Skip to Content

03.இந்தியாவின் ஆன்மீகச்சூழல்

 இந்தியாவின் ஆன்மீகச்சூழல்

N. அசோகன்

 

பெரிய ஆன்மா பூமியில் பிறக்க வேண்டுமென்றால் அதற்குத் தயாராகும் குடும்பம் பல தலைமுறைகளாக மேலும் மேலும் சிறந்த மேதாவிகளை உருவாக்கிக் கொண்டு வந்து, இறுதியாக ஒரு புத்த பகவான், இயேசுபிரான் மற்றும் கிருஷ்ண பகவான் போன்றவர்கள் பிறக்கும் தகுதியைப் பெறுவதாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தி, நேரு மற்றும் தாகூர் ஆகியவர்கள் பிறந்த குடும்பங்களுக்கும் இது பொருந்தும். அதே சமயத்தில் மகான்களும், மேதைகளும் பிறந்த பிறகு அக்குடும்பம் நாளடைவில் இருந்த இடம் தெரியாமலும் போகும் என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நாடும் இப்படி தனக்கேயுரிய பாரம்பரியத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பாரம்பரியம் அந்நாட்டு மண்ணிலும், சூழலிலும்கூட நிறைந்திருக்கும். இந்தியாவிற்கு வந்த அமெரிக்கர் ஒருவர் தமது விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தமக்குள் ஒரு பெரிய அமைதி நுழைந்ததாக உணர்ந்தார்.

ஸ்ரீ அரவிந்தரை அவரது பெற்றோர்கள் அவருடைய ஏழாவது வயதில் டார்ஜிலிங் நகரில் இருந்த ஓர் ஆங்கிலப்பள்ளியில் சேர்த்த பொழுது தமக்குள் ஒரு கரிய சூழல் நுழைவதைக் கண்டார். பிறகு இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்துக் கொண்டு, தம்முடைய 21வது வயதில் இந்தியா திரும்பினார். மும்பைத் துறைமுகத்தில் அவர் இறங்கிய பொழுது, இந்திய மண்ணில் அவர் காலடி எடுத்து வைத்ததும் தமக்குள் ஓர் ஆழ்ந்த அமைதி நுழைவதை உணர்ந்தார். அந்த அமைதி கடைசி வரையிலும் அவரை விட்டு விலகாமல் அவருடனேயே இருந்தது.ஐரோப்பியக் கண்டத்தில் நிறைய விஞ்ஞானிகள் பிறந்து இருப்பதால் அக்கண்டத்தின் சூழல் அறிவுமயமாக உள்ளது.

அமெரிக்க தேசத்தில் தாமஸ் எடிசன் மற்றும் ஹென்றி போர்டு போன்றகண்டுபிடிப்பாளர்கள் பிறந்திருப்பதால் அந்நாட்டில் வேலை செய்கின்ற சாதாரணக் குடிமகன் கூட பணி இடத்தில் இருக்கின்ற மெஷின்களின் உற்பத்தித் திறனை எப்படி உயர்த்தலாம்என்று யோசிக்கிறான். இந்தியாவின் ஆன்மீகச்சூழல் முனிவர்களையும், ரிஷிகளையும் உற்பத்தி செய்துள்ளது. ஆராய்ச்சி செய்கின்ற அமெரிக்கச் சூழல் ரிஷிகளையோ, ஆன்மீகமயமான இந்தியச்சூழல் ஐரோப்பியர்களைப் போல நிறைய விஞ்ஞானிகளையோ உருவாக்குவதில்லை. ஆன்மாவிற்குள் அறிவு அடக்கம் என்பதால் சீனிவாச ராமானுஜம் போன்ற ஒரு மேதை இங்கே பிறந்தார். இந்நூற்றாண்டின் தலைசிறந்த கணிதநிபுணர் அவர்தாம் என்று கூட பல கணித வல்லுநர்கள் நினைக்கின்றார்கள்.

