Skip to Content

14. மலரும் மணமும்

"அன்னை இலக்கியம்"

மலரும் மணமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)

மகேஸ்வரி

"சத்தியத்தை மட்டுமே உயிர் என்று ஏற்பதன் மூலமாக அன்னையை நம் உள்ளமெனும் கோயில் பிரதிஷ்டை செய்யலாம்'' என்று அன்னையை ஏற்றுக்கொள்வதென்றால் எப்படிஎன்பதற்கு விளக்கம் கொடுக்க மல்லிகை ஆரம்பித்தாள். எல்லோருடைய கவனமும் அவள் மீது திரும்பியது. தென்னரசுவின் முகம் காணக் கிடைக்காத பூலோகச் சொர்க்கம் இது தான் என்பதைப் போல் மலர்ச்சியுடன் ஒரே ஒரு வினாடிகூட அகலாது, அணையாது நிமிர்ந்து நிற்கின்ற தீபத்தின் சுடரென பிரகாசம் அடைந்தது.

"மனம், உணர்வு, உடல் என்ற மூன்று நிலைகளிலும் சத்தியம் என்பதே உயிர்மூச்சாக இருந்தால் மட்டுமே இக்கோயிலை ஆரம்பிக்க முடியும். நம் நம்பிக்கையென்பது திறமை, சுபாவம், முயற்சி, குடும்பம், சமூகம்என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த அடிப்படையிலிருந்து விலகி, அன்னையை அந்த இடத்தில் ஏற்க வேண்டும். அன்னை, பகவான் சொல்லியிருக்கின்ற விஷயங்களை வேதவாக்காக மதிக்க வேண்டும். அவர்கள் இருவரும் சொல்லாத விஷயங்களே இல்லை.

இப்படிப்பட்ட அன்னையை முதல் கட்டத்தில் ஏற்றுக்கொண்டு இருக்கிறோமென்றால் நமக்கு வாழ்க்கை பிரச்சினை இல்லாததாக மாற வேண்டும். இதுதான் நாம் ஏற்றுக்கொண்டிருப்பதன் அடையாளம் ஆகும். அடுத்தடுத்த கட்டங்களில், சந்தோஷம் என்றுமே அகலாது நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும், தோல்வியை அறியாத வாழ்க்கையை பார்க்கவேண்டும்.

முதலில் எல்லோருமே அன்னையைத் தெய்வமாக ஏற்று வழிபட ஆரம்பித்தாலும், சிறிது சிறிதாக நம் முழு வாழ்வையும் அன்னையிடம் முழுமையாக, பூரணமாக ஒப்படைக்கவேண்டும்.

நடந்ததை, கேட்டதை, நடக்கப்போவதை அன்னையிடம் ஒப்படைப்பதன் மூலமாக காலத்திலிருந்து நகர்ந்து, காலத்தைக் கடந்து, காலத்துள் வாழ்ந்தாலும் காலத்தில் காலத்தை விலக்கி செயல்படுவதன் காரணமாக நிம்மதியாக, நிதானமாக, "ஆட்டம் அவனே, ஆட்டுவிப்பவனும் அவனே, அரங்கமும் அவனுடையதே' என்ற உண்மையை ஒவ்வொரு நிகழ்விலும் பார்ப்பதே நம்முடைய எண்ணம், உணர்வு, உடல், ஆன்மாவென்கின்ற ஜீவனின் சிகரத்தில் அன்னையை ஏற்பதாகும். அன்னை விரும்புகின்ற, அன்னையாக மாறுகின்ற நிலை இறுதி கட்டமென்றாலும் அவரவர்க்கேற்ற நிலையிலும் அன்னையை ஏற்கலாம்.

அன்னை மட்டுமே முடிவு. அவர் காட்டும் வழியைப் பார்த்து தெளிந்து, அதன்படி விழிப்பாக நடப்பது ஒரு நிலை.

