Skip to Content

2. அது முடியும்

1000 ஆண்டுகட்கு முன் வாழ்க்கையின் அமைப்பை நாம் இன்று கற்பனை செய்ய முடியாது. நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுவதுபோல், காலத்திற்கேற்ப நிலை மாறும். இங்கிலாந்தில் அன்று வாள் போர் உச்சக்கட்ட மரியாதை உடையது. உலகப் போருக்கு முன் இங்கு, "ஒருவருக்கு ஆங்கிலம் எழுத வருமானால், ஒரு குடும்பத்தை அதனால் நடத்தலாம்'' என்பார்கள். "வாள்வீச்சில் ஒருவன் மிஞ்சினால் அது ஒருவனுக்கு சோறு போடும்'' என்பது அன்றைய இங்கிலாந்தில் வழக்கு.

Lancelot லான்ஸ்லாட் என்பவனுக்கு வாள் உரிய கருவி. அவன் வாட்போரில் (fencing) விளையாடும்பொழுது வாள் பாம்பு போல் செயல்படும். அது கண்கொள்ளாக் காட்சி. அவன் ஊர் ஊராகச் சென்று அந்த ஊர் வீரனை சவாலுக்கு அழைப்பான். ஊர் முழுவதும் திரண்டு வேடிக்கை பார்க்க வரும். வசூலாகும் பணம் அவன் வருமானம். எப்பொழுதும் லான்ஸ்லாட்டே ஜெயிப்பது வழக்கம். அத்துடன் அவன் எதிரியின் வாளை அவன் கையிலிருந்து கீழே விழும்படித் தட்டி விடுவான். அதுவும் வாள் அவனது கையிலிருந்து செங்குத்தாகக் கிளம்பி வானை நோக்கி எழும்படி தட்டி விடுவான். கூட்டம் இதைப் பார்க்க வரும். அது போல் ஒருவனைத் தோற்கடித்தபின் தோற்றவன், "எப்படி இதைச் செய்தாய்?'' எனக் கேட்டான். லான்ஸ்லாட் எப்படி கத்தியைப் பிடிப்பது, எப்படி எதிரியை நோக்கிச் செல்வதுஎனக் கூறினான். சுமார் 10 அல்லது 20 உபாயங்களை லான்ஸ்லாட் கூறிய பொழுது, தோற்றவன் ஒவ்வொன்றிற்கும் "அது முடியும்'' என்றான். முடிவாக லான்ஸ்லாட் "உயிர் போகும் எனப் பயப்படக் கூடாது'' என்றான். எதிரி மலைத்து நின்றுவிட்டான். "அது எப்படி முடியும்?'' என்றான். 

  • எந்த அளவிலும் பெரிய காரியத்தைச் சாதிக்க மரணதைரியம் தேவை.
  • மரணத்திற்கு பயப்படுபவர் அன்பராக முடியாது.
  • மரணபயம் போனபின்னரே ஒருவன் மனிதனாகிறான் என்கிறார் அன்னை.



book | by Dr. Radut