இந்நேரத்தில் இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1) இந்த ஆன்மீகமயமான இந்தியச்சூழலை ஐஸ்வர்யத்திற்கு ஏற்ற சூழலாக மாற்றுவதற்குத் தகுந்த மனோபாவங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியுமா?

2) இந்த ஆன்மீகச்சூழலில் மேதாவிகள் மறைந்துள்ளார்களா? ஒரு விழிப்புணர்வு வந்தால் அவர்கள் தலையெடுப்பார்களா?

நாட்டின் பழம்பெருமையை நினைத்துக் கொண்டிருப்பது எதற்கும் உதவாது. இன்றைய வாழ்வுக்குப் பயன்படும் நடைமுறைக் கருத்துகளும், செயல்களுமே அர்த்தம் உள்ளவை. மேதைமை என்பது என்ன? எவருக்கும் தோன்றாதது மேதைக்குத் தோன்றும்.

பொதுமக்களுக்கு ஜீவனிருக்கிறதா, உயிர்நாடி விழுந்துவிட்டதா என்றால், leasing company என்ற ஒரு கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்தபொழுது, அதைப் பின்பற்றி 350 கம்பெனிகள் நாட்டில் எழுந்தன என்பது மக்களுக்கு உயிர்நாடி துடிப்புடனிருக்கிறது என்று பொருள். 1960இல் ஆங்கில மீடியம் நர்சரிப் பள்ளிகள் வந்தவுடன் புற்றீசல்போல் அப்பள்ளிகள் நாட்டில் பரவின. செயலாற்றும் திறன் இல்லாவிட்டால் இது நடக்காது. புது விஞ்ஞானப் பசுமைப் புரட்சியைப் பாமர மக்கள் ஏற்று, 10 ஆண்டுகளில் நாட்டின் உணவு உற்பத்தியை இரு மடங்காக்கினர். உலகம் பாராட்டும் அளவில் நாடு இன்றுவரை தேர்தல் நடத்துவதும் அத்தகையதே.

டாட்டா கம்பெனியில் சிறந்த டெக்னிஷியன்கள் கிராமத்துப் பிள்ளைகளாக உள்ளார்கள். அன்று இந்தியா பெற்றிருந்த திறமை, உடல் பெற்ற திறமையாக இருந்தால் அது நசித்துப் போயிருக்கும். அது ஆன்மா பெற்ற திறமை என்பதால் உயிருடனிருக்கிறது. சந்தர்ப்பம் வந்தவுடன் மேலெழுகிறது. பாடமுறையை மாற்றியவுடன் 2ஆம் வகுப்புக் குழந்தைகளும் ஜூனியர் ஆங்கிலக் கலைக் களஞ்சியத்தைச் சரளமாகப் படிக்கிறார்கள் எனில், நாட்டில் அன்று ஜீவன் பெற்ற ஆத்மா இன்றும் உயிருடனிருக்கிறது. அது வெளிவரும் வழியை நாம் கல்வியிலும், தொழிலும் தரவேண்டும். அப்படிச் செய்தால் சீனுவாச ராமானுஜம் விதிவிலக்காக இல்லாமல் விதியாக மாறும்.

 

******

ஸ்ரீ அரவிந்த சுடர்

மரியாதை, பிரியம், நன்றி ஆகியவை உயர்ந்தவை, உண்மை என அறிவோம். ஒரு வரம்புக்குள் அவை உண்மையே. வரம்பு மாறினால் அவையும் மாறும். வரம்பு மாறுவதாலோ, சந்தர்ப்பம் மாறுவதாலோ மாறாத பிரியம், நன்றி அரிது.

அப்படிப்பட்டவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மரியாதை தவறாமல், பிரியம் குறையாமல், நன்றி மறக்காமல் செயல்படுவார்கள். அத்துடன் இக்குணங்களை அவர்கள் எல்லோரிடமும் - வித்தியாசமின்றி - வெளிப்படுத்துவார்கள்.

உண்மை, வரம்பு மீறினாலும் உண்மையே.

 

 



book | by Dr. Radut