Skip to Content

10.மலரும் மணமும்

"அன்னை இலக்கியம்"

மலரும் மணமும் 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)   

மகேஸ்வரி

காயாம் பூ:

     கதவைத் திறந்த ராமபத்ரன் கண்கள் புதியதாகத் தெரிந்த மூன்று ஜோடி செருப்புகளின் மீது பதிந்ததுமனோரஞ்சிதத்தின் முகம் பாறையைப் போன்று இறுகியிருந்ததுஉள்ளிருந்து வந்த தொலைக்காட்சியின் இரைச்சல் வந்திருப்பவர்கள் யாரென்பதைக் கட்டியம் கூறி வரவேற்றது.

     "வாங்க சார், இவ்வளவு நேரமாகிவிட்டதுதினமும் இப்படி வீட்டிற்கு வந்தால் உடம்பு என்னாகும்?'' பரிவுடன் கேட்ட குரலுக்குரியவன் சுந்தரம்.  சுகவாசி. கடவுள் ஒவ்வொருவரையும் படைக்கும்பொழுது அவனுக்கென்று ஒரு தொழிலையும் சேர்த்து படைப்பார்என்று கேள்விப்பட்டிருக்கலாம்.  ஆனால் சுந்தரத்தின் விஷயத்தில் அது பொய்யாகிவிட்டதுஎன்பதுதான் மனோரஞ்சிதம் அறிந்த உண்மைமூன்று கழுதை வயதாகி விட்டதுதிருமணமாகி, இரண்டு குழந்தைகள் பிறந்து, அவர்களும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்ஆனால் இவனுக்கு இன்னும் 'புருஷ இலட்சணம்' இல்லைஅதாவது வேலையில்லாத வெட்டிச் சோம்பேறிஎப்படித்தான் பொழுது போகுமோ தெரியாது.  "தாத்தா கொடுத்த வீடிருக்கிறது, சுகமாகப் படுக்க. மைத்துனன் அனுப்பும் பணமிருக்கிறது, அழகாக உடை உடுத்த.  இனிமேல் எனக்கென்ன கவலை இந்த உலகத்தில்'' என்று சுந்தரம் கேட்கும்பொழுது, யாராவது புதியவர்கள் கேட்டுவிட்டால், அவனுடைய உடையும், பேச்சும் 'ஏதோ பரம்பரை பணக்காரன் போலிருக்கின்றதுவெள்ளி ஸ்பூனுடன் பிறந்தவன்' என்று வைத்துக்கொண்டு பிரமிப்பார்கள். விஷயம் தெரிந்தவர்கள், 'வெத்து வேட்டு, வாய் சவடால், ஊரை ஏமாற்றுகின்றான்இவனுக்கென்று ஓர் ஏமாந்தவன் கிடைத்தான் மாதாமாதம் பணம் அனுப்பி வைக்க. இந்த மாதிரி மைத்துனன் நமக்குக் கிடைக்கவில்லையே' என்று புலம்புவார்கள்எப்படித்தான் 24 மணி நேரத்தை இவன் செலவழிக்கிறான் என்பது பற்றிய சந்தேகம் ராமபத்ரனுக்கு உண்டு.

     ஒரே தங்கை, அதுவும் அப்பா இல்லாமல் அண்ணனால் வளர்க்கப்பட்டவள்சிறு வயதிலிருந்தே ராமபத்ரனுக்குத் தங்கை மீது பிரியம்அவள் கேட்டவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிடுவான்நடுஇரவில் தூக்கத்தில் எழுந்து கலர்சோடா வேண்டுமென்றால்கூட மூன்று மைல் தூரத்திலிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாலுக்குப் போய் வாங்கிக் கொடுப்பான்என்றால் அவனுடைய பிரியத்திற்கு இதைவிடப் பெரிய சான்று ஏதும் இருக்காது அல்லவா!

     அப்படி வளர்த்த தங்கையை வீடு, சொத்து இருக்கின்றது; ஆசிரியர் வேலை செய்துகொண்டிருக்கின்றான்என்று சுந்தரத்திற்குத் திருமணம் செய்துவைத்தான்அத்துடன் பொறுப்பு முடிந்தது என்றிருந்தால் பிரச்சினை எதுவும் வந்திருக்காது. ஆனால் திருமணமான புதிதில் தங்கையைப் பார்க்கச் செல்லும்பொழுதெல்லாம் ராமபத்ரன் துணி, பொருளென கொண்டு செல்வான்தங்கை கையில் பணமும் கொடுப்பான். திருமணமாகாத இளைஞன். செலவுக்கு மீறிய வருமானம். அதனால் எல்லாம் பார்த்து, பார்த்துச் செய்தான்முதலில் எல்லாமே சந்தோஷமாகத்தான் இருந்தது.

