Skip to Content

பகுதி 12

மாறாக மாமியார் குறை சொல்லாவிட்டால், சுபாவத்திற்கு எதிராகக் கணவன் பாராட்டினால், குறித்த நேரத்திற்கு வந்தறியாதவர் நேரத்திற்கு வந்தால், பிரார்த்தனை தவறாது பலித்தால், மனம் அளவுகடந்து சந்தோஷப்படும். நாமுள்ள நிலையில் நான் கூறும் மாற்றம் அவருக்கு வந்துவிட்டது எனப் பொருள். நாம் இன்றுள்ள நிலையில் வரும் மாற்றத்தைப் பற்றியே இக்கட்டுரை முழுவதும் எழுதியுள்ளேன். அதுவே முதல் நிலை. அது முடிந்து, அதற்குரிய பலன் கிடைக்கும். முடிவாக நான் வாசகர்கட்குச் சொல்ல விரும்புவது எளிது. அதன் பலன் பெரியது. பக்தி, நம்பிக்கையுள்ள அனைவராலும் பின்பற்ற முடியும். நடைமுறையில் செய்பவர்களும், தொடர்ந்து செய்பவர்களும் குறைவு. நல்லது என அறிந்ததை விரும்பி ஏற்று, முழுமுயற்சி செய்ய வழக்கத்திற்கு மாறாக வரும் அன்பர்கட்கு முழுப் பலனுண்டு என்பதை மீண்டும் சொல்கிறேன். முடிவுரையை எழுதும்முன் கட்டுரையில் கருத்துகளை மீண்டும் ஒருமுறை எழுதி பிறகு முடிவுரையை, (முன்னுரையாகச் சொல்லிய முடிவுரையை) மேற்கொள்கிறேன்.

கட்டுரையின் முக்கிய கருத்துகள் :

  • சத்திய ஜீவியம் 1956இல் பூமிக்கு வந்துவிட்டதால் நூறுபேர் யோக வாழ்வை ஏற்க முடியும்.
  • யோகத்தின் கடுமையை விலக்கி, யோகப்பலனை வாழ்வில் பெறுவது யோக வாழ்வு.
  • தெய்வீக வாழ்வு முழு யோகமாகும்.
  • இன்றைய நம் வாழ்வு அல்லலறும் மனிதவாழ்வாகும்.
  • மனிதவாழ்வின் அவதி நீங்கி, வாழ்வு உயர்வது யோக வாழ்வாகும்.

  • இதுவரை நாம் அறிந்தவற்றைப் புது நோக்கோடு பார்த்தால் புது ஞானம் ஏற்படும்.
  • யோக வாழ்வு உயர்ந்த மனித வாழ்வு, முழுவதும் யோகமான தெய்வீக வாழ்வு (Divine life) இல்லை.
  • யோகத்தை அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருமே ஏற்றனர்.
  • மனிதன் அவர் யோகத்தை ஏற்காததால் பகவான் உடலை நீத்தார்.
  • தலைவர்கள், மகாத்மாக்கள், மகான்கள் ஆரம்பித்த ஸ்தாபனங்கள், இயக்கங்களில் ஆரம்பத்தில் அவர்கள் தோற்ற இடங்களிலும், அவர்களிட்ட அஸ்திவாரத்தின் பலத்தால் பின்னர் வரும் தொண்டர்கள் வெற்றி பெறுவதுண்டு.
  • இன்று தமிழர்கள் அன்னையை அறிந்து வணங்குவதோடு,
  • புதுவை, தமிழ்நாட்டில் ஆசிரமத்தைப் பற்றிய நல்லபிப்பிராயம் பரவிவருகிறது.
  • அன்னையிடம் வந்தபின் அவர்கள் அருள் அளிப்பதை, குருவாயூரப்பன் விமானம்போல, அனைவரும் காண்பதில்லை.
  • மாற்றம் எனப்படுவதை நாமுள்ள நிலையிலேயே (horizontal) முழுமையாகப் பெறலாம். அதிலிருந்து உயர்ந்து (vertical growth) அடுத்த நிலையில் பெறலாம்.
  • புதியதை முதல் ஒருவர் செய்வது சிரமம். அடுத்து வருபவர்கள் எளிதாகச் செய்யலாம்.
  • மாற்றம் என்பது முன்னோடிகளுக்குரியது.
  • அன்னையிடமிருந்து நாம் பெறுவது நம் (level of personality ) திறமையின் அளவைப் பொருத்தது.

  • (Energy-direction-organisation-efficiency) சக்தி எழுந்து முறைப்பட்டுச் செயலாக மாறுகிறது.
  • மனித வாழ்வின் அடிப்படை வலிமை, அதுவும் பொய்யின் வலிமை.
  • தெய்வீக வாழ்வின் அடிப்படை சத்தியம் (பூரண சத்தியம்).
  • யோகவாழ்வின் அடிப்படை பொய்யை மீறிய மெய்யின் வலிமை.
  • முன்னோடியாக இல்லாதவர்க்குப் பலரும் மாறியபின் பலன் வரும்.
  • தகுதியுண்டா என்ற கேள்வி நம்பிக்கையில்லை என அறிவுறுத்தும்.
  • யோகத்தில் எல்லா ஆபத்துகளும் உண்டு.
  • யோக வாழ்வில் எல்லாப் பாதுகாப்புகளும் உண்டு.
  • விஷயத்தைப் பொருத்தவரை இக்கட்டுரை பழையது.
  • கோணத்தால் புதியது.
  • பிறப்பால் நிர்ணயிக்கப்பட்ட நம் வாழ்வு, அன்னையால் மாற்றி அமைக்கப்படுகிறது.
  • உழைப்புக்குப் பல நிலைகளுண்டு, நிலையுயர்ந்தால் பலன் உயரும்.
  • ஆன்மீக உழைப்புக்கு அதிகப் பலனுண்டு.
  • எல்லா நிலைகளிலும் சூட்சுமமுண்டு, சமர்ப்பணம் பகவான் நமக்களித்த உச்சகட்ட சூட்சுமம்.
  • நமக்குச் சேர வேண்டியதைக் குறைவாகவோ, அதிகமாகவோ ஏற்றுக் கொள்ளக் கூடாது.
  • மேல்மனம் மறந்தவற்றையும், ஆழ்மனம் எதிர்பார்ப்பதால் காரியம் கெடும். மறந்ததின் பலனாக முடிவில் நல்ல பலன் உண்டு.

