Skip to Content

06.அன்னை சுபிட்சம்

"அன்னை சுபிட்சம்"                                                                N.. அசோகன்

வருமானம்

 

பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையிடம் வந்தவர்கள் எல்லோருக்கும் எல்லா வகையான பலன்களும் கிடைக்கின்றன என்றாலும், அன்பர்கள் முக்கியமாகக் கருதுவது வருமான அதிகரிப்புதான். அந்தப் பலனும் அன்பர்களுக்கு நிறையவே கிடைக்கின்றது. வாழ்க்கைச் சூழ்நிலைகளும் இப்பொழுது நிறைய மாறியிருப்பதால் வருமானத்தைப் பெருக்கிகொள்வதற்கான வாய்ப்புகளும் நிறைய அதிகரித்துள்ளன. தகப்பனார் ஓய்வு காலத்தில் பெற்ற சம்பளத்தை மகன் துவக்கச் சம்பளமாக வாங்குமளவிற்கு நிலைமை மாறியுள்ளது. ஆகவே இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலையில் அன்னையின் அருட்சக்தியைத் தம் வாழ்வில் செயல்பட அனுமதிப்பவர் எவருக்கும் வருமானம் அளவுகடந்து பெருகும்.


 

குறைந்தபட்சமாகச் சொன்னால் எவரும் தம் வருமானத்தை

இருமடங்காக்கிக் கொள்ளலாம்

என்பது எனது கருத்து மற்றும் அனுபவமாகும். இதை ஏற்க முடியாமல், நம்ப முடியாமல் பல பேர் மறுக்கலாம். நம்புகின்றவர்களும், "இது கூடிவர மேற்கொண்டு நானென்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்பார்கள். மேலும், "நான் சம்பளத்திற்கு வேலை செய்கின்றேன். எனக்கு 100 அல்லது 200 ரூபாய்தான் incrementகிடைக்கும். நான் ஓய்வு பெறும் காலத்தில்தான் என் சம்பளம் இரு மடங்காகும். ஆகவே உடனடியாக என் சம்பளத்தை இரு மடங்காக்குவது எப்படிச் சாத்தியம்?'' என்ற கேள்வியும் பலர் மனதில் எழும். இது நியாயமான கேள்விதான்.

வருமானம் என்பது வேறு. சம்பளம் என்பது வேறு. நம் வருமானத்தை இரு மடங்காக்கிக்கொள்ளும் தகுதியை நாம் பெற்றுவிட்டால், அந்தக் கூடுதல் வருமானம் வேறு எந்த வகையிலாவது நம்மைத் தேடி வந்தடையும். நமக்கிருக்கும் சம்பளத்தின் மூலந்தான் அது வரவேண்டும் என்ற அவசியமில்லை. நம் சூழ்நிலையில் புதிய வாய்ப்புகளை உண்டு பண்ணி, அதன்மூலம் புதிய வருமானமாகவும் வரும்.

30 வருடங்களுக்குமுன் ஒரு அதிகாரி வீட்டோடு மாப்பிள்ளையாக மாமனார் வீட்டில் குடியிருந்தார். மாமனார் ஆறு தொழில்களை வைத்துக்கொடுத்தார். அனைத்திலும் நஷ்டமடைந்து திவாலானார். ஒரு கட்டத்தில் மாமனார் மருமகனை வீட்டைவிட்டு வெளியேற்றினார். வெளியேறியவர் ஒரு கடையில் ஆளாகப் போய் சேர்ந்தார். அந்தக் கடைக்கு ஓர் அமெரிக்கர், ஒரு குறிப்பிட்ட வகையான நூல் வாங்க வந்தார். அந்த நூல் அக்கடையில் கிடைக்காவிட்டாலும், திவாலாகி ஊழியராகச் சேர்ந்தவருக்கு அந்நூல் எங்குக் கிடைக்குமென்பது தெரிந்திருந்தது. ஆகவே அமெரிக்கர் கடையைவிட்டு வெளியேறிய பின்பும், ஊழியர், கிடைக்குமிடத்தில் அந்நூலை வாங்கிக்கொண்டு அமெரிக்கர் இருக்குமிடத்திற்கு கொண்டு போய்க் கொடுத்தார்.

இச்செயல் அந்த அமெரிக்கரை வியப்பிலாழ்த்தியது. இம்மாதிரி கடைத்தெருவில் அமெரிக்கரைச் சந்திக்கும்பொழுதெல்லாம் என்ன வேண்டும் என்று கேட்டு, உதவி செய்து, அவர் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தார். இதை அவர் நாலு மாதம் தொடர்ந்து செய்தார். "நான் உங்களுக்குச் சம்பளமே கொடுக்கவில்லையே! எனக்கு ஏன் சேவை செய்கின்றீர்கள்?'' என்று அமெரிக்கரும் ஒரு நாள் வாய் திறந்து கேட்டும் பார்த்தார். இவர்கள் உறவாடுவதைக் கவனித்த இன்னோர் அன்பர், "நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்? வருமானம் உயரவேண்டுமானால் அன்னையை ஏற்றுக்கொண்டு நாகலிங்கப் பூவை வைத்து, அவரை வழிபடுங்கள்'' என்று அறிவுறுத்தினார்.

திவாலான அந்த நபரும் அன்பரின் அறிவுரையை ஏற்று, அன்னையைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு, நாகலிங்கப் பூவை வைத்து, அன்றே அன்னையை வழிபட்டார். மறுநாளே அமெரிக்கர் அவரை 250/- ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். கடந்த நாலுமாதங்களாகச் செய்த வேலைக்கும் சம்பளம் போட்டுக் கொடுத்தார். முறையாக வேலையில் சேர்ந்ததும் அமெரிக்கருக்குப் பல மாதங்களாக நடக்காத வேலைகளை இவர் சில நாட்களில் முடித்துக் கொடுத்தார்.அமெரிக்கர் மகிழ்ந்துபோய் சம்பளத்தை 500 ரூபாயாக உயர்த்தினார். பின்னர் நாளடைவில் அவருக்குப் புதிதாக ஒரு தொழிலையே வைத்துக்கொடுத்து மாத வருமானத்தை 5000/- ரூபாயாக உயர்த்தினார்.

அன்னையின் அருளால் நம் வருமானம் உயர நமக்கு அவர்மேல் ஒரு திடமான நம்பிக்கையும், கடின உழைப்பும், வேலையில் திறமையும் இருந்தாலே போதும். நம் மனதைத் தூய்மைப்படுத்தி, அதையே அவருக்கு ஒரு கோவிலாக்கி, அங்கே அவரை பிரதிஷ்டை செய்தோம் என்றால், அவருடைய அருட்சக்தி நம் வாழ்வில் செயல்பட்டவண்ணமிருக்கும். வருமானம் உள்பட எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் வந்தவண்ணமிருக்கும்.

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

முழு மனதுடன் வெறுப்பதை முழு மனதுடன் விரும்பும் குணம்

மனிதனுக்குண்டு.

வெறுப்பை விரும்பும் மனிதன்.


 


 


 book | by Dr. Radut