நம் குறை, இருள், பாவம், கர்மம், குணக்கேடுகள், சுபாவம், தர்மம், இவைகளை எந்தெந்த அளவில் புறக்கணித்து வாழ்க்கையில் செயல்படுகின்றோமோ அந்தந்த நிலையில் அன்னையை ஏற்று வாழ்வை நடத்தலாம்.

சுருக்கமாகச் சொன்னால்

நம்மை நம்பாமல், நம் திறமையை, செல்வத்தை, செல்வாக்கை, குடும்பத்தை, சமுதாயத்தை ஏற்காமல், அன்னையை மட்டுமே நம்பி, "அவர் காட்டும் வழியே என் வழி'யென அவ்வழியில் நடப்பதே அன்னையை முழுமையாக வாழ்க்கையில் ஏற்பதாகும்'' என்று முடித்தாள்.

"எவரெஸ்ட் சிகரத்தை கன்னியாகுமரியில் நின்று பார்க்க முயல்வதுபோன்றுதான் நானிருக்கிறேன்'' என்றார் முகுந்தன்.
"அன்னையை ஏற்பதென்பது ஆகாயத்தில் நடப்பதுபோலஎன்று எப்பொழுதோ படித்ததாக நினைவு'' என்ற ரோஜா, "எது எப்படி இருந்தாலும் அன்னை நம்மை ஏற்றுக்கொண்டிருப்பதால் ஏதோ ஒரு நிலையில் நானும் அன்னையை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்சத்தியத்தை, பெரிய விஷயங்களில் எல்லாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறேன். சின்னஞ்சிறு விஷயங்களில் மட்டும் நழுவிவிடுகின்றதுவிஷயம் முடிந்தபிறகு, அதாவது கோணலாகும் பொழுதுதான் புரிகிறது என் சௌகரியத்திற்கு நடந்து கொண்டிருக்கிறேன் என்று. நிச்சயமாக எனக்கு நம்பிக்கையிருக்கிறது, அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் அதிலிருந்து விலகாமல் இருக்க வேண்டிய முயற்சியை எடுக்கவேண்டியது என்னுடைய பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்றாள்.

தென்னரசுவின் சிந்தனை எங்கோ சென்றிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அவன் ஒன்றுமே பேசாமல் மல்லிகைக்கு ஒரு நமஸ்காரம் செய்தான். "உங்களிடம் சரணடைந்துவிட்டேன். இனி என்னை மேலே தூக்கிவிடுவது உங்கள் பொறுப்பு. என் குறைகளை உங்களிடம் விடுகின்றேன். குறையோ, நிறையோ, கர்மமோ, பாவமோ, சுபாவமோ, தர்மமோ, எதுவாக இருந்தாலும் உங்கள் காலடியில் போட்டு விடுகின்றேன். என்னை எது செய்தாலும் அது என்னுடைய பாக்கியம். நீங்கள் என்னை எப்படிக் கையாள வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படிச் செய்துக்கொள்ளுங்கள். எனக்கு, என்னுடைய வளர்ச்சிக்கு என்ன வேண்டும்என்பது என்னைவிட உங்களுக்குத்தான் அதிகமாகத் தெரியும். நான், நீங்கள் வரும்பொழுதெல்லாம், என்னை நோக்கி பார்க்கும்பொழுதெல்லாம் விழிப்புடன் மட்டுமே இருக்கவேண்டும். கண்மூடியாக இருளில் மூழ்கிவிடக்கூடாது. என்னில் உங்களை எப்பொழுதும் காணும் பாக்கியத்தை என்றென்றும் எனக்குத் தந்து அருளுங்கள்'', இதை பிரார்த்தனையாக அவன் செய்யவில்லை; குழந்தையாக நின்று பிதற்றினான். அவன் கேட்பதன் விவரம் அவனுக்கே முழுமையாகப் புரியவில்லை என்றாலும் கேட்டது நிச்சயமாகக் கிடைக்கும்என்ற பரிபூரண நம்பிக்கையில் இருந்தான். மனதின் சத்திய ஒளி தனக்குத் துணையாக நின்று வழிகாட்டி அழைத்துச் செல்லும் என்று நம்பினான். வாழ்க்கை என்பது கணக்குப் போடுவதுபோன்றது. முறை சரியாக தெரிந்து வாழ்ந்தால் விடையும் சரியாகவரும். எந்தக் காயை எப்படி நகர்த்தினால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்று தெரிந்து செயல்பட்டால் நம் வழிக்கு வாழ்க்கையைக் கொண்டு வர முடியும். வாழ்க்கையின் பிடியில் சிக்கித் தவிக்காமல், நம் பிடியில் வாழ்க்கையைக் கொண்டு வந்தால், கையிலுள்ள பிடியை அன்னையிடம் ஒப்படைப்பதென்பது மிகமிகச் சுலபம். பிடியை வாழ்க்கையின்கையில் விடக்கூடாதுஎன்பதை தென்னரசு புரிந்து கொண்டான்.

