Skip to Content

13. அகந்தையிலிருந்து ஜீவனுக்கு உயர்வது

அகந்தையிலிருந்து ஜீவனுக்கு உயர்வது

N. அசோகன்

அந்நாளிலிருந்தே ஆன்மீகம், யோகம்என்றால் பணம், பொருள், காமம் என்ற இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. எந்தப் பற்றுமே இல்லாத நிலைக்கு துறவறத்தை அடையாளமாகச் சொல்வார்கள். இந்தக் கருத்தின் உச்சக்கட்டமாக "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்'' என்று திருமூல நாயனார் சொல்லி இருக்கின்றார். கிருஷ்ண பகவான் கீதையில் அவரிடம் சரணமடைவது என்றால் தர்மங்களையும் விட்டுவிட்டு வரவேண்டுமென்று சொல்லியிருக்கிறார். ஆன்மீகம் இப்படி உயர்ந்த ஒரு வரையறையை விதிக்கிறதென்றால் இல்லற வாழ்வில் ஈடுபட்டு உள்ளவர்களும் அந்நிலைக்கேற்றாற்போல் சில தவறான விஷயங்களை விலக்கி, கட்டுப்பாடு விதிக்கின்றனர். அதாவது பிள்ளைகளிடம் பெற்றோர் "ஆணவம், பேராசை, கோபம், திருட்டுத் தனம் ஆகியவை கூடாது'' என்று புத்திமதி சொல்கின்றனர். இம்மாதிரி குண விசேஷங்களை வெளிப்படுத்துகின்ற குடும்பங்களை அநாகரீகமானவர்கள் என்று ஊரார் ஒதுக்கி வைக்கின்றனர்.

ஆணவம், கோபம், சுயநலம், இவையெல்லாம் தவறான உணர்வுகள். இவற்றிலிருந்து விடுபட்டால் நாம் நல்லவர்களாகிவிடுவோம் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். நமக்கு அகந்தை உண்டு. அதைத் தாண்டி நமக்கு ஆன்மாவும் உண்டு. நாம் நம் ஆன்மாவை உணர்வதில்லை. அகந்தையைத்தான் உணர்கிறோம். அதுதான் நமக்குத் தெரிகிறது என்பதால் அதை நம் ஜீவனாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் அகந்தை நம் ஜீவன் இல்லை. ஆன்மாதான் நம் ஜீவன். தவறான உணர்வுகள் நீங்கி விட்டால், அத்துடன் அகந்தை அழிகிறதுஎன நாம் எதிர்பார்க்கிறோம். இது உண்மை என்றால் அகந்தை அழிந்தவுடன் ஆன்மா எழவேண்டும். ஆனால் தவறான உணர்வுகளிலிருந்து விடுபட்டபின் உடனே நம் ஆன்மா எழுவதில்லை. இதை வைத்துப் பார்க்கும்பொழுது தவறான உணர்வுகளுடன் அகந்தை முடிவதில்லை எனத் தெரிகிறது. இவற்றைத் தாண்டியும் அகந்தை இன்னுமுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவருக்கு வீடு, நிலம், பணம்என்று சொத்து பல வகைகளில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தச் சொத்து இரண்டு, மூன்று வீடுகள், நாற்பது அல்லது ஐம்பது ஏக்கர் நிலம் மற்றும் ஓரிரண்டு கோடி வங்கி சேமிப்பு என்றுகூட இருக்கலாம். இவையெல்லாம் அவருக்குரியவை, அவருடைய உடைமைகள் என்றாகின்றன. இவ்வளவு சொத்து இருப்பதால் ஊரில் அவருடைய மதிப்பு உயர்கிறது. அவரைப் பார்க்க எல்லோரும் வருகின்றனர். ஊரில் உள்ள மற்ற முக்கிய பிரமுகர்கள் எல்லாம் அவரை வீட்டிற்கு அழைக்கின்றனர். இது அவருக்குப் பெருமையாக இருக்கிறது. இவ்வளவு மதிப்பும் மரியாதையும் தேடித் தருகின்ற அந்த வீடு, நிலம், பணத்தின்மேல் அவர் ஒரு பற்று வைக்கின்றார். அந்தப்பற்று அவருக்கு இயற்கையாக வருகின்றது. நம்மிடம் இருக்கும் பொருளை நாம் பயன்படுத்துவது ஒரு நிலை. பயன்படுத்துவது என்ற இடத்தில் தவறில்லை. ஆனால் அது நம்முடையதுஎன்று உரிமை கொண்டாடி ஒரு பற்றுவைக்கின்றோமே அந்தப் பற்றுதான் அகந்தையின் வெளிப்பாடு. அது ஆன்மீகத்திற்கு உதவாது. இந்தப் பற்றுக்கு மேலும் பல ரூபங்கள் உண்டு. ஒருவருடைய வீடோ அல்லது நிலமோ அவருக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க பத்திரங்கள் இருக்கின்றன. வங்கி சேமிப்பில் அவர் எவ்வளவு போடுகிறார் மற்றும் எடுக்கிறார் என்பதைக் கண்டறிய பாஸ்புக்என்ற ஒன்று இருக்கும். வீட்டின் மேல் பற்று வைப்பவர் அந்த வீட்டுப் பத்திரத்தின் மேலும் பற்று வைப்பார். வங்கியில் சேமிப்பு வைத்திருப்பவர் அதற்கு நிரூபணமான பாஸ்புக் மேலேயும் பணத்திற்கு ஈடான ஆசையை வைத்திருப்பார். பத்திரம் வீட்டுக்குச் சமமாகிறது. பாஸ்புக் பணத்திற்குச் சமமாகிறது. இப்படி, பத்திரத்தின்மேலும் பாஸ்புக்மேலும் பற்று வைப்பது அகந்தையின்பிடி வலுவடைவதைக் காண்பிக்கிறது.