  • சில சமயங்களில் நாம் சொல்வது பலிப்பதால், நல்லதை மட்டும் உண்மையாகச் சொல்ல வேண்டும்.
  • அதிர்ஷ்டம் வரும்பொழுது சுபாவமாகச் சொந்த புத்தி எழுந்து கெடுக்கும்.
  • Life Divine லைப் டிவைனைப் படித்து பல நிலைகளில் பலன் பெறலாம்.
  • நூலைப் படிப்பதால் மட்டுமே ஆரம்பிக்க இருக்கும் தொழிலுக்கு முதலில்லாமலே பலன் கிட்டும்.
  • பணம் எளிதில் வாராத இடங்களிலும், காணிக்கைக்காக எளிதில் வரும்.
  • நாம் உள்ள சூழல் நம் எண்ணத்தை மீறிச் செயல்படும்.
  • முக்கிய நேரங்களில், முக்கியமானவரையும், விலக்க வேண்டியிருக்கும்.
  • தரித்திரம் விலகி அதிர்ஷ்டம் வரும்பொழுது, தரித்திரத்தின் மீது ஆசை எழுந்து கெடுக்கும்.
  • நம்பிக்கையில்லாக் குடும்பத்திற்கு நம்பிக்கையின் பலனை அளிக்க முயல்வது பலன் தாராது.
  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் இறைவனின் பொறியான அவதாரமில்லை, இறைவனின் பகுதியானவர்.
  • அன்னை பகவானின் யோக சித்தியையும் கடந்தவர்.
  • சுபாவத்தால் மாறுபட்டவர்கள் பிரார்த்தனை எதிராகப் பலிக்கும்.
  • நான் என்பதே போக வேண்டும் என்பதால் என் மகன் என்பதற்கு இடம் இல்லை.

  • பிறர் மாற பிரார்த்திப்பது சிரமம். அது நடக்க நாம் அதிகமாக மாற வேண்டும்.
  • வாழ்வு துரோகத்தை நன்றியாக நாலு பிறவிகளில் மாற்றுகிறது.
  • ஆனந்த அனுபவமே சாதனை.
  • ஜீவனை 9 பகுதிகளாகப் பிரிக்கலாம்.
  • முதல்நிலை மேதைக்கும், 9ஆம் நிலை மண்ணாங்கட்டிக்கும் உரியது.
  • சக்தியின் அளவே சாதனைக்கு ஆரம்பம்.
  • சக்திகளில் தலை சிறந்தது அன்னை சக்தி.
  • அளவு கடந்து அன்னை சக்தி எழுவதை ஒரு முறையாவது பார்ப்பது மாற்றதிற்கவசியம்.
  • பத்து மடங்கு வருமானத்திற்குரிய சக்தியை வேறு வகையில் பெற்றால் புரிவதில்லை.
  • சின்ன புத்தி சிறு அளவிலிருந்தாலும் மாற்றம் தடைபடும்.
  • சோர்வைத் தெம்பாக மாற்றுவது மாற்றத்தின் பகுதி.
  • சமூகத்தைப்போல், உயர்ந்த நிலையில் அன்னையின் சூழல் நம்மை ஆதரிக்கிறது.
  • அதன் தீண்டுதல் வாழ்வதே மாற்றம்.
  • நடைமுறையில் நடக்காத இலட்சியங்கள் அன்னை வாழ்வில் நடக்கும்.
  • நஷ்டத்தைப் பொருட்படுத்தாத மன உறுதி அதிக இலாபத்தைச் சம்பாதிக்கும்.
  • சத்தும், அசத்தும் சேர்ந்தது பிரம்மம்.

  • இரவும் பகலும் இணைந்து நாளாகிறது.
  • சொர்க்கமும், நரகமும் மோட்சத்தின் பகுதிகள்.
  • சுவையும், கசப்பும் சேர்ந்தது குடும்பம்.
  • வெற்றியும், தோல்வியும் சேரந்தது காரியம்.
  • மரியாதையும், அவமானமும் சேரந்தது வாழ்வு.
  • முரண்பாட்டை விலக்குவது மனித வாழ்வு, ஏற்பது யோக வாழ்வு.
  • காரியம் சிறியதா, பெரியதா என்பதைவிட மனம் முழுமையாக இருக்கிறதா, இல்லையா என்பதே முக்கியம்.
  • நாம் அன்னையை நெருங்கி வந்தால் நெருங்கி வரமுடியாத உறவும், நட்பும் விலகும்
  • அருளால் வளரும் வருமானம் யோக சித்தியை அளிக்கும்.
  • சிறு நல்லதிற்குப் பெரும்பலனும், சிறு தவற்றுக்குப் பெரிய தண்டனையும் உண்டு.
  • மேலும் கற்க விழைபவர் அன்னைக்குரியவர்.
  • இன உணர்வு அன்னை சக்தியால் மாறி அமிர்தமாக இனிக்கும்.
  • யுக்தி, சூட்சுமம், இரகஸ்ய, சூட்சும இரகஸ்யம் வாழ்விலுண்டு.
  • வாழ்வில் முடியாதது, அன்னை வாழ்வில் முடியும்.
  • ஆயிரத்திலொருவருக்குப் பலிப்பது அன்னையில் அனைவருக்கும் பலிக்கும்.
  • தீமையற்ற நல்லதையுடையது அன்னைவாழ்வு.
  • வசதி குறைவானாலும் பெரு வசதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிருந்தாலும் தெய்வ நம்பிக்கை எழும்.

