Skip to Content

09.ரிக்ஷா மாரி

"அன்னை இலக்கியம்"

ரிக்ஷா மாரி 

சமர்ப்பணன்

மழை தூறிக்கொண்டிருந்தது. ரிக்ஷா மாரிக்குச் சீக்கிரமாகச் சவாரி கிடைத்தால் தேவலைபோலிருந்தது. இப்போதே மணி சாயந்திரம் ஆறாகிவிட்டது. காலையில் சாப்பிட்ட நீராகாரம் எவ்வளவு நேரம் தாங்கும்?

நமக்கெல்லாம் வறுமை என்றால் என்னவென்று நன்றாகத் தெரியும். எத்தனை சினிமாக்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்! எத்தனை வறுமை ஒழிப்புத் திட்டங்களைப் பற்றிப் பேப்பரில் நுணுக்கமாகப் படித்திருக்கிறோம்!

ரிக்ஷா மாரிக்கு சினிமா போக காசில்லை. டீக்கடையில் தமிழ்ப் பேப்பர் எழுத்துக்கூட்டிப் படிக்கும்அளவுக்குக் கூட சரஸ்வதி கடாட்சம் இல்லை. அதனால் அவனுக்கு வறுமை தெரியாது என்று அர்த்தமில்லை. அனுபவபூர்வமான வறுமையையே அனுதினமும் வாழ்க்கை முறையாகக் கொண்டவன் ரிக்ஷா மாரி.

மாரிமுத்து என்ற அவன் இயற்பெயர் பல வருடங்களாக ரிக்ஷா மிதித்ததால் 'ரிக்ஷா மாரி'என்ற காரணப்பெயராக மாறிவிட்டது. அதுதவிர, அவனுக்கு 'கேப்மாறி, மொள்ளமாரி'என்ற செல்லப் பெயர்களும் உண்டு.

"ஏண்டா, ரிக்ஷா வருமா?'' கணீரென்ற குரல் அரைமயக்கத்தில் இருந்த ரிக்ஷா மாரியை உலுக்கி எழுப்பியது.

ஏகவசனம் சிறிது ரோஷத்தைக் கிளப்பினாலும், வந்த சவாரியையும், இரவு உணவையும் விட மனமில்லாமல், 'டா'வைப் பொறுத்துக்கொண்டான் ரிக்ஷா மாரி.

கம்பீரக் குரலுக்குரியவர் கதர் வேட்டி, கதர்ச் சட்டை போட்ட சிவபாலன். அவருக்கும், அரசியலுக்கும் தினசரி பேப்பரைத் தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், அவரது உடை பிறரது பய உணர்வை தூண்டி, மரியாதையைப் பெற்றுத் தந்ததால், அடாவடியாகப் பேசுவதும், அஞ்சாத சிங்கமாய் நடந்துகொள்வதும் அவருக்குப் பிடித்தமான விஷயங்கள் ஆகிவிட்டன.

கூடவந்தவர் மெலிந்த தேகத்துடன், சபாரி போட்ட வங்கி அதிகாரி இராமநாதன்; புத்தகப்புழு, அறிவுஜீவி; எந்தப் புத்தகத்தையும் தலைப்பு முதல் முற்றும்வரை முழுமையாகப் படித்துவிடுவார். படித்ததைப் பிறருக்கு எடுத்துச்சொல்வதில் நிபுணர். 'அது அடுத்தவருக்குமட்டுமே பொருந்தும்' என்ற தளராத கொள்கைப்பிடிப்பு உள்ளவர்.

இருவர் கைகளிலும் பெரிய பெரிய பைகள். அவற்றில் வகை வகையான பூக்களும், ஊதுபத்திக் கட்டுகளும் இருந்தன.

"போகலாம் சார், ஏறுங்க''என்று தன் அழுக்குத்துண்டால் ரிக்ஷா இருக்கைகளைத் தட்டி சுத்தப்படுத்தினான் ரிக்ஷா மாரி.

"ஜெயலட்சுமி கல்யாண மண்டபம் போகணும். எவ்வளவு வேணும்?'' என்று அதட்டினார் சிவபாலன்.

"பதினைஞ்சு ரூவா ஆகும் சார்''என்றான் ரிக்ஷா மாரி.

"என்னடா, உன் ரிக்ஷாவுக்கும் சேர்த்து சொல்றியா?''என்று பிளிறினார் சிவபாலன். அவரது திவ்யமான நகைச்சுவையைக் கேட்டு இராமநாதன் புன்னகை பூத்தார்.

