Skip to Content

12.தேடி வந்த தெய்வம்

"அன்னை இலக்கியம்"

தேடி வந்த தெய்வம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

பகல் பொழுதெல்லாம் வேலை செய்வதிலும், வேலைக்காரர்-களுக்கு வழிகாட்டுவதிலும் ஓடிவிடுகிறது. எல்லோரும் சென்றபின் அந்தி நேரம் வந்தால், தனிமை பூதாகரமாய்ப் பயமுறுத்துகிறது.

இளவயதில் கணவர் இறந்துவிட்டார். பதவியும், செல்வாக்கு-மாயிருந்த கணவரின் இழப்பு பேரிடியாய் இறங்கியது. பத்து வயதும்,பன்னிரண்டு வயதுமான பெண்ணும், ஆணும் என இரண்டு குழந்தைகள்.

எப்படி வளர்ப்பது என மலைத்து நின்றபோது இவள் கணவர் வேலை பார்த்த நிறுவனம் இவள் படிப்புக்கு ஏற்ப ஒரு வேலை கொடுத்துதவியது. பெரிய ஆபீஸராய் நிறுவனத்தையே ஆட்சி செய்த கணவர் சென்றபின், அதே இடத்தில் அதைவிடச் சாதாரணமான ஒரு வேலை. என்றாலும், நேர்மையும் திறமையும் கொண்ட கணவர் எல்லோரும் இவளை மரியாதையுடன் நடத்த வைத்திருப்பது பெரிய பாக்யமே.

கடினமாய் உழைத்து இரண்டு குழந்தைகளையும் பெரிய படிப்பு படிக்க வைத்து, அவர்கள் விருப்பம் போல் மணமுடித்து, கடமையை ஓரளவு நிறைவு செய்துவிட்டாள்.

பெண் வெளிநாட்டில் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சிறப்பான வாழ்க்கை வாழ்கிறாள். தன்னை ஆளாக்கிய தாயின் மீது நன்றியும், பாசமும் கொண்டவள். வயதான காலத்தில் தாய் நிம்மதியாய் வாழ வேண்டும் என்று நிறைய பொருளுதவி செய்வாள்.ஆண்டிற்கு ஒரு முறை தவறாது குழந்தைகள், கணவருடன் வந்து ஆதரவாய் இருந்துவிட்டுப் போவாள். மகளும், குழந்தைகளும் சென்றதும் வீடு வெறிச்சோடிவிடும்.

காரணம் இவள் மகன் திருமணத்திற்குப் பிறகு மனைவியுடன் தனியே சென்றவன் ஒரு முறைகூட இவளை வந்து பார்த்ததில்லை.அவன் இருக்குமிடம் தேடி அலைந்து, கண்டுபிடித்து, பாசத்தோடு பார்த்தபோதும் இவளுக்கு வரவேற்பில்லை.

காரணம் கற்பிக்கவும் முடியவில்லை. நல்ல பொருளாதார வசதியுடன் நன்கு வளர்க்கப்பட்ட பிள்ளை, நல்ல படிப்பு, திறமை யாவும் உண்டு. காதலித்த பெண்ணை மணக்கவும் தாய் தடை ஏதும் கூறவில்லை. அவளே நடத்தி வைத்தாள். அவர்களுக்கு மகப்பேறும் இல்லை. பிள்ளை தன்னிடம் இல்லையே என்ற குறை;பிள்ளைக்கு ஒரு குழந்தை பிறந்து அதைக் கொஞ்சி மகிழ வேண்டும் என்ற ஏக்கம், இதைத் தவிர எதுவும் குறையில்லை.

இந்நிலையில் சர்க்கரை வியாதி சிறிது சிறிதாக வளர்ந்து தொல்லை தர ஆரம்பித்துவிட்டது. அடிக்கடி ஏதேனும் கடும் மருத்துவம் மேற்கொள்ளும் நிலை. , இன்னும் இவள் யாரென்றே சொல்லவில்லையல்லவா? கதை இங்குதான் தொடங்குகிறது.

