Skip to Content

10. பூரண சரணாகதி

10. பூரண சரணாகதி

இறைவனுடன் இரண்டறக் கலந்த நிலைமை எய்த சரணாகதி இன்றியமையாதது. மனித ஜீவனின் எல்லாப் பகுதிகளும் சரணடைந்த நிலையிலேயே சரணாகதி பூரணம் பெறுகின்றது என்பதால், அந்நிலையையடைய 9 கட்டங்களைத் தாண்டிவருதல் தேவை. சரணம் என்பது அகவுணர்வு என்பதால் இது மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே எழக்கூடியதேயன்றி, மனித உறவுக்கு ஏற்றதல்ல. விதிவிலக்காக குரு-சிஷ்ய உறவை மட்டுமே சொல்லலாம்.

பணிவு, கீழ்ப்படிதல் ஆகிய கருத்துக்களையும் சரணாகதியையும் ஒன்றாகக் கருதுவதுண்டு. ஒத்துழைப்பையும் சரணாகதியாகக் கருதும் கட்டங்களும் உண்டு என்றாலும், உண்மையில் இவையெல்லாம் சரணாகதியாகாது. ஒரு வேலையைச் செய்ய பலர் ஒன்று சேரும் பொழுது உதவி, ஒத்துழைப்பு, சேர்ந்து செயல்படுதல் ஆகிய நிலை ஏற்படுவதுண்டு. பணிவும், கீழ்ப்படிதலும் மனநிலையைப் பொறுத்தவை என்றாலும் சரணாகதியின் சாயலுடையவை அவை. செயலின்றி, மனத்தைப் பொறுத்த அளவிலும் பணிவும் கீழ்ப்படிதலும் அமையக் கூடும். சரணாகதிக்கு முன்னோடியாக அமையும் அம்சங்கள் இவை. ஒன்றை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். மனத்தால் ஏற்காமல், செயலளவில் ஒருவர் பணியலாம். கீழ்ப்படியலாம். ஆனால் மனத்தின் முழு சம்மதமின்றி சரணாகதியை பயில முடியாது. போர் முனையில் தோற்ற எதிரியின் சரணாகதியை வேண்டுமானால் சொல்லலாம். அதுவேறு.

கிருஷ்ண பராமத்மா மீது ராதைக்குள்ள காதல் உயர்ந்த அன்பிற்கு எடுத்துக்காட்டு. உணர்வால் உயர்வடைந்த ராதையின் காதல் வேகம் அவளுடைய உடலையும் ஆட்கொண்டதாலேயே அது சிறப்புப் பெறுகிறது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் முதன் முறையாக அன்னையைச் சந்தித்த பொழுது அவருடல் சரணாகதியால் செறிந்துள்ளதைக் கண்டேன் என்றார். அன்பில் உற்பத்தியான சரணாகதி அர்ப்பணத்தால் பூர்த்தியாவதே பூரண சரணாகதியாகும்.

பூரண சரணாகதியை பக்தி மார்க்கம் பூரணமாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அதன் குறிக்கோள் மோட்சம். பூரண யோகத்தின் குறிக்கோள் மோட்சமில்லை. மோட்சத் தகுதியுள்ள ஜீவாத்மா, பூவுலகில் தங்கி, இறைவனின் திருவுள்ளத்தை மனித வாழ்விலும், பூவுலக வாழ்விலும், பிரபஞ்சத்திலும் பூர்த்தி செய்வதே பூரண யோகம்.

சரணாகதி என்பதை யார் ஏற்றுக்கொள்ள வேண்டும்? அதைச் செய்வது நம்முள் எது? என்ன குறிக்கோளுக்காக சரணாகதியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டால், பல பிரச்சனைகள் எழும். அகந்தை தன்னை இறைவனுக்குச் சரணம் செய்ய வேண்டுமென பதில் சொன்னால், அகந்தை தன்னைத்தனே சரண் செய்ய வேண்டுமா? அல்லது மற்றது ஒன்று அகந்தையை சரணம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. தன்னைத்தானே சரணம் செய்யும் திறன் அகந்தைக்கு இல்லை. கோபம் வந்தால், கோபம் தன்னைத்தானே அறிந்து, தவறென உணர்ந்து, தன்னையடக்கும் திறனுடையது இல்லை. அறிவுக்கு அத்திறனுண்டு. அறிவுக்கு கோபம் கட்டுப்படும். தனக்குத்தானே கட்டுப்படாது. அதுபோல் தன்னைச் சரண் செய்ய வேண்டும் என்ற பக்குவம் உடையதல்ல அகந்தை. எனவே அகந்தையை சரணம் செய்ய வேறொன்று முன்வர வேண்டும். அதனால் யார் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்ற நிலை எழுகிறது.