முகம் சிறுத்துப்போன ரிக்ஷா மாரி, "நீங்களாப் பார்த்து ஏதோ போட்டுக் கொடுங்க சார்''என்று உடனடியாக பசி நிறுத்த சமரசத் திட்டத்தை அறிவித்தான்.

"சரி, சரி''என்ற சிவபாலனும், இராமநாதனும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டனர். அவர்கள் நனையாமல் இருக்க மேல் படுதாவை எடுத்துப் போட்ட ரிக்ஷா மாரி, தன் தலையில் ஒரு பிளாஸ்டிக் பையை - அது அவன் 'ரெயின் கோட்'டாம் - மாட்டிக்கொண்டு வண்டியை மிதிக்கலானான்.

"சிவா சார், எத்தனை மணிக்கு சொற்பொழிவு ஆரம்பம்?'' இராமநாதன் கேட்டார்.

"அது ஏழு மணிக்குத்தான். ஆனா, வரவேற்புரை ஆறரைக்குச் சரியா ஆரம்பிச்சிடும். நேரம் தவறவேக்கூடாது. மதர் விஷயமாச்சே'' என்றார் சிவபாலன்.

"கரெக்ட்''என்றார் இராமநாதன்.

இராமநாதனின் பை நிறைய நாகலிங்கப்பூக்களைக் கவனித்த சிவபாலன், "ஏன் ராமு சார், உங்களுக்குமட்டும் எப்படி இவ்வளவு கிடைக்குது?''என்று கேட்டார்.

"நம்ம வீட்டுப் பக்கத்திலே கார்ப்பரேஷன் விளையாட்டு மைதானம் தெரியுமில்லையா? அங்கே ஒரு பெரிய நாகலிங்கமரம் இருக்கு. அதிலே இருந்துதான் கிடைக்குது''என்றார் இராமநாதன்.

"அவங்க ஒண்ணும் சொல்றதில்லையா? வேற யாரும் எடுக்கிறது இல்லையா?''என்று கேட்டார் சிவபாலன்.

"நாகலிங்கப்பூன்னா செல்வவளமாச்சே! அவனவன் ஆளாய் பறக்கிறான். காவல்காரனுக்கு மாசம் இருநூறு ரூபாய் சுளையாக் கொடுக்கிறேன். அப்பப்ப காபி செலவுக்குவேற கொடுப்பேன். இப்ப எல்லாப் பூவும் நமக்குத்தான். வேற ஒரு பய மரத்துமேல கைவைக்க முடியாதே''என்றார் இராமநாதன்.

"இருநூறு ரூபாய் ரொம்ப ஜாஸ்தி சார்''என்று கருத்து தெரிவித்தார் சிவபாலன்.

"என்ன சார் செய்யறது? முதல்ல அம்பது ரூபாய்தான் தர்றதாச் சொன்னேன். காவல்காரப்பய பேராசைக்காரன். அப்புறம் "இப்படியெல்லாம் விக்கக்கூடாது'ன்னு கார்ப்பரேஷன் சட்டம் வேற இருக்காமே! அதனால்தான் இருநூறு கொடுக்க சம்மதிச்சேன்''என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் இராமநாதன்.

"சட்டத்தைவிட மதர் முக்கியம்னு நம்ம குருவே எழுதி இருக்காரே''என்று இராமநாதனின் நடவடிக்கையை ஆமோதித்தார் சிவபாலன்.

ரிக்ஷா மாரிக்கு அப்போது பார்த்துதானா திடீரென்று பேசத் தோன்ற வேண்டும்?

"ஏன் சார், மத்தவங்களும் பூ எடுத்துக்கிட்டா எல்லாருக்கும் நல்லதுதானே''என்று அப்பாவியாகக் கேட்டான்.

"ரோட்டைப் பார்த்து ஓட்டுடா, அதிகப்பிரசங்கி''என்று உறுமினார் சிவபாலன்.

கோபம் வந்தாலும் இயலாமையில் எழுந்த மௌனத்தோடு வண்டி மிதித்தான் ரிக்ஷா மாரி.

"பார்த்தீர்களா சார், ஹாஸ்டைல் ஃபோர்ஸ் வேலையை''என்று ரிக்ஷா மாரி என்கிற தீயசக்தியின் உண்மைச் சொரூபத்தைக் கண்டுபிடித்து சிவபாலனுக்கு விழிப்புணர்வு தந்தார் இராமநாதன்.