  • இதுவரை நமக்கு நடந்த அத்தனை நல்லதிற்கும் நன்றி கூறினால் யோகம் பலிக்கும்.
  • அமைதி அதிக சக்தியுள்ளது.
  • பழையதை விட முடியவில்லை எனில் புதியது புரியவில்லை எனப் பொருள்.
  • நூலின் கடினமான கருத்துகளை வாழ்வுக்குப் பொருத்திப்
  • பார்த்தால் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம் எனத் தெரியும்.
  • மாற்றம் என்பதைக் கோட்டிற்கு மேலே போய் நல்லவராக இருந்து,
  • இலட்சியமாக வாழ்தல் எனலாம்.
  • குறை சொல்வதை நிறுத்த மனத்தைக் கடக்க வேண்டும்.
  • நம் மனத்தில் குறியில்லாமல் பிறர் மீது குறை சொல்ல முடியாது.
  • பெரிய வாய்ப்புகள் சிறிய மனிதர்கட்கு வருவதில்லை.
  • பெரிய வாய்ப்பைச் சிறிய புத்தியால் வரவேற்றால் அது தவறும்.
  • கழற்ற முடியாத ட்யூப் மறுநாள் பிரார்த்தனையால் காணாமற் போனதுண்டு.
  • மாற்றத்தையும் முறையாக்கலாம். அப்படிச் செய்தால் அதன் பலன் போய்விடும்.
  • அன்னைக்கு அருகிலிருப்பது பூர்வஜென்மப் புண்ணியம், கிடைத்தற்கரியது.
  • அங்கும் பெறுவது மனத்தூய்மையைப் பொருத்ததாகும்.
  • சர்வதேச இலட்சியம், அதற்குரிய முயற்சியை எடுத்தவுடன், முடிவான பலனை முதலேயே அளித்தது.

  • தெய்வம் உள்பட எவரும் உலகில் உண்மையாகச் செயல்பட முடியாது.
  • தர்மத்தை நிலைநாட்ட அதர்மமான முறை தேவை.
  • உலகில் எங்கும் ஆணுக்குக் கற்பு என்பதை வலியுறுத்தவில்லை.
  • பெண்ணின் கற்புக்கு அடிப்படை சொத்துரிமை.
  • தான் பெறும் இன்பத்தைவிட பிறர் அழிவதில் மனிதன் இன்பம் காண்பான்.
  • பிறர் வாழப் பொறுப்பது மனித சுபாவமில்லை.
  • மனிதனும் உண்மையாக உலகில் செயல்பட முடியும்.
  • அதர்மத்தை அழிக்க சத்தியம் போதும்.
  • கற்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவசியம்.
  • பிறர் வாழ்வு செழிப்பதை நாம் கடமையாகக் கொள்ள வேண்டும்.
  • புரிந்தால் பேச்சு எழாது.
  • பேசினால் புரியவில்லை எனப் பொருள்.
  • புரிந்தால் சூழ்நிலை கட்டுப்படும்.
  • ஒரு நிலைக்குரிய சட்டம் அடுத்த நிலையில் செல்லாது.
  • அறிவு புலன்களிருந்து விடுபட்டால் ஞானமாகும். இது வேதாந்த ஞானம்.
  • வாழ்வின் பல நிலைகளில் இவைபோன்ற மாற்றங்கள் நம்மையறியாமல் நிகழ்ந்தபடியுள்ளன.
  • எந்த நிலைக்கும் அதிகபட்ச, குறைந்தபட்சப் பலனுண்டு. நாம் தேடுவது அதிகபட்சம்.

  • நாம் பரிசையும், பாராட்டையும் நாடுவதைப்போல் விஸ்வாசத்தையும், உண்மையையும் நாடவில்லை.
  • இனிமைக்குப் பவித்திரமுண்டு. கவர்ச்சி பவித்திரத்தைக் குலைக்கும்.
  • சிறியதைத் தவிர்த்து மனம் பெரியதை நாட வேண்டும்.
  • கவர்ச்சியின் சிரிப்பு கவனத்தை ஈர்க்கும். அதில் உயர்வு இருக்க முடியாது.
  • இனிமை ஆன்மிகக் கவர்ச்சியுடையது.
  • பண்பு அன்புக்குக் கட்டுப்படும். பழக்கம் அதிகாரத்திற்குக் கட்டுப்படும்.
  • அன்னையின் சித்தம், என் பாக்கியம்.
  • மனமும், ருசியும் பழகியதையே நாடுகின்றன என்பது உண்மை.
  • மாற்றத்தை நாடுவோர் பழக்கத்தை விட முன்வர வேண்டும்.
  • மனத்திலிருந்து எழுத்தால் உயருபவன் எழுத்தாளன்.
  • ஞானத்திலிருந்து மனத்திற்கு இறங்கி வந்து எழுதுபவன் யோகி.
  • மனிதன் தெய்வத்தை நாடிப் போகும் நிலையில் தெய்வம் பிறந்த உலகத்தில் வாழும் இறைவன் மனிதனை நாடி வருவதையே ஸ்ரீ அரவிந்தம் எடுத்துக் கூறியது.
  • சிருஷ்டியின் இரகஸ்யம்.
  • தன்னை மறந்து பிரம்மம் மனிதனாயிற்று.
  • தன்னைப் பிரம்மமாக உணர்ந்து மனிதன் மாறுகிறான்.
  • தன்னைப் பிரம்மமாக உணர மனிதன் அடக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

  • அடக்கம் மாற்றத்தைத் தரும்.
  • என்னை ஒரு முறை பார்த்தவருக்கும் நான் பொறுப்பேற்கிறேன் என்கிறார் அன்னை.
  • நிமிஷத்திற்கு நிமிஷம் அகங்காரத்தைக் காப்பதற்குப் பதிலாக, அழிக்க முயல்வது மாற்றம்.
  • கடின உழைப்பு தவறாமல் பலன் தரும்.
  • பெற்றோரின் நல்ல செயல் நம் குறைகளை மீறிப் பலனளிக்கும்.
  • சரி என்பதைத் தைரியமாகச் செய்தால் பலன் தவறாமல் வரும்.
  • நம்பிக்கை வீண் போனதில்லை.
  • அன்னையிடம் நேரடியாகப் பேசினால் பலன் மின்னலாகத் தெறிக்கும்.
  • அம்சமுள்ளவனுக்குக் காணிக்கைக் கொடுக்க மனமில்லை எனில், தெய்வம் காணிக்கையைத் திருடி, பலன் தரும்.
  • நீண்ட நாள் இலட்சியம் பலன் தரும்.
  • வேண்டியவர் பொறாமைப்பட்டால் அவர்களுக்குச் செய்யும் உதவி தொந்தரவு தரும்.
  • Life Divine படித்தால் சூழல் உயரும்.
  • பாகுபாடில்லை எனில் ஆபத்து வரும்.
  • கேட்காமல் செய்த சேவை கேட்காத உதவியைப் பெறும்.
  • சமாதியுடன் தொடர்பு நெருங்கினால் பலன் பெருகும்.
  • பெற்றோரானாலும் கெட்ட எண்ணம் பாதிக்கும்.