ஸ்ரீ அரவிந்தரே அதற்குரிய பதிலைச் சொல்லியிருக்கிறார். ஜீவாத்மா அகந்தையால் கறைபட்டுள்ளது. அதனால் தனக்கும் மட்டும் மோட்சம் வேண்டும் என்று கேட்கும் பாங்குடையதாக இருக்கிறது. இந்தக் குறை அகந்தையின் கறையால் ஜீவாத்மாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இறைவன் ஜீவாத்மா தன்னிடம் திரும்ப வர வேண்டும் என்று விரும்பவில்லை. சிருஷ்டியிலேயே இருந்து தன் திருவுள்ளத்தை மோட்சம் பெற்ற ஜீவாத்மா பூவுலகில் பூர்த்தி செய்ய வேண்டும் என்றே விரும்புகிறான். எனவே அகந்தையைச் சரணம் செய்ய வேண்டியது ஜீவாத்மாவே என்கிறார் பகவான். மேலும் அடுத்த கட்டத்தில் அகந்தையை முழுவதுமாக கரைக்க வேண்டும் என்றும் பகவான் கூறுகிறார். அந்தச் சரணாகதி பூர்த்தியாக பல நிலைகள் உண்டு எனவும் மனத்திற்குரிய அகந்தை என்றும், பிராணனுக்குரிய அகந்தை என்றும், உடலுக்குரிய அகந்தை என்றும், ஆன்மாவுக்குரிய அகந்தை எனவும் இருப்பதால், ஆன்மா அகந்தையை சரணம் செய்ய ஆரம்பித்து அகந்தையின் கடைசிப் பகுதியான உடலின் அகந்தையையும் சரணம் செய்த பின்னரே சரணாகதி பூரணத்துவம் பெற்று பூரண சரணாகதியாகும். சரணாகதியின் பூரணத்துவத்தை வேறு பல வழிகளிலும் விளக்கலாம். அப்படிச் செய்வதால் மனித ஜீவனின் மற்ற அம்சங்கள் சரணாகதியுடன் கொண்டுள்ள தொடர்பு தெளியும். நம்பிக்கை, வழிபாடு, கீழ்ப்படிதல், துதி பாடுதல், தெய்வ இன்பம், அர்ப்பணம், தெய்வீக அன்பு, பூரிப்பு ஆகிய 8 நிலைகளைக் கடந்தே பூரண சரணாகதியை எட்ட வேண்டும் என்றும் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். வேறொரு விளக்கத்தில் சரணாகதி ஆர்வமாக ஆரம்பித்து சமர்ப்பணத்தின் மூலம் பூர்த்தியாகிறது என்கிறார். ஸ்ரீ அரவிந்தருடைய அன்னை என்ற புத்தகத்தில் சரணாகதி பூர்த்தியடைய 14 வகையான தடைகளுண்டு என்று கூறுகிறார். ஆர்வத்தால் ஜீவன் இறைவனையடையச் செல்லும் பாதையையும், அருள் ஜீவனை நாடிவரும் மறுபாதையையும் கொண்டு சரணாகதியை விளக்கலாம்.

பூரண யோகத்தின் சரணாகதியின் முக்கியத்துவம்:

மனிதன் தன்னைப் பூரணமாக சரணடைவதன் மூலம் சத்திய ஜீவனாக வேண்டும் என்பதே இந்த யோகத்தின் அடிப்படை ஆசையும் ஆணவமும் அற்ற ஜீவன் தன்னை இறைவனாக அறிந்து, பிரபஞ்சத்தின் ஜீவனாகவும் கண்டுகொண்டு, பரம்பொருளின் திருவுள்ளத்தை பிரபஞ்சத்தில் பூர்த்தி செய்யும் கருவியாக மனிதன் மாறுவதே பூரண யோகம். அவனே சத்திய ஜீவன்.

