Skip to Content

11. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

281. Pride and Prejudice நாவலில் டார்சி எலிசபெத் மேல் பிரியம் கொள்வதிலிருந்து நல்ல personality கொண்ட பெண்கள் பொருளாதார ரீதியாகத் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் தங்களுடைய personalityயின் பலத்தை வைத்துக்கொண்டு தங்களைவிட பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் இருக்கும் ஆடவர்களின் கவனத்தைக் கவர்வார்கள் என்று தெரிகிறது.

282. டார்சியை எலிசபெத் உதறி தள்ளுவது நமக்கு அர்த்தமற்றதாகத் தெரியலாம். ஆனால் நாம் அதை அவளுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்க வேண்டும். சகோதரியின் மேல் அவள் வைத்திருந்த பிரியத்தை பார்க்கும்பொழுது சகோதரியின் சந்தோஷத்தைக் கெடுத்த டார்சியை உதறித் தள்ளுவதுதான் அவளுக்குச் சரி என்றாகிறது.

283. விக்காமுடைய போலியான நன்னடத்தை உண்மையான பர்சனாலிட்டியைப் போலியான பழக்கம் எந்த அளவுக்கு மறைக்கும் என்பதற்கு நல்ல உதாரணமாகிறது.

284. ஐந்து பெண்பிள்ளைகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும்என்ற நிர்ப்பந்தம் எந்த ஒரு தாயாரையும் நிதானம் இழக்கச் செய்துவிடும்என்பது திருமதி. பென்னெட் அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து தெரிகிறது.

285. தன்னை எலிசபெத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று காலின்ஸ் வற்புறுத்துவது தன்னைப் பற்றி தானே உயர்ந்த அபிப்பிராயம் கொண்டவர்கள் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறியாமல் இருப்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

286. எலிசபெத் வேண்டாம்என்று உதறித் தள்ளிய காலின்ஸை சார்லெட் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறாள். அவரவர் செய்தது அவரவர் கண்ணோட்டத்திலிருந்து சரி.

287. லிடியா வீட்டை விட்டு ஓடியது அவளுடைய குடும்பத்தில் நிகழ்ந்த பெரிய அசம்பாவிதமாகும். ஆனால் அந்த அசம்பாவிதத்தின் மூலம்தான் டார்சியின் பெருந்தன்மை வெளிப்பட்டு, அதன் பலனாக எலிசபெத்திற்கு அவன்மேல் பிரியம் வந்தது. ஒரு குடும்பத்திலுள்ளவர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும்பொழுது அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்க்கை இப்படிப்பட்ட அசம்பாவிதங்களை வரவழைக்கிறது.

288. டார்சியின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப கரோலின் பிங்கிளி எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் வீணாகி, டார்சி மேலும் மேலும் எலிசபெத்தை நெருங்கும்படிச் செய்கிறது. ஒருவருடைய நிலைமை தாழ்ந்து இருக்கும்பொழுது நிலைமையை மீறிய செயல்பாடுகள் எதிரான பலன்களையே தரும்.

289. லிடியாவை வெளியூருக்கு அனுப்ப வேண்டாம்என்று எலிசபெத் கொடுத்த எச்சரிக்கையை பென்னெட் உதாசீனம் செய்கிறார். உதாசீனம் செய்யும்பொழுது வாழ்க்கை நடுராத்திரியில் எச்சரிக்கை வழங்குகிறது. ஆரம்ப எச்சரிக்கைகளை நாம் உதாசீனம் செய்யும்பொழுது வாழ்க்கை இப்படிக் கடுமையாக நடவடிக்கை எடுப்பதுண்டு.

290. திருமதி. பென்னட்டினுடைய கட்டுப்பாடில்லாத நடத்தையும், தந்திரங்களை கடைப்பிடிக்கும் பழக்கமும், லிடியா வீட்டைவிட்டு ஓடுவதில் போய் முடிகிறது. சிறு தவறுகளை வாழ்க்கை மன்னித்துவிடும். ஆனால் மகளின் தவறான மனப்போக்கை கண்டிக்கவேண்டிய தாயார் கண்டிக்காமல் அதை ஆதரிப்பதென்பது விபரீதத்தில்தான் முடியும்.

291. ஜேனும், பிங்கிளியும் திருமணம் செய்துகொள்வது தடைப்பட்டு தாமதமாகித்தான் நடக்கிறது. அவர்களுடைய சமூக அந்தஸ்த்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளே இதற்குக் காரணம். இருவரும் சம அந்தஸ்த்தில் இருந்திருந்தால் டார்சியால் குறுக்கிட்டிருக்க முடியாது.