  • எவரானாலும் நல்ல எண்ணம் கற்பனைக்கெட்டாததைச் சாதிக்கும்.
  • சூன்யக்காரனுக்கு நமஸ்காரம் செய்தால் வீட்டில் சாவு விழும்.
  • பணத்தால் சாதிக்கும் நினைவு பிற்கால நஷ்டத்திற்கு அடிப்படை.
  • பிரார்த்தனை காவிரியையும் பொங்க வைக்கும்.
  • நல்லவர் உறவு நயமாகப் பூர்த்தியானால் எட்டாத காரியம் எதிர்பாராமல் கூடிவரும்.
  • மடமை ஜெயிப்பதுண்டு. அருளை நம்பும் மடசாம்பிராணி அதிகம் ஜெயிப்பதுண்டு.
  • கர்வம் தலை குனியும்; கர்வத்தை மீறி அருள் செயல் பட்டதுண்டு.
  • மடமையின் கர்வம் தொடர்ந்து உயர்ந்து அருளால் பெரும்பலன் பெற்று, அதனால் மடமை ஜெயிக்கிறது. கர்வமே கொள்கை என்றால் 20 ஆண்டு சாதனை இடிந்த கோபுரமாகும்.
  • நம் தொழில் வாடிக்கைக்காரரைச் சாக அடித்தால், போகுமிடங்களிலெல்லாம் சாவு கண்ணில் படும்.
  • விஸ்வாசத்தை அறியாத ஜாதியில் பிறந்து விஸ்வாசமாக இருந்தால், தலைமை தேடி வரும்.
  • திறமையான சேவை சென்ற தலைமுறை அவமானத்தையும்மாற்றிப் பிரபலம் தரும்.
  • ஸ்தாபகருக்குத் துரோகம் செய்தால் கம்பனியை மூட வேண்டும்.
  • சோம்பேறி நெடுநேரம் சமாதியிலிருந்தால், சோம்பேறித்தனம் வளரும்.

  • அருளைத் தாங்கி வரும் குழந்தையை அவமானப்படுத்தினால், வீட்டாருக்கு ஆபத்து வரும்.
  • நோக்கம் பலனை நிர்ணயிக்கிறது.
  • நம்மீது நல்லெண்ணமுள்ளவரிடம் மனதால் சொல்லும் குறை உடனே தீரும்.
  • கற்பு போன்ற பண்புகள் முழுமை பெற்றால் நளாயினி போல் காலத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
  • சமர்ப்பணத்தை மீறி எழும் ஆசையைப் பொறுமையாகச் சமர்ப்பணம் செய்தால், பலன் நிச்சயம்.
  • மனதால் எடுத்த முடிவும், செயலுக்குரிய பலனைத் தரவல்லது.
  • கடன் ஏற்பட்ட வழியைச் சமர்ப்பணம் செய்தால், கடன் கரையும்.
  • கர்மத்தில் திளைத்தவருக்கும் சிறு சேவையும் கர்மத்தை மீறியும் பலன் தரும்.
  • நேர்மையான பிரமோஷன் நேர்மையானவருக்கு நெடுநாள்
  • கிடைக்கவில்லை எனில் அவர் அஸ்திவாரம் ஜீவனுள்ள பொய்.
  • தீய சக்தியை விரும்பி நாடுபவர்கள் சர்வநாசத்தை வயத் தேடுபவர்கள்.
  • சூனியக்காரனை அறியாமல், அவனிடம் உதவி பெற்றால் சூன்யமாவோம்.
  • கிராக்கி செய்பவர்கள் அருளைப் பெறவும் கிராக்கி செய்வார்கள்.
  • பொன்னொளி நெஞ்சில் எழுந்தாலும், சில்லரைப் பழக்கம் ஆத்ம சித்தியைத் தடுக்கும்.
  • மனம் ஆதியை (origin) உணர்ந்தால் சுபாவத்தை மாற்ற முடியும்.

  • முடிவான முடிவை மனம் நிலையாகத் தேடினால் கிடைக்கும், தேடுபவராகத் தன்னை நினைப்பவருக்குக் கிடைக்காது.
  • முறைகள் முதன்மையானவை அல்ல.
  • மனத்தின் உண்மை முதன்மையானது.
  • உன்னைக் கண்டேன், குளிர்ந்தேன்.
  • உனக்கே நான் உரியவனானேன் என்பது ஆன்ம விழிப்பு.
  • கணம் தரியாமல் செயல்படுவது அதன் முத்திரை.
  • கூட்டத்தில் வழி வேண்டுமெனினும் அன்னை முன்னே போய் வழி விடுவதைப் பார்க்கலாம்.
  • தவறான அபிப்பிராயங்களுள்ளவரிடமிருந்து அன்னை நம்மை விலக்குகிறார்.
  • மாற்றம் எல்லா வழிகளையும் சுருக்குவது. மாற்றத்திற்குரிய அன்னை வழி அதையும் சுருக்கும்.
  • அருள் அளவற்றது. நம் நம்பிக்கை அதற்கு அளவேற்படுத்துகிறது.
  • பிரச்சினை 100% தீருவது அருள். 99% தீருவது நம்பிக்கை
  • அவசரப்படுபவர்கள் நம்பிக்கையில்லாதவர்கள்.
  • பொறுமையாகக் காத்திருப்பதும், யோசனை செய்யாமல் க்ஷணத்தில் செயல்படுவதும் ஆன்மீக இலட்சணங்கள்.
  • மடமையின் போக்கை அறிய மேதையின் அறிவு வேண்டும்.
  • மேதையின் அறிவும் சொந்த மடமையை அறியாது.
  • சொந்த மடமையை அறிய மனிதன் இறைவனாக முயல வேண்டும்.

