Skip to Content

07.நிலையான நிதர்சனம்

நிலையான நிதர்சனம்

கர்மயோகி


 

அன்னையை சூட்சும உலகில் காண்பது தரிசனம். அத்தரிசனம் இறைவனின் அருள். ஆனால் அது க்ஷணத்தில் மறையும். அதன் பிறகு இந்த ஜன்மத்தில் அது கிடைப்பது அரிது. நிலையாக அத்தரிசனம் கிடைக்கப் பெறுவது அன்னை நிதர்சனமாவதாகும்.

மனம், உயிர், உடல் கரணங்களாகும். ஆன்மாவும் அவற்றைப் போன்ற ஒரு கரணம் என்றாலும் ஆன்மா உயர்ந்தது; கரணங்கள் பகுதி. கரணங்கள் சேர்ந்த முழுமை ஜீவன். கரணங்கள் பெற்ற தரிசனம் நிலைக்காது. ஜீவன் பெற்றது நிலையானது.

அதைப் பெறும் வழியொன்று உண்டா?

வழிகள் பல. வழிகள் உள. பெறும் அம்சம் பெரியது.

வழியில்லாமலில்லை.

மனமில்லாமலிருப்பதுண்டு.

பொதுவாக நம்மைப் போன்றவர்கட்கு மன வளர்ச்சியிருப்பதில்லை.

அறிவு அனைவருக்கும் உண்டு. புத்தி அறிவைவிடப் பெரியது. அறிவு விபரங்களையறிவது, புத்தி விபரங்கட்குப் பின்னுள்ள விஷயத்தையறிவது. இவையிரண்டும் பெரியவை. இவை மனமாகா. இவை மனத்தின் பகுதிகள். அறிவும், புத்தியும் அளவுகடந்து வளர்ந்து, செறிந்து, முதிர்ந்த பின் எழுவது மனம். மனத்தைப் பெற்றவரை சிந்தனையாளன் என்பர். அது மேல்நாடுகளிலும் அதிகமில்லை. நம் நாட்டில் ஆன்மீக வளர்ச்சி, சாஸ்திர வல்லுனர் போன்றவரே பெற்றுள்ளனர். பொதுவாக நம் போன்றவர் பெற்றது அறிவு அல்லது புத்தி. சமூகத்தில் இவையுள்ளவரை அனைவரும் அறிவர். பார்த்தால் அறிவாளி, புத்திசாலி எனத் தெரியும். அவர்கள் சிறுபான்மையோர். பெரும்பான்மையோர் உணர்ச்சிவசப்பட்டவர். உணர்ந்து காரியங்களைச் செய்பவர். இவர்கள் சிந்திக்கமாட்டார்கள். எடுத்தவுடன் உணர்ச்சிவசப்படுவர். அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்ட உடன் இப்படிப்பட்டவர் கண் கலங்கும், நெஞ்சு நிறையும், உடல் புல்லரிக்கும், நெஞ்சு நெகிழும். அப்படிப்பட்டவர் தரிசனம் பெறுவர்.

அவர்கள் சூட்சுமமானவர். அடிக்கடி கனவில் அன்னை வருவார், படம் உயிருடனிருக்கும், அழைத்தால் அன்னை வருவார், பிரார்த்தனை லிக்கும், பிரார்த்திக்காமலேயே வேண்டியது நடக்கும். இவர்கள் ஆழ்ந்த பக்தர்கள். அவசியமானது ஒன்றுண்டானால், இப்படிப்பட்டவர் பிரார்த்தனை ஒரு முறையும் தவறாது. இவை முதல் 6 மாதம், ஒரு வருஷம் சிறப்பாக இருக்கும்; பிறகு அழியாது. அது கொடுத்த நம்பிக்கை அழியாது. ஆனால் ஆரம்பத்திலிருந்த நெகிழ்வு, தீவிரம், தரிசனம் குறையும். சிறப்புக் குறையும், நம்பிக்கை அழியாது. மனம் பழைய நெகிழ்ச்சியை நினைத்து ஏங்கும். இது தரிசனமானாலும் நிலையற்றது.

