Skip to Content

03. முதற்கட்டத்திற்குப் பயன்படும் அஸ்திவாரம்

3. முதற்கட்டத்திற்குப் பயன்படும் அஸ்திவாரம்

பூரண யோகத்திற்கு முதற்கட்டமாக சைத்திய புருஷன் வெளி வருவதையே முக்கியமாகக் குறிப்பிட்டாலும், பல்வேறு பயிற்சிகளை முதற்கட்டமாகச் சொல்வதுண்டு. திருவுருமாற்றமே பூரணயோகம். திருவுருமாற்றத்தை 3 நிலைகளாகப் பிரித்து (i) சைத்திய புருஷனாக ஏற்படுவது (ii) ஆன்மிக திருவுருமாற்றம் (iii) சத்திய ஜீவிய திருவுருமாற்றம் என்கிறார். எனவே சைத்திய புருஷன் வெளிவந்து மனித வாழ்க்கைக்குத் தலைமை தாங்குவதை முதற்கட்டமாகக் குறிக்கின்றோம்.

ஹிருதய குகைக்குப் பின்னால், அங்குஸ்தம் எனப்படும் கட்டை விரல் பருமனுள்ள, ஆன்மாவின் பிரதிநிதியாக சைத்திய புருஷன் புதைந்திருக்கின்றான். குகையிலிருந்து அவன் வெளிவர வேண்டும். அப்படி வெளிவரும் நேரம் கண்ணீர் ஆறாகப் பெருகி, நிற்காமல் வடியும். காதில் விழும் ஒலி எல்லாம் இறைவனின் குரலாகக் கேட்கும். கண்ணில் படுவதெல்லாம் இறைவனின் திருவுருவமாகத் தெரியும். கல்லுக்கும் ஜீவன் உண்டு என்பது புரியும். மனம் இதமாக இருக்கும். உணர்வு மெத்தெனத் தென்படும். சாந்தம் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். இந்த நிலையையடைய 30 ஆண்டு தவமிருந்து பலித்தால் அது அதிர்ஷ்டம் என்கிறார் அன்னை. அன்னையின் சூழலில் இருந்து 2 அல்லது 3 மாதம் இடைவிடாது முயல்பவருக்கு அன்னை இதைப் பரிசாக அளிப்பேன் என்கிறார். இது அனைவரும் அறிந்தது. இக்கட்டுரையில் இதற்கு முந்தைய நிலைகள் உண்டா, அவை எவை, அவற்றை யோகப் பலன் கிடைக்கும் வகையில் பின்பற்றுவது எப்படி என்று எழுதுகிறேன். சுமார் 30 நிலைகளைக் குறிப்பிட்டுவிட்டு அவற்றுள் ஒரு சில நிலைகளை மட்டும் விளக்கி எழுதுகிறேன். எல்லா நிலைகளுக்கும் உள்ள முறைகள் பெரும்பாலும் பொதுவானவை என்பதால் அவற்றை மீண்டும், மீண்டும் எழுதுவதைத் தவிர்க்கவே இம்முறையைக் கையாள்கிறோம்.

அஸ்திவாரமான யோக நிலைகள் ஏராளம். அவற்றுள் சில.

  1. சமத்துவம்
  2. ஆசையை அழித்தல்
  3. பலன் கருதாத செயல்
  4. அகந்தையை அழித்தல்
  5. நம்பிக்கை
  6. ஆத்ம சமர்ப்பணம்
  7. விடா முயற்சி
  8. தெய்வீக ஆர்வம்
  9. தியானம்
  10. தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் பூரிப்பு
  11. சரணாகதிக்கு முன் எழும் அற்புத உணர்வு
  12. மனித வாழ்வுக்கும், இறைவனுக்கும் இடையே அமர்தல்
  13. செயலை இறை உணர்வால் அபிஷேகம் செய்வது
  14. நானில்லை, நீயே தான் பொறுப்பு
  15. என் தீமையை தெய்வமாக மாற்று
  16. விருப்பு, வெறுப்பை கடந்து நிற்றல்
  17. தர்மங்களைக் கைவிடுதல்
  18. பழக்கத்தை அழித்தல்
  19. அறிவை நம்ப மறுத்தல்
  20. ஆர்வத்திற்காகச் செயல்பட மறுத்தல்
  21. குறை கூறாதிருத்தல்
  22. க்ஷணம் தவறாமல் இறைவனை ஆர்வமாக நாடுதல்
  23. உள்ளத்தின் சிறுமையை புறநிகழ்ச்சிகளில் கண்டுகொள்ளுதல்
  24. அமைதியே முடிவான மோனநிலை
  25. நாள் முழுவதும் மனதைக் தியானத்திற்காகத் தயார் செய்வது
  26. இடையறாத நினைவு
  27. நீங்காத திருவுருவக் காட்சி
  28. அன்னையாக மாறுவது
  29. மனத்தை ஒரு நிலைப்படுத்துவது
  30. இறைவனாக மாறுவது

மேற்கண்ட தலைப்புகளைப் படித்தவுடன், யோக சித்தி பெற்றபின் கிடைக்கும் நிலைகள் சில இங்கு காணப்படுவதால், அவை எப்படி அஸ்திவார நிலையாகும் என நினைக்கலாம். ஒரு சிறு முயற்சியாக பெரும் நிலைகளையும் நாடி, அவை சிறிதுநேரம் யோகானுபவமாக ஏற்பட முடியும். அதன் மூலம் அஸ்திவாரமாக அடைய முடியும் என்பதால் அவற்றையும் குறிப்பிட்டுள்ளேன்.