***

தென்னரசு தனக்கு வந்திருக்கின்ற e-mails பார்த்துக் கொண்டிருந்தான். உடனடியாகக் கவனிக்க வேண்டியதென வந்திருந்ததில் முதலாவதை "கிளிக்" செய்தவனின் முகம் அதை படிக்கப் படிக்க விசாலமாகிக் கொண்டே சென்றது.

"மல்லிகை உங்களிடம் பேச வேண்டுமே, இப்பொழுது முடியுமா?'' என்று கைதொலைபேசியில் கேட்டான்.

"சொல்லுங்கள் தென்னரசு''.
"என்னை கம்பெனியின் Wrold Vice-President ஆகத் தேர்ந்தெடுக்கிறார்கள்''.

"மிக்க சந்தோஷம்''.

"இதற்குக் காரணம் அன்னைதான். மூன்று மாதங்களுக்கு முன் நீங்கள் அன்னையை ஏற்றுக்கொள்வது எப்படிஎன்று சொன்னீர்கள் அல்லவா, நினைவிருக்கிறதா?''

"நிச்சயமாக, சொல்லுங்கள்''.

"எனக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் இருக்கின்ற நம்பிக்கைகள் எல்லாவற்றையும் தொகுத்தேன். அதைப்பற்றி அன்னையும், பகவானும் என்னென்ன சொல்லியிருக்கின்றார்கள் என்பவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் சேர்த்து, அவற்றையெல்லாம் என் நம்பிக்கைக்கு நேராக வைத்தேன். ஒவ்வொன்றாக நிதானமாக மாற்ற முயன்றேன். என்னுடைய அடிப்படையான குணம் ஒன்றையும் இவ்வழியில் திருவுருமாற்றம் செய்தேன். அதனுடைய நல்விளைவுதான் இந்தப் பதவிஉயர்வு. என்னுடைய நிலையில் இது கிடைக்கவே கிடைக்காத ஒன்று. நான் நினைத்துக்கூட பார்க்க இயலாதது. என் தகுதிக்கு இது நிச்சயமாகக் கிடைக்கவில்லை. இதற்காக எந்தவொரு முயற்சியும் விசேஷமாகச் செய்யவும் இல்லை. வழக்கமாக வேலையென்று செய்யாமல்இதில் அன்னையை எப்படிக் கொண்டு வர முடியும் என்பதை மட்டும் நினைவாக யோசித்து செயல்பட்டேன்.

அன்னையை நினைவாக (Conscious) நினைக்க ஆரம்பித்தேன்.

உங்களுக்குத் தெரியுமா! என்னுடைய மாத வருமானம் இனிமேல் இருபத்தி ஐந்து இலட்சம். அள்ளிக் கொடுப்பவர் அன்னையென்பதை ஏற்றுக்கொண்டாலும், அள்ளவே முடியாத அளவிற்குக் கொடுப்பவர் என்பதைப் பார்க்கின்றேன்'', உணர்ச்சி வேகம் கரைபுரண்டு ஓடினாலும் சொல்ல நினைத்ததைக் கோவையாக, ஆனால் சிந்திக்காமல், தோன்றியதை அப்படியே பேசினான்.