இறைவன், ஆணவம், பிரகிருதி ஆகிய மூன்றுமே சிருஷ்டி. பிரகிருதியின் இருளை இறைவனுடைய ஒளி போக்குமுன், ஆணவம் அழிய வேண்டும். அதன்பின் இறை ஒளி பிரகிருதியை இருளினின்று மீட்டு, ஒளிமயமாகச் செய்ய முடியும். ஜீவனான மனிதன், சத்திய ஜீவனாக மாற அகந்தையை அழித்து தன்னிடமுள்ள பிரகிருதியை இருளிலிருந்து மீட்டு ஒளிமயமாகச் செய்ய இறை ஒளி செயல்பட வேண்டுமென்பதால், அகந்தையை சரணம் செய்வது அத்தியாவசியமாகிறது.

அகந்தை:

திமிராகவும், அர்த்தமற்ற முறையிலும், அதிகாரத் தோரணையுடனும் பழகுவது அகந்தை எனப் பொதுவாக நாம் அறிவோம். அது வழக்கு. பூரண யோகக் கருத்துப்படி அகந்தைக்கு அளிக்கும் விளக்கம் அதிகமான ஒன்று. இருளின் பக்கமான பிரகிருதியையும் (இயற்கை), ஒளிப் பிழம்பான இறைவனையும் தவிர இடைப்பட்ட அனைத்தும் ஆணவமாகக் கருதப்படும். சிருஷ்டியில் இன்றுவரை பிரகிருதியின் முன்னேற்றம் ஆணவத்தால் மட்டுமே நிகழ்ந்தது. விலங்கான ஜீவன், நாகரிகமுள்ள மனிதனாக மலர பல ஆயிரம் ஆண்டுகள் செயல்பட்டது அகந்தை. சிருஷ்டியின் அகன்ற சக்திகளை மனித வாழ்வில் மட்டும் செயல்பட வரையறை செய்தும், முறைப்படுத்தியும், மனித வாழ்வில் பல உயர்வுகளை ஏற்படுத்தியது அகந்தையே. நாகரிகம், கலை, கல்வி, இலக்கியம், மலர்ச்சி, சமூகம், பண்பு, ஆன்மிகம் ஆகிய உயர்வுகளை மனித குலத்திற்களிக்க பாடுபட்டது அகந்தையேயாகும். இதையே ஸ்ரீ அரவிந்தர் பகுத்தறிவு எனவும், அறிவின் மையம் எனவும் குறிப்பிடுகிறார். அகந்தையின் சேவையால் விலங்கு மனிதன், பண்பின் உறைவிடமாக மாறினான் என்பது உண்மை. மேலும் அடுத்த கட்டத்தில் சத்திய ஜீவன் பிறக்க வேண்டுமென்றால், அவனது அஸ்திவாரம் மனித குலம். இன்றைய நாகரிகத்தின் அஸ்திவாரம் தனி மனிதன். அதைச் செப்பனிட்டது அகந்தை. எதிர்கால சத்திய ஜீவனின் அஸ்திவாரம் மனித குலம். தனி மனிதன் தனித்துச் செயல்பட்டு சத்திய ஜீவனாக மாற முயலும்போது, தனி மனிதனின் அகந்தை தடையாகவுள்ளது. இந்தத் தடை நகர்ந்தால்தான், சத்திய ஜீவிய அஸ்திவாரமாகிய மனித குல அடிப்படை ஏற்படும். எனவே தனி மனிதனுடைய கருவியான அகந்தை அகற்றப்பட வேண்டுமென்பது அவசியமாகிறது.

சரணாகதியின் பூரணம்:

தனி மனித அடிப்படையில் வளர்ந்த நாகரிகம், மக்கள் தொகுதியிலிருந்து மனிதன் வேறுபடுவதை விரும்பியது. அதற்கு அகந்தை கருவியாயிற்று. மக்கள் குலத்தின் அடிப்படையில் சத்திய ஜீவன் எழ தனிமனிதன், குலத்தோடு இணைந்து தனித்தன்மையை இழக்க வேண்டும். எனவே தனித்தன்மையின் கருவியான அகந்தையை சரணம் செய்ய வேண்டும். தன்னை அழிக்க வேண்டுமென்று மனிதன் உறுதி பூண்பதும், மனித குலத்தின் ஒருமையான அடிப்படையை உற்பத்தி செய்யவேண்டுமென உறுதி பூண்பதுவும் அவசியமாகிறது. தன்னை அழிக்க பூண்பது ஆர்வமாகும். பொதுவான மனிதகுல அடிப்படையை ஏற்படுத்த, மனிதன் தன்னை அதற்கு அர்ப்பணிக்க வேண்டும். ஆர்வமாக ஆரம்பித்து, அர்ப்பணத்தின் மூலம் வளர்ந்த நெறி சரணாகதியால் பூரணமடைகிறது.