Bath of the lord செயலை இறையுணர்வால் அபிஷேகம் செய்வதை அன்னை ஏராளமாகக் குறிப்பிடுகிறார். இதை விளக்கமாகவும் எழுதுகிறார். அன்னையிடம் ஒருவர் ஆசி வழங்க முயலும் பொழுது, பக்தர் இறையருளின் வெள்ளத்தில் சிக்கி ஆனந்தமயமாகி திக்கு முக்காடுவதுண்டு என்று அன்னை கூறுகிறார். நேரு தன்னைத் தரிசிக்க வந்தபொழுது அதையே கடைப்பிடித்ததாகவும் கூறுகிறார். இந்த முறையை எல்லோரும் பின்பற்றலாம் என்றும் கூறுகிறார். பக்தர்கள் மனதில் அன்னை குடிகொண்டிருக்கிறார். நாம் ஒருவரைச் சந்தித்து ஒரு விஷயம் பேசப்போனால், நம் அறிவிலிருந்து செயல்படுகிறோம். அதற்குப் பதிலாக அவரைச் சந்தித்த க்ஷணம் நாம் உள்ளே சென்று அன்னையைக் காண முயன்று, அவரைக் கண்டபின், எதிரேயுள்ளவருக்கு நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்றால், அன்னையுணர்வு அங்கிருந்து புறப்படும். புறப்பட்டவுடன் நம் உடலும் ஜீவனும் பூரிப்படையும். அவரை அடைந்து அது தொடர்ந்து அவருடைய ஜீவனை நிரப்பும். அந்த நேரம் நம் உடலின் ஆழத்தில் உள்ள தெய்வீக உணர்வின் ஊற்றுக் கண்கள் பெரியதாகி அன்னை அதிகமாகச் சுரப்பதைக் காண்போம். இது ஒரு யோகானுபவம். வந்த காரியம், அர்ப்பணிக்கப்பட்ட அன்னை செயலாக மாறி நிறைவடைவதையும் காண நினைவிருக்காது. இதையே ஒரு யோக முயற்சியாகக் கொண்டால் நம்முள் அன்னை குடியிருக்கின்றார் என்று அறியாதவர்களுக்கும், அன்னை உள்ளிருந்து புறப்பட்டு வீதி ஊர்வலம் வருவது தெரியும். தொடர்ந்து பயின்றால், முதற்கட்டத்திற்கு கொண்டு போக உதவும்.

ஆண்டவன் கூட பெருந்தன்மைக்கு என்னிடம் பிச்சை வாங்க வேண்டும் என்று அடிக்கடி ஒருவர் கூறுவார். அவர் தன் மனநிலையை புறநிகழ்ச்சிகளில் காண முடிவு செய்தால், அவரை பலர் திட்டுவது தெரியும். மற்றவர்கள் தன்னை மட்டமாகத் திட்டுவது தான் பிறரை மனதில் மட்டமாக நினைப்பதின் எதிரொலியே எனப் புரியும். புரிந்ததை அவர் அறிவு ஏற்றுக்கொண்டால் அதே நிமிஷம் ஒரு புரட்சி ஏற்படும். எவன் இவரை மட்டமாகத் திட்டினானோ, அவனே எதிரில் வந்து இவருடைய உயர்ந்த குணத்தைச் சொல்லிப் பாராட்டுவான். இங்கு பலன் முக்கியமில்லை, நம்மைச் சுற்றி நிகழ்பவை நம் மனத்தின் பிரதிபலிப்பு என்று அறிவு ஏற்றுக் கொள்வது அடக்கத்தின் சிகரம். அடக்க உணர்வு ஏற்பட்டவுடன் அன்னை செயல்படுவார். நம்முள் பிரவாகமாக வருவார். மனித உணர்வு, தெய்வ சித்தமாக மாறும். முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் நலம்.

நாள் முழுவதும் நினைவையும், உணர்வையும் கிளர்ச்சிகளையும், அங்க அசைவுகளையும் சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்தால் மனம் சாந்தத்தில் மூழ்கும். நெஞ்சம் பூரிக்கும், கிளர்ச்சிகள் பேரின்பமாக மாறும், அசைவுகள் தெய்வத்தின் செயலாக நடைபெறும். அதைவிட உயர்ந்த தெய்வீக இன்பமில்லை என்கிறார் அன்னை. 30 வருஷம் முயன்று பலித்தால் அதிர்ஷ்டம் என்ற பட்டியலில் இடம் பெறுபவவை இவை. ஆனால் முயற்சிக்குப் பலன் உண்டு, விடா முயற்சிக்குப் பரிசுண்டு. விடாமுயற்சியை ஏற்க மனம் செய்யும் முடிவுக்கு அன்னை யோக சித்தியை தன் அன்புப் பரிசாக தவறாது வழங்குவார். 30 வருஷப் பலன் முன்னமே கிடைக்கும். 30 நாளிலும் கிடைக்கும். முதல் முயற்சியிலும் கிடைத்ததுண்டு.

