Skip to Content

09.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                  (சென்ற இதழின் தொடர்ச்சி....)      கர்மயோகி

 879) எதுவும் முடியாத பொழுது நம்பிக்கையை நாடுகிறோம். எல்லாம் முடியும் என்ற பொழுது நம்பிக்கையை நாடும் ஆன்மா உயர்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அத்துடன் அன்னையின் உறவை அனுபவிக்கிறது. இனி வரும் எச்செயலும் அன்னையிடம் நெருங்கி வரும் சந்தர்ப்பமாக அறிகிறது.

எதுவும் முடியாத பொழுது செய்வனவற்றை எல்லாம் முடியும் பொழுது செய்ய வேண்டும்**.

எதுவும் முடியாத பொழுது அழைத்த அன்னையை எல்லாம் முடியும்பொழுது அழைப்பது அன்னையை நெருங்குவதாகும். முடிந்தபொழுது அழைக்கும் அழைப்பு சமர்ப்பணம்.

.முடியாததை முடியுமாறு செய்வது திறமை.

. திறமை பலிப்பது பயிற்சியால்.

.பயிற்சியின் உயர்வை நிர்ணயிப்பது அறிவு.

.அறிவின் தரம் நம்பிக்கையால் நிர்ணயிக்கப்படும்.

.முடியாததை திறமையால், பயிற்சியால், அனுபவத்தால், அறிவால் முடியும்படிச் செய்வதைவிட நம்பிக்கையால் செய்து முடிப்பது ஆன்மீக முறை.

.நம்பிக்கை என்பது ஆன்மாவின் அறிவு என்கிறார் பகவான்.

.ஆன்மா பெற்றதன் பிரதிபப்பு

மனத்தில் காண்பது நம்பிக்கை எனவும் கூறலாம்.

.அதையே மனத்தில் அறிவு எழுமுன் செய்து முடிக்கும் திறமை எனக் கூறலாம்.

.ஆன்மாவின் அறிவு மனத்தின் நம்பிக்கையானால், அதே நம்பிக்கை மனத்தில் தெளிவான அறிவாவது ஆன்மீக முன்னேற்றம். அதைச் செய்து முடிப்பது மேற்சொன்ன** உபாயம்.

."எனக்கு எடுத்து விளக்க முடியாது. செய்யத் தெரியும். செய்தால் பலிக்கும் என நம்பிக்கையுடையவர் கூறுகிறார். அதற்குப்பதிலாக "எனக்கு எடுத்து விளக்க முடியும், செய்யத் தெரியும், செய்தால் பலிக்கும் என விளக்க முடியும்" என்பது நம்பிக்கை அறிவாக மலர்வது.

.இந்த மாறுதல் மனதில் ஏற்பட மேற்சொன்ன உபாயம் பயன்படும்.

.இந்த உபாயமில்லாமல் தானே இம்மாறுதல்வர என்ன செய்ய வேண்டும்,அது எப்படி நடக்கிறது? ஆத்மாவில் ஏற்பட்ட ஜோதி மனத்தில் இறங்கி வந்து ஞானமாகி, அறிவாக மலர்வதை நாம் சில சமயங்களில் கண்டிருக்கிறோம். மேடையில் பேசும்பொழுது ஓர் உற்சாகம் வந்து (inspiration) தன்னையறியாமல் சொற்கள் சரமாரியாகப் பொழிந்து கைதட்டல் ஆரவாரமாகிறது. கொஞ்ச நாட்கள் கழித்து இந்த உற்சாகம் inspiration தெளிவான எண்ணமாக மனதில் உதிப்பதை நாம் கண்டிருக்கலாம். மேடையில் பேசுபவருக்கு வரும் உற்சாகம், நண்பருடன் பேசுபவருக்கும் வரும். உற்சாகம் என்பது ஆன்மீக சக்தி. எண்ணம் என்பது மனத்தின் தெளிவு. ஆன்மீக சக்தி மனத்தின் தெளிவாகச் சிந்தனை உதவும். மௌனம் பெரிதும் உதவும்.

.அறிவில் தெளிவுள்ளவர் சிந்தனையையும், ஆன்மாவில் பக்குவமுள்ளவர் மௌனத்தையும், அந்தச் சிறப்புகளற்றவர் மேற்கூறிய உபாயத்தையும் மேற்கொள்ளலாம்.

.நம்மால் முடிந்தால் செய்கிறோம்.

.முடியாவிட்டால் முயல்கிறோம்.

.முடியும்பொழுது செய்வது தன் நம்பிக்கை.

.திறமையிருந்தால் பிறரை நம்ப முடியாது.

.திறமையை நம்புவது இயற்கை.

.திறமை தன்னை வெளிப்படுத்தவே செயலை ஆரம்பிக்கும்.

.திறமைக்கு ஜீவனுண்டு.

.அகந்தைக்கும் ஜீவனுண்டு.

.திறமை அகந்தையை வலுப்படுத்தும்.

.முடியாதபொழுது அன்னையை அழைக்கிறோம்.

.அழைப்பால் சற்று முடியும் போலிருந்தால்அன்னையை மறந்து திறமையை நம்புகிறோம்.

.முடியாதபொழுது அழைப்பது இயல்பு, இயற்கை.

.நம்மால் முடியும் பொழுது அன்னை நினைவு வாராது.

.எந்த நினைவும் வாராது.

.முடியும் பொழுது அன்னையை அழைப்பவருக்கு இடைவிடாத அன்னை நினைவிருக்கும்.

.முடிந்தபொழுது அன்னையை அழைத்தால் அன்னை வேண்டும் எனப் பொருள்.

.செயலைவிட அன்னை முக்கியம் என்பவரால் மட்டும் செய்யக் கூடியது அது.

.அன்பருக்கு அன்னையின்றி செயல்பட முடியாத நிலை அது.

.அன்னை மூலம் செய்யாத செயல் தேவையில்லை என்ற மனநிலை அது.

.அன்னைக்காக வாழ்பவர் அவர்.

.நாம் நமக்காக வாழ்கிறோம்.

.செயலைப் பூர்த்தி செய்ய விரும்புகிறோம்.

.இந்த அன்பர் செயல்மூலம் அன்னையைத் தன்னில் பூர்த்தி செய்ய விரும்புபவர்.

.மனிதப் பிறவியை அன்னையை அடைவதற்காக எடுத்தவர் அவர்.

.அது பிரார்த்தனையில்லை.

.சமர்ப்பணமுமில்லை.

.இரண்டறக் கலப்பதாகும்.

 

****

880) செயலைச் சமர்ப்பணம் செய்வதைவிட அதன் விவரங்களைச் சமர்ப்பணம் செய்வது கடினம். இதற்கு நம்பிக்கை விவரமாக இருக்க வேண்டும்.

சமர்ப்பணம் விவரமானால் கடினமாகும்.

.படிக்காத தகப்பனார் பையன் காலேஜில் படிக்க அனுமதித்தால் பணம் தருவார். அதற்குமேல் அவரால் பையன் படிப்பைப் புரிந்து கொள்ள முடியாது.

.படித்த தகப்பனாருக்குப் பையன் படிப்பின் விவரங்களெல்லாம் தெரியும்.அவற்றுள் பங்கு கொள்வது அவ்வளவு சுலபமன்று. விவரமான சமர்ப்பணம் அது போன்றது.

.வட்டிக் கடைக்காரன் கம்பனிக்குக் கடன் கொடுப்பதும், பாங்க் கடன் தருவதும் இதுபோன்றது. வட்டி கொடுத்துவிட்டால் கடைக்காரன் எதுவும் கேட்க மாட்டான். பாங்க் பிராஜக்ட் ரிப்போர்ட்டி லிருந்து ஸ்டாக் ஸ்டேட்மெண்ட்வரை அனைத்தையும் கேட்கும். வந்து பார்வையிடும்.

.விவரமான சமர்ப்பணம் செய்ய, விவரம் தெரிய வேண்டும்.

.பயணம், டிக்கட் வாங்குவது, இன்டர்வியூக்குப் போவது, பதில் சொல்வது ஆகியவற்றை விவரமாகச் சமர்ப்பணம் செய்ய சமர்ப்பணம் எப்படி வேறுபடுகிறது எனத் தெரிவது அவசியம். டிக்கட் வாங்க வரிசையில் நிற்பதைச் சமர்ப்பணம் செய்ய நிற்க பொறுமையிருக்காது என்பதை சமர்ப்பணம் செய்ய வேண்டும். இன்டர்வியூவைச் சமர்ப்பணம் செய்ய டென்ஷனைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். நமக்குத் தெரிந்த பதிலைச் சொல்லும் ஆசையைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். சமர்ப்பணம் எவ்வளவு விவரமாக இருக்கிறதோ அந்த அளவுக்குப் பலன் உண்டு.

.அட்மிஷனுக்குப் போகும் பையன் பொதுவாகச் சமர்ப்பணம் செய்தால் அட்மிஷன் கிடைக்கும். விவரமாகச் சமர்ப்பணம் செய்தால் அதன் பலன் பிறகு தெரியும். ஹாஸ்டல் நல்ல ரூம் கிடைக்கும்பொழுது,செக்ரடரியாகத் தேர்ந்தெடுக்கப்படும்பொழுது, ஸ்காலர்ஷிப் கிடைக்கும் பொழுது, பேச்சுப் போட்டியில் பரிசு பெறும்பொழுது, அன்று இன்டர்வியூவில் செய்த சமர்ப்பணத்தின் சுவடுகள் தெரியும்.

.விவரமான சமர்ப்பணம் முழுமையான சமர்ப்பணம்.

.ஒரு காரியத்தைச் சமர்ப்பணம் செய்யும்பொழுது, அதன் எதிர்கால வரலாறு முழுவதையும் சமர்ப்பணம் செய்யலாம். எதிர்காலப் பலன் அதை அறிவிக்கும்.

.சமர்ப்பணம் விவரமாக இருப்பதுபோல் தீவிரமாக இருக்க முடியும்.

.விவரமும், தீவிரமும் கடந்து நெகிழ்ந்த சமர்ப்பணம் உண்டு.

.ஒரு செயலில் உலகம் அடங்கும் என்பதால் ஒரு செயலின்

.சமர்ப்பணமான வாழ்வைவிடப் பெரிய சந்தோஷமில்லை என்று அன்னை கூறியதின் பொருள் இதில் தெரியும்.

தொடரும்.....

****

ஜீவிய மணி

அறிவும், உணர்வும் கலந்து அமிர்தமாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு விஷயம் புரிந்தால் அதைப் பற்றிச் சிந்திப்பதில்லை; துரோகம் செய்தவரை நினைப்பதில்லை எனில் அனுபவத்தால் ஆன்மா விழிப்படைகிறது. புரிந்தபின் சிந்தனையில்லை.

துரோகத்தை மறப்பது ஆன்ம விழிப்பு.


 

 

 



book | by Dr. Radut