தனித்து நிற்கும் அகந்தை இருளில் மூழ்கி, ஜடமான உடலைத் தாங்கி, பகட்டை மேற்கொண்டு, அறியாமையின் பெருமையை அளவிறந்து பறைசாற்றி குறுகி அமைந்து, பேராசையால் சுயநலத்தைப் பூர்த்திசெய்து, தன் தனிமையை கட்டிக்காக்க அரும்பாடுபடுகிறது.

ஜீவனின் ஆர்வம் இருளை அகற்றி, உடலின் அணுவெல்லாம் பரமனின் திருக்கோயிலாக்கி, ஞானத்தை உருக்கித் தங்க ஓடையாக மாற்றி, மண்ணான உடலை ஒளியால் தகர்த்து தெய்வ ஜோதியான சக்தியூற்றாக்கி, பெருமையை பேராற்றல் வாய்ந்த சக்தியாக மாற்றி, குறுகிய மனிதனை மனிதகுல குடும்ப விளக்காக எரியச் செய்து, சுயநலத்தின் சிற்றூற்றுக்களை பிரபஞ்சத்தின் பேரூற்றுக்களாக்கி, பேராசையை பெருவிளக்கம் செய்து, மனத்தையும், பிராணனையும், உடலையும், இறைவனோடு இணைந்து செயல்படும் இன்னமுதக் கருவியாக மாற்றுகிறது. இத்தனையும் ஆர்வத்தின் அற்புதச் செயல்கள். அடுத்த கட்டம் சமர்ப்பணம்.

முதற்காரியமாக சமர்ப்பணம் மனித வாழ்வில் மையமான அகந்தையை ரத்துசெய்து, ஒளிமயமான புது மையத்தை ஜீவனில் ஏற்படுத்துகிறது. புலன்கள் அனைத்தையும் துலக்கி புத்துணர்வுள்ள புது ஊற்றாக வாழ்வின் இழைகளை மாற்றி, கரணங்கள் அனைத்தையும் ஜீவனில் ஒருமுகப்படுத்தி, வாழ்வனைத்தும் இறைவன் என்ற பெருநெறியை நிலைப்படுத்துவதால், தன்னையே இறைவனாக உணரவும், பிரபஞ்சத்தின் தலைவனாக அறியவும், அப்பாலுக்கப்பாலுள்ள இறைவனாக கண்டுகொள்ளவும் சமர்ப்பணம் செயலாற்றுகிறது. ஆர்வம் மனித ஜீவனை மாற்றி அமைத்தது. சமர்ப்பணம் செயலைப் புனிதப்படுத்த வேண்டி செய்த முயற்சியில் மனிதனின் உள்ளுறை தெய்வ இரகஸ்யத்தை அவனுக்கு வெளிப்படுத்தியது. இனி தனிமனிதனை, மனித குலத்தின் ஒரே அடிப்படையான ஒளியின் பீடத்துடன் சேர்க்கும் வேலையை சரணாகதி செய்ய வேண்டும். எட்டியிருந்த தீவு, கரையுடன் ஒட்டிவருவதை இது ஒக்கும் என்கிறார் பகவான்.

அகந்தையின் மூன்று நிலைகள்:

வெறும் உடலான ஆதிமனிதன் முதலில் அகந்தையின் ஆட்சிக்குள் வந்த பொழுது அகந்தை உடலில் பிறந்தது. அடுத்த நிலைக்கு மனிதன் உயர்ந்து அவனது பிராணன் செயல் திறம் பெற்றபின் அகந்தை அந்நிலையிலும் பிறந்தது. மனிதன் முழு வளர்ச்சி பெற்று மனத்தின் ஆட்சி நிலைத்தபின், அகந்தை அறிவிலும் பிறந்தது. எனவே அகந்தையை அழிக்க முயலும்பொழுது அதே பாதை வழியே நாம் செல்ல வேண்டும் என்பதால் முதலில் அறிவின் அகந்தையையும், அடுத்தபடி பிராணனின் அகந்தையையும் அழிக்க வேண்டும். உடலில் உள்ள ஆதிமனிதனுடைய அகந்தையும் அழிந்த பின்னரே சரணாகதி பூரணமடைகிறது.

