Skip to Content

07.அன்னையின் ஸ்பர்ஸம்

"அன்னை இலக்கியம்"

                                  அன்னையின் ஸ்பர்ஸம்                                         இல.சுந்தரி

குழந்தை ஆசைப்பட்டாள் என்று சின்னஞ்சிறு அம்பாள் விக்ரகம் வாங்கித்தந்தார் காசிநாதன். அதை எந்நேரமும் பிரியாதிருந்தாள் குழந்தை பூமா. பள்ளிக்கூடம் போகும்போதுகூட சிறிய பெட்டிக்குள் வைத்து யாருமறியாமல் எடுத்துப்போவாள். பல நேரம் அவள் அந்த விக்ரகத்துடன் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பாள்.

ஒரு சமயம் அப்பா அங்கு வந்துவிடவே அவளுக்கு வெட்கமாயிற்று.

"என்னம்மா செய்கிறாய் அங்கே? யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய்?''என்று சட்டையைக் கழற்றி கோட்ஸ்டாண்டில் மாட்டியவாறு யதார்த்தமாய்க் கேட்டார் காசி.

"அப்பா! நீ வாங்கித்தந்த அம்பாள் என்னுடன் பேசுவதில்லை''என்று ஏக்கத்துடன் கூறினாள்.

"பேசுவார் அம்மா. நீ சரியாகக் கவனித்திருக்கமாட்டாய்''என்று சமாதானம் செய்தார்.

அம்மா உடனே ஒரு புகைப்படத்தைக் கொண்டுவந்தாள்.

"பூமா, இதில் இருப்பது யார்?''என்றாள்.

"அது நான்தான். அது என்னுடைய போட்டோ''என்று திருத்தமாய்ப் பதில் கூறினாள்.

"இது பேசுமா?''என்றாள் அம்மா.

"அது வெறும் போட்டோ. அது பேசாது. ஆனால் நான் பேசுவேனே''என்றாள் சிறுமி. "அதுபோலத்தான் இந்தப் பொம்மை பேசாது''என்று கூறி அம்மா அவளைச் சமாதானப்படுத்தினாள்.

"அப்படியென்றால் நிஜ அம்பாள் எங்கே? அவரும் என்னைப்போல பேசுவார் அல்லவா?''என்று கேட்கவே அம்மா திணறினாள்.

"நிஜ அம்பாள்தானே. ஒரு நாள் உனக்கு அவரைக் காட்டுகிறேன்''என்றார் அப்பா. அவ்வளவுதான், பூமா சதா அவரை நச்சரித்தாள்.

"சரி, நாளைக்கே நாம் நிஜ அம்பாளைப் போய்ப் பார்த்துவருவோம்''என்றார்.

"அவர் பேசுவாரா?''என்றாள்.

"பேசுவார். தேவைப்பட்டால் பேசுவார்''என்றார் அப்பா.

"ஏனிப்படி ஏதாவது சொல்லிக் குழந்தை மனதைக் கலைக்கிறீர்கள்?''என்றாள் அம்மா.

"நான் சொல்வது ஏதாவதுமில்லை, மனதைக் கலைப்பதுமில்லை''என்றார் அப்பா.

"தெய்வத்தை நேரில் பார்க்க முடியுமா, என்ன?'' என்கிறாள் அம்மா.

"முடியாது என்பவர்க்கு முடியாது. முடியும் என்பவர்க்கு முடியும்''என்றார் அப்பா.

"இந்தப் பதில் எனக்குச் சரியாகப் படவில்லை''என்றாள் அம்மா.

"சரி. வேறுவிதமாகச் சொல்லட்டுமா?''என்றார் அப்பா.

"நீங்கள் எப்படிச் சொன்னாலும் சரி. கடவுளை நேரில் பார்ப்பது என்பதெல்லாம் புராணங்களில் வருவது. நாம் யாரும் பார்க்கமுடியாது''.

"இல்லை கனகா. மனிதனின் மனம் வக்கிரமாய் இருக்கிறது. இந்தப் பாவனைதான் கடவுளை நேருக்கு நேர் பார்ப்பதைத் தடுக்கிறது. அதை விட்டுவிட்டால் கடவுள் புலப்படுவார்''என்றார் காசி.