  • வழிபாட்டைவிட்டு ஆன்மீகத்தை நாடினால் நாத்திகம் விளங்கும்.
  • பகவானைப் பற்றிப் படித்தால் உள்ளே 'சில்' என்ற உணர்வு ஏற்படும்.
  • பூவுலகில் அகந்தை அழியும் நேரம் வந்துவிட்டது.
  • சில் என்ற உணர்வு ஏற்பட்டு நிலைத்தால் மாற்றம் வந்து விட்டதாகும்.
  • பாம்பு பல வீடுகளில் வரும்பொழுது ஒரு வீட்டில் அன்னை படம் வந்தவுடன் எந்த வீட்டிலும் பாம்பு வருவதில்லை.
  • தரிசனம் முடிந்த பின், 'என்ன இவ்வளவு சந்தோஷம்' எனக் கேட்கும்படி மகிழ்ச்சி பொங்கும்.
  • குறையை உணரமுடியும் என்றால்தான் நிறைவு பூரணம் பெறும்.
  • பக்தியின் மணம் யோகசித்திக்கு அழகு.
  • காரணமில்லாமல் எழும் சந்தோஷம் ஆத்ம தரிசனத்தால் எழுவது.
  • கவலையின் சுனை மகிழ்ச்சியின் ஊற்றாக மாறுவது மாற்றம்.
  • பிறருக்கு எப்படி அதிர்ஷ்டம் வரும் என நினைப்பது பெரிய மனம்.
  • ஆர்வமாக நம் வேலையைக் கெடுத்துவிட்டு ஆனந்தமடைந்த பின், அவர் வேலையை நாம் முயன்று பூர்த்தி எதிர்பார்ப்பவன் மனிதன்.
  • மாற்றத்திற்குரிய மனம் அடுத்த பிறவியில் பெறுவதை இப்பொழுதே பெறும்.
  • அகந்தை அழிந்த அமைதியே மாற்றமாகும்.

  • மனநிலை (mindset) நாம் மாறக் கூடிய அளவை நிர்ணயிக்கும்.
  • கண்ணுக்குத் தெரியும் குறுக்கு வழியைவிட்டு, வாழ்வு அளிக்கும் நேர்வழியை நாடுவது மாற்றம்.
  • வெறுப்பின் நிலையறிந்து, அதை விருப்பாக மாற்றுவது மாற்றம்.
  • கட்டுப்படாததைக் கட்டுப்படுத்துவது பணிவின் ஓர் அம்சம்.
  • ஆசாரத்தை விட முடியும் என்பவனே ஆசாரத்திற்குரியவன்.
  • குடும்ப ஆசாரத்தை விட்டு அன்னையை ஏற்றுக் கொண்டவர், முக்கியமான விஷயத்தில் அன்னை மீது நம்பிக்கை எழுவதைக் கண்டார்.
  • மனிதனுக்குரிய நிலைகள் இரண்டு. ஒன்று சிறியது. அடுத்தது பெரியது. ஒரே காரியத்திற்கு இருவருக்கும் எதிரான பலன் உண்டு.
  1. முதல்வர் அன்னையை அறிந்து குடும்ப ஆசாரத்தை விட்டு அன்னையை ஏற்ற பொழுது, முக்கிய பிரச்சினை எழுந்தால், தனக்கு அன்னை மீது நம்பிக்கையில்லை என்று காண்பார். ஏனெனில் ஆசாரத்தையே நம்பிக்கையில்லாமல் பின்பற்றியவர் இவர்.
  2. அடுத்தவர் குடும்ப ஆசாரத்தை ஆணித்தரமாய் நம்பியவர். அதை விட்டதால் முக்கியப் பிரச்சினை வந்தபொழுது அன்னையை நம்ப முடிகின்றது எனக் காண்பார்.
  • தன்னம்பிக்கை தவறும், தெய்வநம்பிக்கை தவறுவதில்லை.

  • வாழ்வு மலர்ந்து அனுபவித்து ஆனந்தப்பட்டால் வெற்றி மட்டுமே கிட்டும்.
  • எரிச்சலுக்கு உற்பத்தி ஸ்தானம் மனம். மனமாற்றம் எரிச்சலை அமைதியாக்கும்.
  • செய்வது புரிந்தால், செயல் ஆர்வம் எழும்.
  • படிப்படியான மனமாற்றம் கழுத்தறுப்பான வேலையையும் ஆனந்த அனுபவமாக்கும்.
  • சிறிய புத்தியைப் பெருந்தன்மையாக மாற்றுவது மாற்றம்.
  • உலகம் உய்ய அனைவரையும் நல்லவர் என அறிந்து மனம் ஏற்பது அவசியம்.
  • மனநிலையை (mindset) மாற்றினால் மரணம் அமரவாழ்வாகும்.
  • குறையை விலக்கி இனிமையை வளர்ப்பது ஆன்மா; குறையை வளர்ப்பது அகந்தை.
  • தவம் பெற்ற பலன் தபஸ்விக்குண்டு.
  • பூரணயோகசித்தி உலகுக்கு நேரடியான பலன் தரும்.
  • மாற்றம் பூரண யோகத்தின் சிறு உருவம்.
  • குறை எவருடையதாயினும் பொறுப்பு நம்முடையது.
  • அர்த்தமற்ற காரியங்கள் அஸ்திவாரமாக அமைகின்றன.
  • மனத்தின் உண்மை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும்.
  • ஒரு காலத்தில் மேதையின் ஞானம், அடுத்த காலத்தில் அனைவரும் பெறும் படிப்பாகிறது.
  • நல்ல உள்ளம் முழுமையாகவுமிருந்தால், பகவான் நூல்கள் புரியும்.