"நம்ம புத்தகச்சேவை ஜானகிராமன் புதுவீடு கட்டிட்டாராம். அடுத்த மாதம் கிரகப்பிரவேசம்''என்று முக்கியத் தலைப்புச்செய்திகள் வாசித்தார் சிவபாலன்.

"அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்ததுன்னு தெரியுமா சார்?''என்று கேட்டார் இராமநாதன்.

"ஊரில் ஏதோ நிலத்தை வித்து, படாத பாடுபட்டுக் கட்டினதாச் சொன்னார்''என்றார் சிவபாலன்.

"அப்பாவி சார் நீங்க''என்று அனுதாபப்பட்ட இராமநாதன், "அவர் கை சுத்தம்னா நினைக்கிறீங்க? அவர் எந்த டிபார்ட்மெண்டில் இருக்கார்னு யோசிச்சீங்களா? அதான் சார் அதிர்ஷ்டத்தின் இரகசியம்'' என்று சொன்னார் இராமநாதன். இவர் பரம்பரை பரம்பரையாக வாடகை வீட்டில் வசிப்பவர்.

"அட, இது எனக்குத் தோணாமல் போயிடுச்சே!''என்று தம் அறியாமையை நொந்துகொண்டார் சிவபாலன்.

"அன்னை பக்தராம். வெளியே சொன்னா வெட்கக்கேடு சார்''என்றார் இராமநாதன்.

மெல்ல மெல்ல பேச்சு களைகட்டியது. தியானமைய பக்தர்கள் அனைவரது அந்தரங்க விஷயங்களும் அம்பலம் ஏற்றப்பட்டன. நடுநடுவே பொருத்தமான 'மதர் பிரின்ஸிபிள்' ஆராயப்பட்டது.

பசி மயக்கத்திலிருந்த ரிக்ஷா மாரிக்கு "சவாரி'களின் பேச்சு எதுவும் புரியாவிட்டாலும், 'மதர்ங்கிற சாமிக்குப் பூ கொடுத்தா நல்லது'என்ற போதிமரத்து ஞானோதயம்மட்டும் அவன் மரமண்டைக்குக் கிடைத்தது.

ஜெயலட்சுமி கல்யாண மண்டபத்திற்கு எதிரே இருந்த தியானமையம் வந்துவிட்டது.

சில்லறையாக எட்டு ரூபாயை ரிக்ஷா மாரியின் கையில் திணித்துவிட்டு நடக்கத்தொடங்கினார் சிவபாலன்.

"சார் சார், பார்த்துப் போட்டுக்கொடுங்க சார்''என்று கெஞ்சினான் ரிக்ஷா மாரி.

"என்னப்பா, உன்கூட பெரியதொந்தரவாப் போச்சு''என்ற இராமநாதன் இரண்டு ரூபாயை அவனிடம் கொடுத்துவிட்டு, "அவ்வளவுதான்''என்றபடி நடந்தார்.

*******

கையில் பத்து ரூபாய் வந்ததும், ரிக்ஷா மாரி உலகத்தையே துச்சமாக ஒரு பார்வை பார்க்க, தெருமுனையில் இருந்த ஒரு மலிவான கையேந்தி பவன் கண்ணில்பட்டது.

அது ஏழைகளின் நட்சத்திர உணவுவிடுதி. அங்கே வருபவர்கள் சுவையையும், சுகாதாரத்தையும்விட அளவுக்குதான் முக்கியத்துவம் தருவார்கள்.

ஏழு ரூபாய்க்குச் சாப்பிட்டான் ரிக்ஷா மாரி. அன்லிமிடெட் மீல்ஸ்! விருந்து ஒன்றுமில்லை. விதையாக இருந்த சாதத்தை ஒரு அலுமினியத் தட்டில் கோபுரம்போலக் குவித்து, அதன் நடுவில் பள்ளம் தோண்டி, சாம்பார் என்று அழைக்கப்பட்ட பழுப்புநிறத் தண்ணீரை, பள்ளத்தில் நிரப்பிச் சாப்பிட்டான். இப்படி மூன்று முறை கோபுரம் கட்டி வயிறாரச் சாப்பிட்டான்.

இது நாளை மத்தியானம்வரை கூடத் தாங்கும். மிகவும் நிம்மதியாக இருந்தது.

'ஏதாவது சவாரி கிடைக்குமா?'என்று நோட்டம் விட்டுக்கொண்டு மீண்டும் தியானமையம் அருகே வந்தான்.

