Skip to Content

06. VII The Ego and the Dualities

7. அகங்காரம் – இன்பதுன்பம்

சிருஷ்டியே சச்சிதானந்தமெனில், துன்பத்திற்கும், தீமைக்கும் இடம் ஏது? பூரணமான சச்சிதானந்தம், ஒரு வேளை பூரணத்திலிருந்து வழுவினால் அவை ஏற்பட வழியுண்டு. ஆதாம், ஏவாள் என பைபிள் கதை கூறுவது அதையேயாகும்.

புனிதமான இறைவனை மனிதன் பூரணமாக ஏற்கவேண்டும். ஏற்பதில் குறையிருந்தால் பூரணம் குறையுள்ளதாகிறது. குறை ஏற்பட்டபின் இன்பம், துன்பம் என்ற இரு நிலை ஏற்படுகிறது. நாம் புருஷன், பிரகிருதி என்பதை பைபிள் ஆதாம், ஏவாள் என்கிறது. கூடாது என்பதை ஆதாம் செய்ததால் பாவம் ஏற்பட்டது. பிரபஞ்சத்தின் பகுதியான மனிதன் இன்று தன் ஆதியான பிரபஞ்சத்தை மறந்துவிட்டான். அவன் வாழும் இந்த ஜட உலகிலும் ஆன்மாவுண்டு. இன்று மனிதன் அதை அறிய முடியவில்லை. அதை அறிந்தால் இன்பதுன்பமெனும் இருநிலை மாறி, முழுவதும் இன்பமாகும்.

கூடாது என்ற பழம் பாவத்திலாழ்த்தியதுபோல், தெய்வீக வாழ்வு எனும் மரத்தின் பழம் - பலன் - மனிதனுக்காகக் காத்திருக்கிறது. அதைச் சாப்பிடும் மனிதன் தெய்வமாவான். அது நிலையை மாற்றவல்லது. இருநிலை - இன்பம், துன்பம் - மனிதனுக்குரியது. முழுநிலை - இன்பம் மட்டுமுள்ள நிலை - தெய்வத்திற்குரியது.

சிருஷ்டியின் முழுமையாக நாம் சச்சிதானந்தத்தை அறியமுடியும். பிரபஞ்சம் முழுவதும் சச்சிதானந்தம் பரவுவதை நாம் காணலாம். சச்சிதானந்தம் சிருஷ்டியாக மாறும்பொழுது இருளாகிறது. இருள் மரணம், துன்பம், தீமையாகின்றது. நம் உணர்ச்சி அவற்றை வெறுக்கின்றது. சிருஷ்டியாக சச்சிதானந்தம் மாறும்பொழுது முழுமையான ஜோதி, பகுதியான இருளாகிறது. ஒன்று பலவாக மாறுகிறது. அறிவான ஒளி குழப்பமாகிறது. இசைக் கச்சேரியின் முழுமையை தனிவாத்தியங்கள் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு வாத்தியக்காரரும் தனித் தனியே இசைக்க முயல்வதுபோல் உலகம் காட்சியளிக்கிறது. நாம் மீண்டும் முழுமையை நாட முடியும். அதைச் செய்தால் பிணக்கு - அபஸ்வரம் - சுமுகமாகும், கச்சேரி சிறக்கும். சிருஷ்டியின் ஒரு பகுதியிலும் இதைச் செய்யலாம். ஜடத்திலும் இது முடியும். ஜடம் எதையும் கண்டுகொள்வதில்லை. இருந்தாலும் இதுவே உண்மை. சச்சிதானந்தம் ரூபங்களைக் கடந்தது. இரு நிலைகள் நமக்குரியன. சச்சிதானந்தம் இருநிலைகளை அனுமதிக்காது. துரிய நிலை திருவுருமாற்றும். அரைகுறையான சமரசம் அதற்குதவாது. எதிரானதை தனக்குரியதாக மாற்றவல்லது. அதனால் முரண்பாடழியும். திருவுருமாற்றம் பிணக்கையும், எதிர்ப்பையும், முரண்பாட்டையும் அழிக்கும்.