     வேறு ஊருக்கு மாற்றல் என்றவுடன் வேலையை இராஜினாமா செய்தான் சுந்தரம்அதிலிருந்துதான் ராமபத்ரனுக்கு பிரச்சினை ஆரம்பம் ஆனது.

     பரிதாபத்தினால் உதவ ஆரம்பித்த ராமபத்ரனுக்கு விருதுபட்டிக்குப் போனதை விலை கொடுத்து வீட்டில் வைத்த கதையாயிற்று.

     "எனக்கென்ன வேலை வேண்டும். எனக்குத்தான் வீடு இருக்கிறது. நிலம் இருக்கிறதேஅதில் வருவதில் நான் ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போடுவேன்'' என்று சுந்தரம் பேச ஆரம்பித்தான். நிலை தெரியாமல் பேசுபவன் மனிதன்என்பதற்கு, சுந்தரம் ஒரு சான்று.

     காலம் தன் விளையாட்டை விளையாட ஆரம்பித்ததுஆண் குழந்தை பிறந்தவுடன் சுந்தரத்திற்குப் பொறுப்பு வந்துவிடுமென அவன் மனைவி எதிர்பார்த்தாள்சுந்தரத்திற்கோ குழந்தையுடன் விளையாடுவது தான் வேலை என்றாகிவிட்டதுஎன்னால் என் மகனைவிட்டு ஒரு நிமிட நேரம் பிரிந்திருக்க முடியாது. என் வேலையே இதுதான்என்று உறுதியாகக் கூறிவிட்டான்.

     ராமபத்ரன் மனைவி மனோரஞ்சிதம். அண்ணன்-தங்கை பாசத்தில் குறுக்கிடாத அண்ணிஆனால் அவளாலும் பொறுக்கமுடியாத நிலை அவளுடைய இரண்டு குழந்தைகள்மூலம் வந்ததுகுழந்தைகள் பிறந்த பின்னர் முழுக்குடும்பம் ராமபத்ரனுக்கு உருவாகிய நிலையிலும் தங்கை குடும்பப் பாரத்தையும் ஏற்கவேண்டும்என்றபொழுது, வருகின்ற வருமானம் கண்ணாமூச்சி விளையாட ஆரம்பித்ததுதராசு பாரம் தாங்காமல் உடையுமோஎன்ற நிலை உருவானது. 

     சுந்தரத்தைக் கூப்பிட்டுப் பேசி பார்த்தான்அவனும் முதலில் ஒரு பத்தாயிரம் இருந்தால் புரட்டி இலட்சம் சம்பாதிப்பேன் என்றான்நம்பினான், கொடுத்தான், கொடுத்துக்கொண்டேயிருந்தான், ராமபத்ரன். அவனின் கடன் சுமைதான் ஏறியதுசுந்தரம் மொத்தமாகவும், மாதாமாதமும் பணத்தைக் கறக்கும் எந்திரமாக மாறியதுதான் மிச்சமாயிற்றுஒரு வியாபாரமன்று, பல வியாபாரங்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் முதல் மட்டும் முழுதாகக் காணாமல் போய்விடும் அதிசய வியாபாரத்தை மட்டுமே சுந்தரம் செய்தான்.

     சுந்தரத்தின் வியாபாரத்தை முழுவதுமாக மூட்டை கட்டி வைத்துவிடச் சொல்ல ராமபத்ரனுக்கு புத்தி வந்தது.

     இப்பொழுதெல்லாம் மாதம் 1ந் தேதியானால் ராமபத்ரன் முதலில் தங்கை வீட்டிற்குப் பணத்தை மணி டிரான்ஸ்பரில் அனுப்பிவிட்டுத் தான் பின் வீட்டிற்குள்ளேயே நுழையவேண்டிய நிலைமைமனோரஞ்சிதம் வாயில்லாபூச்சியல்லஆனாலும் இந்த விஷயத்தில் இராமபத்ரன் மனதில் நுழைய முடியாத நிலை!