மீதமிருந்த மூன்று ரூபாய் சில்லறை ரிக்ஷா மாரியின் மனதைப் பாடாய்படுத்தியது.

'மூன்று ரூபாய்க்கு பீடிக்கட்டு வாங்கலாமா? சிகரெட்டும், வாழைப்பழமும் வாங்கலாமா?'என்ற பலத்த சிந்தனையில் ஆழ்ந்தான் ரிக்ஷா மாரி. முடிவு செய்ய முடியவில்லை.

அப்போது மதரைப் பற்றி 'சவாரி'கள் பேசியது நினைவுக்கு வந்தது. பக்தி, ஆன்மீகம் என்ற அனாவசியமான தொந்தரவுகள் எதுவுமற்ற ரிக்ஷா மாரிக்கு, 'இந்த மதருக்கு ஒரு ரோஜாப்பூ வாங்கிவைத்தால் என்ன?'என்று தோன்றியது.

அங்கிருந்த பூக்காரனிடம், "அண்ணே, ஒரு செவப்பு ரோஸ்எவ்வளவு?''என்று கேட்டான் ரிக்ஷா மாரி.

"ஒண்ணு ஒரு ரூவா''என்று சிவந்த பெங்களூர் ரோஜாப்பூவை கையிலெடுத்தான் பூக்காரன்.

'தினம் தினம் பீடி பிடிக்கிறோம். காசு மிஞ்சினா சாராயம் குடிக்கிறோம். இன்னிக்கு எல்லாக் காசுக்கும் பூ வாங்கினா என்ன? குடியாமுழுகிடும்?'என்று எண்ணமிட்டான் ரிக்ஷா மாரி.

'சுளையா மூணு ரூவா இருக்கு. காத்தாலே இட்லிக்கும், டீக்கும் ஆகுமே'என்று அறிவே இல்லாத அவன் மூளையிலும் ஒரு யோசனை தோன்றியது.

ரிக்ஷா மாரிக்குள் ஓர் உலகமகாயுத்தம் சில விநாடிகள் நடந்து ஓய்ந்தது.

"அண்ணே, மூணு ரூவாக்கு ரோஸ் கொடுங்கண்ணே''என்று எல்லாச் சில்லறைக் காசுகளையும் பூக்காரனிடம் கொடுத்தான் ரிக்ஷா மாரி.

பூக்காரனுக்கு ரிக்ஷா மாரியைப் பார்க்க பாவமாக இருந்தது. ஐந்து பூக்களைப் பொறுக்கி எடுத்து அவனது கையில் கொடுத்தான்.

"அண்ணே, நான் மூணு ரூவாதான் கொடுத்தேன்''என்று அரிச்சந்திர அவதாரம் எடுத்தான் ரிக்ஷா மாரி.

"ஏழைக்கு ஏழை ரெண்டு பூ இனாம்''என்று பாரிவள்ளல் அவதாரம் எடுத்தான் பூக்காரன்.

ரிக்ஷா மாரி சிவந்த ரோஜாப்பூக்களை எடுத்துக்கொண்டு, தயங்கி தயங்கி தியானமைய வாசலில் நின்றிருந்த துவாரபாலகரை அணுகினான். ரிக்ஷா மாரியைப் பார்த்ததும் அவருக்குப் பகீரென்றது. இவனை 'உள்ளே விடமுடியாது'என்று சொல்ல முடியாது. தியான மையமாயிற்றே! ஆனால், உள்ளே விடவும் மனமில்லை. இவனைப் பார்த்தாலே பரதேசிப்பயல் என்று தெரிகிறது. தியானமையத்தின் புனிதமே கெட்டுவிடும்.

நல்லவேளையாக துவாரபாலகரை எந்த சத்தியசோதனைக்கும் உட்படுத்தாத ரிக்ஷா மாரி, "சார், இத உள்ளே இருக்கிற சாமிகிட்டே கொடுத்துடறீங்களா?''என்று கேட்டான்.

பெரிய ஆபத்திலிருந்து தப்பியதைப் போலுணர்ந்த துவாரபாலகர், "அதுக்கென்னப்பா, கொடு''என்று வாங்கிக்கொண்டார். ரிக்ஷா மாரி வாசலைவிட்டு வெளியே போய்விட்டான் என்று உறுதியானபின் பூக்களை எடுத்துச்சென்று அன்னை படத்தின்முன் வைத்தார்.

