Skip to Content

09. VIII The Methods of Vedantic Knowledge

8. வேதாந்த ஞானம்

தெய்வீக வாழ்வு நம் இலட்சியம். மனித வாழ்வின் மையம் அகந்தை. ஆதியில் அதை சிருஷ்டித்தது சச்சிதானந்தம். இதுவே உண்மையானால் சச்சிதானந்தத்திற்கும், அகந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன? அத்தொடர்பின் ஜீவன் எது? தெய்வீக வாழ்வின் தத்துவமும், நடைமுறையும் அவ்விரண்டையும் பொருத்தது.

சச்சிதானந்தத்தை நாம் அறிவோம். அதைப்பற்றிய தெளிவும் நமக்குண்டு. சச்சிதானந்தம் நம் புலன்களுக்கு புலப்படாதது. மனித மனத்தின் இருப்பிடம் மூளை. சச்சிதானந்தம் அதன் எல்லையைக் கடந்தது. மனித மனத்தின் திறனுக்குள் நாம் உலகை - ஜடமான உலகை - அறிய முடியும். இவ்வுலகின் அம்சங்களையும் நாம் அறிய முடியும். அவை ஜடத்தின் ஜீவியத்தாலானது என்பதால் நமக்கு அவை விளங்கும். புலன்கள் நமக்கு உலகின் அம்சங்களை உணர்த்த முடியும். சச்சிதானந்தம் என்பது புலன்களின் சாம்ராஜ்யத்தைக் கடந்தது. நாம் அவற்றைக் கற்பனையால் அறியலாம். எதிர்காலத்தை நிகழ்காலத்தில் அறியவல்லது கற்பனை. தர்க்கம் மூலமாகவும் அவற்றை அறியலாம். புலன்களால் அறிய முடியாததைக் கற்பனையாலும், தர்க்கத்தாலும் அறியலாம். பகுத்தறிவு என்பது அவற்றைப் போன்ற கருவி. மனம் இதைக் கருவியாகப் பயன்படுத்துகிறது.

பகுத்தறிவு இருவகைகளாகச் செயல்படும். தூய்மையாகத் தனித்தும் செயல்படவல்லது. புலன்களை நம்பி தூய்மையை இழந்தும் செயல்படும் தன்மையுடையது. வாழ்வில் பொருள்களும், மனிதர்களும் உண்டு. அவர்கட்குத் தோற்றமுண்டு. அத்தோற்றம் அவர்கள் செயல்களைப் பொருத்தது. செயலில் நம் மனம் உள்ளது போலிருக்கும் தோற்றம். பயன்படும் கருவி பயன்படுத்துபவர் கண்ணுக்கு அழகாகத் தெரியும். இதில் அழகு என்பதை நிர்ணயிப்பது பயன். உள்ளது வேறு, உணர்வது வேறு. அழகான அற்புதமான துப்பாக்கியை ஒருவன் நமக்கு முன்னே கொண்டு வந்தால் அதன் அழகும் அற்புதமும் கண்ணுக்குத் தெரியாது. பயங்கரம் மட்டுமே விளங்கும். உணர்வு தோற்றத்தை முடிவாகக் கொள்ளும். நிகழ்ச்சியை ஆராய்வது உணர்வு. அதை உணர்வு தோற்றத்தின் மூலம் செய்கிறது.

பொருள்கட்குச் சத்தியம் உண்டு. அதனின்று வேறுபட்ட தோற்றமும் அவற்றிற்குண்டு. பகுத்தறிவு சத்தியத்தையறியாது. மேல் நிலையில் மாற்றத்தைக் காண்கிறோம். அது தோற்றம். பகுத்தறிவால் சத்தியத்தை அறியமுடியாது, தோற்றத்தை மட்டுமே அறியமுடியும். நம் புலனுணர்வுகளைப் பகுத்தறிவு ஏற்க மறுப்பதில்லை. ஆனால் அவற்றையே முடிவாகக் கொள்வதில்லை. அவற்றைக் கடந்து செல்ல வலியுறுத்தும். தோற்றத்தின் பின்னால் பொதுவான, மாறமுடியாத கருத்துகளுண்டு. அவை சத்தியத்தைச் சார்ந்தவை. திரைமறைவிலுள்ள சத்தியத்தை அடைய பகுத்தறிவு வலியுறுத்தும். செயலை அதைக் கொண்டுதான் நிர்ணயிக்கும். பகுத்தறிவால் தோற்றத்தைக் கடந்து உண்மையைக் காணமுடியும். அதனால் நேரடியாக முடிவு செய்ய முடியும். அங்ஙனம் கருத்து உருவாகும். பகுத்தறிவு தன்னை வலியுறுத்திக் கூர்ந்து உணருவதே அது. அதுவும் தவறான முடிவைக் கொடுக்கலாம். முடிவு உணர்வைப் பொருத்தது என அறியலாம். ஆனால் அது உண்மையில்லை. இச்சலனம் சரியானது, தவிர்க்க முடியாதது. நம் அனுபவம் பிரபஞ்சத்தில் சிறுபகுதி. இச்சிறு பகுதியிலும் நம் கருவிகள் குறையானவை. குறையான கருவி தவறான முடிவைத் தருகின்றன. ஆனால் முழுமையை அறிய நாம் முனையவேண்டும். அதற்காகக் குறையான கருவிகளைக் கடக்க வேண்டும். அவற்றைத் தூர விலக்க வேண்டும். இருப்பினும் கருவிக்கு சக்தியுண்டு. அச்சக்தியை நாம் புறக்கணிக்க வேண்டும். புலன்கள் தவற்றை உண்மை என அறிவிக்கின்றன. பகுத்தறிவு அவற்றைத் திருத்த வேண்டும். மனிதத்திறமைகளில் பகுத்தறிவு தலையாயது. மனிதன் விலங்குகளைவிட உயர்ந்தவன். அவ்வுயர்வைத் தருவது பகுத்தறிவாகும்.

