Skip to Content

07.தரிசனம்

"அன்னை இலக்கியம்"

தரிசனம்

இல.சுந்தரி

The Spirit of Beauty expresses itself in these eyes. In a single glance I know the history of the person is before me - The Mother.

பிரபல தொழில் நிறுவனம் ஒன்றின் சுறுசுறுப்பான இடைவேளைக்குப் பிற்பட்ட நேரம். அவரவர் தத்தம் பணியை நிறைவு செய்யக் கவனம் செலுத்தும் மாலை நான்கு மணி. இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில் அன்றைக்கு நிறைவு செய்ய வேண்டிய பணியை நிறைவு செய்ய அவரவர் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது, மீனா இன்னும் நான்கு தினங்கள் அனுமதிக்கப்பட்ட வேலையை முன்னதாக முடிக்க ஆர்வம் காட்டினாள். ஆனால் இப்போதெல்லாம் தொடர்ந்து கம்ப்யூட்டரில் கவனம் செலுத்த முடியாதபடி உடல் ஒரு சுமுகமின்மை ஏற்படுகிறது.

கடந்த சில நாட்களாகத் திடீர் திடீரென நெஞ்சு வலி வருகிறது. இரவு நேரத்தில் வந்தால் தன் ஆதரவற்ற நிலையை எண்ணி அச்சம் உண்டாகிறது. வேலை நேரத்தில் வந்தாலோ, தன் தம்பி, தங்கைகளின் எதிர்காலம் பற்றிக் கவலை வருகிறது. இன்று காலை அலுவலகம் வரும் போது தான் தன் நெருங்கிய தோழி அருணாவிடம் இது பற்றிக் கூறினாள். இத்தனை நாள் இது பற்றி ஏன் தன்னிடம் கூறவில்லை என உரிமையுடன் கடிந்து கொண்டதுடன், இன்று அலுவலகம் முடிந்தவுடன் நேரே வீட்டிற்குப் போகாமல் டாக்டரிடம் அழைத்துப் போகப் போவதாய்க் கூறியிருந்தாள். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், செலவில்லாமல் வீட்டிலேயே ஏதேனும் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டாள். ஆனால் இப்போது திடீரென்று தொடர்ந்து வலிக்கிறது. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. வலி தாங்காமல் வேலையை நிறுத்திவிட்டு,மெல்ல எழுந்து அருணாவின் கேபினுக்குச் சென்றாள். மிகுந்த சோர்வுடன் எதையோ உள்ளடக்கிக்கொண்டு தன்னருகே வந்து நிற்கும் மீனாவைப் பார்த்த அருணா திடுக்கிட்டாள். "என்ன மீனா? ஏன் என்னவோபோல் இருக்கிறாய்? முகமெல்லாம்வியர்த்திருக்கிறது. நெஞ்சு வலியா?'' என்று ஆதுரத்துடன் மெல்ல அவள் தோளில் கை வைத்தாள்.

சோகமும், வலியும் ஆதரவு காட்டுமிடத்தில் பெரிதுபடுவது இயற்கை அல்லவா? கண்கள் கலங்கி கண்ணீர் வெளிவரத் துடித்ததை அடக்கிக் கொண்டாள்.

"அருணா, மிகவும் நெஞ்சு வலிக்கிறது. மேற்கொண்டு சிறிதும் ஏதும் செய்ய முடியவில்லை. எனக்கு வீட்டிற்குப் போய்விடத் தோன்றுகிறது. மானேஜரிடம் எப்படிக் கேட்பது?'' என்றாள்.

மணி 4. இன்னும் ஒரு மணி நேரம் அலுவல் நேரம். அதனால் தான்

மீனா தயங்குகிறாள்.

"கவலைப்படாதே மீனா. இது விளையாட்டு விஷயமில்லை. உன் உடல் நலம் பற்றியது. நாம் உடனே மருத்துவமனைக்குப் போக வேண்டும். நீ காலையில் உன் உடல்நிலை குறித்துச் சொன்னபோதே இன்று மாலை உன்னை மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். மானேஜரும் மனிதர்தாம். அவருக்கு உன் உண்மை நிலையைச் சொன்னால் புரிந்துகொள்வார். நான் பர்மிஷன் வாங்கிவிடுவேன், புறப்படு'' என்று கூறியவாறு தன் டேபிளின் மீது உள்ளவற்றை நினைவாக எடுத்து அதனதனிடத்தில் வைத்து, டிராயரைப் பூட்டி சாவியை எடுத்துக் கைப்பையில் போட்டுக்கொண்டாள்.

"திடீரென்று டாக்டரிடம் போக நிறைய பணம் தேவைப்படுமே அருணா''.

"எல்லாம் என்னிடமிருக்கிறது. சற்று இப்படி உட்கார். நான் இப்பொழுது வந்துவிடுவேன்'' என்று கூறிச் சென்று, கணப்போதில் பர்மிஷனுடன் வந்துவிட்டாள்.

