Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னை அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்!

நான் உங்களைப் பற்றி தெரிந்துகொண்டு உங்களையே சரணம் என்று நம்பிக்கொண்டு இருந்தேன். எத்தனையோ வழிகளில் நான் ஆன்மீக வழியில் சென்றபோதிலும் என்னால் அன்னையிடம் மட்டுமே முழுமையாக ஒன்ற முடிந்தது. இத்தனைக்கும் அன்னையைப் பற்றி நான் கொஞ்சகாலம் முன்புதான் அறிந்துகொண்டேன். அறிந்துகொண்ட சில காலத்திற்குள்ளாகவே அவர்களை பரிபூரணமாக நம்பிக்கொண்டிருக்கிறேன்.

நான் யாருமற்ற ஒரு தனியாள்தான். எல்லா வசதிகளுடன் இருந்தபோது எல்லோராலும் விரும்பப்பட்ட நான் தற்போது தனிமரம். கையிலும் காசில்லை. கவனிப்பாரும் இல்லை. என் நண்பர்கள்தாம் எனக்கு உதவி. மற்றபடி என்னால் தற்போது எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நேரத்தில் எனக்கு சர்க்கரை, பிரஷர் மற்றும் இருதய சம்பந்தமான வியாதிகள் வந்துவிட்டன. அத்துடன் இல்லாமல் காலில் ஏற்பட்ட சிறு காயம் புரையோடிப்போய் செப்டிக்காகிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். அவர்கள் இடுப்பிலிருந்து எலும்பு எடுத்து பாதிக்கப்பட்ட காலில் வைத்து தைக்க வேண்டும் என்றும், இது பெரிய, மேஜர் ஆப்ரேஷன் என்றும், இதற்காக அதிக அளவில் செலவாகும் என்றும், உடல் தேறி நான் நடக்க ஆறு மாதம் ஆகும் என்றும் சொல்லி விட்டனர். மேலும் இந்த மாதிரியான ஆப்ரேஷனுக்கு வெளிநாட்டிலிருந்துதான் டாக்டர் வரவேண்டும் என்றும் சொன்னபோது தவித்துப் போய்விட்டேன். அப்போதுதான் நான் மதரைப் பற்றி தெரிந்துகொண்ட நேரம். மதர் போட்டோ எனக்கு ஓர் அன்பர் கொடுத்தார். அதை வைத்துக்கொண்டு "அம்மா! எனக்கு உங்களை விட்டால் யாருமில்லை. கையிலும் காசில்லை, கடன் பெறவும் முடியாது, கவனிப்பாரும் இல்லை. ஏற்கனவே ஆஸ்பத்திரியில் கடன். இந்த நிலையில் இந்த மாதிரி ஓர் ஆப்ரேஷன் எனக்குத் தேவையா? என்னை யார் காப்பாற்றப் போகிறார்கள்?'' என்று மனம் உருகிப் பிரார்த்தனை செய்தேன். என் தவறுகளைத் திருத்திக்கொண்டு, அவரிடம் சத்தியம் செய்து, அவரே கதி என்று இருக்கும் என்னை அவர் கைவிடவில்லை. இடைவிடாத பிரார்த்தனையாலும், என் நண்பர்களின் அம்மா தியான மண்டபத்தில் நடந்த கூட்டுப் பிரார்த்தனையின் பயனாலும், எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்த டாக்டர் நான் தங்கியிருந்த ஆஸ்பத்திரிக்கு வந்து என்னைச் சோதித்துப் பார்த்து ஆப்ரேஷன் தேதியும் குறிப்பிட்டார். நாளை ஆப்ரேஷன். இன்று எல்லா ஏற்பாடுகளும் முடிந்து ஆப்ரேஷன் தியேட்டரில் மயக்கமருந்து கொடுக்கப்பட்டு படுத்திருந்தேன். நண்பர்கள் என் நலனுக்காகவே வேண்டிக்கொள்ளும் ஒரு பக்தரின் வேண்டுக்கோளுக்கு இணங்கி, அந்த மதரே எனக்கு டாக்டர் ரூபத்தில் வந்தார். நான் விழித்தேன். கூடியிருந்த டாக்டர்கள்,