ஞாயிற்றுக்கிழமை. மல்லிகையும், முல்லையும் செஸ் (Chess) விளையாடிக்கொண்டிருந்தார்கள். முல்லையின் ராஜாவுக்கு Check வைத்துவிட்டு, மல்லிகை இருவருக்கும் காபிக்காக கிச்சனுக்குள் சென்றாள்.

காலிங்பெல் அடித்தது.

தன் ராஜாவை எப்படிக் காப்பாற்றுவதுஎன்று யோசித்துக் கொண்டே, இந்த நேரத்தில் யார் காலிங்பெல்லை அடிப்பது என்ற கேள்வி மனதில் எழ கதவைத் திறந்தாள் முல்லை.

கை கதவின் மேலேயே இருக்க, எதிரில் நின்ற நபரைப் பார்த்தவுடன் பேசத் தோன்றாமல் திகைத்தாள். ஆனால் கண்கள் மட்டும் படம்பிடித்து உள்ளே அனுப்பியது.

எத்தனை வருடங்கள்! இனி பார்க்கவே கூடாது, பார்க்கவே முடியாது, பார்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தை வாழ்க்கை கொடுக்கக் கூடாது, இனியொரு சந்தர்ப்பம் அமையுமா? என்றெல்லாம் சிந்தனை  செய்து, எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுபுள்ளியை வைத்துவிட்டதாக முல்லை நம்பியிருந்தாள். அப்படியில்லை என்பதை வெளியில் நின்ற உருவம் எடுத்துக்காட்டியது. யுகாந்த காலமாகப் பிரிந்தவர்போல இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். கண்கள் பேசியதோ இல்லையோ, ஆனால் உள்ளங்கள் மகிழ்ந்தன, மலர்ந்தன, மணம் வீசியது. முதலில் யார் பேசுவதுஎன்பதற்கு இடமே  இல்லாமல், தென்னரசு,

"உள்ளே வரலாமா?'' என்று அனுமதி கேட்டான்.

பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் வீடு தேடி வந்தவர்களை  "வாருங்கள்' என்று அழைப்பதுதானே நாகரீகம். முல்லையும் மிக மெதுவாக, அவளுக்கே அது கேட்டிருக்குமோ தெரியாது, வாய்க்கு உள்ளாகவே "வாருங்கள்'' என்று அழைத்ததுடன், விலகி நின்று வழி விட்டாள்.

இரு கைகளிலும் நிறைய பைகளை பிடித்துகொண்டு உள்ளே வந்தவுடன் தன் கையிலிருப்பதை சோபாவில் வைத்தான்.

உள்ளேயிருந்து கையில் இரு காபி மக்குடன் வந்த மல்கை, தென்னரசுவைப் பார்த்தவுடன்,

"வாருங்கள்! U.S.லிருந்து எப்பொழுது வந்தீர்கள்?''

"நேற்றுதானம்மா'' என்று கைகூப்பி வணங்கினான்

முல்லை அதைக் கவனித்தாள். மல்லிகை மிக சுதந்திரமாக பேசுவதைப் பார்த்தவுடன் வியப்பேற்பட்டது.

"இந்தாருங்கள்'' என்று சோபாவில் இறக்கி வைத்ததிருந்து ஒரு சிறு பையை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, மற்ற எல்லாவற்றையும் மல்லிகையிடம் கொடுத்தான்.

ஒன்றுமே புரியவில்லை. தென்னரசு மல்லிகையை மரியாதையுடன் அழைக்கிறான். தான் காண்பது கனவா? உண்மையில் வந்திருப்பது தென்னரசுதானா? என்று ஐயத்துடன் முல்லை அவனைக் கவனித்தாள்.

