Skip to Content

04. பகுதி - 4

அண்ணன் - மந்திரி, MP, IAS ஆபீசர், பெருந்தொழில் அதிபர் எதையும் சாதிக்கலாம். அவர்களை மீறியது உண்டு. ஆயிரம் உண்டு. அன்பர்கள் அவர்கள் கைவிட்டதைச் சாதிப்பார்கள். அவர்கள் செய்வதையும், தேவைப்படும்பொழுது, அவர்களால் முடியும் என்ற உண்மை இன்று பலரும் அறியாதது.

தம்பி - அருளாலும், அதைப் பெறும் நல்லெண்ணத்தாலும் இந்த மாற்றம் எழுகிறதா?

அண்ணன் - நல்லெண்ணம் முக்கியம். அன்பன் எண்ணத்தையே கடந்து வரவேண்டும் என்றாலும் உபரி நல்லெண்ணமில்லாமல் உண்மை அன்பனாக ஆக முடியாது.

தம்பி - இவற்றையெல்லாம் கதையாக எழுதினால்தான் புரியும். கட்டுரை விளங்காது.

அண்ணன் - இது போன்ற கதை எழுதும் திறனுள்ள அன்பர் இல்லையே.

தம்பி - சேவை, அரசியல், பொது வாழ்வில் உள்ள அன்பர்கட்குச் சொல்லக் கூடியது ஏதேனும் உண்டா?

அண்ணன் - அது போன்ற அன்பர்கள் அனுபவம் நமக்குத் தெரிந்தவற்றை யோசனை செய்து பார்த்தால், நாம் சொல்லக்கூடிய சட்டங்கள் விளங்கும்.

தம்பி - அந்த அனுபவங்களை மனதில் கொண்டுதான் கேட்கிறேன்.

அண்ணன் - சுருக்கமாகச் சில சட்டங்களைச் - பொதுவான அன்னைச் சட்டங்கள் - சொல்லலாம்.

  1. தகுதியும், திறமையுமிருந்தால் மற்றவர்கள் போட்டியிட்டுப் பெறுவது அன்பர்கட்குப் போட்டியில்லாமல் கிடைக்கும். தேடியும் வரும்.
  2. அப்படி வரும்பொழுது அன்பர் எதிர்பார்த்ததைவிட ஓரிரு நிலைகள் உயர்வாக வரும்.
  3. அன்பராகவே தடம் மாறாவிட்டால், தொடர்ந்த உயர்வு தேடி வரும். 

தம்பி - நம் அனுபவங்கள் இதைத்தான் கூறுகின்றன.

  • காவல்காரன் முனிசிபல் கௌன்சிலுக்கு நின்றான்.
  • ஒரு முறையும் முனிசிபல் கௌன்சிலில் நிற்க முடியாதவருக்குக் கௌன்சிலர் பதவி கிடைத்தது.
  • எளிய தொண்டர் மத்திய மந்திரியானார். பிறகு மாநில முதலமைச்சரானார்.
  • MP சீட் கேட்டவருக்கு மந்திரிப் பதவி கிடைத்தது.
  • காரசாரமாகப் பேசிய MPயை மந்திரியாக்கினார் பிரதமர். பிறகு நெடுநாள் கவர்னராக இருந்தார்.
  • புதியதாக ஜில்லா ஸ்தாபனம் அமைத்தபொழுது தற்செயலாகச் சமாதி தரிசனம் செய்து போனவர் ஜுனியரானபோதும் தலைமைப் பதவியை அளித்தனர்.
  • கமிட்டியில் உறுப்பினராகவும் இல்லாதவரைச் செக்ரடரியாக்கினார். அதேபோல் மற்றொருவரைத் தலைவராக்கினார். அவர் 20 வருஷமாகத் தலைவர் பதவியிலேயேயிருக்கிறார்.
  • ஒரு துறையில் பரிசு இல்லை என்றால், அதைப் புதியதாக உற்பத்தி செய்து கொடுப்பார்கள்.
  • விருது பெற்றவர் "எனக்கு இந்த விருதை எப்படிக் கொடுத்தனர்" என வியக்கும்படியும் வரும்.
  • சர்வதேச ஸ்தாபனக் கூட்டத்தில் உதவி செய்யப் போன அன்பருக்கு உறுப்பினர் பதவியும் கேளாமல் வந்த நிகழ்ச்சியுண்டு.
  • கடும் போட்டியுள்ள பதவிக்குப் போட்டியிடுபவர் அனைவரும் சேர்ந்து அன்பரைப் போட்டியில்லாமலும் தேர்ந்தெடுத்தனர்.
  • நாட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முதன்மையான கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தபொழுது நம் நிலையிலுள்ளவர் அன்பர் ஆதரவு பெற்றவர். பெரு மெஜாரிட்டியுடன் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • புதிய தொண்டர் நேரடியாகத் தலைவராவது அன்பர் அனுபவம்.

இதுபோல் அன்பர்கள் பெறுவதில் அன்னை அருளை சற்று விளக்க முடியுமா? 

அண்ணன் - பொது வாழ்விலுள்ள அன்பர்கள் சாதாரண அன்பர்களைவிட அதிக அருளைப் பெறுவர். ஏனெனில் அவர்கள் வேலை சேவையாகிறது. பிறருக்கு அவர் செய்யும் சேவைக்கும் அருள் வந்தபடியிருக்கும் என்பது முதல் விஷயம். பிரார்த்தனை பலிக்கிறது, தவறாது பலிக்கிறது என்பதற்கு மேல் செய்யும் வேலையின் விவரம் தெரிந்தால் அருள் அதிகமாகப் பலிக்கும் என்பதைக் காண்கிறோம். அன்பர்கள் எங்கிருந்தாலும் மற்றவர்களைவிடச் சிறப்பாக வேலை செய்வார்கள். அதனால் செய்யும் வேலையின் விவரத்தை நன்கு அறிவார்கள். தெளிவுள்ள இடத்தில் அருள் எளிதாகச் செயல்படுவதால் பலன் அதிகமாக இருக்கிறது.

தம்பி - பணத்தை அன்பர்கள் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்ற கருத்தை நாட்டு நடைமுறையில் சொல்ல முடியுமா?

அண்ணன் - ஒரு கம்பனியில் திறமையாக வேலை செய்பவர் வெளியே போய், சொந்தமாகக் கம்பனி ஆரம்பிப்பது வழக்கம். அதுபோன்று செயல்படும் அன்பர்களை நான் கவனித்ததில் சொல்லக் கூடியது அன்பர் முயற்சியால் கம்பனி எவ்வளவு சம்பாதித்ததோ அதை அன்பரால் சம்பாதிக்க முடியும். எல்லாத் தொழில்களிலும் இது பொருந்தாது.

தம்பி - நான் ஒரு சிறிய கம்பனியில் மேனேஜராக இருக்கிறேன். 5 வருஷத்தில் கம்பனி 8 கோடி சம்பாதித்தது. என் முயற்சியால் இதில் 3 கோடி வந்திருக்கும் என்றால் நான் இன்றைய ரூ. 25,000 சம்பளத்தை விட்டுத் தொழில் நடத்தினால் அந்த 3 கோடியைச் சம்பாதிக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாமா?

அண்ணன் - முறையாகச் செய்தால் அந்த 3 கோடி குறைந்தபட்சம். ஆர்வம் அதிகமானால் அதற்கேற்ப பல மடங்கு உயரும் (multiples of it). தவறாது அன்பர்கள் விஷயத்தில் இதைக் காணலாம்.

தம்பி - ரூ. 450 சம்பளம் பெற்ற மானேஜர் கம்பனிக்கு 1 கோடிக்கு மேல் சம்பாதித்துக் கொடுத்தார். வெளியே வந்த முதல் வருஷமே அந்த 1 கோடியைச் சம்பாதித்துவிட்டாரே. எந்த ஆபீசரானாலும், அங்கு அன்பர்களிருந்தால் பொதுவாக அன்பரே முதன்மையாக இருப்பது நான் பார்த்த விஷயம்.

அண்ணன் - அன்பர் எனில் சிறப்புண்டு. சிறப்பு முத்திரையுண்டு. நீ சொல்வது அது போன்ற ஓர் அம்சம். எல்லாத் தொழில்களிலும் பணத்தைப் பொருத்திப் பார்ப்பது கடினம். வியாபாரத்தில் எளிமையாகத் தெரியும். ஒன்று சொல்லலாம்.

"அன்பருடைய குறிப்பிட்ட திறமையால் ஸ்தாபனம் பெற்ற பலன் குறைந்தபட்சம் அன்பருக்குண்டு". அதுவரைக்கும் அறுதியிட்டுக் கூறலாம். வாழ்வுக்கும் இந்தச் சட்டம் பொது என்றாலும் நாம் கேள்விப்படுவது அதன்று. "இந்த முதலாளிக்கு 50 லட்சம் சம்பாதித்துக் கொடுத்தேன். நான் பெற்றதெல்லாம் இந்த ரூ. 1500 சம்பளத்தை 1800 ஆக்கினார். அவரை விட்டு வேறிடம் போனேன். அந்த முதலாளிக்குக் கோடிக் கணக்காய்ச் சம்பாதித்தேன். வாயாரப் பாராட்டினார். அத்தோடு சரி. நான் வேறெதையும் காணவில்லை" என்று நாம் கேள்விப்படுவது அன்பர்கள் வாழ்வில் இல்லவேயில்லை.

தம்பி - நாட்டில் பணப்புழக்கம் அதிகப்படுத்த முடியும் என்பது போல் நம் தொழிலில், குடும்பத்தில் பணவரவை 5 மடங்கு, 10 மடங்கு அதிகப்படுத்த முடியாதா?

அண்ணன் - நம் நாடு நெடுநாளாகச் சில விஷயங்களைப் பாராட்டி வருகிறது. ஒரு குடும்பம் நசித்துவிட்டால் அவர்கள் வீட்டு வேலைக்குப் போக வேண்டும். அதைத் தவிர்க்க நாம் கண்டுபிடித்த முறை இட்லி சுட்டு விற்பது. இந்தத் தொழில் நசித்துப் போன குடும்பங்களின் மரியாதையை வெகுவாகக் காப்பாற்றியுள்ளது. அதுபோல் பணவிஷயத்தில் நாம் கண்டது சீட்டுக் கட்டுவது. இது இன்று பெருவாரியாகப் பெருகிவிட்டது. குடும்பச் செலவுக்கு மிகவும் உதவும் முறை இது. ஆனால் பலர் சேர்ந்தால்தான் சீட்டுக் கட்ட முடியும். அதுபோல் புது முறைகளைக் கண்டுபிடித்தால் ஒரே குடும்பமோ, ஒரே கம்பனியோ பின்பற்றிப் பயன் பெற முடியாது. பலர் சேர்ந்தால் பயன்பட முடியும். கம்பனி மானேஜ்மெண்ட் முறைகளால் பணவரவை 5 அல்லது 10 மடங்கு உயர்த்த முடியும். எந்தக் குடும்பமும் வருமானம் என்ற கட்டுரையால் அதுபோல் பலன் பெற முடியும். புதியதாக ஒன்று ஏற்படுத்த முடியும் என்றாலும் அது தேவையில்லை. Complementary currency என்ற முறையுண்டு. "மாற்றுப் பண நடமாட்டம்" என்று கூறலாம். அது 10 அல்லது 20% பணத்தை வளர்க்கப் பயன்படும். உலகில் 2400 இடங்களில் அது புழக்கத்திலிருக்கிறது. அதுபோன்ற புதிய முறைகளில் 5 அல்லது 6ஐ ஒரு காலனி, நகர் ஏற்றுக்கொண்டால் பணம் இருமடங்காகும். சுத்தம் 100% உயர்ந்தாலே இரு மடங்காகும்.

தம்பி - ஏற்கனவே சுத்தம் போன்ற 12 தலைப்புகளில் உள்ள விஷயங்களைப் பின்பற்றி வருமானத்தைக் குறைந்த பட்சம் 2 அல்லது 3 மடங்கு உயர்த்தியவர்கள் இதையும் பின்பற்றினால் மேலும் 2, 3 மடங்கு உயருமல்லவா?

அண்ணன் - அவர்கள் ஒரு 100அல்லது 200 குடும்பம் ஓரிடத்திலிருந்லி தால்தான் இதைப் பின்பற்ற முடியும். கம்பனியைவிடக் குடும்பத்தில் 10 மடங்கு பணம் பெருக நாம் முன் சொன்ன முறைகளே போதும். ஒரு வீடு என்றால் கணவன், மனைவி, இரு பிள்ளைகள், சில சமயங்களில் பெரியவர்கள் ஓரிருவர் என 5 முதல் 7 வரை இருப்பார்கள். நாம் கூறிய முறைகளை வீட்டில் ஒருவர் அல்லது இருவர் பின்பற்றினால் வருமானம் 2 மடங்காகும். இரகஸ்யம், பெரியவர்களும், குழந்தைகளும் இதே முறைகளை வழுவாமல் பின்பற்றினால் 10 மடங்கு பணம் பெருகும். அனைவரும் ஒரு முறையைப் பின்பற்றினால் பலன் அபரிமிதமாக இருக்கும். இதற்குச் சம்மதப்பட முன்வரும் குடும்பங்கள் இருக்கா. நுட்பமான இடமே அதுதான். முறையன்று. குழந்தைகளைப் பயிற்றுவிக்க முன்வரமாட்டார்கள். பெரியவர்களிடம் போனால் சண்டைதான் வரும். அதனால் அதைத் தவிர்க்க வேண்டும்.

