Skip to Content

08.அன்னை ஒரு குழந்தை

"அன்னை இலக்கியம்"

அன்னை ஒரு குழந்தை

                                                                        வி.ரமேஷ் குமார்

 

டிசம்பர் 21, 2004....கோயம்பேட்டில் கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறை கூட்டம். தரை தெரியாத கூட்டத்தில் மிதந்து பெங்களூர் KPNஐக் கண்டுபிடித்து ஏறி இருக்கை எண்-ஐப் பார்த்து அமர்ந்தேன்...அப்பாடா!....

இரவு 10.00 மணிப் பேருந்து அது. நிரம்பிவிட்டால் 15 நிமிடம் முன்பேகூட கிளம்பிவிடும். 10.15 ஆகியும் கிளம்பவில்லை. காரணம் என் பக்கத்து இருக்கை காலி. "குருவி' கூவி அழைத்தும் ரூ.390/- டிக்கெட் ரூ.500/- விற்கும் நேரத்தில் "சிங்கிள் சீட்' ஒன்றுகூட தேறவில்லை. டிரைவர் ஆச்சரியப்பட்டுக்கொண்டே வண்டியை எடுக்க... எனக்கு உரைக்க ஆரம்பித்தது....

நான் செல்வது ஓர் அகில இந்தியரீதியான டிரெய்னிங்கிற்காக.அதில் என்னைத்தவிர அனைவரும் இஞ்ஜீனியர்கள், விற்பன்னர்கள்.என் கம்பெனி வேறு வழியில்லாமல் என்னை அனுப்புகிறது.குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் என்னை ரேசில் விட்டது போன்று ஒரு பயம். டிக்கெட் வந்தவுடன் தியானமையத்திற்கு ஓடினேன். "அன்னையே!நீங்கள்தான் என்னைக் கூட்டிச் சென்று வரவேண்டும்''.

நிஜமாகவே இது அன்னை அமர்ந்து வரும் இருக்கையோ?... உடல் சிர்த்தது.

பஸ் வேகமெடுக்க.... குளிர ஆரம்பித்தது. ஒரு ஹெல்பர் கம்பளி தர, சீட் அருகில் வந்து எனக்கொன்றும், காலி இருக்கையில் யாரோ இருப்பதுபோல அதற்கொன்றும் போட்டுச் செல்ல.... இனம் தெரியாத நெகிழ்ச்சியும், அழுகையும் வந்தது. ஐயோ! நான் அன்னைக்கு குழந்தையா? இல்லை... எத்தனைத் திட்டினாலும் க்ஷணநேரத்தில் அத்தனையும் மறந்து திரும்ப ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் குழந்தைபோல அன்னை ஒரு குழந்தையா?

இரண்டு வருடங்களாக நான் போடுகிற ஆட்டத்தையும், அன்னைக்குப் பிடிக்காத செயல்களையும் மன்னித்து, கூப்பிட்ட குரலுக்கு உடனே ஏறி சீட்டில் அமர்ந்துவிட்டவரை என்னவென்று அழைப்பது?....

என் நினைவுகள் அன்னையைப் பரபரப்பாகத் தேடிய அந்த நாட்களுக்குச் சென்றது.

சரியாக இரண்டு வருடங்களுக்குமுன்பு.....

என்னால் எதையும் சாதிக்கமுடியும்என்ற அகந்தையில் ஒரு பிராஜக்ட்டில் அகலக்கால் வைத்தபிறகு, வழக்கமாக அனைவரும் சொல்லும் சமாதானங்களைச் சொல்லி பேங்கில் ஆரம்பித்து படிப்படியாக

"முன்னேறி' உருட்டல், புரட்டல்என்று வந்து கந்துவட்டியில் நின்றேன்.நின்றேன் என்றால்... நிறுத்தப்பட்டேன்.... வேறு யாரும் தரத் தயாராக இல்லாததால்.

பிறகென்ன? என் சொற்ப முதலீடுகளைப் பிடுங்கி வரவு வைத்துக்கொள்ள அத்தனை பேரும் கார் மற்றும் பைக்கில் சுற்ற தலைமறைவானேன்.