இதேபோல் எல்லா முறைகளையும் விளக்கலாம். ஒரு முறைக்கு வெகு நீள விளக்கம் அளிக்கலாம். அவையெல்லாம் யோகத்திற்குப் பயன்படாது, படித்துப் புரிந்து கொள்ளலாம். முதற்கட்டத்தை எட்ட வேண்டும், முடியாவிட்டால் அதற்குமுன் செய்யக் கூடியதை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அணையாத ஜுவாலையாக இருப்பவருக்கு இது உதவும். எதையும் பின்பற்றலாம். எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். பலன் தெரிந்தபின், முறை வேண்டுமானால் விளக்கம் தேவைப்பட்டால், முழு நீள விளக்கத்தை எழுதிக் கொடுப்பது அன்னைக்குச் செய்யும் சேவைகளில் சிறப்பானது. அவற்றைச் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பது பக்தி பலித்து அடையும் பாக்கியம்.

சமத்துவம் என்றால் புற நிகழ்ச்சிகளாலோ, அகவுணர்வுகளாலோ பாதிக்கப்படாத நிலையாகும். அறிவில் பொறுமையும், ஆன்மாவில் சாந்தியும் நிரம்பப் பெற்றால் தான் சமத்துவம் ஏற்படும். எதிர்பார்த்த தபால் வராவிட்டால் ஏமாற்றம் ஏற்படுகிறது. எரிச்சல் வருகிறது. பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடக்காவிட்டால், மனம் சஞ்சலமடைகிறது. ஆனால் நம் கவனக் குறைவால் ஒரு பொருள் உடைந்து விட்டால், எரிச்சலுக்குப் பதிலாக இனி கவனமாக இருக்க வேண்டும் என்று தோன்றுவதும் உண்டு. புற நிகழ்ச்சிகளில் உள்ள குறை நம் அகவுணர்விலுள்ள குறையால் ஏற்பட்டதே என்ற ஞானத்தை மனம் ஏற்றுக் கொண்டால், எரிச்சல், ஏமாற்றம் குறைந்து இனி எப்படி அகவுணர்வை சிறப்புறச் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும். நாளாவட்டத்தில் அது நிறைவேறும். இம் முயற்சியால் ஏற்கனவே அவசரப்படும் காரியங்களில் இப்பொழுது நிதானம் தோன்ற ஆரம்பித்தால் அதுவே முதற்படி. வாழ்க்கை பல படிகளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு படியிலும் சிறியவை பெரியவை என்றுண்டு. சமத்துவம் தோன்றும் பொழுது முதற்படியில் சிறு விஷயத்தில் ஏற்படும். அதே படியிலுள்ள அடுத்த விஷயத்திற்கு சமத்துவத்தைக் கொண்டு போக முயல வேண்டும். அப்படி முடிந்தவுடன் சமத்துவத்தை அங்கும் நிலைநாட்ட முயல வேண்டும். கீதை சமத்துவத்தையே யோகமாகக் கருதுகிறது. நிதானமாக ஆரம்பித்து பொறுமை வழியாக சமத்துவத்தை அடையும் பாதை முடிவில் யோகத்தின் திறவுகோலாக அமையும். இம் முயற்சியில் விரைவான முன்னேற்றமிருப்பதால் படிப்படியாக கடைசிப் படிக்கு செல்ல வேண்டும். அப்படி செல்வது சிறப்பு. கடைசிப் படிக்கு வந்துவிட்டாலும் முற்படிகளில் ஏராளமான குறையிருக்கும். அவற்றையும் நிறைவுபடுத்த வேண்டும். முன்னேற்றம் மெதுவாக இருந்தால், முதற்படியிலுள்ள எல்லா நிலைகளையும் பூர்த்தி செய்து அடுத்தபடிக்குப் போகலாம். விரைவாக மேலே சென்று, திரும்பிவந்து விட்டுப் போனவற்றை பூர்த்தி செய்வது ஒருவகை. நிதானமாக ஒவ்வொருபடியாக நிறைவு செய்து மேலே போவது மற்றொரு முறை. இரண்டையும் கலந்தும் பயிலலாம். முடிந்த அளவு மேலே செல்லலாம். முடியாத நேரம் இருக்கும் நிலையைப் பூர்த்தி செய்யலாம். முயற்சியைத் தளராமல் மேற்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.