நம் அறிவு ஜடமானது. நம்மால் தத்துவ ஞானம் பெறமுடியும். பகுத்தறிவை முழுமையாகப் பயன்படுத்தி தத்துவத்தை அறியலாம். நம் ஜீவன் முழுமையுடையது. தத்துவ ஞானம் தெளிவானது. ஆனால் நம் ஜீவனுக்குத் திருப்தியளிக்காது. பகுத்தறிவுக்கு அவை பூரணத்திருப்தி தரும். இவை பகுத்தறிவுக்கும் சிருஷ்டிக்கும் உரியவை. நம் இயல்பு எப்பொதும் இருவகைகளாகப் பார்க்கின்றது. அதன் பார்வைக்கு, செயல், கருத்து என இரண்டு தோன்றுகின்றன. செயல் புலன்கட் குரியது. கருத்து மனத்திற்குரியது. எதுவும் முழுமையானதன்று. அனுபவம் இரண்டையும் சேர்த்துப் பூர்த்தி செய்யும். நாம் சத்தியத்தை நாடுகிறோம். நாம் நாடும் சத்தியம் நம் சாதாரண அனுபவத்திற்கப்பாற்பட்டது. புலனுக்குணர்வுள்- ளதைப்போல் பகுத்தறிவுக்கும் உணர்வுண்டு. நாம் தேடும் சத்தியம் பகுத்தறிவின் உணர்வுக்குப் புலப்படும். எனவே, நமக்குப் புதியதோர் திறன் வேண்டும். அத்திறன் நம் சுபாவத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும். ஜடத்தைக் கடந்தது நம் நிலை. நாம் உணர்வால் அனுபவிக்கிறோம். உணர்வு வளர்ந்து பெற வேண்டிய திறனது.

ஒரு வகையில் நம் அனுபவங்கள் எல்லாம் உணர்வால் ஏற்பட்டவை. தத்துவப்படி, உணர்வின் மனத்தை, மனஸ் என்கிறார்கள். புலனுணர்வு மனத்தை எட்டுகிறது. மனம் விளக்கம் தருகிறது. அதனால் நம் உணர்வுகளெல்லாம் அனுபவம் தருபவை, அனுபவங்களெல்லாம் உணர்வாலானவை. மனத்தைத் தத்துவம் ஆறாவது அறிவு என்கிறது. மனம் மட்டும் அறிவு எனவும் கூறலாம். மற்ற புலன்கள் பார்வை, ருசி, தொடுஉணர்வு, கேட்பது, வாசனை என்பவற்றை மனத்தின் குறிப்பிட்ட திறன்கள் எனலாம். ஐம்புலன்கள் மனத்தின் கருவிகள். ஆனால் புலனுதவியின்றி மனம் நேரடியாக கேட்கும், பார்க்கும், நுகரும், தொடும், ருசிக்கும். நம் அறிவு இருவகையின. உணர்வாலான அறிவு ஒன்று. அடுத்தது பகுத்துணர்வது, பகுத்தறிவின் செயல். இரண்டும் இருவகைகளாகச் செயல்படும் தன்மையுடையன. ஒன்று அடுத்ததை நம்பி கலப்பால், தூய்மையற்றுச் செயல் படுவது. அடுத்தது தனித்துத் தூய்மையுடன் செயல்படுவது. பொதுவாக கலப்பால் செயல்படுவது புறநிகழ்ச்சியின் அனுபவம். தூய்மையான செயல் அகவுணர்வுக் குரியது. புறத்தில் அறிவது பிறபொருள். அகத்தில் உணர்வது தன்னையறிதல். பிறபொருளையறிய புலன் தேவை. புலன்கள் தாங்கள் அறிந்தவற்றைக் கூறுகின்றன. அவை புலனுருவம் பெற்றவை. நாம் அதை ஏற்கிறோம். தன்னை யறியும்பொழுது ஞானம் நேரடியானது. அது ஐக்கியத்தின் அடிப்படையையுடையது. நம் உணர்வுகளை நாம் அதுபோல் அறிகிறோம். நாமே நம் உணர்வாக மாறுகிறோம். நாமே கோபமாகிறோம். நாம் உயிரோடு இருப்பதை அறிவோம். அதற்கு நிரூபணம் தேவையில்லை. அது சுயமான தெளிவுள்ளது. இது ஐக்கியத் தால் ஏற்பட்டது. அதுவே பொருள்களின் சத்தியம். அனுபவம் ஐக்கியத்தாலெழுவது. அது இரகஸ்யமானது. அதன் உண்மையான அம்சம் நம்மிடமிருந்து மறைந் துள்ளது. நாம் உலகத்துடன் இரண்டறக் கலக்கவில்லை என்பதால் இந்நிலை. நாம் தனி உலகினின்று பிரிந்து நிற்கிறோம். உலகம் புறப்பொருள் எனவும் நாம் அதனின்று விலகிய அகவுணர்வு எனவும் கருதுகிறோம். பிரிவினை இருப்பதால் செய்தி பரவ புதிய உறுப்புகள் தேவை. அவ்வுறுப்புகளை மனிதன் உற்பத்தி செய்துள்ளான். அவை நம் ஐம்புலன்கள். ஏற்கனவே நமக்கு நேரடி ஞானமிருந்தது. அது இரண்டறக் கலப்பதால் ஏற்பட்டது. நாம் இன்று பெறும் ஞானம் மறை முகமானது. அது ஜடமான தொடர்பால் வருகிறது. மனம் அனுதாபத்தால் அதை ஏற்கிறது. இதுவே வரையறை. அகந்தை, முதலிலிருந்து இதுபோன்று செயல்பட்டுவருகிறது. முழுபொய்யிலிருந்து அகந்தை எழுகிறது. உண்மையான சத்தியத்தை தற்காலிகமான பொய்யால் மறைக்கிறது. நாம் இதை நடைமுறை உண்மை எனக் கொள்கிறோம்.