     "ஏம்மா, இந்த மாதமாவது அப்பா எனக்கொரு செல்போன் வாங்கி கொடுப்பாரா, இல்லையா'' என்று கனகாம்பரம் கேட்க,

     "அப்பாதானே, சுந்தரம் மாமாவிடம் கேளுஉடனே வாங்கிக்கொடுப்பார்'' எனக் கலாதர் சொல்ல,

     "கலாதர் சொல்வதுதான் சரி, கனகாம்பரம்பேசாமல் சுந்தரம் மாமாவிடம் கேட்டு வாங்கிக்கொள்'' என்றாள் மனோரஞ்சிதம்.

     "சம்பாதிப்பது என் அப்பா! ஆனால்...'' என்ற கனகாம்பரம், "நேற்று ரோஜாம்மா வீட்டில் ஏதோ தீராத பிரச்சினை, தீர்க்கமுடியாத பிரச்சினை அல்ல என்று பேசிக்கொண்டிருந்தார்கள்நம் அப்பாவின் பிரச்சினை 16வருடத்திற்கும் மேலானது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்அப்படி என்றால், இது தீராத பிரச்சினைஎன்று வைத்துக்கொள்ளலாமா!''

     "நீ அவர்களிடமே கேள், ஏதாவது பூ வைக்கலாமாவென்று''.

     "முல்லையக்கா, எங்கள் வீட்டில் மீண்டும் சுந்தரம் மாமா ஆக்ரமிப்பு.  பாவம் அப்பா! முதன்முதலில் அன்னை எங்களுக்கு ஒரு அற்புதத்தைச் செய்தார்அதைப்போல இதிலும் அற்புதத்தைச் செய்யமாட்டாராஎன்று தோன்றுகிறதுஏனக்கா, எத்தனையோ மலர்கள் இருப்பதாகச் சொல்கின்றீர்களே! அற்புதத்திற்கு ஏதாவது மலரை அன்னை சொல்லி இருக்கின்றாரா? ஒன்றுமே செய்யாமல் அதிசயமாக நடக்கவேண்டும்என்று கேட்கவில்லைஅன்னையிடம் நான் பிரார்த்தனை செய்கின்றேன்நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே, பிரச்சினைக்குரியவர்களே பிரார்த்தனை செய்தால் உடனடியாக பலிக்குமென்று. எங்கள் அப்பா நிச்சயம் பிரார்த்திக்கமாட்டார். அவர் மனம் மாறுவதுஎன்பது குதிரைக்கொம்பு கிடைப்பதுபோல நடக்காததுஎங்கம்மா இன்னும் அன்னையைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பவில்லைகலாதர் அவனுக்கு வேண்டிய விஷயங்களை ரோஜாம்மா வீட்டு அன்னையிடம் சொல்லி சாதித்துக் கொள்கிறான். கேட்டால், "அப்பா-மாமா விஷயம் பெரியவர்களுடையது.  அதில் என்னென்ன இருக்கின்றதுஎன்பது நமக்குத் தெரியாததுஅப்பா வாங்கிக்கொடுப்பாரா, பணம் அவரிடம் இருக்கிறதா என்ற கவலையெல்லாம் படுவதை விட்டுவிட்டு, நான் அன்னையிடம் கேட்கின்றேன்; உடனடியாக கிடைக்கின்றது. அப்பாவிடம் கேட்பதற்குப்பதிலாக அன்னையிடம் கேள்இதுதான் புது மந்திரம்'' என தத்துவஞானிபோல பேசுகிறான்.

     "கனகாம்பரம், கலாதர்தான் உண்மையிலேயே அன்னையைப் புரிந்து கொண்டிருக்கிறான். 'மனிதனைக் கேட்காதே; மதரை கேள்' என்பது நமக்கு எந்த விஷயமும் நடப்பதற்கு உதவக்கூடியது. சரணாகதியின் miniatureதான் இதுநம்முடைய egoவை அழிப்பதற்கு இதைவிடச் சிறந்த முறை எதுவும் இல்லையென சொல்லலாம். கலாதர் சிறியவனாக இருந்தாலும் பெரியவர்கள்கூட செய்ய இயலாததை இயல்பாகவே செய்கின்றான்நீயும் இதை ஏற்று உன் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளக் கூடாதா?''

     "மதரிடம்தான் சொல்கிறேன்''.

     "நான் சொல்வது 'மதரிடம் மட்டுமே'. அதுவும் முதலில் Mother First. பிறகுதான் மற்றவையெல்லாம்''.

