Skip to Content

12. லைப் டிவைன் கருத்து

"Life Divine" - கருத்து

திருவுருமாற்றத்திற்கு ஆன்மீக அறிவு (Spiritual Intelligence) தேவை.

புலன்களுக்குப் புலப்படுவது உணர்வு. புலன்களைக் கடந்து மனத்திற்குப் புலப்படுவது அறிவு. ஒரு பழம் ருசியாக இருக்கிறது, சப்பென இருக்கிறதுஎன்பது உணர்வு. ஆரோக்கியத்திற்கு இப்பழம் உதவும் அல்லது உதவாதுஎன்பதை எந்தப் புலனும் கூறாது. அதை மனம் மட்டுமே அறியும். அது அறிவு. அறிவு பல வகையின. உடலுக்குரிய அறிவும், உணர்வுக்குரிய அறிவும், மனத்திற்குரிய அறிவும், ஆன்மாவுக்குரிய அறிவும் வேறுபடும். மனிதர்களையறிவது உணர்வுக்குரிய அறிவு. பொருள்களை அறிவது உடலுக்குரிய அறிவு. கருத்து விளங்குவது, மனத்தின் அறிவு. ஆன்மாவுக்குரிய அறிவு என்பது உடல், உயிர், மனம் அறிய முடியாதது. வெளியூர் போகிறோம். ஒரு பார்க்குக்கு வந்தால் அங்கு அமைதி தழுவுகிறது. அது சப்தமற்ற அமைதியில்லை; மௌனமான அமைதி. அதன் விசேஷம் புரிகிறது,என்னவென்று புரியவில்லை; விசாரித்தால் அந்தப் பார்க்கின் வட எல்லையில் ஒரு மகானின் சமாதியிருப்பதாக அறிகிறோம். அது ஆன்மீக அறிவு.

நாம் மேற்கொள்ளும் வேலைகளுக்கு இலக்குண்டு. பரீட்சை எழுதினால் பாஸ் செய்யவேண்டும். கேஸ் நடத்தினால் ஜெயிக்க வேண்டும். முதலீடு செய்தால் இலாபம் பெறவேண்டும். எந்த வேலைக்கும் ஓர் இலக்குண்டு. யோகத்தை மேற்கொண்டவனுக்கு எல்லா வேலைகளிலும் உள்ள ஒரே இலக்கு, திருவுருமாற்றம். அவன் பரீட்சை எழுதினால் பாஸ் செய்வதைவிட அவன் சுபாவம் மாற வேண்டும். பொதுவாக அவசரப்படும்குணம் உள்ள அவன் பரீட்சையை அவசரமின்றி எழுதினால் அது திருவுருமாற்றம். அதன் வழி எல்லாப் பாடங்களிலும் அதிகமார்க் வரும். கேஸ் நடத்துபவன் கேஸுக்குத் தகுந்தாற்போல் எந்தப் பொய்யையும் சொல்லும் குணம் உடையவனெனில், அவன் திருவுருமாற்றத்தை நாடினால், கேஸ் ஜெயிப்பதைவிட கேஸ் மூலமாக பொய்யைவிட்டு மெய்யை நாட வேண்டும்.

  • இந்த யோகம் திருவுருமாற்றத்தால் பூர்த்தியாகிறது.
  • திருவுருமாற்றத்திற்கு ஆன்மீகஅறிவு தேவை.

ஆன்மீகஅறிவு

நிகழ்ச்சிகள் நமக்குரிய செய்திகளைச் சொல்கின்றனஎன்பது ஆன்மீகஅறிவு. பெருமுயற்சி செய்து பல மாதங்களாகத் தயாரித்த விழா சிறப்பாகப் பூர்த்தியாகும் நேரத்தில், நடத்துபவர் கார் லாரி மீது மோதி சேதம் ஏற்பட்டது. இத்தடை "விழாவைக் கைவிடு' எனப் புரிந்துகொள்ளலாம். பொறாமை நிறைந்த சூழல் விழா நடக்க இருப்பதால், லாரி பொறாமைக்காரரது என்பதால், அன்பர் "இந்த சேதம் பொறாமையின் எதிர்ப்பு அழிந்ததைக் காட்டுகிறது'' என்கிறார். அவர் கணக்குப்படி அன்றும், அடுத்த பெரிய நாளிலும் விழா சிறப்பாக நடந்தேறியது. தொடர்ந்தும் அதன் சிறப்பு 12 மாதம் விளங்கியது. நிகழ்ச்சிகள் கூறுவதை அறிவது ஆன்மீகஅறிவு.

***

ஸ்ரீ அரவிந்த சுடர்

எல்லாம் ஒன்றில், ஒன்றில் எல்லாம்என்று ஆயிரம் மையங்கள் ஏற்பட்டால், முறை போய் சுதந்திரம் வரும்.

ஆயிரம் மையங்கள் ஏற்பட்டால் முறை போய் சுதந்திரம் வரும்.
 


 


 



book | by Dr. Radut