிகம் பலிக்கும் என்று நினைத்தேன்.

தாயார்: :அது சரி. பணம் திறமைக்கு வருவதுபோல் சமர்ப்பணம் ஆர்வத்திற்கு வரும்.

கணவர் :2 மாதங்களாகச் சமர்ப்பணத்தை முயல்கிறேன். பிடிபட மாட்டேன் என்கிறது.

தாயார் : பிடிபடாவிட்டால் 20 வருஷங்களிலும் பிடிபடாது. பிடிபட்டால் 2 நாட்களிலும் பிடிபடும்.

கணவர் : ஏன்?

தாயார் : வீட்டில் திருக்குறள் எத்தனை வருஷமாக இருந்தாலும் எடுத்துப் படித்தால்தான் பயன் தரும். பலன் வருஷத்தைப் பொருத்ததில்லை. ஆர்வத்தைப் பொருத்தது.

கணவர் : சமர்ப்பணம் பலிக்காவிட்டாலும், அதை நினைத்த அளவுக்குப் பலன் தவறாது இருக்கிறது.

தாயார் : நாம் சமர்ப்பணத்தை நாடினால், விஷயம் சமர்ப்பணத்தை நாடும்.

கணவர் : நான் பாங்க் மானேஜரைப் பார்க்க நினைத்தேன். சமர்ப்பணம் நினைவு வரவில்லை. ½ மணி கழித்து நினைவு வந்தது. சமர்ப்பணம் என வாயால் கூறிவிட்டு கிளப்புக்குப் போனால் அங்கே மானேஜரைப் பார்த்தேன்.

தாயார் : மானேஜர் கண்ணில்படுவது, சந்திப்பது, நாம் சொல்வதை அவர் ஏற்பது, சரி என முடிவு செய்வது, ஆர்டர் போடுவது, போட்ட ஆர்டர் கைக்கு வருவது, பணம் கைக்கு வருவதுவரை 10 – 20 கட்டங்களிருப்பதைப்போல், சமர்ப்பணம் மறந்து போவது, நினைவு வருவது, சமர்ப்பணம் செய்ய முடிவது, சமர்ப்பணத்தின் தீவிரம் - மேல் மனம், மேல் மனத்தின் ஆழம், எதிர்பார்ப்பது, எதிர்பாராத சமர்ப்பணம், அவசரம், நிதானம், பழைய உறுத்தல், தன்னை மறந்த சமர்ப்பணம் - என மேல் மனத்தில் பல நிலைகள் உண்டு. மேல் மனத்தின் ஆழம் அடுத்தது. உள் மனம், அடி மனம், சைத்தியப்புருஷன், அடுத்த, அடுத்த கட்டங்கள்.

சமர்ப்பணத்தில் நம் மனநிலைக்கும், மானேஜர் சம்மதப்படும்

அளவுக்கும் உள்ள தொடர்பு துல்லியமாக இருக்கும்.

கணவர் : நான் மறந்துபோகும் நிலையிலும், நினைவுபடுத்தும் நிலையிலுமிருக்கிறேன். ஏற்கனவே மனம், உணர்வு, உடல், சூட்சுமம் என 9 நிலைகளைப் பற்றிப் பேசினோமே அது வேறா?

தாயார் : அந்த 9 நிலைகள் வேறு, இந்த 9 நிலைகள் வேறு. ஆனால் இவை ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. ஒன்றில் 3 நிலைகள் நகர்ந்தால் அடுத்ததில் 3 நிலைகள் நகரும். இவையெல்லாம் நன்றாக இருக்கும். ஆராய்ச்சி, காரியம் நடக்க மனம் உண்மையாக இருக்கவேண்டும்.

கணவர் : இதுபோன்ற விவரம் தெரிவது உதவுமன்றோ?

தாயார் : உதவும். ஆனால் ஜீவன் இந்த ஆராய்ச்சியிலில்லை.

கணவர் : எதுவுமேயில்லாதபொழுது ஏதாவது வந்தால் போதும் போலிருக்கிறது. சமர்ப்பணம் பிடிபடுகிறதா, இல்லையா, எந்த அளவுக்குப் பிடிபடுகிறது என்பதை அறிய இது உதவுமில்லையா?

தாயார் : அது சரி. நடைமுறையில் ஏன் நமக்குச் சமர்ப்பணம் பலிக்கவில்லை என்று அறிய உதவும். வேதாந்த காலத்திலேயே வேதம் ஓதும் புரோகிதர்கட்கு ஜீவனற்றுப் போய்விட்டது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். 2000 வருஷங்களுக்குமுன் ஜீவன் போனாலும், இன்னும் வேத பாராயணம் சாகக்கிடப்பவனை உயிர்ப்பிக்கிறது.

கணவர் : எனக்குப் பெருங்காய டப்பிதான் மிஞ்சும் என நினைக்கிறேன்.

தாயார் : பிள்ளைகள் அனைவரும் சமர்ப்பணத்தை முழுமையாக ஏற்கவேண்டும் என ஒரு முறை பேசினார்கள்.

கணவர் : இன்னும் அது அவர்கட்கு நினைவிருக்குமா?

தாயார் : பாக்டரி, கம்பெனி அனைவரையும் மாற்றிவிட்டது.

கணவர் : ஒரு விஷயம் என நடந்தால், அந்த நேரம் அது பரபரப்பாக இருக்கும். பழையபடி அவரவர் குணம் வந்துவிடும். முக்கியமானது வேண்டுமா, வேண்டாமா என்பது. அடுத்தாற்போல் ஏன் வேண்டும் என்பது.வசதிக்காக வேண்டுமா, பக்திக்காக வேண்டுமா என்பது அடுத்தது.

தாயார் : அன்னை வேண்டும் என்றால் பிழைத்தோம்.

கணவர் : ஆதாயத்திற்காக வேண்டும் என்பதைவிட பக்திக்காக வேண்டும் என்பதுதான் நல்லது.

தாயார் : அன்னை வேண்டும் என்பதே பக்தியாயிற்றே. அன்னையை நினைக்காதவர் நினைப்பதே பெரிது. பக்திக்காகவே நினைப்பது நல்லது. நாம் இளைஞர்களை அப்படி எதிர்பார்க்க முடியுமா?

கணவர் : இவ்வளவு முன்னேற்றத்தைக் கண்டபின்னும் என் மனம் கல்லாக இருக்கிறது.

தாயார் : முன்னேற்றம் பக்தி தாராது. பக்தி நம்பிக்கை தரும். சமர்ப்பணத்தில் இருவகைகள் உண்டு என்று கூறலாம்.

1) மறுப்பவை, 2) ஏற்பவை

ஒருவர் பேசும்பொழுது குறுக்கே பேசக்கூடாது என்றால் உள்ளிருந்து எழும் பேச்சை மறுப்பது சிரமம். மறுக்க முடிந்தால், மறுப்பதற்குப் பதிலாகச் சமர்ப்பணம் செய்வது சிரமம். இது ஒரு வகை negative consecrationஎனலாம். அடுத்தது நாம் பேசுவதைச் சமர்ப்பணம் செய்வது. பேசலாம், பேசாமலிருக்கலாம். பேச்சை - உள்ளிருந்து எழுவதை - சமர்ப்பணம் செய்து உத்தரவிருந்தால் பேசுவது, இல்லையெனில் பேசாமலிருப்பது என்பது கடினம். இதைப் பாஸிட்டிவ் சமர்ப்பணம் எனலாம்.

கணவர் : இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

தாயார் : பாஸிட்டிவ், நெகட்டிவைவிடக் கடினம். நெகட்டிவ் சமர்ப்பணத்தால் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். வாய்ப்புகளை அனுபவிக்க முடியாது. பாஸிட்டிவ் சமர்ப்பணம் முடிந்தால், வாய்ப்புகளை ஏற்றுப் பூர்த்தி செய்யலாம்.

கணவர் : உதாரணம் கொடுத்தால் உதவும். நம் வீட்டு விஷயங்களில் உதாரணம் நல்லது. எனக்கு எது அதிகமாகப் புரியுமோ அந்த உதாரணத்தின்மூலம் கூறினால் பின்பற்ற உதவும்.