     "நீங்கள் சொல்வது சரியக்காஎன்னால் முடிந்ததையும் செய்ய நினைக்கிறேன்''.

     "உன்னால் எதுவும் முடியாது என்று "உனக்கே' புரியும்வரையில் முயற்சி செய்கின்றாய்; அதன்பின் அன்னையிடம் கேட்கின்றாய்; அப்படித்தானே?''

     "அக்கா என் பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்கள்''.

     " 'உன்னை' விடாமல் ஒரு வழியும் கிடைக்காது. இது அனைவருமே செய்வதுதான்''.

     "அற்புதமாக நடப்பதற்கு ஏதாவது பூ இருக்கிறதா?''

     "அன்னை செய்வனவெல்லாமே அற்புதமாக மட்டுமே இருக்கும்.என்றாலும் அற்புதம்என்ற பெயரில் ஒரு மலரையும் சொல்லி இருக்கின்றார்கள்அதற்கு தமிழில் 'காயாம் பூ' என்று பெயர். ஆங்கிலத்தில் Ironwood என்றும் சொல்வார்கள். கருநீல நிறத்தில், சிறியதாக, சிறிதளவு மணம் வீசக்கூடிய, கொத்துக் கொத்தாக இருக்கக்கூடிய மலர்தான் அற்புதம். இதனுடைய botanical name Memecyclon tinctorium ஆகும்.

     "அக்கா, இது எங்கே கிடைக்கும்?''

"இப்பொழுதுதானே சொன்னேன். 'மனிதர்களிடம் கேட்காதே, மதரிடம் கேள்' என்று''.

"அற்புத மலரை வைத்தால் அற்புதம் நடக்குமா?''

     "எதையும் எதிர்பார்த்தால் நடக்காது. எதிர்பாராமல் நடப்பதுதான் அற்புதம். அற்புதத்தை நம்புவதைவிட அன்னையை நம்புஅவர் எல்லாவற்றிற்கும் மேல்''.

     மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது, சுந்தரம் குடும்பத்துடன் இங்கு வந்து. இருக்கும் ஒரு பெட்ரூமை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு ராமபத்ரனும், மனோரஞ்சிதமும் ஹாலில் படுத்துக் கொள்கிறார்கள். மனோரஞ்சிதத்திற்கு கீழே படுத்துக்கொண்டால் மூச்சுவிட முடியாது, பாவம். சோபாவில்தான் படுக்கின்றாள்; கழுத்து வலிக்கும்.

     "சார்! சார்! நீங்கள் பணம் கேட்டீர்களே, ஒரு பத்தாயிரம் போதுமா?'' "இல்லை, ஒரு 25,000/- கொடுத்தால் நல்லது. தங்கைப் பையனுக்கு ஹாஸ்டல் பீஸ் கட்டவேண்டும்''.

      "முன்பே நிறைய கடன் இருக்கிறது. இப்பொழுது இவ்வளவு பணம் கேட்கிறீர்கள்நல்ல வேலை, நல்ல சம்பளம்என்று கேள்விப்பட்டேன்இங்கு வந்து part timeவேலையும் செய்கின்றீர்கள். வீட்டிற்கும் வேலை எடுத்துப் போய் செய்துகொடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அப்படி இருக்கும் பொழுது.....

     இப்போதைக்கு 20,000/- வைத்துக்கொள்ளுங்கள்''.

     கண்முன் நீட்டப்பட்ட பணத்தை வெறித்துப்பார்த்த ராமபத்ரன் முதன்முதலாக 'நான் ஏதாவது தவறு செய்கிறேனா' என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டான்.

****

     கடலலைகளையே பார்த்துக்கொண்டிருந்த ராமபத்ரனுக்கு மனம்  கொஞ்சம் நிம்மதியானது. ஓர் அலை வருவதும், அடுத்த அலை அதைவிட வேகமாக வருவதும், முதலலைக்கு வேகம் வருவதும், அதைவிட தூரத்தில் புதியதாக ஓர் அலை வாரிச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டு வருவதும், ஒன்றன்பின் ஒன்றாகக் கரையை கரையிலுள்ள மணலை வாரிச் செல்வதுமாக விளையாட்டு காட்டிக்கொண்டிருப்பதை ரசித்த ராமபத்ரன் தன் வாழ்க்கையை அலைகளுக்கு ஒப்பிட்டுப் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான்
 