"ஆமாம். எதையாவது சொல்லி குழந்தை மனதை மாற்றிவிடாதீர்கள்.நமக்கிருப்பது ஒரு குழந்தை. அவள் என்னை மறந்துவிட்டால் எனக்குத் தாங்காது''என்று அழுதாள் கனகா.

(அகந்தை, அன்னையை விலக்கும் முறைகளில் இதுவும் ஒன்று.பாசத்தின் பெயரால் பரமனிடமிருந்து பக்தனைப் பிரிப்பது. அன்னை சொல்வாராம், "குழந்தைகளால் எப்பொழுதும் பிரச்சினையில்லை.அவர்கள் பெற்றோர்கள்தாம் பெரும்பிரச்சினை"என்று).

மறுநாள் பாண்டிச்சேரி ஆஸ்ரமத்தில் தரிசன வரிசையில் தன் தந்தையாருக்குப் பின் பூமா நின்றிருந்தாள்.

ஓரழகிய தாய் தழையப் புடவையுடுத்தி தலையில் முக்காடிட்டு கம்பீரமாய் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரைச் சுற்றி கோடி சூரியப்பிரகாசம். கண்களும், முகமும் பூஞ்சிரிப்பால் மலர்ந்து ஒளி வீசுகிறது. அவரின் இருபுறமும் வண்ணமலர்க்கொத்துகளை ஏந்திநிற்கும் பூஞ்செடிகள். ஒரே அமைதிவெள்ளம். அன்பர் வரிசை முன்னேற முன்னேற சிறிதும் சளைக்காமல் மலர்க்கரங்களால் விரைவாக பிரசாதங்களை வழங்குவதும், அன்பர்கள் மனமின்றி அகல்வதும் கண்கொள்ளாக் காட்சி. பூமா தன் முறை வரும்வரை இருபுறமும் தலையை சாய்த்து சாய்த்து அவரை தரிசித்தவண்ணமிருந்தாள். தந்தையின் முறை முடிந்து அவள் முறை வந்துவிட்டது. இதோ அவள்முன் அவள் நீண்டநாட்களாய்க் காண ஆர்வமுற்ற பேசும் தெய்வம். அவ்வளவு அருகில் அந்தத் தெய்வசக்தியைப் பார்த்தது உடல் புல்லரித்தது; மனம் நெகிழ்ந்தது; நெஞ்சு பரவசத்தால் விம்மியது.யாரும் எதிர்பாராதவிதமாக சட்டென்று அவர் கால்களைப் பற்றிக்கொண்டு தேம்பினாள். வரிசை காத்திருப்பதை உணர்ந்த

ஸ்ரீ அன்னை அவளைத் தூக்கி எடுத்துப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டு வரிசையை ஆசிவழங்கி முடித்தார். சரேலென எழுந்தார். மீண்டும் பூமா அவர் கால்களைப் பற்றிக்கொண்டு அழுதாள். சாதகர்கள் அவளை விலக்க முற்பட்டபோது அன்னை அவர்களைத் தடுத்தார். அவளைத் தம் இடக்கரத்தில் பற்றித் தரதரவென இழுத்துச்சென்றார். வெளியே அவள் தந்தை காத்திருந்தார். தம் மகளை மன்னிக்க வேண்டும் என்று சாதகரிடம் உருக்கமாக வேண்டினார். அதற்கு அச்சாதகர், "அவளைப் பற்றிய முடிவை அன்னைதான் தீர்மானிப்பார்''என்று கூறினார்.அன்னை அவள் கண்களை உற்றுப்பார்க்கிறார். முறைப்பதுபோல் தோன்றுகிறது.

"நீ என்னுடன் இங்கேயே இருக்கப்போகிறாயா?''என்று கடுமையாய் வினவுகிறார்.