தாயார் : பெரியவன் தம்பியைக் கேலிசெய்கிறான். நாம் அவனை அடக்கலாம். அவனே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அது disciplineகட்டுப்பாடு. அதைச் சமர்ப்பணம் செய்வது பாஸிட்டிவ் சமர்ப்பணம். அது தவறு என உணர்ந்து, அதைக் கைவிடவேண்டும் என அறிந்து, அதை நம்மால் கைவிடமுடியாது, அன்னையிடம் ஒப்படைப்போம் என ஒப்படைத்து, அன்னை அதை ஏற்றதன் விளைவாக மனம் அமைதியடைந்து அதன்பிறகு கேலிசெய்யாமலிருப்பது நெகட்டிவ் சமர்ப்பணம்.

கணவர் : அப்படிச் செய்யும்பொழுது அன்னை நம்முள் பிறப்பது தெரிகிறது. யானை பலம் வருகிறது, நாம் புது உலகத்திற்குரிய புது மனிதர் என்று தெரிகிறது. அத்தனையும் ஒரு க்ஷணம். வந்தது நிற்பதில்லை.

தாயார் : நாம் ஒரு சந்தர்ப்பத்தில் சமர்ப்பணம் செய்வதால், அந்த நேரத்தில் நேரத்திற்குப் பலிக்கிறது. கேலிசெய்யும் சுபாவத்தையே சமர்ப்பணம் செய்தால் நிலைக்கும். நிலைப்பதற்கு அடுத்த கட்டம் திருவுருமாற்றம்.

கணவர் : சரணாகதி நம் பங்கு. அன்னையுடையது ஆயிற்றே. திருவுருமாற்றம்

தாயார் : சமர்ப்பணம் முழுமை பெற்றுச் சரணாகதியானால் திருவுருமாற்றம் வரும். அந்நிலையில் நெகட்டிவ் சமர்ப்பணம் பாஸிட்டிவாக மாறும்.

கணவர் : நெகட்டிவ், பாஸிட்டிவ் என்பதை சமர்ப்பணம், சரணாகதி எனலாம்.

தாயார் : ஆமாம்.

கணவர் : சமர்ப்பணம் ஆரம்பிப்பதைச் சரணாகதி பூர்த்தி செய்கிறதா?

தாயார் : ஆம்.

கணவர் : விஷயம் ஒன்றுதான். பகுத்துப் பகுத்துப் புரியவேண்டும்.

தாயார் : நமக்குச் சமர்ப்பணம் ஆரம்பிப்பதை, சரணாகதி பூர்த்தி செய்கிறது என்றால் புரிவதைவிட, பிரச்சினைக்குரிய சமர்ப்பணம், வாய்ப்புக்குரியது, தற்காலிகமானது, நிலையானது, ஆரம்பம், முழுமை, பகுதி, பூரணம் என்பவை நம் அனுபவத்தின்மூலம் புரிய உதவும்.

கணவர் : நாம் அகந்தையன்று, ஆத்மா என அறிவது முக்கியம்.

தாயார் : அது ஞான யோக சித்தி, பெரியது.

கணவர் : ஏன் அதை நாம் நாடக்கூடாது?

தாயார் : நாடலாம், நல்லது. அது எவ்வளவு பெரியது எனத் தெரிந்தால் நாடும் முறை புரியும்.

கணவர் : எனக்கு அப்படி தெரியவில்லை. பிரம்மாண்டமானதாகத் தெரியவில்லை

தாயார் : சரி.

கணவர் : அப்படியானால், எதுவுமே புரியவில்லை என்றர்த்தமா?

தாயார் : நாம் subjective நம்மை அறிவோம். objectiveஆவது, பிறரை அறிவது என்பது கடினம். இந்தியருக்கும், மேலையருக்கும் உள்ள வித்தியாசம் அது. இன்று நம் நாட்டில் objectiveஆக இருக்க மனிதன் முயன்றால் மேல்நாட்டு நிலை நமக்கு வரும்.

கணவர் : அவ்வளவு பெரிய விஷயமா அது?

தாயார் : ஸ்ரீ அரவிந்தர் Supermindஐப் பற்றிப் பேசுகிறார். மனிதர் நியாயமாக rational இல்லை. பிறர் விஷயத்தில், உலக விஷயத்தில் அனைவரும் நியாயம் பேசுவர். தம் விஷயம் என்றவுடன் சௌகரியத்தைப் பேசுவர். பெரியவர், சிறியவர், அனைவரும் ஒன்றே.

கணவர் : யாரும் அதில் தேறமாட்டார்கள்.

தாயார் : அது facts உள்ளதைப் பேசுவது. அந்த விஷயத்தில் உண்மைதான் மேல்நாட்டு விஞ்ஞானத்திற்கு உயிர் கொடுத்தது. Rationality நியாயம், பகுத்தறிவு அடுத்தது. Supermind முடிவானது.

கணவர் : நான் விவரம் தெரியாமல் பேசுகிறேனா?

தாயார் : தெரிந்து சாதித்தால் அது பெரியதன்றோ? நால்வகை ஞானங்களில் ரிஷி பெறும் ஞானம் இரண்டறக் கலப்பது, முடிவானது. நீங்கள் கூறுவது அது.

கணவர் : அது பெரியது என்பதால் வேண்டாமா?

தாயார் : வேண்டாம் என்பதில்லை. அங்கு ஆரம்பிக்க முடியாது.

கணவர்: சரி, எங்கு ஆரம்பிக்கலாம்?

தாயார்: நமது குறைகளை நாம் அறியவில்லை என்பது உலகம் கூறும் குறை. நமது நிறைவுகளை நாம் அறிவது, நாம் ஆத்மா என அறிவதில் பகுதி. அங்கு ஆரம்பிக்கலாம்.

கணவர் : எனக்கு என்ன நிறைவிருக்கிறது?

தாயார் : எந்த நிறைவுக்கும் எதிரான குறையிருக்கும்.

கணவர் : அக்குறையை விலக்காமல், நிறைவை அனுபவிக்க முடியாது.

தாயார் : அன்னைக்கு நாம் அறிவது நிறைவன்றோ?

கணவர் : அந்நிறைவுக்கு எதிரான குறை எது?

தாயார் : சொந்தமாக அறிவது குறையை நீக்கப் பயன்படும். உங்களை நாடி பார்ட்னரும், அன்னையும் வந்ததும் நிறைவன்றோ?

கணவர் : பார்ட்னர் ரொம்பப் பண்புள்ளவர். அவர் மாதிரி நம்மால் முடியாது.

தாயார் : அன்னை நம்மைத் தேடி வந்ததால் அதற்கேற்ப நடக்க வேண்டும். பார்ட்னர் நம்மைத் தேடி வந்ததால் அவருக்கேற்பவாவது நடக்கவேண்டும்.

கணவர் : சரி, அங்கு ஆரம்பிக்கலாமா?

தாயார் : அது பெரிய ஆரம்பம்.

கணவர் : அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். நிதானம் அதிகம்.

தாயார் : Universe comes to us through values. நம் பண்பே நம் உலகம் என்பது The Life Divine. பார்ட்னர் நம் உலகமானால் பெரியதன்றோ?

கணவர் : ஆத்மா என்பது எனக்கு பார்ட்னர் என வைத்துக் கொள்ளலாமா?

தாயார் : பார்ட்னரில் ஆரம்பித்து, அன்னைவரை போகலாம். இது முடிவான சித்தியை முதற்கட்டத்திலாரம்பிப்பது.

கணவர் : ஆத்மாவில் ஆரம்பித்து பார்ட்னரில் முடித்துவிட்டோம்.

கம்பெனி, பாக்டரி விஷயங்கள் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக நடப்பதால், கணவன், மனைவி, பார்ட்னர், மூவரும் அடிக்கடி சந்தித்து, இந்த நல்ல நிலையை உயர்த்தாவிட்டாலும் காப்பாற்றும் முறைகளை ஆழ்ந்து சிந்தித்து, விவாதித்து, முடிவுக்கு வரமுடியாமல் திணறினர். அவை,

1) நிலைமை உயர்ந்தால், என்ன மனநிலை உதவாது?

2) நிலைமை உயர்ந்தால், என்ன மனநிலை இல்லாமல் உயர்வைக் காப்பாற்ற முடியாது?

3) அது சம்பந்தமாக இவர்கட்குள்ள குறைவுகள், நிறைவுகள், சந்தர்ப்பங்கள் சொல்வன என்ன?

