Skip to Content

12. தேடி வந்த தெய்வம்

"அன்னை இலக்கியம்"

தேடி வந்த தெய்வம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

அறை முழுவதும் சுவரில் ஒழுங்காகப் பொருத்தப்பட்ட அன்னை படங்கள்.

"அது சரி ஆண்ட்டி, இந்த அறையில் எனக்குப் போட்டியாக இத்தனை பேர் இருக்கிறார்களே, இவர்களெல்லாம் யார்?'' என்றாள் சாதனா.

"இவர்கள் இத்தனைபேர் இல்லை. எல்லாமே ஒருவரின் படம்தான்'' என்றாள் சுசீலா.

"ஒருவரா? ஒருவர் எத்தனை வேடமணிந்தாலும் ஒரே மாதிரி முகம்தானிருக்கும். இப்படங்களில் இருப்பவர் வேறு வேறு என்று எண்ணும்படியல்லவா இருக்கிறது'' என்றாள் சாதனா.

"அதுதான் இவருடைய சிறப்பு'' என்றாள் சுசீலா.

"சிறப்பா? இது வியப்பாக அல்லவா இருக்கிறது?''

"ஆம், இதே ஐயப்பாட்டை இவரிடமே ஒருவர் கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் என்ன பதில் கூறியிருக்கிறார் தெரியுமா, "ஒவ்வொரு படத்திலும் என் மாறுபட்ட அம்சம் வெளிவரும். இதனை ஒன்று திரட்டிப் பார்த்தால் நானே அனைத்துப் படங்களிலும் உள்ளேன்' என்று கூறியிருக்கிறார்''.

"இவர் உங்கள் உறவினரா, நண்பரா?''

"எனக்கு மட்டுமல்லாது, எல்லோருக்குமே இவர் நித்தியமான உறவு. அவரவர் ஏற்கும் உறவு'' என்று பக்தியுடன் கூறினாள் சுசீலா.

"என்ன விந்தையான பெண்மணி இவர்!'' என்கிறாள் சாதனா.

"விந்தையான பெண்மணி அல்லர், இறைசக்தியவர். பெண் வடிவில் வந்தவர்'' என்றாள் சுசீலா.

"இவர் இறைவன் என்றால், நானும் இறைவன்தான்'' என்றாள் சாதனா குறும்பாக.

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?''

"மானுடமாய் இருக்கும் இவர் கடவுள்என்றால், நானும் ஏன் கடவுளாய் இருக்கக்கூடாது?''

"நீ சொல்வதும் சரிதான். மனிதர்கள் இறைவனின் நந்த பிரதி என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்லியிருக்கிறார்''.

"நான் அதைச் சொல்லவில்லை ஆண்ட்டி. கோயில்களில், படங்களில் உள்ள கடவுளர் வடிவம் போலில்லாது மானுட வடிவில் இருப்பதைக் குறிப்பிடுகிறேன்''. "வடிவமும், குணமும் கடந்த அனந்தப்பொருள் கடவுள். அது எப்படியும் இருக்க முடியுமல்லவா?'' என்றாள் ஆண்ட்டி.

"ஆக, நான் கடவுள் தான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்று சொல்லுங்கள்'' என்றாள்.

"அவள் குறும்பு சுசீலாவுக்கு மிகவும் பிடித்தது. நான் தான் முதலிலேயே நீ கடவுள் என்று ஒப்புக்கொண்டேனே'' என்று சுசீலாவும் பதிலுக்குச் சொன்னாள்.

அன்றிலிருந்து சாதனாவுடன் சுசீலாவுக்கு கலகலப்பான அன்பும் ஆதரவும் நிறைந்த புதிய வாழ்வு தொடங்கிற்று எனலாம். சாதனா வந்தவுடன் கால்வலி மறந்துபோனது. காலையில் துயில் எழுந்து வரும் அவளைக் காண அறை வாயில் காத்திருப்பாள் சுசீலா. மலர்ச்சியாக வெளிவரும் சாதனாவின் முகமும் அன்னையைப் போல இரவு இருந்தது போலில்லாமல் காலையில் வேறு விதமாக இருக்கும். அவள் பார்வை, பேச்சு, குறும்பு எல்லாமே ஏதோவொரு ஆழ்பொருள் கொண்டது போலிருக்கும்.

"என்ன ஆண்ட்டி, ஒரே பரவசமாயிருக்கிறீர்கள்?'' என்பாள் சாதனா.

