Skip to Content

12. அம்ஸ ஸநாதனம்

12. அம்ஸ ஸநாதனம்

மனித வாழ்வுக்கும் பரம்பொருளுக்கும் இடையில் தெய்வலோகம் உள்ளது. தெய்வ லோகத்திற்கும் பரம்பொருளுக்கும் இடையே சச்சிதானந்த லோகமும், சத்திய ஜீவியமும் உள்ளன.

பரம்பொருள் சிருஷ்டியில் செயல்பட ஈஸ்வரனாகவும் சக்தியாகவும் வந்து மனித வாழ்வையும், உலக வாழ்வையும் ஏற்படுத்தி நடத்துகிறான். இதுவே அடிப்படை ஆன்மிக உண்மை. சக்தியின் செயலை உலகத்தில் கண்டுகொள்ள விழையும் யோகி அடிப்படையில் இந்த ஞானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தில் நடக்கும் பெரிய காரியங்களும், அணுவின் அசைவான சிறு காரியங்களும் சக்தியில் தோன்றுகின்றன என்ற ஆன்மிக ஞானம் யோகிக்கு உதவும்.

சக்திக்குப் பின்னால் இருப்பது புருஷனான ஈஸ்வரன். மனிதன் அஞ்ஞானத்தால் செயல்படுகிறான். அவன் அகந்தையின் கருவி. உலகம் இருளில் பிரகிருதியாக இருக்கிறது. என்றாலும் இருளுக்குப் பின்னால் ஒளியுண்டு. அஞ்ஞானத்திற்குப் பின்னால் மறைபொருளாக ஞானம் இருக்கிறது. ஞானத்தின் வகைகள் பல. யோக ஞானம் என்றும், தெய்வ ஞானம் எனவும், சத்திய ஞானம் எனவும் அவை அமைந்துள்ளன. சத்தியம் முழுமையாக இவற்றையெல்லாம் தாண்டி சச்சிதானந்தத்தில் உறைகிறது. சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாகிறது. சத்து என்பது சத்தியம். அதுவே முடிவான நிலை. உயர்ந்த நிலை. இருண்ட மனித வாழ்வில் ஆரம்பித்து, உயர்ந்த சத்தியம் வரை பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு படியாகத் தாண்டி உண்மையை உணர வேண்டும். அது அவசியம்.

பரம்பொருளுக்கும், மனித வாழ்வுக்கும் இடையே பாலமாக அமைந்துள்ளது supermind சத்திய ஜீவியம். இந்த ஞானப் பாலம் நம்மில் அமையும் வரை சக்தியை நிரந்தரமாக உணர முடியாது. நம் முயற்சியின் அளவைப் பொறுத்து சில சமயம் மட்டுமே சக்தியை உணர முடியும். தன் செயலை அறிய முடியும்.

ஸ்ரீ அரவிந்தருடைய மகாராஷ்டிர குரு அவரை ‘உட்கார் கண்ணை மூடு. எண்ணங்கள் வெளியிலிருந்து வருவதைப் பார். அவற்றை விலக்கு‘ என்றார். ஸ்ரீ அரவிந்தரும் அதையே செய்தார். குரு சொன்ன உண்மையைக் கண்டார். எண்ணங்கள் வெளியிலிருந்து தன் தலையில் நுழைவதைப் பார்த்தார். எண்ணங்கள் உலகில் உருவாகின்றன. தனி மனிதனைத் தொடுகின்றன. அவற்றை அவன் மனம் ஏற்றுக்கொண்டால், அவற்றை தன் எண்ணம் எனக் கருதுகிறான். உண்மையில் எண்ணங்கள் நம்முடையதல்ல. உலகத்திற்குப் பொதுவானவையேயாகும். உணர்வுகளும் அப்படியே. முடிவாக எல்லாச் செயல்களும் உலகத்திற்குப் பொதுவானவை. உலகில் உற்பத்தியாகுபவை. நம்முள் அவை நுழைந்தபின் நாம் அவற்றை நம் செயல் என அறிகிறோம். நம் செயல் என நாம் கருதும் செயல் அனைத்தும் இறைவன் செயல். நமக்கு வெளியே உற்பத்தியாகும் செயல் ஒரு நிலையிலுள்ளது.

எண்ணம் ஒரு நிலைக்குரியது. உணர்வு மற்றொரு நிலையுடையது. செயலின் நிலை (plane) வேறொன்று. இந்நிலைகள் தாமே ஏற்பட்டு உருவடைந்து செயல்பட்டு வருகின்றன. கதிர்போன்று அவற்றிலிருந்து எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும், உற்பத்தியாகி உலகில் உலவி வருகின்றன. நம் ஜீவனை அவை தொடும்பொழுது நாம் அவற்றை நம் எண்ணம், நம் செயல் என அஞ்ஞானத்தால் உணர்கிறோம். இந்த ஆன்மிக உண்மையை உணர, அகந்தை உடைந்து, சிதைந்து, அழிந்து, கரைய வேண்டும். அதன் பின்னரே செயல்கள் நம்மைத் தாண்டி பரவெளியில் சக்தியால் உற்பத்தியாகி நம்முள் வருகின்றன என அறிய முடியும்.

மனிதன் தன்னை ஜீவனாக அறிகிறான். அகந்தையால் சூழப்பட்டிருந்தாலும் தன்னை ஜீவனாக உணர்கிறான். இயற்கை என்னும் பிரகிருதியை உலகத்திலும் இறைவனை மேலுலகத்திலும் மனிதன் கண்டு கொண்டுள்ளான். இறைவன், மனிதன், இயற்கை என 3 நிலைகளை நாம் தனித்தனியே காண்கிறோம். மனித அறிவுக்கு அவை வெவ்வேறாகப் புலப்படுகின்றன. ஆன்மிக நிலையில் அவை மூன்றும் ஒன்றாக இருப்பதுடன், ஒன்றே என்பது புலனாகும். ஆன்மீகம் ஒருமையின் அடிப்படையைக் கொண்டது. அதன் புலனுக்கு இறைவனும் மனிதனும் உலமும் ஒன்றே. மனிதன் தனித்த அகந்தையின் அடிப்படையில் இருப்பவன். அவனுக்கு அவை தனித்தனியாகப் புலப்படுகின்றன. அகந்தையின் ஆட்சிக்குட்பட்ட ஜீவன், இறைவனை தன் வழிக்குக் கொண்டுவர இடையறாது முயற்சிக்கின்றது. மனித வாழ்வில் துன்பம் உற்பத்தியாவதற்கு ஒரே காரணம் மனிதன் மற்றவர்களைத் தன் விருப்பப்படி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதால்தான் என்கிறார் அன்னை. மனிதன் மற்றவர்களை மட்டும் தன் இஷ்டப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இறைவனே தன் விருப்பப்படி செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது மனித இயல்பு. அடிப்படையான இந்த மனித சுபாவத்தை அவன் மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். தன் இச்சையை இறைவனின் திருவுள்ளத்திற்கு சரணம் செய்ய வேண்டும். இறைவனுடைய விருப்பத்திற்கிணங்கத் தான் செயல்பட வேண்டும் என்று தன் மன நிலையை தலைகீழாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதை நிறைவேற்றும் முயற்சியை உலகம் தவம் என அறியும். தன் விருப்பப்படி இறைவன் இருக்க வேண்டும், நடக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்ற மனித சுபாவத்தை மாற்றி, இறைவன் திருவுள்ளத்தை தன் வாழ்வில் பூர்த்தி செய்ய வேண்டும் இறைவனுடைய விருப்பத்திற்கிணங்க தன் செயலை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதை நிறைவேற்றும் மனித முயற்சிக்கு தவம் எனப் பெயர்.

ஈஸ்வர சக்தியை நாம் அடைய முயலுமுன் நம் அகந்தையை அழிப்பது நல்லது. அகந்தையை அழிக்கும்முன் தவத்தின் திறத்தால் சக்தியை அடைந்த ஒருவனுக்கு காத்திருப்பது அகந்தையின் ஆட்சி. அகந்தை அழியாமலிருப்பதால், அந்நிலையிலும் தவம் பலித்து சக்தி தரிசனம் கிடைத்ததால், சக்தியை தன் இஷ்டப்படி அகந்தை பயன்படுத்த முயலும். இது தவிர்க்கப்பட வேண்டியது. இதைத் தவிர்க்க ஸ்ரீ அரவிந்தர் ஒரு வழி சொல்கிறார்.

மனிதன் சக்தியை நாடிப் போவதற்குப் பதிலாக, சக்தி மனிதனை நாடி வருவதில்லை. இந்த இடையூறு தவிர்க்கப்படுமென்கிறார். சக்தி மனிதனைத் தேடிவர வேண்டுமானால் மனிதன் தன் அகந்தையை இழக்க வேண்டும். ஸ்ரீ அரவிந்தர் சொல்லும் மார்க்கம் அதுவே. சக்தியை நாடிப் போவதற்குப் பதிலாக, மனிதன் தன் அகந்தையைக் கரைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அகந்தை கரையும் அளவிற்கேற்ப, சக்தி மனிதனை நாடிவரும். சக்தி மனிதனை முழுவதும் அடையும் நேரத்தில் அகந்தை முழுவதுமாகக் கரைந்திருக்கும். அதனால், இம்மார்க்கத்தில், சக்தியை அடைந்த காலத்தில் குறையேற்படுத்த அகந்தை அங்கிருக்காது. அதனால் குறை ஏற்படாது. மேலும் சக்தி தன் செயலை மனித வாழ்வில் முழுவதுமாக வெளிப்படுத்த முடியும்.

மனிதன் பிறப்பில் உடலாகக் காண்பது அதனுள் உணர்வுக்குரிய நெஞ்சத்தையும், அறிவுக்குரிய மனத்தையும் மேலும் ஆன்மாவையும் கொண்டது. இவை நான்கையும் சேர்த்து ஜீவன் என்கிறோம். தத்துவரீதியாகக் கவனித்தால் புருஷனும், பிரகிருதியும் சந்திக்குமிடமாக ஜீவன் அமைந்துள்ளது. ஞான யோகத்தில் சித்தியடைந்தவர், மேலெழுந்தவாரியாகவுள்ள வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஜீவனுள் சென்று தன்னை சாக்ஷிபுருஷனாகக் காண்கிறார். இது ஒரு பிரம்மாண்டமான யோக சித்தி. இதன் மூலம் ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் அடையலாம். மோட்ச சித்தி பெறலாம். பகவானுடைய பரிபூரண யோகப் பாதை இந்தப் பெருநெறியை மேற்கொள்வதில்லை. அதினின்று விலகி மனித ஜீவனை உயர்த்தும் வழி என்ன என்று சிந்திக்கிறது. புருஷப் பிரகிருதியைவிட உயர்ந்த நிலை ஈஸ்வர சக்தி. சாக்ஷி புருஷனை நாடுவதை விட்டு, ஜீவன் முழுவதும் இறைவனை நோக்கி உயர்த்தி ஈஸ்வர நிலையை அடைய முயற்சிப்பதே பூரண யோகப்பாதை.

சாக்ஷி புருஷனாகத் தன்னைக் கண்டுகொள்வது உயர்வு பெற்ற ஞானயோக சித்தி எனினும், ஈஸ்வர-சக்தி நிலையை அடைய அது தேவையில்லை. சாக்ஷியை விலக்கி, வேறு பாதையை மேற்கொண்டால் மூன்று கட்டத்தில் பூரண யோகத்தின் குறிக்கோளையடையலாம்.

முதற்கட்டம்: ஜீவன் சக்தியை அறிந்து, உணர்ந்து தன்னை சக்திக்கு அடிமையாகக் கருதி, சக்தியை செயலின் பிறப்பிடமாகவும், சக்தி தன் மூலம் செயல்படுவதாகவும் கொண்டு, தன்னையும் தன் ஜீவனையும் சக்தியின் அடிமையாக்குவது முதற்கட்டம். இந்நிலையில் ஈஸ்வரன் சக்திக்குப் பின்னணியில் இருப்பது தெரியும்.

இரண்டாம் நிலை: முதற்கட்டத்தில் பின்னணியிலிருந்த ஈஸ்வரன் முன்னணிக்கு வந்து சக்தியின் செயலை முறைப்படுத்தி தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. இதன் விளைவாக ஜீவன் செய்ததை சக்தியே செய்கிறது. ஜீவன் தன்னைப் புருஷனாக உணருகிறான். செயல்களை சாக்ஷியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, செயல்களுக்கு துணையாக நின்று ஈஸ்வரனுடைய ஆதிக்கத்தையும், சக்தியின் செயலையும் காண்கிறான்.

மூன்றாம் கட்டம் கடைசி கட்டம். ஈஸ்வரன் மேலும் மேலும் முன்னணிக்கு வருகிறான். சக்திக்கும், ஈஸ்வரனுக்குமுள்ள இடைவெளி குறைகிறது. அகந்தை உற்பத்தியான பொழுது அகண்ட பிரபஞ்சத்திலிருந்து தன்னைப் பிரித்து தன்னைச் சுற்றி சுவர் எழுப்பி தான் எனும் தனித்தன்மை பெற்று செயலாற்றியது. ஜீவனும் தனக்கு தனித்தன்மை பெற்று செயலாற்றியது. ஜீவனும் தனக்கு தனித்தன்மை வேண்டும் என விழைகிறது. பரம்பொருளின் பொதுச் சிறப்பை ஆன்மாவின் தனிச்சிறப்பாக்கி உயர்த்தவே சிருஷ்டி ஏற்பட்டது. இதனிடையில் ஏற்பட்ட அகந்தை ஆன்மாவை பிரபஞ்சத்திலிருந்து பிரித்து விட்டது. தனக்கு தனிமையை ஏற்படுத்திக்கொண்டது. அகந்தை ஏற்படுத்தியது தனிமை இருளின் வகையைச் சேர்ந்தது. பிரபஞ்சத்திலிருந்து பிரிந்து நிற்பது. ஜீவன் நாடுவது தனிமையல்ல. தனித்தன்மை. தனிமை சிறுமையை அளிக்கும். தனித்தன்மை சிறப்பை அளிக்கும். பிரபஞ்சத்துடன் ஒன்றி தன் தனித்தன்மையை இழக்காமல் செயல்படும் திறனை ஜீவன் பெற்றது அம்ச சநாதனம் எனப்படும். தனித்தன்மையால், பொதுச் சிறப்பை உயர்த்தும் அம்சம் இது.

இதற்கடுத்த நிலை அவதாரம். ஈஸ்வரனே மனித உருவைத் தாங்கி, மனிதனுக்குரிய பெயருடன் உலகில் பிறந்து, இருந்து, இறைவனின் திருவுள்ளத்தை தன் வாழ்வில் பூர்த்தி செய்து, லீலையை முடிப்பதாகும்.

**********



book | by Dr. Radut