தம்பி - "யோக வாழ்க்கை" என்ற நூலில் 979 நம்பரிட்ட இந்தச் செய்தி நாட்டுக்குரியது. அதை ஓர் அன்பர் "அது என்ன இரகஸ்யம்" என ஆசிரியரிடம் எழுதிக் கேட்டிருந்தார். அந்த விபரங்களை நவம்பர் 14ஆம் தேதி நேரு நினைவு சொற்பொழிவில் பேச்சாளர் பேசியிருந்தார். நாட்டில் கங்கா காவேரித் திட்டம் அமுலுக்கு வந்தால் உணவு உற்பத்தி பெருகும், ஏராளமான வேலை உற்பத்தியாகும், மின்சாரத் தட்டுப்பாடு இருக்காது. இதற்கு 60,000 கோடி ரூபாய் வேண்டும். இந்த 60,000 கோடியை நாமே உள்நாட்டில் உற்பத்தி செய்யலாம். ஏன் பணமில்லை என்று கூற வேண்டும். ஏன் கடன் வாங்க வேண்டும் என ஒரு கருத்துப் பேசப்பட்டது.

அண்ணன் - தவணை முறையில் நாம் ஏற்கனவே இதைப் பின்பற்றுகிறோம். கங்கையும் காவேரியும் இணைந்தால் ஏராளமான நிலம் புதியதாகப் பயிராகும். இன்று தரிசாக ரூ. 5000 விலை போகும் நிலம் அன்று 50,000 அல்லது 1 லட்சம் விலை போகும். நமக்குத் தேவையான அத்தனைப் பணமும், இத்திட்டம் நிறைவேறியபின் அந்நிலங்களின் மதிப்பாக எழும்.

தம்பி - இன்று எப்படி அப்பணம் பயன்படும்?

அண்ணன் - எல்லா நாடுகளும் அறிந்த முறை அது. எதிர்காலத்தில் வரப்போகும் நிலத்தின் அதிக மதிப்பை இன்று பணமாகப் பெறும் முறையை சர்க்கார் அறியும். சர்க்கார் முன்வந்தால் நடக்கும்.

தம்பி - அதேபோல் குடும்பங்களில் எதிர்கால வருமானத்தை இப்பொழுது பயன்படுத்தும் முறையுண்டா?

அண்ணன் - உண்டு. அது நடைபெற ஓர் ஊர் அல்லது ஒரு நகர் (சுமார் 1000 குடும்பங்கள்) அல்லது ஒரு பெரிய கம்பனி அம்முறையை ஏற்றால் ஒரு குடும்பத்தில் இருவர் வருமானம் இன்று ரூ. 10,000 ஆனால் வரும் 10 வருஷத்தில் அதில் பாதி வருமானம் 6 இலட்சமாகும். அப்பணம் இன்று அவர்களது செலவுக்குக் கிடைக்க வழி செய்யும் அம்முறை.

தம்பி - ஒரு நகர் என்றால் குடும்பங்கள் வரும் போகும். கம்பனியானால் வேலை செய்பவர்கள் கம்பனியை விட்டுப் போவார்கள். அவற்றையெல்லாம் சரி செய்ய முடியாது.

அண்ணன் - எதற்கும் வழியுண்டு. சுலபமன்று. வருமானத்தை இரு மடங்காக மாற்ற பணத்திட்டம் போதும். இரு மடங்காக்கிய குடும்பம் 10 மடங்காக்க முயன்றால் நடக்கும். ரூ. 10,000 சம்பாதிக்கும் குடும்பத்தில் 6 லட்சம் மொக்கம் வருவது பெரியது. அது வந்தால் அதன் மூலம் சம்பாதிக்கவும் வழியுண்டு.

தம்பி - எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு அவசியம்.

அண்ணன் - கட்டுப்பாடிருந்தால், தானே பணம் பெருகும். பெருக்கினால் அதிகம் பெருகும். ஓரளவு, தானே மேல்நாடுகளில் இவை போன்ற பல முறைகள் வருகின்றன. இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் அவை இங்கும் வந்துவிடும்.

தம்பி - பணம் தட்டுபாடில்லை என்றால் நாடு சுபீக்ஷமாகிவிடும். இதே முறைகளைத் தவறாகவும் பயன்படுத்தலாம். அண்ணன் - எதையும் தவறாகப் பயன்படுத்தலாம். அதனால்தான் கட்டுப்பாடு வேண்டும் என்றேன். பத்தோ, இருபதோ வருஷம் கழித்து அனைவருக்கும் வரும் முறைகளை அன்பர்கள் இன்று அருளால் பெறமுடியும் என்பதையே நான் பல வகைகளில் திருப்பித் திருப்பித் தருகிறேன்.

தம்பி - நாடு சுபீக்க்ஷமடைவது அவசியம். அதில்லாமல் பஞ்சம், பட்டினியுள்ளவரை ஆன்மீகம், அன்னை காதில் விழாது.

அண்ணன் - சுபீக்க்ஷமடைவதற்கே ஆன்மீகத்தைப் பின்பற்றலாம் என்பது என் கொள்கை.

தம்பி - அன்னையிடம் வந்த பிறகு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேசுவது அழகாக இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள்.

அண்ணன் - பரம்பரையாகப் பணம் என்றால் தவறு என்று நாம் வளர்ந்துள்ளோம். அந்த நாளில் டாக்டர், வக்கீல், ஆசிரியர், தட்டான், தச்சன், என எவரும் பணம் கேட்கமாட்டார்கள். கொடுத்ததை வாங்கிக் கொள்வார்கள்.

தம்பி - அது போலிருந்தால் பணமே வாராதே.

அண்ணன் - ஆனால் சிலர் முதலில் பணம் வாங்கிக் கொண்டுதான் வேலை செய்வார்கள். தொழிலில் அதிகப் பணம் கேட்பவருக்குத்தான் நல்ல பேர் உண்டு. பணம் கேட்கக் கூச்சப்படுபவருக்குப் பணமும் வாராது. பேரும் இருக்காது.

தம்பி - அது உண்மை.

அண்ணன் - மனிதன் பணத்திற்கு மட்டும்தான் அசைவான். பணம் மட்டும் வேண்டாம் எனப் பேசுவான்.

தம்பி - இப்பொழுது எல்லாம் மாறிவிட்டன. பணம் முக்கியமாகிவிட்டது.

அண்ணன் - இரண்டும் வருகிறது. பணம் என்பது அருள். அருளாக நினைத்துப் பணத்தைப் பாராட்டினால், பணமும், அருளும் வரும். மனதால் பணத்தை நாடி, வாயால் வேண்டாம் என்றால் பணமும் வாராது. அருளும் வாராது. மனத்தின் உண்மையைப் பாராட்டுவது சரி. காணிக்கை எனில் அளவில்லை என்று யாருக்கும் தெரியாது. ரூ. 5000 பணம் வேண்டுமென ரூ. 10 காணிக்கை அனுப்பினால் கிடைக்கிறது. 5 இலட்சம் வேண்டுமானால் அதே ரூ. 10 காணிக்கை அனுப்பினால் பலிக்கிறது. அனுபவத்தில் காணிக்கைக்கு அளவில்லை, மனமே முக்கியம். காணிக்கை அவசியம் என அறியாதவரில்லை. ஆனால் மனம் பெரிய காணிக்கையைக் கொடுக்க ஏன் விரும்புகிறது? நமக்குப் பணம் முக்கியம் என்பதால், அப்படி நினைக்கிறது. அந்த உண்மைக்கு அன்னையிடம் பலன் உண்டு.

தம்பி - காவேரி நீருக்காகத் தமிழ்நாடும், கர்நாடகாவும் தகராறு செய்கிறார்கள்.

அண்ணன் - காவேரிப் பிரச்சினையில் உனக்கே சொந்த அனுபவம் உண்டு. அன்னைச் சட்டம் அதனுள் இருக்கிறது.

தம்பி - பல வருஷங்கட்கு முன் பம்பாயிலிருந்து ஓர் அன்பர், "ஏன் காவேரி தண்ணீருக்காகத் தகராறு? காவேரி ஜீவநதியில்லையா? அவளே அன்னையில்லையா? பிரார்த்தனை செய்தால், பொங்கி வரமாட்டாளா?" என்று நினைத்துப் பிரார்த்தித்தார். அந்த ஆண்டு காவேரியில் வெள்ளம். தகராறுக்கு வேலையில்லை. காவேரி விஷயத்தில் இரண்டு, மூன்று பேர் இதைச் செய்து பார்த்திருக்கிறார்கள். சட்டம் என்ன?

அண்ணன் - விஷயம், காவேரியானாலும், காஷ்மீரானாலும் நேரடியாக ஒருவர் உணர்ச்சியைத் தொடுமானால் அவர் பிரார்த்தனை அந்த நேரம் பலிக்கும். தவறாமல் பலிக்கும். நிரந்தரத் தீர்வுக்கு நியாயமான ஏற்பாடு வேண்டும்.

தம்பி - ஏன் நாட்டுப் பிரச்சினைகளை இதுபோல் தீர்க்கக் கூடாது?

அண்ணன் - பிரச்சினைக்கு உரியவர் அன்னையை நம்பினால் அது முடியும். வெளியிலிருப்பவர் செய்வது அந்த ஒரு நேரம் பலிக்கும்.

தம்பி - பிரச்சினைக்கு உரியவர் என்றால்?

அண்ணன் - பிரச்சினையால் பாதிக்கப்படுபவர் அல்லது அதைத் தீர்க்கும் பொறுப்புடையவர். சம்பந்தமில்லாதவர் பிரார்த்தனை எடுபடாது. அன்பர்கள் அனைவரும் பார்த்தவை பல உண்டு. அதை மீறிய விஷயங்களும் உண்டு. பதிலோ, விளக்கமோ சுலபம். ஏற்பவர் குறைவு.

அனைவருடைய அனுபவம்

  • அன்னையை அறிந்ததிலிருந்து பிரச்சினைகள் குறைந்து மறைந்தன.
  • சச்சரவு, கவலை நீங்கி சந்தோஷமும், நிம்மதியும் வந்தன.
  • பலிக்காத பிரார்த்தனை என்பதில்லை.
  • வாழ்வில் அன்பர் நிலை - அந்தஸ்து - உயர்ந்தபடியிருக்கிறது.

அதை மீறியவை 

  • சில பிரச்சினைகள் தீர்வதில்லை.
  • இதுவரையில்லாத பெரிய தொந்தரவுகள் வருகின்றன.
  • முதலில் இருந்ததைப் போலில்லை. ஓரளவுக்குப் போய் அப்படியே நின்றுவிடுகின்றன. 

விளக்கம்

  • நம் குறையை வலியுறுத்துவதால் பிரச்சினை தீருவதில்லை.
  • அன்னைக்கு நெருக்கமானவர் என நம்பிக்கை இல்லாதவர், துரோகம் செய்தவரைப் பாராட்டினால் ஆபத்து வருகிறது. அவரை விட முடியவில்லை.
  • முதலிலிருந்த ஆர்வமும், பக்தியும் இப்பொழுதில்லை. 

தம்பி - தெரியாதவர்க்குச் சொல்லலாம். வம்பை விலை கொடுத்து வாங்கிச் சட்டம் பேசுபவர்களை விலக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு விளக்கம் சொன்னால், நமக்குத் தொந்தரவு வரும்.

அண்ணன் - இன்று நம் நாட்டில் வசதி அதிகமாக இருக்கிறது.

தம்பி - புள்ளி விவரம் சொல்லவில்லை.

அண்ணன் - அது விவரமில்லாத புள்ளி. அதனால் சொல்ல முடியாது. அதை World Bank மாற்றியது உனக்குத் தெரியாதா? 384 டாலரிலிருந்து $ 1200க்கு இந்தியா வந்துவிட்டது.

தம்பி - இதுமட்டும் சரி என எப்படி ஏற்பது?

அண்ணன் - நம் நாடு வசதியாகிறது என்பதை உன்னால் ஏற்க முடியுமா?

தம்பி - கடைத் தெருவைப் பார்த்தாலே தெரியுதே. மாமா சொல்வார் அவர் நாளில் சர்க்கார் ஆபீசர் வீட்டில், வக்கீல் வீட்டில் ஒரு மேஜைதான் இருக்கும். சிலர் வீட்டில் அதுவுமிருக்காது. இப்போது குமாஸ்தா வீட்டில் சோபா இருக்கிறது.

அண்ணன் - Standard of living வாழ்க்கைத் தரம் உயர்ந்ததை மறுக்க முடியாது. இந்தியப் பொருளாதாரப் பேராசிரியர் ஒருவரை இது எப்படி நடந்தது என்று கேட்டபொழுது அவரிடம் பதிலில்லை.

தம்பி - இந்த விஷயம் உலகில் எந்த economist பொருளாதார நிபுணரும் சொல்லவில்லையே. பலர் பல காரணங்களைச் சொல்கிறார்கள். ஒருவர் கூறுவதை அடுத்தவர் மறுக்கிறார்.

அண்ணன் - அன்று (1950இல்) ஒரு வேளைச் சாப்பாடு கிடைத்தால் போதும் என்று நினைவு. இன்று முதல் காரியமாகச் சினிமா பார்க்கணும், ஹோட்டலுக்குப் போக வேண்டும், T.V. இல்லாமல் முடியாது என்பது மனநிலை. அதனால் கூலி ஏறுகிறது. தரம் உயர்கிறது.

தம்பி - எங்கிருந்து அந்த உபரிப் பணம் வந்தது?

அண்ணன் - இல்லாமல் முடியாது என்றால் அதிகமாக உழைக்கத் தயாராகிறான். பணம் வருகிறது.

தம்பி - இது கீதை வாசகமாயிற்றே "நீ எதாக மாற நினைக்கிறாயோ, அதாக மாறலாம்" என்று கூறுகிறதே, அதுவா?