அந்தக் கடுமையைக் கண்டு அஞ்சி அவள் திரும்பிப் போய்விடுவாள் என்று எல்லோரும் தீர்மானமாய் நம்பிக்கொண்டிருந்தபோது, யாரும் சிறிதும் எதிர்பாராத அதிர்ச்சியாய், "ஆம், உங்களுடன்தான் இருக்கப் போகிறேன் (நீங்கள்தான் வேண்டும்)''என்கிறாள்.அன்னை அவளை ஆழ்ந்து பார்க்கிறார். எல்லோரும் அச்சமாய்

உணர, அவள் மட்டும் மலர்ந்து சிரிக்கிறாள்.

"சரி, இவளுக்கு இங்கேயே தங்க ஏற்பாடு செய்துவிடுங்கள்''என்று கூறி, மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்கிறார். அவர் இதழ்களில் குறுஞ்சிரிப்பு ஒன்று மலர்ந்து சூழலில் மணம் வீசுகிறது.

"ஜில்'என்ற குளிர்க்காற்று அங்குள்ள அனைவராலும் உணரமுடிகிறது.

அவள் தந்தை பல நாள் காத்திருந்து திரும்பிவிட்டார்.

அவள் எல்லோருடைய வியப்பிற்கும் ஆளாகி எல்லோர் கவனத்திற்கும் உரியவளாகிவிட்டாள். அன்னை அவளிடம் அதிகார தோரணையில் பேசுகின்றார். கடும்பார்வை பார்க்கிறார். சில நேரம் அடிக்கக்கூடச் செய்வார். இவற்றால் அவள் வருந்தி செய்வதறியாது தவிப்பாள் என்றெண்ணி எல்லோரும் தனித்தனியே அவளிடம் பேச்சுக் கொடுக்கின்றனர். அவள் மலர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவுமிருக்கிறாள்.திரும்பிப் போகமாட்டேன் என்கிறாள்.

இது என்ன வியப்பு? அவளுக்குப் பைத்தியமா? இது ஒருபுறமிருக்க,அங்கு, அவள் வீட்டில் பூமாவின் தாய் அவள் தகப்பனாரோடு சண்டையிட்டுப் புலம்புகிறாள்.

"குழந்தை ஏதோ பிடிவாதம் செய்தாளென்று அங்கேயே விட்டுவிட்டு வந்தீர்களே. இது சரியா? அவள் இரவில் என்னைவிட்டுத் தனியாக படுத்துறங்கவும்மாட்டாள். என் குழந்தையை யாரைக் கேட்டு அந்தச் சன்னியாசி அம்மாவிடம் விட்டுவந்தீர்கள்? அவள் வரமாட்டாள் என்று கூற அவர் யார்? போய் அழைத்துவாருங்கள். என்னையாவது அங்கு அழைத்துப்போங்கள். நான் பேசிக்கொள்கிறேன்''என்கிறாள் அம்மா.

"கனகா நீ தெரியாமல் பேசுகிறாய். அவர் சன்னியாசினி அல்லர்.மானுட சட்டையணிந்து நம்மிடையே வந்த பரம்பொருள் சக்தியவர் என்று ஸ்ரீ அரவிந்தரே கூறியிருக்கிறார். அவருடன் என்மகளிருந்தாள் என்றால் அவள் பாக்யசாலி''என்று குரல் தழுதழுத்தார்.

"இப்படிப் பேசிப் பேசிதான் அவளைப் பைத்தியமாக்கி வைத்து இருக்கிறீர்கள். இனியும் நான் அவளைப் பிரிந்திருக்கமுடியாது. வாருங்கள் அங்கே போய்க் குழந்தையைப் பார்ப்போம். கையுடன் அழைத்து வந்துவிடுவோம்''என்று படபடத்தாள்.

அவளைச் சொல்லியும் குற்றமில்லை. பாசத்தால் தன்னைப் பிணைத்துக்கொண்டு மனிதமனம் படும்பாடு பெரியது. இதைத்தான் பகவான் அறியாமையை விரும்பி நாடும் குணம் என்கிறாரோ?அவளைச் சமாதானம் செய்யமுடியாமல் ஆஸ்ரமம் அழைத்துவந்தார் காசி. ஆனால், அன்று தரிசனமில்லை. கேட்டில் நின்றுகொண்டு தம் மகளைப் பார்க்கவேண்டுமெனச் சொல்லியனுப்பினார்.சாதகர் வந்து அன்னையிடம் கூறினார். அதற்கு அன்னை, "அவள் பிரியப்பட்டால் போகட்டும்''என்றார்.

