Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கும், ஸ்ரீ அன்னைக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள்!

ஸ்ரீ அன்னையை என் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு சில மாதங்கள்தான் ஆகிறது. ஸ்ரீ அன்னை என் வாழ்வில் பல அதிசயங்களையும், பல அற்புதங்களையும் செய்துவருகிறார்கள். சிலவற்றை எழுத ஆசைப்படுகிறேன்.

1) இருதய நோயால் பாதிக்கப்பட்ட என் சகோதரிக்கு டாக்டர்கள் ஆப்பரேஷன் செய்யவேண்டும்என்று கூறியவுடன் மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டிக்கு ஒரு வியாழக்கிழமை எழுதிய கடிதத்திற்கு அடுத்த வியாழக்கிழமை டாக்டர்கள் ஆப்பரேஷன் தேவையில்லை என்று டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள்.

2) என் தங்கைக்கு திடீரென்று எம்பிளாய்மெண்ட் ஆபீஸிலிருந்து வேலைக்கான தேர்வு எழுதச்சொல்லி, ஸ்ரீ அன்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலையும் வாங்கி கொடுத்துவிட்டார்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாமல் எழுதுகிறேன்.

7.5.2005 அன்று நடந்தது. சில நாட்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் நடந்த ஒரு ஃபங்ஷனுக்கு (பெண் வீடு பார்ப்பது) உறவினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். என் வீட்டில் இருக்கும் அல்ட்ரா கிரைண்டரில் மாவு அரைக்கும்போது உறவினர் ஒருவர் அதைப் பார்த்து அதன் விவரங்களைக் கேட்டார். நானும் சொன்னேன். அடுத்த முறை அதில் இட்லிக்கு மாவு அரைப்பதற்காக உளுத்தம் பருப்பைப் போட்டேன். கிரைண்டர் ஓடவே இல்லை. எத்தனையோ முறை முயன்று பார்த்தும் சுத்தமாக ஓடவே இல்லை. என்ன செய்வது என்று யோசித்தபொழுது, அப்பா அவர்கள் இண்டியன் எக்ஸ்பிரஸில் அன்று எழுதிய மெசேஜ் (message) திடீரென்று ஞாபகம் வந்தது. உடனடியாக நானும்,

IN THE NAME OF THE MOTHER

FOR THE SAKE OF THE MOTHER

என்னும் அன்னையின் மந்திரத்தை பயபக்தியுடன் கூறினேன். சொல்லிமுடித்தவுடன் என் கண்களையே என்னால்நம்ப முடியாத அளவிற்கு கிரைண்டர் உடனடியாகச் சுற்ற ஆரம்பித்துவிட்டது. என்னால் ஸ்ரீ அன்னைக்கு நன்றிகூட சொல்ல முடியாத அளவிற்கு திணறி விட்டேன். அன்னைக்கு இதை நன்றியுடன் எழுதுகிறேன்.


 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாலு பேர் வெட்கப்படுதலுக்குரிய காரியத்தை மீறிச் செய்பவர்களுண்டு. வெட்கத்தை மீறும் அளவுக்கு அக்காரியத்தை அனுபவிப்பதில் சந்தோஷமும், மனதிற்குள் பெருமையும் ஏற்படுவதால் மனிதன் அதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறான். இது சிற்றின்பம். தெய்வத்தை மனம் நாடும்பொழுது, அதுபோல் வெட்கத்தை மீறி மனிதன் செயல்படுவதுண்டு. அந்த வெட்கமே அவனுக்குப் பெருமையளிக்கக்கூடியதாகவும் இருக்கும். வெட்கத்தை ஆனந்தமான பெருமையாக்கும் திறன் பக்தியின் உச்சக்கட்டத்தில் ஏற்படும்.

மீறி எழும் பக்தி வெட்கத்தை மீறி வரும்.


 


 


 


 



book | by Dr. Radut