 • பத்திரம்முக்கியம் என்றாலும் பத்திரமே வீடாகிவிடாது.
 • பட்டம்முக்கியம் என்றாலும் பட்டமே படிப்பாகிவிடாது.
 • தாலிமுக்கியம் என்றாலும் தாலியே திருமணமாகிவிடாது.

வீடு இருந்தால் பத்திரம் இருக்கும். சேமிப்புஎன்று இருந்தால் அது வங்கியில் டெபாஸிட்டாக இருக்கும் என்பனவெல்லாம் இப்போதைய நிலை. ஆதிநாளிலிருந்து இதே நிலை என்று வைத்துக்கொள்ள முடியாது. நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரம் இல்லாமல்கூட நிலம் வைத்திருந்தார்கள். சேமிப்பு என்பது பணமாக வீட்டிலேயே இருந்தது. நம் நாட்டில்தான் திருமணம் என்றால் அதற்கு நிரூபணமாக கழுத்தில் தாலி, விரலில் மோதிரம் என்றெல்லாம் பார்க்கலாம். மேலைநாடுகளில் முறையாகத் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்துகிறார்கள். தங்களைக் கணவன், மனைவிஎன்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். நமக்கு இது ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மேலைநாடுகளில் நீதிமன்றங்களே இப்படி வாழ்கின்றவர்களை கணவன், மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

 • பத்திரம் இல்லாமல் நிலம் வைத்திருக்கலாம். ஆனால் நிலமில்லாத பத்திரத்துக்கு மதிப்பில்லை.
 • பட்டம் இல்லாமல் படித்திருக்கலாம். ஆனால் படிப்பு இல்லாமல் பட்டம் வைத்திருந்தால் அர்த்தமில்லை.
 • தாலி இல்லாமல் குடும்பம் நடத்தலாம். ஆனால் கணவர் இல்லாமல் வெறும் தாலிக்கு எந்த அர்த்தமுமில்லை.

ஆனால் மனிதன் இப்பொழுது உள்ள மனநிலையில் பத்திரம், பட்டம், தாஎன்று இவை மூன்றும் வீடு, படிப்பு, திருமணம் என்பவற்றிற்கு அடையாளமாக இருக்கின்றன. அடையாளத்தையே அதற்கு பின்னிருக்கும் விஷயத்திற்குச் சமமாகக் கருதுவது ஒரு மூட நம்பிக்கையாகும். இந்த மூட நம்பிக்கை இருக்கும் வரை அகந்தையை அகற்றுவது கடினமாகும்.

ஆணவம், திமிர் போன்றவை அகந்தையின் மட்டமான வெளிப்பாடுகள் என்றால் மானம், மரியாதை, உரிமை போன்றவை அகந்தையின் உயர்நிலை வெளிப்பாடுகளாகும். பணம், உடைமைகளை இழந்தாலும் மனிதன் மானத்தை இழக்கப் பிரியப்படுவதில்லை. உடைமைகள் போனால் உயிர் வாழலாம். ஆனால் மானம் போனால் உயிர்வாழ முடியாது என்பது பல பேருடைய நிலை. குடும்பத்தில் ஒருவர் மானம் போகும்படியான காரியத்தைச் செய்துவிட்டால் குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் இனிமேல் எப்படி வெளியே தலையைக் காட்டுவதுஎன்று பேசுவார்கள். மானம், மரியாதைகூட அகந்தையின் சின்னங்கள் என்றால் மானம், மரியாதையில்லாமல் எப்படி வாழ்வது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி குடும்பம் நடத்துபவர்களுக்கு உரியதில்லை. யோகம் செய்ய விரும்புகிறவர்களுக்குத்தான் இந்தக் கேள்வி பொருந்தும்.

பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனாரின் பிள்ளைப் பாசத்தை சிவபெருமான் சோதிப்பதாகப் படிக்கிறோம். சிவனடியார் வேடம் அணிந்து வந்து தம்மைத் தாக்கிய எதிரியை மெய்ப்பொருள் நாயனார் ஒன்றும் செய்யாமல் விடுவதைக் காண்கிறோம். கிருஷ்ணரோடு பழகும் கோபிகைகளுக்குத் துணியை இழக்க நேரிடும் அபாயம் வருகிறது. இத்தகைய சோதனைகளைத் தாண்டி வருகின்ற பக்தர்களையும், பக்தைகளையும்பற்றிக் கேள்விப்படுகின்ற சாதாரண மனிதன் இவர்களைப் பெரிய ஆன்மாக்கள்என்று பாராட்டுகிறான். ஆனால் தான் இவர்களைப் போல் மாற முடியும்என்று நினைப்பது இல்லை. அதை நாடுவதும் இல்லை.