4) நடக்கும் நிகழ்ச்சிகள் கூறும் செய்திகளை விமர்சனம் செய்வது.

5) உயர்ந்தவற்றைக் காப்பாற்றி உயர்த்தும் மனநிலை எது?

என்ன கூடாது என்பதைவிட இன்றுள்ள எந்த மனநிலையும் கூடாது என்பது அன்னை எழுதியது. அவற்றை விளக்கமாகக் கருதினாலும், அவை நம்மை விட்டு அகலா என்பதால், பேசுவது சரியில்லை. பேசாமல் புரியாது என்பதால், பேசவேண்டியிருக்கிறது. பார்ட்னர் தம் பங்குக்குள்ளதைக் கூறினார். நிலைமையுயர்ந்தால் யார் யாருக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று தம் மனத்திலுள்ளதைக் கூறினார். கணவர் அதேபோல் தமக்குத் தொந்தரவு செய்த சிலரை மட்டம் தட்ட வேண்டும் எனவும், வேறு சிலர் தம்மை மட்டமாக நினைத்ததை இப்பொழுது மாற்றவேண்டும் என்பதும் தம் எண்ணம் என்றார். அன்னை இவற்றிற்குச் சம்பந்தமாக எழுதியவை, அவற்றில் தாயாரின் அனுபவம் ஆகியவை பேசப்பட்டுப் பல நாட்கள் விவரமாக விவாதம் பல முறை நடந்தது. அவற்றின் சுருக்கம்:

1) இன்றுள்ள எந்த மனநிலையும் உதவாது.

2) ஆதாயத்தைவிட அன்னை முக்கியம் என்ற மனநிலையில்லாமல்

உயர்வைக் காப்பாற்ற முடியாது.

3) நம் பழைய எதிரிகளை மட்டம் தட்டுவது நம் கடமையில்லை.அதை நம் மனம் நாடினால், நாம் பிறரால், சில சமயம் அதே எதிரிகளால் மட்டம் தட்டப்படுவோம்.

எவருக்கு உதவி செய்யவேண்டும் என்று இன்று மனத்தால் நினைத்தாலும் அவர்களால் நமக்குத் தொந்தரவு வரும்.

பிறருக்கு உதவி செய்யும் உரிமை நமக்கில்லை.

உதவியைக் கேட்டுப் பெற்றால் வரும் சிரமம் குறைவாக இருக்கும்.

நாமே முனைந்து உதவி செய்தால் நிச்சயமாக இன்றுள்ளவை அழியும்.

பிறருக்கு உதவி தேவை என்றபொழுது எப்படி உதவாமலிருப்பது என்பவருக்கு அழிவு நிச்சயம். உதவியைப் பெறுபவரே அழிப்பார்.

4) சமர்ப்பணம் ஒன்றுதான் வேலை. சமர்ப்பணமாகாதவற்றைச் செய்யக்கூடாது. செய்ய நினைக்கக்கூடாது. பிறரை அன்னையாகக் கருதி, அந்த அன்னையுடன் தொடர்பு கொண்டால் உயர்வைக் காப்பாற்றலாம், மேலும் உயர்த்தலாம். பழைய விஷயங்கள் உயர்ந்தவையல்ல.அவை நம் மனத்திலுள்ளவரை அது சம்பந்தமாக மனிதர்கள் வருவார்கள்.நாம் மறந்தால், அவர்கள் நம்மை மறந்துவிடுவார்கள். நடக்கும் நிகழ்ச்சிகள் இவற்றை ஊர்ஜிதம் செய்வதை விளக்கமாக விமர்சனம் செய்தனர்.

அன்னையிடம் பெரும்பலன் வருவது எங்கே? மனிதனுக்குப் பெரும்பலன் கிடைக்குமிடத்தில்தான் அவனுக்கு அன்னையிடம் பெரும்பலன் வரும். அன்றாட வேலைகளை மனிதன் சாதாரணமாகச் செய்வான். தொழில் இலாபம், நல்ல சம்பந்தம், புதிய, பெரிய வேலை ஆகிய இடங்களில் மனிதனுக்கு மனம் தீவிரமாக வேலை செய்யும். தீவிரத்துடன், இரகஸ்யமாகவும், நுணுக்கமாகவும் வேலை செய்யும். அதுவே மனிதன் யார் என உலகம் - விஷயம் வெளிவந்தபின் - பிற்பாடு அறியும். அந்த இடத்து நோக்கங்களைச் சமர்ப்பணம் செய்பவருக்கே பெரும்பலனுண்டு. பொதுவாக,

. மனிதனுக்கு அந்தச் சுறுசுறுப்பெல்லாம், ஏமாற்றுவதிலும், பிறரை அழிப்பதிலும், தில்லுமுல்லு செய்வதிலும்தான் அத்திறமைகள் முழுமையாக வெளிப்படும்.

. மனிதன் தவறானவன் என்றால் நமக்கு அவனிடம் வேலையில்லை.

. தவறான குணங்களை ஒதுக்கி, நல்ல குணங்களை வெளிப்படுத்த முன்வாராவிட்டால் அன்னை அவனுக்குப் பயன்படமாட்டார்.

. தவற்றை நல்லதாக மாற்ற முன்வருபவருக்கு முழுப் பலனுண்டு.இந்தக் கோணத்தில் பார்ட்னர் நல்லவர். கணவருக்கு நல்ல குணங்கள் இல்லாவிட்டாலும், கெட்ட குணங்களில்லை. அவர் சொத்தை, கெட்டவனையாவது நல்லவனாகச் சிரமப்பட்டு மாற்றலாம்.கெட்டவனுக்குத் திறமையுண்டு. இனித் திறமையை உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. கெட்டதை நல்லதாக மாற்றவேண்டும். அதைவிடச் சிரமம்,

. இல்லாத திறமையை ஏற்படுத்த முனைவது.

. கணவர் சொத்தை.

. அவரிடம் கீழ்ப்படிந்து எப்படிப் புதிய திறமைகளை மனைவி ஏற்படுத்த முடியும்?

. சொத்தையானாலும், அன்னையை முழுவதும் ஏற்றுக்கொண்டால் இல்லாத திறமைகள் தாமே ஓரளவு உற்பத்தியாகும்.

. பிள்ளைகள் சொத்தையாக இல்லாவிட்டாலும், நல்ல பிள்ளைகளும் இல்லை, திறமைசாலிகளுமில்லை.

. அப்படிப்பட்ட குடும்பம் தாயாரை ஏற்றுக்கொண்டால் பலன் பெறலாம்.

. தாயாரைத் தாயாராக ஏற்பார்களே தவிர, அன்பராக ஏற்கமாட்டார்கள்.

. இதையும் கடந்து இத்தனை விஷயங்கள் நடந்தபின், அவற்றைக்

காப்பாற்றுவதே தாயாருக்குப் பெரியது.

. மேலும் செயல்பட அவர் யோகத்தை ஏற்கவேண்டும்.

. யோகத்தை ஏற்றால், பாசம் கூடாது, பலனை எதிர்பார்க்கக் கூடாது.

. இவ்வளவையும் மீறி பாக்டரி, கம்பெனி, பவர் பிளாண்ட், அந்தஸ்து, பிரபலம், இலாபம், இவ்வளவு வந்தது தாயாருக்கு அன்னையின் சூழலின் சக்தியை எடுத்துக் கூறுகிறது.

. எப்படியும் "இதை' - மேற்சொன்ன தெளிவை - சமர்ப்பணம் செய்வதே தாயார் கடமை.

. எல்லாச் செயல்களையும் சமர்ப்பணம் செய்யாமல், ஒன்றை மட்டும் சமர்ப்பணம் செய்யமுடியாது.

. சூழல் அறிவிப்பதையும், உள் மனம் கூறுவதையும், தமக்குத் தெரிந்தவரை, நிதானமாக, தம் பணிவு - கணவருக்கு - இடம் கொடுக்குமளவுக்குத் தாயார் முழு மூச்சுடன் செய்வதால், இதற்குமேல் ஏதாவது செய்ய தம்மை அடிப்படையில் மனத்தால் உயர்த்தவேண்டும் - அது ஆதாயம் போய் அன்னை வருவது.