ஒன்றிரண்டு நலம் விரும்பி நண்பர்கள் தயவால் நாட்களைக் கடத்திக்கொண்டு இருந்தபோதுதான் ஒரு நண்பர் சொன்னார், "உன் ஜாதகத்தில் குரு சரியில்லை. அதனால் நீ.......... சென்று வா. எல்லாம் சரியாகிவிடும்''.

மௌனமாக இருந்தேன். கடந்த சில மாதங்களாக "எத்தை தின்றால் பித்தம் தெளியும்'' என்ற நிலையில், யார் எது சொன்னாலும் செய்து அறை முழுக்க பிரசாதங்கள், எந்திரங்கள், படங்கள் நிரம்பி இருந்தது.அதோடு அவ்வளவு தூரம் சென்றுவர பணமும் இல்லை.

"சரி, வேண்டாம். குறைந்தது குரு ஸ்தானத்தில் இருந்தவரது ஸ்தலத்திற்காவது சென்று வா. கிட்ட இருப்பது பாண்டிதான். நூறு,நூற்றைம்பது ஆகும். நான் வேண்டுமானால் தருகிறேன்'' என்றான் குமார்.

வேண்டுதல் என்பதைவிட எனக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது.

"சரி'என்று கிளம்பி விசாரித்து ஆசிரமம் வந்து சேர்ந்தேன்.

என்ன இது?.... அமங்கலமான சமாதி.... மந்திரமில்லை... பூஜையில்லை.சிலைக்கு அபிஷேகம் செய்து, உடலை வருத்தி, கெஞ்சி கேட்டே பழக்கப்பட்ட எனக்கு... இங்கு எதனிடம் எதை வேண்டுவது என்று தெரியவில்லை. பொழுதுபோவதற்கு உட்கார்ந்து இருந்தேன். சூழல் இருந்த அமைதி என்னுள் இறங்குவதுபோல, என் டென்ஷன் வடிவதுபோல இருந்தது. பிரமையோஎன்று நினைத்தேன். காரணம் புரியாமல் திரும்ப நண்பன் வீடு வந்து சேர்ந்தேன்.

எனக்காகவே காத்திருந்ததுபோல நண்பர் குடும்பம் "கை கொடுங்கள்'என்றனர். புரியாமல் விழித்தேன். மிகவும் பிரச்சினை செய்துகொண்டிருந்த பைனான்சியர் ஒருவருக்கு திருநெல்வேலி அருகில் ஆக்சிடண்ட். இன்னும் மூன்று மாதத்திற்கு சென்னை வரமாட்டாராம் என்றனர். குமார், "டேய் ஒவ்வொருவருக்கு ஒரு சாமி செட்டாகும். உனக்கு பாண்டி செட்டாவதுபோல இருக்கு. கெட்டியாகப் பிடிச்சிக்கோ''என்றான்.

வெகுநாட்களுக்குப் பிறகு கனவுகள், பயங்கள் இல்லாமல் தூங்கினேன்.

மறுநாள்...... காலை

டீக்கடை போஸ்டரில் தலைப்புச்செய்தி திடுக்கிட வைத்தது."பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளர் தற்கொலை. கந்துவட்டி காரணமா? பிரபல பைனான்சியர் தலைமறைவு''. இவரும் என்னைத் தேடிக் கொண்டிருந்தவர்தான். ஒன்றும் புரியாமல் யோசித்தேன்... ஒரு வார்த்தைகூட வேண்டாமல், வேண்டாவெறுப்பாகப் பொழுதைகழிப்பதற்கு உட்கார்ந்து இருந்ததற்கே இந்த பலனென்றால்....

அடுத்த பஸ் பிடித்து ஓடி சமாதியில் தலைகவிழ்ந்து அழுதேன். பாரம் அத்தனையும் இறங்கியதுபோல் இருந்தது. வரும்போது ஒரு படமும் வாங்கிவந்தேன். ஷெல்பில் இருக்கும் இருபது படங்களுக்கு நடுவில் அன்னையும், பகவானும் வந்து அமர்ந்துகொண்டனர். மனம் பரபரப்பாக இருந்தது. அடுத்து எப்படி "ரூட்' போடுவார்கள்என்ற எதிர்பார்ப்பில் நான்கு நாட்கள் சென்றது.

