Skip to Content

08.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

பகவான் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் திருவடிகளைப் பணிந்து சமர்ப்பிக்கின்றேன்!

ஸ்ரீ அன்னை, பகவான் ஸ்ரீ அரவிந்தரை அறிந்து, அன்பராகி சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

ஸ்ரீ அன்னை என் வாழ்க்கையில் அருள் புரிந்த சம்பவங்கள் பல.

1. நான்காண்டுகளுக்கு முன்னர் செங்கல்பட்டில் சுகவீனமுற்ற உறவினரைப் பார்த்துவிட்டு, மைத்துனருடன் இரவில் மின்சார ரயில் ஏறி, பரங்கிமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்குவதற்குப் புறப்பட்டு வந்துகொண்டிருந்தேன். சட்டைப் பையில் எப்பொழுதும் வைத்திருக்கும் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை படங்களை நினைவுகொண்டு சமர்ப்பணம் செய்துகொண்டு வந்தேன். இரவு பத்து மணியளவில் தாம்பரம் ஸ்டேஷனை ரயில் வந்தடைந்தது. இந்த ரயில் நேராகச் சென்னை நோக்கிச் செல்கிறது என நினைத்த எங்களுக்கு, சிறிது நேரத்தில் ரயில் மீண்டும் செங்கல்பட்டுக்கே செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்தது. வண்டி வேகம் எடுக்கும்முன் மைத்துனரை வண்டியிலிருந்து பிளாட்பாரத்தில் இறங்கி, என்னையும் கீழே இறக்கிவிடுமாறு கூறி, ரயில் வேகம் எடுத்ததால், வேகம் எடுத்த ரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் குதித்துவிட்டேன். அவர் கை நீட்ட, அதைப் பற்றிக்கொண்டு கீழே குதித்ததால், இருவரும் கீழே உருள ஆரம்பித்தோம். அடுத்த விநாடியில் ஓடும் ரயில் சக்கரங்களுக்கு அடியில் செல்லவேண்டியதுதான். ஆனால் பிளாட்பாரத்தின் மிக அருகில் அப்படியே விழுந்துகிடந்தோம். ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டதாக நினைத்து, காவலர் இருவர் எங்களை நோக்கி ஓடிவந்து, "இப்படியா ஓடும் ரயிலிலிருந்துகீழே இறங்குவது?'' என கடிந்துகொண்டனர். அன்னையின் கருணையினால் 65 வயதான எனக்கு, கீழே விழுந்ததில் ஒரு சிறு கீறல்கூட என் உடம்பில் படாமல் என் தெய்வம் ஸ்ரீ அன்னை எங்களைக் காப்பாற்றினார். ஸ்ரீ அன்னைக்கு நன்றி!

2. 1991-ஆம் ஆண்டு என் இளைய மகன் ஒன்பதாம் வகுப்பில் மிகக் குறைந்த மார்க் எடுத்து பாஸ் செய்தபின், திருநெல்வேலியில் உள்ள எந்தப் பள்ளியிலும் பத்தாம் வகுப்பில் அவனைச் சேர்க்க மறுத்ததால், மனம் வெறுத்த அவன், மேற்கொண்டு படிக்க முடியாதெனவும், குலத்தொழில் செய்ய விரும்புவதாகவும் கூற, அவனை ஓர் நகைப் பட்டறையில் சேர்த்து பத்து ஆண்டுகள் அவன் நகைத்தொழிலே செய்துவந்தான். பின்னர் தூத்துக்குடியில் குறியேறிய பின்னர் நண்பர்கள் சிலரின் ஆலோசனையின்பேரில் அவனுக்குப் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதப் பயிற்சி கொடுத்தோம். ஸ்ரீ அன்னையிடம், என் மகன் ஒரே முயற்சியில் பத்தாம் வகுப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் பாஸ் செய்ய அருளுமாறு பிரார்த்தனை செய்தேன். அன்னையின் அற்புதம், பத்தாண்டுகள் இடைவெளிக்குப்பின் என் மகன் 2002-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் ஒரே முயற்சியில் எல்லாப் பாடங்களிலும் பாஸ் செய்தான். ஸ்ரீ அன்னையின் கருணைக்கு நன்றி!!