ஆனந்தத்தைப் பெற ஆசையின் சுவடே இருக்கக் கூடாது என்கிறார் பகவான். ஆசை, மற்றவைகளைப் போல, பல நிலைகளில் உண்டு. விடக்கூடிய சிறிய ஆசை. விட முடியாத பெரிய ஆசை. தவிர விடமுடியாத சிறிய விஷயங்களிலுள்ள ஆசைகளும் உண்டு. ஆசையை அதிகமாகப் பூர்த்தி செய்துகொள்வதே சாதாரண மனிதனின் நோக்கம். ஆசையை விடுவது எப்படி என்று ஆராய்வதன் முன் ஆசையைப் பூரணமாக அழித்து ஆனந்தத்தை அடைய மனம் தீவிரமாக விரும்புகிறதா, அதற்கு விதிவிலக்குண்டா என்று சோதனை செய்ய வேண்டும். முடிவு தீவிரமாக இல்லை சில ஆசைகளை விடத் தயார். எல்லா ஆசைகளையும் எப்படி விடுவது என்பவர், முதற்காரியமாகச் செய்ய வேண்டியது தன் மனதைக் கலந்து ஆசையை அழிக்கும் முடிவை தீர்க்கமான ஒன்றாகச் செய்ய வேண்டும். முடிவு பூரணமானால், முறைகளை எளிமையாக விளக்கலாம். முடிவில் குறையிருக்கும்வரை, முறைகள் பலன் தராது. பல்வேறு முறைகளை நம் சுபாவத்திற்கேற்றவாறு ஏற்றுக்கொள்ளலாம். படிப்படியாகச் செயல்படும் சுபாவம் உடையவர் சிறியதில் ஆரம்பித்து, பெரியது வரை முறையாக முன்னேறலாம். எதையும் செய்தால் முழுமையாகச் செய்பவர் எல்லா ஆசைகளையும் புறக்கணிக்கலாம். அல்லது வலுக்குறைவான ஆசைகளில் ஒன்றையும், ஆழ்ந்து நம்மைப் பற்றியுள்ள ஆசை ஒன்றையும் முதலில் விட முயற்சி செய்து அதே பாணியை பின்பற்றலாம். முடிந்தவற்றை எல்லாம் நிதானமாகக் கைவிட்டு விட்டு, அந்த அளவில் வெற்றி கிடைத்தவுடன் மீதி அனைத்து ஆசைகளையும் ஒரேயடியாக அழிக்கலாம். ஆசை அழியும்பொழுது, நம் திறமை அதிகமாவது தெரியும். நிதானம் அதிகரிக்கும். அறிவு தெளிவு பெறும். உடல்நலமும் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தில் ஆசை அறவே அழிந்ததோ, அதில் ஆனந்தம் ஏற்பட ஆரம்பிப்பதும் தெரியும். பூரணமாக ஆசை அழிந்த நிலையில் கர்மயோக சித்தியான பிராணமய புருஷன் வெளிவருவான். சைத்திய புருஷன் வெளிப்பட இது பெரிய முதற்படியாகும்.

ஆத்ம சமர்ப்பணம் ஆரம்பநிலையைச் சேர்ந்த முறை. செய்யும் காரியங்களை அன்னையை நினைத்துச் செய்வதை சமர்ப்பணம் எனக் கொள்வதுண்டு. பக்தர்களுக்கு இது பிரச்சனை தீர்க்க உதவும். பிரார்த்தனை பலிக்க உதவும். சாதகனுக்கு யோகம் பலிக்க ஆத்ம சமர்ப்பணத்தின் இலக்கணம் முழுமையாக இருக்க வேண்டும். ஒரு தொந்தரவை சமர்ப்பணம் செய்தால், சமர்ப்பணம் பூரணமானால், அந்தத் தொந்தரவு அத்துடன் விலக வேண்டும். அதுவே சமர்ப்பணத்திற்குரிய லக்ஷணம். யோகத்தின் முதற்படியிலுள்ளவனுக்குத் தொந்தரவு கிடையாது. இருந்தால் அதை ஒரு பொருட்டாக கருத முடியாது. அவன் சமர்ப்பணத்திற்கு எடுத்துக் கொள்பவை மூன்று. எண்ணம், உணர்வு, உடல் அசைவுகள். பேப்பர் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியவுடன் அதைச் சமர்ப்பணம் செய்தால், பொதுவாக அது சமர்ப்பணமாகாது. சமர்ப்பணத்தை விட்டு விலகி நிற்கும். மீண்டும் அதே எண்ணம் தோன்றும். பல ஆண்டு முயற்சியில் சமர்ப்பணத்தில் வெற்றி கிட்டினால் அது பெரிது. முதல் நாளிலேயும் வெற்றி கிடைப்பதுண்டு. முதல் முயற்சிலேயும் கிடைப்பதுண்டு. எண்ணம் சமர்ப்பணமானால், அது மின்னல் தாரை வானில் தவழ்வது போல் சென்று மனத்தில் உள்ள ஒளி மையத்தில் கலந்து மறையும். அது சமயம் மனம் அளவுகடந்த அமைதியடைந்து தவம் பலித்தது போன்ற உணர்வேற்பட்டு ஸ்தம்பித்துவிடும். அதேநிலை வெகு நேரம் இருப்பதுண்டு. இதற்கடுத்த நிலையை இரண்டு விதமாக விளக்கலாம். ஓர் எண்ணம் மறைந்து கரைந்தால், மற்ற எண்ணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒருவகை. ஒருமுறை ஏற்பட்ட வெற்றி, அத்துடன் முடிந்து, பலநாள் கழித்து மீண்டும் தோன்றும். அதுவரை எண்ணத்தைச் சமர்ப்பிக்க முடியாது. மீண்டும் சமர்ப்பணம் பலிக்க ஆரம்பித்தால் அதைத் தொடர வேண்டும். மீண்டும் தோன்ற மாதக் கணக்காகலாம், வருஷக் கணக்காகலாம். மீண்டும் தோன்றியபின் முன்னேற்றம் அங்குலம் அங்குலமாகவே இருக்கும். அடுத்தது உணர்வைச் சமர்ப்பிப்பது. ஓர் எண்ணம் சமர்ப்பணமானபின், எண்ண சமர்ப்பணத்தைப் பூர்த்தி செய்யாமல், ஓர் உணர்வை சமர்ப்பணம் செய்ய முயலவேண்டும். இது முடிந்தால் அடுத்தாற்போல் ஓர் அங்க அசைவை சமர்ப்பணம் செய்யலாம். அதுவும் முடிந்தால் ஆரம்பத்திற்கு வந்து முதலிலிருந்து முடிவுவரை உள்ள பாக்கியைப் பூர்த்தி செய்தல் முறை.