அண்ணன் - கீதைப் பிரசங்கம் செய்பவர்களும் இதை விட்டு விடுவார்கள். அன்று வெறுஞ்சொல். இன்று நடைமுறை. நான் உலகத்தைப் பற்றிப் பேசவில்லை. அன்பர்களைப் பற்றிச் சொல்கிறேன். பொதுவாக அன்பர்கள் வாழ்வில் பராமுகமாக இருக்கிறார்கள். அன்னையின் சக்தியை அறிவதில்லை. 2 மடங்கு, 10 மடங்கு வேண்டும் என்ற ஆர்வமிருந்தால், அதற்கான முயற்சியிருந்தால் கிடைக்கும் எனத் தெரியாது என்பதே உண்மை.

தம்பி - பணம் வேணும் என்று முயன்றால் வருமா?

அண்ணன் - அப்படிச் செய்தாலும், முயற்சிக்குப் பலன் உண்டு. ஏன் சரியாகச் செய்யக் கூடாது? என் குடும்பம் உயர்வடைய வேண்டும். குழந்தைகள் பெரிய படிப்புப் படிக்க வேண்டும். வசதி இருக்க வேண்டும். அதற்காக உபரி வருமானமும் வேண்டும். அது அருள். அதைப் பெற நான் எந்த முயற்சியையும் எடுக்க வேண்டும் என்பது சரியான மனநிலை.

தம்பி - அன்பராக இருப்பதால் என் நிலை 10 மடங்கு உயர்வதால், அருள் பலரையும் போய்ச் சேரும் என்பது நல்லதல்லவா?

அண்ணன் - நல்ல மனப்பான்மையுடன் செய்தால் அது உயர்ந்ததுதான். உலகம் முன்னுக்கு வந்தது முயற்சியால்தான். அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். ஓர் அன்பர் பெறுவது உலகம் பெறுவதாகும். உடல் நலம், படிப்பு, பண்பு, குணம், நிம்மதி, உயர்வு எல்லாவற்றிற்கும் அடிப்படை பணம். அதைப் பெற முயல்வது சரி, அவசியம். பணத்தாசையில்லை இது. மனம் பணத்தை ஆசையாக நாடுவது சரியில்லை. அவசியமாக நாடுவது சரி, ரொம்பவும் சரி. அருளாக நாடுவது புனிதச் செயல், யோகம், சொல்லப் போனால் அதுவே யோக வாழ்க்கை.

தம்பி - இது தவறு என்று சொல்கிறார்களே!

அண்ணன் - உனக்கு இது தவறா? இல்லை என்றால், போய் அதைச் செய். தவறு என்பவர் பல வகைப்பட்டவர்கள். நாம் அவ்வகையில் சேரக் கூடாது.

  1. விவரம் தெரியாத நல்ல மனிதர்.
  2. மரபை மூட நம்பிக்கையாகப் பின்பற்றுபவர்.
  3. சம்பாதிக்கத் திறமையில்லாதவர்.
  4. மனம் நிறைய ஆசையும், வாய் நிறைய பொய்யும் சொல்பவர். இவர்கள் பட்டியலில் நாம் சேரக்கூடாது. பணம் இறைவனுக்குரியது என்று அன்னை கூறிய பின் ஏன் பேச வேண்டும்?

அன்பர்களைப் பொருத்தவரை இரண்டு முக்கிய விஷயம்.

  1. உலகம் மாறிவிட்டது. முயற்சி பலிக்கும்.
  2. எதையும் பூர்த்தி செய்ய அன்னை காத்திருக்கிறார். இவை இரண்டையும் புறக்கணிப்பவர் வாய்ப்பை இழப்பவர். அவரிடம் வாதாட வேண்டாம். 

தம்பி - இவ்வளவையும் கேட்டுக் கொண்டு என் பக்கத்து வீட்டுக்காரர், பணத்தை மனத்தால் உற்பத்தி செய்ய முடியும் என்பது என்ன என்றார்.

அண்ணன் - மந்திரத்தில் பெருந்தொகை எதிர்ப்பார்ப்பார்.

தம்பி - தம் அபிப்பிராயத்தை வேறு வகையாகச் சொல்கிறார்.

அண்ணன் - ஏன் அவரிடம் நீ இதைப் பற்றிப் பேசுகிறாய்? அப்படியெல்லாம் வாராது என்று சொல்வதுதானே?

தம்பி - நான் வேறொருவரிடம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு இதைக் கேட்டார்.

அண்ணன் - "அவருக்கு வரும். உங்களுக்கு வாராது" என்று சொல்லேன்.

தம்பி - முகத்தை முறித்துச் சொல்லாமல், நல்ல பதில் சொல்ல விரும்புகிறேன்.

அண்ணன் - அவரைக் கடையில் போய் உட்காரச் சொல்லு. தம் கடைக்கே போவதில்லை அவர்.

தம்பி - அப்படியெல்லாம் கடுமைப்படுத்தாமல், நல்ல பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்.

அண்ணன் - இது தவறான ஆசை என விட்டு விடு. அவர் கேட்கமாட்டார்.

தம்பி - அவர் மாற வழியில்லையா?

அண்ணன் - அவர் சோம்பேறி, விதண்டாவாதக்காரர். வீட்டிலிருந்து அவரை விரட்டினால் புத்தி வரும். மரியாதையாக நடத்தினால் சட்டம் பேசுவார்.

தம்பி - அவருக்குரிய இதமான வழியில்லையா?

அண்ணன் - அவரை நினைக்குந்தொறும் உன் நினைவு தவறு எனப் புரிந்தால் பலன் வரும்.

தம்பி - அப்படி ஒரு வாரம் செய்தேன். தொடர்ந்து கடைக்குப் போனார்.

அண்ணன் - அந்த வாரம் இந்த இடக்குப் பேச்சு பேசினாரா?

தம்பி - இல்லை. தத்துவம் என்ன சொல்கிறது?

அண்ணன் - நீ அவர் மனநிலையை உலகத்து மனநிலை என ஏற்று, அதுவே உன் மனநிலை எனவும் ஏற்றுச் சமர்ப்பணம் செய்தால் பலனிருக்கும். நாமெல்லாம் அன்னைக்கு அவர் போன்றவரே. வாழ்நாள் முழுவதும் பகவானும், அன்னையும் அதைச் செய்தனர். நீ அப்படிச் செய்தால் அன்னை செய்வது போலாகும். யோக வாழ்வை ஏற்பது என்றால் பிறர் வாழ்வை நம் பொறுப்பாக ஏற்பதாகும். It is to accept consciousness responsibility. செய்வது பெரிது. செய்வதானால், அவரிடம் சொல்லாமல் செய்ய வேண்டும்.

தம்பி - என் நண்பனிடம் இதை முயன்றேன். 1½ வருஷம் பெரும் பலனிருந்தது.

அண்ணன் - தொடர்ந்து செய்தால், அளவுகடந்தால், அவரால் தொந்தரவு வரும்.

தம்பி - அவர் அதற்குள் ஊரை விட்டுப் போய்விட்டார்.

அண்ணன் - தத்துவத்தைப் புரிந்து கொள்ளவும், நடைமுறை நம்மைப் பாதிக்காத அளவிலும் பயில்வது சரியாகும். Service must be impersonal, never personal. சேவை என்பதைப் பொதுவாகச் செய்ய வேண்டும். குறிப்பிட்டவருக்குச் செய்யக் கூடாது. அது நமக்குப் பொறுப்புள்ள இடத்தில் மட்டும் செய்யலாம். நாடு சுபீட்சமடைய நினைத்தால், அங்குப் பலன் தெரியும்.

தம்பி - அது எல்லா விஷயங்களிலும் தவறாமல் நடக்கிறது.

அண்ணன் - எல்லா அன்பர் மனத்தில் எழும் நல்ல எண்ணங்களை அன்னை உலகில் பொதுவாகப் பூர்த்தி செய்கிறார். நாம் அதைக் கவனிப்பதில்லை.

தம்பி - ஏன், பல பேர் அப்படிச் சொல்கிறார்களே.

அண்ணன் - நல்ல எண்ணம் தவறாது பலிக்கும். நாம் செய்கிறோம், நாம் செய்ய வேண்டும் என்ற நினைவு வரக்கூடாது. அதுதான் தவறு. பக்கத்து வீட்டுக்காரர் வம்பு பேசுபவர்.

தம்பி - அவர் வம்புக்காரர் என்பதால்தான் எனக்கு அவர் முக்கியம். ஏன் இவர் நம்மைச் சந்திக்கும்படி அமைந்தது? இவரை மாற்றக்கூடாதா? என நினைக்கிறேன்.

அண்ணன் - உனக்கும் அவர் குணம் கொஞ்சம் உண்டு. அதனால்தான் அவர் வருகிறார்.

தம்பி - அப்படியானால், அவரை மாற்ற முயல்வதைவிட என் குணத்தை மாற்றினால்,

அண்ணன் - அவர் வரமாட்டார் அல்லது மாறிவிடுவார். நல்ல எண்ணம் அரிது. நல்ல எண்ணமுள்ள இடத்திலும் அது குடும்பம் முழுவதும் இருக்காது. நல்லெண்ணத்திற்கு எதிராக நம்மிடம் உள்ள குணத்தை நம்மால் அறிய முடியாது. அன்பரொருவர் அதை அறிய முற்பட்டால், அவருடைய முன்னேற்றத்திற்கு அளவில்லை.

தம்பி - அது பல ரூபங்களில் பல காரணங்கட்காக எழுகிறது. நல்லவர் எனப் பலராலும் கருதப்படுபவரிடமே அக்குறை எழுகிறது. நல்லவர்கட்குத் தங்கள் முக்கியத்துவம் - பெருமை - சில விஷயங்களில் எழுந்து கெட்டவராக்கிவிடும்.

அழியா இலக்கியம்

அண்ணன் - அழியா இலக்கியம் எப்படி ஏற்படுகிறது, ஷேக்ஸ்பியர் எப்படி உயர்ந்த நாடகங்களை இயற்றினார் என ஸ்ரீ அரவிந்தர் எழுதியுள்ளார். இறந்தவருடைய ஆவி ஏன் உலவுகிறது என அக்கருத்தை முடிக்கிறார். கவி, பாத்திரங்களை ஏற்படுத்துகிறான். தற்கொலை செய்பவன் ஆவி உருவத்தை ஏற்படுத்துகிறான். பாத்திரம் அறிவுக்குப் புரியும். ஆவி கட்புலனுக்குத் தெரியும். மனிதனால் ஜட உலகத்தில் உற்பத்தி செய்யும் திறனைப் பெற முடியவில்லை என உபநிஷதம் கூறுகிறது. அதாவது மனிதனுடைய கற்பனை ஒரு நாற்காலியைப் போன்ற ஜடப்பொருளை உற்பத்தி செய்ய முடியாது. இப்பகுதியிலுள்ள கருத்தைப் பயன்படுத்தி நான், "மனிதனுடைய கற்பனை அறிவு அவனுக்குரிய எதிர்காலத்தை ஏற்படுத்தவல்லது" எனக் கூறப் பிரியப்படுகிறேன்.

தம்பி - Vol.12 Centenary setஇல் பக்கம் 33 முதல் 43 வரையுள்ள பகுதியைத்தானே குறிப்பிடுகிறீர்கள்.

அண்ணன் - ஆம்.

தம்பி - என்ன கூறுகிறார் எனச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

அண்ணன் - நான் ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசாமல், அன்பருக்குரிய கருத்தை மட்டும் கூறுகிறேன். மூலத்தைப் படித்தால் ஷேக்ஸ்பியர் விளங்கும்.

தம்பி - நான் அமர கவியாக முயலவில்லை. உயர்ந்த அன்னை வாழ்வை மட்டும் அறிய விரும்புகிறேன்.

அண்ணன் - நம் உடல் ஜடம், எண்ணம் சூட்சுமம், சத்தியஜீவியம் காரணதேகம் (causal body). கையால் செய்யும் வேலை அழியக் கூடியது. எண்ணம் நீண்ட நாள் நிலைக்கும். காரணதேகத்தால் செய்வது அழியாது.

தம்பி - எண்ணம் எப்படி?

அண்ணன் - எண்ணத்தில் இரு பகுதிகளுண்டு. தாழ்ந்தது ஜடம் (gross thoughts). உயர்ந்தவை சூட்சும எண்ணங்கள் (subtle thoughts). வீடு, நிலம், கடை, பொருள்களைப் பற்றி நினைப்பவை தாழ்ந்தவை. பண்பு, இலக்கியம், ஆன்மா பற்றி நினைப்பவை உயர்ந்தன.

எண்ணம் உயர்ந்து சூட்சுமமாகிவிட்டால் அது அழியாது. உயர்ந்த எண்ணம் காரண தேகத்தை எட்டினால் அது அமரத்துவம் பெறும்.

கவியின் எண்ணம் உயர்ந்து சூட்சுமமானால், அது அமரகாவியமாகும். ஷேக்ஸ்பியர் அப்படி எழுதினார்.

தம்பி - அமரகாவியத்திற்கும், அன்பர் வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்?

நாமெல்லாம் ஷேக்ஸ்பியர் ஆக முடியுமா?

அண்ணன் - ஷேக்ஸ்பியர் உலகுக்கு அமரகாவியம் எழுதினார். நாம் அன்னையின் அருளால் நம் வாழ்வை அமர காவியமாக்க முடியும்.

தம்பி - நம்ப முடியவில்லையே.