3. என் இளைய மகளின் கணவர் வெளிமாவட்டத்திற்கு மாறுதலான சமயம், அவர் அலுவலகப் பொறுப்புகளை ஒப்புவிக்கையில் ஒரு பிரச்சினை முளைத்தது. இவரின் பொறுப்பிலிருந்த நான்கு M புக்குகள் காணாமல்போய், ரிலீவ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளானார். என்னிடம் விபரம் தெரிவிக்க, நான் ஸ்ரீ அன்னையை வணங்கி பிரார்த்தனை செய்து, காணாமல்போன நான்கு M புக்குகளும் கிடைக்கவேண்டுமென்று ஸ்ரீ அன்னைக்கு தந்தி கொடுத்தேன். ஸ்ரீ அன்னையின் அருள் விரைந்து செயல்பட்டு, மறுநாளே காணாமல்போன நான்கு M புக்குகளும் இருக்கும் இடம் தெரிந்து, என் மருமகனும் பணியிலிருந்து ரிலீவாகி, பின் பாண்டிச்சேரி சென்று, ஸ்ரீ அன்னையை வழிபட்டுவந்தார். ஸ்ரீ அன்னைக்கு நன்றி!!!

4. இவ்வாண்டு என் இளைய மகள் நான்குநேரியிலிருந்து திருநெல்வேலிக்கு, மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்தாள். அவள் குழந்தைகளுடன் திருநெல்வேலியிலும், அவள் கணவர் சென்னையிலும் (இருவரும் BSNL பொறியாளர்கள்) பணியாற்றி வந்தனர். என் மகள் திருநெல்வேலிக்கு மாறுதலாகிவருவதில் பல முனையிலிருந்தும் எதிர்சக்திகள் செயல்புரிந்து வந்தன. நான் என் மகளை, அவள் குடும்பத்தினரோடு பாண்டிச்சேரிக்கு சென்றுவர அறிவுறுத்தினேன். அவர்களும் சென்று வந்தனர். சென்ற மாதம் முதல் வாரத்தில் என் மகள், தனக்கு திருநெல்வேலியில் தான் விரும்பும் இடத்திற்கு போஸ்டிங் கிடைப்பதில் பல எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதாகக் கூறி, மிகவும் மனம் வருந்தினாள்.

நான் அவளுக்கு ஆறுதல் கூறி, ஸ்ரீ அன்னை அவள் விருப்பத்தினைப் பூர்த்தி செய்வார் எனக் கூறி, தைரியம் சொன்னேன். உடனே ஸ்ரீஅன்னைக்கு, மதர் சர்வீஸ் சொஸைட்டி மூலமாக சிறிய காணிக்கையை M.O.. மூலம் அனுப்பிவைத்தேன். ஸ்ரீ அன்னையின் மகிமையே மகிமை! அன்று இரவே என் மகளுக்கு அந்த நல்ல சேதி கிடைத்தது. அவள் விரும்பிய இடத்துக்கே போஸ்டிங் போட்டிருப்பதாக தகவல் வந்தது. புதிய பணியிலும் அவள் சேர்ந்துவிட்டாள்.

ஸ்ரீ அன்னைக்கு நன்றி!!!!

என்னுடைய பிரார்த்தனையெல்லாம், நான் எப்பொழுதும் ஸ்ரீ அன்னைக்கு நன்றியுடையவனாக இருக்க ஸ்ரீ அன்னை அருள்புரிய வேண்டும் என்பதே. மீண்டும் ஸ்ரீ அன்னைக்கு நன்றி!

தற்காலிகப் பணியில் இருந்துவரும் என் இளைய மகனை, வருடம் முழுவதும் போதிய வருமானம் வரக்கூடிய நிரந்தரத் தொழில்

அமர்த்த எல்லாம்வல்ல ஸ்ரீ அரவிந்த பகவானும், ஸ்ரீ அரவிந்த அன்னையும் கருணைபுரிய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். 24.4.04இல் எனது இடக் கண்ணில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை நல்லபடியாக நடத்தித்தந்த என் இனிய அன்னைக்கு என் இதய நன்றி!

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

அன்னையின் ஸ்பர்சத்தை ஜீவனில் அனுபவித்தவனால் வேறெதையும் அனுபவிக்க முடியாது.

அன்னை தீண்டிய ஜீவனுக்கு அடுத்தது இல்லை. 


 

புதிய வெளியீடு


 

எங்கள் குடும்பம்

by


 

கர்மயோகி


 

விலை : ரூ.200/-


 

தபால் செலவு : ரூ.20/-


 


 


 book | by Dr. Radut