பூமாவிடம் வந்து சாதகர் சொல்கிறார். "பூமா வெளியே உன் அம்மா வந்து உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறார்''என்று.

"அம்மாவா? என் அம்மா இங்கே உள்ளேயல்லவா இருக்கிறார்''என்கிறாள் பூமா.

சாதகர்க்கு ஒரே சங்கடம். "சரி, சரி, வா. வந்து அவர்களிடம் உன்னம்மா இங்கே உள்ளேயிருக்கிறார் என்பதை நீயே சொல்''என்கிறார்.

வெளியே வந்தாள் குழந்தை. அவள் பெற்றோர் அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு, "வா, நம் வீட்டிற்குப் போவோம்''என்றனர்.

"நான் வரவில்லையம்மா. அப்பா நீங்கள் சொன்னதுபோல் இந்த அம்பாள் பேசும் அம்பாள்தான். அவர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்களை விட்டு நான் எங்கும் வரமாட்டேன்''என்று உறுதியாய்க் கூறினாள்.

"உன் படிப்பு வீணாகிறது. பிறகு பள்ளிக்கூட விடுமுறையில் இங்கு வரலாம்''என்றார் அப்பா.

"இங்கே எனக்குப் படிப்பும் சொல்லித்தருகிறாகள். வேலையெல்லாம் கற்றுக்கொள்கிறேன். எல்லாவற்றையும்விட இந்த அம்பாள் அடிக்கடி என்னை அழைத்துப் பேசுகிறார். என்னால் எங்கும் வரமுடியாது. நீங்கள் கவலைப்படாமல் போங்கள்''என்று நிறுத்தி, நிதானமாய்ப் பேசிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காசிநாதன் மனைவியைத் தேற்றுகிறார். "கனகா! உன் சென்ற பிறவியில் உன் பெற்றோர் யாரெனத் தெரியுமா?''என்றார் மனைவியிடம்.

"ஆமாம். இந்தப் பிறவியிலேயே என் மகளுக்கு என்னைத் தெரியவில்லை. சென்ற பிறவியில் என் பெற்றோரை எப்படித் தெரியும் எனக்கு? எனக்கு மட்டுமா? உங்கள் சென்ற பிறவியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா''என்றாள்.

"தெரியாது கனகா. நாம் இந்தப் பிறவியை மட்டும் அறிவதால் குளறுபடியில்லாமல் வாழ்கிறோம். நம் மகள் நம்முடன் இருந்தது அவளின் சென்ற பிறவி. அவள் இங்கு, இப்பொழுது புதிதாய்ப் பிறந்துவிட்டாள்''.

வீட்டில் செல்லமாய் வளர்ந்த குழந்தை பூமா. இன்னும் வீட்டு வேலைகள் பழகாத சிறுமியவள்.

"பூமா, இங்கே வா. இந்த தட்டுகளைக் கழுவி சுத்தம் செய்து வை''என்கிறார் ஷியாம். தன் பிஞ்சுக்கரங்களால் அந்தத் தட்டுகளை ஒவ்வொன்றாய் சின்னக்குழந்தையைத் தூக்குவதுபோல் எடுத்துத் தேய்க்கத் தொடங்கும்போதே கண்ணனின் புல்லாங்குழல் கேட்டு

கைவேலையை நழுவவிடும் கோபியரைப்போல் திடீரென முகம் பிரகாசமடைய, மகிழ்ச்சி நிரம்பி, சின்ன வாயிதழில் சிரிப்பாய் மலர நிற்கிறாள். "என்ன செய்கிறாய் பூமா? சீக்கிரம் கொடுத்த வேலையைச் செய்''என்ற ஷியாம் மாமாவைப் பார்த்து புன்னகைச் செய்கிறாள்.அதற்குள் "பூமாவை உடனே அன்னை அழைக்கிறார்'என்ற செய்தி வருகிறது.

மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓடிவருகிறாள். அன்னையின் அறைவாயிலை அடைந்தவள் அப்படியே நின்றாள்.

"வா, வா, உள்ளே வா. ஏன் அங்கேயே நின்றுவிட்டாய்''என்று உள்ளிருந்து அன்னை குரல் கொடுக்கிறார்.

"கதவு மூடியிருக்கிறது. நான் வெளியே நிற்பது அவருக்கு எப்படித் தெரியும்? அம்பாளுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அப்பா சொல்லியிருக்கிறாரே'என்று தானே கேள்வி கேட்டு, தானே பதிலும் கூறிக்கொள்கிறாள்.

பூனைபோல் மெல்ல அடிவைத்து உள்ளே வந்தாள்.

"என்ன செய்துகொண்டிருந்தாய்?''என்று அதிகாரமாய்க் கேட்டார்.

"பாத்திரம் கழுவுகிறேன்''என்றாள் மெல்ல.

"சரியாகச் செய்யவில்லை என்று திட்டு வாங்கியிருப்பாயே''என்றார்.

"ஆமாம்'என்பது போல கண்ணை உருட்டித் தலையை அசைத்தாள்.காதைத் திருகி, "கவனமாய்ச் செய்கிறாயா, இனி?''என்றார்.

"சரி'என்பதுபோல் தலையசைத்தாள்.

"சரி, சரி, போ''என்றார்.

திரும்பி வந்து மீதி வேலையைச் செம்மையாய் விரைவாய் செய்துவிட்டாள்.பூவைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பார்வதி இவளை அழைத்து அந்தப் பணியில் அவளையும் ஈடுபடுத்தினாள். பூவைக் கையில் எடுத்தவள் மந்திரத்தில் கட்டுண்டாற்போல் மயங்கி நின்றாள்.இராமகிருஷ்ண பரமஹம்சருக்குப் பூவைப் பறிக்கும் நேரத்தில் அது சிவலிங்கமாய்க் காட்சிதர பறிக்காமல் விட்டுவிடுவாராம். இவளுக்கு,

இதில் யார் காட்சி தந்தாரோ? பார்வதிக்குக் கோபம் வந்தது. "பூமா!கவனித்துச் செய்''என்று அதட்டினார். அந்நேரம், "உடனே பூமாவை அன்னை அழைக்கிறார்'என்ற செய்தி வரவே, விரைவாக மேலே அன்னையின் அறையை நோக்கி ஓடினாள்.

"வா, உள்ளே வா''என்கிறார் அன்னை. பரவசத்துடன் உள்ளே செல்கிறாள். "என்ன செய்துகொண்டு இருந்தாய்?''என்றார்.

"பூ சுத்தம் செய்தேன்''என்றாள்.

"எங்கே சுத்தம் செய்தாய்? மயங்கி நின்றுகொண்டிருந்தாய்''என்றார் கடுமையாக.

அவளுக்குச் சிரிப்பு வருகிறது. அடக்கிக்கொள்கிறாள்.

"என்ன சிரிப்பு?''என்று அதட்டலாய்க் கூறிக் கன்னத்தைக் கிள்ளினார். மனம்கொள்ளாத மகிழ்ச்சியை முகம் மலர்ந்து வெளிப்படுத்த நிற்கிறாள்.

"சரி, சரி. ஓடிப்போ''என்கிறார்.

திரும்பிவரும் அவளை, "அன்னை என்ன சொன்னார்?''என்று ஒருவர் ஆர்வமுடன் கேட்க, ஒன்றும் கூறாமல் சிரித்துக்கொண்டே ஓடிவிட்டாள் (இதைத்தான் "கண்டவர் விண்டதில்லை'என்பார்களோ!).

"என்ன சொல்வார்? கவனமில்லை எனத் திட்டியனுப்பியிருப்பார்'' என்றார் ஒருவர்.

