Skip to Content

05.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

                                                          (சென்ற இதழின் தொடர்ச்சி.....)


 

சிறிய வசதிக்கு உலகைப் புரட்டிப் போராடுபவன், பிரம்மாண்டமான

வாய்ப்பைத் தவறவிடுவதை மனதில் கொள்ளமாட்டான்:

. சிறியது கண்ணுக்குத் தெரிகிறது. பெரியது மனத்தில்படவில்லை என்பது நாம் ஏற்கும் விளக்கம்.

. பெருமுயற்சி ஒரு செயல், ஒரு பழக்கம், அது பழகிப் போனது (reflex). அதனால் எண்ணம், உணர்வாகி, செயலாக மாறும் பாதை ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

. பிரம்மாண்டமான வாய்ப்பை மனம் அறிகிறது. ஆனால் செயலுக்குரிய பாதை ஏற்படவில்லை.

. இதிலுள்ள தத்துவம் என்ன?

. மனிதன் தன் அறிவின் உயர்வால், சமாதியில் பிரம்மத்தைச் சச்சிதானந்தம் எனக் கண்டான்.

. பிரம்மம் சச்சிதானந்தமில்லை. பிரம்மம் நமக்குச் சச்சிதானந்தமாகத் தெரிகிறது.

. பிரபஞ்சம் நமக்கு (values) பண்பாக வருகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

. உலகம்என ஒருவர் சொல்வது அவரறிந்த மக்கள், உணர்வு, செயல்கள், நிகழ்ச்சிகளாகும்.

. சச்சிதானந்தத்தைச் சமாதியில் காணலாம், பிரபஞ்சத்தைப் பண்பில் காணலாம், செயலை இதுவரை ஏற்பட்ட பாதையில் காணலாம்.

. மனத்தின் தெளிவு, உணர்வின் உற்சாகம், உடலின் பழக்கமின்றி செயல் நடக்காது. இது மனிதனுக்குப் பழக்கமான செயல்களில் உள்ளன. மனம் மட்டும் அறிந்த செய்தி நடக்காது. மனிதன் நடக்காததைப் புறக்கணித்து நடப்பதைப் பின்பற்றுகிறான்.

. சிறு குழந்தைக்குப் பொம்மை புரியும். புத்தகம் புரியாது. குழந்தை புத்தகத்தை விட்டுப் பொம்மையை நாடுவது இயல்பு.

. பறக்கும் விமானம் நமக்கு மேலே போனாலும் நாம் அதில் ஏற முடியாது. ஓடும் ரயிலிலும் ஏற முடியாது. ஓடும் பஸ்ஸிலும் ஏற முடியாது. நம்மை அவர்கள் ஏற்றிக் கொள்ள விருப்பப்பட்டாலும், நாம் நடந்துதான் போகலாமே தவிர இவற்றுள் ஏற முடியாது.

. பிரம்மம் நம்மைச் சுற்றியிருந்தாலும், நமக்கு சாப்பாடு பிரம்மம் தான் தெரியும். அசல் பிரம்மம் தெரியாது.

. அன்னை என்ற விமானம் நாம் உள்ள இடத்தில் இறங்கி நம்மை அழைக்கிறது. ரயிலாக வந்து ஸ்டேஷனில் நின்று நமக்காகக் காத்திருக்கின்றது. பஸ்ஸாக, காராக நம் வீட்டின் முன் நின்று காத்திருந்தாலும், இவையெல்லாம் நமக்கில்லை எனவும், இவற்றைக் கண்டு பயப்படுவதும், நம்மைப் பிடித்துக் கொண்டு போக வந்ததாகவும் நாம் கருதி விலகுகிறோம்.

. இதில் தத்துவம் ஏதேனும் உண்டா? ஆற்றில் நிறைய வெள்ளம் போனாலும், நாயால் மாடுபோல் குடிக்க முடியாது.

. அருகில் அன்னையிருப்பதோ,

. அன்பாக அழைப்பதோ,

. நமக்காகக் காத்திருப்பதோ முக்கியமில்லை.

. அன்னையை நம்முடன் தொடர்புபடுத்தும் இணைப்பு, கருவி இல்லாமல் - நம்பிக்கை, பக்தி - நம்மால் அன்னையை ஏற்க முடியாது.

. கருவி உள்ளே ஏறிச் செல்லும் படி.

. கையால் பிடித்துக் கொள்ள உதவும் பிடி.

. சத்தியஜீவியம் என்ற கருவியில்லாமல் நிர்விகல்ப சமாதியில் ரிஷிகளால் முழுப்பிரம்மத்தைத் தொட முடியவில்லை.கருவியின்றிக் காரியமில்லை.

தனக்குப் பெருமை வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டவன் தன் SSLC படிப்பை அடுத்தவர் M.A.. படிப்பைவிட உயர்ந்ததாகக் கருதுவான்:

. மனிதன் தன் முயற்சியை முழுவதும் விவரமாக அறிவான்.

. அது பெருமுயற்சி, அதைவிடத் தன்னால் செய்யக் கூடியதில்லை என அறிவான்.

. தமக்குப் பெரிய முயற்சி, அதிகபட்ச முயற்சி என்பதை அனைவருக்கும் பெரியது என நினைப்பான்.

.ஏதாவது காரணம் கற்பிப்பதில் மனிதனுக்கு நிகர் அவனே.

. அதைப்போல் தான் இதுவரை சாதித்ததை உலகில் - அவனுடைய உலகில் - சிகரம் எனக் கருதி, மகிழ்ந்து, போற்றிப் புகழ்ந்து, புளகாங்கிதமடைவான்.

. அதே காரணத்தால் பிறர் சாதனையின் குறை தெரியும்.

. மனிதனுக்கு தன்னம்பிக்கை வாழத் தேவை. அதை அவன் பெறுவது இப்படி.

. எவரைக் கண்டாலும் அவர் குறையை தன் நிறைவுடன் - நிறைவு என இவனே கற்பித்ததுடன் - ஒப்பிட்டு மகிழ்வான்.

. உண்மையில் மனிதனுக்கு ஒரு சிறப்புள்ள நேரம் உண்டு.

. எதுவுமே இல்லாதவன் எல்லாமிருப்பதாக நினைப்பவன் மனிதன்*.தான் பிரம்மம் என்பதை தனக்கே மனிதன் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிது.

. அப்படிப்பட்டவனுக்கு ஒரு விஷயம் - படிப்பு, திறமை, பாட்டு, சிவந்த நிறம், உயரம் - இருந்துவிட்டால் அவன் மனம் அவன் கற்பனையைத் தீவிரமாக நம்பும்.

. மனிதன் பிரம்மத்தை உணர வேண்டும்என்பதை இப்படிப்* பூர்த்தி

செய்துகொள்கிறான்.

. ஓரூரில் ஓர் எலிமெண்டரி பள்ளி. அந்த ஆசிரியர் ஆர்வமாகத் தமிழ் போதிப்பார். அவருடைய பால்ய நண்பர் வக்கீல். .. ஆனார். பிரபல பேச்சாளருமானார். பால்ய நண்பரை மறக்கவில்லை என்பதால் பள்ளி ஆசிரியருக்குப் பெருமை பிடிபடவில்லை. M.P. ஆசிரியர் வீட்டுக்கு வருவார். அவரிடம் படித்த பையன் உள்ளூர் ஹைஸ்கூலில் படிக்கிறான். அங்குள்ள தமிழ் பண்டிட் ஒரு சிறிய மடத்திற்கு அவருடைய சொந்த ஊரில் மடாதிபதி. ஊரில் பெரிய மனிதர். மடாதிபதிக்கு அதிகத் தமிழ்ப் படிப்புண்டு. இவர் சிறந்த ஆசிரியர். இவர் பாடம் நடத்தினால் நேரம் போவது தெரியாது. ஏன் மணியடித்தது என்றிருக்கும். D.E.O இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தால் இங்கிலீஷ் வகுப்பில் ½மணியிருப்பார். மற்ற பாடங்களை 15 நிமிஷம் கவனிப்பார். தமிழ் வகுப்பில் 10 நிமிஷத்திற்கு மேலிருக்கமாட்டார். இந்தப் பள்ளியில் D.E.O வந்தால் பீரியட் முடியும் வரையுமிருப்பார். மேலும் பாடம் நடத்தச் சொல்வது வழக்கம். ஒரு D.E.O . 3 பீரியட் இந்த பண்டிட் பாடத்தை உட்கார்ந்து கேட்பார். பள்ளியில் பண்டிட்டிற்கு ஹெட்மாஸ்டரை விட அதிக மரியாதை.