கணவர் சொத்தை என்பதுபோன்று பார்ட்னர் வைரம். அன்னை அவர் கம்பெனி, பாக்டரி, தம் வாழ்வில் பின்பற்றுவது பிரபலமாகிவிட்டது. வேலை நேர்த்தியாக இருப்பதுடன், நாணயம்,நிதானம், பக்குவம், பவித்திரம், அவரைப் பார்ப்பவர்களைக் கவர்ந்தது.டெய்வானிலிருந்து வந்த வாடிக்கைக்காரர் ஒரு முறை வியாபார விஷயமாக பார்ட்னரை அங்கு வரச் சொன்னார். பார்ட்னர் அங்கு போய்ப் பார்த்தால் வாடிக்கைக்காரர் தம் கம்பெனியில் அன்னை முறைகளைப் பின்பற்றுவதைக் கண்டார். தாம் அவற்றைப் பார்ட்னரிடம் பேசும்பொழுது அறிந்ததாகவும் கூறினார். இம்முறைகளால் தம் கம்பெனி பெரிதும் முன்னேறியதாகவும் சொன்னார். தமக்குத் தெரிந்த பாங்க், கம்பெனிகளுக்குப் பார்ட்னரை அழைத்துப்போய் அவர்கட்கும் அன்னை முறைகளை அறிமுகப்படுத்தினார். அவருக்குப் பார்ட்னரைப் பிடித்துவிட்டது. மேலும் இவருடைய முறைகளில் உள்ள சக்தியை அவர் நடைமுறையில் உணருவார். இவரை அறிமுகப்படுத்திய பாங்க்கைப் பற்றி இருவரும் பேசினர். பார்ட்னர் பாங்கின் சிறப்பை எடுத்துரைத்தார். அவர்கள் தற்சமயம் 3 பில்லியன் டாலர் இலாபம் பெறுகிறார்கள் என்று கேள்விப்பட்டு நம்ப முடியாமல் அது செலாவணியா, இலாபமா எனக் கேட்டார். இலாபம் எனத் தெரிந்தது. Sectoral banking, co-ordination, velocity of money, other man's point of view, human resources, ஒவ்வொரு தொழிலுக்கும் தனி பாங்க் ஏற்படுத்துவது, இலாக்கா ஒத்துழைப்பு, பண நடமாட்டத்தின் வேகம், எதிராளியின் நோக்கம், மனிதத் திறமை, இவற்றை அந்த பாங்க் இப்பொழுது பயன்படுத்தவில்லை. செய்தால் இலாபம் இரண்டு மடங்காகும் என்று பார்ட்னர் கூறியதன் பேரில் டெய்வான் நண்பர், "இதை ஒரு professional service தொழிலாக ஏற்றுச் செய்ய முடியுமா?'' எனக் கேட்டார். பார்ட்னர் தாம் 2, 3 வருஷங்களில் சொந்தமாகச் செய்வதால் அதைச் செய்யலாம் என்றார். நண்பர் அந்த பாங்க்குடன் பேசுவதாகக் கூறி, அங்குள்ளவர் மனப்பான்மையை விவரித்தார்.

. எளிதில் அவர்கள் புதியவர்களை நம்பி நெருங்கமாட்டார்கள்.

. நம்பிவிட்டால், பிரியமாட்டார்கள்.

. இம்முறைகளை எல்லாம் பாராட்டினாலும் அவ்வளவு பெரிய பலன் வரும் என்பதை நம்புவது சிரமம்.

. எவ்வளவு பலன் வந்தாலும், உரிய பீஸ் தர மனம் வாராது.

. மனிதனை நம்பி, பலனை நம்பி, தாராளமாக பீஸ் - உரிய பீஸ் தர ஏற்றுக்கொண்டால் எழுத்தே தேவையில்லை, வாக்கைக் காப்பாற்றுவார்கள்.

இது எதிர்பாராமல் எழுந்த சூழ்நிலை. தானே வருவது அன்னை தருவது. கணவர், அப்படி ஒரு சந்தர்ப்பம் எழுந்தால், தாம் இங்குள்ள வேலைகளைப் பொறுப்பாகக் கவனித்துக்கொள்வதாகக் கூறினார். வருவது பெரியது என்பதையும், எளிதில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதையும் தாயார் அன்னைக் கண்ணோட்டத்தில் விளக்கினார். இன்று நமக்குத் திறமையிருந்தால், வளர ஆரம்பித்தால்,என்னென்ன மேலே வருமோ, மனிதன் எப்படி எப்படியெல்லாம் மாறுவானோ என்பது சீனாக்காரர்கட்கு நன்கு தெரியும் என்பதால்,அவர்கள் தயங்குகிறார்கள். எதிரான எதுவும் எதிர்காலத்தில் நம்முள்ளிருந்து எழாது என்ற பக்குவம் நமக்கு என்று ஏற்படுகிறதோ,அன்று அழைப்பு வரும் என்று தாயார் கூறினார். தாம் எவ்வளவு பிறர் பாராட்டும்படி நடந்துகொண்டாலும், உள்ளே உள்ள அவசரம்,பிறரைத் திருப்தி செய்யவேண்டும் என்ற போக்கு, பிறர் புரிந்ததைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை, சமர்ப்பணமில்லாதது, எதிரியிடம் எதிர்காலத்தில் என்ன எழும் எனப் புரியாமல் தற்சமயம் commitment நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வது, வேண்டியவரிடம் எதையும் மறைக்காமல் பேசும் குணம் போன்றவை எதிர்காலத்தில் தமக்கு எப்படி இருக்கும் என்பதை தாம் அறிவார் என பார்ட்னர் தம் நிலையை விளக்கினார். மூவரும் வாய்விட்டுப் பேசாவிட்டாலும், இவ்வாய்ப்பு பலிக்க தங்கள் பக்கம் செய்யக்கூடியனவெல்லாம் செய்யவேண்டும் என உள்ளூர முடிவு செய்தனர். மௌனம் சூழலாக எழுந்தது. மூவர் முகங்களும் பிரகாசமாயின. அகத்தின் முடிவு புறத்தில் அழகாக மிளிர்ந்தது. கொஞ்ச நாள் கழித்து பார்ட்னர் தாயாரிடம் வந்து தமக்குள்ள ஒவ்வொரு குறையையும் எப்படிச் சமர்ப்பணம் செய்யலாம் எனக் கேட்டறிந்தார்.

அவசரம்:

போதுமான திறமையில்லாதபொழுது தமக்குத் திறமை இருக்கிறது எனக் காட்ட மனிதன் அவசரப்படுவான். அவசரம் திறமைக் குறைவு. புறத்தில் தெரியும் அவசரம் சிறு காரியங்களில் வெளிப்படும். பெரிய காரியங்களில் அகத்தின் அவசரம் வரும். அகம் அதை அறிவாலும், உணர்வாலும், சமர்ப்பணத்தாலும் கடந்தால், வாய்ப்பு பலிக்கும். இவற்றைச் செய்யும்பொழுது மனம் எதிர்பார்க்கும்.

இந்தக் காரியம் எப்படி, எவ்வளவு நாளில் பூர்த்தியாகும் என்பது தெரியாதவரை எதிர்பார்ப்பு எழும். அது தெரிந்தால் எதிர்பார்ப்பு இருக்காது. அனுபவக் குறைவு எதிர்பார்ப்பு.

அவசரமும், எதிர்பார்ப்பும் இணைந்தவை. அவசரம் ஒரு பழக்கமும்கூட. சமர்ப்பணம் எந்தக் கட்டத்தில் தடைபடுகிறதோ, அந்தக் கட்டக் குறையை விலக்கினால் தடை விலகும். அப்படிப்பட்ட குறைகள்,

. ஒரு வேலையைக் கடைசி நாள்வரை ஒத்திப்போடும் பழக்கம்.

. பிடிக்காத வேலையைச் செய்யப் பிடிக்காதது.

. தவறு இருந்தாலும், பலன் வரும் என்ற மூடநம்பிக்கை.

. நமது குறையால் செய்யும் காரியத்தைப் பிறரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்வதாக நம்புவது.

. பிறரைத் திருப்திப்படுத்த முயல்வது.

. சும்மாயிருக்க முடியாமல் எதையாவது செய்யத் தூண்டுவது.

. இரகஸ்யத்தைக் காப்பாற்ற முடியாதது.