****

மீனா தாய், தகப்பனை இழந்தவள். 24 வயதே ஆன இளம்பெண். இவளுக்கு 6ஆம், 7ஆம் வகுப்புகளில் பயிலும் ஒரு தம்பியும், தங்கையும் இருந்தனர். தானே தாயும், தந்தையுமாயிருந்து அவர்களைப் படிக்க வைத்து வளர்க்கிறாள். அவள் இப்பொழுது பார்க்கும் இந்த வேலை கிடைத்து ஆறே மாதங்கள் ஆகின்றன. மிகச்சிறு வயதில் தாய் இறந்தாள். சென்ற ஆண்டு தந்தையும் காலமானார். காலத்தின் கட்டாயம் அவளை வேலை பார்க்க வைத்தது. அப்பா இருந்தவரை வீட்டுப் பொறுப்பு மட்டும்தான் அவளுக்கிருந்தது. அவள் திறமையும், உழைப்பும், நேர்மையும் இந்த உயர்ந்த சம்பளத்திற்குரிய வேலை உடனே கிடைத்தது. அருணா என்றுமே அவளுக்கு உண்மையான தோழியாய் இருக்கிறாள். தன்னலுவலகத்தில் மீனாவிற்கு வேலை வாங்கித் தந்தது அவள் தான். அவள் வார்த்தையைக் காப்பாற்றக் கூடியவளாய் மீனா உழைத்தாள். மிக விரைவில் அவளுக்கு மேன் மேலும் பொறுப்புகள் தர நிறுவனம் காத்திருந்தது. ஆனால் எதிர்பாராமல் சில தினங்களாக அவளுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அருணா மீனாவின் தாய், தகப்பனற்ற நிலையை நன்குணர்ந்து இருந்தாள். தங்கள் காலனியில் அருகில் அவளுக்கு வீடு பார்த்துக் கொடுத்திருக்கிறாள். குடும்பக் கவலை ஏதுமில்லாதவள். அம்மா, அப்பா, அண்ணன் மூவரின் அன்பிற்கும் உரியவள். எனவே, தன் தோழியைப் பாதுகாக்க அவளுக்கு முடிந்தது.

மீனா கூச்சசுபாவமுள்ளவள். ஏற்கனவே அருணா தனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறாள். ஆடைகள் கூட மீனாவிற்கும் சேர்த்துத்தான் அருணா வாங்குவாள். மேன் மேலும் அவளுக்குப் பாரம் ஆகக்கூடாதுஎன எத்தனையோ கஷ்டங்களை வாய்விட்டுச் சொல்ல மாட்டாள். தன் நெஞ்சுவலி பற்றியும் கூறாது மறைத்திருந்தாள். இளம் வயது; தாய், தந்தையர் இல்லை; கவலையறிய வேண்டாத பருவத்தில் இருக்கும் தம்பி, தங்கைகள்; அவர்கள் படிப்பு, எதிர்காலம்; கடும் உழைப்பு; தன்னலமில்லாமல் அவர்கள் நலம் கருதி யாவும் செய்வது; கண்முன் எதிர்காலம் மலைப்பாகத் தோன்றி அச்சுறுத்துவது; யாவுமாய்ச் சேர்ந்து சிறிது சிறிதாய் அவளை நவடையச் செய்ததன் விளைவு இந்த நெஞ்சுவலி; இதயம் பலவீனமடைந்தது.

நெஞ்சுவலி என்றதும் மணியன் நர்சிங் ஹோம் உடனே நினைவுக்கு வந்தது. இது பற்றி அருணா ஓரளவு அறிந்திருந்தாள். அதன் நிறுவனர் மணியன் அவர்களின் மனைவி கடும் இதயநோயினால் பாதிக்கப்பட்டு தக்க நேரத்தில் சரியான மருத்துவ உதவி பெற முடியாததால் இறந்து போனாராம். மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மணியன்,மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்துபோன தன் மனைவியை எண்ணி மிகவும் வேதனைப்பட்டார். திடீரெனத் தம் தொழில் ஏற்பட்ட ஏற்றத்தால் பெரும்பொருள் கிடைக்கவே, யாருமில்லாத அவர், தம் மனைவியின் நினைவால் சிறந்த மருத்துவமனை ஒன்றை நிறுவி, சிறந்த இதய சிகிச்சை மருத்துவர்களைக் கொண்டு நோயுற்றவர்க்கு உதவினார்.

இங்கு நோய் பரிசோதனைக்குப் பணம் செலவில்லை. கன்சல்டிங் இலவசமாய்த் தரப்பட்டது. சிறப்பு வைத்தியம், அறுவைசிகிச்சை போன்றவற்றிற்கு உரிய பணம் கட்டவேண்டும். இங்கு மற்றும் ஒரு சிறப்பிருந்தது. செல்வர்கள் தம் பிறந்தநாள், மற்றும் சில விசேஷ நாட்களில் இம்மருத்துவமனைக்குப் பெருந்தொகையோ, இயன்ற தொகையோ செலுத்துவதுண்டு. எந்த நோயாளிக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதோ அதற்குரிய உண்மையான செலவுக்கணக்குப் பணம் அனுப்பியவருக்குக் கொடுக்கப்படும். மீதித்தொகை இருப்பின் அது அந்த ஏழை நோயாளிக்கே வழங்கப்பட்டுவிடும். இம்மருத்துவமனையில் இலஞ்சம், ஊழல் இல்லை. சிலரே சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள். பெரும்பாலும் இங்குத் தொண்டாகப் பணி செய்பவர்கள் அதிகம். பணக்காரர்கள் பணம் செலவிட்டு இங்கு நல்ல முறையில் சிகிச்சை பெறுகின்றனர். மிகஇயலாதவர்கள் யார் உதவியுடனாவது சிகிச்சை பெறுவர். எவ்வாறெனினும் முறையான, அக்கறையான மருத்துவ உதவி செய்யும் சிறந்த மருத்துவமனையாய்த் திகழ்ந்தது. எனவே, அருணா மீனாவை அங்கு அழைத்துச் சென்றாள்.

