Skip to Content

17. பரிபூரண யோகத்தின் அடிப்படைத் தத்துவம்

17. பரிபூரண யோகத்தின் அடிப்படைத் தத்துவம்

ஜீவன் பல பகுதிகளைக் கொண்டது. அவை ஆன்மா, மனம், உள்ளம், உடல் ஆகியவையாகும். ஒரு பகுதியை தவ முயற்சியால் இருளிலிருந்து முழு விடுதலை அளித்து அதன் மூலம் ஒளியை நாடி, அதிலிருந்து ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் அடைவது யோக மரபு. ஜீவனின் எல்லா பகுதிகளையும் இருளிலிருந்து விலக்கி ஒளிமயமாக்கி, அகந்தையினின்று விடுதலை அளித்து, மனித சுபாவத்திலிருந்து மீட்டு அதைத் தெய்வ சுபாவமாக மாற்றி மனித ஜீவனை, சத்திய ஜீவனாக (supramental being) மாற்றும் திருவுருமாற்றம் பரிபூரண யோகத்தின் இலட்சியம்.

 

உடலும் வாழ்வும் அலைமோதி நிலைகுலைந்து நிற்கின்றன. அலைபாயும் வாழ்வை நிலைபெறச் செய்வதும், நிலையற்ற உடலை நிதானமாகச் செய்யவும் ஹத யோகம் முயல்கிறது. உடலை ஆசனத்தாலும், பிராணாயாமத்தாலும் அமைதியுறச் செய்து, வாழ்வை விரைவுபடுத்தும் சக்திகளைத் திரட்டி, கட்டிப் போட்டு, மனிதனை ஸ்தம்பிக்கச் செய்கிறது இந்த யோகம். திரண்ட சக்திகளை தெய்வ சக்தி மறைந்துள்ள மூலாதாரத்தை நோக்கிச் செலுத்துவது ஹத யோகத்தின் பாதை.

இராஜ யோகத்தின் அரங்கம் மனம். அதுவே அதன் கருவியும் கூட. அதன் வேகத்தை உலகம் மனோ வேகம் என அறியும். மனத்தைத் தூய்மைப்படுத்தி, அதன் வேகத்தை இழந்து சமத்துவத்தை அடையச் செய்கிறது இராஜ யோகம். அதன் மூலம் யோகி அடைவது சமாதி நிலை. அந்நிலையில் ஜீவனின் சக்திகள் திரண்டு நிற்கின்றன. திரண்ட சக்தி முழுமைப் பெறும் நிலையில் மனம் தெய்வத்தைத் தொட்டு அதனுடன் இரண்டறக் கலக்கின்றது.

திரி மார்க்கம் ஒருவகை. ஞானமார்க்கம், பக்தி மார்க்கம், கர்மயோகம் ஆகியவை திரிமார்க்கத்தின் பகுதிகள். சுத்தம் முதல் கட்டம். கரணம் தூய்மைப்படுத்தப்படுகிறது. சுத்தி கரணத்தை முக்திக்கு அழைத்துச் செல்லும் திறனுடையது. கரணம் தூய்மை அடைந்தால் தன் சக்திகளை திரட்டும் திறன் பெறுகிறது. (concentration) திரண்ட சக்தி ஒரு நிலைப்படுத்தப்பட்டால் தெய்வத்தின் திருக்கோயில் வாயிலுக்கு அழைத்துச் செல்லும். பரம்பொருள் யோகியின் தவப்பலனாக கிடைக்கின்றார்.

உடலையும் ஆன்மாவையும் இணைத்துச் செயல்படுவது ஹத யோகம். மனத்தையும் ஆன்மாவையும் கருவியாகக் கொண்டது இராஜயோகம். அறிவையும் ஆன்மிகத் திறனையும் சேர்த்து ஞான யோகம் செயல்படுகிறது. செயலையும் ஆன்மாவையும் கர்மயோகம் பயன்படுத்துகிறது. உணர்ச்சியையும் கலை ரசனையையும் பக்தி மார்க்கம் நாடுகிறது. எந்த மார்க்கத்திலும் பலன் கிடைத்து, உச்ச கட்டத்திற்கு போனால், யோகத்தின் மற்ற வாய்ப்புகளைக் காணலாம். எனவே எல்லா யோகங்களையும் ஒன்று திரட்டி அவற்றின் சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு யோகத்தை ஏற்படுத்த முடியும் என்பது தெரிகிறது.