இது ஆன்மீகக் கதை என்பதால், 'அதே நேரம் பிரபஞ்சம் பிளந்தது. அண்டசராசரங்கள் நடுநடுங்கின. தேவர்கள் ரிக்ஷா மாரி மீது பூமாரிப் பொழிந்தனர்'என்று சரடுவிட கதையில் இதுதான் சரியான இடம். ஆனால் மாரி, பாவம், ரிக்ஷாக்காரன்தானே! அப்படிப்பட்ட எந்த பிரளய விபரீதமும் நடக்கவில்லை.

அவன் நெஞ்சுக்குள் ஏதோ இலேசாகப் புரண்டதுபோல் இருந்தது. 'காசில்லாததால் நாலைந்து நாளாக 'சல்பேட்டா சரக்கு' உள்ளே போகவில்லை. அதனால் வந்த வினை இது'என்று நினைத்த ரிக்ஷா மாரி 'விதியே'என்று தன் ரிக்ஷாவில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான்.

*******

இலேசான குளிர்காற்று சுகமாக இருக்க, கண்களை மெல்ல மூடினான் ரிக்ஷா மாரி.

திடீரென இருள் சூழ்ந்ததுபோலிருந்தது.

'ஆத்தாடி! இது என்ன இருட்டா, இல்லை, வேறு ஏதாவதா? அமாவாசை இருட்டே வெளிச்சம்மினு சொல்லிடலாம்போருக்கே!'

தூரத்தில் ஒரே ஒரு மின்மினிப்பூச்சியின் 'மினுக் மினுக்'என்ற வெளிச்சம் தெரிந்தது. வரவர அந்த வெளிச்சம் பெரிதாகிக்கொண்டே வந்தது.

கண்களைத் திறக்கமுடியாதபடி இமைகள் பசைபோட்டு ஒட்டியது போலிருந்தது.

'செத்துகித்து போயிட்டமா!'என்ற பயம் தோன்றியது ரிக்ஷா மாரி.

செத்துவிட்டால் ரிக்ஷா என்னஆகும்? 'எவனாவது தள்ளிக்கிட்டு போயிடுவானே!'என்று மலையாக எழுந்த கவலை, ஒளியின்முன் மண்ணாகக் கரைந்தது.

என்ன நடக்கிறதென்றே ரிக்ஷா மாரிக்குப் புரியவில்லை.

சாராயம் குடித்தால் சில சமயம் இப்படி ஏதேனும் 'யோகானுபவம்' ஏற்படுவதுண்டு. அப்போது தொண்டை கமறும், நெஞ்சு எரியும். காரமாக ஊறுகாயோ, கருவாடோ கடித்துக்கொண்டால் முக்தி கிடைத்துவிடும்.

ஆனால், இப்போது நெஞ்சு குளிர்கிறது. தொண்டையிலோ சர்பத் சாப்பிட்டதைப்போல இனிப்பு.

அதே நேரம் மாரியின் தலை வேகமாக விரிந்தது. 'சொட்'டென அவன் தலைமீது ஒரு துளி தண்ணீர் விழுந்தது போலிருந்தது.

சற்று நேரத்தில் ஒரே நீலநிற ஒளிவெள்ளம். உடம்பு முழுவதும் தெம்பும், பலமும் பொங்கியது.'டெல்லிவரைகூட நிறுத்தாமல் ரிக்ஷா மிதிப்பது சுலபம்' என்று தோன்றியது.

தூரத்தில் வெண்ணிற ஒளிவெள்ளம் தெரிந்தது.

அப்படி இப்படி பராக்குப்பார்க்காமல் நேராக நடந்தால் அதற்குப் போய்விடலாம்.

பேந்த பேந்த விழித்துக்கொண்டு சுற்றிப்பார்த்தான் ரிக்ஷா மாரி. எங்கெங்கும் நீலநிற ஒளி. தூரத்தில் வெண்ணிற ஒளி.

தான் மட்டும் தனியாக நிற்பதை உணர்ந்தான். 'அடடா, ரிக்ஷா இருந்தால், ஒரே மிதியாக மிதித்து வெள்ளை லைட்டை டச் பண்ணிடலாமே'என்று நினைத்தான்.

நெஞ்சின் ஆழத்தில் ஏதோ ஒரு பூ திடீரென நேரங்காலந் தெரியாமல் மலர்வது போலிருந்தது.

இனி என்ன செய்வது?

ரிக்ஷா மாரியினுள் தெளிவான உறுதி பிறந்தது. 'நமக்கு இந்த லைட்மட்டும் தான் கதி. எது செஞ்சாலும் இத நினைச்சுக்கிட்டுதான் செய்யணும்'என்று தீர்மானம் செய்துகொண்டான்.