தான் பார்த்துப் பழகிய முகம் போலில்லையே!

ஏதோ ஒரு புது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி வந்திருக்கிறானோ!

பிரகாசமான மகிழ்ச்சியானதாக இருக்கிறதே! முன்பைவிட சற்றுச் சதை பிடித்து, பார்ப்பதற்கு இன்னும் சற்று அழகாக இருக்கிறான். உடையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தான் விரும்பிய, பழகிய தென்னரசு அல்ல இவன்என்று தெளிவாகப் புரிந்தது. 8 வருடங்கள் மிக நீண்ட காலமன்று என்றாலும், முல்லைக்கு 8000 வருடங்கள் போல்தான் இருந்தது. அவனுக்குத் திருமணம் ஆகி இருக்கலாம்.

அவன் அன்பை பங்கு போட்டுக்கொள்ள துணை ஏற்பட்டிருக்கலாம். ஏன், பாசத்துடன் பழக குழந்தைகள்கூட இருக்கலாம். தன்னைப் போல் தனியாளாய் அவன் இருக்க வேண்டிய அவசியமேயில்லையே. புதிய முகம்போல புதிய உறவுகள். இந்த சமுதாயத்தில் எப்பொழுதுமே ஆணுக்கோர் நீதி, பெண்ணுக்கோர் நீதிதானே செயல்பட்டு வருகிறது.

அவன் தானே விலகினான்என்று சொல்லாமல், அவள் வேண்டாம் என்று மறுத்தாள் என்றுதானே சொல்வான். அவன் செய்தது மன்னிக்க முடியாததாக முல்லையின் கோர்ட்டில் வேண்டுமானால் வாதம் செய்யலாம். தென்னரசுவின் கோர்ட்டில் அவன் குற்றமற்றவன் என்று நம்பிக்கொண்டிருக்கிறானே! எப்படி சகஜமாக உள்ளே வந்து உட்கார முடிகிறது! என்ன உறவிருக்கிறது? மல்லிகையுடன் பேச என்ன தகுதியிருக்கிறது? என்று முல்லையின் மனது பொருமிக் கொண்டிருந்தது.

"அக்காவிற்கென போட்ட காபி, நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நான் அக்காவிற்கு வேறு போட்டு எடுத்து வருகிறேன்'' என்ற மல்லிகைக்கு,

"வேண்டாம்மா, இன்னுமொரு கப் மட்டும் எடுத்து வாருங்கள். நாங்கள் இருவரும் Share செய்துகொள்கிறோம், முல்லை விரும்பினால்'', பதிலளித்தான் அரசு.

பையிலிருந்ததைப் பார்த்த மல்லிகை சிறு குழந்தையைப் போல, "ஹை! சாக்லேட். என்ன கடையையே வாங்கிக்கொண்டு வந்து விட்டீர்கள் போலிருக்கிறதே!'' என்று கூறிக்கொண்டே, "அக்கா, இந்தாருங்கள்'' என இரு சாக்லேட் பார்களை நீட்டினாள். ஒன்றைப் பிரித்து தன் வாயில் போட்டுக்கொண்டே, "மிகவும் சுவையாக இருக்கிறது, தேங்ஸ் தென்னரசு'' என்று கூறி உள்ளே சென்றாள்.

தங்கை கொடுத்ததை கை வாங்கிக்கொள்ள, அவை விலை உயர்ந்தவை என்பதைப் பார்த்தவுடன் முல்லை புரிந்துகொண்டாள்.

"நாங்கள் உள்ளே வரலாமா?''