அண்ணன் - இது அன்பர் வாழ்வில் அடிக்கடி நடக்கிறது. நாம் புரிந்து கொள்வதில்லை. அமரகாவியம் என்றால் என்ன? இதுவரை உலகில் இல்லாத ஒன்றை நாம் நம்மைக் கடந்தது என்கிறோம். மனிதனைக் கடந்தது அமரத்துவம் வாய்ந்தது. காரியங்கள் கூடிவரும்பொழுது சட்டம் நமக்காக மாறுகிறது. ஓர் அன்பருக்காகச் சட்டத்தையே மாற்றும் அருள் அமரத்துவம் வாய்ந்ததல்லவா?

தம்பி - ஆம். அமரத்துவமில்லாமல் நடைமுறையை மாற்ற முடியாது. அன்பர்கட்குக் காரியம் கூடிவரும்பொழுது நடைமுறையிலில்லாத வழியாகவே வருகிறது. நான் இப்படிப் புரிந்து கொள்ளவில்லை.

அண்ணன் - அருள் அமரத்துவம் வாய்ந்தது. நம் வாழ்வில் அப்படிச் செயல்படுகிறது. நாம் பலனை மட்டும் கருதுவதால், அதன் தன்மையைக் காண்பதில்லை.

தம்பி - சரி, அமரத்துவம் நமக்கு என்ன செய்யும்?

அண்ணன் - நம் எதிர்காலத்தை நாம் மனதில் உருவாக்கும் பொழுது, வீடு கட்டுவோம், பணம் சம்பாதிக்க வேண்டும், பதவி வேண்டும் என்று நினைத்தால் வீடு ஜடமானது, பணமும், பதவியும் ஆசைக்குரியன. இவை தாழ்ந்த எண்ணங்கள், ஜடமானவை. அழியக்கூடியவை. மனிதன் உயர்வாக, இனிமையாக, சுத்தமாக, வசதியாக வாழ வேண்டும். அதற்குரிய பணவசதி வேண்டும் என்பது இலட்சியமான எண்ணம். இலட்சியம் ஜடமன்று, சூட்சுமம், காரணமுமாகக் கூடியது. நாம் நம்மை உடலாகக் கருதினால் அது ஜடமான அறிவு. ஆன்மாவாகக் கருதினால் சூட்சுமமான அறிவு. சைத்தியப்புருஷனாகக் கருதினால் காரண லோகத்திற்குரிய அறிவு. எண்ணம் உயர்ந்தால் அதன் சூட்சுமம் உயர்ந்து சத்தியஜீவியக் கருத்தாகும். பொதுவாக சொந்த வசதியை நாடுவது ஜடமான அறிவு. அனைவரும் உயர்ந்த வாழ்வை அடைய விரும்புவது சூட்சுமமான அறிவு. அது நாட்டுக்கும், மனித குலத்திற்கும் உரிய அறிவானால் தொடர்ந்து உயருகிறது.

தம்பி - ஆசையாக இல்லாமல், லட்சியமாக, அனைவருக்கும், உலகத்திற்குமாக நினைத்தால் கற்பனை ஜடமாகயிருந்து சூட்சுமமாகிவிடுகிறது.

அண்ணன் - சூட்சுமத்தில் உண்மையிருந்தால், நம்மைப் பொருத்த வரையில், அந்த எண்ணம் பலிக்கும் திறன் பெறுகிறது. அன்னை மீது நம்பிக்கையிருந்தால் எண்ணம் அமரத்துவம் பெறுகிறது. அதாவது எதிர்காலத்தில் பலித்துவிடும்.

தம்பி - என் எதிர்காலத் திட்டத்தை நான் இலட்சியமாக, ஆசையின்றி, தீட்டினால் அருள் அதனை நிறைவேற்றுகிறது என்கிறீர்களா?

அண்ணன் - ஆம். ஷேக்ஸ்பியர் உலகுக்கு அமரகாவியம் வழங்கினார். நாம் நமக்கு எதிர்காலத்தில் உயர்ந்த வாழ்வைத் தரமுடியும்.

தம்பி - நம் எண்ணம் இலட்சியமானதால், நமக்குப் பலிப்பது மற்ற அனைவருக்கும் பலிக்கிறது.

அண்ணன் - நாம் செய்ய வேண்டியது என்ன? Create a realistic plan. நம் சந்தர்ப்பம், திறமை ஆகியவற்றைக் கருதி நடக்கக்கூடிய திட்டத்தை மனதால் தீட்டினால், அருள் அதை நிறைவேற்றும்.

தம்பி - நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும். நடக்கக் கூடியதாக இருக்க வேண்டும், ஆசையால் செயல்படக் கூடாது, திறமையின் அடிப்படையில் திட்டம் இருக்க வேண்டும்.

அண்ணன் - அது பூர்த்தியாகும்பொழுது நாம் தீட்டிய அளவிலிருக்காது. எந்த அதிகபட்ச அளவில் பூர்த்தியாக வேண்டுமோ, அந்நிலையில் பூர்த்தியாகும். அதுபோல் திட்டங்கள் 15 மடங்கு, 24 மடங்கு, 366 மடங்கு உபரிப் பலனைத் தந்துள்ளன.

தம்பி - சூட்சுமம் நிபந்தனையிலிருக்கிறது.

அண்ணன் - நிபந்தனைகள் முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் தெளிவாக, சுருக்கமாகக் கூறினால், ஓர் அன்பர் இலட்சிய மனப்பான்மையுடன், திறமையின் அடிப்படையில் எதிர்காலத் திட்டத்தை கற்பனை செய்து சமர்ப்பணம் செய்தால், அத்திட்டம் அபரிமிதமாகப் பூர்த்தியாகும்.

தம்பி - "தான்” என்பது எழக்கூடாது, போட்டி, பொறாமை, கர்வம், அதிகாரம் வரக்கூடாது என்பது முக்கியம்.

கற்பனை

அண்ணன் - அதெல்லாம் நாம் சொல்ல வேண்டியதில்லை. அது உள்ளவரிடம் எனக்கு வேலையில்லை. ஒரு பொய் சொன்னால் அத்தனையும் மறைந்துவிடும். பொய் சொல்லக்கூடாது என்று சொல்லும் கடமை என்னுடையதன்று. கற்பனை செய்தால் போதுமா, நாம் எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் என்றும் நினைப்பார்கள்! அவர்களை நாம் கருத வேண்டாம்.

விஞ்ஞானி அன்பரானால், 5th dimension சூத்திரம் தெரியும் என்றேன். அது ஐன்ஸ்டீன் நிலை. குடும்பம் நடத்துபவர் தூய்மையானவரானால், வளமான எதிர்கால வாழ்வு அமையும் என்பதும், கவியான அன்பர் அமரகவியாகலாம் என்பதும் ஒரே மாதிரியான கருத்துகள்.

மனித வாழ்வில் நம்மை 10 நிலைகளிலும், ஷேக்ஸ்பியர், ஐன்ஸ்டீனை 100ஆம் நிலையிலும் வைத்துக் கணக்கிட்டால், அருள் தூய்மையான அன்பரை 100ஆம் நிலைக்கு உயர்த்தும்.

தம்பி - அப்படியானால் நாம் ஷேக்ஸ்பியர், ஜன்ஸ்டீன் போலாகலாம் என்று பொருளன்று, இல்லையா?

அண்ணன் - ஷேக்ஸ்பியர் உலகுக்குச் செய்ததை அருள் நமக்குச் செய்யும். நம் வாழ்வைப் பொருத்தவரை அதுபோன்ற உயர்வு அருளால் நமக்குக் கிடைக்கும்.

தம்பி - இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பிரித்துச் சொன்னால் நல்லது.

அண்ணன் - தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் உண்டு.

தம்பி - ஒருவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவருடைய பிரார்த்தனை ஜனாதிபதி மட்டும் அவருக்குச் செய்யக் கூடியதைச் செய்யும்.

அவருடைய வாழ்வில் ஜனாதிபதியின் அதிகாரம் போல் அருள் செயல்படும். அது அவரே ஜனாதிபதியாவது அன்று. அவர் வாழ்வில் ஜனாதிபதி செயல்படுவது போன்றது. அப்படியா?

அண்ணன் - ஷேக்ஸ்பியர் பாத்திரங்களை அமரராக்கினார். நம் கற்பனையை அருள் அமரராக்குகிறது. அதனால் பலிக்கிறது. பாத்திரங்கள் அமரரத்துவம் அடைவது போல் நம் கற்பனை அமரத்துவம் அடைகிறது.

தம்பி - இது முக்கிய வித்தியாசம். நாம் இப்படிச் சொன்னால், தாமே ஷேக்ஸ்பியராகலாம் எனப் புரிந்து கொள்வார்கள்.

அண்ணன் - அங்கும் ஓர் உண்மையிருக்கிறது. ஷேக்ஸ்பியர் பாத்திரங்கள் அமரராக்கியதுபோல் அருள் நம் கற்பனைத் திட்டத்தை அமுலாக்குவது, திட்டம் அமரத்துவம் பெறுவதாகும்.

தம்பி - அருளை நான் இதுவரை இப்படிப் புரிந்து கொள்ளவில்லை.

அண்ணன் - எல்லாத் துறைகளிலும், எல்லா அன்பர்கட்கும், எல்லா விஷயங்களிலும், அருள் வழங்குவது அமரத்துவம். நம் நிலை தாழ்ந்திருப்பதாலும், சூழ்நிலை பொய்யால் நிறைந்திருப்பதாலும், ஒரு சமயம் மட்டும் நமக்குப் பலன் வருகிறது. நமக்குப் பலன் மட்டும் முக்கியம் என்பதால் அதனுள் பொதிந்துள்ள ஆன்மீகச் சூட்சுமத்தை நாம் அறிய முற்படுவதில்லை.

தம்பி - அன்னை எனில் அமரத்துவம், ஆனந்தம் என்றாகிறது. ஆனால் அது பொய் சொல்லாதவருக்கு மட்டும் என்கிறீர்களே.

அண்ணன் - பொய்யிடம் அருள் வாராது. பிரார்த்தனைக்குரிய பலன் மட்டும் அப்பொழுது கிடைக்கும்

தம்பி - நாமெல்லாம் "பொய்யே சொல்ல மாட்டேன்" என்று பொய் சொல்பவர்கள்.

அண்ணன் - பிரார்த்தனையை மெய்யாகச் செய்வதால்தான் பலிக்கிறது. பிரார்த்தனை முடிந்தால் பழைய பழக்கம் வருகிறது. கற்பனை (imagination) என்பது பெருந்திறன். இறைவனுடைய கற்பனையால் காலம் எழுந்தது. மனிதனுடைய கற்பனையால் எதிர்காலம் எழுகிறது. கற்பனையின் திறன் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. நாம், வழக்கில், கற்பனைக் கோட்டை (fantasy) என்பதைக் கற்பனை என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். எதிர்காலத்தில் நடக்க இருப்பதை உருவகப்படுத்தும் திறன் கற்பனை என்கிறார் பகவான்.

கற்பனை, கற்பனைக் கோட்டையாக இல்லாவிட்டால், எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

தம்பி - நமது கற்பனை பலிக்க நாம் நம் திறமையை நம்புகிறோம்.

அண்ணன் - நமது திறமையை நம்புவதைவிட அன்னையை நம்பினால், அவர் அருளை நம்பினால் பலன் அதிகம். அது, முன் சொன்னதுபோல், இரு வகையாக நடக்கிறது.

  1. நம் திறமைக்கு வெற்றி, தோல்வியுண்டு. அருளுக்கு வெற்றி மட்டும் உண்டு.
  2. கற்பனை உண்மையாக மட்டும் இருந்தால், அக்காரணத்தால், மனிதனின் சிறு செயல், தெய்வத்தின் பெரிய செயலாக மாறுகிறது. (Finite into infinite) கற்பனையைப் பூர்த்தி செய்த அருள் அத்துடன் நிற்பதில்லை (mother begins where man ends). தொடர்ந்து முன்னேற்றம் எழும். அது முடிவற்றது. 

தம்பி - மனித செயலைத் தெய்வச் செயலாக மாற்றும் உபாயம் என்றே இதைக் கூறலாம். கற்பனைக்கு பகவான் சிருஷ்டித் திறனளிக்கிறார். கற்பனை உண்மையாக இருந்தால், இயற்கை (Becoming) செயல்படுவதற்குப் பதிலாக (Being in the Becoming) அதனுள் உள்ள சைத்தியப் புருஷன் (ஆன்மா) செயல்படுகிறான். வாழ்வு, யோகமாக மாறுகிறது எனலாம்?

அண்ணன் - அதுவும் சரியாகப்படுகிறது. இந்தியத் தத்துவ மரபு, யோக மரபின் சிறப்பை பகவான் குறிப்பிடும் பொழுது இறைவனின் இவ்விரு நிலைகளைக் (Being, Becoming) குறிப்பிடுகிறார். விஞ்ஞானி ஒன்றை மட்டும் கருதுவதால் விஞ்ஞானம் வழி தவறுகிறது எனவும் கூறுகிறார்.

தம்பி - குடும்பம் நடத்தும் அன்பர், இடைவிடாது அன்னை அவன் வாழ்வில் செயல்பட நிதானம், பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதன் மூலம் (Being) இறைவனின் முதல் நிலையை பகவான் வாழ்வில் கொண்டு வருகிறார்.

அண்ணன் - நடைமுறையைக் கருதும் குடும்பஸ்தன் படபடப்பாக இருக்கிறான். படபடப்பு வேண்டாம் என்பவன் துறவியாகிறான். படபடப்பு இல்லாவிட்டால் குடும்பம் நடத்துவது யோக வாழ்வு என்கிறார் பகவான். இறைவனை வாழ்வில் செயல்பட வைப்பது யோக வாழ்வாகும்.

தம்பி - அதற்கு பகவான் விதிக்கும் நிபந்தனை கசக்கிறது. எதிரியை நண்பனாகவும், வெறுப்பை விருப்பாகவும், நம்மை அழிக்க வருபவனை ஆக்க புருஷனாகவும் கருத வேண்டும் என்பது கசப்பான நிபந்தனை.