நமக்கு மனதில் உள்ள எண்ணம் தெரிவதுபோல், நெஞ்சிலுள்ள உணர்வுகள் தென்படுவதில்லை. கோபமோ ஆசையோ வெளிப்பட்டால்தான் அவையிருப்பது தெரிய வரும். அதனால் எண்ணத்தை சமர்ப்பிப்பதைவிட, உணர்வைச் சமர்ப்பிப்பது கடினம். உணர்வைச் சமர்ப்பணம் செய்ய முடிவு செய்தபின், உணர்வு வெளிப்படும் பொழுது சமர்ப்பண நினைவு வெளி வருவதில்லை. முயற்சி தொடர்ந்தால் சமர்ப்பண நினைவு உணர்வு மேலிடும்பொழுது வரநாளாகும். அப்படி நினைவு வந்தால் உணர்வு சமர்ப்பணத்திற்கு எளிதில் கட்டுப்படாது. விடாமுயற்சியின் பலனாக உணர்வு சமர்ப்பணமானால், உள்ளம் பூரிக்கும். பேரின்பச் சாயலுள்ள நிறைவு நெஞ்சை ஆட்கொள்ளும். ஏழைக் குடும்பத்தில் ஒரு திருமணம் செய்தபின், அடுத்த திருமணம் உடன் வந்தாலுள்ளது போன்ற நிலையில் சாதகன் இருப்பான். ஒரு வெற்றி பெற்றபின், அடுத்த சமர்ப்பணம் வெற்றிபெற எவ்வளவு காலமாகும் என்பது சாதகனின் ஆர்வத்தைப் பொறுத்தது, சமர்ப்பணத்தைப் பொறுத்ததல்ல.

உட்கார்ந்திருக்கும்பொழுது, எழுந்திருக்க வேண்டும் என்று தோன்றினால் அந்த எண்ணத்தை வெற்றிகரமாக சமர்ப்பணம் செய்தபின், உடல் அசைவுக்குரிய உடலுணர்வு தோன்றும். அது சமர்ப்பணத்திற்குரியது. அதைச் சமர்ப்பணம் செய்ய முயன்றால் நம்மைச் சூழந்துள்ள காற்றை விசிறியால் விலக்க முயல்வது போலிருக்கும். அசைவுக்குரிய உடல் உணர்வு நம் அறிவுக்கு அப்பாற்பட்டது. பத்து முறை உட்கார்ந்து எழுந்தால், ஒரு முறையும் அது நம் கையில் அகப்படாது, கண்ணில் படாது. கண்ணில் பட்டு, கையில் அகப்பட்ட பின்னரே சமர்ப்பணம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழும். நாள் முழுவதும் இதே நோக்கமாக இருந்து அங்க அசைவுகளின் உணர்வைப் பிடித்து அதைச் சமர்ப்பணம் செய்து விட்டால் அது பெரிய வெற்றி. அந்நேரம் உடல் வைரம் பாய்ந்தது போலிருக்கும். மரணத்தை வென்ற உணர்வு தோன்றும். இதுவும் ஒருமுறை வெற்றி கண்டால், மீதி அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

எண்ணங்கள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்து உணர்வுகள், உடலசைவுகள் அனைத்தையும் பூர்த்தி செய்தால் சமர்ப்பணத்தின் முதல் பகுதி பூர்த்தியாகிறது. நம் சூட்சும உடலில் தோன்றிய எண்ணங்கள், உணர்வுகள், அசைவுகளே ஸ்தூல உடலில் பாய்ந்து, வெளிப்படுகின்றன. நான் கூறிய சமர்ப்பணம் ஸ்தூல உடலைப் பற்றியதே. இதை முடித்தபின் சூட்சும உடலில் இவை சமர்ப்பணத்திற்குரியவை. அப்பகுதி இக்கட்டுரையைச் சேர்ந்ததல்ல என்பதால் அதை நான் விவரிக்கவில்லை. ஆத்ம சமர்ப்பணம் எந்த நிலையில் பூர்த்தியாகிறதோ -மனம், நெஞ்சம், உடல் - அந்நிலையிலுள்ள சைத்திய புருஷன் வெளிப்பட அது உதவும். சமர்ப்பணம் பூரணமாகும் நிலையில் மூச்செல்லாம் சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும். நிமிஷத்திற்கு 72 முறை துடிக்கும் இதயத் துடிப்புகள் ஒவ்வொன்றையும் சமர்ப்பணம் செய்ய முடியும், செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

அகந்தை ஆட்சி செய்கிறது. நாம் செய்யும் அத்தனை காரியங்களின் பலனையும் அகந்தை தன்னை வலுப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறது. இதுவே நம் வாழ்வின் அடிப்படை. அந்நிலையில், சமர்ப்பணத்தை மேற்கொண்டால் நம் செயலை அன்னைக்காகச் செய்கிறோம். அதன் பலனை அன்னை நம்முள் வளரப் பயன்படுத்துகிறோம். எனவே சமர்ப்பணம் அகந்தையின் அடிப்படை உரிமையை ரத்து செய்கிறது. அதுவே சமர்ப்பணத்தின் குறிக்கோள். அக்காரணத்தாலேயே சமர்ப்பணம் சிறப்புடையது.