"என்னப்பா, எழுந்திரு'' என்றனர். "எனக்கு ஆப்ரேஷன் முடிந்துவிட்டதா, இடுப்பு எலும்பு கட் பண்ணி கால் வைத்துவிட்டீர்களா?'' என்று நான் கேட்டதற்கு, உடனிருந்த டாக்டர்கள் சிரித்துவிட்டனர். "நாங்கள் இடுப்பிலிருந்து எலும்பு எடுத்து காலில் வைக்கவேண்டும் என்று சொன்னது உண்மைதான். அதற்கான ஏற்பாடுகள் செய்து, இன்று ஆப்ரேஷன் தியேட்டர் வந்து மயக்க மருந்து கொடுத்து, எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, ஆப்ரேஷன் செய்ய அந்த இடத்தை ஓபன் செய்து பார்த்தபோது எங்களாலேயே நம்பமுடியாத அளவிற்கு ஆச்சரியமாக எலும்பிற்கு எந்தச் சேதமும் இல்லாமல் வளர்ந்திருக்கிறது. இடுப்பெலும்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. 4 மணி நேரத்தில் நடக்க வேண்டிய ஆப்ரேஷன் 1 மணி நேரத்தில் முடிந்தது'' என்று சொன்னார்கள்.ஆப்ரேஷனுக்கு முன்பு நான் மனமுருகி, "அம்மா! இந்த ஆப்ரேஷன் எனக்கு அவர்கள் செய்யவில்லை. நீங்கள்தான் இதைச் செய்கிறீர்கள்.என்னையே உங்களுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டேன்'' என்று சொல்லி விட்டு மயக்கமானேன். பிறகு நடந்தது நம்பமுடியாத ஆச்சரியம். நான் என் கண்ணெதிரில் அன்னையைப் பார்த்தேன். அதனால் எனக்கு டாக்டர்கள் சொன்னது ஆச்சரியமாக இல்லை. அன்னை நினைத்தால் எதுவும் நடக்கும். எனக்குப் போய் அம்மா தரிசனம் தந்தார்கள் என்றால், அதைவிட ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்த மாதிரி எனக்குப் பல நிலைகளில் கருணை செய்திருக்கிறார். சத்தியமாக அன்னையை நான் நம்புகிறேன். கையில் பணம் இல்லாமல், துணைக்கும் ஆள் இல்லாமல், தொழில் இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கையில்கூட நான், அம்மா எனக்கிட்ட விதி என்றுதான் இருக்கிறேன். தொடர்ந்து அவரையே சரணாகதி அடைந்தேன். ஆனால் என் பாவம் என்னை விடவில்லை. தொழிலும் வந்தது, நானும் கொஞ்சம் தேறினேன். சற்றுத் தேறிவரும் நேரத்தில் மீண்டும் சோதனை. கிட்னி வேலை செய்யாமல், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. கார்டியாக் தொல்லையும் உண்டு. இப்பவும் அன்னையிடம் சரணடைந்துவிட்டேன். ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். ஆனால் இந்த முறை அன்னையிடம் அழுது புலம்பியபிறகு, அன்னை என்னைக் கைவிட்டுவிட்டாரோ என்று மடத்தனமாக நினைக்குமளவிற்கு சோதனை. எப்பொழுதும் என்னை வழிநடத்தும், எனக்காக பிரார்த்தனை செய்யும் அம்மா அவர்களிடம் சொன்னேன். அவர்கள், "கவலைப்படாதே, நான் கூட்டுப் பிரார்த்தனை செய்கிறேன். நீ சரியாகிவிடுவாய், மீண்டும் உயிர் பெறுவாய்'' என்று ஆறுதல் சொன்னார்கள். மேலும் அன்னையைத் தவிர வேறு யார் சொல்வதையும் நம்பவேண்டாம் என்று சொன்னார்கள். மீண்டும் தொடர்ந்து அன்னையை மட்டுமே முழுவதுமாக நம்பிக்கொண்டுள்ளேன். டாக்டர்கள் எனக்கு போதுமான நம்பிக்கை தரலை. ஏன், மோசம் என் நிலை என்றுகூட சொல்லிவிட்டார்கள். ஆனால் நான் என் அம்மாவின் கருணையினால் ஜெயிக்கணும் .இந்த வியாதியிலிருந்து விடுபட்டு வரவேண்டும். எனக்கு இந்த முறையும் உயிர் பிச்சை தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருக்கிறேன். என் வியாதியை அவரால்தான் போக்க முடியும்.எனக்குத் தெரிந்தவர்களும் எனக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.என் கவலை எல்லாவற்றையும், என் எண்ணங்கள் எல்லாவற்றையும் தங்களுக்கு எழுதிவிட்டேன். அன்னை என்னிடம் இருக்கிறார். அவர் எனக்கு உயிர் பிச்சை தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

உங்களிடமிருந்தும் எனக்குப் பதில் வரவேண்டும் என்று விருப்பம்.நான் இன்னும் என்ன செய்தால் அன்னையின் அன்பிற்குப் பாத்திரமானவனாக, அன்னையின் அன்புக் குழந்தையாக நான் என்ன செய்யவேண்டும் என்று தெரிவிக்கவும். நான் எத்தனையோ தவறு செய்துள்ளேன். அதற்குப் பரிகாரம் தேடவேண்டும். மனமார இனி எந்தத் தவறுகளும் நான் செய்யாதவாறு அன்னை என்னைக் காக்க வேண்டும். ஒருநாளும் அவரை மறவாதிருக்க, அவர் அருள் வேண்டும். நான் தியான மையம் வந்துள்ளேன். இனம்புரியாத மகிழ்ச்சியும், பேரானந்தமும் எனக்குக் கிடைத்துள்ளது. மீண்டும், மீண்டும் அங்கு வரத் தோன்றுகிறது. எனக்கு அன்னை உயிர் பிச்சை தந்து, என்னை நல்லவனாக அன்னையின் அன்புக்கு ஏற்றவனாக மாற்றும் சக்தியும் அன்னையிடமே உள்ளது. அவரையே சரணடைந்துள்ளேன். எத்தனையோ பேருக்கு உதவும் கரங்கள், எனக்காக, இந்த நாயினும் கேவலமானவனுக்காக பிரார்த்தனை செய்து எனக்குப் பதிலும் அனுப்புவீர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் நான் குணமடைந்து வீடு வரவும், என் கிட்னி வேலை செய்து, கார்டியாக் பிரச்சினையும் இல்லாமல் மீண்டு வரவும், உயிர் பிச்சை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

*******
 


 

ஜீவிய மணி

முக்கியம் பெற்ற சிறியது முனைந்து துரோகம் செய்யும்.


 


 



book | by Dr. Radut