மனிதனைப் பிரபஞ்சத்தின் கோணத்தில் அறிய முயலுவோம். நாம் உலகை நம் கண்ணோட்டத்தில் அறிகிறோம். நம் மனநிலைக்கு அது பொருந்தும். இதுவே முடிவானதில்லை, முழுமையானதுமில்லை. இதுமட்டும் சரி எனவோ, முடிவு என்றோ நாம் கூறமுடியாது. மனம் மனிதனுடையது. அவன் அனுபவத்தை, அவன் நோக்கம், அவன் கண்ணோட்டத்தில் அறிகிறது. இல்லை எனில் எழும் பிரச்சினை தீராது. நம் புலன்களால், புலனறிவால் நாம் உலகை அறிவோம். மனிதனுடைய புலனிலிருந்து மாறுபட்ட புலன்களுண்டு. அவற்றின் திறன் மாறுபட்டது. அவை உலகை அதிகமாக அறிகின்றன. அவர்களுடைய பார்வை உயர்ந்தது. மாறுபட்ட பார்வையுமாகும். அவை மாறுபட்ட மனத்தின் கூறுகளாகும். அவை சத்தியஜீவிய மனநிலை என்பதால், நம் மனநிலையை விட உயர்ந்ததாகும். நம் ஜீவியம் மட்டும் உலகுக்குரியதில்லை. சத்தியஜீவியப் பார்வைக்கு உலகம் மாறுபட்டுத் தெரியும். மரணத்தை நாம் மரணமாக அறியும்பொழுது, சத்திய ஜீவியம் மாற்றமாகக் காண்கிறது. மரணமில்லா வாழ்வின் மாறிய நிலையாக மரணத்தை சத்தியஜீவியம் உணர்கிறது. வலி என்று மனிதன் அவதிப்படுவது அதற்கு ஆனந்தமாகும். ஆனந்தம் திசைமாறி கடுமையடைந்தால் வலியாகிறது என்பது சத்திய ஜீவியத்தின் உணர்வு. நமக்குத் தடை என்பது தடையாகும். சத்தியஜீவிய நோக்கம் வேறு. அதன் பார்வையில் தடை அனந்தனை வர்ணிப்பதாகும். தடை தடம் மாறிய அனந்தனாகும். அனந்தன் அந்தமும், ஆதியுமில்லாதவன். அந்தமும் ஆதியுமில்லாத அனந்தன், தன்னைத்தானே சுருக்கிக் கொள்வதை சத்தியஜீவியம் தடை என்கிறது. தீமை நமக்குப் பொல்லாதது. சத்தியஜீவியம் தீமையை நன்மை என்று காண்கிறது. நல்லது சிறந்து, தன்னைத் தானே வலம் வருவதாக தீமை தன்னை சத்தியஜீவியத்திற்கு உணர்த்துகிறது. நமக்குப் பூத்துக் குலுங்கும் பூங்கா உயர்ந்தது. நாம் நல்லது என்பதை அதைப்போல் நினைக்கிறோம். பூங்கா பூத்தபின் தன்னைப் பாதுகாக்க தன்னைச் சுற்றி முள் நிறைந்த வேலியை ஏற்படுத்தி தன்னைப் பாதுகாப்பது போல், நல்லது வளர்ந்த பின் தன் சிறப்பைப் பாதுகாக்க தன் உயர்ந்த திறமையால் தன்னைப் பாதுகாப்பதை நாம் தீமை என அறிகிறோம். கற்புக்கரசியின் கனலான கோபம் கற்பைப் பாதுகாப்பதைப்போல் தீமை நன்மையைப் பாதுக்காக்கிறது. இது வறண்ட தத்துவமில்லை. சத்தியஜீவிய விழிப்புள்ளவர் காணும் உண்மையிது. அது பெரிய ஆத்மானுபவம். மனிதன் பூரணம் பெற அந்நிலைகளை எய்த வேண்டும். தனிமனிதனுக்கு முக்கியமாக வேண்டியது அது.

உலகின் உண்மைகள் எவரும் அறியக்கூடியதாகும். அன்றாட வாழ்வின் சட்டங்கள் அவை. நம் புலன்கள் நமக்கு அவற்றை உணர்த்துகின்றன. இரண்டாகப் பிரிந்து - இன்ப துன்பம் - இரு நிலைகளாக அவை எழுகின்றன. சத்தியத்தின் நடைமுறை உருவங்களாக அவையுள்ளன. விசாலமான, முழுமையான சுமுகம் நாம் நாடுவது. அது நம் புலன்களில் நுழைந்து நம்மைத் திருவுருமாற்ற வல்லவை. மாறும்வரை பழைய மனநிலையைப் பின்பற்றுவதே சரி. உயர்ந்த ஞானம் உண்டு. பழைய புலன் உணர்வுகளை உயர்ந்த ஞானம் நமக்கு விளக்கி உணர்த்தவல்லது. பழைய தோற்றத்தின் உள்ளுறை ஞானவித்தை எடுத்து உயர்ந்த ஞானம் நமக்குப் புரிய வைக்கும். அதுவே புதிய நிலை. பழைய உணர்வுகள் புதிய ஞானத்தால் விரிந்து மலரும். ஞானம் முதிரும் முன் புலனை மாற்ற முயல்வது சரியன்று. நடைமுறைக்கு அது சரிவராது. முறையான, கட்டுப்பாட்டின் அறிவு அதற்கு கட்டுப்படாது. உலகின் நடைமுறை தனக்கேயுரிய சட்டத்தைப் பின்பற்றுகிறது. அகந்தைக்குரிய இருநிலைகள் ஏற்படுத்திய சட்டமிது. உலகமியங்கும் அடிப்படையான ஒருமையினின்று மாறிய அடிப்படையில் நடப்பது அகந்தை. அதற்கும் முழுமையுண்டு. ஆனால், அது வேறுபட்டது. இந்த நடைமுறை மனத்திற்குரியது. நிலையில்லாத நிலை எனப்படும். இந்நிலையில் மனத்தின் அறிவை விரிவுபடுத்துவது ஆபத்தாகும், குழப்பம் விளைவிக்கும். தெளிவான வாழ்வுக்கு எதிரானது அது. இதுவே கீதை வலியுறுத்துவது. அறிவில்லாத மக்கள் என நாம் நினைக்கும் மக்களுக்கு வாழ்வில் அஸ்திவாரமான பற்றுக்கோடுண்டு. அதற்குரிய “அறிவு” அவர்கட்குண்டு. அது அசையும்படி அல்லது சிதறும்படி நடப்பது தவறு. உயர்ந்த மனிதனை அவர்கள் பின்பற்றலாம். உயர்ந்த தத்துவத்தை அவர்கள் அறியமுடியாது. உயர்ந்த மனிதனுடைய உயர்ந்த ஞானத்தை அறிய அவர்கள் முற்பட்டால், அவர்களுக்குப் பாதுகாப்பாக உள்ள வாழ்வின் அஸ்திவாரம் ஆட்டம் காணும்.