முதலில் இக்குறைகள் நேரடியாகப் பாதிக்கும். ஓரளவில் அவற்றை விலக்கினால், அக்குறைகள் அடுத்த முறை நமக்கு வேண்டியவர்மூலம் - எவரை நாம் விலக்க முடியவில்லையோ - அவசியம் வரும். அதையும் விலக்கினால் மனிதர்மூலம் வருவது நிகழ்ச்சிமூலம் வரும். குறை நிறையாகத் திருவுருமாறும்வரை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்தபடியிருக்கும். அதனால் திருவுருமாற்றம் அவசியம். திருவுருமாற்றத்திற்குச் சரணாகதி அவசியம்.

. சரணாகதிக்கு முன் சமர்ப்பணம் வேண்டும்.

. நம்மையும் நம் பழக்கங்களையும் அறவே விடாமல் சமர்ப்பணம் வாராது.

. பழக்கங்களை ஜீவியத்தில் விட்டால், பொருளில் எழும் (மேலெழுந்த பழக்கம் மாறினால், ஆழ்ந்த பழக்கம் வரும்).

.எதுவும் அப்படித் தொந்தரவு செய்யாவிட்டால் மனம் குறையாக இருக்கும்.

. குறை நிறைவானால், அக்குறையிருக்காது.

. நம்மிடம் உள்ள பெரிய தடைகளில் முக்கியமானவை,

-நட்பு, உறவு, வயது, முறை

- நியாயம், தர்மசங்கடம்

-ஆகியவற்றை மீறிச் செயல்பட முடியாது.

. மனத்தின் அடியில் காரணமில்லாமல் சந்தோஷம் எழுவது இவற்றை

எல்லாம் கடந்ததற்கு அடையாளம். மேற்கூறியவை எல்லாக் குறைகட்கும் பொருந்தும் என்றாலும், நடைமுறையில் ஒவ்வொரு குறை எழும்பொழுதும், அவற்றை அலசி, ஆராய்ந்து, புதிது புதிதாகப் புரிந்துகொள்வது அவசியம்.

இவற்றிற்கும் மேலாகத் தெரிந்த தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்வது. அதற்குப் பரிகாரமில்லை. அனுபவிக்க வேண்டும்.

பிறரைத் திருப்தி செய்வது:

நம் கடமையைச் செய்யலாம். எவரையும் திருப்தி செய்ய முடியாது, கூடாது. பிறர் திருப்தியடையாவிட்டால், நமக்குத் திருப்தி ஏற்படாது என்பது நமது நிலை. பிறருடைய அநியாயத்தை மீறி நாம் அவரைத் திருப்திப்படுத்த முயல்வது நாம் நம் அநியாயத்தை வளர்ப்பதாகும். It is immaturity.. இது சிறுபிள்ளைத்தனமானது. பெரியவர்கள் - மகாத்மாக்கள் - சிறியவர்களைப் பாராட்ட இதுபோல் நடந்தவை நம் மனதிலிருப்பதால் இப்படி நடக்கிறோம். அதிலுள்ள விஷயங்கள்,

. பெரியவர்கள் பெருந்தன்மையாகச் செய்ததை நாம் சிறுபிள்ளைத்தனமாகச் செய்தால் பலன் மனநிலைக்கு வரும், செயலுக்கு வாராது.

. *உலகில், வாழ்வில் பெருந்தன்மைக்குப் பாராட்டுண்டு. யோகம்

சூட்சுமமாக இருப்பதால், எதிரி -hostile force - அந்த ரூபத்தில் நம் பெருந்தன்மைமூலம் நம்மை அழிப்பான்..

அவசரத்தில் சொல்லிய அத்தனைக் குறைகளும் இதற்கும் மற்ற எல்லாக் குறைகட்கும் பொருந்தும்.

பிறர் புரிந்ததைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை:

நமக்குப் புரிந்ததை நாம் செய்யாதபொழுது, எப்படிப் பிறரை எதிர்பார்க்க முடியும்? ஏதாவது ஒரு காரணத்தின்மூலம் செய்ய முனைந்துவிட்டால் initiative பின்வாங்கப் பிரியப்படாதபொழுது, இக்காரணங்களைச் சாக்காகக் கூறுவதாகும்.

சமர்ப்பணமில்லாதது:

நாம் எதையும் சமர்ப்பணம் செய்வதில்லை. அதனால் இதையும் செய்யலாம் என நினைக்கிறோம். இது பெரிய விஷயம், அப்படிச் செய்ய முடியாது எனப் புரிவதில்லை. இதைச் சமர்ப்பணம் செய்வது அவசியம். அதற்காக எல்லாக் காரியங்களையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என நினைப்பது சரியாகும்.

Commitment:

நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வது. நாம் சிறு விஷயங்களிலேயே பழக்கப்பட்டவர்கள். அங்குக் கட்டுப்படுவதுபோல் பெரிய விஷயங்களில் கட்டுப்படமுடியாது. தராதரம் தெரியாமல் நடப்பதால் எழும் பிரச்சினை இது.

மறைக்காமல் பேசுவது:

வேண்டியவரிடம் மறைக்கக்கூடாது என்பது அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சரி. அதுவும் அவர்கள் பாதிக்கப்பட்ட

_________________________________________________________________________

*இந்தச் சட்டங்கள் எல்லாம் இதுவரை வெளியான புத்தகங்களில் விவரமாக உதாரணத்துடன் விளக்கப்பட்டவை.

இடங்களில் சரி. அப்பொழுதும், காரியம் கூடி வர மறைப்பது அவசியமானால், மறைக்க முடியவேண்டும். It is a moral view.காரியம் பெரியது. நியாய மனப்பான்மையைவிடக் காரியம் பெரியது என்பதால்,நியாயத்தைவிட்டுக் காரியத்தையும், அதைக் கடந்து ஆன்மீகக் கடமையையும், அதைக் கடந்து அன்னைக்குச் சரணாகதியையும் நாம் கருதவேண்டும். பார்ட்னருக்கு அறிவு அதிகம், அனுபவம் -அன்னை விஷயத்தில் - குறைவு. வாழ்க்கை அனுபவம் உண்டு என்பதால் அன்னை அவருக்கு நன்றாகப் புரிகிறது. கணவருக்கு எதுவும் புரிவதில்லை. பார்ட்னருக்கு உதவி செய்வதைக் கடந்து அவரால் எதுவும் செய்ய முடியாது.

சரணாகதியும், சமர்ப்பணமும்:

எப்படிச் சரணாகதி செய்வது என்ற கேள்வி அறிவு எழுப்புவது. அக்கேள்வி நம்மை நம்பிக்கையிலிருந்து நம்மை அறியாமல் அறிவுக்கு அழைத்துச் செல்வதை நாம் உணருவதில்லை. எப்படிச் சரணாகதியைச் செய்வது, என்ன செய்வது எனக் கேட்டவனால் சரணம் செய்ய முடியாது. கண்டதும் எழாத காதல், காதலில்லை என்பது இலக்கிய மரபு. ஓர் ஆத்மா அல்லது ஜீவன் அறிவைக் கடந்து சரணாகதிக்கு உரிய பக்குவம் பெற்றிருந்தால், அன்னை ஸ்ரீ அரவிந்தரைக் கண்ட மாத்திரம் இவரே என் கிருஷ்ணா என அறிந்ததுபோல் அறிவார்.

அறிந்தவரை அறியாமல் நடப்பது ஆத்மாவின் சரணாகதி.

ஆத்மா பக்குவமடைந்து தனக்குரிய குருவுக்காகக் காத்திருக்கிறது. ஏதோ காரணத்தால் அவரைக் கண்டமாத்திரம் சரணடைகிறது. என்ன நடந்தது என்பது நெடுநாள் கழித்தே தெரியவரும். பூரண யோகத்தில் சரணாகதி அதையும் தாண்டிய அடுத்த கட்டத்திற்குப் போகிறது. பூரண யோகம் தேடுவது மனித குரு இல்லை. மனதில் உறையும் ஜகத்குருவை, உள்ளிருந்து நம்மை ஆளும் குருவாக ஏற்பது பூரண யோகம். அறிவின் ஆட்சி முடிந்து, மௌனம் கனத்து முதிர்ந்து, நிகழ்காலம் முழு காலமுமானால் - காலத்தின் முழுமையைப் பெற்றால் - சிறியது பெரியதாகும். அதன் மாற்றம் அகந்தையின் கூடு கரைவதாகும். அந்நிலையில் உள்ளிருந்து ஆத்மா - சைத்தியப்புருஷன் - வெளியில் வந்து சஞ்சாரம் செய்ய நாம் அவனுக்குச் சரணடைய வேண்டும்.

