Skip to Content

11. ஈஸ்வர-சக்தி

11. ஈஸ்வர-சக்தி

உலகத்தைப் பிரம்மமாகக் கண்டவரை பிரம்ம ரிஷி என்பார்கள். நிஷ்டையில் பிரம்மமாகத் தெரியும் உலகம் நிஷ்டை கலைந்தபின் மாயையாகிறது. யோக முதிர்ச்சியடைந்தவர் அதையே புருஷன் - பிரகிருதியாக அறிகிறார். கடைசி கட்டத்தில் ஈஸ்வர-சக்தியாக அது வெளிப்படுகிறது.

யோக திருஷ்டிக்கு புருஷனாகவும், மனிதப் பார்வைக்கு பிரகிருதி (இயற்கை) யாகவும் புலப்படுவதை ஸ்ரீ அரவிந்தர் வேறுவகையாக விளக்குகின்றார். புருஷனே பிரகிருதி என்கிறார். கண் என்பது புலன், அதன் செயல் பார்வை. கண் இல்லாவிட்டால் பார்வையில்லை, பார்வையற்றது கண் ஆகாது. கண்ணும் பார்வையும் ஒன்று;ஒன்று புலன், அடுத்தது அதன் செயல். அதே போல் பிரகிருதி என நாம் அறிவது, புருஷனுடைய செயலாகும். அவை இரண்டும் அடிப்படையில் ஒன்றே.

புலன்களைத் தாண்டிச் சென்ற புருஷனையும் பிரகிருதியையும் நாம் கவனித்தால் இந்த உண்மை புலனாகும். நாம் என்று நாம் அறிவது நம்மில் ஒரு சிறு பகுதியே என்பதால், இதன் முழு உண்மை புலப்படுவதில்லை. இரு கூறாகப் பிரிந்து தெரியும் புருஷன் - பிரகிருதி முழுவதும் வேறுபட்டவை அல்ல. ஒன்றோடொன்று கலந்து செயல்படும் வேறுபாடே எனக் காணலாம். ஜடமான பிரகிருதி, புருஷனைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பது தெரியும். ஜோதியான புருஷன் பிரகிருதியின் போக்கை மாற்றித் தன் ஆட்சிக்குட்படுத்த முயற்சிப்பதும் தெரியும்.

சாங்கிய யோகம் பிரகிருதியால் தனித்துச் செயல்பட முடியாது என்றும் புருஷன் அகந்தையின் பிடியிலிருந்து விலகி வந்து செயல்பட வேண்டும் என்று சொல்கிறது. மனிதனுள் தெய்வமும், மிருகமும் இணைந்துள்ளன. தெய்வம் மிருகத்தின் ஆதிக்கத்தை விட்டு வெளிவர வேண்டும் என்பது மற்றொரு வழக்கு. ஆகையால் ஆன்மா இயற்கையில் தன்னை பூரணப்படுத்திக் கொள்ள முடியாது. அதன் சிறப்பு வெளிவர இயற்கையைத் தாண்டி வரவேண்டும் என்றாகிறது.

மனிதன் யோகத்தால் தன் நிலையை உயர்த்திக் கொண்டால் இந்த முரண்பாடு இருப்பதில்லை. அவனது புதிய ஞானம் இந்த முரண்பாட்டை ஏற்றுக்கொள்வதில்லை. அதை ஒரு தோற்றமாகவே கருதுகிறது. முடிவான ஞானம் கண்டது புருஷோத்தமனை மட்டும். பிரகிருதியை புருஷோத்தமனின் பிரதிபலிப்பாகவே காண்கிறது. மனிதன் அகந்தை எனும் சிறு கூட்டுக்குள் இருப்பதால் அகண்ட பிரகிருதி கடல் போன்ற சக்தி என்றறிய முடிவதில்லை. அகந்தையை விட்டு வெளியே வந்த காலத்தில்தான் பிரகிருதி என்பது எல்லையில்லா சமுத்திரம் போன்ற சக்தி என்பதைக் காண முடிகிறது. பூரண ஆன்மிக சுதந்திரம் பெற அகந்தையிலிருந்து விடுபட்டு நாம் யார் என்ற உண்மையை அறிய வேண்டும். அத்துடன் நமக்கும் இயற்கை எனும் பிரகிருதிக்கும் உள்ள உண்மையான தொடர்பு என்ன என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நடைமுறையில் நம் அகந்தையை அழித்து அது இருக்குமிடத்தில் பிரபஞ்சத்தின் அளவிலா சக்தியை -பிரபஞ்சத்தின் பிரகிருதியை - பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றாகிறது. பிரபஞ்சத்தின் அளவிலாத சக்திக்கு நாம் உரியவர் என்பதும், அத்தனை சக்தியும் நம்முள் உறைகிறது என்றும், அதை வெளிக் கொணர வழிவகைகள் உள்ளன என்றும் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