"ஓ, அதுவா? அந்த நாட்களில் ஸ்ரீ அன்னையின் பால்கனி தரிசனத்திற்காக அன்பர்கள் காத்திருப்பார்களாம். அன்னை அங்குத் தோன்றியவுடன் பரவசப்படுவார்களாம். அதுபோல் என் கடவுள் தரிசனத்தில் பரவசப்படுகிறேன்'' என்பாள் சுசீலா.

"பக்தையே, என் கடவுள் அம்சத்தைக் கண்டுகொண்ட உன் பக்தியை மெச்சினேன்'' என்று சாதனா குறும்பாய்க் கூற, சுசீலாவின் கண்கள் கலங்கும்.

தன்னந்தனியாய் இருந்த சுசீலா ஆண்ட்டி, சாதனாவின் வரவால், அவள் கலகலப்பான பேச்சால், தூய அன்பால் உற்சாகமானாள். தானே சமைத்து, தானே சாப்பிடும் தனிமையால் சமையல் மீதே வெறுப்புற்றிருந்த சுசீலா, சாதனாவின் அன்பில் திளைத்து,அவளுக்காக விதம்விதமாகப் பலகாரங்களும் உணவும் சமைத்து அன்புடன் பரிமாறுவாள். சாதனாவும் உரிமையாக சுசீலாவை உட்கார வைத்துத் தானே சமைத்துப் பரிமாறுவாள். காலை பத்து மணிக்குப் புறப்பட்டு போய் மாலை ஆறு மணிக்கு வந்துவிடுவாள். சுசீலாவை கடற்கரைக்கு உலாவ அழைத்துப் போவாள். வேலைக்காரப் பெண்ணை 10 மணிக்கு மேல்தான் வரவேண்டும் என்று கூறிவிட்டாள் சுசீலா. சாதனா வீடு திரும்பும்முன் அவளை அனுப்பிவிடுவாள். அவள் துணிகளைத் தானே உலர்த்தி எடுத்து, தானே இஸ்த்ரி போடுவாள். அவள் கையாளும் பொருட்களை யாரும் தொடவிடமாட்டாள்.

சாதனாவும் அவள் அன்பான பணிவிடைகளை ஏற்று, தானும் அவளுக்குப் பணி செய்வாள். இரவு காலுக்கு மலிருந்து தடவுவாள், காலைப் பிடித்துவிடுவாள்.

உணவு பரிமாறும்போது அவள் முகத்தையே பரிவுடன் நோக்கும் சுசீலாவை, சாதனா கேலி செய்வாள்.

"பக்தையே நீ எம்பொருட்டு செய்த நிவேதனங்களை யாம் மகிழ்வுடன் ஏற்றோம். என்ன வரம் வேண்டுமோ, கேள். உன் பிரார்த்தனையை யாம் நிறைவேற்றவே உம்மிடம் வந்துள்ளோம்'' என்பாள்.

"தாயே, பராசக்தி, என் மகன் மீண்டும் என்னிடம் வரவேண்டும். என் இறுதிக் காலத்தில் அவன் என்னிடம் வந்துவிடவேண்டும்'' என்பாள் சுசீலா.

"பராசக்தி நேரில் வந்தாலும் மானுடம் திருப்தியடைவதில்லை. அவர்களுக்குத் தம் ரத்தபாசமே பெரிது. பரவாயில்லை மகளே, யாம் கொடுத்த வாக்குத் தவறுவதில்லை. உன் விருப்பப்படியே உன் மகன் உன்னைத் தேடி வருவான்'' என்று குறும்பாய்க் கூறுவாள்.

இப்படி இவர்கள் இருப்பது அக்கம் பக்கத்தவர்க்கு வியப்பூட்டியது. சுசீலா ஆண்ட்டியுடன் சேர்ந்தாற்போல் இரண்டு நாள் யாரும் தங்கமாட்டார்கள். இப்படி பெரிய உத்யோகம், பெரிய தோரணை உள்ள பெண் அவளுடன் சகஜமாய் நீண்ட நாள் இருப்பது வியப்பே என்று பேசிக்கொண்டார்கள்.