. மனித முயற்சி சமர்ப்பணம்.

. தெய்வ அனுக்கிரஹம் சரணாகதி.

. சமர்ப்பணம் சரணாகதியாக மாறுவது தவம், யோகம் பலிப்பது.

. சரணாகதி எழுந்து கனிந்த சமர்ப்பணத்தை ஏற்பது அருள்.

. சைத்தியப்புருஷன் மலர்ந்து மனத்தை ஆட்கொண்டபின் நடந்தது

சரணாகதி என அறிவது பேரருள்.

. மனித குருவை ஏற்பது மற்ற யோகங்கள்,

. ஜகத்குருவை ஏற்பது பூரண யோகம்.

. உள்ளிருந்து ஜகத்குரு எழுந்து நம்மை அரவணைத்து ஆட்கொள்ளும்பொழுது அது அன்னை அல்லது ஸ்ரீ அரவிந்தர் என அறிகிறோம். அவர் மனித குருவாக வந்த ஜகத்குரு.

. அன்னையை அப்படி அறிந்தவர் அன்னையின் ஆன்மீகத்தைக் கண்டவர்.

. சரணாகதியில் அறிவுக்கு வேலையில்லை.

. தனக்கு வேலையில்லை என்று அறிவு அறிவது சரணாகதிக்குரிய ஞானம்.

. நேரம் வந்தால் இது க்ஷணத்தில் நடக்கும்.

. க்ஷணத்தில் நடக்காதது சரணாகதியில்லை.

. நேரம் வருவது என்பது நாம் அன்னையை அறிவது.

. அன்னையை ஏற்கும் அளவிற்கு அறிவது நேரத்தை வரச் செய்வதாகும்.

. சமர்ப்பணம் ஆரம்பிப்பதைப் பூர்த்தி செய்வது சரணாகதி.

. அடுத்த speciesஐ உற்பத்தி செய்யும் சரணாகதி கடினம் என்பது ஆச்சரியமில்லை.

இவ்வளவு தத்துவ விளக்கங்களையும் டெய்வான் பாங்க் வாய்ப்பில் தாம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற முடிவை பார்ட்னர் எடுத்தார். அவர் மௌனமாக எடுத்த முடிவு கணவருக்கும், தாயாருக்கும் சூழல்மூலமாக சூட்சுமமாகத் தன்னை அறிவித்தது. சொர்க்கம் வந்து நம்மைத் தட்டி எழுப்புகிறது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிந்தது.

. அன்னை நம்மை நாடுகிறார்.

. நாம் அதையறியாததால், நமக்குரிய அதிர்ஷ்டம்மூலம் வருகிறார்.

. அதிர்ஷ்டத்தை மனம் நாடினால் நாம் அதை நெடுநாள் தேடவேண்டும்.

. அதிர்ஷ்டத்தின் பின்னாலுள்ள அன்னை கண்ணுக்குத் தெரிந்தால் நேரத்திற்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக நேரத்தை வரவழைத்து விட்டோம் என்றாகும்.

. அன்னை கண்ணில் படுவது நேரம் வருவதாகும்.

Let Thy will be done, not my will.

அன்னையின் சித்தம், என் பாக்கியம்:

இதை முன்பே பார்த்தோம். அன்னையே எழுதியது. இது சக்திவாய்ந்த மந்திரம். ஆத்ம விழிப்போடு சொல்லவேண்டியது. அப்படிச் சொன்னால் அதன் சக்தி ஆத்ம சக்தியாகும். சொல் எழுமுன் ஆத்மா கண் திறக்கவேண்டும். நாம் இம்மந்திரத்தைச் சொல்லும்பொழுது முறையாகச் சொன்னால் அகந்தை கரையும் என்கிறார் அன்னை. முறையாக என்பது ஆத்ம விழிப்போடு சொல்வதாகும். அது இல்லாதபொழுது மந்திரம் வெறும் சொல்லாகும். வெறும் சொல்லே பிரச்சினைகளைத் தீர்க்கிறது என்பதால் நாம் அதைப் போற்றுகிறோம். சமர்ப்பணத்திற்கு வெறுஞ்சொல் பயன்படாது. சொத்தையானவர்க்கு ஆத்ம விழிப்பில்லை. அவர்கள் ஆத்ம விழிப்புக்குரிய பக்குவமிருப்பதால் அவர் முயற்சி விழிப்பிலும், சமர்ப்பணத்திலும் முடியும். நடைமுறைச் சமர்ப்பணம் சரணாகதியாகும்.

இது நடந்தால் அடுத்த கட்டம்.

Thy will, Thy will என்பது அடுத்த கட்டம். முடிவானது சரணாகதி, உடலில் சித்தித்து முழு மனிதன் சிறு குழந்தையாக, I am eternally yours. நான் என்றென்றும் உனக்கே உரியவன் என்று குழந்தை உருவத்தில் அன்னையின் குவிந்த கைகளில் தன்னைக் கற்பனை செய்வது. இரண்டாம் கட்டத்தைச் சொல்லால் செய்ய முடியாது. சொல்லழிந்தபின் செய்யவேண்டியது அது. உணர்வால், உருவகம் அதைச் சாதிக்கும். மூன்றாம் கட்டம் சொல்லாலோ, உணர்வாலோ செய்யக்கூடியதில்லை. உடல் உணர்வால் செய்ய வேண்டியது என்று கூறலாம். உடல் - existence - உணர்வைக் கடந்து நன்றியால் பூரணமாகி உள்ளிருந்து பூரித்தால் அன்னையின் உள்ளங்கை உருவகம் பலிக்கும். சொல்லாலும், உணர்வாலும் எழுப்புவதை உடலின் ஜீவன் - சைத்தியப்புருஷன் - கேட்டு வெளிவந்து மலர்ந்து மகிழ்வது அந்நிலைக்குரிய அகநிலை.ஆரம்பத்திலேயே நாம் இத்தவற்றைச் செய்தபொழுது மகிழ்ந்தது நம் அகந்தை என்பதை நாம் கண்டுகொள்வதில்லை. இப்பொழுது நினைவுபடுத்திப் பார்த்தாலும் அது தெரியும். அகந்தை சந்தோஷப்படுவது மனத்திற்கு இதமாக இருக்கும். ஆத்மா மலர்வது நெஞ்சு குளிரும். இவை தெளிவாகத் தெரியும். அது விலக்கில்லாத விதி.