நம் கதாநாயகி "சுசீலா ஆண்ட்டி' என்று அக்கம்பக்கத்தினரால் அழைக்கப்படுபவர். அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர். இவரை ஞானி என்றோ, அஞ்ஞானி என்றோ கூறிவிட முடியாது.பாசம் வரும்போது அஞ்ஞானமும், மற்ற நேரங்களில் ஞானமுமான சராசரி மனுஷிதான். எல்லோரையும் போல் நல்ல, கெட்ட குணங்களின் கலவையால் ஆனவர்தாம். நல்ல குணம், அதாவது இரக்கசுபாவம்,கடவுள்பக்தி, தாராளமனப்பான்மை, சுத்தம், ஒழுங்கைப்பேணுதல், யாவும் இருந்தும் குறைகூறும் சிறியசுபாவத்தால் குடம்பால் துளி விஷம் போல் யாவும் பரிமளிக்காமல் போய்விடுகிறது.

குறைகூறும் சுபாவம் யாவர்க்கும் உண்டு. என்றாலும் குறையை மறைத்து, பாராட்டிப் பேசும் நாகரீகம் இவளுக்கில்லை. இதன் காரணமாய் உறவினர் அதிகம் இவளை நெருங்குவதில்லை. மற்றவர் நிறைவை நேரே புகழும் அதே நேரம், அவர்களிடம் இவளுக்குப் பிடிக்காத குணமிருந்தால் அதை விவரித்துப் பேசுவாள். அது அவர்களுக்குச் செய்யும் நல்லது எனப் பெருமைபட்டுக்கொள்வாள்.உண்மையில் அவர்கள் மனம் புண்படுவதை இவள் உணரமாட்டாள்.

இக்குணம் காரணமாய் இவளுக்கு உதவும் நண்பர்களும் இவள் குணத்தைப் பற்றித் தங்களுக்குள் வருத்தமாய்ப் பேசிக்கொள்வார்கள்.இந்நிலையில் சர்க்கரைவியாதி காரணமாய் கால் புண் ஏற்பட்டு,அறுவை சிகிச்சையினால் மிகவும் பலவீனப்பட்டாள். உடலும், மனமும் சோர்ந்தது.

தன் வயோதிகத்தில் தன் மகன் உடனிருந்து தனக்கு ஆதரவு அளிக்காத ஏக்கம் பெரிதானது. ஒருவேளை மருமகளை குறை கூறியிருந்தாலும், அதற்காக ஈன்றவளை முழுதும் ஒதுக்குவது எப்படி நியாயமாகும். எப்போதேனும் வந்து பார்த்துவிட்டாவது போகக் கூடாதா என்று ஏங்கினாள்.சொல்லப்போனால், பிள்ளைகள் திருமணத்திற்குப்பின் இவள் குடும்பப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டாள். பிள்ளை இவளை வெறுத்தாலும் இவள் பிள்ளையை வெறுத்தொதுக்கவில்லை.மனவமைதியோடு குழந்தைகளை, கடவுள் பொறுப்பில் விட்டுவிட்டு ஆன்மீகம் மேற்கொள்ள ஆதரவான சூழல் இயல்பாகவே அமைந்தது.

மனிதசுபாவம் அதை ஏற்பதில்லை. கஷ்ட, நஷ்டங்கள் வந்து மனம் வெறுப்படைந்தாலும், அமைதியும், ஆனந்தமும் தரும் ஆன்மீகத்தை விரும்புவதில்லை. சுக, துக்கம் நிறைந்த வாழ்வை வாழ்வதே சிறப்பு என்று பேசி மகிழும். இல்லறத்தைத் தூய துறவற நெறியோடு வாழ்ந்தால், துக்கத்தை சுயமாய்த் திருவுருமாற்றும் உபாயம் உண்டு என்பதும் மனிதசுபாவம் ஏற்காதவொன்று. சுசீலா ஆண்ட்டியும் அப்படித்தான். பந்தங்களிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இறைவனை நினைக்க ஏற்பட்ட வாய்ப்பு என்று இதைக் கொள்ள முடியவில்லை. வீட்டில் பூஜை, பஜனை என்று தான் உயர்வாக நம்புவனவற்றையெல்லாம் செய்தாள். தனக்குதவும் ஏழை, எளியவர்க்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தாள். இருந்தாலும் மகனின் ஆதரவு இல்லை என்னும் ஏக்கமே நெஞ்சில் வியாபித்து நின்றது. பெரிய உயர்ந்த பேச்சுக்களைப் பேசி முடித்து, இறுதியில் மகனைப் பற்றிய குறையில் பேச்சை முடிப்பாள்.

இந்நிலையில்தான் சமீபத்தில் அறுவைசிகிச்சை நடந்தது. மகளும் எப்படியோ வந்துவிட்டாள். கிடைத்த குறைந்த நாட்கள் விடுமுறையைத் தாயுடன் இருந்து உதவி, சற்று தேற்றிவிட்டு, பண உதவியும் செய்துவிட்டுப் போனாள். அதற்குமேல் அவள் செய்வதற்கு இல்லை.

