Skip to Content

08.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஆதியும் அந்தமுமாய், அன்னையெனும் பேரொளியாய்,

கோதிலா அமுதமுமாய், அவதரித்தாய் பூமிதன்னில்!

தீதிலா மனத்தினராய், மாதவிப் புன்னை மலரொடு,

தாதவிழ் நாண் மலர்ச் சின்னம், புனைந்திடுவார்*

நெஞ்சம் போல், நெகிழ்ந்து நானும் தொழுதேத்துகின்றேன்!

சிந்தனையில் நின்னையல்லால், வேறு தெய்வமும் நினைத்தேன் அல்லேன்!

நொடிந்தவன் தன்னை, முடியுமா மீள்வதற்கென,

இடிந்த மனத்தினானை, எழுச்சியுற நிற்கவைத்தாய்!

போயின துன்பங்கள், புரிந்தன புதுவழிகள்,

பேதலித்த மனத்தில் பேதமையையும் நீக்கினாய்!

சாதனையும் சேர்த்திட்டாய், இங்கே என் வேதனையும் போக்கினாய்!

நன்றியை, காணிக்கை ஆக்கினேன் அன்னையே,

நன்று என ஏற்பாயோ! ஆதியே அருளமுதே!

நன்றென்றும் தீதென்றும் இல்லா அன்னை நீ, நன்றியுடன்

என்றென்றும், உன்னைத் தொழுவார்க்கு குறையொன்றும்

இல்லை, உயர்வடைவார் திண்ணம்!

வாயுரைக்க வல்லேன் அல்லேன், வாழ்வு தந்த அன்னையே!

****

நந்தா விளக்கின் சுடரனைய, கோணாதகோல் கொம்பன்ன,

சிந்தா நினைவன்ன குவிந்த மனத்தினர், தெளிந்த சிந்தையர்,

கண்டனர் யோகியர்! அடைந்தனர் ஆனந்தம்!

மலர்ந்தது ஆன்மா! பகர்ந்தன பனுவல்கள்!

நன்றே தந்திடுவார் பரிசொன்று! அன்னை! பண்ணார் புன்சிரிப்பை!

அன்றே பொழிந்திடுவார் அருள் மழையை, அற்புதம் என்று அறிவாரோ!

தேனார் இனிய அமுத மொழிகள், ஞானார்ந்த அருளுரைகள்,

தானாய் உணர்வால் உந்துதலால், உண்மையாய் ஏற்றவர்க்கு,

தோன்றிடுவார் ஆதி பராசக்தி! வெண்சுடராய் அகத்திலொரு காட்சியதாய்!

சோதியாய் நின்றதொரு சுடர் ஒளியாய், உள்ளொளி

ஓங்கி வளர, உலப்பிலா ஆனந்தமாய், பொங்கி வரும்

இன்ப வெள்ளத்தை, யாரே விண்டுரைக்கவல்லார்!

அகம் மகிழ்ந்து நெகிழ்ந்துருக, அருள் பெருகும் பேரின்பம்

உய்யும் வகையில் அளிப்பார், அன்னை உவந்து!!

அன்னை என்பது யார்?

அன்னை என்பதோர் சக்தி, அற்புதமான சிருஷ்டியின் சக்தி!

இடையறாது இயங்கும் சக்தி, இனிமையான தெய்வ சக்தி!

அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தி, வாழ்வின் சிக்கலை அவிழ்க்கும் சக்தி!

ஆர்வமும் அழைப்பும் சேர்ந்திட்டால், விரைந்து செயல்படும் அன்னை சக்தி!

மனிதனை நாடி வருவது அன்னை சக்தி!

சோதனை செய்வதில்லை அன்னை சக்தி!

அன்னை சக்தி, சத்தியத்தின் சக்தி, ஆனந்தம் கூட்டும் ஆன்ம சக்தி!

விண்ணுலக தெய்வங்களுக்கு, தாய் ஆவார் அன்னை!

வானவரும் காண்பரிய, வானுலகுக்கும் மேலாய, சத்தியலோக

அவதாரம், அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் என அறிந்து கொண்டேன்

M. மணிவேல்

****

___________________________________________________________________
* சின்னம் புனைந்திடுவார் - அன்னை, பகவான் சின்னம் தியான மையத்தில் வண்ணமலர்களால் அடுக்கி வைக்கும் அற்புதக்கலை.
_____________________________________________________________________

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

முழு முயற்சியின் தவம் போன்ற கடுமையை முழு அன்பின் எழுச்சியாகிய நிறைவை அளிப்பது அன்னைக்கு நாம் செய்யும் சரணாகதி.

கடுமையான தவம் இனிமையான நிறைவாகிறது.


 book | by Dr. Radut