மீனாவுக்கு அம்மருத்துவமனை பற்றி ஒன்றும் தெரியாது. பெரிய அளவிலும், மிகத்தூய்மையாகவும் காணப்பட்ட அம்மருத்துவமனையைக் கண்டவுடன் மீனா தனக்கு என்னவாக இருக்கும், எவ்வளவு செலவு பிடிக்கும், தன்னிலைக்கு இந்த உயர்ந்த மருத்துவமனை சரிவருமா?என்றெல்லாம் கவலை உண்டாயிற்று.

சிறப்பு மருத்துவர் ஒருவர் மீனாவைப் பரிசோதித்தார். ஸ்கேன் செய்ய ஏற்பாடு செய்தார். ஸ்கேன் முடிந்து வெளியே வந்ததும், அவர்களைத் தன்னறையில் உட்காரச் செய்துவிட்டு, அவசரப் பணியாக அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றுவிட்டு சில நிமிடங்களில் வந்தார்.

வந்தவுடன் அருணா, மீனா என்ற அந்த இரண்டு பெண்களுடன் பேசத் தயாரானார். ஆனால் விரைவாக ஏதும் சொல்லாது, அவளுக்குத் தற்போதுள்ள உடல் தொந்தரவுகள் என்னென்ன என்று கேட்டு அறிந்தார். அவள் என்ன படித்திருக்கிறாள்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள்? ஏன் அவள் பெற்றோர் உடன்வரவில்லை? என்பது போன்ற கேள்விகளை ஒரு நண்பரைப் போல் பரிவுடன் விசாரித்தார்.

அவளுக்குப் பெற்றோர் இல்லை என்று அறிந்தவுடனேயே, அவசரப்பட்டு அவளிடம் கூறக் கூடாது என எச்சரிக்கையானார்.

அருணா தான் முதலில் பேசினாள். "என்ன ரிசல்ட்வந்திருக்கிறது

டாக்டர்? என் தோழியின் இதயம் நலமாகத்தானேயிருக்கிறது?'' என்று பதற்றத்துடன் கேட்டாள்.

"ஆமாம், ஆமாம். இதயம் நலமாகத்தானிருக்கிறது. ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்வது நல்லது'' என்று இயல்பாகச் சொல்ல முயன்றார்.

மீனா நுண்ணறிவு கொண்டவள். டாக்டர் உடனே ஏதும் சொல்லாமல், இத்தனை பேச்சுக் கொடுத்து தாமதமாக வெளியிடும்போதே ஏதோ இருக்க வேண்டும் என்று தோன்றியது. செலவு பற்றி வேறு கவலையாக இருந்தது.

"அச்சப்படும்படி ஏதேனும் இருக்கிறதா டாக்டர்?'' என்றாள் மீனா.

"சிறு பெண். பெற்றோரும் இல்லாதவள். பாவம், இவளிடம் எப்படிச் சொல்வது? இவளுக்கு விரைவில் அறுவைசிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து நேரும் நிலையில் இருக்கிறாள். அதிர்ச்சியும் கூடாது'

என்று மிகவும் உணர்ந்த டாக்டர், "இல்லையம்மா, அப்படியெல்லாம் அச்சப்படும்படி ஒன்றுமில்லை. இந்தக் காலத்தில் எத்தனை வசதி வாய்ப்புகளிருக்கின்றன. நீ படித்த பெண். சிறிது தொடங்கும் போதே நோயைக் கிள்ளியெறிவது புத்திசாலித்தனமல்லவா? அதனால்தான் உடனே அறுவைசிகிச்சை செய்வது நல்லது என்று நினைக்கிறேன்''என்று கூறினார்.

"செலவு அதிகம் ஆகுமா டாக்டர்?'' என்று கவலையுடன் கேட்டாள் மீனா.

"ஓரளவு செலவாகும்தான். ஆனால் உடனே நலமாகிவிடுவாய்'' என்றார்.

மேலும் சில விபரங்கள் கூறவேண்டும். அருணாவிடம் மட்டும் கூறுவது நல்லது என்று எண்ணிய டாக்டர், "சரி, எதுவாக இருப்பினும் இப்போது சாப்பிட மாத்திரை எழுதித் தருகிறேன். அருணா, உங்கள்

தோழியை வெளியே உட்கார வைத்துவிட்டு இந்த மாத்திரைகளை இங்குள்ள எங்கள் மருந்தகத்திலேயே வாங்கி வாருங்கள். மாத்திரையை என்னிடம் காட்டியபிறகு உங்கள் தோழிக்குக் கொடுக்கலாம் என்பதால் வாங்கி, என்னிடம் எடுத்து வாருங்கள். எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதைச் சொல்கிறேன். உங்கள் தோழி சற்றுச் சோர்வாக இருப்பதால்,அலைச்சல் வேண்டாம் என்பதால் அவர்களை உட்கார வைத்துவிட்டு நீங்களே வாங்கி வரலாம் என நினைக்கிறேன்'' என்றார்.

எப்படியும் மீனாவிற்கு மிகவும் வலியும், சோர்வுமிருந்தது. சிறிது வெளியே போய் உட்காரவே விரும்பினாள்.

"நீ போய் மருந்து வாங்கி, டாக்டரிடம் காட்டிவிட்டு, எப்படிச் சாப்பிட வேண்டும் என்ற முறைகளை அறிந்து வா. நான் வெளியே உட்கார்ந்து இருக்கிறேன்'' என்று வெளியே நீண்ட குஷன் பெஞ்சில் போய் சாய்வாக அமர்ந்தாள்.