யோக சித்திகள் மூன்று:

அகந்தையை மையமாகவுள்ள மனித வாழ்வு, ஜீவாத்மாவை தலைவனாக ஏற்றுக்கொண்ட தெய்வ வாழ்வாக மாறுவதை திருவுருமாற்றம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். திருவுருமாற்றம் யோக சித்தியாகும். அதில் 3 கட்டங்கள் உள. ஆன்மாவின் பிரதிநிதியான சைத்திய புருஷன் தலைமை தாங்கி கரணங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் முதற் கட்டமாக அமைகின்றன. மனிதனிடம் நல்லதும், கெட்டதும் கலந்திருக்கின்றது. சைத்திய புருஷன் கெட்டதெல்லாம் முழுமையாக விலக்கி, நல்ல எண்ணங்களாலும், நல்லுணர்வுகளாலும், நற்செயல்களால் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை சாதகனுக்கு அளிப்பதை இந்த முதற்கட்டம் சாதிக்கின்றது. நல்லது கெட்டது என்ற பாகுபாடு மனிதனுக்குக் கிடையாது. சௌகரியமானதே நல்லது என்று கருதுபவன் மனிதன். ஆசையைப் பூர்த்தி செய்வதையே நல்லுணர்வாக அறிந்தவன் அவன். முடிந்தால் செய்து விடுவான். இக்காரியம் சரியா, தவறா என்று நிதானிக்கும் நிலை மனிதனுக்கில்லை. அதற்குரிய அறிவும் இல்லை. ஆசைப்பட்டதையும், முடிந்ததையும், சௌகரியமானதையுமே நல்லது என்று அறிந்தவன் மனிதன். சைத்திய புருஷனுக்கு எது இறைவனுக்கு நல்லது என்று அறியும் திறனுண்டு. மனித மனத்திற்கு இல்லாத திறன் அது. சைத்திய புருஷன் இறைவனின் ஒளியைப் பொழிபவன். தான் முனைந்து தனக்கு வேண்டியதை அறிய முற்படும் முனைப்பு உள்ளவரை சைத்திய புருஷன் வெளிவருவதில்லை. எது சௌகரியம், எது ஆசையைப் பூர்த்தி செய்யும், எது என்னால் முடியும் என்றறியும் திறன் மட்டுமேயுடைய மனிதன், அறிந்து கொள்ள விழையும் முனைப்பை சரணம் செய்தால், சைத்திய புருஷன் வெளிப்பட்டு இறைவனுக்குகந்த அறிவை ஒளியாக மனத்திற்குப் புலப்படுத்துகிறான். சைத்திய புருஷன் என்பது ஓர் ஒளி. அதனால் விளக்கம் செய்ய மட்டுமே முடியும். அது செயல்திறன் நிறைந்த உறுதியில்லை. செயலாற்றும் சக்தி படைத்ததில்லை. அகந்தை தன் அறிவை சரணம் செய்தால், சைத்திய புருஷனுடைய ஒளி முன்வந்து, நல்லெண்ணம், நல்லுணர்வு, நற்செயல்களை, மற்றதின்று பிரித்து மனத்தை வழிநடத்தும். இதுவே முதல் திருவுருமாற்றம். சைத்திய புருஷனாய் நடப்பது.

திருவுருமாற்றத்தின் அடுத்த கட்டத்தின் தலைவன் ஆன்மா. இவனுக்குரிய சக்கரம் சகஸ்ரதளம். தலைக்கு மேலுள்ள இச்சக்கரம் திறந்து அதன் மூலம் ஆன்மாவின் ஒளி பிரவாகமாக உள்ளே வந்து மனம், பிராணன், உடல் ஆகியவற்றிற்குரிய சக்கரங்களை நிரப்பி அதனால் ஏற்படும் திருவுருமாற்றம் ஆன்மிகத் திருவுருமாற்றம் எனப்படும். ஆன்மிக ஒளி மனத்தை அடைந்து அங்கு சைத்திய புருஷனால் நெறிப்படுத்தப்பட்ட எண்ணங்களை தன் ஒளியில் நிரப்பி, அவற்றைப் பிரகாசமாகவும், ஜோதியாகவும் மாற்றுகிறது. மேலும் உள்ளே வந்து இதயத்தை அடைந்து சைத்திய புருஷனால் முறைப்படுத்தப்பட்ட உணர்வுகளை தன் ஒளியால் நிரப்பி, மனித உணர்வுகளை தெய்வீக அன்பாக மாற்றுகிறது. கடைசி கட்டத்தில் சைத்திய புருஷனால் கட்டுப்படுத்தப்பட்ட நற்செயல்கள் நிறைந்த உடலை ஆன்மா தன்னொளியால் நிரப்பி, செயல்களை தெய்வத் திறனுடையதாக மாற்றுகிறது. இதுவே ஆன்மிகத் திருவுருமாற்றம். திருவுருமாற்றத்தின் நிலைகளை சரணாகதி மூலம் விளக்கலாம். அறிய விழையும் முனைப்பை சரணம் செய்தால், சைத்திய புருஷன் இறைவனுக்கேற்றதை மட்டும் அறியும் ஒளியால் கரணங்களை நிரப்புகின்றான். நம் அறிவுக்கு ஓர் உருவம் உண்டு. நாம் அறிந்தது மொழி எனில், மொழியின் தரத்தையும், தகுதியையும் நாம் பூரணமாக உணர்ந்துள்ளோம். நமக்கு அதன் மேல் பற்று ஏற்பட்டு விடுகிறது. பண்டிதனுக்கு மொழியின் மீதுள்ள வல்லமையில் பற்று ஏற்பட்டுள்ளது போல் ஜோஸ்யனுக்கு அவனது சாஸ்திரத்தில் பிடிப்புள்ளது. விஞ்ஞானிக்கு அவனது படிப்பின் மீதும், ஒவ்வொருவருக்கும் தான் அறிந்த அறிவின் சிறப்பைப் பாராட்டும் மன நிலையுண்டு. தன்னுடைய அறிவின் ஆன்மா தன் ஒளியால் அவ்வறிவை நிரப்பி, புதிய கருத்தை உலகுக்கு அளிக்க முடியும். புதிய கருத்தை நம்முள் ஆன்மிக ஒளி சிருஷ்டிக்கத் தடையாகயுள்ளது நம் பழைய அறிவாற்றலின் மீதுள்ள பற்று. கர்நாடக சங்கீதம் உயர்ந்தது. ஆனால் சங்கீதம் என்ற கலையில் அது ஒரு பகுதி. கல்யாணி இராகத்தில் தேர்ந்தவருக்கு கல்யாணி இராகத்தின் மீதுள்ள பற்று சிறப்பானது. அப்பற்றைச் சரணம் செய்தால், அந்தச் சரணாகதி மூலம் அவருக்கு கர்நாடக சங்கீதத்தில், அடுத்தப்படியாக சங்கீதத் துறையிலேயே சிறப்பேற்பட ஆன்மிக ஒளி வழிசெய்யும். முதல் நிலை திருவருமாற்றத்தில் அறிய விழையும் முனைப்பை சரணம் செய்தோம். அடுத்த நிலை திருவுரு மாற்றத்தில் அறிவின் மீதுள்ள பற்றை சரணம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சரணாகதியால், அறிவு ஜோதியாகவும், ஆசை தெய்வீக அன்பாகவும், உணர்ச்சி தெய்வத் திறனாகவும் திருவுருமாற்றம் அடைகின்றன.

அடுத்த நிலை சத்திய ஜீவ திருவுருமாற்றம். அறிவுக்கு ஓர் உருவம் உண்டு. அதன் மீது நமக்குப் பற்றுண்டு. அப்பற்றை விட்டால், அறிவு ஜோதியாகிறது. இது இரண்டாம் நிலை திருவுருமாற்றம். அறிவுக்கு அஸ்திவாரம் மூளை; உணர்ச்சிக்கு அடிப்படை நரம்பு; செயலுக்கு பீடம் உடல்; அறிவும், உணர்வும், சூட்சுமமானவை. அவற்றின் பீடங்களான மூளை, நரம்பு, உடல் ஸ்தூலமானவை. ஜடம் ஜடப்பொருளான இவை பழக்கத்திற்கு அடிமையானவை. இந்த கட்டத்திற்கு உரியது வேறு. பழக்கங்களை சரணம் செய்ய வேண்டும். பழக்கமான செயல் என்பது போல், பழக்கமான உணர்வும், பழக்கமான அறிவும் உண்டு. இந்நிலையில் அப்பழக்கங்களை சரணம் செய்ய முன்வந்தால், அறிவின் பீடமான மூளையும், நாதத்தின் பீடமான நரம்பும், செயலின் பீடமான உடலும் சத்திய ஜீவ ஒளியால் நிரப்பப்பட்டு, சத்திய ஜீவ திருவுருமாற்றம் ஏற்படும். உடலின் பழக்கங்கள் சரணடையப்பட்டு உடல் சத்திய ஜீவ ஒளியால் நிரம்பும் நிலையில் சரணாகதி பூரணம் பெறுகிறது.

மூன்று நிலைகளும், அவற்றின் பகுதிகளான ஒன்பது கட்டங்களும்:

முதல் நிலையை மூன்று கட்டங்களாகப் பிரித்து நம்பிக்கை, வழிபாடு, பணிவு என்றும்; இரண்டாம் கட்டத்தைத் துதி, தெய்வீக இன்பம், அர்ப்பணம் என்றும்; மூன்றாம் கட்டத்தைக் தெய்வீக அன்பு, பூரணமான பூரிப்பு, சரணாகதி என்றும் பகவான் குறிப்பிடுகிறார்.

புத்தியில் புலப்படாத அறிவு ஆன்மாவுக்குப் புலப்பட்டு அதன் பிரதிபலிப்பாக மனத்தில் எழுவது நம்பிக்கை. மனத்தின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் உணர்வு தன் பங்காக எதை மனம் நம்புகிறோ அதை வழிபட முன்வருகிறது. உடலும் ஒத்துழைக்க விரும்பி, தன் பங்குக்குச் சேவகம் செய்கிறது. இதுவே முதல் நிலையின் மூன்று பாகங்கள்.

புத்தியும், உணர்வும், உடலும் முதல் நிலை சரணாகதியில் செய்ததன் விளைவாக ஜீவன் சிறந்ததால், உணர்வு அடுத்த நிலையில் துதிபாட விழைகிறது. பாடும் துதி ஜீவனில் நிறைந்ததால், ஜீவன் தெய்வீக இன்பத்தால் நிறைகிறது. இதன் விளைவாக ஜீவன் மலர்ந்து தன்னையே அர்ப்பணம் செய்கிறது. இது இரண்டாம் கட்டம்.

இரண்டாம் கட்டத்தால் ஜீவன் பூர்த்தியடைந்தால் ஜீவனுக்குப் பின்னணியில் உள்ள ஜீவாத்மா தலையை நீட்டி அர்ப்பணம் செய்யப்பட்ட உணர்வை ஏற்று தெய்வீக அன்பாக மாற்றுகிறது. அன்பு நிறைந்த நிலை தொடர்ந்து செறிந்து பூர்த்தியும் பூரணமும் எய்திய காலத்து ஜீவன் பூரண பூரிப்புக்கு உடையவனாகிறான். பூரண பூரிப்பு நின்று நிலைபெறும் நிலை சரணாகதி பூரணமடையும் நிலை.

மனிதன் பல பாகங்களாலானவன் - உடல், மனம் போன்றவை. பல நிலைகளையுள்ளவன். புறநிலை, அகநிலை, ஸ்தூலம், சூட்சுமம் போன்ற நிலைகள் அவை. பல கரணங்களாலும், பல நிலைகளாலும், பல்வேறு பகுதிகளாலான மனித ஜீவியம் சரணாகதியை மேற்கொண்டு, அனைத்து நிலைகளையும், அனைத்து கரணங்களையும், சரணாகதியால் பூரணமாகப் பூர்த்தி செய்து, அடுத்த சிருஷ்டி நிலையை எட்டும் தகுதி பெறும் நேரத்தில் சரணாகதி என்ற மனித மனநிலை, பூரண சரணாகதி என்ற யோக சித்தியாகிறது.

*********



book | by Dr. Radut