புனித வாழ்வின் அழைப்பு புளகாங்கிதம் தருவது. அதற்காக எதையும் தியாகம் செய்யலாம். பெரிய ஆத்மாக்கள் அத்தியாகத்தை ஏற்க முன்வந்துள்ளனர். மேற்கூறிய குழப்பம் அதுபோன்றது. குழப்பத்தில் வரும் சிரமத்தையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. சிரமம் தற்காலிகமானது என அவர்கள் அறிவார்கள். ஆனால் சரியான முறை என்பது வேறு. முன்னேற்றத்திற்கு அது துணை நிற்கவேண்டும். மலர்ந்த வாழ்வின் புதிய திறனை நாம் கண்டுகொள்ளுதல் அம்முன்னேற்றத்தைத் தரும். அதனால் புதிய வாழ்வின் உண்மைகள் எழும். வாழ்வு எனும் அரங்கம் வகுக்கும் புதிய சட்டங்களாக அவையிருக்கும். சூரியன் உலகைச் சுற்றிவருவதை நம் கண் - புலன் - காண்கிறது. புலன்கட்கு பூமி மையம். இது தவறு. வாழ்வின் நோக்கங்கள் இவ்வடிப்படையில் அமைந்தவை. உண்மை நேர் எதிரானது. புதிய கருத்து, புதிய வாழ்வு மையத்தை ஏற்படுத்துகிறது. இது முறையான பகுத்தறிவுக்குரிய அறிவு. புலன்களை புதியவை ஏற்கின்றன. புலன்கள் புதிய கருத்தை ஏற்காவிடில் புது அறிவுக்குப் பலனில்லை. மனம் அகந்தையை மையமாகக் கருதுகிறது. இறைவனை அகந்தை தன் கண்ணோட்டத்தில் எடை போடுகிறது. உண்மையைத் தலைகீழே மாற்றவும், சிதறவும் அகந்தை முனைகிறது. மனித முன்னேற்றத்திற்கு இதுவும் ஒரு சமயம் பயன்படும். குத்துமதிப்பாக ஏற்பட்ட பண்பின் பரிவர்த்தனையே இது. நம் வாழ்வுக்கும், செயலுக்கும் ஓரளவு உதவும் முறையிது. இதுவே உயர்ந்ததும், முடிவானதுமில்லை. “சத்தியமே இலட்சியம், பொய் அன்று”. அகந்தை இறைவனது மையம் என்பது உண்மையில்லை. அகந்தை சிருஷ்டிக்கும் மையமாகாது. இறைவனை அகந்தையால் அறிய முடியாது என்பதே உண்மை.

இருநிலைகளை ஏற்கும் மனமும் இறைவனைக் கணிக்க முடியாது. இறைவனே மையம். மனிதனுடைய அனுபவத்தில் உண்மையில்லை. மனிதனுடைய அனுபவத்தின் உண்மையை அறிய நாம் பிரபஞ்சத்தின் மூலம் முயல வேண்டும். மேலும் இறைவன் மூலமும் முயல்வதவசியம். இவை வேறுபட்ட மூன்று நிலைகள். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போவது உள்ள ஒழுங்கு முறையைக் கலைக்கும். கலைந்தது ஒரு வழியாக வேறொரு முறையாக அடங்கும். புதிய மதங்களும், புதிய தத்துவங்களும் அப்படியே உற்பத்தியாகின்றன. பழைய தவற்றை நீக்கி, புதியது சரியானதை ஏற்படுத்த புதிய அறிவுக்குரிய அஸ்திவாரம் தேவை. அது சுமுகமான மாற்றமாக இருக்காது. புயலாகவே இருக்கும். புதிய அஸ்திவாரமும் புயலாகவே அமையும். அடிப்படையானது எது எனக் காண்போம். அதை ஒட்டிய பயன் தரும் பகுத்தறிவை நாடுவோம். அகந்தைக்குரிய பண்புகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வழி புதியன புறப்படும். நம் இன்றைய வாழ்வை மாற்றி, தெய்வீக வாழ்வுக்கு அது அடிகோலும். உலகில் வாழ்வுக்குரிய அம்சங்களில் நம் திறமைகள் தெளிவாக, தெய்வீகமாகச் செயல்படும்.