மீனாவுக்குத் தெரியாமல், அவள் உடல்நிலையில் உள்ள கடுமையை அருணாவிடம் கூறி, அறுவைசிகிச்சை உடனடியாகச் செய்ய வேண்டியதைக் கூறவே மீனாவை உட்கார வைத்துவிட்டு மாத்திரையை வாங்கி வந்து தன்னிடம் காட்டும்படி டாக்டர் கூறினார்.அருணா அங்கேயே உள்ள மருந்தகத்தில் அங்குள்ள டாக்டரின் பிரிஸ்கிரிப்ஷனுக்கு மட்டும் பணம் பெறாமல் கொடுக்கப்படும் மாத்திரையைப் பெற்றுக் கொண்டு, மீனாவைப் பரிசோதித்து மாத்திரை எழுதித் தந்த டாக்டர் பிரகாஷ் என்பவரின் அறைக்கு வந்தாள்.

"வாருங்கள் அருணா. எங்கள் மருந்தகத்தில் நாங்கள் எழுதித் தரும் மாத்திரைகளைப் பிழையின்றி எடுத்துத் தருவார்கள். எங்கள் (இந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள்) மருந்து சீட்டுகளுக்குப் பணமும் பெறமாட்டார்கள். ஆனால் உங்களை இங்கு வரச் சொன்னது உங்கள் தோழியின் உடல்நிலை பற்றி அவர்களுக்குத் தெரியாமல் உங்களிடம் சொல்வதற்காகவே. அவர்கள் இப்போதுள்ள நிலையில் அதிர்ச்சி, கவலை எதுவும் கூடாது. அத்துடன் மிக விரைவில் இன்றோ, நாளையோ கூட இங்குச் சேர்த்துவிடுவது நல்லது. ஒரே வாரத்தில் பேஷண்டை தயார் செய்து அறுவைசிகிச்சை செய்துவிடுவோம். அதன்பிறகு கவலையில்லை'' என்றார்.

"என்ன செலவாகும் டாக்டர்?'' என்றாள் அருணா.

"ஒரு இலட்சம்கூட ஆகலாம். ஆனால் இங்கு வீண் செலவு எதுவும் கிடையாது'' என்றார்.

அவள் பெற்றோர் இல்லாத பெண். வேறு சொத்து என்று எதுவும் கிடையாது. அவளுக்குச் சிறிய தம்பி, தங்கைகள் படிக்கும் பருவத்தினர்.என்னால் இயன்ற அளவு செலவு செய்வேன். என் சேமிப்பெல்லாம் சேர்த்தாலும் 20, 30 ஆயிரங்களைத் தாண்டாது'' என்று உருக்கமாகச் சொன்னாள்.

"இங்கு உதவி பெற ஒரு வழியுண்டு. இன்று ஏதேனும் நன்கொடை வந்தால், அதை உங்கள் தோழியின் செலவுக்கு நான் சிபாரிசு செய்கிறேன். இதை உங்கள் தோழியிடம் சொல்ல வேண்டாம். ஏதேனும் காரணம் சொல்லி, சற்று அவர்களைச் சமாளித்து வெளியே காத்து இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். ஏதேனும் வழி பிறக்கும். இன்று தாமதமானாலும், நாளையும் ஒரு முறை வந்து பாருங்கள்'' என்றார் டாக்டர்.

"சரி' என்ற கூறி, வெளியே மீனாவை நோக்கி வந்தாள். மீனா கையில் ஒரு சிறிய படம் போன்ற ஒன்றை வைத்து, ஆடாமல் அசையாமல் அதில் ஆழ்ந்திருந்தாள். அருகில் வந்த அருணா, "என்ன மீனா, நான் வந்ததுகூடத் தெரியாமல், அப்படி ஆடாமல், அசையாமல் எதை நோக்கித் தவம் செய்கிறாய்?'' என்று கேட்டாள்.

"இதைப் பாரேன்'' என்று மிகுந்த ஆர்வத்துடன் ஒரு சிறிய லேமினேட் செய்யப்பட்ட அட்டையை அவளிடம் நீட்டினாள்.

"அப்படி இவள் ஆழ்ந்து பார்க்கும்படி அதில் என்னதானிருக்கும்' என்று கை நீட்டி வாங்கி, அதை ஆவலுடன் பார்த்தாள். அதில் இரண்டு கண்களின் படம் இருந்தது. ஒளி வீசும் கண்கள் என்று யார் பார்த்தாலும் தெரியும்.

"யாருடைய கண்கள் இவை? கண்கள் மட்டும் உள்ள ஒரு புகைப்படத்தை இப்பொழுதுதான் முதன்முதலில் பார்க்கிறேன்'' என்றாள் அருணா.

"யாருடைய கண்கள் என்பது எனக்கும் தெரியவில்லை. நான் இங்கு வந்து உட்கார்ந்தவுடன் இந்தப் பெஞ்சில் இந்தப் படமிருந்தது. அக்கம்பக்கத்தில் யாரையும் காணவில்லை. யாரோ கை தவறி இதை இங்கு விட்டுச் சென்றிருக்க வேண்டும். இது என்னவாக இருக்கும் என்று எடுத்துப் பார்த்தேன். கண்கள் படம். இதைப் பார்த்தவுடன் எனக்கு ஏதேதோ தோன்றியது. இந்தக் கண்கள் என்னை ஊடுருவிப் பார்ப்பதுபோல், இவை என்னிடம் ஏதோ சொல்வதுபோல்கூடத் தோன்றுகிறது. உனக்கு ஏதும் தோன்றுகிறதா?'' என்றாள்.

"எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் இதன் பின்பக்கம் பார்த்தாயா? ஏதோ எழுதப்பட்டிருக்கிறது'' என்றாள் அருணா.