292. ஜார்ஜியானாவுடன் ஓடிப்போக வேண்டுமென்று விக்காம் போடுகின்ற திட்டம் டார்சியின் உஷார் நடவடிக்கைகளால் கெட்டுப்போகிறது. ஆனால் லிடியாவுடன் போடுகின்ற திட்டம் பலிக்கிறது. இதற்குக் காரணம் லிடியாவின் தகப்பனாருடைய அஜாக்கிரதைதான்.

293. விக்காமினுடைய கடனையெல்லாம் டார்சி தீர்ப்பதால் அவன் முறைப்படி லிடியாவைத் திருமணம் செய்துகொள்கிறான். டார்சி கடனையெல்லாம் அடைக்காமல் இருந்திருந்தால் விக்காம் லிடியாவை நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போயிருப்பான். இதிலிருந்து மனிதர்களுடைய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த பணம் எந்த அளவுக்கு உதவுகிறது என்று தெரிகிறது.

294. கேத்ரின் டீபெர்க் எலிசபெத்தைத் தேடிவந்து திட்டுவதுஎன்று ஒரு நிகழ்ச்சி கதையில் இருக்கிறது. எலிசபெத்தைத் தன்னிடத்திற்கு அழைக்காமல் தான் அவளிடத்திற்குச் சென்று சந்திப்பதுஎன்பது பிரபு ம்சத்தினுடைய அதிகாரம் குறைந்துவருவதைக் காட்டுகிறது.

295. பெம்பர்மாளி கையைப் பார்ப்பதும் டார்சியின் வீட்டுப் பணிப்பெண் சொல்லிய வார்த்தைகளும் எலிசபெத்திற்கு டார்சியின் மேலிருந்த அபிப்பிராயத்தை நல்லவிதமாக மாற்றின. ஓர் ஊழியருடைய மகனால் வந்த பிரச்சினை இன்னொரு விசுவாசமான ஊழியருடைய பேச்சால் தீர்கிறது. சூழ்நிலை டார்சிக்குச் சாதகமாக மாறுவதை இது காட்டுகிறது.

296. நல்லெண்ணம் ஐஸ்வர்யத்தை கொண்டு வருகிறதுஎன்பது எலிசபெத் பெம்பர்மாளி கைக்கு எஜமானியாவதிலிருந்தும் சார்லெட்டிற்கு விரும்பிய வரன் கிடைத்ததிருந்தும் தெரிகிறது. எலிசபெத் திற்குத் தன்னுடைய சகோதரி மேல் நிறைய நல்லெண்ணம் இருந்தது. சார்லெட்டிற்கு பென்னெட் சகோதரிகள் இருவர் பேரிலும் நல்லெண்ணம் இருந்தது.

297. டார்சியின்அத்தை மேடம்டிபெர்க் டார்சிக்கு எலிசபெத் மேலிருந்த பிரியத்தைக் கண்டித்துப் பேசியபொழுது அவர்கள் விரும்பிய பலனுக்கு எதிர்மாறாக டார்சியைத் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று எலிசபெத் திற்குத் தெரியவந்தது. நெகடிவ் பர்சனாலிட்டி உள்ளவர்கள் இம்மாதிரி சில நேரங்களில் நல்ல விளைவுகளுக்கும் காரணமாவார்கள்.

298. திருமதி. பென்னெட்டிற்கு அவருடைய இளவயதில் ஒரு ராணுவ வீரர் மேல் வந்த மோகம் அவருடைய மகள் வாழ்க்கையில் பூர்த்தியாயிற்று. தாயார் கட்டுப்படுத்தி வைத்திருந்த ஓர் ஆசை மகள் வாழ்க்கையில் பூர்த்தியாவதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

299. டார்சி மற்றும் எலிசபெத் இருவருமே ஒரே சமயத்தில் மனமாற்றத்தைக் கொண்டுவருவதால் இருவரிடையே இறுதியில் சுமுகம் பிறக்கிறது. மனமாற்றத்தில் வெற்றி காண்பதால் இருவரும் sincere ஆனவர்கள் என்று நாம் சொல்லலாம்.

300. டார்சியின் சம்மதம் கிடைத்த பிறகுதான் பிங்கிளியால் ஜேனைத் திருமணம் செய்துகொள்ள முடிந்தது. திருமணத்தைத் தடுத்து நிறுத்தியவரே டார்சி என்பதால், டார்சி வழிவிட்ட பிறகுதான் திருமணமும் நடக்கிறது.

தொடரும்.....

***
 



book | by Dr. Radut