"அக்கா! வாருங்கள், வாருங்கள்'' முகமெல்லாம் ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றாள். "மல்லிகை,

இங்கு வந்து பார்,

நம் வீட்டிற்கு ரோஜாக்காவும் முகுந்தன் சாரும் வந்து இருக்கின்றார்கள். ஸ்வீட் கொண்டு வா. சார், காபி சாப்பிடுங்கள், நான் கொண்டு

வருகிறேன்''. "மல்லிகை பேசிக்கொண்டிரு''. ஒருவித படபடப்புடன், ஏதோவொரு நாடகம் நடக்கின்றது. திட்டமிட்டு வந்து இருக்கின்றார்களாஇல்லை தற்செயலாக நடக்கின்றதா? தென்னரசு இந்த சமயத்தில் வந்திருக்கிறானே, அவனை எப்படி அறிமுகப்படுத்துவது?

ஒன்றும் புரியவில்லை. சந்தோஷம் இருந்தாலும், குழப்பமும் இருந்தது.

மூன்று கப் காபி கலந்து டீபாயின் மீது வைத்தாள்.

"மல்லிகை, ஆயிரம் நிறங்களைக் கொண்டவர் அன்னை. என் அன்னைக்கும் ஆயிரம் வர்ணங்களைக் கொண்ட புடவை வாங்க வேண்டுமென்று அரசு நேற்று எங்களை அழைத்துக்கொண்டு சென்று வாங்கினான். உனக்குப் பிடித்திருக்கிறதா?''

"புடவை வேறு இருக்கின்றதா! நான் சாக்லேட் பையை மட்டும்தான் பிரித்தேன். எனக்கு பிடித்ததைத்தான் அன்னை எனக்கு கொடுப்பார்''.

"அக்கா, உனக்குத்தான் வாங்கிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்''.

"மல்லிகையம்மா! என் அன்னை நீங்கள். உலகத்தில் உள்ள அனைத்தையும் வாங்கி உங்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம்'' என்றான் தென்னரசு. "முல்லைக்கும் இரண்டு பரிசு பொருள் வாங்கி வந்திருக்கிறேன். ஒன்றை இப்பொழுது கொடுக்கிறேன். இன்னொன்றை.... நான் என் மனதில் உள்ளதை எல்லாம் பேசி முடித்த பிறகு அவள் விரும்பினால் அதற்கு மதிப்புண்டு, இல்லையென்றால் அது கூழாங்கல்தான்'' கூறிக்கொண்டே, Timond Diamond watchஐ எடுத்து முல்லையிடம் கொடுத்தான்.

"அக்கா, இதன் விலையென்ன தெரியுமா? 20,000 டாலர், ஒரிஜினல் வைரக்கற்கள். தென்னரசு விசேஷமாக Swissஇல் ஆர்டர் செய்து வாங்கியிருப்பார் என நினைக்கிறேன். உன் பெயர் dialஇல்
இருக்கின்றது பார்த்தாயா! எவ்வளவு அழகாக இருக்கின்றது!''. "என் அக்கா விலை மதிக்கமுடியாத பொக்கிஷம் என்பதை உணர்ந்து கொண்டீர்களா?''

"ஆமாம் அம்மா! உங்கள் அக்காவால்தான் இன்று அன்னையை அறிந்துகொண்டிருக்கிறேன். நீங்கள்தான் என்னுடைய அன்னை. இதுநாள்வரை என்னால் மறைத்து வைத்திருந்தவற்றையெல்லாம் இனிமேலும் என்னால் சுமக்க முடியாது''.

"முல்லை, என்னை மன்னித்துவிடு'' என்று அவளைப் பார்த்து கைகூப்பினான். நான் உனக்குச் செய்ததை இப்பொழுது நினைத்தால்
கூட மனது கூசுகிறது. ஆனால் அன்று எவ்வளவு மோசமாக, அநாகரீகமாகப் பேசினேன். அது இன்னும் உன் மனதில் அப்படியே ரணமாக இருக்கும். கல் தேயும், ஆனால் சொல் தேயாது என்ற பழமொழியுண்டு. நீ உயர்ந்தவள். உன்னால் மன்னிக்க முடியும். தயவுசெய்து என்னை மன்னித்துவிடு. நம் இருவரிடையே நடந்த விஷயத்தை உன் அனுமதியில்லாமல் யாரிடமும் நான் சொல்ல முடியாது. நீ அனுமதித்தால் உங்கள் அனைவர் முன்னும் சொல்கின்றேன். இதில் தவறு செய்தது முழுக்க முழுக்க நான்தான்''.