உடனே ஆர்வமாக அதை வாங்கிப் பார்த்தாள் மீனா. அதில் "The Spirit of beauty expresses itself in these eyes. In a single glance I know the history of the person who is before me.'' என்று சிறியதாக அச்சிடப்பட்டு இருந்தது. இருவரும் வியப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"மீனா, இதை நாம் கடவுளின் கண்கள் என்றே எண்ணிக் கொள்வோம். நீ இதைப் பார்த்து இத்தனை உணர்ந்திருக்கிறாய். நிச்சயம் உன் நிலை இறைவனுக்குப் புரிந்து, உனக்குப் பதில் தருவதாய்க் கொள்வோம். கவலைப்படாதே. இந்த மாத்திரையைச் சாப்பிடு. இதை இப்போதும், இரவிலுமாகச் சாப்பிடவேண்டும்'' என்றாள்.

"நான் டாக்டரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். நீ இந்தக் கண்களைப் பார்த்துப் பேசிக்கொண்டிரு'' என்று அன்புடன் அவள் முதுகை வருடிக் கொடுத்துச் சொன்னாள். தன்னிடம் அருணா காட்டும் பரிவையும், அக்கறையையும் கண்டு மீனா நெகிழ்ந்துபோனாள்.

"வாருங்கள் மிஸ் அருணா. உங்கள் தோழியின் தேவை இறைவனுக்குத் தெரிந்தேயிருக்கிறது'' என்றார். (சற்றுமுன் மீனாவிடம் புகைப்படத்திலுள்ள கண்களைப் பார்த்துத் தான் கூறியதற்கும், டாக்டர் தன்னிடம் இப்போது கூறுவதற்கும் எவ்வளவு ஒற்றுமை என்று உள்ளூர உணர்ச்சிவயப்பட்டாள்).

"என்ன சொல்கிறீர்கள் டாக்டர்?'' என்றாள் அருணா.

"நீங்கள் அப்பால் சென்றவுடன் இங்கு அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு செய்தி அனுப்பினார்கள். அதில் உங்கள் தோழியின் பெயரைக் குறிப்பிட்டு, அவருக்குத் தேவையான உதவியைச் செய்யத் தாம் மிகவும் கடமைபட்டுள்ளதாயும், தாம் மிக அவசரமாய் வெளிநாடு சென்று கொண்டு இருப்பதாயும், அவர் திரும்பி வரும்போது மீனாவின் உடல்நலம் குறித்த நல்ல செய்தியைக் கேட்க விரும்புவதாயும், தாம் உதவுவது மீனாவுக்குத் தெரியவேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தது'' என்றார்.

"உதவி செய்பவர் பெயரை நான் அறியலாமா டாக்டர்?'' என்றாள்.

"இல்லை அருணா. உதவி செய்தவர் தம் பெயரைக் கூற வேண்டாம் என்பதை நான் மீற முடியாது. மீனாவிற்கு அறுவைசிகிச்சை முடிந்து விரைவில் நலமாகி விடுவாள். அப்போது மீனாவின் மூலமே நீங்கள் அதை அறியக் கூடும். இப்போதைக்கு வேண்டாம்'' என்றார் டாக்டர்.

"சரி டாக்டர். நாங்கள் எப்போது வைத்தியத்திற்கு வரவேண்டும்? இங்குள்ள முறைகள் என்ன?'' என்றாள்.

"இதோ, இந்தப் படிவத்தை நிறைவு செய்து இன்றே கொடுத்து விடுங்கள். நாளையே உங்கள் தோழியை இங்குச் சேர்த்துவிடுவது நல்லது'' என்று ஒரு படிவத்தை அவளிடம் கொடுத்தார்.

"மீனா, நீ நாளையே இங்குச் சேர்ந்துவிடலாம். இந்தப் படிவத்தை நிறைவு செய்து கொடுத்துவிட்டுப் போவோம். விரைவில் நீ நலமடைந்து

பழையபடி ஆகிவிடுவாய் என்று டாக்டர் சொல்லிவிட்டார்'' என்று உற்சாகமாய்க் கூறினாள்.

"சிறுகுழந்தைபோல் பேசுகிறாய் அருணா. ஓரளவு நிறையப் பணம் செலவாகும் என்று டாக்டர் சொல்லவில்லையா? அவ்வளவு பணத்திற்கு நாம் என்ன செய்ய முடியும்?'' என்றாள் மீனா.

"அந்தக் கவலை உனக்கேன்? டாக்டரே எல்லாம் பார்த்துக் கொள்வதாய்ச் சொன்னார்'' என்றாள்.

"டாக்டர் வைத்தியம் தான் செய்வார். பணம் கூட அவரே செலவு செய்வாரா?'' என்றாள்.

", அதுவா? இங்கு நமக்குப் பல வசதிகள் உண்டு. இங்குள்ள டாக்டரின் பிரிஸ்கிரிப்ஷனுக்கு பணம் வாங்காமல்தான் மாத்திரை கொடுத்தார்கள். டாக்டர் பிரகாஷ் உன்னைப் பற்றி அறிந்ததும் உன்னை தம் மகளாய்ப் பாவித்து உதவிகள் செய்கிறார்'' என்றாள் அருணா.

"சரி, வேலையை விட்டுவிட்டு மாதக்கணக்கில் இங்கிருந்தால் தம்பி,

தங்கைகளின் படிப்பு மற்றும் தேவைக்கு எங்குப் போவது? நீ ஏற்கனவே என் பாரங்களைச் சுமக்கிறாய். இனியும் நான் உன் மீது சுமை வைக்க விரும்பவில்லை'' என்றாள் மீனா.