இப்படி, பெரிய ஆன்மாக்களுக்கு உரிய சிறப்பை அன்னை எளிய பக்தர்களுக்கும் அளிக்கிறார். பிள்ளையைக் கறி சமைக்க வேண்டும் என்று சிறுத்தொண்ட நாயனாருக்கு வந்த சோதனை அவர் பிள்ளைப் பாசத்தைவிட வேண்டும் என்பதற்கு அறிகுறியாகும். தன்னைத் தாக்கிய சிவனடியாரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று வந்த நிலைமை உயிர்மேல் உள்ள பாசத்தைக்கூட மெய்ப்பொருள் நாயனார் விடவேண்டுமென்று அறிவுறுத்துவதாகும்.

இப்படி, பாசம், ஆசை, மானம், போன்றவற்றையெல்லாம் கடந்து வந்தால்தான் நம்முடைய ஜீவியம், சத்தியஜீவிய நிலைக்கு உயர்ந்து எழும் என்றாகிறது. இத்தகைய தத்துவங்களை நடைமுறையில் கடைப்பிடிப்பது எப்படி?

இப்பொழுது மீண்டும் நாற்பது காணி நிலம் உள்ளவர்களுக்கு வருவோம்.

 • என்னளவுக்கு இந்த ஊரில் வேறு யாருக்கும் நிலமே இல்லை. ஆகவே நான் தான் இந்த ஊரில் முக்கியஸ்தன் என்பது அகந்தையின் நிலை.
 • இந்த நாற்பது காணி நிலத்திலிருந்து என்ன உச்சக்கட்ட விளைச்சலைக் கொண்டு வர முடியுமோ அதைச் செய்வது எனக்கும் நல்லது, நிலத்திற்கும் நல்லது என்று நினைப்பது வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வைக் காட்டுகிறது. இது அகந்தையை விட உயர்ந்த நிலை.
 • இந்த நாற்பது காணி நிலத்திலிருந்து உச்சக்கட்ட விளைச்சல் வரவேண்டும் என்பது தான் என் நோக்கமேயொழிய அதை நானே சாதித்துக் காட்ட வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. அந்த வேலையை சிறப்பாகச் செய்யக்கூடியவர் யாராக இருந்தாலும் அவர் அதைச் செய்யட்டும் என்ற அந்த எண்ணம் ஓர் உயர்ந்த எண்ணம்.

அகந்தையை விலக்கி, கடமையைச் செய்வது ஆன்மீகம். மரியாதை தேடினால் கிடைக்காது. மரியாதைக்குரியவராக நடந்து கொண்டால், மரியாதை தானே தேடி வரும். உரிமையைக் கொண்டாடி கொண்டிருப்பதைவிட வேலையைச் சிறப்பாகச் செய்தால் உரிமை, தானே தேடி வரும்.

 • வாழ்க்கை நாம் செய்யும் செயலைக் கருதுவதில்லை. நம்முடைய மனோபாவத்தைத்தான் கருதுகிறது. ஆசையைத் தாண்டி கடமையைச் செய்வதுஎன்பது மனிதன் சான்றோனாவது. இது அகந்தை அழிகின்ற நிலை. தன்னைக் கடுமைப்படுத்திக்கொண்டும் ஆசையை விடலாம். அவ்வகையிலும் அகந்தை அழியும்.
 • இதற்குப் பதிலாக ஆசையைப் பக்குவமாக திருவுருமாற்றம் செய்து கடமையாக மாற்றினால், அகந்தை அழிவதோடு மட்டுமின்றி நம் ஆன்மாவும் வெளிவரும்.
 • இது அகந்தை விலகி, ஜீவன் மலர்ந்து எழும் பாதை.
 • சுருங்கச் சொன்னால், தவம் வெளி முயற்சி, யோகம் உள் முயற்சி.
 • புறம் அகமானால், தவம் யோகமாகும்.

******** 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
செயலின் புறம் காலத்தால் அழியும். அதன் சூட்சுமப் பலன் அழியாது.
 
எண்ணம், நோக்கம் அழிவதைப் போல் செயலை எளிதில் அழிக்க முடியாது.
 
 
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூகம் பழக்கங்களை மாற்றுவது போல, மனம் ஏற்ற பழக்கங்களை மாற்ற முடியாது. உடையை மாற்றுவது போல் நல்லது கெட்டது, உயர்வு தாழ்வு என்பவற்றை மாற்ற முடியாது.
 
சமூகப் பண்புகள் மனத்திற்குரியவை.
எளிதாக மாற்ற முடியாது.
 
 

 book | by Dr. Radut