     "சார், ரொம்ப நேரமாக அலையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்உங்களை இங்கு பார்த்தபொழுது எனக்கு அதிசயமாக இருந்தது.  நான்தான் தினமும் வந்து அலையை ரசிப்பவன்என்று நினைத்துக் கொண்டிருந்தேன்நீங்கள் எனக்கு இணையாக இருக்கின்றீர்களே! சாரி சார், என்னை அறிமுகப்படுத்தாமலேயே பேசிக்கொண்டிருக்கிறேன். என் பெயர் முகுந்தன்நீங்கள் கனகாம்பரத்தின் அப்பாதானே! கனகாம்பரம் தினமும் எங்கள் வீட்டிற்கு வருவாள்கலாதர் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கள் வீட்டு அன்னை அறைக்கு வந்து வெற்றிச் சிரிப்புடன்தான் வெளியே செல்வான்ஒரே apartmentஇல்தான் இருக்கிறோம்ஆனால் இதுவரையில் உங்களைப் பார்த்துப் பேசியது இல்லை. நான் உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேனா?''

     "இல்லை, இல்லை. நான் எப்பொழுதும் வேலை, வேலையென்று பறப்பவன்ஏதோ இன்று தோன்றியது கடலலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் கவலைகள் மறையுமா என்று! அதுதான்''.

     "ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வாருங்கள்'' என்றழைத்தான்.

     "எந்தக் கவலையாக இருந்தாலும் பேசினால் தீரும் என்பார்கள்'' என்றான் முகுந்தன்.

****

     "அக்கா, இதோ பார்த்தீர்களா! நான் முகுந்தன் சாரிடம் சொல்லி இருந்தேன், அற்புதமலர் வேண்டுமென்றுஅன்னை கொடுத்துவிட்டார்கள்நிச்சயமாக சுந்தரம் மாமா பிரச்சினை தீர்ந்துவிடும்''.

     "உன் நம்பிக்கை பலிக்கவேண்டும், கனகாம்பரம். தினமும் இந்த மலர் கிடைக்குமா?''

     "எனக்கு தெரியாதக்கா. இன்றைக்கு அன்னைக்குச் சார்த்த போகின்றேன்நீங்கள் அன்றைக்குச் சொன்னதுபோல், 'அன்னையே தினமும் இந்த மலரை எனக்குக் கொண்டுவந்து கொடுங்கள்' என பொறுப்பை 'அன்னையிடம்' shift செய்து விடப்போகிறேன்இதுவும் ஒருவித சரணாகதிதானே!''

****

     "அப்பா, இந்தக் கட்டுரையை படிக்கின்றீர்களா?''

     'தீராத பிரச்சினை' கட்டுரையைக் கையில் வாங்கிய ராமபத்ரன் முழுவதுமாகப் படித்துவிட்டு,

     "நடக்கவே நடக்காது என்று பகுத்தறிவுக்கும், நாட்டு வழக்கத்திற்கும், பூரணமாக, நிதர்சனமாகத் தெரிந்தாலும், நம்மிடம் உண்மையிருந்தால், மனதில் சத்தியம் இருந்தால், சந்தர்ப்பத்தின் நிலையை ஒதுக்கிவைத்து விட்டு முயன்று பார்ப்பதில் தவறில்லை'' என்பதை ஒரு முறைக்குப் பல முறை மனதில் பதித்துக்கொண்டான்.

****

     "என்ன சார், இன்றைக்கும் மனதில் கவலையா?''

     "இல்லை முகுந்தன் சார். கனகாம்பரம் சென்ற வாரம் 'தீராத பிரச்சினை' என்ற கட்டுரையைக் கொடுத்தாள். அதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன்''.

     'தவறு என்னுடையது' என்பதில் என் பிரச்சினை அடங்கிவிடுகிறதுஇதை மனத்தில் பல முறை சொல்லி, சொல்லிப் பார்த்ததில் இதிலுள்ள உண்மை தெளிவாக இருக்கிறது. ஆனால், என் தங்கை நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தானே இதைச் செய்தேன்அண்ணன் தங்கைக்கு உதவுவது தவறா?''

     "இதில் ஏதும் தவறு இல்லை. நீங்கள் என்னிடம் சொல்லியதை வைத்துப் பார்த்தால், உங்கள் தங்கையின் கணவர் பொறுப்பில்லாமல், குடும்பத் தலைவர் என்ற நினைவேயில்லாமல் செயல்படுவதற்குக் காரணகர்த்தாவாக நீங்கள் மாறிவிட்டிருக்கிறீர்கள்அங்குதான் பிரச்சினையின் மூலக்கரு உருவாகிறதுதங்கையின் நலன் பாதிக்கப்படுகிறதுதன் கணவருடன் உங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருப்பதில் நிச்சயமாக உங்கள் தங்கை சந்தோஷமாக இருக்கமாட்டாள்கணவன் - தன் கணவன் - தன்னைத் தாங்கவேண்டும் என்றுதான் மனைவி விரும்புவாளேதவிர தன் சகோதரன் தோளில் காலமெல்லாம் சார்ந்திருக்க விரும்பமாட்டாள்திருமணம் என்பதின் உறவுமுறையில் முரண்பாடு ஏற்பட உங்கள் உதவி பயன்பட்டு இருக்கிறதுசிரமம்என்று வருகின்ற சந்தர்ப்பத்தில் உதவலாம். ஆனால்,முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதென்பது பாசத்தின் அடிப்படையில் செய்திருக்கின்ற......''

     "முட்டாள்தனம், அப்படித்தானே முகுந்தன் சார்நீங்கள் புறப்படுங்கள்நான் இன்னும் சிறிது நேரம் இருந்துவிட்டு பின் வருகிறேன்''.

****

     "அண்ணா, நாங்கள் ஊருக்குப் புறப்படுகின்றோம்''.

     "அப்படியா, சந்தோஷம்''.

      "ராமபத்ரன், என்னுடைய தோழன் பழனிசாமியைத் தெரியும் அல்லவா? இந்தத்தேர்தலில் நிற்கப் போகின்றான் கூப்பிடுகின்றான்''.

     'என் மனமாற்றம் இவர்களை ஊருக்குக் கிளப்பிவிட்டிருக்கிறது. முழுவதுமாக என் மனத்துடன் உணர்வும் சேர்ந்து ஒத்துழைத்தால் நல்லது' என்று மனதில் நினைத்த ராமபத்ரன் முகுந்தனிடம் பேச விரும்பினான்.

****

     "அக்கா உங்களுக்குத் தெரியுமா? எங்கள் மாமா நல்வாழ்வுத்துறை அமைச்சரான பழனிசாமிக்கு வலக்கையாக இருக்கிறார். அற்புதமலர் எங்கள் மாமாவிற்கு அந்தஸ்துடன் கூடிய பணம் கிடைக்கத் துணையாக இருந்ததுமுகுந்தன் சாருக்கு நன்றி கூறவேண்டும்என்று எங்கள் அப்பா சொல்கின்றார்எனக்கு காரணம் தெரியவில்லை''.

     "கனகாம்பரம், காரண-காரியத்திற்கு அப்பாற்பட்டவர் அன்னை. யாருக்கு எதையெதை, எப்பொழுது தரவேண்டுமோ அதற்குரியதைத் திட்டம் போட்டுச் செயல்படுத்துவார். நீ அன்னைக்கு நன்றி சொல்'' என்று கூறினாள் ரோஜா. முல்லையும் ஆமோதித்தாள்.

    "ஏன் முல்லை, அந்திமல்லியின் கணவருக்கு எப்படியிருக்கிறது?''

     "இன்றைக்குத்தான் அவர் ஆபீஸுக்குச் சென்றுள்ளார். அந்திமல்லியின் முகம் இப்பொழுதுதான் மலர ஆரம்பித்துள்ளது''.

                                                          ****

     "முல்லை, அவசரமாகப் போகவேண்டும். அவர் ஆபீஸிலிருந்து போன் வந்துள்ளதுஎனக்குத் தனியே போக பயமாக உள்ளது, வருகிறாயா?'' என்று பதட்டமாக அந்திமல்லியின் குரல் கைபேசியில் ஒத்தது.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சுபாவத்தைக் கட்டுப்படுத்துவது பலன் தாராது. சுபாவம்

முழுமையானது. அதைக் கட்டாயப்படுத்தும் எண்ணம் அதன்

சிறுபகுதி. பகுதிகளின் நிர்ப்பந்தத்தை மீறி முழுமை தன்னைத்

தன் நிலைக்குக் கொண்டுவரும்.

பெரியது சிறியதை மீறி நிறையும்.


 


 

 



book | by Dr. Radut