யார், யாரோ வந்துதவினர். இவருக்கு ஆறுதல் கூறிய பலரில் ஒருவர் அன்னையன்பர். அன்னையென்னும் அற்புத சக்தியைப் பற்றிக் கூறி, அது பற்றிய சில புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தார். தியான மையமும் செல்லவியலாத இவளை அன்னை தாமாகத் தேடி வந்தார்.

படிக்கப் படிக்க அதில் மனம் ஈடுபட்டு, தன்னைப் பற்றியே நினைக்கும் நினைவு மறந்தது. தனக்குதவ ஆற்றல்மிக்க சக்தி ஒன்று உள்ளது என அதைப் பற்றிக்கொண்டாள். தன் மகன் இருந்து தனக்குச் செய்யக்கூடிய கடமைகளை வலிய வந்து யார், யாரோ செய்தனர். இவள் குணக்குறை கண்டு ஒதுங்குபவர்கூட வலிய வந்து உதவினர். ரிக்ஷாகாரர், பூக்காரர், காய்கறி விற்பவர், மளிகைக் கடைக்காரர் எல்லோருமே வலிய வந்து உதவினர்.

அன்னையின் திருவுருவப் படத்தை பிரதிஷ்டை செய்தவுடன் வீட்டின் சூழலும் சோகத்திலிருந்து அமைதிக்கு மாறியது. கிடைத்தற்கு அரிய பூக்கள் வலிய வந்து கிடைத்தன. வீட்டிற்குள் யார் நுழைந்தாலும் தெய்வீகம் கமழ்வதை உணர்ந்து அனுபவித்தனர்.  குறை கூறக்கூடாது; குறையை நிறைவாக மாற்ற வேண்டும்;குறையைப் புறக்கணித்து, மற்றவரிடம் உள்ள நிறைவை மட்டும் பாராட்டி, நாம் பிறரிடம் காணும் குறை நம்முள் உள்ள குறையின் பிரதிபலிப்பு என்பதை படித்தறிந்து, ஏற்க மறுக்கும் மனத்தோடு போராடி, ஏற்க முயன்று, வெற்றி கண்டாள்.

சதா "அன்னை, அன்னை' என்று பக்தியுடன் அழைக்க ஆரம்பித்தாள். "அன்னையுடன் பேசு. உனக்காக யாவும் அவரே செய்வார்'' என்று அன்பர் கூறிய ஆலோசனை இதமளித்தது.

தனிமையில் அன்னையின் திருவுருவப் படத்தின் முன்னமர்ந்து பேச ஆரம்பித்துவிட்டாள். பதிலுக்கு அன்னை அவளைப் பார்த்து புன்னகைப்பது புரிந்தது, இதமாயிருந்தது. "அன்னையே! நீர் கட்புலனாகாத சூட்சும சக்தியாய் இருப்பின் எனக்கு உம்மை முழுதும் அனுபவிக்க இயலவில்லை. என் அறியாமையைப் பொறுத்துக் கொண்டு, நீர் ஏன் ஒரு மானுட வடிவில் வந்து என்னுடன் தங்கக் கூடாது? தனிமையை நான் மறக்க வேண்டும். என்னுடன் நீர் என் மகனாக, என் மகளாக இருக்க வேண்டும்'' என்று வேண்டினாள்.

திடீரென ஒரு நாள் இவள் மகளைப் போன்ற பிராயமுடையவள் இவள் வீட்டு வாசலில் வந்து காரிலிருந்து இறங்குகிறாள். நல்ல தோற்றப்பொவு, அறிவுச்சுடர் வீசும் அழகிய கண்கள், நெடுநெடு என்று உயரம், வெளிநாட்டவர் போன்ற மேனிநிறம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பூஞ்சிரிப்பு.

கார் வரும் ஒலிகேட்டு, ஒருவேளை மகன்தான் வந்து விட்டானோ என்ற ஆவல் கால்வலியை மறந்து விரைவாகக் கதவைத் திறந்தாள்.

பரவசமூட்டும் அந்தப் பெண் படியேறி வருகிறாள்.அன்னையே வந்து விட்டாரோ என்கிறது உள்ளம். நிச்சயம் இந்தப் பெண்ணை இவளுக்கு இதற்கு முன் பார்த்த நினைவில்லை.ஒருவேளை அக்கம்பக்கத்தினர் (உயர் பதவியினர்) யார் வீட்டிற்கேனும் வந்து, தவறுதலாக இங்கு வந்துவிட்டாளோ? என்று தோன்றியது.

இருந்தாலும் படியேறி வந்தவர்களை வரவேற்பதுதானே மரியாதை. மேலும் இந்தப் பெண்ணைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனவே,

"வாருங்கள், நீங்கள் யாரென்று தெரியவில்லை'' என்று முன்பின் தெரியாத பெண் என்று மரியாதையாகப் பன்மையில் அழைத்தாள்.

ஆனால் அவளோ, "சுசீலா ஆண்ட்டி நீங்கள்தானே?'' என்று நெருங்கிய உரிமையுடன் கேட்டாள்.

அவள் தன்னைத் தேடித்தான் வந்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சி ஒரு புறம்; யாரென்று தெரியாத குழப்பம் ஒரு புறம்.

"ஆமாம், ஆமாம், சுசீலாதான்'' என்றாள்.

"என்னைத் தெரியவில்லையா?'' என்றாள்.

இவளைப் பார்த்தால் மிகவும் வேண்டியவரைப் பார்ப்பது போல் மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் யாரென்றும் தெரியவில்லை.

"தெரியவில்லை'' என்று மிகவும் தயக்கத்துடன் கூறினாள்.

"பரவாயில்லை, ஆண்ட்டி. நீங்கள் என்னைச் சின்னக் குழந்தையாய்ப் பார்த்தது'' என்றாள்.

இவள் சின்னக் குழந்தையாய் இருந்தபோது பார்த்தது எனக்கே நினைவில்லை என்றால், இவளுக்கு எப்படி என்னை நினைவிருக்கும் என்று உள்ளே ஒன்று ஓடியது.

"நீங்கள் கல்கத்தாவில் இருந்தபோது உங்கள் பக்கத்து வீட்டாரிடம் நீங்கள் நெருங்கிப் பழகியது நினைவில்லையா?மனோகரியின் மகள் சாதனாதான் நான்''.

மிகவும் யோசித்தாள். திருமணம் ஆன புதிதில் இவள் கணவருடன் வடநாட்டில் பல ஊர்களில் இருந்திருக்கிறார்கள். எங்குச் சென்றாலும் அக்கம்பக்கத்துக் குழந்தைகளை அழைத்து வந்து வைத்துக்கொள்வாள். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். எங்குச் சென்றாலும் அழைத்துப் போவாள்.விளையாட்டு பொருள், டிரஸ் எல்லாம் வாங்கித் தருவாள். அடுத்தவர் குழந்தை என்றே நினைக்காமல் சொந்தக் குழந்தை போல் பசியறிந்து உணவூட்டி, தாலாட்டித் தூங்க வைப்பாள். அக்கம்பக்கத்தவர் இவளிடம் குழந்தையை விட்டுவிட்டு நிம்மதியாக தம் வேலைகளைப் பார்ப்பதுண்டு. அந்த வகையில் இவளும் ஒரு குழந்தையாக இருக்கலாம். இப்போதெல்லாம் நினைவாற்றல் குறைந்துவிட்டது.எனவே, குறிப்பாகப் பெயர் நினைவில்லை.

"பெயர் நினைவுக்கு வரவில்லை. அதனாலென்ன? நீ நினைவுடன் வந்திருக்கிறாயே, அது போதும்'' என்றாள்.

"எனக்கும் உங்களைத் தெளிவாக அடையாளம் தெரியவில்லை. எனக்கு அப்போது 3 வயது இருக்குமாம். நீங்கள்தான் என்னை அன்புடன் தூக்கி வைத்து கொஞ்சுவீர்களாம். அழகழகாய் புது டிரஸ் வாங்கிப் போட்டு மகிழ்வீர்களாம். நான் அழும் சத்தம் கேட்டால் ஓடி வந்து அணைத்துக்கொள்வீர்களாம். என் பசி நேரம், தூங்கும் நேரம்,யாவும் என் அம்மாவைவிட உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமாம்.அம்மா அடிக்கடி சொல்வாள். உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவல். அந்த ஆவல் இவ்வளவு விரைவில் நிறைவுறும் என்று எதிர்பார்க்கவில்லை'' என்று அன்புடன் கூறிக்கொண்டிருந்தவள்,