மீண்டும் தலைப்புச்செய்தி: "கந்துவட்டித் தடைச் சட்டம் அமல்.பைனான்சியர்கள் ஓட்டம்''. டீ குடிக்க முடியாத அளவிற்கு சந்தோஷத்தில் புறை ஏறியது. நண்பனிடம், "இது போதும். கொஞ்சம் மூச்சுவிட நேரம் கொடுத்தால் போதும். சமாளித்து, சரி செய்துவிடுவேன்''என்றேன்.நண்பன் எச்சரித்தான், "திரும்ப "நான்' வந்துடுச்சி பாத்தியா.விவசாயியும், மீன்காரனும் ஒருத்தனுக்கு வேண்டினா, அறுவடைக்கு போற எல்லாருக்கும் கிடைக்கும். அந்த மாதிரி அம்மா அள்ளிகொடுத்தது உனக்குமட்டுமன்று. எவ்வளவோ குடும்பத்திற்கு நிம்மதி ஏற்படுத்தி இருக்காங்க. நான் பார்த்துக்கறேன்என்று ஆட்டம்போடாமல் மதர் பின்னாடியே போ''என்றான்.

எனக்கு திருப்தி இல்லை. இப்படியெல்லாம் பிரச்சினை தீர்வது.எனக்குத் தெரிந்தவகையில் தீர்ந்தால்தான் அது தீர்வு. பணம் (கடன்)கிடைக்கவேண்டும். அத்தனை பேர் முகத்திலும் விட்டெறிந்து நாக்கை பிடிங்கிகொள்ளுமளவிற்கு "நான்கு'' கேள்வி கேட்டுவிட்டு வரவேண்டும்.அதுவல்லவா தீர்வு?....

சில வாரங்கள் அமைதியாகக் கழிந்தது. கழுத்திற்கு வந்த கத்தி விலகியது தெரிந்தது. ஆனால், வேறு ஒரு முன்னேற்றமும் இல்லை.

வேறு வழியில்லாமல் வேலை தேடத் தொடங்கினேன். என்னை,என் படிப்பை, என் அனுபவத்தினை நம்பி இருந்தேன். ரூ.2500/-க்கு

மேல் தர யாரும் தயாராக இல்லை. என்னிடம் வேலை பார்த்த சாதாரண தொழிலாளிக்கு ரூ.2500/- முதல் மேனேஜருக்கு ரூ.7000/- வரை கொடுத்தவனாதலால் சுயபச்சாதாபத்தில் ஆழ்ந்து அரற்றினேன்.

திரும்ப ஓடினேன் பாண்டிக்கு. எத்தனை முறை உதவினால் என்ன?மீண்டும் "உன்னை''த்தானே நம்புகிறாய்என்று கேட்பதுபோல இருந்தது அன்னையின் பார்வை...

இப்போதெல்லாம் பாண்டி சென்றுவந்தால் 24 மணி நேரத்தில் ரிசல்ட் என்று தெரிந்துவிட்டதால் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்.

என் வெகுநாள் நண்பன் முரளி, கெமிக்கல் பிசினஸ் செய்பவன் வந்தான். "நான் தனியாக ஆபீஸ் போடப்போகிறேன். பார்த்துகொள்ள முடியுமா? என்னால் ரூ.3000/- மேல் தரமுடியாது. ஆனால் உனக்கு  தற்போது இது மிகவும் உதவியாக இருக்கும்'' என்றான்.

எனக்கு மிகவும் வெட்கமாகவும், எரிச்சலாகவும் இருந்தது. பெரிதாக எதிர்பார்த்தேன்.... அன்னை கவிழ்த்துவிட்டார்களே.... வேண்டாவெறுப்பாக சரி என்றேன். காரணம் வேறு வழி தெரியவில்லை. இரண்டு மாதங்கள் அமைதியாகச் சென்றதில் அன்னை எழுதியவைகளைப் படிக்க முடிந்தது.அருள் வரும் விதம் புரிந்தவுடன் வெறுப்பை விலக்கி வேலையை ஈடுபாட்டுடன் செய்ய ஆரம்பித்தேன். சாப்பாட்டிற்கு கை ஏந்த தேவையில்லாமல் இருந்ததேதவிர வேறு முன்னேற்றம் இல்லை.