அண்ணன் - அதுவே Life Divineஇல் முதல் அத்தியாயம். அதுவே முடிவான ஞானம். துறவி தேடுவது ஆத்ம ஞானம். பூரணயோகி நாடுவது முடிவான ஞானம். ஆத்ம ஞானம் மோட்சம் தரும். முடிவான ஞானம் வாழ்வில் பூரணம் தரும்.

தம்பி - மனிதன் குறையுடையவன். மனிதன் அன்பனானால், நிறைவுடையவனாகிறான். தன்னை நம்பி வாழும் மனிதன் அன்னையை நம்பி வாழ்ந்தால் நிறைவு பெறுகிறான்.

அண்ணன் - யோகம், துறவறம், இல்லறம், இல்லறத்தில் துறவறம் என்ற பல கருத்துகளில் அன்பருக்குரியது இல்லறத்தில் துறவறம் என்பது.

இல்லறத்தில் துறவறம் என்ற கருத்தை உச்சக்கட்டத்தில் யோகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் நடத்தலாம். குறைந்தபட்சக் கட்டத்தில் பிரார்த்தனையால் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாழ்வாகவும் நடத்தலாம். இவற்றிடையே உள்ள நிலையை நான் சில வாக்கியங்களாகக் கருதுகிறேன்.

  1. உச்சக்கட்டம் உயர்ந்தோர்க்குரியது.
  2. குறைந்தபட்சம் அனைவர்க்கும் உரியது.
  3. இடைப்பட்டது ஏன் சிறந்தது எனில் முயற்சி உடையோரை உச்சக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லவல்லது. அதன் சிறப்பம்சங்களை மட்டும் கூறுகிறேன். அவை இன்றைய மனித வாழ்வில் நம் நாட்டில் மட்டுமன்று, எந்த நாட்டிலும் இல்லாதது.
    • இலட்சியவாதி அனைவரையும் போலிருக்க முயலக்கூடாது.
    • உள்ள திறமைகளைப் பூர்த்தி செய்யவும், புதுத் திறமைகளை உற்பத்தி செய்யவும் முயல வேண்டும்.
    • சம்பளக்காரன், தொழிலபதிராக வேண்டும்.
    • நம்பிக்கையை அன்னை மீது வைத்தால் வாழ்வு சிறந்து உயர்ந்தபடியிருக்கும்.
    • திறமையும், நேர்மையும் தோல்வியுறாவிட்டால், வாழ்வின் உயர்வுக்கு முடிவில்லை.
    • வாழ்வில் லட்சத்திலொருவருக்குக் கிடைப்பதை அன்னை எல்லா அன்பருக்கும் வழங்குவதை நாம் புறக்கணிக்கக் கூடாது.
    • இதனடிப்படையில் ஏற்படும் வாழ்வு பிறருக்கு அதிகபட்ச அம்சம் அன்பருக்குக் குறைந்தபட்ச அம்சமாக அமையும். நேரு மத்திய மந்திரி சபையில் ரத்தினம், நேருபோல் ஒருவர் கடந்த 50 ஆண்டில் எழவில்லை. வாழ்வில் மந்திரி சபையில் ஒரு நேரு இருப்பார்.

அன்பருடைய மந்திரி சபையில் கடைசி மந்திரியே நேருபோல் அமைவார்.

100% பாஸ் செய்யும் பள்ளியிலும் மாணவர்கள் 100 முதல் 35% வரை மார்க் வாங்குவார்கள். அன்பர் அப்பள்ளியை நடத்தினால் 100% பாஸ் வரும். கடைசி மார்க் 60%ஆக இருக்கும். ஓர் அன்பர் இந்தச் சோதனையையும் செய்து பார்த்து வெற்றி கண்டார். சராசரி மார்க்கே அவருக்கு 60% ஆயிற்று. To render the maximum minimum is the part of the Mother.

வாழ்வின் உச்சக்கட்டப் பலனை அன்பரின் குறைந்தபட்சப் பலனாக மாற்றுவது அன்னை அருள். லண்டன் பள்ளிகளில் முதல் 5 வகுப்பு நடத்துபவரும் M.A. பெற்றிருப்பார்கள். சிறப்பான பள்ளிகளில் Ph.D. பெற்றிருப்பார்கள். நம்மூரில் தற்சமயம் SSLC படித்தவரும், முன்பு 8 வகுப்பு படித்தவரும், 50 ஆண்டுக்கு முன் 5 வகுப்பு படித்தவரும் முதல் 5 வகுப்பு நடத்தினர்.

தம்பி - ஷேக்ஸ்பியர், சீனுவாச ராமானுஜம், ஐன்ஸ்டீன் மனிதகுல மாணிக்கங்கள். அன்னையின் இலட்சியம் உலகில் பூர்த்தியானால் எல்லா மனிதரும் இவர்கள் போலிருப்பார்கள். ஆரம்பத்தில் இம்மேதைகள் பெற்றிருந்த பெருந்திறன் அன்பர் முழு முயற்சியுடன் செய்யும் காரியங்களில் வெளிப்படும் என்று கூறலாமா?

அண்ணன் - அன்பர், அவர் சிறப்பான இடத்தில், உலகில் சிறப்பானவரின் பலன் பெறுவார். நாமே ஐன்ஸ்டீன் ஆவது வேறு. நம் பெரு முயற்சியுள்ள இடத்தில் ஐன்ஸ்டீன் பெற்ற பலன் பெறுவது வேறு.

தம்பி - ஓர் உதாரணம் கூறுகிறேன். சரியா எனச் சொல்லுங்கள். நாட்டுப் பார்லிமெண்டில் பேச MPக்களுக்கு மட்டும் உரிமையுண்டு. வெளிநாட்டுப் பிரதம மந்திரி வந்தால், ஜனாதிபதி வந்தால் அவர்களை பார்லிமெண்டில் பேச அழைப்பார்கள். உலகப் பிரசித்தி பெற்றவர்களையும் அதுபோல் பார்லிமெண்ட்டில் அழைத்துப் பேசச் சொல்வதுண்டு. இது பெருஞ்சிறப்பு. இதனால் பேச்சாளர், "பிரதம மந்திரி', "ஜனாதிபதி"யாகி விடமாட்டார். அவர்கட்குள்ள மரியாதையைப் பெறுகிறார்.

அண்ணன் - சரியான உதாரணம், அருள் அன்பருக்கு அதிகபட்சம் வழங்குகிறது. அதைப் பெற முயற்சி தேவை. மனிதன் ஏதாவது ஒரு விஷயத்தில் முழு முயற்சி எடுக்கலாம். எல்லா விஷயங்களிலும் எடுப்பதில்லை.

தம்பி - எல்லா விஷயங்களிலும் முழு முயற்சி எடுத்தால், எடுப்பதாக வைத்துக் கொண்டால்?

அண்ணன் - அப்படிப்பட்டவருக்குப் பலன் என ஒன்றில்லை. அவர் மனம் பலனைத் தேடாது. நான் பலனை நாடும் நம் போன்றவரைக் குறிக்கிறேன். அப்படிப்பட்டவர் தேடும் பலனை பகவான் எழுதுகிறார்.

"உன் சரணாகதியை அன்னை ஏற்றபின் உனக்கு வேறென்ன வேண்டும்?" என்கிறார் பகவான்.

முழு முயற்சியை எல்லாத் துறைகளிலும் எடுப்பவர் அன்பர் நிலையிலிருந்து சாதகராகிவிடுகிறார். அது யோகம் பலிக்கும் நிலை. நான் கூறுவது யோக வாழ்க்கை.

தம்பி - யோக வாழ்க்கை என்பது யோகத்திற்கு மனிதனைத் தயார் செய்கிறதா?

அண்ணன் - ஆம்.

தம்பி - நீங்கள் சொல்லும் சட்டப்படி அன்பர் என்ற பட்டம் பெற அருளைப் பெரிய அளவில் பெற வேண்டும். ஏதாவது ஒரு செயலிலாவது உச்சக்கட்டப் பலனைப் பெறாமல் அன்பராக முடியாது என்று கூறுகிறீர்கள்.

அண்ணன் - அன்னையை வணங்குபவர்கள் அனைவரும் அன்பர் என்கிறோம். நீ கூறுவதே அன்பருக்கு இலட்சணமாகும். அந்த இலட்சணத்தின் பகுதிகள்

  • பிரச்சினை இருக்கக் கூடாது.
  • வாய்ப்பை நழுவ விடக்கூடாது.
  • உச்சக்கட்டப் பலனை ஒரு விஷயத்திலாவது பெற வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தரின் இலட்சியம்

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் இலட்சியம் சத்திய ஜீவன் supramental being பிறப்பது. மனிதன் சத்திய ஜீவனானால், 30,000 ஆண்டுகளைக் கடந்து செல்வான். அவனுக்கு மரணமில்லை. நோய், வலி, துன்பமில்லை. அவனது பரிணாம வளர்ச்சி அறியாமையிலிருந்து அறிவுக்குப் போவதற்குப் பதிலாக அறிவிலிருந்து, பேரரறிவுக்குப் போகும். ஏசு சொன்ன Kingdom of God இறைவனின் ஆட்சி எழும். இப்பொழுது அது இல்லை. அதற்கு 12 ஸ்ரீ அரவிந்தர்கள் தேவை. அதற்கடுத்தபடி நாம் செய்யக்கூடியது இல்லையா? செய்யக் கூடியதில்லை என்றாலும் கருதக்கூடியதில்லையா?

அண்ணன் - சத்தியஜீவனுக்கு அடுத்தபடியாக இலட்சிய மனிதனைச் சொல்லலாம். இன்று உலகில் அதைச் சாதிக்க எல்லா வசதிகளும் உள்ளன. மனித குலம் இக்கருத்தை ஏற்றால் உடனே அது நடக்கும்.

தம்பி - Universal Man என ஸ்ரீ அரவிந்தர் கூறுவதைச் சொல்கிறீர்களா?

அண்ணன் - அதுவும் ஆன்மீக லட்சியம். நான் சொல்வது மிக எளியது. Rational man அறிவுடைய மனிதன் எனக் கூறலாம். Mental man, a humane human being மனிதத் தன்மையுள்ள மனிதன் எனலாம். விலங்குபோல் வாழும் மனிதன், மனிதனாக வாழ முயல்வது மிகச் சிறிய லட்சியம், நடக்கக் கூடியது.

தம்பி - அது நடந்தால் உலகம் எப்படியிருக்கும்?

அண்ணன் - ஆசிய நாடுகளில் வறுமையும், அமெரிக்கா, ஐரோப்பாவில் வன்முறையும், உலகில் போரும், ரஷ்யாவில் களேபரமும், எந்த நாட்டிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கா.

தம்பி - இவ்வளவும் முடியுமா?

அண்ணன் - பையன் கெட்டிக்காரன். படிப்பதில்லை. பள்ளிக்குப் போவதில்லை. படித்தால் முதல் மார்க் வாங்குவான். பாஸ் செய்வது சுலபம். உடல் வளைந்து படிப்பதில்லை என்பதே பிரச்சினை போன்றது உலகத்துப் பிரச்சினை.

இல்லாதவன் பட்டினியாக இருப்பது பிரச்சினை. இருப்பவன் பட்டினியிருப்பதைப் பிரச்சினை எனக் கூற முடியுமா?

தம்பி - பாஸ் செய்யக் கூடிய பையன் அலட்சியமாகப் பெயிலாவதுபோல்தான் இன்றைய உலகத்துப் பிரச்சினைகளிருக்கின்றன எனக் கூறுகிறீர்களா?

அண்ணன் - தீர்க்க வழி தெரியவில்லை என்பதைப் பிரச்சினை எனலாம். தீர்க்க வழியுள்ளபொழுது, அதைத் தீர்க்காமலிருந்தால் அது எப்படிப் பிரச்சினையாகும்?

தம்பி - ஆசிய வறுமை தீர்க்கக் கூடியதா?

ஐரோப்பாவில் வேலையில்லை என்பது தீருமா?

அமெரிக்கா வன்முறை அடங்க வழியுண்டா?

ரஷ்யாவில் அராஜகம் அடங்குமா?

நம்ப முடியவில்லையே. உலகத் தலைவர்களுக்குத் தெரியாதா?

அண்ணன் - ஆசியாவில் நிலத்தில் ஐரோப்பா போல் டீ பங்குதான் உற்பத்தியாகிறது. 4 மடங்கு உபரி உற்பத்தியானால் வறுமையிருக்குமா? பலரும் செய்ததைப் பார்த்துச் செய்ய முடியவில்லை என்றால் அது பிரச்சினையாகுமா?

பருத்தி பயிரிட நாம் கலிபோர்னியாவைப்போல் 35 மடங்கு தண்ணீர் செலவு செய்துவிட்டு, தண்ணீர் பஞ்சம் என்று பேசலாமா?

100 ஆண்டுகளுக்கு முன் வழி தெரியவில்லை. பிளேக் காலரா, அம்மை, நம்மை வாட்டின. உலகம் இன்று சாதித்ததை நாம் பார்த்துச் செய்ய முடியவில்லை என்றால் அது பிரச்சினை என ஏற்க முடியாது.

தம்பி - வேலையில்லாத் திண்டாட்டம்?

அண்ணன் - புது மெஷின் வந்தால் 100 பேர் வேலையை 1 ஆள் செய்கிறான். 100 பேருக்கு வேலை போகிறது. அதனால் வேலையில்லை என்பதை எப்படி ஏற்பது?

தம்பி - அதுதானே உண்மை?