பிரவாகமாகப் பிரகிருதி மனிதனுள் பிரவேசித்தாலும், மனிதன் உடல் எனும் கூட்டுக்குள்ளும் உடலின் தமோகுணம் மேலிட்ட மனத்தின் முழுப்பிடியிலும் இருப்பதால் அவனால் பிரவாகத்தை உணர முடிவதில்லை. தன்னுள் வரும் அளவுக்கே அவனால் பிரகிருதி சக்தியைக் காணமுடிகிறது. அதாவது தன் அளவே, பிரகிருதியின் அளவு என அவன் உணருகிறான். மாறாக, யோக சாதனை மூலமாக ஜடமான உடலின் பிடியிலிருந்து சற்று விலகி உள்ளுறை உலகங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால், பிரவாகத்தின் பெரும் அளவு தெரிகிறது. யோகிகள் இந்த சக்தியைப் பெற பிராணாயாமத்தைக் கடைப்பிடிப்பார்கள். பூரணயோகம் அதை விடுத்து, மனத்தின் திறனால் இச்சக்தியை ஆட்சி செலுத்துகிறது. பிரகிருதியின் பிரவாகம் அளவுகடந்தது, வியாதியைத் தீர்க்கவல்லது. அளவு கடந்தது என்றாலும் இது உயர்ந்த நிலையினின்று புறப்படும் தூய சக்தியில்லை. உடலிலும், உணர்விலும் செயல்படும் சாதாரண மனித-மிருக வகையைச் சேர்ந்த ஒன்றேயாகும்.

தமோ குணத்தின் பிடியில் உள்ள மனத்தைத் தாண்டிய பின் சக்தியின் உயர்ந்த தன்மையைக் காணலாம். தூய்மையான மனத்தின் சக்தி இது. மனித-மிருக வகையைச் சேர்ந்ததல்ல. பொதுவாக இந்த உயர்ந்த சக்தியும், தாழ்ந்த சக்தியும் கலந்தே காணப்படும். உயர்ந்த மனத்தின் சக்தியும் உயர்வின் முடிவில்லை. அதைவிட அதிக உயரத்தில் மறைந்துள்ள ஆன்மிக சக்தியையும் நாளாவட்டத்தில் சாதகன் காணலாம்.

மனோமய புருஷனுக்கு ஒரு சுதந்திரமுண்டு. மனோமய புருஷனை இயற்கை (பிரகிருதி) தன் ஆட்சிக்குள் வைத்திருக்க முடியாது. நம்மில் ஆன்மாவுக்கருகே உள்ள பகுதியொன்றுளது. இது பிரபஞ்ச ஓட்டத்தால் பாதிக்கப்படாதது. மனோமய புருஷன் இங்கிருந்து செயல்படும் பொழுது பிரகிருதியை தன் உத்தரவுக்குக் கீழ்க் கொண்டுவர முடியும். கிடைத்த விடுதலை பெரியது. அதன் பலனான சக்தி அதிகமானது. அச்சக்தியை எப்படிப் பயன்படுத்துவது என்பது நம்மைப் பொறுத்தது. சத்வ குணத்தை சிறக்கச் செய்யப் பயன்படுத்தலாம். இதே சக்தியைப் பயன்படுத்தி மனத்தை தூய்மைப் படுத்தி மௌனத்தையடைய முயற்சிக்கலாம். நெடுநாள் பழக்கத்தை கைவிட இந்த சக்தியைப் பயன்படுத்தலாம். சத்திய ஜீவ (சுப்ராமெண்டல்) சக்திகளை உற்பத்தி செய்யவும் பயன்படும் சக்தி இது. ஆனால் மனோமய புருஷனால் தனித்து சாதிக்கக் கூடியவை அல்ல இவை. ஈஸ்வரன், புருஷோத்தமன் எனப்படும் இறைவனுடைய துணையாலேயே இவை நடைபெறக் கூடும். பிரபஞ்சத்தின் புருஷனையும், பிரபஞ்சத்தின் சக்தியையும் உணர சத்திய ஜீவ லோகத்திற்கு சென்ற பின்னரே முடியும்.

மனத்தின் தூய்மை அதிகமானால் புருஷனையும் பிரகிருதியையும் அவற்றின் முழு அம்சத்தோடு காணும் திறனடைகிறான் மனிதன். புருஷன், புருஷோத்தமனே எனத் தெரிகிறது. ஜீவாத்மா புருஷோத்தமனுடன் கலந்து தனக்கு வேண்டிய எந்த ஆத்மிக நிலையையும் அடைய முடியும் என்பது தெளிவாகிறது. பிரகிருதி தன் அம்சங்களின் ஆன்மிக உயர்வுகளை கொணர முயன்று மஹா சக்தியாக காட்சி அளிக்கின்றது. சிருஷ்டியின் அற்புதம் தரிசனம் தருகிறது. மனம் தன் பாதைகளைத் தானே வகுத்துக் கொள்ளும் நேரமிது. சக்தி எனும் சமுத்திரத்தைக் காணலாம். அல்லது உயர்ந்த சமாதி நிலையை அடையலாம். அல்லது மனம் பிரபஞ்சத்துடன் கலந்து தனித்தன்மையை இழந்து, பிரபஞ்சத்தின் மனமாகச் செயல்படலாம். ஆனால் பூரண யோகம் நாடுவது வேறு. சக்தியின் உச்ச கட்டத்துடன் ஒன்றிப்போவது மட்டுமல்லாமல், சாதகன் தன் ஜீவாத்மாவின் சுபாவத்தில் சக்தியின் உச்ச கட்ட நிறைவைப் பூரணமாகப் பெற விழைகிறான். ஜீவனும், புருஷோத்தமனும் இரண்டறக் கலந்த நிலையை எய்துவதே குறிக்கோள். ஜீவனும், புருஷோத்தமனும், புருஷனானாலும், பிரகிருதி ஆனாலும் ஒன்றே. இந்த இரண்டு நிலைகளிலும் ஒருமையை எய்தும் உயர்வு சிறப்பை பூரண யோகம் நாடுகிறது. இந்நிலையில் ஜீவன், புருஷனும், பிரகிருதியும் சந்திக்கும் இடமாக இருக்கின்றான்.

இந்நிலையை அடைய ஈஸ்வரனுடைய சக்தியை அழைத்து நம் செயலையும் வாழ்வையும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும். இனி தனி மனிதனோ, அவனுடைய தனித்த செயலோ இல்லை. ஈஸ்வர சக்தி நம் கரணங்களை ஆட்கொண்டு செயல்படுத்தும். உயர்ந்த மனம், தாழ்ந்த உடல் ஆகியவற்றின் எண்ணங்களையும், செயல்களையும் ஈஸ்வர சக்தி தன் எண்ணமாகவும், தன் செயலாகவும் மாற்றுகிறது. இதன் சிகரமாக மனித ஜீவன், சத்திய ஜீவனாகிறான் (Supramental being). ஈஸ்வர சக்தி, புருஷோத்தமனுடைய சக்தியாகும். நம் செயலின் தலைவனாக ஈஸ்வரன் அமைந்து, நம் மனித வாழ்வை, தெய்விக வாழ்வாக மாற்றுகிறான்.

*********



book | by Dr. Radut