அப்போதுதான் அந்த இடிச் செய்தி வந்தது.... நான் பணம் தரவேண்டியவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு பெரிய ரௌடியிடம் முறையிட்டதாகவும், அவன் ஆட்கள் என் வீட்டிற்கு வந்து, என் தொடர்புகள் பற்றி அறிய கதவை உடைத்து இருந்த ஒன்றிரண்டு பர்னிசர்களையும் எடுத்துசென்றுவிட்டதாகவும் நண்பன் ஓடிவந்து சொன்னான்.வீடு சென்று பார்த்தேன். தேறும் அளவிற்கு எதுவும் இல்லை.அங்கு இருந்த அத்தனைப் படங்களையும் வெறுப்புடன் பார்த்தேன்.அள்ளி குப்பையில் போட்டு, வீட்டை காலி செய்து ஓனரிடம் ஒப்படைத்துவிட்டு பீச்சில் உட்கார்ந்தேன். நண்பன் ஆறுதலாகப் பேச ஆரம்பித்தான். "மனதைத் தளரவிடாதே. நடப்பதுதான் நடக்கும்...''சட்டென்று இடைமறித்தேன். "நடப்பதுதான் நடக்கும் என்றால் எதற்கு இத்தனை தெய்வங்கள், வேண்டுதல்கள்? இன்றுடன் எல்லாவற்றிற்கும் தலைமுழுகுகிறேன். சம்பிரதாயம், சாங்கியம், முறை எதையும் பின்பற்றப் போவதில்லை. கண்கூடாக இரண்டு, மூன்று முறை நல்லது நடந்ததால் அன்னை மட்டும் பாக்கெட்டில் இருக்கட்டும்'' என்று எழுந்தேன்.

நண்பன் திட்ட ஆரம்பித்தான். "உன் கெட்ட நேரம்தான் இப்படியெல்லாம் புத்தி போகிறது. இதுவரை தப்பியதே நீ செய்த பூஜைகளால்தான்''. ஏதேதோ சொன்னான். கேட்கும் மனநிலையில் நான் இல்லை.

ஆனால் அதன் தாக்கம் மறுநாள், தலைப்புச்செய்தியாக: "பிரபல ரவுடி... சுடப்பட்டான்''. கைகொடுத்தான் நண்பன். "டேய், ஒன்றுமட்டும் புரிகிறது. உன் மதர் ஒருவருக்கு மட்டும் கொடுப்பதில்லை போலும்.எப்போதும் பல பேருக்கு பயனுள்ளதாகவே நடக்கிறதே''என்றான்.

எனக்கு வேறொன்றும் புரிந்தது. எனக்காக அன்னை செயல்படுவதற்குத் தடை ஏற்படுத்துவது நான்மட்டுமே. பல தெய்வங்களுக்கு நடுவில் ஒருவராகச் செயல்பட்டபோது மென்மையாக மகாலட்சுமியாக மட்டுமே செயல்படமுடிந்தது. அன்னைமட்டுமே அடைக்கலம்என்றபோது புயலென காளி அம்சம் வெளிப்பட... பக்தனைக் காக்க எதுவேண்டுமானாலும் செய்யும் அன்பு.... ஐயோ! இதற்கெல்லாம் நான் தகுதியானவன்தானா?.... சாப்பிடத் தோன்றாமல், பேசத் தோன்றாமல், அந்த நெகிழ்ச்சியிலேயே நீடிக்கவேண்டி அசையக்கூட இல்லை.

ஒருநாள்.....