தந்திர மார்க்கம் ஹதயோகம், இராஜ யோகம், திரிமார்க்கம் ஆகியவற்றின் முக்கிய அம்சங்களை தன்னுள் கொண்டது. முக்தியுடன், பிரபஞ்சத்தில் தெய்வத்தை அனுபவிக்கும் முயற்சியையும் தந்திரமார்க்கம் தேடுகிறது. எனவே தந்திர மார்க்கம் எல்லா யோகங்களையும் சேர்ந்த யோகம் எனக் கருதப்படும்.

மனிதனுள் ஆன்மா உறைகிறது என்பது வேத இரகஸ்யம். ஆன்மா விடுதலையடைந்து பூவுலகத்தில் தெய்வ சக்தியை அனுபவிக்கலாம் என்பது தந்திர யோகம். பரிபூரண யோகம் வேத இரகஸ்யத்தில் ஆரம்பித்து தந்திர யோகத்தின் முடிவான இலட்சியத்தையடைய முனைகிறது. தந்திர மார்க்கத்தில் தலையாயது சக்தி. பரிபூரண யோகத்தில் தலையாயது ஆன்மா. தந்திரம் அடியிலிருந்து ஆரம்பிப்பதால், சகஸ்ர தளத்திலுள்ள ஆன்மாவை எழுப்ப முயல்கிறது. தந்திரம் மனிதனை உடலில் மறைந்துள்ள ஆன்மாவாகக் கருதுகிறது. பூரணயோகம் மனிதனை மனத்தில் உறையும் ஆன்மாவாகக் கருதி ஆரம்பிக்கிறது. மனத்திலுள்ள ஆன்மிக சக்தியை எழுப்பி, திரிமார்க்கத்தால் ஜீவனில் ஒளிந்துள்ள ஆன்மிக சக்திகளை அனைத்தையும் வெளிக்கொணர முயல்வது பூரண யோகம். எனவே மிகக் குறுகிய பாதை மூலம் மிகப் பெரிய இலட்சியத்தை அடையும் வண்ணம் பூரண யோகம் அமைந்துள்ளது.

பரிபூரண யோகத்தின் அடிப்படைத் தத்துவம் சரணாகதி. எல்லா யோகங்களும் முக்தியை நாடுகின்றன. தந்திர யோகம் முக்தி, சித்தி, புத்தி என விடுதலை, பூரணம், ஆன்மிக யோகானுபவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்டது. இதே இலட்சியத்துடன் நாம் ஆரம்பித்தாலும், பிரபஞ்சத்தின் ஆத்மாவாக மாறும் மற்றொரு இலட்சியத்தையும் முடிவில் நாடுகிறோம். பூரண யோகத்தின் முதல் இலட்சியம் முக்தி, இரண்டாம் இலட்சியம் பிரபஞ்சத்தில் ஆன்மிக அனுபவம் பெறுதல். அகந்தை அழிந்த நிலையில் யோகி தன் ஆத்மா பிரபஞ்சத்தின் ஆத்மாவாக மாறுவதை உணருகிறான். முக்தியால் பரம்பொருளை முதலில் எட்டிய யோகி, தான் பரம்பொருளோடு முழுத் தொடர்பு கொண்டதை அறிகிறான். அகந்தையை இழந்து பிரபஞ்சத்தின் ஆத்மாவாக மாறும் பொழுது, பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் ஆத்மாவுடன் தன் ஆத்மா தொடர்பு கொண்டதை அறிகிறான். எனவே பிரபஞ்சத்திற்கும், பரம்பொருளுக்கும் இடையே முக்தியடைந்த அவனது ஆத்மா ஆன்மிகப் பாலமாக அமைகிறது. முக்தியடைந்து அதனால் கிடைக்கும் விடுதலையை அவன் மறுத்து விட்டதால் பூவுலகில் அவனது ஆத்மா இந்தச் செயலுக்கு உட்பட்டு இறைவனின் திருவுள்ளம் பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் ஆத்மாவிலும் பூர்த்தியாக ஒரு கருவியாக அமைகிறது. தனி மனிதனுடைய யோகம் இந்நிலையில் அனைவருடைய யோகமாகிறது. அதுவே பூமாதேவியின் யோகமாகும்.