தெய்வீக வாழ்வை நாம் நமக்கேற்றபடி எடுத்துக் கொள்கிறோம். நம் வாழ்வின் அடிப்படைகளுக்கேற்ப நாம் தெய்வநிலையை மனதால் மாற்றி அமைத்துக் கொள்கிறோமே தவிர அது நாம் தெய்வீக வாழ்வைப் புரிந்து கொண்ட தாகாது. மனிதத்திறன் இதற்குரியது. புதிய சக்தியும், புதிய திறமையும் இவற்றைப் பொருத்தன. அகந்தைக்கு ஆயிரம் குருட்டுத் தைரியங்களுண்டு. அவற்றை ஒட்டியே அகந்தை செயல்படும். நாம் அம்மனநிலைகளிலிருந்து விடுபடவேண்டும். அகந்தை விலகியபின், பூரணத்துடன் சுமுகத்தை நாடவேண்டும்.

சரியான உறவு பூரணத்திற்குரியது. இறைவனிடமிருந்து எழுந்து வருபவை அவை. வாழ்வின் அமைப்புகளை சத்தியத்தின் சட்டம் கடந்தது. வாழ்வு வையகத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. சத்தியமே அதன் பூரணம். அதுவே விடுதலை. அகந்தை அதனுடைய பண்புகளை உருவாக்கியது. அவற்றை அழிப்பதே இலட்சியம். ஆனால் அதுவே மகுடமன்று, துன்பம், தீமை, மடமை, சிறுமை ஆகியவையுள்ளன. அவற்றைக் கடப்பதே சிகரம்.

தெய்வீக வாழ்வின் அம்சங்களெவை? அவை அகந்தைக்குட் பட்டவையா? அப்படியானால், உலக வாழ்வில் அதை எய்த முடியாது. அகந்தையின் சிறுமைகள் எதையும் உலகில் இருந்து அழிக்க முடியாது. வாழ்வின் உண்மையான நிலை எது? ஒரு வேளை அது தனிமனிதனுக்குரியதா? அல்லது வாழ்வு பிரபஞ்சத் திற்குரியதா? அல்லது வாழ்வு எனும் சமூகத்தின் ஓரலையாகுமா? இருநிலைகள் என்பன என்ன? மனிதனுக்கும் வாழ்வுக்குமுரிய தொடர்பின் விளைவாகுமா? அல்லது இருநிலைகள் என்பன வாழ்வின் சாரத்திற்குரியதாகுமா? சிறுமை என்பது என்ன? நம் உடலும் மனமும் சிறுமையை எப்படிப் பிரதிபலிக்கும்? மரணம், அழிவு என்பதென்ன? வாழ்வுக்கு அவை முதற்படியா, முடிவான நிலையா? ஆரம்பமா, முடிவா? இன்பமும், துன்பமும் பிரிக்க முடியாத உணர்ச்சிகளா? சந்தோஷமும் வருத்தமுமில்லாமல் உணர்வு எழ முடியாதா? சத்தியமும், தவறும் அறிவின் இருமுனைகளா? இவை உண்மையானால், இவ்வுலகில் இவற்றிலிருந்து நமக்கு விடுதலையில்லை. மனிதவாழ்வை விடுத்து, நிர்வாணமெய்தி விடுதலை பெறலாம். அது ஜடமான நம் உலகைப் போன்றதாக அமையாது.