திடீரென்று ஒருநாள் சுசீலா சாதனாவிடம், "சாதனா, நீ எவ்வளவு பெரிய உத்யோகத்தில் இருக்கிறாய், உன் உற்றார், உறவினரையெல்லாம் நினைத்து ஏங்காமல் என்னிடம் எவ்வளவு பரிவும் பாசமுமாய் இருக்கிறாய், என் வயிற்றில் பிறந்த பிள்ளைக்கு ஏன் இந்த அன்பில்லை? உன்போல என் பிள்ளை என்னிடம் பரிவு காட்டினால் எவ்வளவு நன்றாயிருக்கும்'' என்றாள்.

"ஒருவேளை நீங்கள் என்னை அன்பு செய்வதற்காக உங்கள் பிள்ளை பாராமுகமாய் இருக்கிறாரோ, என்னவோ?'' என்று வழக்கமான குறும்பை உதிர்த்தாள் சாதனா.

"அது என்னவோ உண்மைதான். என் மகன் பாசமாய் பக்கத்திலிருந்திருந்தால் நான் பக்தியைக்கூட மறந்திருப்பேன்'' என்றாள் சுசீலா.

"சரி ஆண்ட்டி, வருத்தப்படாதீர்கள். உங்கள் மகன் உங்களைத் தேடி வந்துவிடுவார்'' என்று தெய்வவாக்குப் போல் கூறினாள்.

"இல்லை சாதனா, என் மகன் வரமாட்டான். அவனுக்கு என்மேல் பாசமில்லை'' என்று கண்ணீர் வடித்தாள்.

"பாசத்தை விடுவது கடினம். அது இயல்பாகவே உங்களுக்குக் கிடைத்தால் பாக்யமல்லவா?''

"என்ன செய்ய, அந்த ஞானம் வந்தால் எனக்குத் துன்பமே இல்லையே. கடவுள் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தாலும் என் மனம் என் சொந்தத்தையல்லவோ நினைக்கிறது'' என்றாள் சுசீலா.

"என்ன செய்வது ஆண்ட்டி? இந்தப் பாசம் காரணமாய்த்தான் மனிதர்கள் தம் அழைப்பிற்கிணங்கி அருகில் வரும் இறைவனைப் புறந்தள்ளிவிடுகிறார்கள்'' என்றுகூறிச் சிரித்தாள்.

"நீ என்ன சொல்கிறாய் சாதனா?'' என்றாள் சுசீலா.

"மனிதர்களின் இரத்தபாசம் வலுவானது என்று சொல்கிறேன்'' என்றாள் சாதனா.

"ஆண்ட்டி என்னைப் புறப்பட்டுவரச்சொல்லி போன் வந்துவிட்டது. நான் கிளம்புகிறேன். நிச்சயம் உங்கள் மகன் வந்துவிடுவார்'' என்று புறப்பட்டாள் சாதனா.

"என்ன சாதனா, கேலி செய்கிறாய்? என் பிள்ளை இருக்கும் இடமே தெரியாது. இத்தனை வருஷங்களில் ஒரு கடிதமோ, போனோ கூடச் செய்ததில்லை. எப்படி வருவான்?''

"அது அப்படித்தான் ஆண்ட்டி. உங்கள் உள்ளாழத்தில் உங்கள் மகன் நினைவிலிருக்கிறது. அந்த அழைப்பிற்குப் பதிலுண்டு'' என்று சீரியஸாய்க் கூறிவிட்டு, வழக்கமான குறும்புடன், "ஆண்ட்டி, மனிதன் கடவுளை அழைப்பானாம். கடவுள் வந்தவுடன் சொந்தங்களை எண்ணி மறுத்துவிடுவானாம். நான் கடவுள்போல் வந்தேன், என்ன பயன்? உங்கள் உள்ளாழத்தில் உங்கள் மகன் வீற்றிருக்கிறார்'' என்றாள் சாதனா.

"ஏதேனும் சொல்லி என்னை அழவைக்காதே. நீயும் என்னை விட்டுப் போகாதே'' என்றாள்.

"இல்லை ஆண்ட்டி, நான் எங்கு போனாலும் உங்களுக்குள்ளே இருப்பேன். இப்போது உங்கள் மகன் வருவார். மீண்டும் உங்கள் கடவுளிடம் "நீங்கள் தான் வேண்டும்' என்றழைக்கும்போது வந்து விடுவேன். இந்தாருங்கள் என் போன் நம்பர்'' என்று எண் எழுதிய அட்டை ஒன்றைக் கொடுத்தாள். பிரியாவிடைபெற்றுச் சென்றாள்.