"பெரிய மனுஷிபோல் ஒன்றும் பேசாதே. ஒன்றரை மாதத்தில் நீ வேலைக்கே போகலாம்'' என்றாள் அருணா.

"ஒன்றரை மாத லீவு என்ற சலுகை, வேலையில் சேர்ந்து ஆறே மாதங்களாகும் எனக்குப் பொருந்துமா?'' என்றாள் மீனா.

"இந்த வேலை போனால் இன்னொன்று. நீ நாளைய கவலையை விடு. பொறுப்புகளை முழுவதும் இறைவனிடம் விட்டு விடுவோம். நீ வீட்டிற்கு வரும் வரை உன் தம்பியும், தங்கையும் எங்களுடன் இருப்பார்கள். நாங்கள் உன் அன்பர்கள்தாம்'' என்றாள் அருணா.

"யாவும் சரி என்றாலும், உன் பெற்றோரிடம் பேசி முடிவெடுக்க வேண்டாமா? பெரியவர்கள் இருக்கும்போது நாமே முடிவெடுப்பது சரி இல்லை'' என்றாள் மீனா.

"இப்பொழுது படிவம் நிறைவு செய்து கொடுத்துவிட்டுப் போவோம்.வீட்டில் பெரியவர்களிடம் சொல்வோம். இவ்வளவு முக்கியமான ஒன்றை அவர்கள் ஒருபோதும் மறுக்கமாட்டார்கள்'' என்றாள் அருணா.

கையில் வைத்திருந்த கண்களைத் தற்செயலாக மீண்டும் பார்க்க நேர்ந்தது. "In a single glance, I know the history of the person who is before me'' என்ற தொடர் நெஞ்சைத் தொட்டது. "இந்த விழிகள் யாருடையன? இறைவனுடைய பார்வையோ இது? இதன்முன் நிற்கும் என் நிலையையும் இக்கண்கள் அறியுமோ?' என்ற போக்கில் எண்ணம் எழுந்தது.

"என்ன யோசிக்கிறாய் மீனா?'' என்றாள் அருணா.

"இறைவனுக்கு என் நிலைமை தெரியும் என்று முன்பு சொன்னாய் அல்லவா? அதை நினைத்தேன்'' என்றாள் மீனா.

ஒருவாறு நாளை காலைவர முடிவு செய்து, படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டுத் திரும்பினர்.நினைவாக அந்தக் கண்களைத் தன்னுடன் மீனா எடுத்துக் கொண்டாள்.

வீட்டிற்குத் திரும்பியதும், அருணாவின் பெற்றோருடன் இவள் தம்பி,தங்கைகள் இவளைக் காணாது காத்திருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் மீண்டும் கலங்கினாள்.

அருணா தன் வீட்டினர்க்கு மீனாவின் நிலைமையைத் தெளிவு படுத்தினாள். அவர்கள் அன்புடன் மீனாவிற்குத் தைரிய மூட்டினர்.

அன்றிரவு முழுவதும் மீனா சரியாக உறங்கவில்லை. அந்தக் கண்களைப் பார்ப்பதும், அதிலுள்ள வாசகங்களையும் எண்ணி இருந்தாள். "இது யாருடைய கண்கள்? இது ஏன் இப்பொழுது தன் கையில் கிடைத்திருக்கிறது' என்று எண்ணத் தோன்றியது. தற்செயலாகக்

கிடைத்த அந்தக் கண்களில் அவளுக்கு ஏதோவொரு நம்பிக்கை எழுந்தது. அதைத் தன்னுடையதாக எண்ணித் தன்னுடனேயே வைத்துக் கொள்ளத் தோன்றியது. 'In a single glance I know history' இந்தத் தொடருக்கும் தனக்கும் தொடர்பு உள்ளதாக நம்பினாள்.

மறுநாள் காலை அருணாவின் பெற்றோரும் உடன் வந்து மீனாவை மருத்துவமனையில் சேர்த்தனர். உடனே அவள் அடுத்த வாரமே அறுவை சிகிச்சைக்குத் தயாராகும்படி மருந்துகள் கொடுத்துக் கவனிக்கப்பட்டாள். டாக்டர் பிரகாஷ் மீனாவின் பொறுமை, கடமையுணர்வு, தணிந்த இயல்பு, இவற்றுடன் பெற்றோரில்லாத இவள் நிலை யாவும் கண்டு அவள்பால் மிகுந்த கருணையுடையவரானார். உண்மையாகவே அவளைத் தம் மகள்போல் பாவித்து மருத்துவம் மேற்கொள்வதைக் கண்டு, உடனிருந்த மருத்துவர்களும், பணிப்பெண்களும் அவளுக்குத் தனிக்கவனம் செலுத்தினர்.

"தானிருந்த நிலையென்ன? தனக்கு நடக்கும் மரியாதைகளென்ன?

இது எப்படிச் சாத்தியமாயிற்று?' என்று வியந்தாள் மீனா. ஒரே வாரத்தில் அறுவைசிகிச்சை நலமாய் முடிந்து, அவளும் உடல்நிலை தேறலானாள்.

ஒரு மாதம் அங்கேயே வைத்திருந்து மருந்து, சத்துணவு சரியான முறைகளுடன் அனுசரிக்கப்பட்டது. நாள் தவறாது அருணாவின் இல்லத்தவர்களுடன் அவள் தம்பி, தங்கை இருவரும் அழைத்து வரப்பட்டனர். தன் அக்காவிற்கு ஏதோ நேர்ந்துவிட்டது என அஞ்சியிருந்த சிறுவர்கள் அவள் தேறியிருப்பது கண்டு மகிழ்ந்தனர். அனைவரின் பரிவும், மகிழ்வும் அவளுக்கு இதமளித்தது.