சுசீலாவின் முகத்தில் காணும் திகைப்பைக் கண்டு, ", உங்கள் வீட்டை எப்படிக் கண்டுபிடித்தேன் என்று பார்க்கிறீர்களா? அங்கிள் வேலை பார்த்த ஆபீஸில் அவர் உயர் பதவியில் இருந்தாராம். அதன் ஹெட்ஆபீஸ் சென்னை என்று சொல்லியிருக்கிறீர்களாம். அங்கிள் பெயரையும், பதவியையும் சொல்லி அவர் ஆபீஸில் போய் விசாரித்தேன், எல்லா விபரமும் கேட்டறிந்தேன்'' என்றாள்.என்றோ சிறு வயதில் தான் கொஞ்சி மகிழ்ந்த குழந்தை நன்றியோடு தன்னைக் காண வந்தது அவளுக்கு மிகுந்த மகிழ்வு அளித்தது. இப்போதும் அவளுக்குப் பெயர் நினைவில்லை.

"இத்தனை நினைவு வைத்து வந்திருக்கிறாயே. என்னையும் ஒருவர் தேடி வருவாரா? வா, வா'' என்று அன்போடு கையைப் பற்றி அழைத்தாள்.

"நீ எங்கிருந்து வருகிறாய்? உன் பெற்றோர், கணவர், குழந்தை எல்லோரும் எங்கிருக்கிறார்கள்'' என்றாள்.

"இப்போதைக்கு நான் மட்டுமே வந்திருக்கிறேன். இவ்வூருக்கு மாற்றலாகி வந்திருக்கிறேன். பெரிய போஸ்ட். கார் இருக்கிறது.தங்க இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சுசீலா ஆண்ட்டியின் அன்பு அதற்கெல்லாம் ஈடாகுமா?'' என்றாள்.

"பேசாமல் நீ என்னுடன் தங்கிவிடு. பெரிய பங்களா இல்லை என்றாலும், தேவைக்கு இங்கே எல்லா வசதிகளும் உண்டு. நானும் தனியாய் இருக்கிறேன்'' என்றாள்.

"நானும் உங்கள் அன்பிற்குக் கட்டுப்பட்டுத்தான் இங்கு வந்தேன். ஒருவகையில் நான் கடவுள் மாதிரி'' என்றாள் குறும்பாய்.

"மாதிரி என்ன, கடவுளேதான். என் மகளாய், மகனாய் வா என்று இறைவனை வேண்டினேன். உடனே வந்துவிட்டாய்'' என்றாள் சுசீலா.

"டிரைவர், சாமான்களை இறக்கி வைத்துவிடுங்கள். நீங்கள் போகலாம். காலை 10 மணிக்கு வந்தால் போதும்'' என்று காரை அனுப்பிவிட்டாள்.

சிறு வயதில் தன் மகள் பயன்படுத்திய அறையை அவள் வெளிநாடு சென்றதும் சுத்தம் செய்து பயன்படுத்தாது வைத்து இருந்தாள். அன்னையைப் பற்றி படித்துணர்ந்ததும் அந்த அறையை அன்னை அறையாக்கியிருந்தாள். அங்கு அன்னை, ஸ்ரீ அரவிந்தர் திருவுருவப்படம், மலர்த் தட்டுகள், ஊதுபத்தி மணம். அந்த அறையில் சாதனா தங்குவதற்கு ஏற்ப எல்லா வசதிகளும் இருந்தது. இதுவரை அந்த அறையை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டாள். ஆனால் சாதனா அங்கு தங்குவதில் அவள் மனத்தில் தடையேதுமில்லை. அங்கு அன்னைக்கு என்று மெத்தென ஒரு படுக்கையும் வைத்திருந்தாள்.

"இந்த அறை உனக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று ஆர்வத்துடன் கேட்டாள் சுசீலா.

"ஏன் பிடிக்காமல்? நான்தான் உங்கள் கடவுள் என்று சொல்விட்டீர்கள். கடவுளுக்காக அமைத்த இடத்தில் என்னைத் தங்கச் சொல்கிறீர்கள். எனக்குப் பிடிக்காமல் போகுமா, என்ன?'' என்றாள்.

வீடு திடீரென மௌனமான சப்தமாயிற்று. சூழல் கனத்தது.

தொடரும்.....

ஸ்ரீ அரவிந்த சுடர்

சமூகத்தை மனிதன் ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக தனிமனிதனின் தனித்தன்மையை இனி சமூகம் ஏற்க வேண்டும்.


 


 


 


 book | by Dr. Radut