அறிவாளிக்கும், புத்திசாலிக்கும் நெகிழ்ச்சி அதிகமாக இருக்காது. அவனுக்கு யோசனை பிறக்கும். அன்னையை அறிந்தபின் மனம் தெளிவாக அன்னையை ஏற்கும். அது நிலையானது. எனினும் நெகிழ்ச்சி,தரிசனம் அவர்கட்கில்லை. மனம் ஏற்றதால் அது லேசில் மாறாது.நம்பிக்கை நீடிக்கும். உணர்ச்சிவசப்பட்ட உத்தமர் பெற்ற நிறைவோ,நெகிழ்ச்சியோ, தரிசனமோ இவர்கட்கில்லை. ஏதோ ஒரு சமயம் கிடைக்கும். இவர்கள் பெற்ற அறிவு உயர்வுடையதானாலும், நெஞ்சு நிறையும் நிதர்சனம் இவர் அறியாதது.

ஆத்ம விழிப்பு:

மனம் விழிப்பது - அன்னையை அறிவது - தெளிவானது,

நிலையானது. ஆனால் உணர்ச்சிமயமான சிறப்பும் நிறைவும் உடையது

அன்று. உணர்ச்சி விழிப்பது உடனே பலிப்பது; நிறைவானது; சிறப்பானது;

நெகிழ்வானது. ஆனால் அதன் உயர்வு நாளடைவில் மங்கும். ஆத்ம விழிப்பு அதி உயர்வானது. நிஷ்டையில்மட்டும் கிட்டுவது. நிஷ்டைக்கு அது நிலையானது; விழிப்பில் நாம் அறிய முடியாதது. அன்னை வாழ்வில் நிதர்சனமான தெய்வம். நிஷ்டையில் மட்டும் பெறும் விழிப்பு அன்னையை அடையப் போதாது. வாழ்வில், அதாவது விழிப்பில் பெறும் ஆத்ம விழிப்பே அன்னையை அடைய உதவும். பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆத்மாவுக்கு இரண்டு அம்சங்களுண்டு என்கிறார். நிஷ்டையில் காணும் ஆத்மா சாட்சி புருஷன், செயலற்றது. வாழ்வில் காணும் ஆத்மா வளரும் ஆத்மா என்கிறார்.

. செயலில் வெளிப்படும் ஆத்மா நிலையான நிதர்சனமாகும்.

. அது பகவான் அலிப்பூரில் பெற்ற நாராயண தரிசனமாகும்.

. ஒரு முறை அதைப் பெற்றால், அது நம்மை விட்டகலாது. நினைத்து அழைத்தால் அது நிலையாகப் பின்னணியிலிருப்பது தெரியும்.அழைப்பை ஏற்று வெளிவரும்.

இக்கட்டுரை அதைப் பெறும் வழிகளைக் கூற முயல்கிறது. அது அறிவாளிக்கும், உணர்ச்சிவசப்பட்டவனுக்கும் உண்டு. அதையும் கடந்து உடலால் மட்டும் வாழும் உழைப்பாளிக்கும் உண்டு.

. எவருக்கும் எதுவுமில்லை இல்லையெனக் கூறாத யோகம் இது என்பதால் வழிகள் பல உள.

. தன்மைக்கேற்றவாறு வழி மாறும்.

. நம் நிலைக்குரிய வழியை ஏற்கும் மனம் உடையவருக்கு ஒன்று பத்தாகும், நூறாகும் நிலையுண்டு.