  • உழைப்பு பலன் பெறத் தவறியதில்லை.
  • கெட்ட வழியில் பெற்றது நல்லதற்குதவாது.
  • எந்த வழியில் வந்ததோ, அதே வழியில் செல்ல பணத்திற்கு நிகர் அதுவேயாகும்.
  • அன்னையைத் தெய்வமாக வழிபட்டால் பிரார்த்தனை பலிக்கும்.
  • அன்னையை அவதாரமாகப் பின்பற்றினால் ஞானம் வரும்.
  • அன்னையைச் சக்தியாக நம்முள் ஏற்றால் யோகம் பலிக்கும்.
  • மாற்றமும், ஸ்பரிசமும் நம்மை அன்னையிடம் சேர்க்கும்.
  • உள்ளது தன்னை நினைத்துக் கொள்ளாது.
  • எதை நினைக்கின்றோமோ, அது இல்லை எனப் பொருள்.
  • திறமையை முக்கியமாகக் கருதுவதைவிட, திறமைக் குறைவை முக்கியமாகக் கருதுவது மாற்றம்.
  • வளமான பெற்றோர், நிறைவான குழந்தைகள் வாழ்வில் பண்பாகப் பிறக்கின்றனர்.
  • திர்ந்த குரு கனிந்த சிஷ்யனில் பிரம்மமாக வடிவெடுக்கின்றார்.
  • அன்னை பக்தனில் ஜனிக்கும் மார்க்கம் மாற்றமாகும்.
  • அதுவே பரமாத்மா பக்குவமான ஆத்மாவில் ஜீவாத்மாவாக ஜனிப்பதைப் போன்றதாகும் அன்னை சக்தி செயல்பட நேரம் தேவையில்லை.
  • மனம் தன் ஆராய்ச்சியை அறியும், மனத்தால் விஷயத்தை அறிய முடியாது.
  • பலனைப் பெறும் நிலையிலிருந்து பலனை உற்பத்தி செய்யும் நிலைக்கு மாறுவது மாற்றம்.
  • பேரம் பேசும் அவசியம் அன்பர்க்கில்லை.

  • உள்ளம் கனிந்தால் உலகமே உருகும்.
  • இரவும், பகலும் கிடையா. அன்னை ஏதோ ஒரு ரூபத்தில் மனதிலில்லாமல் மாற்றம் வாராது.
  • உள்ளொளி உருவத்தின் தன்மையை ஏற்றுச் சரணடைவது உண்மை (sincerity).
  • சச்சிதானந்தத்தில் ஊன்றிய காலை எடுக்காமல், நிர்வாணத்தை எய்துவது பூரணயோகம்.
  • மறக்க முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை எனில் அஸ்திவாரத்தில் நம் குறையும், குற்றமுமிருக்கும்.
  • உயர்ந்த ஞானத்திற்கும் செயலாற்றும் திறனில்லை.
  • சிறிய பயிற்சிக்கும் வாழ்க்கை பலன் தரும் திறனுண்டு.
  • மனம் எனும் மானேஜர் ஆன்மா எனும் முதலாளியின் இடத்தைப் பிடித்துக் கொண்டான்.
  • நன்றியுணர்விற்குக் கனவிலும் கனத்த உண்மையுண்டு.
  • அன்னையை அடியோடு விலக்கும் குணங்களில் தலை சிறந்தது கிராக்கி மனப்பான்மை.
  • எந்த உயர்ந்த மனிதனுக்கும் கட்டுப்படாத வாழ்வு அன்னை பக்தர்கட்குக் கட்டுப்படும். இது உலகுக்குப் புதியது.

முடிவுரை:

பகவான் ஸ்ரீ அரவிந்தர், தம்மிடம் இறைவன் யோகத்தை மேற்கொள்ளப் பணித்ததை மறுத்து நாட்டு விடுதலைக்காகக் கடமை தமக்குப் பாக்கியிருப்பதைச் சுட்டிக் காட்டினார். விடுதலைக்கான வேலை முடிந்து விட்டது. உனக்கு நான் வேறு பணியை நியமித்துள்ளேன். புதுவைக்குப் போ என

அசரீரி அவருக்கு அந்தராத்மாவின் குரலாகக் கூறியது. ஸ்ரீ அரவிந்தர் 1910இல் புதுவை வந்தார். 1920இல் அவர் சுதந்திரப் போராட்டத்தை மீண்டும் மேற்கொள்ள விழைந்தார். அந்த ஆண்டு அன்னை பாரிசிலிருந்து திரும்பி வந்தார். 1926இல் பகவான் அடுத்த சித்தியைப் பெற்றார். அது தெய்வ லோகச் சக்தி அவருடல் இறங்கி தங்கியதாகும். அதாவது தெய்வநிலையை உடலேயே பெற்றுள்ள சித்தி. அன்று அவர் தனிமையை நாடி, சத்தியஜீவிய சக்தியின் சித்தியை நாடி யோகத்தைத் தொடர்ந்தார். பகவத்கீதை விட்ட இடத்திலிருந்து பூரணயோகம் ஆரம்பிக்கிறது என்றார். அவருக்கு supermind சத்திய ஜீவியம் சித்தித்தது. அன்னையைத் தவிர வேறெவரும் யோகத்தை மேற்கொள்ளாததால், அவர் தேடிய 12 பேர் கிடைக்க வழியில்லை என்பதால், உடலை நீத்து, சூட்சுமத்தில் தங்கி யோகத்தைத் தொடர முடிவு செய்தார். அது 1956இல் பலனளித்தது. புவியில் சத்திய ஜீவியம் வந்து குடி கொண்ட போது பூமியின் தமஸ் - சோம்பேறித்தனம் - எழுந்து வந்த சக்தியைப் பெரும்பாலும் விழுங்கியது. அன்னை 1973 வரை யோகத்தைத் தொடர்ந்த பொழுது, 1978 வரை தாம் உடலிலிருந்தால், 1950இல் தவறிய யோக அதிர்ஷ்டம் புவிக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். புவியும், மனிதனும், தங்களை ஏற்றுக் கொண்டவர்களும், சத்திய ஜீவியத்தை ஏற்கும் வகையில் மாற விரும்பாததால், அன்னையும் உடலை நீத்தார். அன்னையும், பகவானும் சூட்சுமத்தில் யோகத்தைத் தொடர்வதால், பூமாதேவிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு எழுந்துள்ளது. யோகத்திற்கு இறைவனழைப்புள்ளவர் இன்று பூரண யோகத்தை நாடினால், 1950இலும், 1973இலும் இல்லாத ஆன்மீக உதவி இன்றிருப்பதால், அவர்களுக்கு யோகம் பலிக்கும். 1950இல் பகவானுக்கு உலகத்திலிருந்து கிடைக்காத