குடும்பம் உயர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் பெரியவனுடைய நண்பன் அமெரிக்காவில் இருப்பவன் மீண்டும் நம்மூர் வர முயல்வதாகவும், ஏதாவது பெரிய தொழில் செய்ய விரும்புவதாகவும், பெரியவனை பார்ட்னராக எடுக்க விரும்புவதாகவும் செய்தி. தொழிலுக்கு முக்கியமானது அந்த நாளில் முதல். முதல் எந்த நாளிலும் முக்கியமானதே. இன்று பாங்க் முதல் தருவதால், முக்கியமானது முதலில் மார்க்கட், இரண்டாவது டெக்னாலஜி. பெரியவனின் நண்பன் இன்ஜினீயர். டெக்னாலஜியில் விருப்பம் உள்ளவன். அவன் புதிய டெக்னாலஜி ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு அக்கம்பெனியைப் போய்ப் பார்த்து விவரம் விசாரித்து சேகரம் செய்ததைப் பெரியவனுக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பியுள்ளான். இந்தியாவில் ஏராளமான மார்க்கட் உள்ள பொருள் இது. சரக்குக்கு அதிகபட்ச கிராக்கியுண்டு. அடுத்த 10 ஆண்டு, 30 ஆண்டுகளுக்கு சரக்கை வாங்கிக்கொள்ள விரும்பும் மாநிலச் சர்க்கார்கள் உள்ளன. சரக்கின் தரம் 1 முதல் 100 ஆனால், இந்த டெக்னாலஜி 100ஆம் தரத்தைத் தயார் செய்கிறது. இந்தியாவில் தரம் 10 முதல் 15 வரையுள்ளது. முதல் தரமாகச் சிறு அளவில் விற்பதின் தரம் 30வது பாயிண்ட் ஆகும். பெருமுதல் தேவை. டெக்னாலஜியை விற்கும் கம்பெனி அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தொழிற்சாலையை நடத்த ஒத்துக்கொள்கிறது. மிகப்பெரிய முதலானாலும் வேலை செய்பவர் 9 பேர்கள். முழுவதும் தானே இயங்கும் (automatic play) தொழில். நம் நாட்டில் 10 முதல் 15 வரை சுத்தமான சரக்கு 3½ பைசாவுக்கு விற்கிறது. அமெரிக்கச் சரக்கு 100% சுத்தமானது, 8½ பைசாவாகிறது. 30% சுத்தமான சரக்கு அதே அளவுக்கு விலை 36 ரூபாய். 8½பைசாவுக்கு உற்பத்தி செய்து ஏராளமாக கிராக்கியாயுள்ள மார்க்கட்டில் 3½பைசா முதல் 36 ரூபாய் வரை விற்கலாம். இது பெரிய வாய்ப்பு. முதல் பல நூறு கோடி ரூபாயாகும். பாங்கில் தீ பாகம் முதல் உண்டு. மார்க்கட்டும், விலையும் உள்ள பொருளுக்கு வெளிநாட்டு பாங்க்குகள் 13% வட்டி முதல் 6% வட்டிவரை தீ பாகம் முதல் தரக் காத்திருக்கிறார்கள். கால் பாகம் முதல் 100 கோடிக்கு மேலாகும். டெக்னாலஜி, இலாபம், மார்க்கட், அரசியல் சூழ்நிலை சிறப்பாக இருந்தால் venture capitalist இப்பணத்தை ஏராளமான வட்டிக்குத் தருவார்கள். 60% வட்டி கேட்பார்கள் அல்லது 25% இலாபத்தில் பங்கு கேட்பார்கள். ஆனால் பணம் கிடைக்கும். முதலையும் - தவணை - வட்டியையும் திருப்பிக்கொடுத்தபின் நிகரமாக இலாபம் கணிசமாக நிற்கும். அது ஆண்டிற்கு 30 கோடிகளாகும். திறமையும் நாணயமுமுள்ள இளைஞர்கட்கு உலகில் இதுபோன்ற வாய்ப்புகள் உண்டு. அது இன்றுள்ள நிலை. அன்பர்கட்கு அவ்வாய்ப்புகள் ஏராளம். பெரியவனின் நண்பன் அவனைக் கூட்டாக அழைக்கிறான். பொறுப்பும், உழைப்பும் பெறுவது பொக்கிஷம். இவையெல்லாம் முன் தலைமுறையில்லை.நினைக்க முடியாது. அப்படியிருந்திருந்தால் கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைகட்குண்டு.

. அன்று கோடீஸ்வரனுக்கும் இல்லாததை இன்று அன்பர்கட்கு அன்னை மார்க்கட்மூலம் வழங்குகிறார்.

. பெறும் தகுதியுண்டா?

பிள்ளை எப்படியாவது திருந்தமாட்டானா?

தம் பிள்ளை கெட்டுப்போனால், அவன் திருந்தவேண்டும் எனப் பெற்றோர் விரும்புவார்கள்.

காரணம் தெரிந்தால் காரியம் கூடிவரும்.

பையன் கெட்ட சகவாசத்தால் கெட்டுப்போய்விட்டான் என்பது உண்மையானாலும், அது புறத்தில் உள்ள காரணம்.

புறம் புரியும், அகம் மாற்றும்.

அகம் என்பது பெற்றோர். பெற்றோர் குணம் பிள்ளைக்கு வரும் வழிகள் பல.

1) தகப்பனார் கெட்ட குணம், பிள்ளைக்கு அதிகமாக வரும்.

2) தகப்பனாருக்குக் கெட்ட குணமேயில்லை எனில் பிள்ளைக்கு அது மட்டுமிருக்கும்.

3) தகப்பனாருக்கு ஒரு விஷயத்தில் கெட்ட குணமிருந்தால், மகனுக்கு வேறு விஷயத்திலிருக்கும்.

முதல் நிபந்தனை கெட்ட குணம் தகப்பனாரில் முழுவதும் வளரவில்லை என்பதால் பிள்ளையிடம் மீதி வளர்கிறது. இரண்டாவது தகப்பனார் கெட்ட குணத்தை மறைத்து வைத்தது பிள்ளையில் வெளிப்படுகிறது. மூன்றாவது கெட்ட குணம் அடுத்த அனுபவங்களை நாடுகிறது. அன்னை மேற்சொன்னபடிக் கூறுவதால் அதை அப்படியே வேதவாக்காக ஏற்க முடிந்தால் அடுத்த நிமிஷம் மகனில் மாறுதல் தெரியும். அன்னை கூறும் உண்மையை உள் மனம் உண்மையென்றால், அம்மனம் மாற விருப்பப்பட்டால், பையன் தலைகீழே நடப்பான். மகன் மாறும் வழி இது ஒன்றே. ஆனால் மனம் மற்ற எல்லா வழிகளையும் - கற்பனையாக - நினைத்து மனப்பால் குடிக்கும். தான் மாற விரும்பாதபொழுது அப்படியெல்லாம் நினைக்கும்.

. எப்படியும் எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும் என்று எதிர்பார்ப்பதை நடக்கும் என நினைப்பது.

. என் மகன் உள்ளபடி நல்லவன், ஏதோ கொஞ்சம் மாறிவிட்டான், ஜாதகம் சரியில்லை.

. என் வயிற்றில் பிறந்தவன் எப்படிக் கெட்டுப் போவான்?

. அதெல்லாம் ஒன்றுமில்லை. என் மகன் அப்படியெல்லாம் கெட்டுப் போகவில்லை.

நமது ஆசை மனத்திலிருந்தால் அது அறிவால் மாறும். உணர்விருந்தால் மாறுவது சிரமம். உடலிலிருந்தால் - பாசம் - இல்லாததைக் கற்பனை செய்து மனப்பால் குடிக்கும். தவறான தொடர்பு ஆரம்பத்திலிருந்து தவற்றைக் காட்டியபடியிருக்கும். நாம் நமக்குள்ள பிரியத்தால், அதைப் புறக்கணித்து, நல்ல அறிகுறி வரும்வரை அதை வைத்திருப்போம். எப்பொழுது தொட்டாலும் தவறு அதன் குணத்தைக் காட்டும். செய்தபிறகுதான் தெரிகிறது. முன்பே தெரிந்திருந்தால் செய்திருக்கமாட்டேன் என நினைக்கிறோம். முன்பே தவறு அதன் குணத்தைக் காட்டியதையும், நாம் புறக்கணித்ததையும், அலட்சியப்படுத்துவோம்.

தாயாருக்குப் புரிகிறது. மற்றவர்க்கு இது புதிராக உள்ளது. பெரியவனுக்கு இதைப் பெற்று அனுபவிக்கும் தகுதியில்லை. ஆனால் ஏதோ ஒரு தகுதியிருந்ததால்தான் அவனைத் தேடி இது வருகிறது, தேடி வந்ததைப் போற்றிப் பாராட்டி மனத்தால் தகுதிபெற முழு முயற்சி செய்தால் பெரியவனுக்கு இது பலிக்கும். அவன் முன்வருவானா என்பதே கேள்வி. முன்வந்தால் தொடர்ந்த ஆர்வம், நம்பிக்கை இருக்குமா என்பதே கேள்வி. இந்த புராஜெக்ட்டை ஏற்றுக்கொண்டால் பெரியவன் இந்தியாவிலும், நண்பன் அமெரிக்காவிலும் ஆரம்பத்தில் செய்யவேண்டிய வேலைகள் ஏராளம். அதனால் பெரியவனுக்கு இது வருகிறது.

. வருவதை நன்றி, அடக்கத்துடன் பெற்றுப் பாராட்டிப் போற்றினால் பலித்து நீடிக்கும்.

. திறமைசாலி பல தலைமுறைகளில் பெறுவதை பக்தி உடனே தருவதை அன்பர்கள் திறமையுடன் அனுபவிப்பது அடுத்த உயர்ந்த கட்டம்.