யோகம் மலர்ந்து பூரணம் பெறுவதில் இரு அம்சங்களுண்டு. தான் எனும் அகந்தை, பிரபஞ்சத்திலிருந்து விலகி முழுமையை இழந்து, குறுகி, நலிந்து, இறுகி, இருளடைந்து இருக்கும் நிலையிலிருந்து தன்னை அறிந்து சரணாகதியை மேற்கொண்டு விரிந்து, ஒளி பெற்று, வலிமையுற்று, ஆன்மிக அறிவை ஏற்று தன் எல்லையை உடைத்து, பிரபஞ்சத்தின் அகன்ற பரப்பில் கலந்து நிற்கிறது. அது முதல் அம்சம். இரண்டாம் அம்சம் மனிதன் தன் சுபாவத்தை இழந்து இறைவனின் சுபாவத்தைப் பெறுதல். மனத்தின் அறிவு, உண்மையிலேயே அறியாமை, உணர்வின் துடிப்பு பற்றும் பாசமும் நிறைந்த விலங்குணர்ச்சியேயன்றி உயர்ந்த அம்சமுள்ள அன்பில்லை. உடலின் உயர்வும், மனித ஜீவியத்திலோ, மனித சுபாவத்திலோ இல்லை. பிரபஞ்சத்துடன் மனித ஜீவனின் பகுதிகள் கலந்த நிலையில் அந்த உயர்ந்த தெய்வ அம்சங்கள் அவனை நாடி வருகின்றன. அதாவது மனித சுபாவம், ஆன்மிக சுபாவமாகவும் சத்திய ஜீவனுடைய சுபாவமாகவும் உயர்ந்து விடுகிறது. பரிபூரண யோகத்தை ஞான, பக்தி, கர்ம மார்க்கங்கள் சேர்ந்த யோகம் என்று நாம் அறிவோம். அதையே ஆன்மிக பூரணச் சிறப்புப் பெற்ற யோகம் எனலாம்.

சத்திய ஜீவனுடைய ஞானமும், செயலும் இறைவனுடைய ஞானமும், செயலுமாகும். அதைப் பெற மனிதன் தன்னை ஆன்மாவாக உணர்ந்து அதனுடன் இணைய வேண்டும். இறைவன் மனிதனுடைய ஆத்மாவைத் தொட்டு அதைத் தன் நிலைக்கு உயர்த்துமுன், ஆன்மா தன் இருப்பிடத்தை விட்டகன்று, இறைவனின் அளவற்ற அனந்தத்தை அடைந்து அதனால் தானும் அளவற்ற மலர்ச்சியைப் பெறுவது அவசியம். அதைப் பூர்த்தி செய்ய மனித ஜீவனின் பகுதிகளான மனம், உணர்வு, உயர்ந்து மலர வேண்டும் என்பதால், திரிமார்க்கம் அவசியமாகிறது. பிறப்பறுத்து, விடுதலையடைந்து, முக்தி பெறுவதுதான் இலட்சியமானால் இவையெல்லாம் தேவையில்லை. எந்த ஒரு பகுதி மூலமாகவும் முக்தியைப் பெறலாம். சத்திய ஜீவியம் என்பது ஆன்மிக சுபாவத்தை முழுமையாகப் பெற்று இறைவனின் அனைத்து சிருஷ்டியிலும் பூரணமாக அனுபவிப்பதாகும். மனிதனை முழுமையாக இறைவன் நிலைக்கு உயர்த்துவதாகும்.

ஞானம், பக்தி, கர்மம் ஆகியவை தன் உச்சகட்டத்தை அடையும் நேரம் மற்ற இரு அம்சங்களையும் தொடவல்லது. ஆகையால் அவற்றுள் ஏதாவது ஒன்றில் ஆரம்பித்தால் மற்ற இரு மார்க்கங்களையும் அதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

*********



book | by Dr. Radut