"மல்லிகை, நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும் அம்மா'' என்று கூறிக்கொண்டே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

"தென்னரசு, எழுந்திருங்கள். வயதில் பெரியவர்கள் நீங்கள்''.

"அம்மா! செயலில் மிகக் கீழ்த்தரமானவன், சுயநலவாதி. ஆனால் எனக்குதான் நீங்கள் அன்னையை பற்றிச் சொல்லி, அவர்களை ஏற்கச் செய்ததன் மூலமாக நான் செய்ததை உணரச் செய்ததுடன் அல்லாமல் உங்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தைரியத்தைக் கொடுத்துள்ளீர்கள். என் தாய் - பெற்ற தாய் -உடலுக்குத்தான் சொந்தம். ஆனால் என் ஆன்மாவிற்கு தாய் அல்லவா நீங்கள்''.

தென்னரசு பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த முல்லை, உண்மையிலேயே அவன் மாறிவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆனாலும் அவன் பேசியதை எல்லோருடைய முன்னிலையிலும், குறிப்பாகத் தங்கையின் முன் மீண்டும் கேட்க அவள் மனம் ஒப்பவில்லை.

ரோஜா தங்கள் வீட்டிற்கு, தென்னரசு கடந்த மூன்று வருடங்களாக மல்லிகையின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து அன்னையின் அறைக்கு வருவதையும், தன் வாழ்க்கையில் நடந்த கசப்பை அன்னையிடம் சொல்லிச்சொல்லி கரைத்துக் கொண்டிருப்பதைப் பற்றியும் கூறினாள்.

"முல்லை, என்னுடைய சந்தேகப்பேய்க்குக் காரணம் என் தாத்தாவின் வாழ்க்கையில் நடந்த செயல்தான். என் தாத்தா ஒரு ஜமீன்தாரிடம் லாயக்காரனாக வேலை செய்துகொண்டிருந்தார். என் பாட்டி மிகவும் அழகாக இருப்பார்களாம். ஜமீன்தாரின் மகன் ஆசை வார்த்தை கூறி அவர்களைத் தன் வயப்படுத்திக்கொண்டான்.

பாட்டியுடன் தகாத உறவு கொண்டான். இதை தாத்தா ஒரு முறை நேருக்கு நேர் பார்த்தாலும் ஜமீன்தாரைப் பகைத்துகொண்டு அக்காலத்தில் வாழ முடியாது என்பதால் மனைவியிடம் பேசியிருக்கிறார். பாட்டியோ மருந்தின் மயக்கத்தில் இருந்ததால், அவர்களை அப்படியே விட்டுவிட்டு, தாத்தா வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். இருந்தாலும் அவர் மனதில், குறிப்பாக "பெண்கள் நம்பிக்கை துரோகம் செய்பவர்கள். அவர்களை நம்பக்கூடாது.அவர்கள் எது செய்தாலும், அப்படியே அவர்கள் சொல்வதை நம்பி ஏற்றுக்கொள்ளக்கூடாது. சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டும்'என்று சொல்லிசொல்லியே என் அப்பாவையும், சித்தப்பாவையும் வளர்த்திருக்கிறார். என் அம்மாவை அப்பா என்றுமே நம்பியதில்லை. எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் குற்றம் காண்பார். தன் தம்பியின் முன்னால்கூட வரக்கூடாது என்றெல்லாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்தார். என்னிடமும் என் சகோதரர்களிடமும்கூட சிறு வயதிலிருந்தே "பெண்களை நம்பக்கூடாது. அவர்கள் மீது எப்பொழுதும் ஒரு கண் வைத்திருக்கவேண்டும்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த வயதில் விவரம் புரியாவிட்டாலும், விஷயம் என்னவென்று தெரியாவிட்டாலும் அவர்