"திட்டினால் அழுதுகொண்டல்லவா வரவேண்டும்? இவள் சிரித்துக்

கொண்டல்லவா வருகிறாள்?''என்றார் வேறொருவர்.

"அவள்தான் எல்லாவற்றிற்கும் சிரிக்கிறாளே. அவள் எந்த வேலை கொடுத்தாலும் ஏதோவொரு நினைவோடு செய்கிறாள். அதுதான் உடனே அன்னை கூப்பிட்டனுப்புகிறார். திட்டாமல் வேறு என்ன செய்வார்'' என்கிறார் ஒருவர்.

அவர்கள் பேச்சை மனதில் இரசித்துச் சிரிக்கிறாள்.

"பூமா, இந்தா இந்தச் செடிகளுக்குக் கவனமாய் நீரூற்று''என்று பூவாளியை அவளிடம் தருகிறார். அதைக் கையில் வாங்கியதும் வழக்கம்போல் "கண்ணில் தெரியுதொரு தோற்றம்'என்றாகிவிடுகிறாள். பிடியைச் சாய்க்காமல் பற்றியவண்ணம் மலைத்துநிற்கிறாள். அப்படி எதைத்தான் நினைத்து மயங்குவாள்? மயங்கும் வயதும்கூட இல்லை. பத்து வயது சிறுமியவள். கமல்நாத்திற்குக் கோபம் வருகிறது. "பூமா! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?''என்று கடுமையாய்க் கேட்கிறார்.

அதே நேரம் ஒருவர் விரைந்து வந்து, "பூமா, உன்னை அன்னை கூப்பிடுகிறார்''என்று சொல்ல, மிகுந்த ஆர்வத்துடன் ஓடுகிறாள்.

வழக்கம்போல் அறைக்கு வெளியே தயங்கி நிற்கிறாள். "வா, வா,உள்ளே வா''என்கிறார் அன்னை.

"என்ன செய்துகொண்டிருந்தாய்?''என்று அதிகாரமாய்க் கேட்கிறார்.

"செடிகளுக்கு நீரூற்றிக்கொண்டிருந்தேன்''என்றாள் மெதுவாக.

"எங்கே நீரூற்றினாய்? வாளியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாய்.

கமல்நாத் திட்டினாரா?''என்றார்.

பதிலேதும் கூறாமல் அவரைப் பார்த்து வெட்கமாய்ச் சிரிக்கிறாள்.

"அடிக்கட்டுமா உன்னை?''என்கிறார்.ஏதோ பாவனைக்காக கடிந்துகொள்வதுபோல் தோன்றுகிறது.ஒன்றும் பேசாது நிற்கிறாள். அவள் முகத்தின் பிரகாசம் உள்ளே பொங்கிவரும் ஆனந்தத்தின் அடையாளம்.

அவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு, "சரி, சரி. போய் வேலையை ஒழுங்காய்ச் செய்''என்கிறார்.

அவள் அன்னையிடம் போய் வந்தபிறகு மின்னலாய் வேலையைச் செய்து முடித்துவிடுகிறாள். ஏதோ கண்டிக்கிறார் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், அவள் திரும்பி வரும்போது அவள் முகத்தின் பிரகாசம்,

கொஞ்சியிருப்பாரோஎன்று நினைக்கத் தோன்றுகிறது. ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

****

அடுத்த இதழில் தொடரும்.....


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம் சரணாகதிஎன அழைப்பது மனம் நினைவாகச் சமர்ப்பணம் செய்து, தன்னால் தன் இருண்ட நிலையில் முடிந்தவரை முயலுவதாகும்.

நம் சரணாகதி இருளின் பெருமுயற்சி.

ஸ்ரீ அரவிந்த சுடர்

திருவுருமாற்றத்திற்கு ஆழ்மன ஆசையை விட, மேல்மன ஆசை அடங்கும். சட்டம் ஒன்றே. சோகமானவர் சோகத்தை விரும்புகிறார். ஆழ்மனப்பற்று அது.

திருவுருமாற்றமும் திகைக்கும் ஆழ்மனப் பற்று.


 


 


 


 book | by Dr. Radut