மனம் கடந்ததைப் போற்றும். உள்ளதின் மீது உயிரையே வைத்திருக்கும். தன் நிலை மாறாதது என மனம் அறியும். இதையே மனித வாழ்வு என மனம் அறியும். இவற்றிலிருந்து மாற முடியும் என்றோ, மாற வேண்டும் என்றோ மனத்தால் நினைக்க முடிவதில்லை. சார்லஸ் டார்வின் தம் பரிணாமக் கொள்கையில் குரங்கு மனிதனாயிற்று என்றார். மனிதன் சத்தியஜீவனாகும் பரிணாமத்தைப் பொருத்தவரை நாம் டார்வினுடைய குரங்காக இருக்கிறோம். மனிதக் குரங்கு காட்டிற்குரியது. நாமறிந்த மனிதனாக தான் மாறமுடியும் என குரங்குக்குத் தோன்றமுடியாது. மனிதனுக்குக் குரங்கிற்கில்லாத புதியது ஒன்றுண்டு. அது பகுத்தறிவு. பகுத்தறிவால் மனிதன் உலக விஷயங்களைப் பகுத்துணர்கிறான். தன் உள்ளேயுள்ள உணர்வுகளை அறியவும் பகுத்தறிவை மனிதன் பயன்படுத்துகிறான். பழக்கத்தாலும், விலங்குணர்வாலும் இன்று மனிதன் செயல்படுகிறான். ஆனால் பகுத்தறிவு அவற்றை மிஞ்சக்கூடியது. குரங்காக இருந்தபொழுது இருந்த காட்டுவாழ்வைக் கடந்துவந்த மனிதன், வீடு கட்டுகிறான், கடலை ஆள்கிறான், புயலையும், வெள்ளத்தையும் வெல்கிறான், சட்டமியற்றுகிறான், மனம் வளர்ந்து, ஆன்மவிழிப்பை நாடுகிறான். மனிதக் குரங்கால் இவற்றை நினைக்கமுடியுமா? தீர்க்கதரிசனம் அதற்குண்டா? இவற்றை யெல்லாம் குரங்கால் சிந்திக்க முடியும் என்று கொண்டாலும், ஒரு நாள் தானே அந்த மனிதனாகப் போவது அதற்குத் தெரியுமா? மனிதன் பகுத்தறிவு பெற்றான். கற்பனையும், ஞானமும் அவனுக்குண்டு. மனிதவாழ்வைவிட உயர்ந்த வாழ்வை அவனால் நினைக்க முடியும். அந்த வாழ்வுக்குத் தன்னை உயர்ந்த வேண்டும் எனவும் அவனால் கருத முடியும். பரம்பொருளின் நிலையை மனிதன் அறிவான். அந்நிலை குறையற்றது, விரும்பத்தக்கது எனவும் மனிதனுக்குத் தெரியும். தவறற்ற ஞானமுண்டு என மனிதனுக்குப் புரியும். ஆனந்தம் என்பது வலியற்ற நிலை என்பது அவனுக்கு விளங்கும். தோல்வியற்ற சக்தியை அவனால் கற்பனை செய்யமுடியும். தூய்மையும், பூரணமும் மனிதனுக்கு குறையற்றதாகும்; வரையறை யற்றதாகும். தெய்வம் அத்தகையது என மனிதன் நினைக்கிறான். அவனறியும் சொர்க்கம் அப்படிப்பட்டதேயாகும். ஆனால் பகுத்தறிவு அவற்றை ஏற்காது. தெய்வம் குறையற்ற நிறைவுள்ளது என மனிதன் நினைப்பது அவன் தன் சிறப்பை அறிவதாகும். “எதிர்காலத்தில் நீயே மனிதனாவாய்” எனக் குரங்கிடம் கூறியிருந்தால் அது திகைப்புற்றிருக்கும். மனிதனுடைய தெய்வீகக் கனவை உலகில் அடைய முடியும் என்றால் மனிதனுக்கும் திகைப்பேற்படுகிறது. ஆனால் பகுத்தறிவு மறுக்கிறது. மறுத்தது தன்னை வலியுறுத்துகிறது. பகுத்தறிவு கற்பனையையும், ஞானத்தையும் ஏற்க முன்வரவில்லை. ஜடமான வாழ்வை பகுத்தறிவு சாஸ்வதமாக நம்புகிறது. பூலோகச்சொர்க்கம் எனும் கனவு பகுத்தறிவுக்கு மூடநம்பிக்கையாகப்படுகிறது. நடக்காததை இலட்சியமாக நம்பும் ஆர்வமென விளக்கம் தருகிறது. அறிவுக்கு அளவுண்டு, சந்தோஷத்திற்கு எல்லையுண்டு, நல்லது என்பது நிலையற்றது என்று பகுத்தறிவு கருதுகிறது.