அவள் புதிய மீனாவாக உருவானாள். பழைய கவலைகள், மலைப்பான சிந்தனைகள் யாவும் கரைந்துபோயின. உடல்நலமாக உணர்ந்தாள். அடிக்கடி வரும் நெஞ்சுவலி அறவே நீங்கியது. எதிர்காலம் ஒளிமயமாய்த் தோன்றியது. தன்னால் நல்ல முறையில் உழைக்க முடியும், தம்பி, தங்கைகளைப் படிக்கவைக்க முடியும்என்று தோன்றியது. இவை எல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று? தானிருந்த நிலையில் இந்தப் பெரிய வைத்திய உதவியைப் பெற்றிருக்க முடியுமா?

டாக்டர் பிரகாஷ் தன்னை அவர் மகள் போல் பாவித்து இரவு, பகல் பாராமல் பாடுபட்டது, அவர் மீது மரியாதை கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் தன்னைத் தம் தொழில்கடந்த நிலையில் கவனித்துக் கொண்டது, தனக்கு விலையுயர்ந்த மருந்துகள் தருவிக்கப்பட்டது,யாவுமே கனவா, நனவா என்று எண்ணும்படியிருந்தது.

தன் தலையணைக்கடியில் எப்போதும் அந்தக் கண் படத்தை வைத்திருந்தாள். அடிக்கடி அதை எடுத்துப் பார்த்துக்கொள்வாள்.கண்கள் பேசும் என்று கேட்டும், படித்தும் இருக்கிறாள். யார் கண்களுடனும் அவள் பேசியதில்லை. முதன்முதலாக அவள் இந்தக் கண்களுடன்தான் பேசியிருக்கிறாள். இது எவருடைய கண்? இது ஏன் எனக்குக் கிடைத்தது?

கடும்நெஞ்சுவலியுடன் தான் மருத்துவமனையில் நுழைந்தது,

மருத்துவச் செலவு பற்றி மலைத்தது, இந்தக் கண்கள் படம் கிடைத்ததும் அதன் பின்னுள்ள வார்த்தைகளை அருணா சுட்டியது, உடனே டாக்டர் தன் பொறுப்பில் மருத்துவச் செலவு மற்றும் யாவற்றையும் ஏற்றது என்பவற்றை எண்ணிப் பார்க்கிறாள். அந்தக் கண்களைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

சப்தமிடாது உள்ளே வந்த டாக்டர் பிரகாஷ், அவள் கையில் எதையோ வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டு, அதில் தான் குறுக்கிடக்கூடாது என்ற நாகரிகவுணர்வுடன் திரும்ப எத்தனித்தார். மீனா அப்போது அவரைக் கவனித்துவிட்டதால், "வாருங்கள் டாக்டர்'' என்றாள். கையிலிருந்ததை மறைக்கவில்லை, பதற்றப்படவில்லை என்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.

"என்ன மீனா? எப்படியிருக்கிறாய்? எதை அப்படி ஆழ்ந்து பார்க்கிறாய்'' என்றார்.

"ஆமாம் டாக்டர். இதை உங்களிடம் காட்டவேண்டும் என்றுதான் நினைத்தேன். பாருங்கள். இதைப் பார்த்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்கள்'' என்று அந்தக் கண் படத்தை

அவரிடம் கொடுத்தாள்.

யாருடைய புகைப்படமாகவோயிருக்கும் என்று அதை வாங்கிய டாக்டர் அது கண்கள் படம் என்பதைப் பார்த்து வியந்தார். பிறகு சற்று உற்றுப் பார்த்தார்.

"இந்தக் கண்களில் அபரிமிதமான ஒளி தெரிகிறது. உன்னை எனக்குத் தெரியும். என்னை உனக்குத் தெரிகிறதா என்று கேட்பதைப் போலிருக்கிறது. சற்று ஆழ்ந்து பார்த்தால் நம்முள்ளே நுழைவதுபோல் இருக்கிறது. அன்பு, ஆதரவு, யாவுமே தெரிகிறது. நிச்சயம் இது உன் அம்மாவின் கண்களாகத்தானிருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பார்வையில் தெரியும் பரிவு ஒரு தாயினுடையது. ஆனால் இப்படிக் கண்களை மட்டும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்பவர்களை நான் அறிந்ததில்லை. யாருமே முகம் முழுவதையுமே படம் எடுத்து வைத்துக் கொள்வார்கள். இது எப்படிக் கண்கள் மட்டும் புகைப்படம் எடுத்தீர்கள்?''என்றார்.

அவர் பேசும்வரை அமைதியாகக் குறுக்கிடாமல் இருந்துவிட்டு, லேசாகப் புன்முறுவல் செய்தாள்.

"என்ன சிரிக்கிறாய்? நான் சொல்வது சரியா, தவறா?'' என்றார்.

"நீங்கள் கூறியதில் பாதி சரி, பாதி தவறு'' என்றாள்.

"என்ன சொல்கிறாய் நீ!'' என்று வியப்புடன் கேட்டார்.