மனத்தில் அறிவு எப்படி அமைந்துள்ளது எனக் காண்கிறோம். அதேபோல் புலனறிவையும் உணர்கிறோம். நாம் அளவுக்குட்பட்டவர்கள் என அறிகிறோம். அவ்வரையறை உண்மையானதல்ல, தேவையானதன்று எனவும் அறிகிறோம். இது மனம் ஏற்ற பழக்கம். பழக்கம் பரிணாமத்தால் வந்தது. பார்ப்பதற்குக் கண்ணையும், கேட்பதற்குக் காதையும் மனம் நம்பியுள்ளது. கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் மனத்திற்கு அவசியமில்லை. நேரடியாக மனத்தால் பார்க்கவோ, கேட்கவோ முடியும். மனம் பழக்கத்தை ஏற்றது. கண்ணால்தான் பார்க்கமுடியும், காதால்தான் கேட்கமுடியும் என மனம் நம்புகிறது. புறஉலகின் பொருள்களுடன் மனம் பெற்ற தொடர்பு அது. புறஉலகை நாம் அறிய முயன்றால் கண்ணால் பார்க்கிறோம், காதால் கேட்கிறோம். புலன்களால் நாம் பெறும் மறைமுக அறிவு அவை. பொருள்களைப்பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நாம் பெறும் சிறு பகுதியான அறிவு அது. புலன்கட்குச் சிறு பகுதிமட்டுமே தெரியும். அதை மட்டுமே புலன்கள் நமக்குத் தரமுடியும் இதுவே நமக்கு முக்கிய பழக்கமாகிவிட்டது.

மனம் நேடிரயாகப் பொருள்களையும், நபர்களையும் அறியமுடியும். புலன்களின் உதவி மனத்திற்குத் தேவையில்லை. இது மனத்திற்கு இயல்பாக உள்ள திறமை. தற்சமயம் உடலால் ஆள மனம் சம்மதித்துள்ளது. மயக்கம் hypnosis தரும் முறையில் இவ்வுண்மையை நாம் அறிவோம். விழிப்பில் நாம் அதுபோல் சுதந்திரமாகச் செயல்படமுடியாது. விழிப்பு நேரடியாகத் தான் காண்பதை அறியும். உடலால் ஆளப்படும் நிலையில் மனம் இன்றுள்ளது. மந்திரவாதி ஒருவருக்குத் தூக்க மயக்கத்தைத் தருகிறான். மயக்கத்தால் மனம் விலகுகிறது. அடிமனம் subliminal mind விழிப்புறுகிறது. அதுவே உண்மையில் மனம் எனப்படும். அது சுதந்திரமாக இருக்கிறது. அதன் நேரடித் திறமை போதும். தன் உண்மையான திறமையை இந்நிலையில் மனம் வெளிப்படுத்தமுடியும். எப்பொருளையும் அதனால் தீண்ட முடியும். தனித்தும், தூய்மையாகவும் உள்ள நிலையிது. பொதுவாக மனம் புலன்களுடன் கலந்தும், தூய்மை இழந்துமுள்ளது. கண்ணை மூடிக்கொண்டு மனத்தால் பார்க்கமுடியும். கலப்பிருந்தால் அது முடியாது. விழிப்பில் அதுபோல் பார்ப்பது கஷ்டம். யோகத்தில் சிறிது முன்னேற்றம் அடைந்தவர்களும் இதை அறிவர்.

நம் புலன்கள் ஐந்து. தூய்மையான மனம் புதிய புலன்களை உற்பத்தி செய்யமுடியும். நாம் பொருள்களை நிறுத்து எடை போடுகிறோம். கையில் எடுத்தவுடன் எடை தெரியும்படி, கைக்குப் பயிற்சியளிக்கமுடியும். மனத்தால் நேடிரயாகப் பொருள்களின் எடையை அறியமுடியும். தொடு உணர்ச்சி நமக்கும் பொருளுக்கும் தொடர்பு ஏற்படுத்துகிறது. பொருள்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது எனப் பகுத்தறிவு நேரடியாகக் காணும் திறமையுடையது. இங்கும் பகுத்தறிவு பொருள்களுடன் தொடர்புகொள்ள உதவுகிறது. அறிவது மனம், பகுத்தறிவில்லை. அதேபோல் மனஸ் பயன்படும். மனம் புலன்களைக் கருவியாகப் பயன்படுத்தவில்லை. முதற் தொடர்புக்காகப் பயன்படுத்துகிறது. முரணானதை அறியவும் மனதால் முடியும். இது மேல் மனத்திற்குரியதன்று. புறவாழ்வுக்கும், மேல் மனத்திற்கும் மட்டும் உரியதன்று. பொருள்களை ஊடுருவி, அவற்றின் தன்மைகளை அறியவும், பிறர் எண்ணங்களை அறியவும் இது பயன்படும். மனத்தால் பிறர் எண்ணங்களை அறியமுடியும். அவர்களாகச் சொல்ல வேண்டிய தில்லை. அவர்கள் முகக்குறி, தோற்றம், செயல்களை நாம் ஆராயவும் தேவையில்லை. அது ஓரளவு தெரிவிக்கும். அவை தவறாகவுமிருக்கும். நாம் காண்பதற்கு எதிரான கருத்தும் சரியாக இருக்கும். உள்ளுணர்வைப் பயன்படுத்தி அவற்றை அறியலாம். புறஉலகை நாம் அறிவால் ஆராய்கிறோம். நாம் அவற்றைப் புறக்கணிக்கலாம். செயல்கள், புறவாழ்வையும் பொதுவான செயலையும் குறிக்கும். இவை பயன்படா. புலன்கள் பயன்படும். அவை சூட்சுமமானவை, தூய்மையானவை. நம் திறன் வெளியில் செயல்படுவதால் ஏற்படுவது. ஜடமான மனம் அவற்றை நம்ப மறுக்கிறது. அதற்கு நம்பிக்கை இல்லை. அது தயங்குகிறது. அதன் பழக்கத்திற்குப் புலன்கள் கூறும் இச்செய்தி விபரீதமானது. நம் அன்றாட அனுபவத்திற்கு அது மாறானது, முரணானது. செயலுக்கு இப்புலன்கள் பயன்படா. அவற்றை முறைப்படுத்தமுடியாது. ஒழுங்காகச் செயல்படும் திறமையுள்ளவை அவையில்லை. பயன்படும் கருவியாக அவற்றால் மாற முடியாது. நம் செயலைப் புறத்தில் விரிவுபடுத்த முயன்றால், முதலில் எழும் பலன் இது. இதைப் பல வகைகளாகச் செய்யலாம். விஞ்ஞானரீதியாகவும், தற்செயலான முறையிலும் செய்ய முடியும். எவரும் சொல்லிக்கொடுக்காமல் சிலர் இதைப் பயில்வதுண்டு.

மேற்சொன்ன எதுவும் நமக்குப் பயன்படாது. “புலனுணர்வைக் கடந்து, பகுத்தறிவின் உணர்வுக்கு எட்டும்” என - புத்தி கிரஹயம் அதிந்திரியம் - கீதை கூறுகிறது. நம் திறமைகளை விரிவுபடுத்தவும், கருவிகளைப் பலப்படுத்தவும் அவை உதவும். சத்தியமும், உண்மையும் புலன்கட்குப் புலப்படுவதில்லை. பிரபஞ்ச வாழ்வுக்குரிய பிரபலமான சட்டங்கள் பல. அவற்றில் ஒன்று, “பகுத்தறிவால் அறியக்கூடியது ஒன்று பிரபஞ்சத்திலிருந்தால் அதை அறியும் திறன் நம்முள் உண்டு.” அனுபவத்தால் நாம் அதைக் காண வேண்டும். பகுத்தறிவுடைய பிராணிக்குரிய சட்டம் அது. அதுபோன்ற அனுபவம் நமக்கு ஒன்றுண்டு. நாம் உயிரோடிருக்கிறோம் என்று நாம் அதுபோல் அறிகிறோம். அது தன்னையறிவதாகும். இரண்டறக் கலப்பதால் ஏற்படும் அறிவு அது. அதை நாம் விரிவு படுத்தலாம். அதனால் புதுத்திறனெழும். நம் ஆத்மாவுக்குச் சொந்தத் திறனுண்டு. அவற்றையறிய நமக்குத் தன்னையறியும் திறன் தேவை. இத்தன்னையறியும் திறன் விழிப்பானது. ஓரளவு இது நமக்குண்டு. நம் சிந்தனையில் இது உண்டு. இதை ஒரு சட்டமாகவோ, சூத்திரமாகவோ எழுதலாம். பாத்திரத்தை நாம் அறிந்தால் அதனுள் உள்ளவை புரியும் எனவும் கூறலாம். “உடலையறிந்தால், உயிர் விளங்கும்.” மனம் தன்னையறியும் தன்மையுடையது. இதை நாம் அடுத்த நிலைக்கு கொண்டுபோக முடியும். நம்மைக் கடந்து வெளியில் உள்ள Self புருஷனைப்பற்றி உபநிஷதம் கூறுகிறது. அது ஆத்மா, பிரம்மம். ஆத்மா பிரபஞ்சத்தின் உடல். பிரபஞ்சத்தை தன்னுட்கொண்டது ஆத்மா. ஆத்ம இரகஸ்யத்தை அறிய அது உதவும். நம்மால் அதை அனுபவிக்கமுடியும். அதுவே வேதாந்தத்தின் அடிப்படை. வேதாந்தம் பிரபஞ்சத்தை அறிய முயல்கிறது. தன்னையறிந்து அதன்மூலம் பிரபஞ்சத்தை அறிவது வேதாந்த ஞானம்.

வேதாந்தம் மனத்தையும், அதன் அறிவையும் அறியும். மனத்திற்கு அனுபவம் உண்டு. பகுத்தறிவுக்கு தத்துவம் தெரியும். எவ்வளவு உயர்ந்தாலும் தத்துவம் சத்தியமாகாது. அது ஐக்கியம் தரும் ஞானமன்று. புருஷன் - சத்புருஷன் - யோகியோடு ஐக்கியமாகிப் பெறும் ஞானம் வேதாந்த ஞானம். அவை மனத்தின் பிரதிபலிப்புகளே. நாம் மனத்தையும், பகுத்தறிவையும் கடக்க வேண்டும். மேல் உலகத்திற்கும் கீழ் உலகத்திற்கும் பாலம் அமைப்பது பகுத்தறிவு. விழிப்பில் பகுத்தறிவு செயல்படும். பரிணாம வளர்ச்சியில் நாம் ஆழ்மன ஆத்மாவாகிறோம். பரிணாமம் பரமாத்மாவை நோக்கி நம்மைச் செலுத்தும். ஆத்மா, பிரம்மம், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன் என்பது ஒன்றே. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறில்லை. பரமாத்மாவும், கீழுலகமும் அவனுடைய உருவங்களே. கீழ் உலகமான ஆழ் மனத்தின் மந்திரம் வாழ்வு. நாம் தேடுவது ஞானம். ஜீவியமான ஞானம் தேவை. ஆழ்மனத்தின் அந்த ஞானம் செயலுள் பொதிந்துள்ளது. வாழ்வின் மையம் செயல். பரமாத்மாவில் செயல் ஜோதியிலுள்ளது. ஞானம் ஜோதியினுள் இல்லை. ஆனால் ஜோதி ஜீவியத்தினுள் உள்ளது. நேரடி ஞானம் இவை இரண்டிற்கும் பொது. எதை அறிய நாம் முயல்கிறோமோ அதற்கும் நமக்கும் இடையே ஏற்படும் ஐக்கியம் நேரடி ஞானம். இருவரும் இணைந்து இருக்கும் நிலை அது. ஞானத்தால் நாமும், பிறரும் இணைகிறோம். ஆழ்மனத்தில் நேரடி ஞானம் செயலில் வெளிப்படுகிறது. செயல் என்பது பலன். ஞானம் என்பது ஐக்கியம். ஞானம் செயலினுள் மறைந்துள்ளது. பரமாத்மாவில் நிலைமை எதிரானது. ஜோதியே இங்கு தத்துவம், சட்டம். நேரடி ஞானம் திரையின்றி வெளிப்படுகிறது. நேரடி ஞானம் என்பது ஞானத்தின் சிறப்பு, சிகரம். ஐக்கியத்திலிருந்து எழுவது அது. ஐக்கியம் செயலின் பலனுக்கு உதவும், அதை நிர்ணயிக்கும். அடிப்படையான உண்மையிலிருந்து எழுவது அது. அதன் முடிவும் அதுவே. மேல் உலகத்தையும், கீழ் உலகத்தையும் இணைப்பவை பகுத்தறிவும், மனமும் இடைப்பட்ட கருவிகளாகச் செயல்படுகின்றன. ஞானம் ஜீவனுள் சிறைப் பட்டுள்ளது. மனமும், பகுத்தறிவும் சிறைப்பட்ட ஞானத்திற்கு விடுதலையளிக் கின்றன. ஞானத்தில் ஆதிசக்தியை அவை மீண்டும் பெற்றுத் தருகின்றன. தன்னையறிவது மனத்திற்குரியது. பொருளுக்கும் பாத்திரத்திற்கும் உரியது அது. சொந்த ஆத்மாவுக்கும், பிறருக்கும் உரியது. இவ்வழியே தன்னையறிதல் முடிவாக ஐக்கியத்தை அடைகிறது. ஐக்கியம் தானே தெரியும். அத்துடன் பகுத்தறிவு நேரடி ஞானமாகிறது. நேரடி ஞானம் சுயம்பிரகாசமான ஞானம். இப்படி மனம் சத்திய ஜீவியத்தில் தன்னிறைவு பெறுகிறது. இதுவே ஞானத்தின் சிகரம்.

வேதாந்தம் தன் முடிவுகளை இப்படி எடுத்தது. வேதாந்தத்தை தொடர்வது ஸ்ரீ அரவிந்தரின் குறிக்கோளில்லை. தெய்வீக வாழ்வே அவருடைய லட்சியம். அதை விரிவுபடுத்த விரும்புகிறார். வேதாந்தம் அவற்றைப்பற்றிப் பேசுகிறது. அந்த அளவுக்கு ஸ்ரீ அரவிந்தர் அதை விளக்குகிறார். தெய்வீக வாழ்வுக்குரிய முந்தைய நாள் அஸ்திவாரங்கள் வேதாந்தத்தில் சிறப்பாகக் காணப்படுகின்றன. எனினும் பழைய முறைகளைத் தொடராமல், புதியதை ஏற்படுத்துவதே அவர் எண்ணம். புதிய மனநிலைக்கு ஏற்றவாறு பழைய மனநிலையை மாற்ற வேண்டும். பழைய ஜோதி புதிய பிரகாசமாக வேண்டும். பிரம்மம் மாறியபடி உள்ளது. பிரம்மம் மாறுதலையறியாதது எனவும் நாம் அறிவோம். பழைய பொக்கிஷம் நம் முதல். வேலை புது இடத்தில். பழைய நிலையில் ஆரம்பித்து புதிய இலக்கை நோக்கிப் போவோம்.

ரூபமும், சலனமும் தோற்றம். அதுவே நமக்கு சத்தியம். இத்தோற்றத்தின் பின்னுள்ள அடிப்படை சத்தியத்தை - பிரம்மத்தை - வேதாந்தம் கண்டு கொண்டது. ஆராய்ச்சி மூலம் வேதாந்தம் இம்முடிவுக்கு வந்தது. அம்முடிவை சத்பிரம்மம் என்றனர். அது தூய்மையான சிருஷ்டி. விவரிக்கமுடியாத, அளவு கடந்த, தனித்தன்மை வாய்ந்த தூய்மையானது. நம் அன்றாட அனுபவம், எளிய எண்ணங்கள் சத்பிரம்மத்தை அறியமுடியாது. நம் வாழ்வின் எந்த நிலையும், எந்த நினைப்பும் சத் என்பதை நினைக்கத் தூண்டவில்லை. நாம் மனத்தாலும், புலனாலும் வாழ்கிறோம். புலன்கட்கும், புலனுணர்வுக்கும் சத்பிரம்மமோ, பிரம்மமோ புலப்படாது. நாமறிவனவெல்லாம் அதன் ரூபமும், அசைவுமேயாகும். ரூபங்களுண்டு. ஆனால் ரூபம் தூய்மையானதன்று. ரூபங்கள் கலப்பானவை, பல கலந்தவை, ஒன்று சேர்ந்தவை, பகுதியானவை. உள்ளே போனால், ரூபங்கள் அழிகின்றன. ரூபங்கள் அழிந்தாலும், அசைவும், மாற்றமும் அழியா. சத்பிரம்மத்தை நாமறிவோம். காலத்திலும், இடத்திலும் சத்பிரம்மமுள்ளது. அசைவாலும், மாற்றத்தாலுமிருப்பது சத். இடத்தில் அசைவும், காலத்தில் மாற்றமும் சத் இருக்கக்கூடிய நிபந்தனைகள். சத்பிரம்மத்தைப்பற்றி நாமென்ன அறிவோம்? நமக்குப் புலப்படும் எதுவும் சத்பிரம்மத்திலில்லை. உண்மையின் சில சுவடுகள் இவ்வசைவின் பின்னால் தெரிகின்றன. அசைவில் எதுவும் தெரியவில்லை. தன்னையறிதல் அவற்றை நமக்குணர்த்த வல்லது. மாற்றமில்லாத, அசைவில்லாத ஒன்று அங்கு தெரிகிறது. அது வாழ்வுக்கும், மரணத்திற்கும் அப்பாற்பட்டது. அது மாற்றங்களையும், ரூபங்களையும் கடந்தது. கதவு திறந்தால் சத்தியம் தெரியும். இது அக்கதவு. சத்தியம் என்பது உண்மையில் அற்புதம். சில சமயங்களில் கதவு ஒரு நிமிஷம் திறக்கும். சத்தியப்பிழம்பு நம்மை சிறிது தொடும். ஓர் ஒளிப் பிழம்பான ஞானம். நாம் மனத்தில் உறைகிறோம். மற்றொரு ஜீவியநிலையுண்டு. அது ஞானத்தின் நிலை. நாம் பலமாகவும், உறுதியாகவுமிருந்தால் சற்று திறந்த கதவு, நிரந்தரமாகத் திறக்கும். அது பெரும் மாறுதல்கட்கு ஆரம்பமாகும்.

ஆராய்ச்சியைக் கவனமாக மீண்டும் ஆரம்பிப்போம். நேரடி ஞானமே முதற் குரு. நாம் நம் மனதால் கட்டுப்பட்டுள்ளோம். நேரடி ஞானம் அதன் பின்னணி யிலுள்ளது. அது திரைமறைவிலிருக்கிறது. நாமறிய முடியாத பிரம்மத்தினின்று மின்னற்பொறியாய் செய்திகள் நேரடி ஞானம் மூலம் வந்தபடியிருக்கின்றன. இதுவே உயர்ந்த ஞானத்தின் ஆரம்பம். பகுத்தறிவு அடுத்தபடி. ஞானம் அறுவடை செய்ததை அறிவு அனுபவிக்கிறது. நாமறிந்ததன் பின் விஷயமுள்ளது என நமக்கு அறிவுறுத்தியது நேரடி ஞானமேயாகும். இது மனிதனை விடாது தொடரும். தாழ்ந்த அறிவு இதற்கு முரணானது. மனிதனின் அன்றாட அனுபவங்கள் அனைத்தையும் மறுக்கும் நிலையிது. மேலே கண்ணுற்றவை ரூபமற்றவை. ரூபமற்ற பிரம்மத்திற்கு ரூபம் தரும்படி நேரடி ஞானம் கட்டாயப்படுத்துகிறது. சொர்க்கம், அமரவாழ்வு, கடவுள் என மனிதன் அவற்றை முடிக்கிறான். அப்பாலுள்ளதைத் தனக்கு விளக்க மனிதன் எடுக்கும் மற்ற முயற்சிகளும் பல. நேரடி ஞானம் இயற்கையைப்போல் வலிமையானது. அது இயற்கையின் ஆத்ம ஜோதி. பகுத்தறிவின் மறுப்பை அது கண்டுகொள்வதில்லை. தன் அனுபவம் மறுப்பதையும் அது பொருட்படுத்துவதில்லை. அது சத்தியத்தையறியும். இயற்கை தோற்ற மாதலால், நேரடி ஞானம் இயற்கையை ஏற்பதில்லை. நேரடி ஞானம் சத்தைவிட சத்புருஷனை நன்கு அறியும். சத்புருஷன் நம்முள் உள்ளான். நம்முள் ஜோதி சத்புருஷன். நேரடி ஞானம் அங்கிருந்து எழுகிறது. அதுவே கதவைத் திறப்பது. வேதாந்தம் உபநிஷதம் வழியாக சொல்லிய மந்திரங்கள் மூன்று, “சோ ஹம்”, “சர்வம் பிரம்மம்”, “தத்வமஸி” ஆகியவை - நானே பிரம்மம், அதுவும் பிரம்மம், அனைத்தும் பிரம்மம் - உபநிஷத மந்திரங்கள்.

அதன் இயல்புக்கேற்ப நேரடி ஞானம் திரைமறைவில் வேலை செய்கிறது. விழிப்பான இடங்களில், வீரியமற்ற பகுதிகளிலும் மனிதனில் நேரடி ஞானம் செயல்படும். விழிப்பில் நம் மனம் குறுகிச் செயல்படுகிறது. நேரடி ஞானம் தருவதை ஏற்கும் நிலையில் நம் கருவிகளில்லை. இயல்பு சத்தியத்தை நாடுகிறது. தெளிவான, முறையான உண்மையை அது நாடுகிறது. நேரடி ஞானத்தால் நம் இயல்பு நாடுவதை அது நாடும் வழியில் தரமுடிவதில்லை. நேரடி ஞானம் ஞானத்தை நேரடியாகத் தர முயல்கிறது. நாளாவட்டத்தில் அது தன்னைப் பூர்த்தி செய்யும். எந்த ஞானத்தை நாம் மேல்மனத்தால் மட்டும் பெறமுடியும்? நேரடி ஞானத்தை நாம் பெற வேண்டுமானால் அது மேல்மனத்தில் எழவேண்டும். நேரடி ஞானம் நம்முள் முக்கியப் பகுதிகளை ஆட்கொள்ள வேண்டும். அதுபோல் நேரடி ஞானம் கிடைக்கும்வரை, அதன் இலட்சியம் பூர்த்தியாகாது. மேல்மனம் நேரடி ஞானத்தைப் பெறுவதில்லை, பகுத்தறிவால் ஆளப்படுகிறது. நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் மேல்மனத்திற்குரியவை. வேதாந்த காலத்தின் ஆரம்பம் நேரடி ஞானத்திற்குரியது. அது மாறி சிந்தனையும், பகுத்தறிவும் ஆட்சிக்கு வந்தன. ஆன்மவிழிப்பு மாறி தத்துவம் ஆட்சியை ஏற்றது. தத்துவம் பிறகு ஆட்சி பீடத்தை விஞ்ஞானத்திற்கு மாற்றியது. நேரடி ஞானம் பரமாத்மாவின் தூதுவன். அதுவே நம் உச்சகட்டத் திறமை. பகுத்தறிவு அதன் இடத்தை ஏற்றது. பகுத்தறிவு நம் ஜீவனில் உச்சியிலில்லை. நடுவில் உள்ளது. பகுத்தறிவு மந்திரிபோன்றது. பகுத்தறிவு வழிவிட்டு உணர்வு ஆட்சிக்கு வந்ததா?

கலப்படமான பகுத்தறிவு வெளிவந்தது. மலை அடிவாரத்தில், சமவெளியில் நடமாடுவது பகுத்தறிவு. நம் அனுபவத்தைக் கடந்து செல்லும் திறனற்றது. ஜடமான மனமும், புலன்களும் உணர்பவை அவை. அவற்றிற்கு உறுதுணை தேடுவது மனித இயல்பு. சிருஷ்டியின் பாங்கு இது. ஆனால் இது மேலிருந்து கீழே வந்து, கீழிருந்து மேலே போகும் வட்டமாகும். ஒவ்வொரு முறையும் கீழுள்ளது, மேலிருந்து அதிகபட்சம் பெறுகிறது. மேலேயுள்ளது கீழே இருப்பதற்குத் தன்னை அர்ப்பணிக்கிறது. அதனால் தாழ்ந்த திறமைகள் உயர்ந்து வருகின்றன. இது அவசியம். ஒரு தொடர் சங்கிலி, தனித்தனியே முழுப் பலன் பெறும் முறை. இது இல்லாவிட்டால், ஒரு பகுதி முழுமையை ஆட்டி வைக்கும். நாம் அனாவசியமாக அவதிப்பட வேண்டும். நம் வாழ்வில் நாம் தனித்து நிற்போம். அதனால் நம் முன்னேற்றம் குறையும். இதன் மூலம் குறையை நிறைவு செய்கிறோம். நம் கரணங்களின் ஞானம் முழுமையான சுமுகம் பெறுகிறது.

இத்தொடரை நாம் உபநிஷதத்தில் காண்கிறோம். பிற்காலத்தில் இந்தியத் தத்துவம் இதைப் போன்றுமிருந்தது. வேத, வேதாந்த ரிஷிகள் நேரடி ஞானத்தையும், ஆன்மிக அனுபவத்தையும் நம்பியிருந்தனர். உபநிஷதக் காலத்தில் பண்டிதர்கள் சதஸ் நடத்தியதாகக் கூறுகிறார்கள். அது தவறு. விவாதம் என்றால் அது தர்க்கமாகவோ, விவாதமாகவோ, இருந்ததில்லை. ஆன்மிக அனுபவத்தையும், நேரடி ஞானத்தையும் ஒத்திட்டுப்பார்ப்பதே அவர்கள் விவாதம். சிறிய பிரகாசம், பெரிய ஜோதியை ஏற்கும். குறுகியது, குறையுடையது, தேவையில்லாதது, நிமிர்ந்து பரந்ததையும், பவித்திரமானதையும், அத்தியாவசியமானதையும் கண்டு தலை குனிந்து வணங்கி ஏற்கிறது. என்ன நினைக்கிறாய் எனக் கேட்பதில்லை. என்ன காட்சியைக் கண்டாய் என்றே கேட்கிறார்கள். தர்க்கம் என்றுமே உபநிஷதத்தில் தலைதூக்கி ஆட்சி செய்ததில்லை. ஞானம் பெரிய ஞானத்தை ஏற்கிறது. தர்க்கம் தலை வணங்குகிறது.