ஆதரவு (human receptivity) - 1978இல் அன்னையை ஏற்றுக்கொள்ளும் திறனில்லாத நிலை - இன்று உலகத்தில் அவர்கள் சூட்சுமத்தில் செய்த யோகத்தால் இன்று மனித குலத்தை அன்னை தயார் செய்தததால் அது முடியும். அது இறைவனின் அழைப்புள்ளவர்க்கு, அவர்களின் ஆன்மா விழித்து அன்னையை நாடினால், பகவானுக்கும், அன்னைக்கும் பலித்த யோகம் அவர்கட்கும் பலிக்கும்.

நாடு எதிரியால் தாக்குண்டபோது இராணுவம் எல்லையில் போராடினால், நாட்டில் உற்பத்தியைப் பெருக்கும் உழைப்பாளிகள் இராணுவத்தின் வெற்றிக்கு உதவுவார்கள். பூரணயோகத்தைப் பக்குவமான ஆத்மா விழிப்படைந்து ஏற்று சித்தியடைய, அன்னை பக்தர்கள் தங்கள் வாழ்வில் அன்னையை அருளாக நிரப்பி, அது பொருளாகப் பெருகு வதைக் கண்டால், அது யோகத்தை மேற்கொண்டவர்க்கு நாம் பின்னணியிலிருந்து செய்யும் ஆன்மீகச் சேவை. அதை ஏற்கும்படி அழைக்கும் கட்டுரைகள் பேரொளியாகும் உள்ளொளி, நூறு பேர்கள்.

இதை நம் வாழ்வில் செய்வதெப்படி என்பதைக் கட்டுரை ழுவதும் எழுதினேன். முடிவாக மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்.

உடலால் செய்யும் காரியங்களைச் சிறப்பாகச் (perfect)செய்தால், உணர்வால் செய்பவற்றை இனிமையாகச் செய்தால், மனத்தால் செய்பவற்றை அறிவோடு செய்தால், இது நிறைவேறும்.

செயல் : அணு கண்ணுக்குத் தெரியாதது. அதை மைக்கிராஸ் கோப் மூலம் ஆராய்ச்சி செய்து, அதை அற்புதமான அமைப்பு, விந்தை உலகம் என்கிறார்கள். இது இறைவனின்

சிருஷ்டி. நாம் செய்யும் செயல்கள் கண்ணுக்குத் தெரிந்தவை. கண்ணுக்குத் தெரியும் அன்றாடச் செயல்களை அற்புதமான சிறப்புள்ள அமைப்பாகச் செய்தால் செயல் நம் மாற்றத்திற்கு உதவும்.

உணர்வு : தினமும் பலரிடம் பழகுகிறோம். சிலரிடம் அன்பாகவும், வேறு சிலரிடம் எரிச்சலாகவும், மற்றவரிடம் இரண்டும் இல்லாமலும் பழகுகிறோம். இறைவன் என்பவன் ஆனந்தமயமானவன். நம் செயல் ஆனந்தத்தை உற்பத்தி செய்தால் அது இறைவனை வெளிப்படுத்தும். எவருடன் பழகினாலும், ஆனந்தம் பிரவாகமாகும்படி மனப்போக்கை மாற்றிக் கொண்டால், அது நாம் மாற உதவும்.

மனம் : உலகில் மேதைகள் உள்ளனர். நம் வாழ்வில் மேதாவிலாசம் வெளிப்படும்படி நாம் அறிவின் காரியங்களைச் செய்யலாம். எந்தக் காரியமானாலும், இதுவரை நாமோ, பிறரோ செய்யாததுபோல் ஓரளவு அறிவுடன் அதைச் செய்ய முயன்றால் அது மாற்றத்திற்குரியது.

ஆன்மா : பொறுமையும், நிதானமும் ஆன்மாவுக்குரியன. அவற்றை வழக்கத்திற்கதிகமாக வெளிப்படுத்த முயன்றால், ஆன்ம வெளிப்பாடு நம்மை மாற்றும். அன்னை என்ற தத்துவம் மனிதனையும், அவன் ஆன்மாவையும் உட்கொண்டது என்பதால், அன்னையை முன்னும் செயலைப் பின்னும் வைத்து வாழ்வை அமைத்தால் நாம் மாறியவராவோம். இவற்றை நடைமுறையில் செய்யும் வகைகளைக் கூறுவதே இக்கட்டுரை.

  • இன்று நாம் வாழ்வு மூலம் அன்னையைத் தேடுகிறோம்.
  • மாறியபின் அன்னையை முதன்மையாக ஏற்று, அவருக்காக,
  • நம் வாழ்வை வாழ்ந்தால், நாம் மாறி நூறு பேர்களில் ஒருவராவோம்.

எவருக்கும் ஒரு தொழில், குடும்பம் உண்டு. சிலருக்குத் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என இருக்கும். பேரொளியாகும் உள்ளொளியில் 165 கருத்துகள் உள்ளன. அவற்றை நடைமுறையில் பின்பற்றலாம். தொழிலை 10 மடங்கு உயர்த்த முயன்றால், தீராத பிரச்சினையை நம்பிக்கையால் தீர்த்தால், இக்கருத்துகளைப் பின்பற்றினால், மாற்றம் தானே ஏற்படும்.