வழக்கில் நாம் அகந்தை என உணர்வது சுயநலம், தற்பெருமை, தன்னுடைய முக்கியத்துவம், எதேச்சாதிகாரம், ஆணவம், அகங்காரம் என்று நாம் புரிந்து கொள்வது. பண்பற்ற மனிதனுடைய பாங்குகள் இவை. நாகரிக வாழ்வில் இத்தகைய மனிதனுடைய பாங்குகள் இவை. நாகரிக வாழ்வில் இத்தகைய மனிதர் இன்று இடம் பெற முடியாது. மேடையில் நின்று தன் பெருமையை இன்று ஒருவர் விளக்கினால், அதுவே கடைசி மேடைப் பிரசங்கமாக இருக்கலாம். தன்னுடைய புத்தகத்தில் தன் படத்தைப் போட்டு வெளியிடும் ஒருவர் எழுதியதைப் படிக்க விரும்புபவர் குறைவு. உலகத்தில் கல்வியறிவு பெருகும்பொழுது, பண்பு வளரும்பொழுது, இதுபோன்ற பழக்கங்கள் விலகி விடுகின்றன. தமிழ் இலக்கியங்களில் ஆசிரியர்கள் முன்னுரையாக எழுதும்பொழுது தங்கள் படைப்பின் சிறப்பு குருவைச் சார்ந்தது, குறைகள் மட்டும் தன்னைச் சார்ந்தது என்று எழுதுவார்கள். ஆங்கிலத்தில் நாமிருவரும் என்பதை ‘you and I‘ என்றே தன்னை இரண்டாம் நிலையிலேயே வைத்து எழுதுவார்கள். அன்னை சொல்லும் அகந்தை என்ற சொல்லுக்கு பொருள் அளவற்றது. உலகம் கடல் போன்றது. நீர்ப்பரப்பிற்கு அளவில்லை. கடலில் உள்ள மீனுக்கு கடல் முழுவதும் சொந்தம். கப்பல் கடலில் வரும்பொழுது ஒரு கடுகளவுள்ளது. கப்பலுக்குள் ஒரு தொட்டி வைத்து, அதில் கடல் மீன் ஒன்றை வளர்த்தால், கடலிலிருந்து அந்த மீனுடைய வாழ்வு நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இறைவன் என்ற கடலில் பகுதியான ஜீவன், அகந்தை எனும் கப்பலால் இறைவனிடமிருந்து பிரிக்கப்பட்டு அதனுள் தன் வாழ்வை ஒரு தொட்டி எனும் மனித வாழ்வினுள் நடத்துகிறான். தொட்டியும், அது உள்ள கப்பலும் மனிதனுக்கு ஏற்பட்ட விலங்குகள். தொட்டியிலுள்ள நீர் அவனுக்கு உயிரளிக்கிறது. என்றாலும் அது செயற்கை ஏற்பாடு. கடலிலுள்ள மீன் தொட்டிக்கு வந்ததுபோல் மனிதன் சமூகத்தில் வாழ்கிறான். செயற்கைத் தொட்டியை விட்டு வெளிவர முயன்றால் உயிர்போய்விடும். தன் அடிப்படைச் சுதந்தரத்தை மீண்டும் பெற மனிதன் தொட்டியிலிருந்து கடலுக்குள் செல்ல வேண்டும்.