குழப்பத்தை விலக்கி, ஒழுங்கை ஏற்பது பகுத்தறிவு, இல்லாதவற்றை விலக்கி, பயன்படும் நல்லதை ஏற்க பகுத்தறிவு பயன்படும். அடிப்படையில் பகுத்தறிவு இறைவனை நாடுகிறது. தவற்றை விலக்கவோ, முடிவாக விலக்கவோ பகுத்தறிவு முயலவில்லை. பெரிய உண்மையையும் அது நாடவில்லை. முடிவான சத்தியமே அதன் இலக்கு. அப்படிப்பட்ட சத்தியம், நித்தியம். இருநிலைகள் என்பனவெல்லாம் முடிவில் அச்சத்தியத்தை நாடுகின்றன. இன்று நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தும் உயர்ந்த முறைகள் அப்படிக் கூறவில்லை. எனினும் அது முடியும். அந்த ஞானம், பகுத்தறிவுக்குச் சொந்தமானது. கலப்பற்ற சந்தோஷத்தை மனிதனால் நினைக்க முடியும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். துன்பம் அழியாது என மனம் திட்டவட்டமாகக் கூறுகிறது. அதுவே துன்பத்திற்குக் காரணம். இதயத்தின் பின்னுள்ள நம்பிக்கையைப் பகுத்தறிவு எட்ட முடியும். அது நம்பிக்கையின் உறைவிடம் அந்த நம்பிக்கையால் குறையை விலக்க முடியும் என்று நம்பமுடியும். இதுவே பகுத்தறிவின் பங்கு உடலிடம் வந்தால் இதயம் செயலற்றுப்போவதை பகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மால் வலி அழியக்கூடியது என நம்ப முடியாது. அதனால்தான் இதுவரை எவரும் மரணம் அழியக் கூடியது என்று நினைக்கவில்லை. ஸ்ரீ அரவிந்தர், “வலியை மறுப்பதே நம் பிறப்புரிமை” என்கிறார். நம் உணர்வின் திறனுக்குட்பட்ட செயல் அது எனவும் கூறுகிறார். இவையெல்லாம் நடக்கா என்பது பகுத்தறிவின் இன்றைய நிலை.

ஸ்ரீ அரவிந்தர் பகுத்தறிவுக்குப் பெரிய இடம் அளிக்கிறார். தத்துவத்திலிருந்து நடைமுறைக்கு வரும்பொழுது பகுத்தறிவின் பெருந் திறனை விளக்கு கிறார். மனிதனால் உயர்ந்து நினைக்க முடியும் என்றாலும், நடைமுறையில் அவ்வெண்ணம் ஈடேறுவதில்லை. நடைமுறை, எதிரிலுள்ள நிலைமை பயங்கர மானது. அதைக் கண்டு மனிதன் தைரியத்தை இழந்துவிடுகிறான். ஆனால், வித்தாக உள்ள தைரியமும், விபரமும் பெரியவை. தர்க்கரீதியாக அதிகமாகப் புரிந்துகொள்ளமுடியும். இன்று நடப்பது கடந்த கால வித்தன்றோ? இன்று வித்தாகவுள்ளது எதிர்கால யதார்த்தமாகுமன்றோ? அதுவேயுண்மை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். முடிந்த காரியத்தைச் சிந்திக்கும் மனிதன் திறனற்றவனாகிறான். அடிப்படைக் காரணத்தைச் சிந்தித்தால், திறன் அதிகமாகும். சோகம், வலி, மரணம் ஆகியவற்றின் அடிப்படைக் காரணங்களெவை? நம்மால் அதைக் காண முடியும். ஞானமே திறன்.

முடிந்தவரை நாம் இலட்சியத்தைக் கடைப்பிடிக்கிறோம். தடைகளை விலக்க முயல்கிறோம். துன்பம், வலி ஆகியவற்றின் காரணத்தைக் குறைக்க முயல்கிறோம். தடைகளை விலக்க முயல்கிறோம். பிறப்பைக் குறைக்க விஞ்ஞானம் நினைக்கிறது. புதிய புதிய வழிகளைக் காண்கிற விஞ்ஞானம், ஆயுளை நீட்டிக்க முயல்கிறது. மரணத்தை வெல்ல முடியாமற் போகலாம். இம்முயற்சி கீழிருந்து மேலே போவதாகும். அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடித்து விலக்கும் முறை இது என்று கண்டுபிடித்தால்தான் திருவுருமாற்ற முடியும். நாம் நாடுவது இரண்டாம்பட்சமான காரணங்களாகும். பிடிக்காதவற்றை நாம் ஒத்திப் போடுகிறோம். இவை புறக்காரணங்கள். விஞ்ஞானம் புறவிஷயங்களை அளக்கும் கருவிகளைக் கண்டுபிடித்தால், அவற்றை நாடுவது இயல்பே. அடிப்படையை அறிய நாம் சாரத்தை உணரவேண்டும். உள்ளதை உயர்வாகச் செய்வதை விஞ்ஞானம் நாடுகிறது. அது அடிப்படையை மறந்துவிட்டது. இவை அனைத்தும் பகுதியான முயற்சி, முழுமையானதன்று. அடிப்படைக் காரணங்களும், சுபாவமும் புரியுமானால் நம்மால் இவற்றை - நோய், மரணம் - ஆளமுடியும். வலி, துன்பம், குறை நமக்குக் கட்டுப்படும். ஆனந்தம் நாம் தேடுவது. அமரத்வம் நமக்குடையது. ஞானம் நம் ஆத்மாவின் உரிமை. இவையே மனிதனுடைய முடிவான இலட்சியங்கள். நம்முள் உள்ள ஞானம் இதை அறியும்.

பிரபஞ்சமும், அதன் அடிப்படை உண்மையும், பிரம்மம் என வேதாந்தம் கூறுகிறது. சச்சிதானந்தம் பிரம்மத்தின் பிரகிருதி எனவும் கூறுகிறது. அதுவே அவர்கள் ஆத்மானுபவம். இத்தத்துவம் நமக்கும் பலன் தரும். நன்மையும், ஆனந்தமும், அமரத்துவமும் நம்முடையதாகும்.