"ஆமாம் டாக்டர். அந்தக் கண்களில் தெரியும் பரிவு ஒரு தாய்க்கு உரியது என்பது சரி. அந்தக் கண்கள் என் அம்மாவின் கண்கள் என்பது தவறு. நான் இங்கு மருத்துவப் பரிசோதனைக்கு வந்தபோது பெரும் வேதனையுடன் வந்தேன். என் உடல்நிலையைப் பரிசோதித்து நீங்கள், அறுவை சிகிச்சைக்கு ஓரளவு செலவாகும் என்றதும், மேலும் உடனடியாகச் செய்ய வேண்டும் என்றதும் நிலை குலைந்துபோனேன். என்னை வெளியே காத்திருக்கச் சொன்னபோது, நான் அமர்ந்த பெஞ்சில் என்னருகே இந்தக் கண் படம் இருந்தது. ஏதோவொரு ஆர்வத்தில் எடுத்துப் பார்த்தேன். என்னென்னவோ தோன்றியது. அப்போதைய என் உடல்நிலை, பெருஞ்செலவு,யாவற்றையும் மறந்து,

இந்தக் கண்களை இரசிக்க ஆரம்பித்தேன். அது தரிசனம் என்று இப்போது தோன்றுகிறது. அப்போது உங்களிடம் பேசிவிட்டு வந்த அருணா, "நாளையே வைத்தியம் தொடங்கவேண்டும். டாக்டரே யாவும் கவனித்துக் கொள்வதாய்ச் சொல்லியிருக்கிறார்' என்றாள். இந்தக் கண்களைத் தரிசித்த பிறகுதான் அந்தச் செய்தி கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அதன்பின் எழுதப்பட்டுள்ள வாசகத்தைப் பாருங்கள். அது என் நெஞ்சைத் தொட்டது. எனவே, இதை நான் பற்றிக் கொண்டேன்'' என்று சொல்லும்போதே உணர்ச்சிவயப்பட்டாள்.

"எல்லாம் இறைவன் செயலே. இப்போது உன் உடல்நிலை நன்கு தேறிவிட்டது. நீயும் அதை உணர்கிறாயா?'' என்றார் பரிவுடன்.

"ஆமாம் டாக்டர். அதை நானும் உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் நான் வேலையில் சேரவேண்டும். என் தம்பி,தங்கையின் எதிர்காலத்திற்கு நான் உழைக்க வேண்டும். என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை'' என்றாள்.

"உண்மையில் நீ எனக்கு நன்றி சொல்வதற்கு முன்பாக இந்த மருத்துவத்தை உனக்களிக்க ஏற்பாடு செய்த உங்கள் குடும்ப நண்பருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்'' என்றார்.

"யார்? அருணாவின் அப்பாவிற்கா? அருணாதானே நீங்களே செலவுப் பொறுப்புகளை ஏற்பதாகவும், இங்கு மாத்திரைகூட இலவசமாக அவள் பெற்று வந்ததாகவும் கூறினாளே'' என்றாள் மீனா.

"இல்லையில்லை. அருணா வீட்டினரைச் சொல்லவில்லை. அப்போதைய நிலையில் நான் ஏற்பதாகச் சொல்ல வேண்டியிருந்தது.உன் உடல்நிலையைச் சோதித்து, உனக்குப் பெருந்தொகை செலவாகும் என நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு நபரிடமிருந்து ஈமெயில் வந்தது. அதாவது உனக்கு உதவத் தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், சொன்னால் நீ மறுத்துவிடுவாய் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.அத்துடன் அப்போது அவர் U.S சென்று கொண்டிருப்பதால் விரைவில் நேரில் வந்து உன்னைப் பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது அவர் தம் பெயரைக் கூற வேண்டாம் என்றதால் கூறவில்லை.

அருணாவிடமும் கூறவில்லை. இப்போது நீ நன்கு தேறியுள்ளதால் நன்றிக்குரியவரைக் கூற முன்வந்தேன்'' என்றார் டாக்டர்.

"அப்படியா! வியப்பாக உள்ளது. எனக்கு அவர் கடமைப்பட என்ன இருக்கிறது? அவர் பெயரையாவது கூறுங்கள் டாக்டர்'' என்றாள்.

"அவர் பெயர் வைத்யநாதன் என்றிருந்தது'' என்றார் டாக்டர்.

"இந்தப் பெயரில் இந்த அளவிற்கு எனக்கு யாரையும் தெரியாது'' என்றாள் மீனா.

"அவர் உன் அப்பாவின் நெருங்கிய நண்பர் என்று எழுதியிருந்தார்''.

"இல்லை டாக்டர். ஏதோ மாறுபாடு நிகழ்ந்திருக்கிறது. என் அப்பாவிற்கு நெருங்கிய நண்பர்கள் கிடையாது. குறிப்பாக இந்தப் பெயரில் இல்லவேயில்லை. சொல்லப்போனால் என் அப்பா யாருடனும் நன்றாகப் பழகக்கூடியவரே இல்லை'' என்றாள் மீனா.

"இன்னும் சில தினங்களில் அவரே வந்துவிடப் போகிறார். உன்னைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாயும் தெரிவித்திருக்கிறார். நேரில் பார்த்தால் உனக்கே தெரியும்'' என்றார்.

அடுத்த இதழில் முடியும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

ஆபத்தைச் சமர்ப்பணம் செய்வது சிரமம்.

ஆசையைச் சமர்ப்பணம் செய்யத் தோன்றுவதில்லை.

மனத்தளவிலாவது செயலளவிலாவது ஆசையை அனுபவிக்கவே மனிதன் விழைகிறான்.

ஆசையைச் சமர்ப்பணம் செய்வது சிரமமானாலும் அவசியம்.

. ஆபத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியாது.

. ஆசையைச் சமர்ப்பணம் செய்யத் தோன்றுவதில்லை.


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut