Skip to Content

பகுதி 3

13. தெய்வீக மாயை

சத் செயல்பட்டு சிருஷ்டிக்கிறது. சத்புருஷன் தன் ஆனந்தத்திற்காக செயல்படுவது சிருஷ்டி. அதுவே நமது சத்தியம். அது நம் குணங்கட்கும், சுபாவத்திற்குமான ஆத்மா. நம் வாழ்வுக்குக் காரணமும், காரியமும், இலட்சியமும் அதுவே. அது நம் பிரகிருதி, இயற்கை. இவ்வழி அது சிருஷ்டிக்கின்றது. கவி, கலைஞன், பாடகன் சிருஷ்டிக்கின்றனர். அவர்களுள் வித்தாக உள்ளதை அவர்கள் விளக்கமாக வெளியிடுகிறார்கள். சிருஷ்டியைக்கடந்த ஆத்மாவில் அது உறைகிறது. அது சிருஷ்டியில் ரூபமாக வெளிப்படுகிறது. அறிஞன், அரசியல்வாதி, இன்ஜீனியர் ஆகியவரும் அப்படியே சிருஷ்டிக்கின்றனர். வித்து அவர்களுள் மறைந்துள்ளது. அதை ஓர் உருவமாக அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். அப்படி வெளிப்படுவது அவர்களே. ரூபம் பெற்றாலும், அது அவர்களேயாகும். காலத்தைக் கடந்தவன் உலகை அப்படியே சிருஷ்டித்தான். சிருஷ்டிஎன்பது வெளிப்பாடு. அது தன்னை வெளிப்படுத்துவதன்றி வேறொன்றுமில்லை. விதையில் பரம்பொருள் உள்ளது. அது விதையிலிருந்து வெளிவருகிறது. அது ஜீவனில் முன்னதே உள்ளது. நடக்கப்போவது விதிக்கப்பட்டது. வெளிப்பாடு அதன் விதி. அது வெளிப்பாட்டின் ஆனந்தத்துள் முன்கூட்டியே அமைக்கப்- பட்டுள்ளது. வெளிப்படுபவன் ஜீவன், ஆதியில் ஏற்பட்ட அமைப்பு. அது தன் சக்தியுள் அதை வைத்துள்ளது. அது இரகஸ்யமான சக்தி. அச்சக்தியை அது சுமக்கிறது. அது தன்னையறியும். அதன் வேகம் கட்டுப்படாதது. அவ்வேகம் அதை நிரப்புகிறது. ரூபமாக வெளிப்படுவதே அதன் நோக்கம். சிருஷ்டிப்பது ஜீவாத்மா. அவன் தன்னுள்ளிருந்து எழுகிறான். ஆனால், ஒரு மாறுபாடு. சக்தி வேறு, தான் வேறுஎன அவன் அறிவான். சக்தி அவனுள் வேலைசெய்கிறது. அவன் என்ற ஜடப்பொருளில் அது வேலை செய்கிறது. உண்மை வேறு. சக்தியே அவன். அவனுடைய ஜீவியம் தனித்தன்மை பெறுகிறது. அது அவனுடைய கருவி. அது அவனே. அவன் தான்எனும் பொருளைப் பயன்படுத்துகிறான். அதுவும் அவனே. அதன் விளைவாக ஒரு ரூபம் ஏற்படுகிறது. அதுவும் அவனே. அதை வேறுவகையாகக் கூறலாம். சத் என்பது ஒன்றே. சக்திஎன்பதும் ஒன்றே. ஆனந்தம்என்பதும் ஒன்றே. தன்னுள் பல இடங்களில் அது நிஷ்டையிலிருக்கிறது. ஒவ்வொன்றையும் பார்த்து அது, "இதுவும் நானே''என்கிறது. அதன் இலக்கு சுயரூபம். அது லீலையின் மாற்று உருவம். அது சுயசக்தியின் லீலை. இங்ஙனம் அது வேலை செய்கிறது.

அது எதை உற்பத்தி செய்கிறதோ, அதுவே அது. அது அதைத்தவிர வேறெதுவுமாக இருக்கமுடியாது. அதற்கு ஜீவியத்தின் சக்தியுண்டு. அது தனக்குரிய சத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அது ஒரு லீலையைத் தயார் செய்கிறது. அந்த லீலை ஒரு அலையோசை. அதன் ஆழத்துள் ஜீவனின் ஆனந்தமுள்ளது. அது ஜீவியம். அதுவே சத். அங்கிருந்து எண்ணங்கள் உற்பத்தியாகின்றன. அவை நம் போக்கை நிர்ணயிக்கின்றன. எல்லா வழிகளையும் அவை பயன்படுத்துகின்றன. சிறப்பான ஆனந்தமே இலட்சியம். அது ஆனந்தத்தின் பல ரூபங்களை நாடுகின்றது. அது ஜீவியத்தின் ஆனந்தம். அது அதன் அலையோசையின் ஆனந்த அலைகள் ஆகும். சக்தியின் லீலையின் ஆனந்தமது. இந்த ஆனந்த ரூபங்களை அது அதிவேகமாகச் சேர்த்துக் கொள்கிறது. ஜீவனாக அது ஆனந்தத்தை நாடுகிறது. வெளிப்பாடே ஆனந்தம். அதில் ஜீவியம் உண்டு. அதில் சக்தி உண்டு. அவற்றை ஆனந்தமாகச் சித்திக்க அது முயல்கிறது. ஒரு ரூபம் உண்டு. அந்த ரூபத்தை எட்ட முயல்கிறது. அந்த ரூபத்தில் அது தன் சுய ஜீவனை அதிகரிக்க முயல்கிறது. வெளிப்பாடாகவும், சிருஷ்டியாகவும் அதைச் சாதிக்க முயல்கிறது. ஆனந்தத்தை அதிகப்படுத்தி சாதிப்பதே அதன் முயற்சி. உலகில் பல விஷயங்கள் ஏற்படுகின்றன. அவை ஜீவனாக முயல்கின்றன. அதைத்தவிர வேறெதையும் அவை நாடவில்லை. இலட்சியம் முழுமை. அது தனிமனிதனுக்குரிய இலட்சியம். மனிதன் முழுமையின் பகுதி. இலக்கு அவர்களுடையது. அது சத்புருஷனுடைய இலட்சியம். முழுமை என்பது

சத்புருஷனுடைய முழுமை. அதன் ஜீவியம், சக்தியுடைய இலட்சியம் அது. அதுவே ஆனந்தத்தின் இலட்சியம். தனிமனிதன் தன் வரம்புக்குள் தீவிரமாகச் செயல்படுகிறான். அவன் ரூபம் பெறுவதற்கு அது தடை. அந்த இலட்சியம் தனிமனிதனுக்குரியது அன்று. நாம் தேடுவது பூரணமுழுமை - பிரம்மத்திற்குரிய முழுமை. மனிதன் பகுதியான கண்டம். பகுதியின் சொந்த அமைப்புக்கு அது அன்னியமானது. ஆனால், சிறியதிலிருந்து பெரியது எழலாம். அதுவே மனிதனுக்கு முடிவான இலக்கு. தன் சத்தியத்தை அவன் தானே கண்டுபிடிக்கவேண்டும். சுயஞானத்தாலும், சுயசித்தியாலும் அடையப் படவேண்டியது அது. அது அனந்தமான ஜீவனின் சத்தியம். அதன் ஜீவியம் அனந்தமானது. அது ஆனந்தத்தின் முடிவற்ற நிலை. மனிதன் தன்னை மீண்டும் பிரம்மமாகக் காண்பது அது. அது சத்தியம். சிறியது ஒரு முகமூடி. பல்வேறு தோற்றம் எழ அது ஒரு கருவி.

உலக லீலையை சச்சிதானந்தம் சாதித்தது. காலமும், இடமும் சத்துடைய வஸ்திரங்கள். அந்த லீலையின் சுபாவம் நாமறிவது. சிருஷ்டியின் ஆரம்பத்தை நாம் கருதவேண்டும். அடுத்தது கிரஹித்து மறைவது. சத் புருஷன் ஜடப்பொருளாவான். இருண்ட பொருளை துச்சமாகும்வரைத் துண்டாடலாம். சிறியதின் பல்வேறு தோற்றம் இம்மூன்றையும் தேடுகிறது. அடுத்தது வெளிவருவது. ஜீவனுள்ள சிந்திக்கும் ஜீவன் வெளிவருகிறது. ரூபம் பெற்ற ஜீவனிலிருந்து அது வரும். அதனுள் அது சிறைப்பட்டுள்ளது. அது தானே சிறைப்பட்டது. முடிவு விடுதலை. ரூபம் பெற்ற சிந்திக்கும் ஜீவனிலிருந்து அது வெளிவருகிறது. இவ்விதமாக அது தன்னைத் தானே அறிந்து சித்திக்கிறது. தன் ஐக்கியத்தையும், அனந்தத்தையும் சித்திக்கிறது. உலகில் அவை லீலையாக வெளிப்படுகின்றன. எனவே, தன் இரகஸ்ய ஜீவனை அது அடைகிறது. தன் சத்தை மீண்டும் பெறுகிறது. அத்துடன் ஜீவியம், ஆனந்தத்தையும் அடைகிறது. இதுவே உண்மையான காலங்கடந்த இரகஸ்யம். இது மூவகையான சலனம். உலகம்என்ற புதிருக்கு இது விடை.

பரிணாமம்என்பது புதியது. அது தோற்றத்தை விளக்குவது. வேதாந்தம் பரிணாமத்தின் எல்லா உண்மைகளையும் கூறுகிறது. அவற்றை பிரகாசிக்கச்

செய்து, விளக்குகின்றது. வேதாந்தம் புராதனம். அது காலங்கடந்த சத்தியத்தைக் கூறுகிறது. இன்று விஞ்ஞானம் கூறுவதும் வேதாந்தம் கூறுவதும் ஒன்றே. பிரபஞ்சம் காலத்துள் படிப்படியாக வளர்வதாக அது கூறுகிறது. விஞ்ஞானி ஜடத்தையும், சக்தியையும் ஆராய்கிறான். அவர்கள் பார்வை இருண்டது. வேதாந்தம் ஒளியைத் தாங்கிவருகிறது. அதை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளோம். விஞ்ஞானிக்கு வேதாந்தம் பயன்படும். மனம் இதன்மூலம் தன்னையறிந்து சுயம்பிரகாசமடையும். பழைய ஆசியர் கருத்தும், புதிய மேல்நாட்டார் எண்ணமும் இங்கு இணையலாம். உலகம் ஏற்கனவே அப்பாதையில் செல்கிறது.

அனைத்தும் சச்சிதானந்தம். நாம் அதைக் கண்டுகொண்டோம். இருப்பினும், அனைத்தையும் நம்மால் விளக்கமுடியவில்லை. பிரபஞ்சத்தின் சத்தியத்தை நாமறிவோம். ஆனால், நாம் உலகைத் தோற்றமாகக் காண்கிறோம். எப்படி அந்த சத்தியம் இந்தத் தோற்றமாயிற்றுஎன நாம் அறியோம். அந்த முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிருக்கு நம்மிடம் விடை உள்ளது. சிருஷ்டி என்ற பூட்டுக்கு நம் விடை சாவி. நாம் இன்னும் சிருஷ்டியை அறியவில்லை. அது சத்து-சித்து-ஆனந்தம். அது நேரடியாகச் செயல்படுவதில்லை. பொறுப்பற்ற மந்திரவாதியுமன்று அது. ஒரு சொல்லால் அது உலகைச் சிருஷ்டித்தது. ஒரு முறை தெரிகிறது. ஒரு சட்டம் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது.

சட்டம் உண்டுஎன்பது சரி. நாம் அதை ஆராயும்பொழுது ஒரு சமநிலையைக் காண்கிறோம். மோதும் சக்திகள் லீலையில் நிதானம் பெறுகின்றன. லீலைக்கு ஒரு வழி ஏற்படுத்த ஓர் தீர்மானமிருப்பதாகத் தெரிகிறது. தற்செயலாக அது ஏற்பட்டுள்ளது. கடந்தகால நிகழ்ச்சிகளின் விளைவாக அது உண்டு. இதுவே நாம் காணும் உண்மை. ஆனால், இது முக்கியமில்லை. நாம் சக்தியைக்கடந்து போனால், இது முடிவன்று எனத் தெரியும். சக்தியைப்பொருத்தவரை இதுவே முடிவு. சக்திஎன்பது சத்துடைய சுயவெளிப்பாடு. நாம் அதைக் காணலாம். சத்திற்கு சுயமான சத்தியம் உண்டு. அது ஆட்சிசெய்கிறது. இனி நடக்கப்போவதை அது நிர்ணயிக்கிறது. அதன் முடிவையும் அதுவே நிர்ணயிக்கிறது. இவையிரண்டிற்கும் ஒரு தொடர்புண்டு. ஜீவியம் சத்தினுடைய சுபாவம். சத் ஜீவியத்தின் ஆதி. அது சக்தியின் சாரம். சத்தியம் சத்துடையதாக இருக்கும். அது சத் தன்னைப் புரிந்துகொள்வதாக இருக்கும். அது ஜீவியத்தினுடைய சுயஞானமாகும். அது ஜீவியத்தினுள் உள்ளது. இம்முறையை சக்தி மேற்கொண்டுள்ளது. இது ஞானத்தின் சக்தியாகும். தன் சக்திக்கு அது வழிகாட்டியாக இருக்க உதவுகிறது. இதுவே நியாயமானது. இவை அனைத்தும் ஆதியில் பிரம்மம் தன்னை அறிவதால் ஏற்படுவது. எனவே, தன்னைத் தானே நிர்ணயிக்கும் சக்தியாகும் அது. இது பிரபஞ்ச ஜீவியத்தில் உள்ளது. அனந்தமான சத் தன்னையறியும். இது அதன் திறமை. இதனுள் ஒரு சத்தியம் உண்டு. இதற்கு சிருஷ்டிக்கும் திறன் உண்டு. இது சத்தியத்தின் பாதையில் அமையும். அப்படியே அதை வழிநடத்திச்செல்லும். அது பிரபஞ்ச சிருஷ்டியை ஆட்சி செய்யும்.

நாம் அனந்தஜீவியத்தை அறிவோம். அதன் பலனையும் அறிவோம். ஜீவியத்தின் செயல்கள் அப்பலன். இவற்றிடையேயுள்ளதைக் காண வேண்டும்*. முன்னோர் எழுதியவை "ஆண்டவன், ஜோதி பிறக்கட்டும் என்றார், ஜோதி பிறந்தது''. ஜீவியத்திற்கு சக்தியுள்ளதாக நாம் கொள்கிறோம். அத்துடன் ஜோதியற்றதிலிருந்து அதனால் ஜோதியை உற்பத்திசெய்ய முடியும்எனக்கொள்கிறோம். மேலும் ஒரு விஷயம். ஜோதி எழுந்ததுஎன நாம் கூறும்பொழுது ஒரு சக்தி நிர்ணயிக்கிறதுஎன நாம் கொள்கிறோம். அது தீவிரமான சக்தி. அது ஆரம்பத்திலுள்ள சக்தி போன்றது. அச்சக்திக்குப் பார்வையுண்டு. அது தோற்றத்தை வெளிப்படுத்தும். அது ஜோதியை வெளிக் கொணரும். தன் ஆரம்ப எண்ணப்படி அது செயல்படும். ஜோதியை மற்றவை ஆட்கொள்வதை அது தடுக்கும். ஒரு ரூபத்தை அழிக்க அளவற்ற பல சந்தர்ப்பங்களுண்டு. அனந்தஜீவியம் செயல்படுகிறது. அது அனந்தமாகச் செயல்கள் பல. அதன் செயல்கள் அனந்தம். அது அனந்தமான பலன்களை உற்பத்தி செய்கிறது. நமக்குக் குறிப்பிட்டது தேவை. அல்லது ஒரு முறையான சத்தியம் தேவை. ஒரு குறிப்பிட்ட உலகை நாம் சிருஷ்டிக்க விரும்புகிறோம். அது குறிப்பிட்டபடிச் செயல்படவேண்டும். பொறுக்கி எடுக்கும் திறன் தேவை. அது ஞானத்தின் திறமை. ஜடமான தோற்றத்தை உற்பத்திசெய்ய அது தேவை. அது அனந்தசத்தியத்திலிருந்து எழவேண்டும்.

இதை வேதரிஷிகள் அறிவர். அதை அவர்கள் மாயைஎன்றனர். அவர்கள் அனந்தஜீவியத்தை மாயையாகக் கண்டனர். மாயை சுயமானது, புரிந்துகொள்வது, அளப்பது, ரூபங்களின் சக்தியானது. ரூபம்எனில் வரம்பு. அனந்தஜீவியம் அளவற்ற சத்தியம். அது பரந்து விரிவது. மாயை அதனின்று உருவகப்படுத்துகிறது. மாயை அந்த உருவத்திற்குப் பெயரளிக்கும். சத்தியம் என்பது உண்மை. அது சலனமற்றது. அதன் சத்தியம் சாரமானது. மாயை அதனினின்று சிருஷ்டிக்கிறது. அதனினின்று சலனஜீவனை எழுப்புகிறது. அதன் சத்தியம் முறையானது. அதைத் தத்துவமாகக் கூறலாம். பரம்- பொருளில் அனைத்தும் அனைத்துள்ளிலும் உள்ளன. தடையில்லை. தடை பிரிக்கிறது. சிருஷ்டி லீலை. சத் சத்துடனும், சித் சித்தோடும், ஆனந்தம் ஆனந்தத்துடனும் விளையாடுகின்றன. இது தோற்றத்தின் வாழ்வு. மாயை இந்த லீலையை உற்பத்திசெய்கிறது. அனைத்தும் ஒன்றிருப்பது லீலை. ஒன்று அனைத்துள்ளும் உள்ளது. முந்தையது மறைந்துள்ளது. மனம் மறைக்கிறது. நாம் அதை மாயை என்கிறோம். மாயை திரையை ஏற்படுத்து- கிறது. நாம் அனைத்திலும் உள்ளதை நம்பச்செய்கிறது. அனைத்தும் நம்முள் இருப்பதை அது மறைக்கிறது. அவன் அனைத்திலும் உள்ளான். மாயை நம்மை தனித்த ஜீவன்என நம்பவைக்கிறது. உண்மை என்னஎன்றால் அவன் எல்லா ஜீவன்களுடன் பிரிக்கமுடியாதபடி இரண்டறக் கலந்துள்ளான்.

இது தவறு. சத்தியஜீவிய லீலை உண்மை. இது மாயையின் உண்மை. நாம் இந்தத் தவற்றிலிருந்து விடுபட்டு சத்தியஜீவிய உண்மையை நாட வேண்டும். அங்கு ஒன்று', பல' என்பவை ஒரே சமயத்தில் செயல்படு- கின்றன. அவை ஐக்கியமானவை, பிரிக்கமுடியாதவை. அது ஒரே உண்மை.பலவற்றை அது சின்னமாகச் சுட்டிக்காட்டும். இவை இரண்டும் சேர்ந்த ஒன்று. மனத்தின் மாயை மாயையின் கீழ்ப்பகுதி. அது ஏமாற்றவல்லது. அது நம்முன் உள்ளது. நாம் அதை ஏற்கவேண்டும். பின்னர், அதைக் கடக்க வேண்டும். அது ஆண்டவனின் லீலை. ஆண்டவன் இருளுடனும், பிரிவினையுடனும் லீலை புரிகிறான். ஆசை, அளவுடன் அவன் லீலை எழுகிறது. பிணக்கும், துன்பமும் அவன் லீலைக்குரிய கருவிகள். சக்தி அவனிலிருந்து வெளிப்பட்டது. அச்சக்திக்கு அவன் தன்னை உட்படுத்திக்கொள்கிறான். சக்தி இருண்டது. இருள் ஆண்டவனை இருளால் மறைக்கிறது. அதை அவன் ஏற்கிறான். மனத்தின் மாயை மாயையின் உயர்ந்த பகுதியை மறைக்கிறது. ஏற்றுக் கடப்பது சரி. சக்தி அவனிடமிருந்து முதல் வெளிப்பட்டது. சக்தி ஒளி பெற்றால் ஆண்டவன் திருவுள்ளம் பூர்த்தி ஆகும். அக்காரணத்திற்காகவே சக்தி அவனிலிருந்து முதல் வெளிப்பட்டது. சக்தியினின்று அவன் வெளிப்படுகிறான். வெளிப்படுவது லீலை. சத் அனந்தமானது. ஞானம் மிளிரக்கூடியது. சக்திக்குரிய பெருமைகளுண்டு. அன்புக்குரிய பூரிப்புகள் உண்டு. அவற்றிற்கு அளவில்லை. இந்த லீலைக்காக இறைவன் உலகைப் படைத்தான்.

மாயையின் மேற்பகுதிக்கும் கீழ்ப்பகுதிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது ஓர் எண்ணம். அத்துடன் அது ஒரு தொடர்பு. அது பிரபஞ்ச உண்மை. தத்துவஞானிகள் அதை நழுவவிட்டார்கள். நம்பிக்கையற்றவரும் அதை அறியார். அது மாயவாதம். அவர்களுக்கு அது புலப்படுவதில்லை, அல்லது அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. தெய்வீகமனத்தை அவர்கள் மனம்எனக்கொள்கின்றனர். உலகை மனத்தின் மாயை சிருஷ்டித்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். உலகம் அப்படி சிருஷ்டிக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? அது ஒரு புதிராக இருக்கும். நம்மால் அதை விவரிக்கமுடியாது. அது ஒரு சிம்மசொப்பனமாக இருக்கும். அது நீரில் அலைகளால் சிதறப்பட்டதுபோருக்கும். அது தன்னையறியும் சத்தாக இருக்கும். அது உண்மையாக இருக்காது. அது மாயமாகவுமிருக்காது. அது குறிப்பிட்ட உருவம் பெற்றதாக இருக்கும். சத்தியஜீவியம் மேலேயுள்ளது. அது ஞானம், சிருஷ்டிக்கும் ஆட்சி செய்யும் ஞானம். கீழே அஞ்ஞானத்தில் சிறைப்பட்ட ஆத்மாவுள்ளது. மனம் இடைப்பட்டது. அது இடையிலிருந்து செயல்படுகிறது. சச்சிதானந்தம் கீழேயும் செயல்படும். சக்தியை அது கிரகித்துக்கொள்கிறது. தன்னை மறந்த நிலையில் அது உள்ளது. இச்செயல்கட்கு உருவம் உண்டு. சக்தி ரூபத்தில் மறைகிறது. ரூபம் அதன் செயல்கள். சக்தி மீண்டும் சச்சிதானந்தத்தை நாடுகிறது. இவ்விதம் அது இருளிலிருந்து வெளி வருகிறது. மனம் பல கருவிகளில் ஒன்று. சிருஷ்டிக்கும் பரிணாமத்திற்கும் அது கருவி. இறைவன் உலகை நாடிவர அது கருவியாகும். மனம் சிருஷ்டி கர்த்தா அன்று. மனம் இரகஸ்யமானது. பரிணாமத்தில் மனம் மேலே போக உதவும் கருவி. பிரபஞ்சத்திற்கு ஓர் ஆத்மாவுண்டு. அதுவே ஆரம்பம். அதுவே முடிவானது. மனம் ஆதியுமில்லை, உற்பத்தி ஸ்தானமுமில்லை.

சில தத்துவங்கள் மனம் உலகை உற்பத்தி செய்ததாகக் கூறுகின்றன. மனம் ஆதிசக்தி என்கின்றனர். தனக்கும், ரூபத்திற்கும் இடைப்பட்ட கருவியே மனம். அவை இரு வகையானவை. ஒன்று யதார்த்தம், அடுத்தது இலட்சியம். யதார்த்தம் பிரபஞ்சத்தை மனம், எண்ணம், கருத்து, ஆகியவை உற்பத்தி செய்ததாக நினைக்கிறது. இது நாமே வைத்துக்கொள்வது. சத்தியத்துடன் முக்கியமான தொடர்பு இருக்க வேண்டும்என்ற அவசியம் இல்லை. சத்தியம் என்பது சத்திலிருந்து எழுவது. அது இருக்கலாம். அப்படி இருந்தால் அது பிரம்மம். அதற்கு உறவில்லை. அதை உலகுடன் சேர்க்கமுடியாது. உலகம் என்பது தொடர்பாலானது. இலட்சியவாதம் அதன் பின்னே சத்தியத்தைக் காண்கிறது. முன்னால் உள்ளது தோற்றம். தோற்றம் அழியக்கூடிய உருவம். அது கருத்திலிருந்து எழுவது. பின்னாலுள்ள சத்தியத்திற்கும், முன்னாலுள்ள தோற்றத்திற்கும் இடையே ஒரு தொடர்பைக் காண்கிறது. அது எதிரான உறவு. பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவது மூன்றாம் நிலை. அது இலட்சிய- வாதத்தைக் கடந்தது. சிருஷ்டிக்கும் திறனுள்ள எண்ணத்தை அது (Real-Idea) முழு எண்ணம்எனக் கூறுகிறது. அப்படியெனில் அதற்கு சக்தியுண்டு. அது சித்-சக்தியின் சக்தி. அது உண்மையான ஜீவனைக் குறிக்கிறது. அது உண்மையான ஜீவனில் பிறந்தது. அது அந்த ஜீவனின் சுபாவத்தைப் பெற்றது. அது சூன்யத்தில் பிறந்ததில்லை. அது இல்லாததைப் புனைவதில்லை. அது ஜீவனுள்ள சத்தியம். அது ரூபமாக வெளிவருகிறது.

ரூபங்கள் மாறும். அந்த ரூபங்கள் அதன் அடிப்படையினின்று எழுந்தவை. அந்த அடிப்படை அழியாதது. மாறவும் அதனால் முடியாது. உலகம் ஒரு கதையில்லை. அது மனத்தின் கற்பனையில்லை. பிரபஞ்சமனமும் அதைக் கற்பிக்கவில்லை. அது ஜீவனோடு பிறந்தது. மனத்தைக்கடந்தது அப்படிப் பிறந்துள்ளது. அது ரூபங்களாகப் பிறந்துள்ளது. அவை அவற்றின் சொந்த ரூபங்கள். தன்னையறியும் ஜீவனுக்கு சத்தியம் உண்டு. அது ரூபங்களுக்கு ஆதரவு. அச்சத்தியம் ரூபமாக வெளிப்படுகிறது. சத்தியத்திற்குரிய ஞானம் உண்டு. அது வெளிப்பட்டால் சத்தியஜீவியமாகும். அது முழு எண்ணங்களை ஏற்படுத்துகிறது. அதைச் சுமுகமாகச் செய்கிறது. அவை வேறு அச்சில் வார்க்கப்பட்டவை. அவை மனம், உயிர், உடலைப் பற்றியவை. இந்த ரூபங்களுடைய ஜீவியம் தாழ்ந்தது. அவை பகுதியை வெளிப்படுத்துபவை. மனத்தைக்கடந்து உயர்வாக அவை வெளிப்படும். அது சத்தியஜீவியம் வெளிப்படுவதாகும். இந்த ரூபங்கள் பல வகையாக வளர்கின்றன. அவை இலட்சியத்தையடைய முயல்கின்றன. அந்த இலட்சியம் கடந்தது, மனத்தைக் கடந்தது. அவ்விலட்சியம் தன்னை சித்திக்க முயல்கிறது. தன் நிலையில் அது பாடுபடுகிறது.

பரிணாமக் கண்ணோட்டம் ஒன்றுண்டு. அப்பார்வைக்கு உலகிலுள்ள அனைத்தின் பின் சத்தியம் உண்டுஎனலாம். இலட்சியம் சத்தியம். அது சுமுகமான உண்மை. அது இடைப்பட்ட நிலை. அதுவே இலட்சியம். இலட்சியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. அது சத்புருஷனுடைய மாறிய நிலை. இது தன் ஆதியை நோக்கிப் போகும். அந்த ஆதி முக்கியமான சத்தியம். அது அதன் ஆதியான முக்கியத்துவத்தைப் பெற முயல்கிறது. அதை முழுவதும் பெற முனைகிறது. அதைத் தீவிரமாகச் செய்யலாம். அல்லது, ஓர் இலட்சியத்தின்மூலம் செய்யலாம். அது இலட்சியத்தினின்று வெளிப்படுகிறது. மனம் மனித வாழ்வை குறையுள்ளதாகக் காண்கிறது. ஏன் அது குறையுள்ளதுஎன நாம் இப்பொழுது அறிவோம். மனத்திற்கு இயல்பான ஆர்வமுண்டு. இது சிறப்பை நோக்கிச் செல்கிறது. அது எப்பொழுதும் தன்னைக்கடந்தது. இலட்சியத்தில் சுமுகம் உண்டு. அது மறைந்துள்ளது. சிறப்பு அதை நாடுகிறது. இலட்சியத்தைக்கடந்து ஒரு பேர்எழுச்சியுண்டு.

அது ஆத்மாவினுடையது. அது பரமாத்மாவை நோக்கிச் செல்கிறது. நம் ஜீவியத்திற்குப் பல விவரங்கள் உள. அதற்கோர் அமைப்புண்டு. அதற்கு அவசியம் உண்டு. எனவே மூன்று வகைகளாகச் சட்டம் ஏற்பட்டுள்ளது. பிரம்மமும், சிருஷ்டியும் எதிரானவை. அவை இரட்டை. இம்மூன்று நிலைகள் இரட்டையை இரத்து செய்யும்.

பிரபஞ்சத்தில் சத்துளது. மனம் அதை விளக்கும் திறன் பெற்றதன்று. நாம் அனந்தஜீவியத்தை அறிவோம். அது பிரபஞ்சமாயிற்று. முதல் அது அனந்தமான ஞானமாக வேண்டும். நம்மொழியில் அதை நாம் எல்லாம் உணர்ந்ததுஎன்கிறோம். ஆனால், மனம் ஞானத்தின் கருவியில்லை. மனம் எல்லாம்வல்லதாகவும் இருக்கவில்லை. மனம் ஞானத்தைத் தேடும் கருவி. இவை முடிவான கருத்துகளில்லை. ஞானத்தின் சில ரூபங்களை மனம் பெற முடியும். மனம் அக்கருத்தை சில செயல்களில் வெளிப்படுத்தமுடியும். மனம் கண்டுபிடித்தாலும், நிரந்தரமாகப் பெறமுடியாது. சத்தியத்தை மனம் நிறுத்திக்கொள்ள முடியாது. சத்தியத்தின் ஓர் அடையாளத்தை மனம் பெற வல்லது. அப்படிப்பட்ட அடையாளங்களை மனம் சேர்த்துவைத்துள்ளது. அவற்றை மனம் நினைவுஎன்ற பாங்கில் வைத்துள்ளது. தேவைப்பட்ட பொழுது அதிலிருந்து எடுத்துக்கொள்ளும். மனம் அறியாது. மனம் அறிய முயல்கிறது. கண்ணாடியில் பிரதிபலிப்பதுபோல் மனம் அறிகிறது. அது கலங்கலாக இருக்கும். உள்ளதை எடுத்துரைக்கும் திறனது. பிரபஞ்ச வாழ்வின் சத்தியத்தை அது எடுத்துக்கூறும். ஒரு முறையை ஏற்படுத்த நடைமுறையில் இந்த சக்தி தேவைப்படுகிறது. அது ஞானமுள்ள சக்தி இல்லை. அது வாழ்வை நடத்தவல்லதன்று. எனவே மனம் உலகை உற்பத்தி செய்திருக்க முடியாது. அதனால் உலகைத் தன்னுள்ளிருந்து வெளிப்படுத்தியிருக்கவும் முடியாது.

அனந்தமான மனம், வரையறையற்றதை, நாம் இருப்பதாகக் கொள்ளலாம். அது உலகை சிருஷ்டித்ததுஎனக் கொள்ளலாமா? மனம் என்றால் என்னஎன்று நாம் அறிவோம். நாம் மனப்போக்கை அறிவோம். அதன் விபரம் தெரியும். நாம் கூறுவது அதனினின்று வேறுபட்ட மனம். இது சத்தியஜீவிய

உண்மையாகும். மனப்போக்குஎன்பது வரையறைக்கு உட்பட்டது. அனந்தமான மனம் அதுபோல் அமைந்திருந்தால், அது சிருஷ்டிக்க முடியும். அது அளவற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். பரந்த வெளியில் தற்செயலான அளவுகடந்த மோதல்கள் ஏற்படும். ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். முடிவற்று அவை அலைந்து திரியும். அந்த இலட்சியத்தை நாம் தேடுவதாகும். அதற்குத் தடுமாற்றம்எனப் பெயர். அது தற்காலிகமானதாக இருக்கும். மனம் அனந்தமாக, எல்லாம் உணர்ந்ததாக, எல்லாம்வல்லதாக இருக்கும். அப்படியானால் அது மனமாகாது. அது சத்தியஜீவியமாகும்.

மனம் பிரதிபலிக்கும் கண்ணாடி. அது பிம்பங்களை உற்பத்தி செய்யும். அவை சத்தியத்தைப் பிரதிபலிக்கும். அல்லது நிகழ்ச்சியைப் பிரதிபலிக்கும். அவை முன்கூட்டியே எழுந்தவை. நிகழ்ச்சிகள் மனத்திற்குப் புறம்பானவை. அல்லது சத்தியத்தைவிடப் பரந்தது. மனம் நிமிஷத்திற்கு நிமிஷம் செயல்படும். அது தோற்றத்தைப் பிரதிநிதியாக்கும். அவை இப்பொழுது நடப்பவை, அல்லது முன்கூட்டி நிகழ்ந்தவை. அதற்கு மேலும் ஒரு திறன் உண்டு. அது கற்பிக்கும் திறன். தனக்குத் தெரியாதவற்றின் உருவத்தை ஜோடனை செய்யும். இப்பொழுது உள்ளதை அல்லது இனிமேல் உற்பத்தியாகக்கூடியதை மனம் உற்பத்தி செய்ய வல்லது. அடுத்து, உடன்வரக்கூடியதை மனம் அறியமுடியாது. ஏற்கனவே நடந்ததை மீண்டும் திருப்பி நடக்க வேண்டுமானால் அது சாத்தியம். புதிய வெளிப்பாடுகளை முன்கூட்டி மனம் அறிவிக்கவல்லது. கடந்ததும், எதிர்கொள்வதும் சந்திப்பதினின்று மனம் அதைச் செய்கிறது. கடந்தது நடந்துமுடிந்தது. இனி வரப்போவது பூர்த்தி ஆகாத வாய்ப்பு. இம்முயற்சியில் மனம் சில சமயம் சில விஷயங்களில் வெற்றிகாணும். இவ்வெற்றி ஏறத்தாழ நிச்சயம். மற்றவை நடப்பதில்லை. அவை மனம் எதிர்பாராத ரூபங்களை உடையவை. மனம் திட்டமிடும் வழியைக்கடந்த காரணங்களுடையவை அவை.

இதுபோன்ற அனந்தமான மனம் அதற்குரிய அமைப்பை எழுப்பும். அப்படிச் செய்தால் தற்செயலான பிரபஞ்சம் எழும். அங்கு முரணான வாய்ப்புகள் எழும். அப்படி வரும் வாய்ப்புகள் நிலையற்ற உருவத்தைப்

பெற்றிருக்கும். அது எப்பொழுதும் தற்காலிகமானதாக இருக்கும். அது அடித்துக்கொண்டு போகும்பொழுது எதுவும் நிலையற்றிருக்கும். அது உண்மையானதாகவோ, உண்மையற்றதாகவோ இருக்கலாம். அதற்குக் குறிப்பிட்ட நோக்கமோ, முடிவோ இருக்கமுடியாது. ஏராளமான நோக்கங்கள் இருக்கலாம். அவை அர்த்தமற்றவை. மேருந்து வழிநடத்தும் சக்தியொன்று இல்லாததால், அது அப்படியிருக்கிறது. இது யதார்த்தம். இதன் முடிவு சூன்யம், எதுவுமில்லைஎன்பது. அல்லது இது மாயாவாதத்தில் முடியும். அப்படிப்பட்ட பிரபஞ்சம் தன்னைப் பிரதிபலிக்காது. அது இல்லாததை நமக்களிக்கிறது. அது பொய். அது சிதைந்த பிரதிபலிப்பு. இங்கு எல்லாப் பிரபஞ்ச நிகழ்ச்சிகளும் மனத்தின் கற்பனையாகும். மனம் போராடி இந்நிலையைச் சமாளிக்கவேண்டும். அது எப்பொழுதும் வெற்றி பெறுவது இல்லை. வெற்றி பெறாததற்குக் காரணம் அடிப்படையில் ஆத்ம சத்தியம் இல்லை. இது பழைய நிகழ்ச்சிகளின் வேகம் தொடர்வது. அவற்றால் இது ஆட்கொள்ளப்படுகிறது. அது முன்னோக்கிப் போனபடி இருக்கும். நிர்ணயிப்பவரில்லை என்பதால் முடிவுஎன ஒன்றிருக்காது. முடிவில் அது தன்னைத் தானே அழித்துக்கொள்ளும். அல்லது சலனமற்று அது நிலைபெறும். இதன் ஆதியைக் கண்டால் அது சூன்யவாதமாகவோ, மாயாவாதமாகவோ இருக்கும். பிரபஞ்சத்தில் ஒரு புராதன எண்ணம் செயல்படுகிறது. அதைவிட உயர்ந்த பிரபஞ்ச சக்தியுண்டு. நம் மனப்போக்கு அதைப் பிரதிபலிப்பதாக நினைத்தால், சூன்யவாதமே முடிவாகும்.

நாம் இந்த ஞானத்தின் ஆதிசக்தியில் ஒரு பெரிய சக்தியைக் காண்கிறோம். அது நம் மனப்போக்கின் சக்தியைவிட உயர்ந்தது. இதைக் கண்டவுடன் நம் எண்ணம் மாறுகிறது. இதுவரை நினைத்தது தவறுஎனத் தெரிகிறது. இது பகுதியான உண்மை, முழு உண்மையில்லை. அது ஒரு சட்டம், தற்சமயம் பெறும் இலாபத்திற்கான சட்டம். ஆதிசத்தியத்தின் உண்மை அது இல்லை. அது முடிவான உண்மையுமில்லை. மனம், உயிர், உடன்பின், அவற்றின் செயன்பின் ஒன்றுளது. அது சக்திக்குக் கட்டுப்படாது. ஆனால், அது சக்தியைத் தழுவி, ஆட்கொள்கிறது. அது இவ்வுலகில் பிறந்ததில்லை. இவ்வுலகை அது புரிந்துகொள்ளவும் முயலவில்லை. ஆனால்,

தன் ஜீவனில் அது ஓர் உலகை சிருஷ்டித்துள்ளது. அதைப்பொருத்தவரை அது எல்லாம் உணர்ந்தது. நிரந்தரமாக அது போராடவில்லை. அதனின்று வேறு ஒன்றை வெளிக்கொணரவும் அது முயலவில்லை. கடந்தகாலச் சக்திகள் பெருகிவருவதில் அது அலை பாய்கிறது. அதை இதனால் கட்டுப்படுத்தமுடியாது. ஒரு சிறப்பான ரூபம் உண்டு. அது ஜீவியத்திலுள்ளது. அது கொஞ்சம் கொஞ்சமாக மலர்கிறது. உலகம் ஒரு சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. இதை அது முன்கூட்டியறியும். முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்டதற்கு அது உட்படுகிறது. அது ஒரு தரிசனம். அது ஆதியான செய்தி. தெய்வீக சிருஷ்டியில் வளரும் உருவம் அது.

நாம் மனப்போக்கின்மூலம் வேலை செய்கிறோம். இதற்குத் தோற்றம் முக்கியம். பின்னாடியுள்ளது கலங்கலாகத் தெரிகிறது. நாம் அதை யூகிக்கிறோம். பின்னாடியிருப்பது உள்ளுறை சத்தியம். அது எப்பொழுதும் உள்ளது. நமக்கு ஒரு சட்டம் தட்டுப்படுகிறது. அது மீண்டும் மீண்டும் வரும் சட்டம். அது தொடர்ந்து சிறப்புப் பெறுவதைக் காண்கிறோம். எப்படியோ அது முன்கூட்டியே தெரிந்த விஷயம். எங்குப் பார்த்தாலும் சட்டம் தெரிகிறது. அது சுயமான ஜீவனில் உற்பத்தியானது. அதை நாம் ஊடுருவமுடியும். அது எப்படி ஏற்பட்டதுஎன நாம் அறியமுடியும். உடலோடு ஜனித்த ஞானத்திலுதித்த சட்டம் அது. அது சத்தில் தானே பிறந்த ஞானம். அது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. வெளிப்படும் சக்தியினுள் அது பொதிந்துள்ளது. ஞானம் வளர்த்த சட்டம் அது. அது முன்னேற்றத்திற்கு அவசியம். தெய்வம் நியமித்த இலக்கை நோக்கி அது செல்லும். அத்திசையை நோக்கி அது உந்தப்படுகிறது. இந்த திக்கற்ற ஓட்டத்திலிருந்து பகுத்தறிவு எழ முயல்கிறது. பகுத்தறிவு ஓட்டத்தை மீற முயல்கிறது. ஓட்டம் அதன் கையில்லை. அது நம் மனப்போக்கின் ஓட்டம். நாம் அதைக் காண்கிறோம். இங்குப் பகுத்தறிவின் உண்மையைக் காணலாம். பகுத்தறிவு தூதுவன். அது ஒரு பிரதிநிதி. உயர்ந்த ஜீவியத்தின் நிழல் பகுத்தறிவு. அதுவே அதன் இலட்சியம். தான் என்னஎனப் பகுத்தறிவு அறியும். பகுத்தறிவின் ஆதி ஞானம். அந்த ஞானமும், பகுத்தறிவும் ஒன்றே. செயல்களின் சட்டமாக அது செயல்படுகிறது. அப்படி நாம் கொள்ளலாம். ஞானம் தன் சட்டத்தைத் தானே நிர்ணயிக்கும். அது தனக்கு அதிபதி. என்ன நடந்ததுஎன அது அறியும். என்ன

உண்டுஎனவும் அது அறியும். என்ன நடக்கப்போகிறது எனவும் அறியும். தன்னை அறிவதால் இத்தனையும் அதற்குத் தெரியும். தன்னை அனந்தமாக அறியும். காலத்திற்கும் தன்னை அது அறியவல்லது. எனவே அதனால் அதைச் செய்யமுடியும். அப்படியிருப்பது அனந்தஜீவியம். எல்லாம் வல்ல அனந்தஜீவியம் அது. அதற்கோர் உலகம் உண்டு. உலகத்தை ஏற்படுத்த தன்னில் சுமுகத்தை நிலைநிறுத்தும். உலகம் அதன் ஜீவியத்தின் இலக்கு. அதை நாம் ஏற்கலாம். எண்ணம் அதைப் பற்றிக்கொள்ளமுடியும். தன்னை பிரபஞ்ச சத்தியமாக அது அறியும். அது தன் சத்தியத்தை அறியும் சத். தன் சத்தியத்தை ரூபமாகச் சித்திக்கிறது. அது அந்த ரூபங்களை அறியும்.

நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தக்கூடாது. நம்முள் நாம் ஆழ்ந்து இலயிக்கவேண்டும். அது மனிதனின் இரகஸ்ய மையம். அங்குச் சலனம் செயலற்றுப்போகும். சலனமற்ற அமைதியில் உயர்ந்த ஜீவியம் தெரியும். அது நமக்கு வெளிப்படையாகத் தெரியும். நமக்கு அது சிதைந்து தெரியும். சிதைவது நம் மனம் எரிச்சல்படுவதால் ஏற்படுவது. எரிச்சல் பழக்கம். மனம் தன்னை அப்படி அளவுக்குட்படுத்திக்கொள்கிறது. அளவுக்கு உட்பட்டால் தெரிவது தெளிவாக இருக்கும். அங்கு வளரும் ஜோதியுண்டு. பகுத்தறிவு பிரகாசமற்றது. அலைபாயும் சுடர், நிலையானதன்று. ஏற்கனவே இந்த உயர்ந்த ஜீவியத்தை பகுத்தறிவால் அறிந்தோம். இப்பொழுது நிச்சயமாக அறிவோம். ஞானம் அங்கு காத்துள்ளது. அது மனத்தைக்கடந்து வீற்றுள்ளது. அறிவின் வீச்சுக்கு ஞானம் அப்பாற்பட்டது. அதைக்கடந்து சுயமான காட்சியுண்டு. அது அளவற்றது; பிரகாசமானது. அங்கு ஞானம் அரியாசனத்தில் வீற்றுள்ளது.

*******



book | by Dr. Radut