மறுநாளே சுசீலாவின் மகன் வந்துவிட்டான். என்ன விந்தை! நான் "கடவுள், கடவுள்' என்று சொன்ன சாதனாவின் வாக்கு அப்படியே பலித்து விட்டதே. மகிழ்ந்தாள். எப்படியோ கெஞ்சியபோது எல்லாம் வாராத மகன் இன்று எப்படி வந்தான்?

மனைவியின்றி தனியே வந்திருந்தான். "ஏன் அவள் வரவில்லை?'' என்று விசாரித்தாள்.

"நீ எனக்குத்தானே அம்மா. நான் அதனால் வந்தேன். அவள் அவளுடைய அம்மாவுடன் இருக்கிறாள். அதை விடு'' என்றான்.

எப்படியோ தன் மகனில்லாது தன்னிறுதி மூச்சு முடியாது என்ற தெம்பு வந்தது. மகனிடம், நேற்றுவரை தன்னுடன் தங்கியிருந்த சாதனாவைப் பற்றி ஆர்வமாகக் கூறினாள். அவள் கொடுத்த போன் நம்பரைக் கொடுத்து, "அவளுடன் பேசு, நன்றி சொல். நான் அவளுடன் பேச வேண்டும். நீ வந்துவிடுவாய் என்று கடவுள் போல் சொன்னாள்'' என்று துடித்தாள்.

அவள் கொடுத்த போன் நம்பரில் டயல் செய்து விசாரித்த போது, அது தியான மையத்தின் இடமென்றும், அங்கு சாதனா என்ற பெயரில் யாருமே இல்லை என்றும் பதில் வந்தது.

அப்படியானால் சாதனா யார்? அவள் குறிப்பிட்ட அலுவலகத்தில் சாதனா என்ற பெயரில் உயர் ஆபீஸர் யாரும் டிரான்ஸ்பரில் வரவில்லை எனத் தெரியவந்தது.

"அம்மா, இதெல்லாம் நீ கண்ட கனவா? உன் பிரமையா?'' என்றான் மகன்.

இல்லை, கனவில்லை. யாவுமே உண்மை. அவள் பூஞ்சிரிப்பும், குறும்புமாகப் படியேறி வந்து "சுசீலா ஆண்ட்டி நீங்கள் தானே?' என்றது பசுமையாய் இருந்தது. "அந்தப் படங்களில் இருப்பது கடவுள் என்றால், நானும் கடவுளே' என்று சொன்னது, "நான் கடவுள் என்று ஒப்புக்கொள்கிறீர்களல்லவா?' என்றது, "பராசக்தியே வந்தாலும் மானுடர்க்குப் பாசமே பெரியது' என்று கூறியது, "அழைத்தவுடன் வந்தேன். ஆனால் உங்கள் உள்ளாழத்தில் உங்கள் மகனே இருக்கிறார்' என்று கூறியது, "நீங்கள்தான் வேண்டுமென்று உங்கள் அன்னையை அழைக்கும்போது மீண்டும் வருவேன்' என்று கூறியது....நினைக்க நினைக்க மனம் கரைந்தது. உடலும் கரைந்து ஒன்றும் இல்லாது போனாள் சுசீலா. அன்னையே நீரே வந்தீரா? உம்மைப் புறந்தள்ளி பாசத்தை வலியுறுத்தினேனா? "நீங்கள் தான் வேண்டும், நீங்கள் தான் வேண்டும்....' என்று அவள் உள்மனம் கதறியது.... மகன் அறிந்தானிலன். ஆழத்திலிருந்து வந்த அழைப்பல்லவா, அன்னைக்கு அவள் குரல் கேட்டது.

"ஆம் மகளே, நான் இங்கு உன்னுள்ளேயே இருக்கிறேன். அதை நீ உணர உனக்கோர் அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது', பொன்னொளியாய் அன்னையின் அன்புருவம் தெரிகிறது. அந்தப் பொற்பாதங்கள் ஒளிவீசி கண்கூசுகிறது. "அவள் மலரடிகளை ஊன்றிய இடங்களிலெல்லாம் அற்புதப் பரவசானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன' என்ற பகவானின் வாக்கு பொய்க்குமா?