இனி அவன் அனாதை இல்லை.

எத்தனை யுகங்கள் அப்படிக் கழிந்தனவோ!

யாருக்குத் தெரியும்?

*******

"ஏண்டா''என்று சிவபாலன் மாரியை உலுக்க, கண்களைத் திறந்தான் ரிக்ஷா மாரி.

"என்னடா, கொடுத்த காசுக்குத் தண்ணி போட்டுட்டியா? எத்தனை தடவை கூப்பிடுறது?''என்றார் சிவபாலன்.

"எங்க சார் போகணும்?'' ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் 'திருதிரு'வென விழித்தான் ரிக்ஷா மாரி.

"உன் மாமியார் வீட்டுக்கு''என்று ஜோக்கடித்தார் சிவபாலன். புன்னகைத்தார் இராமநாதன்.

"அதுக்குள்ள மறந்துட்டியா? கற்பனாமேடு போகணும். அதே பத்து ரூபாதான் கொடுப்பேன்''என்று கறாராகச் சொன்னார் சிவபாலன்.

"ஏறுங்க சார். நீங்க மனசார எதக் கொடுத்தாலும் வாங்கிக்கிறேன், கொடுக்காட்டியும் சரிதாங்க''என்று வேறு உலகிலிருந்து பேசினான் ரிக்ஷா மாரி.

"பார்த்தீங்களா சிவா சார். தியானமையம் போயிட்டுவந்ததும் சரியான ரிக்ஷா கிடைக்குது. அப்ப பதினைஞ்சு ரூபா கேட்ட பய இப்ப கொடுக்கலைன்னாலும் சரிங்கிறான்''என்று அன்னையின் அளப்பரிய அருளை நினைத்து, சிலாகித்து, புல்லரித்துப் பேசினார் இராமநாதன்.

"பின்னே, அன்னையோட சக்தின்னா சும்மாவா?''என்று கர்ஜித்தார் சிவபாலன். கையில் ஒரு முரசுமட்டும் கிடைத்திருந்தால், 'கொட்டு முரசே! கொட்டு!'என்று முரசறைந்து வீர முழக்கமிட்டிருப்பார்.

"சரி சரி, ஏறுங்க, காலாகாலத்திலே வீட்டுக்குப்போய் சேரலாம். நாளைக்கு காலைலே எனக்குப் பூச்சேவை. சீக்கிரம் தூங்கணும்''என்று அலுத்துக் கொண்ட இராமநாதன், "லேட்டாப் போனா, அந்தத் திமிர்பிடிச்ச பூக்காரன் வேற யாருக்காவது பூவ வித்திடுவான்''என்று புலம்பினார்.

"அதானே, மதருக்குப்போற பூவோட மகிமையைப்பத்தி மட்டமான ஆளுங்களுக்கு என்ன சார் தெரியும்? இவங்க எல்லாம் ரொம்ப தாழ்ந்த ஜீவியம் சார்''என்று கூறிக்கொண்டே வண்டியில் ஏறினார் சிவபாலன்.

"அதான் உண்மை. இவங்க தொடர்பாலேயே நமக்கு எல்லா காரியமும் கெட்டுப்போயிடுது'' என்றபடி தாமும் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார் இராமநாதன்.

இவர்கள் பேசியது எதுவும் ரிக்ஷா மாரியின் காதுகளில் விழவில்லை. அந்த பத்து மணி இருட்டில் அவனுக்கு உலகமே வெளிச்சமாக இருந்தது. ஒளியை நினைத்துக்கொண்டே ரிக்ஷாவை உற்சாகமாக மிதிக்க ஆரம்பித்தான்.

தன்னை உணரத் தொடங்கிவிட்ட ஜடம், தன்னை முழுமையாக மறந்துவிட்ட பிரம்மத்தை ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு மிதிக்கலாயிற்று.


 

*******

முற்றும்.
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆசை பூர்த்தியானால் திருப்தி ஏற்படும். ஆசையின் தரம் திருப்தியின் தரத்தை நிர்ணயிக்கும். ஆசையில்லாவிட்டால் நிறைவு ஏற்படும். அதனால் (consciousness) ஜீவியம் மலர்ந்து இனிமையடையும்.

ஆசையழிந்தால் ஜீவியம் மலரும்.


 


 


 


 


 book | by Dr. Radut