அண்ணன் - விஷயமே இங்குதானேயிருக்கிறது. மனிதன் என்றால் என்ன? Physical man உடலால் வாழும் மனிதன் என்ன செய்கிறான்?

தம்பி - உடலுக்கு ஊறு வாராமல் பாதுகாக்கிறான்.

அண்ணன் - வலுவானவன் பலமில்லாதவர்களை விரட்டிவிட்டு அல்லது கொன்றுவிட்டுத் தன் உடலுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளலாமல்லவா?

தம்பி - அது எப்படி? மனிதத் தன்மையில்லையா? எல்லா மக்களும் பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா?

அண்ணன் - புது மெஷின் வந்து 100 பேர் வேலையை ஒருவர் செய்யலாம் என்றால், 99 பேரை வேலை நீக்கம் செய்வதா? அல்லது அத்தனைப் பேருக்கும் 1/100 வேலையைக் கொடுப்பதா?

தம்பி - வந்த டெக்னாலஜியை ஒருவனே அனுபவித்தால் வேலையில்லை. அனைவரும் அதன் பலனைப் பெற்றால் அனைவருக்கும் வேலை பளு குறையும். மக்கள் முன்னேறுவார்கள். சம்பளம் உயரும். அதுதானே மனிதத்தன்மை என்று கூறுகிறீர்களா?

அண்ணன் - ஏன் ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்தார்கள்?

மனிதன் உயிரோடு இருந்தால்தானே வாக்குரிமைக்கு அர்த்தம். வேலை செய்ய மனிதனுக்கு உரிமை வேண்டும். Guaranteed employment சர்க்கார் சட்டம் போட்டு அனைவருக்கும் வேலை செய்யும் உரிமை வழங்கவேண்டும்.

தம்பி - வேலையில்லாமல் மனிதத்தன்மை வருமா? ஆமாம், அது அடிப்படை உரிமைதான். அது நமக்குத் தெரிவதில்லை. இருக்கும் வேலையை எல்லோரும் செய்யவேண்டும். அதுவும் பணக்கார நாட்டில் ஏன் வேலையில்லை என்ற பிரச்சினை? ஹாலந்திலும், அமெரிக்காவிலும் எந்தச் சட்டமும் போடாமல் வேலையில்லை என்ற நிலைமை மாறிவிட்டதே. அமெரிக்காவில் வன்முறை ஒழியுமா?

அண்ணன் - சிங்கப்பூரிலும், ஐரோப்பாவிலும் ரோட்டில் காரைத் தாறுமாறாக ஓட்ட முடியாது. உடனே போலீஸ் பிடிக்கும். நம் நாட்டிலும் அதே சட்டம்தான்.

தம்பி - ஆனால், அமுல்படுத்துவதில்லை.

அண்ணன் - அமெரிக்காவில் உள்ள சட்டத்தை டிராபிக் போலீஸ் அமுல்படுத்துவதுபோல் கண்டிப்பாக அமுல்படுத்தினால், வன்முறையிருக்காது. அங்கு 16 வயதுவரை கட்டாயக் கல்வி. கட்டாயக் கல்வி நிலையைப் பட்டப்படிப்பு ஆக்கினால், வன்முறையிருக்காது. 10 வருஷமாகப் படிப்பு உலகெங்கும் பரவுகிறது. இராணுவச் செலவு 1/3 பாகம் குறைந்தது. அனைவரும் குறைந்தபட்சம் பட்டம் பெற வேண்டுமெனச் சட்டம் போட்டால், படிப்பு உயரும். வன்முறை படிக்காதவனால்தானே வருகிறது? படிப்புக்கு எல்லா வசதிகளும், பணமும் உள்ளபொழுது ஏன் கட்டாயமாகப் படிக்கச் சொல்லக் கூடாது? உணவுப் பிரச்சினையைப் போல்தான் இது. 10 வருஷத்திற்கு முன் உணவு பஞ்சத்தால் உலகம் அழியப்போகிறது என்றார்கள். உற்பத்தியை இரு மடங்காக்க வேண்டும் என்று பேசவே மறுத்தார்கள். இப்பொழுது அதைப் பற்றிப் பேசவேயில்லை. போதுமான உணவிருக்கிறது என்கிறார்கள். உலகம் ஜனத்தொகை 7 மடங்கு பெருகினாலும் உணவை உற்பத்தி செய்ய முடியும் என்று கருதுகிறது.

சைனாவில் 1 நகரம் ஏற்றுமதி செய்வது இந்தியாவின் மொத்த ஏற்றுமதிக்குச் சமம். ஏற்றுமதி செய்ய ஏராளமான இடம் உள்ளது. முடியும் என்பதைச் செய்யாமல் பிரச்சினை எனப் பேசுவது சரியா?

தம்பி - புதிய டெக்னாலஜி ஏராளமான வசதியைக் கொண்டு வந்துள்ளது.

அண்ணன் - சத்தியஜீவனுக்கு அடுத்தபடியான இலட்சியம் கேட்பாயல்லவா?

நாம் மனிதர், அறிவோடு நடக்கலாமல்லவா?

மனிதனை மையமாக வைத்துப் பேசுவது சரியல்லவா!

அவனை மையமாக்கினால் முதலில் அவனுக்கு வேலையை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

தம்பி - சாப்பாட்டிற்கும், வேலைக்கும் பிரச்சினையில்லை என்றால் பெரிய நிம்மதி.

அண்ணன் - உலகம் ஓர் இலட்சியத்தை ஏற்க வேண்டும், நாம் விலங்குபோல் வாழக்கூடாது, மனிதனைவிடப் பணத்தையும், டெக்னாலஜியும் முக்கியம் என்று நினைக்கக்கூடாது. பணமும், டெக்னாலஜியும் மனிதன் உற்பத்தி செய்தவை. எனவே

மனிதனே முக்கியம்

என்பது இலட்சியமானால், இன்றுள்ள அத்தனைப் பிரச்சினைகளும் உடனே தீர்க்கக்கூடியவை.

தம்பி - சத்திய ஜீவன் பெரிய விஷயம்.

மனிதத் தன்மையுள்ள மனிதன் வேண்டும் என்பதே இன்றைய இலட்சியமானால், உலகில் பிரச்சினைக்கு வழியில்லையா?

ரஷ்யாவில் அராஜகம் எப்படித் தீரும்?

அண்ணன் - ரஷ்யா பெரும் படிப்புள்ள நாடு, மக்கள் பேர் உழைப்பாளிகள். கம்யூனிசத்தை விலக்கிவிட்டு வழி தெரியாமல் குறுக்கு வழியில் போய்த் தவிக்கின்றார்கள். இரு வகைகளில் அப்பிரச்சினையைத் தீர்க்கலாம்.

1) உலகம் ரஷ்யாவை முன்னேற்ற முயன்றால், ரஷ்யா உடனே எழும். அது உலகத்திற்கு பெரும் பலன் தரும்.

தம்பி - மார்ஷல் பிளான் மூலம் ஏற்கனவே செய்ததுதானே, புதிதல்லவே. ஐரோப்பாவைச் சீர்திருத்தியதுபோல் ரஷ்யாவை நிமிர்த்துவது முடியும்.

அண்ணன் - (2) மற்ற நாடுகள் போன வழியை விட்டு குறுக்கு வழியில் ரஷ்யா போவது தவறு என்று தெரிந்தால், உடனே நிலைமை மாறும். மனித இலட்சியம் நிறைவேறினால் ஸ்ரீ அரவிந்தரின் இலட்சியத்திற்கு வழி பிறக்கும். ஸ்ரீ அரவிந்தர் human evolution மனிதப் பரிணாமத்திற்குச் சொல்லியிருப்பதை social evolution சமூக வளர்ச்சிக்குப் பொருத்திப் பார்த்தால் மனித இலட்சியம் நிறைவேறும். அடுத்தது தெய்வ இலட்சியம்.

தம்பி - உலகம் ஸ்ரீ அரவிந்தரை மனித முன்னேற்றத்திற்கு ஏற்க வேண்டும் என்றால் Life Divineஐ மாற்றி சமூகக் கண்ணோட்டத்தில் எழுத வேண்டும்.

அண்ணன் - Theory of Development சமூக முன்னேற்றத் தத்துவம் என்பது அதுதான்.

தம்பி - அதன் சுருக்கம் என்ன?

அண்ணன் - வரும் நூற்றாண்டை மனிதனுக்குரியதாக்கி, வேலைக்கு உத்தரவாதமளித்து, கல்வித் தரத்தை உயர்த்தி, உற்பத்தியை உபரியாகப் பெருக்கினால், உள்நாட்டுக் கலவரம், வன்முறை அழிந்து மனித இலட்சியமும் பூர்த்தியாகும்.

தம்பி - இதெல்லாம் சுலபமாக எல்லா நாடுகளும் செய்யக் கூடியவைதாம்.

அண்ணன் - பிரச்சினை தாங்க முடியாத தொந்தரவு ஆகும்வரை மனிதன் அசையமாட்டான் தாங்க முடியாத பிரச்சினை வரும்பொழுது எப்படியாவது அதைத் தீர்க்க முனைவான். பிரச்சினையைச் சரணாகதி செய்யத் தோன்றாது.

தம்பி - 10 லட்சம் கடன் வாங்கி 15 லட்சம் வட்டியாகி 25 லட்சத்திற்கு நோட்டீஸ் வந்தால் 20 லட்சம் சொத்துள்ளவன் என்ன நினைக்கிறான். 5 லட்சம் வட்டி தள்ளிக் கொடுத்தால் சொத்தை விற்றுக் கடனை அடைக்கலாம். ஜெயிலுக்குப் போக வேண்டாம். அதுவே அருள் எனக் கருதி பிரார்த்திக்கின்றான். அவன் வேறு என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்?

அண்ணன் - அவனுக்குத் தெரிந்த தீர்வை மனதில் முடிவாகக் கொண்டு அது பூர்த்தியாகப் பிரார்த்திக்கின்றான்.

தம்பி - ஆமாம். அப்படி விடுபட்டால் போதும் என்றுதானே மனிதன் கருதுவான்.

அண்ணன் - அன்னையிடம் வந்தபின், அன்பருக்கு இந்நிலை வாராது. அப்படி வந்திருந்தால், தம்பி, மகன், நண்பன், கூட்டாளிகள் விஷயத்தில் தலையிட்டதால் வந்திருக்கும். அல்லது இப்பிரச்சினையால் அன்னையிடம் இப்பொழுதுதான் வந்திருப்பார். தான் முடிவு செய்து அது பூர்த்தியாகப் பிரார்த்திப்பது சரணாகதியாகாது.

தம்பி - என்ன செய்ய வேண்டும்?

அண்ணன் - இந்தத் தீர்வு போதும் என்பவர் அதைச் செய்யலாம். ஆனால் அது முறையன்று. எப்படி 10 லட்சம் கடன் வந்தது? ஏன் 15 லட்சம் வட்டியாயிற்று என்ற விவரங்கள், குறிப்பாகக் கடன் வாங்கிய மனநிலைகளைக் கண்முன் கொண்டு வந்து, இப்பொழுது மனம் மாறி, பிறகு சமர்ப்பணம் செய்வது சரணாகதியாகும்.

தம்பி - நமக்குத் தெரிந்த சில விஷயங்களேயிருக்கின்றனவே. கடமையைப் பூரணமாக நிறைவேற்ற முடிவு செய்த பக்தர் தமக்குப் பாதி உரிமையுள்ள சொத்தில், எதிரி கோர்ட்டுக்குப் போனபின் மேற்சொன்னது போல் சரணம் செய்தார். அவருக்கு முழுச்சொத்தும் வந்ததே. அவராக அதை நினைத்திருக்க முடியாதே.

அண்ணன் - அத்துடன் 3 பெரிய விஷயங்கள் நடந்தனவே. பாங்க் லட்ச ரூபாய் வட்டியை எதிரிக்குத் தள்ளிக் கொடுத்தது. அது அன்பருக்கு ஆதாயமாயிற்று. சட்டம் போட்ட வழியில் 2 லட்சம் stamp fees இல்லாமல் சொத்து வந்தது. இந்த இருபெருஞ் சௌகரியங்களுடன், இவரே நிலத்தை வாங்க வழக்கத்திற்கு மாறாகப் பாங்க் பணம் கொடுத்தது. அன்பராக ஒரு முடிவுக்கு வந்திருந்தால் இவற்றுள் எதையும் நினைத்திருக்க முடியாது.

தம்பி - 10 லட்சத்திற்கும் 15 லட்ச வட்டிக்கும் என்ன வரும்?

அண்ணன் - என்ன வரும் என்று சொல்ல நடந்த விவரம் தெரியவேண்டும். அன்னைச் சட்டம் சொல்லலாம். வாங்கியவர் தன் தவறு முழுவதையும் மனதால் ஏற்று, வாங்கியது தவறு என அவர் மனம் ஏற்றுக்கொண்டால் 15 லட்சம் வட்டி பாங்க் வட்டியாகும். செய்த செலவு, முடிவு, வாங்கிய கடன், கடனை ஏற்றவர் தம் பங்கைச் சரணம் செய்தால், முதலாகிய 10 லட்சம் கொடுக்க வேண்டியிருக்காது. சரணாகதிக்கு உரியவன் இதற்கடுத்த கட்டம். இந்த 25 லட்சமும் கடனுக்குப் பதிலாக அவருக்கு இருப்பாக மாறும் நிலையுண்டு. முடிவான கட்டம் இதே 25 லட்சம் அவருக்கு வருஷ வருமானமாக மாறும்.

தம்பி - சொல்லும் பொழுது புரிகிறது. எனக்கே சொந்தமாகத் தோன்றியிருக்காது. 18,000 ரூபாய்க்கு ஜப்தி வந்தவருக்கு 4 மாதம் கழித்து அதே 18,000 மாத வருமானமாயிற்றே, எனக்கு நினைவிருக்கிறதே, ஜப்தி வந்த அன்று அதை நினைக்க முடியுமா? யாராவது சொல்ல முடியுமா? நாம் அன்னையைச் சரியாக அறியவில்லை, சரணகதியின் சக்தியைத் தெரிந்து கொள்ளவில்லை என்பது சரிதான்.

அண்ணன் - பிரச்சினை எதுவானாலும் முறை கடந்த காலச் சமர்ப்பணம், சரணாகதி. நம் முடிவு குறுக்கே வரக்கூடாது. அது அருளுக்குத் தடை. எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும், அது தீரவேண்டும் என முயல்வதைவிட அதைத் திருவுருமாற்ற வேண்டும் என்று முயல்வதே சரி. சரணாகதி அதைச் செய்யும்.

தம்பி - மேலே சொல்லிய கடனில் திருவுருமாற்றம் எது?

அண்ணன் - இன்றைய கடன் நாளைய இருப்பு என்பது திருவுருமாற்றம். அடுத்த கட்டத்தில் அதுவே வருஷ வருமானம், மாத வருமானமாவது. மேலும், இந்தத் திருவுருமாற்ற வாய்ப்பு இல்லாவிட்டால், அன்பருக்கு அந்தக் கடன் பிரச்சினை வந்திருக்காது, கடன் வந்ததே, திருவுருமாற்றம் உண்டு எனச் சொல்கிறது.

தம்பி - நீங்க சொல்றது சரி, ஆனா நடைமுறையில் சில முக்கியமான விஷயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அதனால் இதெல்லாம் முடியாமற் போகிறது.

அண்ணன் - நீ சொல்வது சரி. ஒரு வகையில் அவை ரொம்ப முக்கியம். மற்றொரு வகையில் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டியதாயிற்றே, நான் சொல்லும் திருவுருமாற்றம் நடக்கச் சரணாகதி வேண்டும். பகவான் சரணாகதி சிரமம் என்கிறார். பெரும்பலன் உண்டு எனில் அதற்குரிய பொறுமை முயற்சியில் இருக்கவேண்டும் அல்லவா? ஒரு முறையை புத்தகத்தில் படித்தால், பலன் வரும் என எதிர்பார்ப்பது சரியன்று.

தம்பி - அப்படி இங்கு ஏதாவது இருக்கிறதா?

அண்ணன் - சரணாகதிக்குமுன், சமர்ப்பணம் செய்ய concentration வேண்டும். மனம் லயிக்க வேண்டும். வேறு எந்த எண்ணமும் குறுக்கிடாத அளவு மனம் லயிக்க வேண்டும். அது அவசியம் என யாருக்கும் தெரியாது. அலைபாயும் மனம் அற்புதத்தைச் சாதிக்கும் என நினைப்பது சரியாகுமா?

தம்பி - அது பெரிய விஷயம், பின் எப்படிச் சில சமயங்களில் பலிக்கிறது?

அண்ணன் - ஆபத்து என்றால், மனம் அடங்கும், அந்த நேரம் பலிக்கும்.

தம்பி - விஷயம் எவ்வளவு பெரியதானாலும், நம்மால் மனதை விலக்கிச் செயல்பட முடிவதில்லை.

அண்ணன் - அது நம்பிக்கை.

தம்பி - நாம் நம்பிக்கையில்லாமல் காரியம் நடக்க வேண்டும் என நினைக்கிறோம்.

அண்ணன் - அதற்குக் காரணம், பல சமயங்களில் நம்பிக்கையற்றவர்க்கும் அருள் பலிக்கிறது.

தம்பி - அதனால் மனம் அதையே நினைக்கிறது.

அண்ணன் - சொத்து மதிப்புக்கு மேல் கடன் வந்த பிறகு மனம் மலை போல் அன்னையை நம்பினால், ஆச்சரியமாக நிலைமை மாறும்.

தம்பி - மனம் இதரக் குறுக்கு வழிகளை நாடுகிறது.

அண்ணன் - இவ்வளவு பெரிய ஆபத்து வந்த பின், வழியேயில்லை என்று தெரிந்தும், அன்னையிடம் வழியுள்ளது எனத் தெரிந்தும், நம்பிக்கை வரவில்லை என்றால், யார் என்ன செய்ய முடியும்?

தம்பி - அதையே அன்னை sincerity உண்மை என்கிறார். அதிசயிக்கும்பொழுது, எண்ணம் எழாது, மனம் அடங்கும், நெஞ்சு அன்னையை, தானே கூப்பிடும். அது நடந்தால் பலிக்கும் எனப் பொருள். தெரியும் ஆனால் மனம் எதையெதையோ நாடுகிறது.

அண்ணன் - உலகமே இருண்ட பின், இல்லை உலகம் உன்னை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளபொழுது, முக்கியமாக உடன் பிறந்தவர் கைதட்டி சிரிக்கக் காத்திருக்கும்பொழுது, நிச்சயமாக வழியுண்டு என அன்னை அழைக்கிறார். அழைப்பை ஏற்பது நம் கடமையல்லவா?

தம்பி - அதுதான் அருள், பேரருள். நமக்குப் பேரருள் வேண்டாம். கைதட்டிச் சிரிக்கத் தயாராகும் உறவினரிடம் நல்ல பெயரை மனம் நாடும்.

அண்ணன் - அப்படிப்பட்டவர்க்கு வழியேயில்லை.

தம்பி - ஒரு தரத்திற்கு மேல் சோதனை செய்யக்கூடாது எனக் கூறுவார்கள் நமக்கு ஒவ்வொரு முறையும் அன்னைக்குச் சக்தியுண்டா எனச் சோதிக்கத் தோன்றுகிறது.

அண்ணன் - அது தவறன்றோ?

தம்பி - ஆமாம், துரோகமும்கூட. எனக்கு அப்படித்தான் தோன்றும். சொல்லவே கூச்சமாக இருக்கிறது. நாமெல்லாம் அன்பர் என எப்படிப் பேசுவது? நாம் அன்பராகும் தகுதி பெறவில்லை.

அண்ணன் - 40 லட்ச ரூபாய் சரக்கை 3 வருஷமாக விற்க முடியாமல், இனி விலை போகாது என ஒருவர் வைத்திருந்தார். முதல் 4 மாதத்தில் 28 லட்சம் விற்றது. அதன்பின் அவருக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், அது இனி வாராது.

தம்பி - நாம் அப்படிப்பட்டவர்களுக்கு உதவ நினைப்பது தவறு. நாம் அப்படித்தானிருக்கிறோம். இந்த 25 லட்சம் கடனைத் திருவுருமாற்றி 25 லட்ச வருமானமாக மாற்ற கடன்காரர் முன்வருகிறாரோ இல்லையோ, நாம் ஆத்மீக முன்னேற்றத்திற்காக அதைச் செய்வது சரி. அப்படி நினைக்கும் பொழுது, மனம் குவிந்து அடங்குகிறது. அப்பொழுது, நடக்கும் எனத் தெரிகிறது.

அண்ணன் - நமக்கெல்லாம் அன்னை ஆயிரம் முறை பலித்துவிட்டார்கள். நாம் விளையாட்டுப் பிள்ளைகள் போல் பள்ளிக்கூடம் போகாமல் பாஸாக வேண்டும், அன்னை தர வேண்டும் என நினைக்கிறோம். நாமெல்லாம் இதைச் செய்வது தவறு.

தம்பி - ஆமாம், பிரச்சினை வந்தால் பிரார்த்திக்கத் தோன்றவில்லை. ஏன் அன்னை என்னைக் கைவிட்டு விட்டார் என நினைக்கிறோம்.

அண்ணன் - கைவிடுதல் என்பதைத் தவறாது செய்பவன் அன்பன். அது அன்னை அறியாதது. நெஞ்சு தானே அழைக்க ஆரம்பித்து அது நிலையாகிவிட்டால் நாம் அன்பர் என்ற தகுதி பெறுகிறோம்.

தம்பி - அதுவே சட்டமானால், அன்பரைத் தேட வேண்டியிருக்கும்.

அண்ணன் - அதற்குக் குறைந்து அன்பராக முடியாது. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. தூங்க வேண்டும் என்ற பிரார்த்தனை பலிக்கவில்லை. காலை மணி 5. சரி, நம் பிரார்த்தனை அவ்வளவுதான், விடு என ஒரு நாள் நினைத்தேன். மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அப்படி முடிவு செய்தால் நம்பிக்கையில்லை என்று அறிவிப்பதாகிறது என நினைத்தேன். அதன் பிறகும் தூக்கம் வரவில்லை. பொழுது விடிந்து தூங்கவில்லை என்பது போலில்லை மனம் அன்னையை நாடினால், அருள் அதே க்ஷணம் செயல்படுகிறது என்று அன்று கண்டேன்.

தம்பி - இதெல்லாம் பிறரிடம் சொல்லக்கூடியதில்லை. நாமே உணர வேண்டியவை. தவறமாட்டார் அன்னை என்பது எக்காலத்திலும் உண்மை. ஒவ்வொரு கட்டத்திலும் நாம் அதிக விழிப்போடிருக்க வேண்டும். சந்தேகம் கடைசிவரை வந்தபடியிருக்கிறது.

அண்ணன் - சந்தேகம் வந்தால், சந்தோஷமில்லை. அங்கு அன்னைக்கு வேலையில்லை.

தம்பி - மீண்டும், புதிதாக நாம் அன்பராக வேண்டும்.

நிமிஷத்திற்கு நிமிஷம் நம்பிக்கையைப் புதுப்பிக்க வேண்டும் என்கிறார் அன்னை. நாமுள்ள நிலைக்கும், அன்னை எதிர்பார்ப்பதற்கும் காத தூரம்.

அண்ணன் - நீ சொல்லும் கட்டத்தைத் தாண்டும்வரை ஒரே கேள்விமயம். அதைத் தாண்டிவிட்டால், கேள்வி என்பதே எழாது. அதுவே எல்லைக்கல்.

தம்பி - அதிகம் படிப்பது தவறோ?

அண்ணன் - "தவறு" நிச்சயம் வரும். அது உண்மையில் தவறில்லை. அதிகமாக எதைப் பெற்றாலும் இதைப் போன்ற "தவறு" எழுவதை நாம் கவனிப்பதில்லை.

தம்பி - அதிகமாக அழகிருந்தால்,

அண்ணன் - கர்வம் எழும்.

தம்பி - செல்வமிருந்தால்,

அண்ணன் - செல்வம் பல வகையான தவறுகளை எழுப்புவதை நாம் அறிவோம்.

தம்பி - நான் சொல்வது வேறு. அதிகம் படித்த குழந்தைகள் மற்றவரோடு பழகத் தெரிந்து கொள்வதில்லை. படிப்பால் குழந்தை தனித்து விடுகிறது. மற்ற குழந்தைகள் அனைவருடனும் கலந்து கொள்வதைப் போல் கலந்து (adjust) கொள்ள முடிவதில்லை. அதனால் பிரச்சினை எழுகிறது.

அண்ணன் - இது பிரச்சினைதான், ஆனால் படிப்புக்கு மட்டும் உள்ளதன்று. எந்த அம்சம் அதிகமானாலும், இந்தப் பிரச்சினை எழும். நாம் தண்ணீரை அதிக அளவு சுத்தம் செய்து பயன்படுத்தினால், வெளியில் போய் சாப்பிட முடியாதன்றோ!

தம்பி - எப்படித் தீர்ப்பது?

அண்ணன் - எந்தப் பிரச்சினையையும் அது வந்த வழியே போனால், தானே தீர்ந்துவிடும்.

தம்பி - புரியவில்லை.

அண்ணன் - எப்படி அதிகம் படிக்க வைத்தோம்?

தம்பி - குழந்தையை அதிக நேரம் படிக்க வைத்தோம்.

அண்ணன் - அது விளையாடும் நேரத்தில் அதைப் படிக்கச் சொன்னோம். படிப்பை விளையாட்டாகச் சொல்லிக் கொடுக்கும் முறையில் இந்தக் குறை வாராது.

தம்பி - விளையாடும் நேரத்தில் படிப்பதாகக் குழந்தை வருத்தப்படுவதால் பிரச்சினை வருகிறது என்று சொல்கிறீர்களா?

அண்ணன் - படிப்பையே விளையாட்டாகப் போதிக்கும் பள்ளியில் குழந்தைகள், விளையாட்டுப் போய்விட்டது என ஏங்குவதில்லை.

தம்பி - அதிகம் படித்த குழந்தைகள், தன்னோடொத்த மற்ற குழந்தைகளுடன் சமமாகப் பழக முடிவதில்லை. அதுவே பிரச்சினை.

அண்ணன் - விளையாட்டுப்போல் பயின்றால், அக்குழந்தைகள் தன்னோடொத்த (in mental age) மற்றவர்களுடன் சமமாகப் பழகும். பழக முடியவில்லை என்ற நிலை ஏற்படாது.

தம்பி - நம் இன்ஜினியர் பையனை வீட்டிலேயே 11 வயது வரை படிக்க வைத்தார்கள். அவனுக்கு M.A. பையனைவிட ஆங்கில அறிவும், B.A. பெற்றவனைவிட மற்ற அறிவுமிருக்கிறது. அவனுக்கு 11 வயது குழந்தைகளுடன் சமமாக விளையாட முடிவதில்லை.

அண்ணன் - இது பிரச்சினைதான். மேலும் ஒரு பிரச்சினையுண்டு. அது வெளிநாட்டிலுள்ள நம் குழந்தைகட்குரியது. 11 வயது இந்தியக் குழந்தை 11 வயது அமெரிக்கக் குழந்தையுடன் விளையாட முடியாது. அது நம்மூர் 18 வயது பையனைப் போலிருக்கும். இந்தப் பிரச்சினையில்லை, எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுண்டு. பெற்றோர் அன்னை பக்தரானால் தீர்வுண்டு.

தம்பி - இன்ஜினியர் தரிசனத்திற்கு வருவார்.

அண்ணன் - அது போதாது. அன்னையை அறிந்தவராக இருக்க வேண்டும். தரிசனத்திற்கு வருபவர் அன்பர். நாம் சொல்வது இரண்டாம் கட்டம் வந்த அன்பருக்குத்தான் பலிக்கும். அன்னை என்பதை organisation, institution, force, consciousness, atmosphere, god, plane,ஸ்தாபனம், சக்தி, ஜீவியம், சூழல், தெய்வம் என அறிந்திருக்க வேண்டும்.

தம்பி - பிரச்சினைக்கும், அவற்றிற்கும் என்ன தொடர்பு?

அண்ணன் - Force, personal force, limited force, force of consciousness, சக்தி, தனிமனித சக்தி, சிறு சக்தி, பொதுவான சக்தி, ஜீவிய சக்தி என்பவற்றை விவரமாகத் தெரிந்திருந்தால்தான், இப்பிரச்சினை தீர உதவும். அன்னை எனும் சக்தி, யாருக்கும் அவர் விரும்புவதைத் தரவல்லது, அவருக்குத் தேவைப்பட்டதைத் தரவல்லது, இவை குறைந்தபட்சத் திறன்கள். எவருக்கும் அவர் ஆத்மாவின் அதிகபட்சத் திறமையைப் பூர்த்தி செய்யவல்லது என்பவற்றைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன விளக்கம் தேவை.

தம்பி - இவையெல்லாம் நம் அன்பர்கள் வாழ்வில் இன்று நடக்கிறதே.

அண்ணன் - நடக்கிறது என்பது உண்மை. அதை அன்பர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. நம்மையறியாமல் பெறும்பொழுது நாம் பெறுவது குறைந்தபட்சம். விவரமாகப் பெற்றால் அதிகம் பெறலாம். அதிகபட்சம் பெற அன்னையை அதிகபட்சம் அறியவேண்டும்.

தம்பி - இவையெல்லாம் புரிய படிப்பு வேண்டும். அண்ணன் - படிப்பிருந்தால் நல்லது, இல்லாவிட்டாலும் பக்தியும் நம்பிக்கையுமிருந்தால் இவை புரியும். ஒரு வகையில் இவை உயர்ந்த தத்துவங்கள், வேறு வகையாகப் பார்த்தால், எந்த இந்தியனுக்கும் புரியக்கூடியவை, நுணுக்கமாக முயலவேண்டும்.

தம்பி - அன்னை இதைத்தான் நமக்கு ஞானம் உண்டு என்கிறாரோ?

அண்ணன் - இந்தியர்கட்கு அன்னையை அறிவது பெரிய பாக்கியம். நீ சொல்லும் குழந்தைக்குப் பழகப் பிள்ளைகள் இல்லை என்பது குறை. இந்தக் குறையைப் பல வகைகளில் போக்கலாம். அதற்குத் தகுந்த பள்ளியில் சேர்த்தால் அக்குறை விலகும். அது எளிது. அன்னைக்குக் குழந்தையைச் சமர்ப்பித்தால், குறை விலகும். குழந்தை மீதுள்ள கவலை எழுந்து மனத்தைத் தொடுமுன், அன்னையை அழைத்தால், பாரம் நம்மிடமிருந்து அன்னைக்குப் போகும். அதன்பின் சூழல் மாறும், குழந்தை மாறும், நிலைமை மாறும்.

தம்பி - இது சுலபமாக இருக்கிறதே. ஏன் நீங்கள் சொல்லும் தத்துவமெல்லாம்?

அண்ணன் - சமர்ப்பணம் இதுபோல் பலிக்க, கவலை மனத்தைத் தொடுமுன் அன்னையை அழைக்கவேண்டும். அது முடிந்தால் தத்துவம் தேவையில்லை. அது முதிர்ந்த சாதகராலேயே முடியாத விஷயம். அதைவிடத் தத்துவம் எளிது.

தம்பி - சொந்தக் குழந்தை என்பதால் அது முடியும்.

அண்ணன் - குழந்தை மீது அன்பிருந்தால் முடியும். ஒரு சில தாயாருக்கே அதுபோன்ற அன்பிருக்கும். பெரும்பாலும் அந்த அளவு குழந்தை மீது அன்பிருக்காது. அதுபோன்ற சமர்ப்பணத்தைச் செய்பவர் அக்குழந்தையைப் பொருத்தவரை சாதகி, யோகி. அதற்கடுத்தது ஞானம். யோக நிலையில்லாவிட்டால், அன்னை யார் என்ற ஞானமிருந்தால், அந்த ஞானம் பலிக்கும். Knowledge is Power.

தம்பி - அவ்வளவு பெரிய ஞானத்தைச் சாதாரணப் பெண்கள், அதுவும் படிக்காத பெண்கள் பெற முடியுமா?

அண்ணன் - தாய் என்பதால், அந்த விஷயத்தில் இந்த ஞானம் பலிக்கும். அதுவே ஆன்மீகத்தின் சிறப்பு, அன்னையின் உயர்தனிச் சிறப்பு.

தம்பி - படிப்பு அறிவு இல்லாவிட்டாலும், உணர்வு ஆழ்ந்து பூரணமாக உள்ள இடத்தில் ஆன்மீகம் பலன் தரும். அன்னை அதற்கடுத்த பலனையும் தருவார். பலன் மனநிலைக்கு, புறத்தோற்றத்திற்கு இல்லை.

அண்ணன் - Force சக்தி என்பது குறிப்பிட்டதானால், குறிப்பிட்ட வேலைக்கு மட்டும் பயன்படும். பேப்பர் எழுதப் பயன்படும், உணவாகப் பயன்படாது. சக்தி பொதுவானால் impersonal force எந்தக் காரியத்திற்கும் பயன்படும். உடலில் தெம்பிருந்தால் பல வகையான காரியங்களைச் செய்யலாம். பணம் general force பொதுவான சக்தி. எந்த வேலைக்கும் பயன்படும். பலன் பயன்படுத்துபவரைப் பொருத்தது. Personal force, impersonal force, general force, particular force, universal force, Consciousness-Force, தனிப்பட்டது, பொதுவானது, குறிப்பானது, பிரபஞ்சத்திற்குரியது, ஜீவியசக்தி என்பவை படிப்படியாக உயரும் நிலைகளில் அமைந்துள்ளன.

தாயார் சொல்வதை அவள் குழந்தை கேட்கும் எனில் அது personal force. அந்த குழந்தையிடம் மட்டும் செல்லும் சக்தியிது. பள்ளிக்கூடம் 9 மணிக்கு வர வேண்டுமென்ற சட்டம் impersonal force எல்லாக் குழந்தைகளையும் கட்டுப்படுத்தும். சென்னை பாண்டி பஸ் டிக்கட் ரூ.75 எனில், அந்தப் பஸ்ஸில் பிரயாணம் செய்பவர் அனைவருக்கும் அது பொது வசதி. ஊனமுற்றவருக்குரிய சலுகை குறிப்பிட்ட சக்தி. நல்லது நல்லதை செய்யும் என்பது எந்த நாட்டிற்கும், எந்தக் காலத்திற்கும் பொது. ஜீவியசக்தி, இவற்றை எல்லாம் கடந்தது. இவற்றை எல்லாம் தன்னுட்கொண்டது. ஜீவியம் சிருஷ்டிக்கு அடிப்படை. அதனினின்று வரும் சக்தி ஜீவியசக்தி. ஆகர்ஷணம், எலக்ட்ரிசிட்டி, காந்தம் போன்ற அடிப்படையான பிரபஞ்சச் சக்திகளைத் தன்னுட்கொண்டது ஜீவியசக்தி. அன்னை அவதரிக்குமிடம் அது. Mother Force அன்னை சக்தி என்றால் என்ன?

தம்பி - இத்தனைச் சக்திகளையும் தன்னுட்கொண்டதா அன்னைசக்தி?

அண்ணன் - அத்துடன், இத்தனைச் சக்திகளாகவும் செயல்படவல்லது.

தம்பி - இதை எப்படி அன்பர்கள் புரிந்துகொள்வார்கள்?

அண்ணன் - நீ கடையில் போய் அலமாரி வாங்கினால் எப்படி வீட்டிற்குக் கொண்டு வருவாய்?

தம்பி - வண்டி வைத்துக் கொண்டு வருவேன்.

அண்ணன் - பொருளை வீட்டிற்கு எடுத்து வருவது நம் வேலை. ஒருவர் வந்து அந்த அலமாரியை உன் வீட்டிற்குக் கொண்டு வர உதவினால்,

தம்பி - என்ன இல்லாததைச் சொல்கிறீர்களே.

அண்ணன் - அப்படி நடந்தால், நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்?

தம்பி - அதெல்லாம் புரியாது. சௌகரியம் என வைத்துக் கொள்வோம். யோசனை புலப்படாது.

அண்ணன் - கடையின் ஏற்பாடு என்றால்

தம்பி - அலமாரி விற்கச் செய்வதாகக் கொள்வோம்.

அண்ணன் - மற்ற கடைகள் செய்யாதபொழுது ஏன் இவன் மட்டும் செய்யவேண்டும்?

தம்பி - அதிக வாடிக்கைக்காகச் செய்கிறார்கள் எனப் புரியும்.

அண்ணன் - அதைச் செய்ய கடைக்கு டெலிவரி சிஸ்டமும் தேவையல்லவா?

தம்பி - இப்போ புரியுது. நாம் போகுமிடமெல்லாம் நமக்கு அருள் உதவுகிறது எனில் அன்னை, சர்க்கார் ஸ்தாபனம் போல இருக்கிறார். நமக்குத் தேவையானதெல்லாம் அருள் தருகிறது எனில், அத்தனை டெலிவரி சிஸ்டமும் அவரிடம் இருக்கிறது என்று அர்த்தமா?

அண்ணன் - இது கடவுள்களுக்கோ, சர்க்காருக்கோ, வேறு எதற்கோ இல்லாத சக்தியல்லவா?

தம்பி - அது எப்படி ஏற்பட்டது?

அண்ணன் - கம்ப்யூட்டர் ஸ்பெல்லிங் செக் பண்ணுகிறது எனில், அதனுள் உள்ள chipஇல் spelling இருக்கிறது என நாம் அறிகிறோம்.

தம்பி - அன்னைக்கு அந்த சக்தி எப்படி வந்தது?

அண்ணன் - சத் - சித் - ஆனந்தம் என்ற சச்சிதானந்தத்தில் சித் என்பது சித் ஆகவும், சக்தியாகவும் சித் - சக்தி எனப் பிரியுமிடத்தில் அன்னை அவதரிக்கிறார். உலகமே அந்த சக்தியால் உற்பத்தியாவதால், அன்னை சக்திக்கு அனைத்து சக்திகளின் திறனுண்டு.

தம்பி - சிவபெருமானுக்கும், விஷ்ணுவிற்கும் இல்லையா?

அண்ணன் - நம் அன்பர் பெறும் உதவிபோல சிவபக்தர்கட்குக் கிடைப்பதாகக் கேள்விப்படுகிறாயா?

தம்பி - தெரியாதே.

அண்ணன் - ஒரு வீட்டில் திருடு போனால், நீ கூப்பிடாவிட்டாலும் போலீஸ் வரும். நீ போய் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. குற்றம் நடப்பது தெரிந்தால் போலீஸ் தானே வரும். மனைத் தகராறு, நிலம் தகராறு எனில் கோர்ட் நம்மைத் தேடி வந்து நியாயம் கொடுக்காது. நாமே போய்க் கேட்டாலொழிய கோர்ட் செயல்படாது.

தம்பி - அன்னை போலீஸ் போன்றவர், மற்ற தெய்வங்கள் கோர்ட் போன்றனவா?

அண்ணன் - அடிப்படையில் அன்னை நம்மைத் தேடி வருகிறார். சில விஷயங்களில் கூப்பிட்டால்தான் அன்னையால் செயல்பட முடியும். ஒரு வித்தியாசம். மந்திரம், பூஜை, ஸ்தோத்திரம், விரதம் எதுவுமில்லாமல் கூப்பிட்டால் வருவார். மற்ற தெய்வங்களைக் கூப்பிட அதற்குரிய முறை தேவை. அன்னைக்கு அவை தேவையில்லை.

தம்பி - அன்னைசக்தி எப்படியெல்லாம் செயல்படும் எனத் தெரிந்தால், அதற்கு மேலும் சக்தியுண்டா?

அண்ணன் - தெரிவது எனில் சற்று விவரம் தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் ஏன் அன்னைக்கு அந்த சக்தி இருக்கிறது எனத் தெரிய வேண்டும்.

தம்பி - தெரிந்தால் மட்டும் போதுமா? அதை நம்ப வேண்டாமா?

அண்ணன் - இருப்பது தெரிய வேண்டும். ஏனிருக்கிறது என்று தெரிய வேண்டும். அதை நம்பவேண்டும். நம்பினால் அதற்கு சக்தியுண்டு.

தம்பி - என்ன பலனிருக்கும்?

அண்ணன் - நம்பிக்கைக்குரிய பலனிருக்கும். ஓரளவு நம்பிக்கை இருந்தால், குழந்தை பம்பாய் போக உதவி வரும். அதன் மூலம் பிரச்சினை தீரும். முழு நம்பிக்கை இருந்தால் உள்ளூர் நிலைமை மாறி, பம்பாய் போய் வரும் பலன், போகாமல் வரும்.



book | by Dr. Radut