"உன் பிரமையா?' என்று கேட்ட அவள் மகன், மெய்ம்மறந்து அவள் நிற்பதைக் கண்டு, "அம்மா உனக்கு என்னாயிற்று?'' என்று கலங்கியவாறு கேட்கிறான்.

புறவுலக சிந்தனையே இல்லாத சுசீலா மயங்கி வீழ்ந்தாள். அவள் மகன் பதறியவாறு அவளை மெல்ல படுக்கையில் கிடத்திவிட்டு டாக்டருக்குப் போன் செய்தான்.

வந்து பார்த்த டாக்டர், "ஏதோ அதிர்ச்சியால் மயங்கி இருக்கிறார்'' என்றும், "வயதான காலம், சர்க்கரை நோய் வேறு, நிலைமை மோசம்தான். மருந்து தருகிறேன். கடவுளை நம்புங்கள். நாளை வருகிறேன்'' என்று கூறிச் சென்றார்.

தன் வரவால்தான் தன் அம்மா இந்த நிலைக்கு ஆளானாளோ என்ற குற்றவுணர்வில் அவளைவிட்டு அகலாதிருந்தான் மகன்.

ஆனால் அவள் டாக்டர் கூறியதுபோல் மோசமான நிலை எதனையும் அடையவில்லை. மறுநாள் காலை புத்துணர்வுடன் எழுந்தாள். மகன் பாசத்தோடு பணிவிடை செய்வது கண்டாள். வியப்படையவில்லை.

"நான் குணமாகிவிட்டேன், கவலைப்படாதே. நீ உன் மனைவியைப் பிரிந்திருப்பது சரியில்லை. நீ அவளுடன் ஒற்றுமையாய் வாழ வேண்டும்'' என்று அறிவுரை கூறினாள்.

"உன்னைத் தனியாக விட்டுப் போக மனம் வரவில்லையம்மா'' என்றான்.

"நான் தனிமையிலிருந்து மீண்டுவிட்டேன். அன்னை என்னிடம் இருப்பதை உணர்ந்துவிட்டேன். இனி எனக்குத் தனிமையில்லை'' என்று தெளிவாய்க் கூறினாள்.

பிரிய மனமில்லாது அவள் மகன் தன் மனைவியைக் காணச் சென்றான். ஆனால் சுசீலாவுக்கு முன்பிருந்த பிரிவுத் துன்பம் இப்போதில்லை. அவன் பிரிவு அவள் மனதை வருத்தவில்லை. வேறு எதற்காகவும் கூட அவள் ஏங்கவில்லை. அன்னை நினைவு அவளுக்கு ஆனந்தமளித்தது.

அவருடைய யோகலட்சியத்தை ஏற்று, வாழ்வை திருவுருமாற்றுவதே அன்னைக்குச் செய்யும் வழிபாடு, நன்றி என்றுணர்ந்து விட்டாள். காலில் காயம், புண், வலி ஏதுமில்லை. சாதனாவாய் வந்து கால் மருந்திட்டது, காலைப் பிடித்துவிட்டது நினைத்து உடல் சிலிர்த்தாள். அன்னை தீண்டிய ஜீவனுக்கு நோவேது?

புதிய பிறப்பெடுத்தாள். சுசீலாவின் தெம்பும் திடமும், குறை கூற முடியாத அவளியல்பும் காண்போருக்கு வியப்பூட்டியது.

அவளைத் தேடி உறவினர்களும், நண்பர்களும் அன்னை அன்பர் என்ற புதிய உருவில் வந்தனர். மகன் குணம் மாறி, தன் மனைவியுடன் அவளுக்குத் தொண்டு செய்ய வந்துவிட்டான்.

ஆனால் சுசீலா இப்போது விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி கூட்டத்தின் நடுவே அன்னையுடன் தனிமையில் வாழும் வாழ்வைக் கற்றுவிட்டாள்.

அவளில் வெளிப்பட்ட அன்னை அவளைச் சூழ்ந்துள்ளவர்க்கும் மகிழ்வளித்தார்.

முற்றும்.

*******

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உயர்ந்த அறிவை ஏற்றுக்கொண்டு, அதனடிப்படையில் நோக்கங்களை மாற்றிக்கொண்டால், பிரச்சினைகள் மறையும். கவலை சந்தோஷமாகும். வெறுப்பான கசப்பும் மறையும்.
 
வெறுப்பும் கசப்பும் மறைய உயர்ந்த அறிவு போதும்.book | by Dr. Radut