வாழ்வு பிரபஞ்சத்தின் அமரவாழ்வு என ரிஷிகள் கண்டனர். நாம் அறியும் உணர்ச்சிகளும், கிளர்ச்சிகளும் ஆனந்தத்தின் அலைகள் என்றனர். எண்ண ஓட்டங்கள், மனதைத் தொடுபவை அனைத்தும் உலகை ஊடுருவும் சத்தியத்தின் கதிர்கள் எனவும் அவ்விருஷிகள் கூறினர். செயல்கள் எல்லாம், பிரபஞ்சத்தின் செயல்கள், நித்தியமான சத்தியம், நிதர்சனமான நற்பயனை ஈவது என்றனர்.

சக்தி ரூபத்தை ஏற்றால் உணர்வின் அலை, சத்தியத்தின் பிழம்பு, நற்செயல்கள் எழுகின்றன. ரூபங்கள் அனந்தம். நோக்கங்களாலும், அவற்றின் மாறுதல்களாலும் புது ரூபங்கள் உருவாகின்றன. அவை சக்தியின் செயல்கள். ஒன்று, பலவாகும்பொழுது அகந்தை உருப் பெறுகிறது. ஒன்று, பலவாக மாறும் பொழுது உருவம் குறைபட முடியும். அது தற்காலிகமானது, ஆனால் தவிர்க்க முடியாதது. அகந்தை என்பது ஜீவியத்தின் சிறு உருவம். விரும்பி முழுமை யிலிருந்து விலகுவதால் ஏற்படுவது அகந்தை. பல ரூபங்கள் உள்ளபொழுது, ஒன்றில் தன்னை ஜீவியம் மறப்பதால் அகந்தை பிறக்கிறது. பல்வேறு நோக்கங்கள் உள்ளபொழுது, அவற்றுள் சிலவற்றைப் பிரித்து எடுத்து, அவ்வெல்லைக்குள் அகந்தை வளர்கிறது. ஆயிரம் போக்குள்ளபொழுது, அகந்தை ஒன்றைப் பிரித்து தனித்தெடுத்துச் செயல்படும் தன்மையுடையது. அகந்தையின் இச்செயல் அமரத்துவத்தை மரணமாக்குகிறது. பல நல்லனவுள்ள பொழுது, அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதால் நல்லது கெட்டதாக மாறுகிறது. தேர்ந்தெடுத்தது, எல்லையை எற்படுத்துவதால், ஆனந்தம் வலியாக மாறுகிறது. ஞானத்திற்கு தவறு என்ற குறையை இதனால் ஏற்படுத்த முடிகிறது. நித்திய ஆனந்தம் சிருஷ்டிக்குரியது. ஒன்றை மற்றதினின்று பிரித்தெடுப்பதால் ஆனந்தம் இருநிலை களாகப் பிரிந்து வலியும், சந்தோஷமுமாகின்றன. முதல் நிலையை நாம் மீண்டும் நாடலாம். அதன் மூலம் துன்பம், வலி, தீமை, மரணம், சந்தோஷம், ஆனந்தம், நல்லது, அமர வாழ்வாக மாற முடியும். அகந்தை இம்மாற்றத்தால் அழியும். ஆன்மாவுக்குரிய பண்புகளை நாம் மீண்டும் அடையலாம். ஆன்மா இழந்த பண்பை மீண்டும் பெறுவதால், ஜீவாத்மா இறைவனுடன் மீண்டும் பூவுலகத்திற் குரிய உறவைக் கொண்டாடலாம்.

(Later Vedanta) பிற்காலத்தவருக்குப் புதிய எண்ணம் தோன்றியது. அகந்தையே இரு நிலைகளுக்குக் காரணம் என்றனர். அகந்தை உலகத்திற்கு அவசியம் என்று கண்டனர். அகந்தையின் அறியாமையை விலக்கலாம், நமக்குள்ள தடையைக் களையலாம் என்றனர். அதனால் இரு நிலைகள் அகலும். அப்படிச் செய்வதால் நாமும் உலகைவிட்டுப் போகவேண்டும். நாம் தீமையான பிரபஞ்சத்தை அடைவோம். அது மாயையும் கூட. அவ்வழியில் பூரணம் பெறுவது - இவ்வுலகில் - முடியாததாகும். நித்தியமான சத்தியத்தை இவ்வழியில் பெற முடியாது. தீமையுடன் தொடர்புள்ள நன்மையை அடையலாம். பூரண நல்லதை அடையமுடியாது. இது அவர்கள் விளக்கம். இதைக் கடந்த நிலையுண்டு. அகந்தையை இடைப்பட்ட நிலையாகக் கருதும் இலட்சியம் அது. அகந்தையைக் கடந்த நிலையாகும் அந்நிலை. அந்நிலையில் தீமையில்லை, இக்காலத்தவர் வேதாந்தத்தின் மூலம் வாழ்வை விட்டகல முயல்கின்றனர். வாழ்வைப் பூரணப்படுத்த நாம் வேதாந்தத்தைப் பயன்படுத்தமுடியும். உலகை சிருஷ்டித்தது அகந்தையில்லை, ஈஸ்வரன். ஈஸ்வரன், புருஷன் என நாம் கூறுவது ஒன்றே. சிருஷ்டி அவன் வெளிப்பாடே. அவனே ஜீவாத்மா. ஜீவாத்மா, பிரபஞ்சத்தின் மறு உருவம். அகந்தைக்கு அளவுண்டு. மனித உலகத்திற்கு அகந்தை அவசியம். பிரபஞ்சம் செழிக்க அகந்தை தேவையில்லை.

இடைப்பட்ட நிலை தன் நிலை என அகந்தையால் அறியமுடியும். அதை ஏற்றால், அந்நிலையைக் கடக்க முடியும். தற்சமயம் அகந்தை வாழ்வின் சிறுமையைப் பிரதிபலிக்கிறது. புதிய கோணத்தில் அகந்தை வாழ்வின் ஒளியைப் பிரதிபலிக்க முடியும். அதையுணர்ந்த அகந்தை கரைந்து, பிரபஞ்சத்தில் புது மையமாக மாறும். மனிதச்செயல்கள் இன்று அகந்தையின் செயல்கள். மனிதச் செயலை ஏற்றுப் போற்றிப் பாராட்டி, சுமுகமாக்கி, திருவுருமாற்றி, தெய்வச் செயலாக்க முடியும். அது பிரபஞ்சவாழ்வாகும்.

மனிதவாழ்வின் அடித்தளம் சத்புருஷன் வெளிப்படும் வாழ்வாக அமையும். அதனுள் ஜடமும் அடக்கம். ஜடஉலகின் எந்த அம்சத்தையும் விலக்க வேண்டிய அவசியமில்லை. இன்று நாம் அகந்தைக்காக வாழ்கிறோம். நம் செயலுக்குரிய உண்மை அதுவன்று. சத்புருஷன் வாழ்வும், ஜடமுமாகும். மனத்தினின்றும், வாழ்வினின்றும் புருஷன் வெளிப்படுகிறான். சத்திய ஜீவியத்தி னின்றும் சத்புருஷன் வெளிப்படுகிறான். நம் செயல்கள் அந்த வெளிப்பாட்டில், மனிதனுடைய பங்காகும். மனிதன் பிரபஞ்சத்தின் பிரதிபிம்பம். உடலில் இறைவனை வெளிப்படுத்துபவன் மனிதன். இதற்காக ஏற்பட்டது பரிணாமம். ஜடத்தில் மனிதனுதித்தது பரிணாமம். அகந்தை இடைப்பட்டது. அகந்தை தெளிவானது. ஒன்றான இறைவன் பல ஜீவன்களாக மாற அகந்தை வழி செய்கிறது. இது நம்மையறியாமல் நடப்பது. விவரமற்ற முழுமை பொதுவாகப் பரவிய நிலையாகும், இதை ரிக் வேதம் ஹிருதய சமுத்திரம் என்கிறது. அகந்தை யின் முதற்கடமை இருநிலைகளை - துன்பம், இன்பம், இருள், ஒளி, சத்தியம், பொய் - ஏற்படுத்துவதாகும். சிருஷ்டி செயற்கை முறையாகும். முழுமையான சத்தியம், ஆனந்தம், நல்லது ஆகியவற்றை சிருஷ்டி விலக்குகிறது. ஜீவன் மலர்ந்து இறைவனை நோக்கி உயர்ந்தால், அகந்தை கரையும். அது இறைவனுக்குரிய பூரணம். அகந்தை திருவுருமாறுவதால் ஜீவன் மலர்ந்து இறைவனை நோக்கி உயர்ந்தால், அகந்தை கரையும், அது இறைவனுக்குரிய பூரணம். அகந்தை திருவுருமாறுவதால் ஜீவன், அனைத்து ஜீவனையும் உணரமுடிகிறது. அகந்தை, இம்மாற்றத்தால், இறைவனுக்குரிய சுதந்திரம், ஐக்கியத்தின் இருப்பிடமாகிறது. அதுவே இறைவன் திருவுள்ளம் பூர்த்தியாவதாகும். இதன்மூலம் சத்து, சித்து, ஆனந்தம் ஜீவாத்மாக்களில் வெளிப்பட்டுப் பூர்த்தியாகிறது. பரிணாமம் வளரும் வழி அது. ஜடஉலகம் இப்புனர்ஜன்மத்திற்குரியது. சிருஷ்டி அதன் பிரசவமுயற்சி.

*********



book | by Dr. Radut