யசோதை கிருஷ்ண பரமாத்மாவின் வாயில் கண்டதும், அர்ச்சுனன் விஸ்வரூபத்தில் கண்டதுமான உருவமே ஆதி. அதுவே அவன் உரிமைக்குரிய இடம். அகந்தை ஏற்பட்டு அவனுக்கு ஒரு தனிப்பட்ட உருவம் கொடுத்து, அதை ஓர் உடலாக அமைத்து உன் உண்மை சொரூபம் விஸ்வரூபமில்லை, உன் உடலே நீ என்று அவனுக்குப் புகட்டியது. அதை மனிதன் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏற்றுக்கொண்டு இறைவனிலிருந்து நிரந்தரமாகப் பிரிந்து தன் உடலையே தான் என உணர்ந்து வாழ்வதை அன்னை அகந்தை என்கிறார்கள். இனி மனிதன் இறைவனுக்காக வாழ்வதை நிறுத்தி தன் உடலுக்காக வாழ ஆரம்பித்த வாழ்க்கையை அகந்தையின் வாழ்க்கை எனக் கூறுகிறார். உடலைப் பேணுவதும், அதன் மரணத்தைக் கண்டு அஞ்சுவதும், உடலுக்கு இருப்பிடம் தேடுவதையும், துணையாக ஒருவரை நாடுவதையும், தன் குழந்தைகளை உடலின் பகுதி என்பதால் பாசத்துடன் நடத்துவதையும், உடலுக்குத் தேவையான பொருள்களை சேகரம் செய்து அவற்றைத் தன் பொருள் என நினைப்பதையும், உடலின் வசதிகளைப் போற்றுவதையும், அதற்கொரு பெயரிட்டு அதைத் தன் பெயர் என்பதையும், அதனுள் உறையும் மனத்தை தன் அறிவு என்பதையும், ஊண், உறக்கத்தை நாடுவதையும் அன்னை அகந்தை எனவும், அதன் செயல்கள் எனவும் விவரிக்கின்றார். அன்னை சொல்லும் அகந்தையை அழித்தால் பிரபஞ்சம் முழுவதும் தன்னுள் அடங்கிய விஸ்வரூபம் வெளிப்படும். கிருஷ்ணாவதாரத்திற்குப்பின் அகந்தையை அழித்தவர் ஸ்ரீ அரவிந்தர், அன்னை இருவர் மட்டுமே. பூரண யோகத்தை ஆரம்பிக்க முதல் நிபந்தனை அகந்தையை அழிப்பது. அதுவே உண்மையானால் முதற்கட்டத்திற்கே போகாதவர்களுக்கு இம்முறை எப்படி உதவும்?

அகந்தையை அழிக்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். பண்பற்ற முறையில் தானே ஆண்டவனை விட உயர்ந்தவன் என்று பேசுபவர்களை விலக்கினால், அகம்பாவம், ஆணவத்தின் அம்சங்களையும் விலக்கினால், மேலும் நாம் செய்யக் கூடியவை ஏராளமாக இருப்பதால் அவற்றை நம்மால் முடிந்தவரை செய்தால் அது யோகத்திற்கு நம்மைத் தயார் செய்யும். கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மைசூரா, பெங்களூரா என்ற விவாதம் சிறுபிள்ளைத்தனமானது. கிருஷ்ண லீலை நடந்த பிருந்தாவன் மதுராவிலிருக்கிறதா, கிருஷ்ண ராஜ சாகரின் அருகில் இருக்கிறதா என்பவை பொதுவாக படிப்பில்லாதவர்களுடைய விவாதம். இருந்தாலும், படித்தவர் ஒருவரிடம் தெரியாதவர் இதுபோன்ற தவறை வற்புறுத்திப் பேசினால், படித்தவரால் அதைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. மற்றவர் அறியாமையால் பேசுகிறார் என்று படித்தவரால் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மனம் உறுத்துகிறது. அவருக்கு விளக்கம் கொடுக்கிறார். புத்தகங்களைக் காட்டுகிறார். படிக்காதவர் பிடிவாதமாகப் பேசுவார். பலநாள் வரை படித்தவருடைய மனம் உறுத்தலை விடமுடிவதில்லை. அப்படிப் புண்படுவது மனமில்லை. மனத்தில் உறையும் அகந்தை. அதைப் பொருட்படுத்தாமலிருக்க முயற்சி செய்தால் அகந்தையை விலக்குவது எப்படிப்பட்ட செயல் எனத் தெரியும். பிறர் பேசும் பொழுது குறுக்கே பேசாமலிருப்பது, பிறர் கருத்திலுள்ள உண்மையை ஏற்றுக்கொள்வது, நம் குறையை மற்றவர் சுட்டிக் காட்டும் பொழுது விருப்பமாக நன்றியறிதலுடன் ஏற்றுக்கொள்வது, நம் நிலையை உள்ளதை விட அதிகமாக நினைப்பதை விட்டுவிடுவது, நம் திறமையை முக்கியமாகக் கருதாமல், நம் குறைகளை கவனமாகக் கண்டுகொள்வது, தன் குறைபாடு வெளிப்படும் பொழுது அதுவே சரி என்று பேசாமலிருப்பது, நம்மை குறைத்துப் பார்க்கும் நிகழ்ச்சிகளால், நம் ஊரைக் குறைவாக கருதும் எழுத்தால், நம் ஜாதியை, குடும்பத்தை குறைவாகப் பேசும் காலங்களில் அவற்றால் மனம் புண்படாமல், அதில் உள்ள உண்மையை மனம் சலனமின்றி ஏற்றுக்கொள்வது, அகந்தையை அழிக்க முயல்வதாகும். இவை சாதகனுக்கும் எளிமையானவையல்ல. ஆனாலும் அவசியமானவை.