இந்தக் குடும்பம் என்ன செய்யப்போகிறது? தாயார், பூசலார் மனத்தில் கோவில் கட்டியதுபோல் கட்டப்போகிறாரா? அனைவரும் ஒத்துழைப்பார்களா? தெரியவில்லை. பெரியவனுக்கு வந்துள்ளது பெரிய வாய்ப்பு என்பதை அறியும் அறிவும், திறனுமில்லாதவன் அவன்.என்ன சொல்வான், என்ன செய்வான் என்பதைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்காவில் 200, 300 ஆண்டுகட்குமுன் நிலம், வியாபாரம், தங்கம், பெட்ரோல், போன்ற நூற்றுக்கணக்கான பொருள்கள் ஏராளமாகக் கிடைத்தன. சர்க்கார் இல்லை. யாருக்குத் தங்கம் கிடைக்கிறதோ, சுரங்கம் அவருக்கே. அப்படி இலட்சக்கணக்கானவர் கோடீஸ்வரரானார்கள். அவர்கள் உயிருக்கு ஆபத்து எந்த நேரமும் உண்டு என்பதைப் பொருட்படுத்தாமல் இரவும், பகலும் உழைத்தனர். இன்று அமெரிக்கா உலகுக்குத் தலைமை வகிக்கிறது. அந்த வாய்ப்பையும் இலட்சக்கணக்கானவர் பெற்றாலும் பெறாதவர் கோடிக்கணக்கானவர். இன்றைய இந்தியா 300 ஆண்டுகட்கு முன்னிருந்த அமெரிக்கா போன்றது. நாடு முழுவதும் வளரும் மார்க்கட். மார்க்கட்டில்லை என்பது பிரச்சினையில்லை. டெக்னாலஜி அபரிமிதம். முதல் பாங்க் 75% தருகிறது. 90% சிலருக்குத் தருகிறது. 100% பெறும் தகுதியும் ஒரு சிலருக்குண்டு.பொறுப்பு, திறமை, நாணயம், உழைப்புள்ளவர்க்கு முடிவற்ற அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அதுவே அன்பர்க்குப் பல மடங்குண்டு. பெரியவன் நண்பன் தரும் வாய்ப்பைப் பெற்றால் கனவு காண முடியாத பெரிய இலாபத்தில் பங்குண்டு. பெறும் தகுதியைப் பெரியவன் பெறுவானா? இவன் ஏற்காவிட்டால், ஏற்றுப் பலனடையாவிட்டால்,

. வாய்ப்பு அழியாது, அடுத்தவர்க்குப் போகும்,

. வாய்ப்பு அழிவற்றது, பெறுவது நிலையற்றது.

இந்த நாட்டில் உள்ள மார்க்கட் வாய்ப்பு, எல்லா நாடுகளிலும் ஓரளவுண்டு. ஆன்மீக நாடு என்பதால், ஸ்ரீ அரவிந்தர் பிறந்த இடம் என்பதால், இங்கு அதே வாய்ப்புகள் ஏராளம். இந்தக் குடும்பத்தில் அது reepresentative பிரதிநிதியாகத் தெரிகிறது. இக்குடும்பத்தின் மனநிலை, ஆன்மீகத் தகுதி ஓரளவு நாட்டின் மனநிலை, ஆன்மீகத் தகுதியைப் பிரதிபலிக்கும். நாட்டையாளும் சட்டமும், இக்குடும்பத்தைப் பராமரிக்கும் சட்டமும் ஒன்றே. நாட்டின் நிலையையறிய இக்குடும்பத்தை அறிந்தால் போதும்.

பெரியவன் கிளப்புக்குப் போனபொழுது அவன் நண்பர்கள் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவன், "டேய், உன்னை திட்டுவதை நீ பொறுத்துக்கொள்ளக் கூடாது. ஜாதி புத்தியைக் காட்டிவிட்டான் என உன் கேப்டன் கேட்கிறான். விடாதே'' என்றான். பெரியவனுக்கு ஆத்திரம் வந்து கொட்டித் தீர்த்துவிட்டு, "நான் அவனை நேரில் போய்க் கேட்கிறேன்'' என வீராவேசமாக அம்மாவிடம் நடந்ததைக் கூறி தான் சண்டைப் போடப்போவதாகக் கூறினான்.

தாயாருக்கு ஏன் இது வந்தது எனத் தெரியும். இந்த கலாட்டாவில் பெரியவன் நிதானமிழந்தால் அமெரிக்க நண்பன் கொடுக்கும் வாய்ப்பு பலிக்காது. அந்த வாய்ப்பு வந்ததால், இவனை ஒருவன் சீண்டுகிறான். அவனிடம் எதுவும் பேசாமல் விஷயத்தை சமர்ப்பணம் செய்தார். சமர்ப்பணமாய்விட்டது. பேசாமலிருந்தார். பெரியவன் 3 நாட்களாய் கேப்டனைத் தேடுகிறான், கிடைக்கவில்லை. ஒரு முறை அவன்வீட்டிற்கே போய் "எப்படி நீ என்னைத் திட்டலாம்'' எனக் கேட்கப் போனான், அவனில்லை. அவனுடைய தம்பியும், தாயாரும் பெரியவனைப் பார்த்துப் பிரியமாகப் பேசி, "நாங்கள் கேள்விப்பட்டோம். என் மகன் அப்படிப் பேசியது தவறு'' என்றார்கள். பெரியவனுக்குச் சமாதானமாகிவிட்டது. தாயாரிடம் வந்து விஷயத்தைச் சொன்னான்.

ஒரு 10 நாட்கள் கழித்து தாயார் குடும்பத்துடன் பேசும்பொழுது, வாய்ப்பு வரும்பொழுது எப்படிச் சூழல் நம்மைச் சீண்டும் என்பதைப் பற்றிப் பேசினார்.

பெரியவன் : கேப்டன் திட்டியது அது போன்றதா?

தாயார் : திட்டுவது கேப்டனில்லை, சூழல்.

சிறியவன் : நீ என்னைத் திட்டுவதால், கேப்டன் உன்னைத் திட்டுகிறான்.

பெரியவன் : நான் திட்டுவதை நிறுத்திவிட்டேனே.

பெண் : இத்தனை நாள் திட்டியதற்குச் சிறு பலன்.

பெரியவன் : அம்மா, எனக்குச் சொல்லுங்கள்.

தாயார் : அதிர்ஷ்டம் பலிக்க நிதானம் வேண்டும்.

பெரியவன் : திட்டினால் திருப்பிக் கேட்டால் தப்பா?

தாயார் : உனக்குக் கோபம் வந்துவிட்டது.

கணவர் : எப்படி வாராமலிருக்கும்? உன் அதிர்ஷ்டம் அவன் கிடைக்கவில்லை.

சிறியவன் : கேப்டன் அதிர்ஷ்டம்.

கணவர் : பார்த்தால் எப்படிச் சண்டை போடாமலிருக்க முடியும். என்னைச் சொல்லியிருந்தால் அறைந்திருப்பேன்.

பெண் : ஏம்மா, நீங்கள் பேசவில்லை?

தாயார் : எல்லோரும் பேசுகிறார்கள், கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

பெரியவன் : எது சரி?

தாயார் : திட்டினால் திருப்பித் திட்டுவது சரி.

பெரியவன் : அது போதும்.

பெண் : நிதானம் வேண்டும் என்கிறீர்களே.

தாயார் : அதிர்ஷ்டம் வேண்டும் என்றால்தானே?

பெரியவன் : நான் வேண்டாம் என்றா சொல்கிறேன்?

பெண் : அம்மா, விவரமாகப் பேசுங்கம்மா.

கணவர் : அதிர்ஷ்டத்திற்கும், சண்டை போடுவதற்கும் என்ன சம்பந்தம்?

சிறியவன் : நிதானம் வேண்டும் என்று சொன்னீர்கள், சண்டை போட்டால் நிதானம் எங்கே?

கணவர் : எனக்கு விவரம் புரியக் கேட்கிறேன். டேய் சும்மா இருங்கடா, அம்மா பேசட்டும்.

தாயார் : ஒரு சட்டம். அதிர்ஷ்டம் வரும்பொழுது சூழல் நம்மைச் சீண்டும்.

கணவர் : ஏன்?

தொடரும்....


 

*******


 


 


 



book | by Dr. Radut