முதலில் பெரும்பான்மையான உணர்ச்சிவசப்பட்டவரைக் காண்போம்.இவர்கள் அன்னையைக் கேட்டறிந்தமாத்திரம் அழைப்பின்றி அன்னை இவர் வாழ்வில் செயல்படுவதால் இவர்கட்கு, கேள்வி என்பதே எழுவதில்லை.இது ஆனந்தமான அகநிலை என்பதால், இம்மனநிலையில் இவர்களால் எந்தத் தத்துவத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொள்ள முடியாது. "எனக்கென்ன குறை, எது இல்லை எனக்கு, ஏன் இந்த தத்துவமெல்லாம்' என மனம் கருதும். கொஞ்ச நாள் கழித்து ஆரம்ப உற்சாகம் வாடி வடிந்த பின்னரே இவர்களால் காது கொடுத்து வழிகளையும், முறைகளையும், தத்துவங்களையும் கேட்டுக் கொள்ள முடியும். அந்நிலையில் நான் கூறுவது விளங்கும். இவர்கட்குரிய முறை கீதையில் விளக்கமாக உள்ளது. பலன் கருதாமல் வேலை செய்வது -நிஷ்காம்ய கர்மம் - சர்வதர்மத்தையும் சரணம் செய்வது. அதைச் செய்தவர் மோட்சம் பெறுவார். நாம் தேடுவது மோட்சமன்று; பூலோகச் சுவர்க்கம். அதனால் நாம் கையாளும் முறை கீதையினுடைய முறையானாலும், சற்று மாறுபட்டிருக்கும். கீதையின் முறை பிரம்மத்தை நாம் அடைய வேண்டும். நமக்கு பிரம்மம் நம் செயலிலும், வாழ்விலும் மலர வேண்டும். நாம் பிரம்மத்தை அடைவது மோட்சம். அது நமக்கு கவர்னர் விருந்திற்கு அழைக்கும் அழைப்புப் போன்றது. பிரம்மம் நம் வாழ்வில் மலர்வது கவர்னர் நம் வீட்டிற்கு வருவது போன்றது. நம் செயலில் பிரம்மம் மலர்வது கவர்னர் நம் வீட்டில் நமக்குச் சமையல் செய்து சாப்பாடு போடுவது போன்றது. இதைச் சாதிக்கும் முறைகளை பகவான் சமர்ப்பணம், சரணாகதி எனக் கூறுகிறார். அவை யோகத்திற்குரியவை; கடினமானவை. அவற்றை எளிமையாக்க முடியாது.நம் வாழ்வையொட்டி வேறு வகைகளில் கூறலாம்:

. மோட்சம் பெறுவதைவிட அகந்தையைக் களைவது கடினம்.

. தெய்வங்கள் பெற்ற ஞானத்துடன், அஞ்ஞானமும் கலந்திருக்கும்.

. முற்றும் துறந்த முனிவரையும், நேரம் வந்தால் காமக் குரோத லோப மோகங்கள் பாதிக்கும்.

. அவதாரப் புருஷனும் கர்மத்திலிருந்து தப்ப முடியாது.

. கிருஷ்ண பரமாத்மாவும் போரில் வெற்றி பெற பொய்யைக் கையாள வேண்டியிருந்தது.

. தெய்வமான நாரதர் கலகப் பிரியர்.

. வயோதிகமான கௌதமரும் அகல்யையை மணக்க நேரிட்டது.

. மோட்சம் பெறுவதைவிட மெய்யைக் கடைப்பிடிப்பது கடினம்.

மெய், சத்தியம் என்பது ஆன்மா என்ற அகத்தின் புறம். மெய்யைக் கடைப்பிடித்தால் சத்தியத்தின் நிலை ஆன்மாவின் புறமாகும்.புறத்தினின்று அகத்தை அடைந்தால் ஆன்மாவையடையலாம். அதுவும்

மோட்சமாகும். திருவுருமாற்றமாகாது. வளரும் ஆன்மா நம் வாழ்வில்,செயல் செயல்படுவதே திருவுருமாற்றமாகும். சர்வதர்மத்தையும் தியாகம் செய்து பெறும் மோட்சப் பாதையினின்று திருவுருமாற்றத்தை எப்படியடைவது? வாழ்வில் எப்படி ஆன்மாவை மலரச் செய்வது? செய்ததை எப்படி அறிவது?வாழ்வில் வளரும் ஆன்மா மலர்ந்தால் உலகம் நம் பார்வையில்

மாறும். அவ்வாழ்வில்,

. எதிரி நண்பனாகத் தோன்றுவான்.

. பாவமும், புண்ணியமும் ஒன்றாகத் தோன்றும்.

. அனைத்தும் இறைவன் செயல் என நாமறிவோம்.

கீதை கூறும் நிஷ்காம்ய கர்மம் விரதம். நிஷ்காம்ய கர்மம் பூர்த்தி- யானாலும் அதனடியில் ஓரளவு பொய்யிருக்க முடியும். அதனால்,

நம் மனத்திலுள்ள பொய்யை நாம் அறிந்து

களைய முயலும் பாதை இதற்கு உதவும்.

உதாரணமாக வீண் வம்பு பேசுபவர் ஒருவர் வருகிறார். அவரிடமிருந்து தப்பிக்க "எனக்கு வேலையிருக்கிறது' எனக் கூறுகிறோம். அது பொய். ஆனால் அது விடுதலை தருகிறது. அவரிடம் எப்படி மெய் சொல்வது? நீங்கள் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லைஎன எப்படிக் கூறுவது? அதைக் கூறாமல், "எனக்குப் பொய் சொல்ல முடியாது' என்று முடிவு செய்தவுடன், அது சத்தியத்தை அழைப்பதாகும். சத்தியம் மேலே எழுந்து வரும். அது சூழலைக் கனக்கச் செய்யும். கனத்த சூழல்,நிலைமையை மாற்றும். அவரை அவர் வீட்டார் தேடி வருவர். தானே அவர் போய்விடுவார். நமக்குப் பொய் சொல்லும் சந்தர்ப்பம் போய்விடும்.இது அரிச்சந்திரனாவது. நமது அன்றாட நிகழ்ச்சிகளில் இதைப் பொருத்தி 50 வகைகளாகக் கூறினால் புரியும். புரிவதால் எளிதில் செய்ய முடியாது. செய்தால் நிலையான தரிசனம் நிதர்சனமாகும்.மனவளர்ச்சியுள்ளவர் எப்படி இதைச் சாதிக்கலாம் என முதல் காண்பது உதவும்.

. மனம் அளவுள்ளது. அதனால் அளவைக் கடக்க வேண்டும்.

மனம் ஒரு புறம் மட்டும் காணும்.... இருபுறமும் காண முயல வேண்டும்.

மனம் ஓடும். எனவே ஓட்டத்தை நிறுத்தி அமைதியை நாட வேண்டும்.

மனம் சிந்தனை செய்யும். சிந்தனை நின்று மௌனம் எழ வேண்டும்.

மனம் நினைவுள்ளது. நினைவழியும் அளவு பரவசமடைய வேண்டும்.

அளவைக் கடந்து, இருபுறமும் காண முயன்று, ஓடும் எண்ணம் நின்று அமைதியுற்று, சிந்தனை மௌனமாக மாறினால் நினைவு நம்மை விட்டகன்று பரமனையடைந்து பரவசமாகி மெய் மறப்பது சமர்ப்பணத்திற்கு உறுதுணையான முதற்படி.

. மேல்மனத்தில் மனத்துடன் காலமும், அகந்தையும், சிறியதும் உண்டு.

மனத்தை வென்றதைப்போல் அவற்றையும் தாண்டி வருதல் அவசியம்.

காலம் நிகழ்ச்சிகள்மூலம் அடுக்கடுக்காய் நகரும்.கடந்ததை நினைவுபடுத்தினால் நாம் காலத்திற்கு அதிகமாகக் கட்டுப்படுவோம்.

எதிர்காலத்தை எதிர்நோக்கினால் அது எதிர்பார்ப்பாகும்.

எதிர்பார்த்தால் நம்பிக்கை அழியும்.

கடந்ததைக் கருதாமல், வருவதை நினைக்காமல், எதிர்பார்ப்புக்கு இடம் தாராமல், உள்ளதை உன்னிப்பாகக் கருதினால் - நிகழ் காலத்தில் தன்னையிழந்தால் - செய்வது சிறப்படைந்து கருமத்தில் கருத்து ஊன்றி பல மணி நேரம், சில நிமிஷங்களாக ஓடி மறையும்.

இது ஓரளவு காலத்தை வெல்ல உதவும்.

. அகந்தையை நாம் அறிவோம். அது சுயநலமானது.

சுயநலம் தன்னை நினைக்கும், தன்னை மட்டும் நினைக்கும் -

அகந்தையழிய பிறரை நினைக்க வேண்டும், பிறரை மட்டும் நினைக்க வேண்டும், தன்னை நினைக்கக் கூடாது.

தன் எண்ணம் மட்டுமே சரி என்பதை மாற்றி பிறர் கோணத்தில் விஷயங்களைக் கருத வேண்டும்.

மனிதனுக்கு தன் உணர்ச்சி தெரியும்; பிறர் உணர்வதை அறியும் நிலை அவனுக்கில்லை. உணர முடியாவிட்டால் நினைக்க முடியும்.

பிறர் நிலையில் தன்னை வைத்து நினைத்துப் பார்ப்பது சுயநலத்தைக் களைய உதவும்.

சுயநலம் குறுகிய மனத்தால் செயல்படும் - மனம் பரந்து விரிய வேண்டும்.

சுயநலம் பிறரழிய விழையும் - பிறர் வாழ விழையும் மனம் நல்லது.

கெட்ட எண்ணம் சுயநலத்துடையது - நல்லெண்ணத்தைப் போற்ற வேண்டும்.

ஆசை, அதிகாரம் சுயநலம் - பணிவும், பற்றறுத்தலும் பாராட்டுதலுக்கு உரியன.

சந்தேகம் சுயநலம் - நம்பிக்கை அதற்கெதிரானது.

சோம்பேறித்தனம் சுயநலமானது - சுறுசுறுப்பு அதை அழிக்கும்.

தமஸ் உடலின் சுயநலம் - தீவிரச் செயல் நல்லது.

அபிப்பிராயம் நம்முடையது - கருத்து பொதுவானது.

மனம் சிந்திக்கும் பழக்கமுடையது - அப்பாதையினின்று விலகினால் சிந்தனை வேகம் குறைந்து மௌனத்தின் சாயல்பட்டு அறிவு தீட்சண்யம் பெறும்.

மனம் ஏற்பது மகிமையற்றது - ஏற்பதை விலக்கி ஏற்க வேண்டியதை நாட வேண்டும்.

பொறாமை மனிதனுடன் பிறந்தது - அது அழிய வேண்டும்.

அவசரம் அழிந்து பொறுமை பிறப்பது சுயநலமழிவதாகும்.

. கடைசியான அம்சம் சிறியது (finite).

"நான் சிறு குடும்பம் செய்ய முயல்கிறேன்".

"நமக்கு இதற்கு மேல்லை".

"பெரியதற்கு ஆசைப்படுவது பேராசை".

"இருப்பதை விட்டு, பறப்பதை நாடாதே".

"உடையது விளம்பேல்".

"நடப்பதைக் கவனி, நாட்டில் நடப்பனவெல்லாம் நமக்கில்லை".

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு".

"நாமிருப்பது தமிழ்நாடு, அமெரிக்காயில்லை".

"ஆசைக்கும் ஓர் அளவில்லையா?"

என்பது போன்ற ஏராளமான சரியான நல்ல கருத்துகள் நம் வாழ்வை

இதுவரை நடத்திவருகின்றன. இனியும் அவற்றைக் கருதலாம்.கருதாமலிருக்கலாம்.

மாடு மேய்த்தவன், தன் மகன் படிக்க ஆசைப்படுகிறான்.

ஒரு வேளைக்கு மேல் சாப்பிட நினைப்பது தவறு என்றவன் 3 வேளை சாப்பிடுகிறான்.

சினிமா பார்ப்பது சில்லறை மனப்பான்மையென எவரும் நினைப்பது இல்லை.

தினமும் 10 மைல் வேலைக்காக நடந்தவன், ½ மைல் போக பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறான்.

உலகம் மாறிவருகிறது. மாற விரும்புவோர்க்கு வழியுண்டு.

நாடும் மாற்றத்தை சுயநலமாக நாடலாம்; இலட்சியமாகவும் நாடலாம். அதுவே நம் கொள்கை.

மனத்தைக் கடந்து, காலத்தை வென்று, அகந்தையினின்று அகன்று, சிறியது பெரியதாக விழைவது சமர்ப்பணம். சமர்ப்பணம் மேல்மனத்தினின்று உள்மனத்திற்குக் கொண்டு போகும். உள்மனத்தில் சைத்திய வாயிலுண்டு. அதன் வழி அடிமனத்தை சைத்தியத்தை அடைவது நிதர்சனமாகத் தரிசனத்தை நிலையாகப் பெறுவதாகும். இது மனம் வளர்ந்தவர்க்குரிய பாதை.

உணர்ச்சிமயமானவர்க்குரியதென்ன?

. உணர்ச்சிக்கு அறிவில்லை.

அறிவுக்கு ஆத்மா இல்லை.

ஆத்மா அசைவற்றது.

நாம் தேடுவது வளரும் ஆன்மா.

வளரும் ஆன்மாவை அடைவது தவத்தைக் கடந்த நிலை.

அது பெரிய வரப்பிரசாதம். என்றாலும் அது நம் இலட்சியமில்லை.

உணர்ச்சியில் வளரும் ஆன்மாவை நாம் நாடுகிறோம்.

உணர்ச்சியை எட்டிச் சமர்ப்பணம் செய்வது அறிவின் கருத்தைச்

சமர்ப்பணம் செய்வதைவிடச் சிரமம்.

இரண்டையும் ஒன்றில் அடுத்ததைப் பெறுவது நம் குறிக்கோள். அது யோகத்திற்குரியது.

அவ்வளவு பெரிய கட்டுப்பாட்டை நாம் நாட முடியுமா?

அன்னையை அவ்வாழத்தில் ஏற்க முடியும்.

அது முடிந்தால், நம்மால் முடியாதது அன்னையால் முடியும்.

அது நம் எண்ணத்தை நிறைவேற்றும்.

"எனக்கு அறிவுமில்லை, உணர்ச்சியுமில்லை, வேலை மட்டும் செய்வேன். என்னைப் போன்றவர்க்கு எதுவுமில்லையா?' என்பவர் உடலால் உழைப்பவர்.

எவரும் இந்த அருளுக்கு விலக்கில்லை என்பதால் அவருக்கும் உரிய முறையுண்டு.

. உடலால் உழைப்பவன் உழைப்பாளி.

உழைப்புக்குரியது வேலை.

சிறப்பு perfection என்பது யோகத்திற்குரிய இலட்சியம்.

எந்த நிலையில் சிறப்பெய்தினாலும் அது இலட்சியத்தில் முடியும்.

செய்வன திருந்தச் செய் என்பது வழக்கு.

கதவில் தாழிட்டால், தாழ் பாதி விழுந்தாலும் கதவு மூடிக்கொள்ளும்.

தாழ் கடைசிவரை விழுந்தால் சிறப்பு.

அதை சப்தமில்லாமல் போடுவது சிறப்பின் அடுத்த அம்சம்.

எரிச்சலில்லாமல் அவ்வேலையைச் செய்வது பொறுமை.

பொறுமையால் செய்யப்பட்ட வேலை பொறுப்பான வேலை.

பொறுமையும், பொறுப்பும் சிறப்பிற்குரிய அகத்தின் அம்சங்கள்.

பாட்டிலைத் திறந்து எண்ணெயை எடுத்தால் பாதி நேரம் மூடுவதில்லை.

உடனே மூடுவது அவசியம்.

முழுவதும் மூடுவது மூடுவதாகும்.

வேலை முடிந்து வெளியே போகும்பொழுது பாட்டில் மீது எண்ணெய்

இருப்பதை, சோப்புப் போட்டுக் கழுவ நமக்குத் தோன்றுவதே இல்லை.

அது பாட்டிலைப் பயன்படுத்துவதைச் சிறப்பாகச் செய்வதாக அர்த்தம்.

சிறப்பாகச் செய்த வேலை சமர்ப்பணமாகச் செய்த வேலையாகும்.

. "நான் உழைப்பாளி, எனக்கு அறிவோ, உணர்வோயில்லை" எனக் குறைப்படுவதற்குப் பதிலாக, உழைப்புக்குரிய முறைகள் என்னஎன அறிந்து அவற்றைச் சிறப்பாகச் செய்வது மனம் வளர்ந்தவரும், உணர்ச்சி நிறைந்தவரும் பெறும்

ஆன்மீகப் பலனைப் பெற உதவும்.

. கடைக்குப் போக விரும்பினால் நேரம் குறித்து, குறித்த நேரம்

தவறாமல் போவது,

பாத்திரத்தை வைக்கும்பொழுது சத்தமில்லாமல் வைப்பது,

அறுந்துபோன பொத்தானை அதே நிமிஷம் தைப்பது,

பிரித்துப் படித்த புத்தகத்தை மூடி வைப்பது,

மேஜை டிராயருள் பொருள்களை அடுக்கிவைப்பது,

சைக்கிள், மோட்டர்பைக் ஆகியவற்றை சுத்தமாகத் துடைத்து வைப்பது,

ஆபீசில் வேலையை அன்றாடம் முடிப்பது,

செலவுக்குக் கணக்கெழுதுவது,

அழுக்குத் துணியையும், மடித்து, திருப்பிப் (ண்ய்ள்ண்க்ங் ர்ன்ற்) போடுவது,

கதவை, சத்தமின்றி சார்த்துவது,

சுத்தத்துடன், ஒழுங்கையும் ஏற்பது,

போன்ற ஆயிரம் சிறு கடமைகள் செய்வன திருந்தச் செய்வதாகும்.

. உழைப்பாளி வேலையைச் சிறப்பாகச் செய்வது வேலை தன் பாஷையில் காட்டும்.

கையலம்புமிடம் சுத்தமானால், தண்ணீர் தட்டுப்பாடிருக்காது.

நோட்டு, புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டால், வேலையில் பிரமோஷன் வரும்.

நம்மீது பிறர் குறை சொன்னால், நாம் செய்யும் வேலையில் குறை உள்ளது எனப் பொருள்.

நாம் கையாளும் பொருள்கள் பெருகுவது வேலை சரி எனப் பொருள்.

வேலை உயர்ந்த முறையில் சரியானால், நாம் கையாளும் பொருள்களின் தரம் உயர்ந்து நம்மை நாடும்.

டி.வி., கலர் டி.வி.யாகும்.

வேலையின் தரம் தானே தன்னைக் காட்டிக் கொண்டபடியிருக்கும்.

அதற்கு குறைவிருக்காது.

தேடி வருவது தெய்வம் தருவது.

நாடிப் போவது நலம் தருவதில்லை,

என்ற சொற்கள் இதுவரை கூறியவற்றைச் சுருக்கிச் சொல்வதாகும்.

. தத்துவம் பேசாமல், நடைமுறையை அறிய ஆவல்.

உயர்ந்தவர்க்கு உரியதை எனக்குரியவாறு கூற வேண்டும்.

ஆண்டவனை அடைவதைவிட வாழ்வை முறையாக நடத்த வேண்டும்.

நடக்காத இலட்சியங்களை விட்டு, நடக்கும் காரியங்களை எப்படிச் செய்வது?

வாயாடி மனைவியை வாழ வைப்பது எப்படி?

குடிகாரக் கணவனை குடும்பம் செய்ய வைக்க முடியுமா?

பாடம் வாராத மகளை, விரும்பிப் பள்ளிக்குப் போக வைக்க வழி உண்டா?

எளியவனுக்கு ஏற்றம் பெறும் வழி ஏதாவதுண்டா?

யாரோ கண்டுபிடித்த டி.வி.யை நான் பார்த்து மகிழ்வதுபோல்

மகாத்மாக்கள் செய்த புண்ணியத்தால் என் வாழ்வு மலருமா? மணம் வீசுமா? எனக் கேட்பவருண்டு.

கேட்க நினைத்து, கேட்காதவருண்டு.

எந்தப் பிரார்த்தனையையும் நிறைவேற்றும் அன்னை பணத்தை மட்டும்

அளவோடு தருவது ஏன் எனக் கேட்பவருண்டு.

. அவர்கள் அனைவருக்கும், "அத்தனையும் உங்களுக்கும் உண்டு" என்று கூறும் பதிலின் பல அம்சங்கள் - பொதுவானவை - பொதுவானவற்றை

சிறப்பாகச் செய்வது முழுப்பலன் தரும்.

அது யோகத்தில் நிலையான தரிசனத்தை நிதர்சனமாக்கும்.

வாழ்வில் சிறப்பின் அம்சங்களைச் சிறப்பாக நிரப்பும்.

அதற்குரிய ஒரு மந்திரத்தைப் பலவாறு கூறலாம்:

1. முடிந்ததை முழுமையாகக் குறையின்றிச் செய்வது.

2. பிறர் வாழ மனம் பதைபதைப்பது.

3. பிறர் கோணத்தில் எதையும் அறிய முயல்வது.

4. இடைவிடாத அன்னை நினைவு இனிப்பது.

5. கடமையைக் கடந்து கருத்தை அன்னையால் நிரப்புவது.

6. பிறருக்கெல்லாம் அதிர்ஷ்டம் வந்தபின் எனக்கு வரட்டும் எனக் கூறுவது.

7. உலகம் அன்னையை அறிய ஆர்வம் கொள்வது.

8. பிரச்சினையைப் பொருட்படுத்தாத மனப்பான்மை.

9. அடக்கத்தின் உயர்வை ஆன்மாவில் போற்றுவது.

10. தேடி வருவதைப் பாராட்டிப் போற்றி ஏற்பது.

 தொடரும்...

 ****


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு மேதை உலகம் கண்டிராததைச் சாதிக்க வழி கண்டுபிடித்-தால், அதை நம்பமாட்டார்கள். அல்லது தந்திரம் என்பார்கள்.இரண்டும் இல்லை. சாதனை மிகக் கடினம். ஆனால் முடியும்.உள்மனத்தில் சைத்தியப்புருஷன் உறைவதைக் காணுதல் பூரண யோகப் பாதை. அது போன்ற யுகஇரகஸ்யம் அது.

. சைத்தியப்புருஷன் யுகஇரகஸ்யம்.

. சைத்தியம் யுகதர்மம்.


 

 



book | by Dr. Radut