மனிதனுடைய பகுத்தறிவு தனக்கேயுரிய திருப்தியை நாடுகிறது. பகுத்தறிவும், சிந்தனையும் ஆட்சிக்கு வந்தன. இந்தியத் தத்துவ மேதைகள் பரம்பரைக்கு முதலிடம் கொடுத்தனர். தாங்கள் நாடும் சத்தியத்தை இருவழிகளாகப் பின்தொடர்ந்தனர். சுருதி முக்கியம். இது ஆரம்பக் காலத்து ஞானம். அதற்கு உள்ளுணர்வின் மலர்ச்சி எனப் பெயரிட்டனர். பகுத்தறிவைவிட அது உயர்ந்தது. இருந்தாலும் பகுத்தறிவிலிருந்து ஆரம்பித்து சோதனையை நடத்தினர். முடிவான தீர்ப்பை உறுதி செய்பவைகளை மட்டும் ஏற்றனர். தத்துவத்தை குறையான குற்றமாகக் கருதினர். தத்துவம் சொற்களின் மேகமண்டலச் சஞ்சாரம் செய்கிறது. சொல் கருத்தன்று, சப்தத்தின் பிரதிபலிப்பு.

பண்டிதர்கட்குச் சொற்கள் கூறுவது வேதவாக்கு. சொற்களை நாம் ஆராய வேண்டும். அவற்றிற்குப் பொருளுண்டு. பொருளைக் கொண்டு சொல்லையறிய முயலவேண்டும். பண்டிதர்கட்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. இரண்டில் எது உயர்ந்ததோ அதை ஒட்டிப் போகப் பிரியப்பட்டனர். பகுத்தறிவும், ஞானமும் ஆமோதிக்க வேண்டும் என விரும்பினர். இங்கு பகுத்தறிவு பணிய வேண்டும். அது இயல்பாக தலை நிமிர்ந்திருக்கும். நாளாவட்டத்தில் பகுத்தறிவின் உயர்வு வென்றது. அதனால் போட்டி எழுந்தது. அனைவரும் வேதத்தைப் பின்பற்றுவதாகக் கூறினர். வேதமும், அதன் சூக்தங்களும் போட்டிக்குக் கருவியாயின. ஞானம் முழுமையாகக் காண்கிறது. விவரங்களை முழுமையின் பகுதியாகக் காண்கிறது. முழுமை, ஒற்றுமை, ஞானத்தின் இணைப்பால் ஏற்படும் ஐக்கியம் ஆகியவை ஞானத்தின் போக்கு. பகுத்தறிவு ஆராய்கிறது, பிரித்து, சேர்த்து, பகுதிகளை இணைத்து முழுமையாகக் காண்கிறது. அப்படி ஏற்பட்ட முழுமையினுள் எதிரானவை, முரணானவை, அறிவுக்குப் பொருந்தாதவையுள்ளன. ஆரம்பக் காலத்து ஞானத்தில் ஐக்கிய மிருந்தது. அறிவு அதைப் பல பகுதிகளாக உடைத்தது. தர்க்கவாதிகள் ஆயிரம் வழிகளைக் கண்டனர். அவர்கட்கு ஒத்துவராததை மறைத்துவிட்டனர், தர்க்கத்தால் அழித்தனர். தத்துவம் தன் ஆட்சியை நடத்தியது.

ஆதிநாள் வேதாந்தக் கருத்துகளில் முக்கியமானவை உயிர் பிழைத்தன. ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு பகுதியை ஏற்றனர். இவற்றை யெல்லாம் சேர்க்கும் முயற்சிகள் அவ்வப்பொழுது நடந்தன. பரந்த எண்ணமும், இரண்டறக்கலக்கும் ஐக்கியமும் ஞானத்திற்குரியவை. அதை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க முயன்றனர். புருஷன், ஆத்மன், சத், பிரம்மம், சத் புருஷன் ஆகியவை அடிப்படையில் பிற்காலத்திலும் ஏற்கப்பட்டன. எல்லாக் கட்சிகட்கும் அவை பொதுவாக அமைந்தன. இவ்வான்மீகச் சத்தியங்களை, மனம் ஏற்கும் கருத்தாகவும், பக்தி ஏற்கும் உணர்ச்சியாகவும் மாற்றினர். சொற்களைக் கடந்த பிரம்மத்தின் முத்திரை எல்லாக் கருத்துகளிலும், எல்லாச் சொற்களிலும் தொனித்தன. இவற்றிலிருந்து எழுந்த பிரச்சினைகளே இந்தியத் தத்துவத்தை ஆட்கொண்டன. ஒன்று பிரகிருதி. அடுத்தது அகந்தை. பிரகிருதி ஆத்மாவின் பிரபஞ்சம். ஆத்மாவுக்கும், பிரகிருதிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கேள்வி. பிரகிருதியால் அகந்தை எழுந்தது என்றனர். அகந்தையே பிரகிருதியை உற்பத்தி செய்தது என்றனர் பிறர். எப்படியானாலும் அகந்தை ஆத்மாவை அடைவது எங்ஙனம் என்பது கேள்வி. ஆத்மா என்பது புருஷன், தெய்வம், சத்தியம் என நாம் பல வகைகளாகப் பேசுவதாகும்.

**********



book | by Dr. Radut