சொன்னது மட்டும் மனதில் பதிந்துவிட்டது. அன்னையைத் தெரிந்த பிறகு என் வாழ்வின் நிகழ்வுகளைச் சமர்ப்பணம் செய்து கொண்டிருந்த சமயத்தில்தான், இரண்டு வருடங்களுக்கு முன் என் அப்பா இந்த விஷயத்தை என்னிடம் சொல்லிவிட்டு இறந்துபோனார்.

நான் விடுபட விரும்பினாலும், என் சந்தேகக் குணத்திலிருந்து விடுபட்டு, என்னால் முழுமையாக அன்னையிடம் சரணடைய இரண்டாண்டுகள் பிடித்தன. அதன்பின்தான் இன்றைக்கு உன்னைத் தைரியமாகச் சந்திக்க முடிந்தது. நான் செய்ததற்கு என்னை மன்னித்துவிடு'' என்று மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டான்.

"அக்கா, எட்டு வருடக் கதையை பேச இன்னுமொரு எட்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்காக நாங்கள்  காத்துக்கொண்டிருக்கிறோம். காலம் முழுவதும் இருவரும் பேசலாம். இப்பொழுது வெளியே வாருங்கள்'' என்றழைத்தாள் மல்லிகை.

"ரோஜாம்மா, முல்லையும் நானும் கல்லூரியில் படிக்கும்பொழுதே ஒருவரை ஒருவர் விரும்பினோம். முல்லையின் பெற்றோரும் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டார்கள். ஆனால் இடையில் நடந்த விஷயங்கள் என் வாழ்க்கையை, திசை திருப்பிவிட்டது. அன்று நான் முல்லையை மணந்திருந்தால் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திருப்போம். ஆனால் இன்று இருவருக்குமே அன்னையைத் தெரியும். இன்னும் சொல்லப்போனால், முல்லையால் தான் அன்னையை அறிந்திருக்கிறேன். அதனால் அவளை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ளாமல் என் "ஆன்மாவின் தோழியாக' ஏற்று, உடலளவில் உறவு கொள்ளாமல், தூய்மையான அன்னை வாழ்க்கையை முல்லையுடன் வாழ விரும்புகிறேன். என் சார்பில் நீங்கள்தான் அவளின் சம்மதத்தைப் பெற்றுத்தர வேண்டும்.

அதோடு மல்லிகையம்மாவும் எங்களுடனேயே இருக்க வேண்டும். ஒரு வகையில் என் தாய் என்றாலும், எங்கள் இருவரின் குழந்தையும்
அவர்கள்தான்'' என்றான்.

"என்ன முல்லை, தென்னரசு சொன்னதைக் கேட்டாயல்லவா? உனக்குச் சம்மதம்தானே!''

"எனக்குப் பரிபூரண சம்மதம், ரோஜாக்கா. நானும் மல்லிகையைப் போல வாழவேண்டுமென அன்று மல்லிகை என்னுடன் பேசியதிலிருந்து அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். என் ஆன்மாவின் துணையாக அரசை அன்னையே திருவுருமாற்றம் செய்து அனுப்பியிருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது''.

தன் பையிலிருந்த வைர மோதிரத்தையெடுத்து, வெள்ளொளி அறையெங்கும் அன்னையின் ஒளியாக வீச முல்லையின் விரலில் மாட்டினான். முல்லை தன் கையிலிருந்த அன்னையின் முத்திரை (Symbol) மோதிரத்தை தென்னரசுவின் விரலில் போட, மல்லிகை அன்னைக்கு நன்றியைக் காணிக்கையாகச் செலுத்தினாள்.

தொடரும்.....



book | by Dr. Radut