Skip to Content

04.கற்றலும் கற்பித்தலும்

கற்றலும் கற்பித்தலும்

என்.அசோகன்

பாடம் கற்பித்தல் என்பது ஒரு வெளி நடவடிக்கையாகும். ஆனால் கல்வி கற்பது என்பது நம்முடைய உள்ளார்வத்தைப் பொருத்ததாகும்.அறியாமை மிகுந்த பழங்காலத்தில் கல்வி போதிக்கும் ஆசிரியத் தொழில் ஒரு பெரிய சேவையாகக் கருதப்பட்டது. அக்காலத்தில் மனிதனுக்கும் தெய்வத்துக்கும் இடையே பிணைக்கும் கருவியாகச் செயல்பட ஒருவர் தேவைப்பட்டார். அப்படிச் செயல்பட்ட மதகுருமார்களும் பாதிரிமார்களும் எதிர்காலத்தில் தேவையற்றவர்களாகி விடுவார்கள். இந்தப் புரட்சியை 16ஆம் நூற்றாண்டிலேயே ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் கிங் துவக்கி வைத்தார்.

பரீட்சை என்ற முறையை வைத்துத்தான் மாணவனின் அறிவை மதிப்பிடுகிறார்கள். பழங்காலத்தில் மனப்பாடம் செய்வது பிரதானமாக இருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பெரிய பெரிய பேச்சாளர்கள் கூட அவர்களுடைய சொற்பொழிவுகளை மனப்பாடம் செய்து வைத்திருந்தனர். எழுதுவதற்குத் தேவையான பேனா மற்றும் பேப்பர் இல்லாத காரணத்தால் இந்தியாவில் மனப்பாடம் அவசியமாகிவிட்டது. வேதங்களைச் சொற்பிழை இல்லாமல் தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றி வர இம்மனப்பாடம் உதவியது என்பதைப் பார்க்கும்போது, மனப்பாடம் என்ற விஷயத்தில் இந்தியர்கள் பெருஞ்சாதனை புரிந்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த ஞாபகசக்தி வேறு வகையிலும் உச்சத்தை எட்டியது. அடுத்-தடுத்து எட்டுப் பேர் எட்டுத் துறையில் கேட்கும் கேள்விகளை ஞாபகம் வைத்துக்கொண்டு அதே வரிசையில் பதில் சொல்லும் விற்பன்னர்கள் உருவானார்கள். இதை நூறு கேள்விகளுக்கும் கொண்டு சென்றார்கள். இவர்கள் அஷ்டாவதானி என்றும், சதாவதானி என்றும் அழைக்கப் பட்டனர். ஆனால் ஞாபகசக்தி என்பது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் வருங்காலத்தில் முக்கியத்துவம் இதற்கில்லை. அம்முக்கியத்துவம் புரிந்து கொள்ளும் திறனுக்கே கொடுக்கப்படும். உலகம் முழுவதும் பரீட்சைகள் கைவிடப்படுகின்றன. மதிப்பெண்களுக்கு இருந்த முக்கியத்துவம் போய் அதற்குப்பதிலாக விஷய ஞானத்துக்கு முக்கியத்துவம் வருகிறது. இதே ரீதியில் வருங்காலத்தில் கட்டாயக் கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் குறைந்து, மாணவர்கள் தாமாக முன்வந்து ஏற்கும் சுயக்கட்டுப்பாட்டுக்கே முக்கியத்துவம் அதிகரிக்கும்.

வருங்காலத்தில் எழுத்தர்களுக்கும், தட்டச்சு இயந்திரங்களுக்கும் தேவை குறைந்து கம்ப்யூட்டருக்கே முக்கியத்துவம் வரும். போட்டோ நகல் வந்த பிறகு, கார்பன் பேப்பரை வைத்துப் பிரதி எடுப்பது என்பது குறைந்துவிட்டது. இம்மாதிரியே பரீட்சைகளும், தேர்வுகளும் புறக்கணிக்கப்படும் காலம் வரும். மாணவர்களை அடிக்கும் பழக்கம் அநாகரீகம் என்று கருதப்படும் நிலை வந்துவிட்டது. இதைத் தடுக்க சட்டங்கள் வந்து விட்டன. வெளிநாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர்கள்கூட தம் வீட்டில் அடிக்கக்கூடாதென்ற சட்டம் வந்துவிட்டது.

இந்திய நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாகிவிட்டது. ஓய்வு பெறும் காலத்தில் தகப்பனார் வாங்கிய ஊதியத்தை மகன் துவக்கத்திலேயே வாங்குவதை நாம் இப்போது பார்க்கிறோம். சைக்கிள் வைத்திருப்பதைப் பெருமையாக நினைத்த காலம் போய், இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட கார் வைத்துள்ளனர். ஏழ்மை, கொடுமை, வேலையின்மை, பட்டினிபோன்றவைகளுக்குப் பதிலாக வளமை, கருணை, முழு வேலை மற்றும் சுகஜீவனம் ஆகியவை நம்மை நாடி வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே,தாழ்ந்தது மற்றும் குறுகியது என்றெல்லாவற்றையும் விட்டுவிட்டு,உயர்ந்ததையும் பரந்ததையும் நாம் நாடுவது நல்லது.

இத்தகைய மனமாற்றம் நம் வாழ்க்கையை ஆன்மீகமயமாக்கும். உள்ளே ஆன்மீகம் பெருகுமளவுக்கு வெளியே வாழ்க்கைத் தரம் உயரும்.

 

****


ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒவ்வொரு மனிதனும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்,வேலைக்குப் போக வேண்டும், வாழ வேண்டும் என்று நாம் சொன்னால், நாம் சமூகத்தின் எல்லைக்குள் மனிதனை நிறுத்துகிறோம். உயர்ந்த அல்லது பரந்த நிலைக்கு அது உண்மையாகாது.

சமூகக் கடமைகள் பரந்த நிலைக்கு உண்மையில்லை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஞானம் பெரியதானாலும், பலன் நடைமுறையில் சிறியதாக உள்ளது - பிரம்மத்தின் மௌனத்தை அறிந்தாலும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை - என்பதால் முட்டுக்கட்டை போட்டு நெடுநாள் அப்படியேயிருக்க வேண்டி உள்ளது. அதற்குள்ள வழிகளில் ஒன்று, சிறு காரியங்களில் சிறு குறையிருந்தால் அதை நீக்குவது. அதைக் கவனித்து நீக்கினால் அங்குலம் அங்குலமாக வழிவிடும்.

சிறு காரியத்தின் சிறு குறை நீங்கினால்

பிரம்ம ஞானமும் பூர்த்தியாகும்.

 



book | by Dr. Radut