வருமானமில்லாத கணவன், அடுத்த பெண்ணுடன் வாழும் புருஷன், போதைக்கு அடிமையான மகன், நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாத பெற்றொர், மனைவி போன்ற உறவுகளைப் பிரார்த்தனையாலும், சொந்த மனமாற்றத்தாலும் சரிசெய்ய முடிந்தால், மாற்றம் ஏற்படும். அடைக்க முடியாத கடன், சிங்கப்பூர் போனதால் பிரிந்துள்ள கணவன், அடங்காப்பிடாரியான குழந்தை, டாக்டர் மனைவியாக விரும்பும் வேலைக்காரி, கட்டுக்கடங்காத பொறாமை, பிழைக்காது என கைவிட்ட உடல்நலம் போன்றவற்றை நம்பிக்கையால் பூர்த்திசெய்ய எடுக்கும் முயற்சி, நம் சுபாவத்திற்குரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.

எல்லா அன்னை சந்தர்ப்பங்களுமிருந்தபொழுது அடக்கமின்மை தடையாக இருந்தால், அடக்கத்தைப் பெற முயல்வதும், பொறாமை தடையாக இருந்தால் பொறாமையிருப்பதே தெரியாதவர் அதைத் தெரிந்து ஏற்றுக் கொண்டு மாறுவதும் மாற்றத்தைத் தரும். இடைவிடாத சமர்ப்பணம், Life Divine படிப்பது, சிறு காரியங்களைச் சிறப்பாகச் செய்வது கிடைத்த வாய்ப்பை - கோடி வியாபாரத்தை 100 கோடியாகும் வாய்ப்பு - பலிக்க வைப்பது,

அன்னையுடன் நெருங்கியவர் சேர்ந்து எதிர்க்கும்போது அதைக் கடந்து வருவது, கடைப்பையனைப் பெரு முதலாளியாக்குவது, எதற்கும் உதவாதவரை எல்லோர்க்கும் தலைவராக்குவது, 'நான்' போக முயல்வது ஆகியவை நிரந்தர மாற்றத்தை நமக்களிக்கும்.

அகந்தை கரைந்தால் ஆண்டவன் செயல் நடக்கும். இல்லையேல் நாம் செயல்படுவோம். அதாவது நம் அகந்தை செயல்படும். சிறியதைச் சாதிக்க முடியாதவனுக்குப் பெரியதைப் பெற்றுத் தர எடுத்த முயற்சி பலித்தது. பலித்தபின் அது நிலைப்பது, நிலைத்து நீடித்த பலன் தருவது யார் கையிலிருக்கிறது? யார் கையிலிருக்கிறதோ, இல்லையோ, என் கையில் நிச்சயமாக இல்லை என்று நினைத்தவருக்குத் தலையில் சில் என்ற உணர்வு ஏற்பட்டது. அகந்தை கரையும்பொழுது சில் என்றிருக்கும். அது சைத்தியப் புருஷன் வெளிவரும் தருணம். எந்தச் செயலையும் செய்யும் பொழுது, அல்லது செய்ய நினைத்த பொழுது சில் என்ற உணர்வு எழுவது நிரந்தரமானால், மாற்றம் நிச்சயமாகும்.

நம் மனம் எந்த நேரமும் எண்ணங்களால் நிரம்பி உள்ளது. எண்ணங்கள் பழையவை. பழைய எண்ணம் மனதை நிரப்பினால், மனம் புதுமையடையாது, புத்துணர்வு எழாது, சில் என்ற உணர்வு வாராது. பழைய எண்ணங்கள் மனத்தை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதை நாம் மாற்றுவது மாற்றம். தானே மனம் அன்னையை விரும்பி, ஆர்வமாக, தீவிரமாகச் சில நிமிஷம் நினைத்தால், அந்நினைவோடு தியானம் செய்தால், பழையன விலகும், தலை அகன்று விரிவதைப் போன்ற உணர்வு ஏற்படும் - conscious expands- ஜீவியம் விரிவடையும் மனம் விசாலமடையும். விசால மனத்திற்கு விசால புத்தியுண்டு. விசால புத்திக்கு மாற்றத்தைத் தேட முடியும்.

அதேபோன்று நெஞ்சில் பழைய உணர்வுகளை விலக்கி, அன்னையை மட்டும் உணர்வு நாடினால், அன்னை நம்மைத் தீண்டுவது தெரியும். அதுவே இறைவனின் ஸ்பரிசம். மாற்றத்தை முயற்சியால் பெறும் மார்க்கங்கள் இவை. முயற்சியைக் கடந்த நிலையும் உண்டு.

முயற்சி நம்முடையது, நம் அகந்தையிலிருந்து எழுவது. நம் திறமையில் நம்பிக்கையுள்ளது. நம் திறமையை விட அன்னையை நம்புபவர், அகந்தையிலிருந்து விலகியவர். அவருக்கு முயற்சி தேவையில்லை. அவர் நெஞ்சம் தானே ஆர்வத்தால் நிரம்பும். நிரம்பிய நெஞ்சம் தானே அன்னையை நோக்கி எழும். அது ஜீவன் முழுவதையும் பரவசப்படுத்தும். அகந்தையை விலக்கும் அன்பர்களுக்குரிய நிலை இது. இது கிடைக்கப் பெற்றவர், இதைப் போதுமான அளவுக்குப் பாராட்டினால், அது தானே நமக்குரிய மாற்றத்தை அளிக்கும்.

உடலுழைப்பைச் சிறப்பின் சிகரத்திற்குக் கொண்டுவந்து, மனித உறவை இனிமையால் நிரப்பி, மனதில் புத்தியைச் செயலில் வெளிப்படச் செய்து, பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பவர் முயற்சியால் மாற்றத்தைப் பெறுவார்.

தன்னை மறந்து விலகி, தான் பெற்ற பெரும் பொக்கிஷமான திறமைகளைத் தூசு என அறிந்து மறந்து, தான் எனும் நான் என்பதிலிருந்து இயல்பாக விலகி, அன்னை நெஞ்சில் நிரம்புவதைக் கண்டு பரவசப்பட்டு, பரவசத்தின் நெகிழ்ச்சியை வாழ்வின் அம்சமாகப் பெறுபவர் அருளால் மாற்றத்தை அவரை அறியாமல் பெறுபவர்.

அகந்தையுள்ளவரை முயற்சியாலும்,

அகந்தை அழிந்த பின் அருளாலும்,

மாற்றத்தைப் பெறுவதை விளக்கும் நூல் இது.

முற்றும்



book | by Dr. Radut