எலிமெண்டரி பள்ளி ஆசிரியர் ஒரு சமயம் தம் மாணவன் மேற்சொன்ன பள்ளியில் படிப்பவனைப் பார்த்து, "உங்க ஹைஸ்கூலில் தமிழில்லையல்லவா? நம்ம பள்ளிபோல் அங்கு தமிழில்லை" என்றார்.

. மனிதன் தன் பெருமையை தானே கொண்டாடுகிறான்.

. தான் பிரம்மம் என்பதை, சிறியது தனக்கே சொல்லும் பாஷை இது.

. வீட்டு வேலை செய்யும் பெண் அனைவராலும் மக்குப் பட்டம் பெற்றவள். பள்ளிக்கூடம் போகாதவள். "இந்த வீட்டில் எவருக்கும் என் புத்திசாலித்தனத்தைப் பார்க்கும் அளவு திறமையில்லை" என்று பேசுகிறாள்.

3 ஏக்கர் நிலம் உள்ள பழைய பணக்காரன் 300 ஏக்கர் நிலமுள்ளவனை ஏழையாகக் கருதுவான். இன்றைய பணம் பணமில்லை:

. அவன் மனம் அதை நம்பும்.

. நம்புவதால் அவனுக்குத் தெம்புவரும். 3 ஏக்கரில் அவனால் குடும்பம் செய்யமுடியும்.

. இதன் தத்துவத்தின் ஓர் அம்சத்தை ஏற்கனவே கருதினோம். மற்ற அம்சங்களுண்டா?

. சொத்தை இழந்தவன், அந்தஸ்தை இழந்தவன்.

. எதுவும் பதிலுக்குப் பெறாமல் போகாது.

. மனிதன், ஸ்தாபனம், பொருள், என்பவை அழிவதில்லை. அவற்றின் ரூபம் மாறும், குணம் மாறும். அத்துடன் பொதுவாக வளர்ச்சி இருக்கும்.

. வளர்ச்சியற்ற நஷ்டம் உண்டு. அது விதிவிலக்கு.

. சொத்து போனால், அனுபவம், அறிவு, இதுவரை இல்லாத திறமை, பொறுமை வந்திருக்கும். அவற்றை அவன் அறியமாட்டான்.அறிந்தால் அதைப் போற்றமாட்டான்.

. உறவினர்களைத் தொழிலில் சேர்க்கக் கூடாது, நண்பர்களை ஓர் அளவுக்குமேல் நம்பக் கூடாது, நம் கையால் நடக்காதது கூடிவாராது, நம் வாயே நமக்கு எதிரி, அவசரம் கெடுக்கும், ஒரு பொருளைத் தேடிப்போனால், அது நாம் எதிர்பாராத தொந்தரவுடன் வந்து சேரும்எனப் பல அனுபவங்களில் ஒன்றோ, பலவோ வந்திருக்கும்.

. வந்த அனுபவத்தைப் பின்பற்றினால் மின்னல் வேகத்தில் வாழ்வு மாறும்.

. மனிதன் பெற மறுக்கும் அனுபவம் வலிய தொந்தரவாக வந்து சேரும்.

. பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்த மனம் வாராமல் தவிப்பான்.

. மனிதன் ஜடத்திலிருந்து மனத்திற்குப் போக நேரம் வந்தபின்

. ஜடத்தை வலியுறுத்துபவன் மேற்சொன்னபடிப் பேசுவான்.

. ஜடவாழ்வு சந்தர்ப்பம் வந்தபின் வளர மறுப்பதன் வகைகளில்

மேற்சொன்ன பேச்சு ஒன்று.

. இது தவறு எனில் எது சரி?

. இன்றைய பணம் இன்று தேவைப்படும் திறமைக்கு வந்துள்ளது என்பதை அறிந்தால், அந்தத் திறமையைப் பெறமுயன்றால், மற்றவர்களை விட அதிகத் திறமை பெறலாம் - அதற்குப் பதிலாக மேற்சொன்ன அபிப்பிராயம் அவனை ஆக்ரமிக்கிறது.

. அப்படிச் செய்தால் ஜடத்தை வலியுறுத்தாமல் ஜடத்திலிருந்து மனத்திற்குப் போவான், கவர்னர் மாளிகைக்குப் போக புதுடிரஸ் கேட்கமாட்டான்.

. இழந்த சொத்து தந்த அறிவைக் கண்டு, அதைப் பயன்படுத்தும் வகையைக் கண்டுபிடிக்க வேண்டும். நிலமாகச் சொத்தை இழந்து share certificate ஆக சொத்து சேரும் வாய்ப்பு வந்துள்ளது என்பதை உணருதல் அவசியம்.

Ph.D படித்தவன் பெர்னாட்ஷாவைப் படிக்காதவன் என உள்ளூர பெருமிதம் கொள்வான். பத்து முறை தவறு செய்து நஷ்டப்பட்டாலும், பதினோராம் தரம் அதையே உற்சாகமாகச் செய்வான். தனக்கு வந்த v.c.post உடன் உள்ளவர்க்கு அவர்கள் நல்ல குணத்தால் போவதைக் கண்ணால் கண்டாலும், தன் குணக்குறை விளங்காது. அதிர்ஷ்டம் இல்லை எனச் சொல்லிக் கொள்வான்:

. ஏன் மனிதன் இப்படி நடக்கிறான்?

. "பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்". மரியாதை பணத்தையும் கடந்தது, பெருமை மரியாதையிலிருந்து வருவது. மனிதன் பிறந்ததிலிருந்து அவன் தன் ஆதியான இறைவனைத் தேடுகிறான். இறைவனைத் தேட உயர வேண்டும்.

. மனிதன் உள்ளது சமூகம்.

. இங்கே உயரே போனால், இறைவனை நாடுவதாகும்.

. பணம் உயர உதவும் என்பதால் பணம் முக்கியம்.

. மரியாதை பணத்தைவிட உயர்த்தும்.

. பணம் தருவது மரியாதை.

. அதனால் மனிதன் பணத்தைவிட மரியாதையைத் தேடுகிறான்.

. பெருமை மரியாதையை மனம் கொண்டாடுவது.

. பெர்னாட்ஷா உயர்ந்தவர்.

. தன்னை அவருக்குச் சமமாக வைப்பான்.

. அவர் படிக்காத படிப்பைத் தான் படித்திருப்பதால் மனம் சந்தோஷப்படும்.

. உடல் திரும்பத் திரும்பச் செய்யும்.

. திரும்பத் திரும்பச் செய்வதால் அதற்குத் திறமை வரும்.

. திறமை வந்தால் தெம்பு வரும்.

. தெம்பு வருவது உடல், உயிர் பெறுவது.

. உடல் உயிர் பெறுவது உயர்வது.

. தனக்கு வந்தது அடுத்தவருக்குப் போனது, நமக்கில்லாத நல்ல குணம் அவருக்கிருப்பதால் என்று தெரிந்தாலும், அதை மனம் ஏற்றால் அவர் என் கணிப்பில் என்னைவிட உயர்ந்தவராகிவிடுகிறார்.

. அகந்தைக்குத் தனக்கு நிகராக எவரையும் ஏற்க முடியாது. தம்மைவிட உயர்வாக எப்படி அடுத்தவரை நினைக்க முடியும்?

. அதிர்ஷ்டத்தையும், தன் உயர்வுக்கு ஈடாக வைக்க மாட்டான்.

. அதனால் "அவருக்கு அதிர்ஷ்டம்" என்பான்.

. அகந்தை தன் உயர்வைக் கருதாவிட்டால் உயிருடனிருக்க முடியாது என்பதால், எப்பொழுதும் தன் உயர்வை நினைக்கும். அதுவே பெருமை.

. பெருமை என்பது aspiration of the ego, அகந்தையின் ஆர்வம்.

. ஆர்வமில்லாத ஜீவனில்லை.

. உயர்ந்த மரங்கள் ஆர்வமிகுதியால் வானை எட்ட முயல்கின்றன என பகவான் கூறுகிறார்.

. அகந்தையுள்ளவனுக்கு அவன் அகந்தையைச் சுட்டிக்காட்ட இறைவன் அவனுக்குரியதை அடுத்தவனுக்குக் கொடுக்கிறான்.

80ஆம் வயதில் 12 மைல் உடனிருப்பவர் ஓடினாலும் 50ஆம் வயதில் தம்மால் ½ மைல் நடக்க முடியவில்லை என்பதை பழக்கம் என மனம் அறியாது;நல்ல சகுனம் 400 கண்ணில்பட்டாலும், மனத்தில் படாது; தம் கடுமை பிறரைப் பாதிப்பது தெரியாது:

. சிருஷ்டி ஏற்பட்டது Self-Conceptionஆல். தானே பிரம்மம் விரும்பி செய்தது.

. மனித வாழ்வு சிருஷ்டியின் சிறு உருவம். அதனால் மனிதன் தானே விரும்பி ஏற்பதைத் தவிர மற்றபடி கண்ணில் படுவதாலோ, பிறர் சொல்வதாலோ ஏற்கமாட்டான்.

. அப்படி ஏற்காமலிருக்க அறிவு இடம் தரும்.

. எதற்கும் வேறொரு காரணம் கற்பிக்க அறிவு இடம் தரும்.

. "உன் உடம்புக்கு 12 மைல் ஓடுவது ஒத்துக் கொள்ளும். எனக்கு ஒத்துக் கொள்ளாது"என மனம் கூறும்.

. கண்ணில் படுவது, மனத்தில் படாதது மனத்தின் இயல்பு.

. மனம் பார்ப்பவற்றுள் தனக்கு வேண்டியதை வேண்டாததிலிருந்து பிரித்து எடுத்துக்கொள்ளும் இயல்புடையது.

. மனிதன் உணர்வாலானவன். அவன் கடுமை பிறரைப் பாதித்தால் அவனுக்குச் சிரமமில்லை. தனக்குச் சிரமமில்லாதது, தன் மனத்தைத் தொடாது.

. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து மனம் ஏற்பட்ட பொழுது,

. அதன் திறமை முழுமையை ஒரே சமயத்தில் காண இயலாது.

. ஒரே சமயத்தில் காணாவிட்டாலும், மாறி மாறி இருபுறமும் காணவல்லது.

. ஒரு புறம் பார்க்க மனம் மறுப்பதால் அஞ்ஞானம் ஏற்படுகிறது.

. அந்த நேரம் மனம் சத்தியஜீவியத் தொடர்பை இழக்கிறது.

. தான் காண முடிவதைக் காண மறுப்பது அஞ்ஞானம்,

. பிறர் வதைவதைக் கண் பார்த்தாலும், மனம் பாராமலிருப்பது மனத்தின் அஞ்ஞானம்,

. பார்க்காமலிருந்தால் பிறர் வேதனை தெரியாது.

. உண்மையில் மனம் தன் திறமையை ரசிக்கிறது.

. தன் செயல் அடுத்தவரைத் துன்புறுத்துவது தன் திறமை என மனம் கொள்வதால், தன் செயலை ரசிக்க அது பிறரை அதிகமாகத் துன்புறுத்துகிறது.

. உண்மையில் பிறர் வேதனை தெரியாமலில்லை.

. பிறர் படும் வேதனை தன் திறமை என தன்னை இரசிப்பதால் கடுமை செயல்படுகிறது.

. கடுமையானவரை ஏற்கலாம், கடுமையை ரசிப்பவரை என்னால் ஏற்கமுடியாது என்கிறார் அன்னை.

. அவனையும் மறுக்க ஆண்டவனுக்கு உரிமையில்லை போலும்.

. அஞ்ஞானம் உள்ளது. அஞ்ஞானத்தை வளர்ப்பது மீண்டும் பழைய நிலையை வற்புறுத்துவதாகும். அதற்கு இடமில்லை.

பகவான் தருவது உலகில்லாதது; அதைப் பெற நம்பிக்கையோடு நாம் ஆர்வமாகச் செய்ய வேண்டும்;

அதைச் செய்யாவிட்டாலும், கொடுப்பவரையே நம் பங்கையும் சேர்த்துச் செய் எனக் கேட்கக் கூடாது;

அப்படிக் கேட்பது நமக்குப் பலிக்காதுஎன அறிவிப்பதாகும்:

. உலகில் எது முதலில் வந்தாலும் உடனே பரவ முடியாது.

. சைக்கிள் வந்த காலத்தில் அதன் மீது சவாரி செய்பவனைத் தெய்வம் என நினைத்து இது நமக்கில்லை என மனம் விலகிவிடும். இன்று அனைவரும் சைக்கிள் விடுகிறார்கள்.

. உலகில்லாதது நமக்குப் பலிக்காது என்று மனம் நினைப்பது தவறு.

. பகவான் தருவது அதிர்ஷ்டமான அருள், அது நமக்குப் பலிக்கும் என மனம் நம்பவேண்டும்.

. "சைக்கிளை எனக்காக நீங்களே விடுங்கள்",

"மருந்தை எனக்காக டாக்டரே சாப்பிடட்டும்",

"ஆசிரியரே எனக்காகப் பரீட்சை எழுதட்டும்",என நாம் கேட்பதில்லை. கேட்டால் பலன் செய்பவருக்கேயாகும்.நமக்கு வாராது.

. ஏன் அப்படி மனிதன் கேட்கிறான்?

வலிய ஆண்டவன் வருவதால், மனிதன் அப்படிப் பேசுகிறான்.

மனிதனே ஆண்டவனை நாடி வந்தால் அப்படிக் கேட்கமாட்டான்.

மனிதன் ஆண்டவனை நாடிவர நாளாகும், அதைச் சுருக்க வேண்டும்

என ஆண்டவன் தன் இச்சையாகச் செயல்படுவது அருள்.

அருள் வலிய வரும்.

அன்பு வலிய வரும்.

பெறுபவர் நன்றியுடன் பெற்றால் பலனுண்டு.

பெறுபவர் தம் பங்கைச் செய்ய முயன்றால் பலிக்கும்.

நன்றியுடன் பெறுபவருண்டு.

பெற்று தம் பங்கைச் செய்து பலனடைபவருண்டு.

வேண்டாம் எனச் சொல்பவருண்டு.

வேண்டாம் என்பதை மனிதன் "என் பங்கை நீங்களே செய்யுங்கள்" என்கிறான்.

அப்படிச் சொல்வது "இது பலிக்காது"எனக் காட்டுகிறது.

. புஞ்சை நிலத்தில் நீர் ஊற்று கிடைத்தவுடன் விலை அதிகமாகிறது.அதிக விலையை அனுபவிக்க அதிக மூலதனமிட வேண்டும்.மானேஜரை முதலாளி "நீங்கள் அதையும் பெற்றுவாருங்கள்' என்பது இந்தச் சொத்து என் கையை விட்டுப் போகும்என அறிவிப்பதாகும்.

. உள்ளதையே உலகம் கொடுக்காது.இல்லாததை பகவான் கொடுக்கிறார் எனில் இதுவரை இல்லாத நல்ல உயர்ந்த பழக்கத்தால் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

"எனக்கு வேண்டாம்' என்பதை எந்தப் பாஷையில் சொன்னாலும் பொருள் நம்மைவிட்டு விலகிப் போகும்.

. கிருஷ்ண பரமாத்மா தம் தெய்வீக சக்தியைப் பாண்டவர்களுக்களிக்க அர்ஜுனனால் முடியாத காரியத்தைச் செய்யச் சொல்வதே பகவத் கீதை. அர்ஜுனன், கிருஷ்ணனை "நீங்களே ஆயுதம் தாங்கிப் போரிடுங்கள்" என்று கூறவில்லை.

பெரியவன் - நமக்குக் கொடுத்தது பார்ட்னராயிற்றே, அவருக்கு நன்றி

செலுத்த வேண்டாமா?

சிறியவன் - நம்மை அனைவரும் ஊரைவிட்டு விரட்ட முயல்கிறார்கள்.

நாம் மாட்டிக் கொண்டு விழிக்கிறோம் (இது சிறியவனின் கனவு):

நன்றியறிதல்: ஒரு பிரமோஷனை நமக்குப் பெரிய அதிகாரி கொடுத்தால்,

அந்த ஆர்டரை நம் ஆபீஸ் அதிகாரி எழுதுகிறார். கொண்டு வந்து கொடுப்பது பியூன். அனைவருக்கும் நன்றி உரித்தானது. பியூனுக்குச் சொல்லும் நன்றி நல்ல சொல். அதிகாரிக்கு மனம் நன்றி கூறுகிறது. பெரிய அதிகாரிக்கு நன்றி சொல்வது உணர்வு. ஆத்மாவின் நன்றி அன்னைக்கு உரியது.

நல்ல சொல் முகத்தை மலரச் செய்யும்.

மனம் கூறும் நன்றி தழுதழுக்கும்.

ஆத்மாவின் நன்றி உடல் புளகாங்கிதம் அடைந்து புல்லரிக்கும்.

நன்றி ஆத்மா எழுந்து, மனத்தை நிரப்பி, முகத்தை மலரச் செய்வது முறை.

. நாம் அன்னையிடம் வரக் காரணமானவர் ஒரு நண்பர்.

. நமக்கு அன்னையை விவரமாகக் கூறி ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் ஓர் அன்பர்.

. நம்மை அழைத்தது அன்னை.

. நாம் யாருக்கு எந்த அளவில் கட்டுப்பட்டுள்ளோம்?

. கருவியான அன்பருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஆனால் அதை அவர் வேறு காரியங்கட்காகப் பயன்படுத்துவதை அனுமதித்தால் அது தகாது.

கருத்தை விளக்கியவர் கருவி, கர்த்தா இல்லை.

கருத்தை விளக்கியவரைக் கர்த்தா எனக் கருதுவது T.V. விற்பனை

செய்பவரே அதைச் செய்கிறார் என நினைப்பதாகும்.

அழைத்தது அன்னை.

வந்தது நாம்.

நாம் என்பது ஆத்மா.

ஆத்மா அன்னைக்கு, அவர் அருளுக்குக் கடமைப்பட்டது.

கருத்தே தெளிவுபடுத்தியதுஎன்றால் தெளிவுக்குரிய மனம் தெளிவைத்

தந்தவருக்குக் கடமைப்பட்டது.

உரிய நன்றியைச் செலுத்தாதது தவறு.

நன்றியின் பேரால் அடிமைப்படுவது அர்த்தமற்றது.

ஆன்மா உணர்ந்து, அவ்வுணர்வு மனத்தில் தெளிவுபட்டு, அத்தெளிவு

நல்ல சொல்லாக வாயில் வந்தால், அவரவருக்குரியது போகும். தவறு வாராது.

. அறிமுகப்படுத்தியவரே அனைத்தும் என்றால் அவருக்கு அனாவசியமாகக் கட்டுப்படுவோம்.

. கருத்தை எடுத்துக் கூறியவரே முக்கியம் என்றால், நாம் அன்னையின் கருத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவருடைய கருத்தை நடைமுறையில் பின்பற்றி அவருடைய சிஷ்யராவோம்.

. சிறியவன் கனவு குடும்பம் இருக்கவேண்டிய நிலையைக் காட்டுகிறது.

கனவு சூட்சுமம். சூட்சுமமான கனவை சூட்சுமமாக அறியவேண்டும்.

. சூட்சுமம் சூத்திரம்.

. சுமுகம் சூட்சுமத்தைப் பூர்த்தி செய்யும்.

. சூட்சுமத்தைவிட்டுத் தோற்றத்தைப் பின்பற்றினால் இரண்டும் போகும்.

நம்ம தரித்திரத்தை மதர் அதிர்ஷ்டமாக்கிவிட்டார். நாம் அதையே பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது... போன தரித்திரத்தை மீண்டும் கூப்பிடக் கூடாது. காரம் தரித்திரம். அமைதி அதிர்ஷ்டம்:

. நமக்குப் பிறப்பில் தரித்திரம். நம்மையறியாமல் அன்னை அதை அதிர்ஷ்டமாக்கிவிட்டார்.

. தரித்திரத்தின் சின்னமான காரமான பேச்சு, சிக்கனம், அல்பபுத்தி,ஒட்டுக் கேட்பது போன்ற ஆயிரங்குணங்களை நாம் விடாவிட்டால்,தரித்திரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

. தரித்திரம் போனதும் நமக்குத் தெரியாது. அதிர்ஷ்டம் வந்ததும் தெரியாது.

. அன்னையை அறிந்தவுடன் அது நடந்துவிட்டது.

. அதுபோல் காரமாகப் பேசினால், பேச நினைத்தால் தரித்திரம் தானே வரும்.

. பிரார்த்தனை பலிக்காத நேரம் எண்ணம் போதாது, உணர்ச்சி வேண்டும் என்கிறோம்; உணர்ச்சி போதாது செயல்வேண்டும் என்போம்.எப்படி எண்ணமும் வருமுன் அதிர்ஷ்டம் வந்தது?

. ஜடலோகத்திலிருந்தால் செயல் அவசியம்.

. சூட்சுமலோகத்திற்கு உணர்வு அவசியம்.

. அதுவே மனத்தின் சூட்சுமமானால் எண்ணம் அவசியம்.

. காரணலோகத்திற்கு எண்ணமும் அவசியமில்லை.

. அருள் காரணலோகத்தில் செயல்படுவதால் நினைப்பதன்முன் நடந்துவிட்டது.

. அது அன்னையை ஏற்குமுன்,

. அன்னையை ஏற்றபின் நடப்பவை பெரியவை, பிரம்மாண்டமானவை.

. நினைவு எண்ணம்.

. உணர்வு சூட்சுமம்.

. செயல் ஜடம்.

. நினைத்து, உணர்ந்து, செயல்பட்டால் நடக்கத் தவறாது.

. நாம் சூட்சுமமானால் செயலுக்குமுன் நடந்துவிடும்.

. மனத்தில் சூட்சுமமானால், நினைத்தவுடன் நடந்துவிடும்.

. நம் ஜீவன் காரணதேகத்திருந்தால் (Causal World) நினைக்காமலே நடக்கும்.

. சமர்ப்பணம் இத்தனை நிலைகட்கும் உண்டு.

. சமர்ப்பணத்தால் எந்த நிலையில் எப்படி சாதிப்பது என அறிய வேண்டும்.

. சமர்ப்பணத்தால் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எப்படிப்

போவது என அறியலாம்.

பெரியவன் - அம்மா அதிர்ஷ்டம், நாங்களெல்லாம் தரித்திரமா?

. தானே கற்காதது கற்றதன்று என்பதன் தத்துவம் சிருஷ்டியே Self-Conceptionனால் ஏற்பட்டது என்பதால்.

. ஞானம் — கற்பது — ஆனந்தம் தரும்.

. நாங்களெல்லாம் தரித்திரம் என்ற ஞானம் சுடும்.

. சுட்டால், ஆனந்தம் வாராது, வஎழும்.

. பிறர் சொன்னால் சுடும். அதனால் சொல்லக்கூடாது.

. தானே தரித்திரம்எனப் புரிந்து கொண்டாலும் சுடும். சுட்டால் பலனிருக்காது.

. தானே அறிந்ததை - தரித்திரம்என அறிந்ததை - ஞானமாகவோ, சுடுவதாகவோ நாம் எடுத்துக் கொள்வது நம்முடைய choice.

. சுட்டால் பலன் தாராது. ஞானம் ஆனந்தம் தரும் என்பதை ஆனந்தம்

வருமாறு ஞானத்தைப் பெறவேண்டும். அது opening, receptivity, sincerity.

. ஆனந்தமாக ஏற்றால் ஞானம் வரும் என்பதால் "தரித்திரம்' என்பதை ஆனந்தமாக ஏற்க வேண்டும்.

. தாமே தேடிய ஞானம் கிடைத்தால் ஆனந்தம் ஏற்படும்.

. தாமே தேடுவது aspiration ஆர்வம்.

. ஆர்வம் ஞானத்தைத் தேடும் பொழுது வரும் ஞானத்தால் நாம்

சுருங்கக்கூடாது என்பதை மனம் புரிந்துகொள்ளும், உணர்ச்சி புரிந்து

கொள்ளாது.

. மனம், மனத்தின் உயர்ந்த பகுதி - சைத்தியப்புருஷன் - சுருங்காது.

. மனமே சமயத்தில் சுருங்கும்.

. சைத்தியப்புருஷன் ஒருபொழுதும் சுருங்காது. ஞானம் அதைச் சுடாது.

. சைத்தியப்புருஷன் வெளிவருவது பக்குவம்.

. ஆண்டவன் மீதுள்ள நல்லெண்ணம் தம்மைச் சுடாமல் ஞானத்தைப் பெறும்.

. சைத்தியப்புருஷனை தியானத்தில் அடைய முடியாது.

. சைத்தியப்புருஷனைச் சமர்ப்பணத்தால் அடையலாம்.

. Let Thy will be done, Not my will. சமர்ப்பணத்தைப் பூர்த்தி செய்யும்.

. இதைத் தொடர்ந்து சொன்னால் சமர்ப்பணம் பலிக்கும்.

. எந்தச் செயலையும்விட இதைச் சொல்ல விருப்பப்படுவது சமர்ப்பணத்திற்கு உதவும்.

. சமர்ப்பணம் மற்ற செயல்களைவிட இனித்தால் சமர்ப்பணம் பலிக்கும்.

பிறருக்கு உதவி செய்வது அதிர்ஷ்டம், அதை நாம் செய்கிறோம் -கணவர்;

அதுவும் அம்மாவுக்கு ஆகாது - பெரியவன்:

. எது அதிர்ஷ்டமோ, அருளோ, அதையே செய்யக்கூடாது என்பதில் தத்துவம் உண்டா?

. அதிர்ஷ்டமும் அருளும் செயலில்லை, செய்பவரில் உள்ளது.

. செய்பவர் அகந்தையானால் இம்முரண்பாடுண்டு.

. செய்வது வளரும் ஆன்மாவானால் இம்முரண்பாடில்லை.

. வளரும் ஆன்மா எதைச் செய்யவேண்டும்?

. வளரும் ஆன்மாவுக்குச் செயல் முக்கியமில்லை, சமர்ப்பணம் முக்கியம்.

. சமர்ப்பணமான பின் உதவி செய்வதும், செய்யாததும் ஒன்றே.

. என்ன செய்ய வேண்டும் என்பது சமர்ப்பணத்திற்கில்லை.

. செய்ய வேண்டியது சமர்ப்பணம்.

. சமர்ப்பணம் செய்தால் முரண்பாடு என்ன ஆவது?

. முரண்பாடு அகந்தைக்கு, சைத்தியப்புருஷனுக்கன்று.

. சமர்ப்பணம் அகந்தையிலிருந்து நம்மை சைத்தியப்புருஷனுக்கு நகர்த்தும்.

. செயலின் முரண்பாடு என்ன ஆயிற்று?

. முரண்பாடு செயலில் எப்பொழுதுமேயில்லை.

. செயலே முக்கியமில்லை, செய்பவன் முக்கியமா?

. மேற்சொன்ன சட்டம் அகந்தைக்கு மட்டுமா?

. உதவி செய்வது யாருக்கு அதிர்ஷ்டம்? சைத்தியப்புருஷனுக்கு என்றால் அதிர்ஷ்டம் உதவியில் இல்லையா?

. உதவிஎன்ற செயல் ஒருவரை அடுத்தவரோடு இணைப்பதால்,வளரும் செயல், அதனால் அதிர்ஷ்டம்.

. அதிர்ஷ்டமான செயலை அகந்தை ஆபத்தாக்குகிறது.

. உதவி என்ற செயலுக்கு அதிர்ஷ்டம்என்ற குணம் உண்டு என்று

ஆகிறதே.

. உதவியும், உபத்திரவமும் செய்பவரைப் பொறுத்து நல்ல பலனை தரும்.

. பலன் நல்லதானாலும், செயல்என்ற அளவில் உதவி, உபத்திரவம் வேறுபடுகின்றன அன்றோ.

. நல்ல பலன் பல்வேறு வகைகளிலும் வரும்.

. செயல்களின் தன்மை வேறுபடுவது உண்மை. பலன் (plane) செய்யும் நிலையைப் பொருத்தது.

. செயலுக்குக் குணம் உண்டு என்பது உண்மை.

. ரூபத்திற்கும், செயலுக்கும் (சக்தி) குணம் உண்டு.

. குணம் தரும் பலன் யார் செய்வது, எந்த நிலையினின்று செய்கிறோம் என்பதைப் பொருத்தது.

. அகந்தை அழிந்தபின் செயலுக்குக் குணம் என்பது உண்டு.

. ரூபம் போனதுபோல் குணமும் போனபின்பே ஜீவியம் எழுமா?

. நமக்கு இலட்சியம் ஜீவியமா, சத்தியஜீவியமா?

. ரூபமும், குணமும் அகந்தை போனபின் சத்தியஜீவியமாகின்றன.ஜீவியம் அடுத்த கட்டம்.

. பூரணயோகம் சத்தியஜீவியத்துடன் முடிகிறது. அதைக் கடந்தது பூரணயோகத்திற்குரியதன்று.

ஏன் உதவி செய்பவருக்கு ஊறு செய்யவேண்டும்?

ஏன் என்பது பிறகு. நடப்பது இது;

கல்லீரல் கிடைக்கப் பிரார்த்தனை செய்த தங்கையிடம் அக்கா

சண்டை போடுகிறாள்:

. நம்மைக் காப்பதே முக்கியம் என்றால், உதவி செய்யக்கூடாது.

. அகந்தையில் நின்று உதவி செய்யக் கூடாது.

. அகந்தையில்லாமல் உதவி செய்தால் சண்டை வாராது.

. ஏன் சண்டை வருகிறது என்பது தத்துவம்?

. உதவி என்பது தொடர்பு.

. தொடர்பு இருபுறமும் உள்ளது.

. நாம் செய்தது உதவி. அகந்தையில்லாவிட்டால் பிரதிபலனாக உதவி வரும்.

. அகந்தையிருந்தால் உபத்திரவம் வரும்.

. உதவிஎன்பது செயலளவில் நல்லதா?

. உதவி உயர்ந்த செயல்தானா?

. மேலும் நாம் செய்யும் உதவியின் செயலும் வரும் உபத்திரவத்தின் செயலும் தன்மையில் ஒன்றுபடும்.

. ஒருவர் நிலம் வாங்கும்பொழுது அதில் பாதியை அடுத்தவர் கேட்டார்.அடுத்தவருடைய மனையை சர்க்கார் எடுத்துக் கொண்டது. கேட்டது நிலம், போனது மனை, இந்தத் தொடர்பு அந்தச் செயலிலிருந்து எழுவதைக் காட்டுகிறது.

. உதவியும், உபத்திரவமும் நிலத்திலேயே இருந்தால் அவர்கள் பர்சனா;iட்டி ஒரே அளவிருப்பதாக அர்த்தம். கேட்ட நிலத்தின் விலை 2900. போன மனைக்கு நஷ்ட ஈடு ரூ.2450. மேலும் நிலத்தின் விலை 2500 ஆக நிர்ணயிக்கப்பட்டு 400 ரூபாய் இனாமாகக் கொடுத்தார்கள். நிலத்தைக் கேட்டால்,

. நிலம் மனையை அவரிடமிருந்து எடுப்பது,

. கேட்பவர் மனம் வேகமாக இருக்கிறது என்று காட்டுகிறது.

. யார் நிலத்தைக் கேட்டாரோ, அவரே மனையைக் காப்பாற்றினார்.

. ரூ.2450 சர்க்கார் கொடுக்க முடிவு செய்ததை 47,000 ரூபாய்க்கு விற்றார். முதல் 17,000 ரூபாய்க்கு விலைபேசி முடித்தார்.

. நிலம் வாங்கியவர் 5800 ரூபாய்க்கு வாங்கினார். 47,000 கிட்டத்தட்ட 8 மடங்கு விலைக்குப் போயிற்று. 47,000 ரூபாய்க்கு அந்த மனை விலைபோன நேரம் 5800 ரூபாய்க்கு 15 ஏக்கர் வாங்கியவர் 123 ஏக்கர் வாங்கினார். அது 15ஐப் போல் 8 மடங்கு.

. செயல்களில் மனிதர்கள், ரூபாய், பொருள், விஸ்தீரணம், காலம், இடம் என ஆயிரம் விஷயங்களுண்டு. நமது நோக்கம், எண்ணம் பலனாக வெளிப்படும்பொழுது இந்த எல்லா அம்சங்களும், எல்லா வகைகளிலும் தொடர்புள்ளதைக் காட்டும். தவறாது காட்டும்.

. ஏனெனில் தொடர்பு எப்பொழுதும் உண்டு.

. தொடர்பில்லாத செயலில்லை.

தொடர்பில்லாததில்லை.

உலகமே ஒன்று, ஒருமையுடையது, ஐக்கியமானது என்பதால் எப்படித் தொடர்பில்லாமருக்கும்?

பெரியவன் - அம்மா சொல்படி நடப்பதானால் பூமிக்குமேல் ஓர் அடியில்

நடப்பது போலிருக்கும்;

தாயார் - நாம் சட்டத்திற்கு எதிராகப் போகாவிட்டால், சட்டம் நமக்குச்

சாதகமாக இருக்கும்:

. கட்டுப்பாடில்லாதவன் கட்டுப்பாட்டை ஏற்பது பூமிக்குமேல் நடப்பது போலிருக்கும்.

. அது கட்டுப்பாட்டிற்கு மட்டுமன்று.

. வீட்டில் பெண்களும், ஆண்களும் தங்கள் வேலைகளை மாற்றிக் கொண்டாலும் அப்படியேயிருக்கும்.

. தச்சன் மேஜையில் உட்கார்ந்து எழுத்து வேலை செய்வதும், எழுதுபவன் தச்சன் வேலையைச் செய்வதும் சிரமமாகவேயிருக்கும்.

. அன்னை வாழ்வு,

. புதியது என்பதால் சிரமம்.

. உயர்ந்தது என்பதாலும் சிரமம்.

. நம் சுபாவம் விரும்பித் தேடாதது என்பதாலும் சிரமம்.

. மாறியது, புதியது, உயர்ந்தது, வேண்டாதது ஆகியவை சிரமம்.

. சட்டம்:

. பலரையும் கட்டுப்படுத்துவது சட்டம்.

. அதனால் பலருடைய power சக்தியும் உடையது சட்டம்.

. சட்டம் ஒரு மெஷின் போன்றது.

. எதிராகப் போனால் சட்டம் எதிர்க்கும், அதன் முழுசக்தியுடன் எதிர்க்கும்.

. எதிர்க்காவிட்டால் சாதகமாக இருக்கும்.

. ஒரு கூட்டத்தைத் தொந்தரவு செய்தால் அவனைக் கூட்டம் அழிக்கும்.

. கூட்டம் பேசாமலிருப்பது அவனுக்குச் சாதகமாக இருப்பதாகும்.

. தனக்கு எதிராக இல்லாதவனைச் சட்டம் தனக்கு வேண்டியவன் என நினைத்து உதவும்.பேசாமலிருந்தால் கூட்டம் தன்னை ஆதரிப்பவனாக நம்மைக்

கருதும்.

. சட்டம், கூட்டம், சக்தி, சமநிலை ஆகியவற்றிற்குரிய பொது விதியிது.

. எதிராகப் போனால் சட்டம் அசைந்து சக்தியை வெளியிடும்.அது எதிராக இருக்கும். எதிர்க்காவிட்டால் சட்டம் தானே அசைந்து சக்தியை வெளியிடும்பொழுது தனக்கு எதிராக இல்லாத நம்மை ஆதரவாளராகக் கருதும்.

. நாம் என்பது அகந்தை.

. அகந்தை தனித்துப் பிரிந்து நிற்கிறது. பிரபஞ்சத்திற்கு எதிராக செயல்படுகிறது.

. அகந்தையும் பிரபஞ்சமும் (Universe) எதிரிகள்.

. உண்மையில் ஜீவாத்மாவும், பிரபஞ்சமும் ஒன்றே. பிரபஞ்சம் ஜீவாத்மா மூலம் வளர முயல்கிறது. அகந்தை ஜீவாத்மாவை பிரபஞ்சத்திற்கு எதிரியாக்கிவிட்டது.

. ஜீவாத்மாவைப் பிரபஞ்சம் வளர்க்க முயலும்பொழுது, அதன் மூலம் தான் பரமாத்மாவாக வளர முயலும் பொழுது அகந்தை பிரிவினையும், எதிர்ப்பையும் உண்டு பண்ணுகிறது.

. மனிதனை, காலரா, பெரியம்மையிலிருந்து காப்பாற்ற சர்க்கார் முயன்றால், கிராமத்து மனிதன் தடுப்பு ஊசி போட வருபவர்களை விரட்டியடிக்கிறான்.

. படிப்பால் உலகம் முன்னேற பள்ளிக்கூடம் திறந்தால் கிராமம் எதிர்க்கிறது.

. இறைவனின் அன்பை ஏந்தி வந்த ஏசுவை சிலுவையில் அறைந்தது.

. மனிதனின் பக்திக்குரலுக்காகக் காத்திருக்கும் இறைவனை மனிதன்

புறக்கணித்துக் கேலிசெய்கிறான்.

. பிரபஞ்சம் ஜீவாத்மாவை வளர்த்து, அதன் மூலம் தான் பரமாத்மாவாக முயலும்பொழுது அகந்தை குறுக்கிட்டுப் பிரபஞ்சத்தைத் தடுத்து,

. துன்பத்தை உற்பத்தி செய்கிறது.

. ஆனந்தத்தை வலியாக மாற்றுகிறது.

. அமரமான மனிதனுக்கு மரணத்தைப் பரிசாக அளித்து,

. துன்பம், வலி, மரணத்திற்கு என்ன பதில்என சவால் விடுகிறது. சவாலுக்குப் பதில்:

. சட்டத்தை எதிர்க்காவிட்டால் சட்டம் சாதகமாகும்.

. பொய் சொல்லாவிட்டால் மெய் காக்கும்.

. லஞ்சம் கொடுக்கப் பிரியப்படாவிட்டால், லஞ்சம் நமக்கு வாராது.

. அல்பமாக நடக்கப் பிரியப்படாவிட்டால் பெருந்தன்மை பரிசளிக்கும்.

. போட்டிப் போடாவிட்டால், அனைவரும் ஒத்துழைப்பார்கள்.

. லேட்டா போகக் கூடாது என முடிவு செய்தால் ஒரு நாளும் லேட்டா போகும் சந்தர்ப்பம் வாராது.

. கிண்டல் செய்யக்கூடாது என்றால் உலகம் பாராட்டும்.

. வியாதியை வருந்தி அழைக்காவிட்டால் உடல் வெண்கலம் போலிருக்கும்.

. தீய சக்தியை அழைக்காவிட்டால் அன்னை நம் வாழ்வை நடத்துவார்.

. விக்காம் (Wickham) மீது உயிரை வைக்காவிட்டால் லிடியா அவனுடன் ஓடிப்போகமாட்டாள்.

பெரியவன் - ஏம்பா, அம்மா வீட்டில் சமையல் பண்ணுகிறவர்கள். அவர்களைப் போய் பிஸினஸ் விஷயமெல்லாம் கேட்டால் என்ன தெரியும்?

. அம்மாவுக்கு பிஸினஸ் விஷயம் தெரியாது.

. அப்பாவுக்குச் சமையல் விஷயம் தெரியாது.

. சமையலும், பிஸினஸும் அன்னைக்கு ஒன்றே.

. அன்னையைத் தெரிந்தால் அனைத்தின் essence சாரமும் தெரியும்.

. சமையல் மூலமாகப் பிஸினஸை அறிய சிறியதும், பெரியதும் ஒன்று என்று அறிய வேண்டும்.

. அன்னைக் கோட்பாடுகளை அறிந்தவருக்கு அனைத்து விஷயங்களின் சூட்சுமம் தெரியும்.

. ஷெட்டை எப்படிப் பெறுவது என்பது பிஸினஸ் விஷயம் என்றால் இன்று பிஸினஸ் லஞ்சமார்க்கத்தை நாடுகிறது. ஷெட்டைப் பெற அன்னை வழியுண்டு. அந்த வழி தெரிய பிஸினஸ் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த வழியில் போக உலகை விட்டு விலக வேண்டும், எதிர்த்துப் போக வேண்டும். அதற்கு மரண தைரியம் வேண்டும்.

. தைரியம் அன்னைக்குரியது.

. பயம் இருளுக்குரியது.

. ஊரைக் கண்டு பயப்படுபவன் அன்னையைவிட்டு விலகுவான்.

. ஊரைவிட்டு விலக, தைரியம் வேண்டும்.

. ஊரை எதிர்க்க மரணத் தைரியம் வேண்டும்.

. தைரியலக்ஷ்மி உள்ள இடத்திற்கு மற்ற 7 லக்ஷ்மிகளும் வருவர்.

. லக்ஷ்மி பரம்பரை அறிந்தது.

. லக்ஷ்மியைச் செல்வம் என்பர்.

. ஸ்ரீ அரவிந்தர் கூறுவது லக்ஷ்மியில் அன்னை வெளிப்படுவது. அதை மகாலக்ஷ்மி என்கிறார்.

. அதன் தத்துவம் செல்வமன்று, சுமுகம்.

. செல்வம் சுமுகத்தால் வரும் பலவற்றுள் ஒன்று.

. பரம்பரை அறிந்தது லக்ஷ்மி என்றாலும், மஹாலக்ஷ்மி என்றாலும் (overmental godhead) காலத்திற்குரிய கடவுள். ஸ்ரீ அரவிந்தர் கூறும் மகாலக்ஷ்மி காலத்துள் காலத்தைக் கடந்த கடவுள்.

பார்ட்னர் - அதிர்ஷ்டம் என்றால் என்ன?

. அதிர்ஷ்டத்தைப் பூர்வஜென்மப் புண்ணியமாகக் கருதலாம்.

. Accomplishment in the subtle plane சூட்சுமச் சாதனையாக விளக்கலாம்.

. உலகில் நடப்பவை எதையும் எத்தனை வகையாகவோ, எதன் மூலமாக வேண்டுமானாலும் விளக்கலாம்.

. திருஷ்டியில்லாதது அதிர்ஷ்டம் என்றால் குருடு எனப் பொருள்.

. திருஷ்டி என்றால் எதுவும் தெரியும், எங்கிருப்பதும் தெரியும், எக்காலத்திலிருப்பதும் தெரியும்.

. அனைத்தும் தெரிவதால் தவற வழியில்லை.

. அனைத்தும் தெரியும்போது, வேகம் அதிவேகமாகும்.

. வேகம் அதிகமானால் காலம் தன்னிலையை மாற்றி மூன்றாம் நிலைக்குப் போகும்.

. வேகம் அதிகமாகும்பொழுது லோகம் ஜடத்திலிருந்து சூட்சுமத்திற்கும், சூட்சுமத்திருந்து காரணலோகத்திற்கும் மாறும்.

. சப்தம் மௌனமாகி, மௌனத்தின்பின் மௌனமாகும் பாதை அது.

. பகுதி முழுமையாகி, பகுதியுள் உள்ள முழுமையாகக் காட்சியளிக்கும்.

. ரூபம் அரூபமாகி, பழைய ரூபம் கரைந்து புதிய ரூபம் புதிய நிலைக்குரியது எழும்.

. சிறியது பெரியதாகி, சிறியதனுள் உள்ள பெரியது தன்னை உணர்ந்து, மீண்டும் சிறியதாகவே செயல்படச் சம்மதிக்கும்.

. அதிர்ஷ்டம் அருளின் வாழ்வு ரூபம்.

. எல்லாம் தெரிவதால் எதுவும் தவறாது என்பது அதிர்ஷ்டம்.

. எல்லாம் தெரிந்தபின், தான் தெரிந்ததை அறியாமல் திறமையாகச்

செயல்படுவது அதிர்ஷ்டம். தான் தெரிந்ததை அறிந்து செயல்படுவது அருள். அருள் மனிதனில் அவன் சுபாவத்தால் செயல்படுகிறது. அருள் மனிதனில் அவன் சுபாவத்தை மீறி, அதை ஒதுக்கிச் செயல்படுவது பேரருள். சுபாவத்தை மீறியோ, ஒதுக்கியோ செயல்படுவதற்குப் பதிலாக, சுபாவம் தான் திருவுருமாற முயலும்படி செயல்படுவது சத்யாரோகணம் (Ascent to Supermind).

. அவ்வருள் எளிமையாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கும் என்பது பிரம்ம விவேகம்.

. அறியாமையைக் கடந்த பரிணாமம் அறிவிலிருந்து பேரறிவுக்கு வளர்வது பரிணாமம் தன் இன்றைய நிலையிலிருந்து அடுத்த கட்டம் செல்வதாகும்.

. அதிர்ஷ்டம் வாழ்வோடு முடிகிறது. அருள் அடுத்த கட்டம். பேரருள் நிலையாகச் செயல்படுவது யோகம் பரிணாமமாவது.

கணவர் - என்னால் குறைப்படாமலிருக்க முடியாது. அது முடியுமா எனத் தெரியவில்லை. என்னால் முடியும் என்றால் நான் செய்துவிடுவேன்:

. முடியாது என்பது பிடிக்காது என்பதாகும்.

. பிடித்தால் முடியும். பிடிக்காததை முடியாது என்கிறோம்.

. பிடிப்பதால் மட்டும் முடியுமா?

. இன்று முடியாவிட்டால், ஒரு நாள் நிச்சயமாக முடியும்.

. "குறைப்படாமலிருக்க முடியாது" என்றால் எனக்குக் குறைப்பட

ஆசையாக இருக்கிறது எனப் பொருள். Taste of ignorance.

. மனிதன் அறியாமையைத் தேர்ந்தெடுத்தால் அவன் சுதந்திரத்தை உரிமையுடன் செலுத்துகிறான்.

. மனிதனுடைய சுதந்திரத்தில் பிரம்மம் குறுக்கிடுவதில்லை.

. சுதந்திரம் முடிவானது - அதற்கு உரிமையுடையவன் மனிதன்.

. அவ்வுரிமையைக் கொண்டாடுவது மனிதனில் உள்ள பிரம்மம்.

. மறைந்து தன்னை மறந்த பிரம்மம் உரிமை கொண்டாடுகிறது.

. அது பிரம்மம் என்பதால் எவரும் தலையிட முடியாது.

. அறியாமை ருசிப்பது மாறி அறிவு ருசிப்பது விழிப்பு - ஞானமெனப்படும்.

. அந்த ஞானம் ஆனந்தம் தரும்.

. அந்த ஆனந்தம் சச்சிதானந்தத்தில்லாத ஆனந்தம்.

. அசைவற்ற ஆனந்தம் மேலேயுள்ளது.

. பூவுலகில் ஆனந்தம் அசைவது, ரூபத்தில் வெளிப்படுவது.

. ஆன்மாவே பூவுலகில் வளருவதால், ஆனந்தமும் வளர்கிறது.

. வளரும் ஆனந்தம் ரூபத்தைச் (Perfect form) சிறப்பாக்க முயல்கிறது.

. சிருஷ்டியின் இலட்சியம் ரூபத்தின் சிறப்பு.

. சச்சிதானந்தம் ரூபமற்ற ஆனந்தம்.

. சைத்தியப்புருஷனின் ஆனந்தம் சிறப்பான ரூபத்திற்கேற்ப வளரும் ஆன்மாவின் வளரும்ஆனந்தம். அது பிரம்மத்திற்குரிய ஆனந்தம் இல்லை. பிரம்மஜனனத்திற்குரிய ஆனந்தம். அதை நாடியே பிரம்மம் பூவுலகை சிருஷ்டித்தது.

தாயார் - நாமாகத் தவறு செய்யாவிட்டால் பிரச்சினை வாராது. வாய்ப்பு வரவேண்டுமானால், பிறர் தூண்டுதலாலும் தவறு செய்யக் கூடாது:

. தவறு என்பது கையிலுள்ள பொருளைத் தவற விடுவது போன்றது.அது தரையில் விழுந்து உடையும்.

. வாய்ப்பு பிரச்சினையைவிட அளவில் மிகப் பெரியது.

. பிரச்சினை உள்ளது கெடுவது.

. இல்லாதது வருவது வாய்ப்பு.

. நமக்கு வரும் வாய்ப்பு உலகில் இல்லாததில்லை, நம் உலகில்லாதது.

. அன்னை உலகிலில்லாத வாய்ப்பை அனைவருக்கும் தரும்பொழுது,பெற முடியாதவனுக்கு இருப்பதன் மூலம் தருவதால், அது உள்ளது போல் தெரிகிறது.

. மனிதன் தன் லோகத்தோடு ஒன்றியிருப்பதால், அதன் மூலமே  அன்னை செயல்படுகிறார்.

. மனிதனால் அன்னையை அன்னைக்காக ஏற்க முடியும் என்றால்,உலகில்லாத வாய்ப்பு ஆச்சரியமாக அன்பர் வாழ்வில் எழும்.

. உலகெங்கும் சில நாட்களில் பரவும் இயக்கங்களில் அன்னை சக்தி அதுபோலச் செயல்படுகிறது.

. நாம் செயலைவிட்டகன்று, சமூகத்தைவிட்டகன்று, மனச்சாட்சியைக் கடந்த நேரம் அன்னை சக்தியைத் தீண்டுகிறோம்.

அது இறைவன் வரும் தருணம்.

. தவறு செய்யக்கூடாது. ஏன் செய்தோம் என்பது கேள்வியில்லை. எவரால் செய்தோம் என்பதும் கேள்வியில்லை. தூண்டுதல் முக்கியமில்லை. தூண்டப்பட்டோம் என்றால் தவறினோம்.

. மின்சாரம் ஷாக்கடிக்கும்.

. தெரியாமல் தொட்டால் ஷாக்கடிக்காதா?

. நல்லதே குறை என்ற உலகில், தவற்றுக்கு ஏது இடம்?

. நல்லதையும், கெட்டதையும் கடக்க வேண்டியவர் ஏன் கெட்டுப் போனார் என விளக்குவதில் பயன் என்ன?

. எதை நினைக்கக் கூடாதோ அதைப் பேசலாமோ?

. அதைச் செய்ததற்கு வியாக்கியானம் அன்னை உலகிற்குத் தேவையில்லை.

தாயார் - முதல் ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல பழக்கம் உற்பத்தியாக பெற்றோர் எவ்வளவு முயல்கிறார்கள்?

. மனிதன் தயாராகப் பல கட்டங்களுண்டு. ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கானது பெருமுயற்சி. முடிவாக அவனே அம்முயற்சியை எடுக்கிறான்.

. முதல் முயற்சி தாயாருடையது (physical habits).

. அடுத்தது தாயாரும், குடும்பமும் எடுக்கும் முயற்சி (social habits).

. பள்ளிக்கூடம் அவனைக் கற்கவும், பழகவும், சாதிக்கவும் கற்றுக் கொடுக்கிறது (academic personality is prepared).

. வேலைக்குப் போனால் ஆபீஸ் அவனை மனிதனாக்குகிறது (official habits).

. உயர்ந்த மனிதனாக அவனே பல riskரிஸ்க் எடுத்து தன்னைத் தயார் செய்துகொள்கிறான்.

. அன்னையை ஏற்க மனிதன் முயல்வது இந்த 5 முயற்சிகளும் சேர்ந்ததை விட அதிகமாக இருப்பது அவசியமன்றோ?

. இதன் தத்துவம் என்ன?

. சிருஷ்டியில் மனம் வாழ்வாகும்பொழுதும், வாழ்வு ஜடமாகும் பொழுதும் - ஒரு நிலை அடுத்த நிலையாக மாறும்பொழுது - ஏராளமான புதுப்பழக்கங்கள் உற்பத்தியாகின்றன. மேலே கூறியது ஓர் உதாரணம். அன்னையை ஏற்பது அடுத்தகட்ட ஜீவியத்தை ஏற்பது. அதற்கு என்ன முயற்சி வேண்டும்எனத் தெரிந்து அதை எடுக்க விரும்புபவர் அன்னை எழுதியவற்றைப் படித்தால் பயனிருக்கும்.

. நேரு நாட்டின் தலைவரானார், பெர்னார்ட்ஷா மேதையானார், சர்ச்சில் உலகைக் காப்பாற்றினார், சத்தியஜீவனாக ஒருவர் இதுபோன்ற பயிற்சியை முயற்சியால் பெற்றால் போதுமா? அதிகம் தேவையன்றோ?

. தேனீ கூடு கட்டுவதையும், எறும்பு தான்யத்தை எடுத்துப் போவதையும் கண்டவர், அதுபோல் உழைக்க முன்வந்தால் போதாது என்பது சட்டம்.

. இந்த வீட்டில் எவரும் எதுவும் செய்யாமல், கிறுக்குப் பேசுகிறார்கள்.

. சத்தியஜீவனில்லை என்றாலும் அதிர்ஷ்டத்திற்கும் அதே முயற்சி தேவை.

. சிருஷ்டியிலும், சமூகத்திலும், தனிமனித வாழ்விலும் உள்ளதைக்

காண்பவர் அதை விட முயலப் பிரியப்படுவது அறிவுடைமை.

. கணவர் செய்தது எதுவுமில்லை.

. பெரியவரோ, சிறியவரோ என்ன செய்தார்கள்?

. ஏன் செய்யவேண்டும்எனப் பேசுவார்கள்.

. வாழ்வை உயர்த்துவது ஆயிரத்தில் ஒருவர்.

. வெறும் மனிதனுக்கு அவை வந்தபின் தவிப்பதை இக்குடும்பம் காட்டுகிறது.

தாயார் - உழைப்பாளி கஷ்டப்பட்டான்என்பது உலகில்லை:

. கஷ்டப்படுகிறவர்கள் தமக்கே பல காரணம் கூறுவார்கள். பிறரிடம் வேறு காரணம் கூறுவார்கள். அதில் ஒன்று, "நான் இரவு பகலாக உழைக்கிறேன் என் கஷ்டம் தீரவில்லை" என்பது.

. முதலாவதாக அவர்கள் வேலையே செய்யாதவர்களாக இருப்பார்கள்.

. அடுத்தாற்போல், கொஞ்ச வேலையில் ஈடுபடுவதாக நடிப்பார்கள்.

. ஒரு சிறு வேலையைச் சிறப்பாகச் செய்துவிட்டு 85% பாக்கி வைத்தவர்களாக இருப்பார்கள்.

. நாள் முழுவதும் கடினமாக வேலை செய்து, அந்த வேலையில் வேறு தவறான உரிமையை, தனக்கில்லாத உரிமையை எதிர்பார்ப்பார்கள்.

. தன் நிலைக்குக் கீழிறங்கி அதிக வேலை செய்து, பலனை தன் நிலைக்கேற்ப எதிர்பார்ப்பார்கள்.

. இவர்கள் எவருக்கும் அவர்கள் எதிர்பார்க்கும் பலன் வாராது.சிலருக்கு எதிரான பலனும் வரும்.

. உழைப்பு உயர்ந்தது, உடலின் பிரார்த்தனையாகும். தவறாது பலன் தரும். ஆன்மாவை உடலில் மிளிரச் செய்யும். பிரார்த்தனையைவிட உயர்ந்தது. பலனை அபரிமிதமாகத் தருவது.

. உழைத்தவன் கஷ்டப்பட்டான்என்பது விளக்குப் போட்டபின் இருட்டாக இருக்கிறது என்பது போன்றது.

. அதையே அன்னைக்குச் செய்த பிரார்த்தனை பலிக்கவில்லை என்பது போன்றது எனவும் சொல்லலாம்.

. உழைப்பு ஜடம் செயல்படுவது, மனம், வாழ்வைவிட அதிக சக்தி வாய்ந்தது ஜடமான உடல்.

. அது பலன் தரவில்லை என்பது சொல்பவன் ஊரை ஏமாற்றுபவன் என்றாகும்.

. ஐஸ் சூடாக இருக்கிறது என்று கூறுவது அதைவிடச் சிறந்தது.

. இக்குடும்பத்தில் உழைப்பாளிகள் இல்லை.

. அன்பர் உழைக்க வேண்டியது மனத்தைக் கடந்த ஆத்மாவில்.

. பொய்யின் பல வகைகளில் சிறந்தவற்றுள் இதுவும் ஒன்று.

. "என் ஜபம் சாயவில்லை" என்பவன் "என் பொய்யான முயற்சிகள் பலிக்கவில்லை" என்கிறான். இதுவும் அது போன்றதே.

. உலக முழுவதும் 200 ஆண்டுகளாக சோஷலிஸ்ட்கள் சொல்லியது பொய்யா?

. அவர்கள் சொல்வது அரசியல் சரி, சமூகத்திற்கு உண்மை.

. சமூகத்தின் உண்மை ஆன்மீகத்தில் உண்மையில்லையா?

. சமூகத்தில் 4 பேருடன் ஒத்துப்போவது ஆன்மீகத்தில் பொய்யாகும்.

. உழைப்பு எப்படி என்பது கேள்வி.

. சமூகத்தில் பல நிலைகள் உண்டு.

. உழைப்பாளியானாலும், எவரானாலும் அவர்கள் வருமானத்தில் முதல் செலவு, முக்கியச் செலவு சாப்பாடு; துணி, படிப்பிற்கில்லை. அது தங்களைச் சமூகத்தில் உயர்த்துவதற்கே. அதற்குச் செலவு செய்தால் சாப்பிட பணமிருக்காது.

. அவன் உடலால் மண்ணாங்கட்டியாக உழைப்பது அவனுக்குப் போதாது. திறமையாக உழைத்தால் போதும். அவனுக்கு "தான்" என்பதே இருக்காது. சொந்தமாக எதுவும் புரியாது. தைரியமோ, நிதானமோ இருக்கவே இருக்காது.

. உழைப்பாளி என்பவன் உண்பதற்குமட்டும் உரியவன். அதாவது சாப்பாட்டு இராமன்.

. தான் சம்பாதிப்பதைச் சாப்பாட்டிற்கு மட்டும் செலவு செய்தால் அவன் கஷ்டப்படமாட்டான்.

. அவன் பெரும்பாலான செலவு, தன் அந்தஸ்து உயர செலவிடப்படுகிறது.

. அதைச் செய்ய அவனுக்கு உரிமையுண்டு. அதனால் கஷ்டப்படுகிறேன் என்பது உண்மையாகாது.

. பூக்கடை குமாஸ்தா மாதம் ரூ.800/- பையன் படிக்கச் செலவிடுவது சரியா என்பதை எழுப்பவேண்டாம். இந்தச் செலவு செய்யாவிட்டால் வீட்டில் கஷ்டமில்லை.

. பொதுவாக வேலைக்குத் தகுந்த உழைப்பைத் தர முடியாதவன் கஷ்டப்படுகிறான். அவனுக்கு உழைக்கும் தகுதியில்லை. அதைப் பெற கஷ்டப்படுகிறான். அவனது உழைப்புக்குரிய ஊதியம் வரத் தவறுவதில்லை.

. Revolution of rising expectations எதிர்கால வளர்ச்சிக்குரிய புரட்சியது.

. உழைப்புக்குத் தவறாது ஊதியம் உண்டு.

. அடுத்த லெவலுக்குப் போக ஊதியமில்லை.

. அடுத்த லெவலுக்குப் போக அனைத்தையும் ரிஸ்க் செய்யவேண்டும். அதுவே அவன் செய்வது.

. விக்காம் பணக்காரியைக் கட்டிக் கொள்ள முயல்வதைப் போன்றது மனித யத்தனம்.

தொடரும்.....

*******


 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம் பார்வையை நிர்ணயிப்பது நம் நோக்கம். பிரபஞ்சத்தின் ஆத்மா தன் பரிணாம வளர்ச்சியை, தனி மனிதனின் நோக்கமாக வெளிப்படுத்துகிறது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜீவியம் செயல்பட்டால் சக்தியுண்டாகிறது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு சிரமத்தைச் சந்தர்ப்பமாக மாற்ற கட்டுப்பாடு தேவை. அதே சிரமம் அகவுணர்விலிருந்தால் அதை மாற்ற, கட்டுப்பாடு போதாது; நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கை கட்டுப்பாட்டைவிட உயர்ந்தது.


 


 


 


 


 


 


 


 book | by Dr. Radut