முரளி, என் தற்போதைய முதலாளி, அழைத்தான். "உன் திறமையெல்லாம் இங்கு வேஸ்ட் செய்யவேண்டாம். என் நண்பர், கோவையைச் சேர்ந்தவர், சென்னையில் கிளை திறக்க உள்ளார். கட்டிட ரிப்பேர்களுக்கான லேட்டஸ்ட் கெமிக்கல்ஸ் மற்றும் டெக்னாலஜிக்கான லைசென்ஸ் ஸ்விட்சர்லாந்து கம்பெனியிலிருந்து வாங்கி இருக்கிறார். புதிய ஃபீல்ட்தான். ஆனால், நல்ல எதிர்காலம் உள்ளது. நான் உன்னை சொல்லி இருக்கிறேன். போ''என்றான்.

மேலே பார்த்தேன்... வழக்கம்போல அன்னையின் சிரிப்பு.... "இப்போது தெரிந்ததா, நான் ஏன் கெமிக்கல்ஸில் விட்டேன் என்று''என்பதுபோல இருந்தது. வாழ்க்கையில் முதன்முறையாக யோசிக்கும் முன்பே அன்னை ஞாபகம் அன்றுதான் வந்தது. சமர்ப்பணம் ஆவது தெரிந்தது."சரி''என்றேன்.

சமர்ப்பணத்தின் சக்தி என்ன என்று இந்த ஒரு வருடத்தில் நான் அடைந்த உயரம் புரியவைத்துள்ளது. M.E அல்லது M.Tech. மட்டுமே ஈடுபடக் கூடிய வேலையில், பெரிய அயல்நாட்டு கன்சல்ட்டண்ட்கள் நடுவில், இந்தியாவின் கௌரவ பிராஜக்டுகளான செயற்கைகோள் ஏவுதல், அணுமின் நிலையங்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் பங்குகொள்ள வைத்ததை எந்த வார்த்தை கொண்டு வர்ணிக்கமுடியும். குறைந்தபட்சத் தேவையான டிப்ளமோகூட என்னிடம் கிடையாது. பாம்ம்.... பஸ்ஸின் ஹார்ன். என் நினைவுகளை கலைத்தது. பெங்களூர் கலாசிபாளையம்.

அன்னை இன்னும் அருகில் இருப்பது போன்ற உணர்வு, தைரியம் தந்தது. ஆட்டோ பிடித்து பயிற்சிக்கான இடம் வந்துசேர்ந்தேன். மூன்று நாட்கள் பயிற்சிகள். அகில இந்தியாவிலிருந்தும் வந்திருந்த இன்ஜீனியர்கள் நடுவில், non--இன்ஜீனியர் நான் மட்டுமே என்ற தகவல் ஜோக்காக சொல்லப்பட... எப்படி சாத்தியம்என்று அனைவரும் புருவம் உயர்த்த.... ஒரு sessionலகூட நான் தடுமாறாமல் இருக்க... என் மைனஸ்ஸே ப்ளஸ் ஆகி..... அதன்பிறகு கிடைத்த மரியாதை அன்னை அழைத்து வந்ததால் மட்டுமே என்று புரிந்தது. ஆம், சமர்ப்பணத்தால் அன்னை ஜீவியமல்லவா செயல்பட்டது.

அதுமட்டுமன்று, வாழ்வில் உள்ள எவரும், எந்தத் துறையில் இருந்தாலும், அன்பருக்கு நிகரில்லை என்பது சத்தியவாக்கன்றோ!

*******
 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

இலட்சியம், தீவிரம் முழுமையானதானால், எந்த முறையும்

தேவையில்லை.

தீவிர இலட்சியத்திற்கு முறையில்லை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

உலகத்தில் துன்பம் இல்லைஎன்ற கருத்தை மனம் நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளுதல் நன்று. அது மனத்திற்கு ஆன்மிகத்தை அளித்துப் பேரின்பத்தை நிலைநாட்டும்.

இன்ப, துன்பங்களைக் கடந்த மனம் ஆன்மிகப் பேரின்பத்தை

நிலையாகப் பெறும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

எண்ணங்கள் அற்றுப்போவது மௌனத்தையடைய அவசியம்.பேசவேண்டும்என்ற ஆசை அழிவதும் மௌனத்தை நிரந்தரமாகப் பெற அவசியம்.

பேச்சு அழிவது போதாது; பேசும் ஆசை அழிய வேண்டும்.


 

 


 



book | by Dr. Radut