கர்மத்தைச் செய்வதற்கே மனிதனுக்கு அதிகாரமுண்டு. மனிதன் செய்த வேலையின் பலன் ஆண்டவனுக்கேயுரியது என்பது கீதை. பலன் கருதாமல் கடமையைச் செய்ய வேண்டும் என்பது நியதி என்றால் மனிதன் ஸ்தம்பித்து விடுவான். கடமையைச் செய் பலனை விட்டுவிடு எனில் கடமையையே விட்டுவிடுவான். மனிதன் பலனுக்காகவே செயல்படுபவன். பலனுக்காகவும் பலரால் கடமையைச் செய்ய முடிவதில்லை. சாதாரண மனிதன் கடமையைச் செய்யாமல் பலனை எதிர்பார்ப்பவன். வாழ்க்கையில் தோல்வியடைபவர்கள் அதுவும் தொடர்ந்து தோல்வி பெறுபவர்களுடைய மனப்பான்மை நம் கடமையைப் பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்கள். ஒரு அதிகாரிக்கு, கீழுள்ளவர்களால் தொடர்ந்து தொந்தரவு வருகிறது என்றால், அவர் தன் பொறுப்பைக் கீழுள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற மனப்பான்மையுடையவராக இருப்பார். கணவன் மனைவிக்கிடையே நெடுநாள் போராட்டமாக இருக்கிறது என்றால், அங்கு காணப்படும் மனப்பான்மைகளுள் ஒன்று, தன் பொறுப்பை மனைவி நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் கணவன், கணவனுடைய உரிமையை தானே ஆக்கிரமித்துக் கொள்ள விரும்பும் மனைவி.

தன்னுடைய கடமையை நிறைவேற்றாமலுள்ள மனிதனின் உள்ள நிலை வேறு. கடமைகளைச் செய்தபின் பலன் அவனைத் தேடி வருகிறது. அதிகமான பலன் வருகிறது. எப்படி பலனைக் கருதாமல் செயல்படுவது. வரும் பலனை எப்படி உதறித் தள்ளுவது. விவசாயி அறுவடைக்குமுன் மகசூலைக் கணக்குப் போட மாட்டான். தேர்தலுக்கு நிற்பவன் MLAயாக ஆனபின் என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்பினால், அனுபவமுள்ளவர்கள் முதலில் தேர்தலை ஜயிப்போம், இப்பொழுது அதை எல்லாம் ஆராய வேண்டாம் என்பார்கள். கடமையைச் செய்யுங்காலத்தில் மனம் எதிர்வரப் போகும் பலனைக் கருதினால், கடமையை சரிவர நிறைவேற்ற முடியாது. மனம் சிதறும். அதனால் மனத்தை அவ்வழி செலுத்தக் கூடாது என்பது ஒரு விளக்கம். பலனை மனம் கருதாவிட்டால், செயலில் ஆர்வம் குறைந்துவிடும் என்பது இயற்கை. அதனால் பலன் குறைந்துவிடும். அது தவறல்லவா? பலனுக்காக மட்டும் செயல்படுபவன் சாதாரண மனிதன். அவன் பலனைக் கருதாவிட்டால் ஆர்வம் குறைந்து, பலன் கெடும். செயலில் ஆர்வமாக ஈடுபடுபவன் சிறப்பான மனிதன். அவன் பலனை மறந்து செயலில் ஈடுபட்டால், செயல் அளவுகடந்து சிறப்புறும் என்பதும் உண்மை. உதாரணமாக எந்த ஒரு பெரிய காரியத்தையும் முதன் முறை செய்யும் பொழுது அதற்குரிய பலன் என்ன என்பது விளக்கமாகத் தெரியாததால், அனைவரும் காரியத்தில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். காரியம் சிறப்பாகப் பூர்த்தியாகும். அளவுகடந்த பலன் ஏற்படும். அடுத்தடுத்து அதையே செய்யும்பொழுது பலனைப் பற்றிய விவரங்கள் தெரிவதால், மனம் பலனைக் கருத ஆரம்பித்து நாளாவட்டத்தில், பலனை மட்டும் கருதி, பிறகு காரியத்தைச் செய்யாமல் பலனைப் பெறும் தவறான வழிகளை உற்பத்தி செய்து ஸ்தாபனத்தை அழித்து விடுவார்கள். முதலாண்டு கூட்டுறவுச் சங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. நாளாவட்டத்தில் கூட்டு ஊழலாக மாறுகிறது. கல்லூரி ஏற்பட்டு முதன் முதலாகப் பட்டம் பெற்றவர்களையும், இன்று பட்டம் பெற்றவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதுபோன்ற வித்தியாசம் தெரியும். 1937ல் காங்கிரஸ் முதல் மந்திரிசபையை அமைத்தது. அதன் தரம், தியாகம், திறமையை இன்றுள்ள மந்திரி சபைகளுடன் ஒப்பிட முடியாது.

கடமையைச் சிறப்பாகச் செய்த கற்புக்கரசி கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா எனக் கேட்கும் அளவுக்கு யோக சித்தி பெற்றாள். நம் அன்றாடக் காரியங்களைப் பலன் கருதாமல் செய்வது எளிதல்ல. நாம் வாழ்வில் அந்தச் சிறப்பு தாய்மைக்கேயுரியது. அசோக் லேலண்டில் வேலை செய்யும் டெக்னீஷியன் ஓய்வு பெற்ற தகப்பனாருடைய பிராவிடண்ட் பண்ட் பணத்தைக் கேட்டான். அதையும் கொடுத்துவிட்டு நான் என்ன செய்ய என்ற தகப்பனாரை, நீ பிச்சை எடேன், உனக்கெதற்குப் பணம் என்று மகன் கேட்கிறான். அவன் வாயால் கேட்டு விட்டான். அதை நினைப்பவர் பலர். எதையும் நினைக்காமல் பெற்றோரை நிர்கதியாகவிட்டு விட்டு, மனைவியுடன் சந்தோஷமாக இருப்பவர் பலர். நம் வாழ்க்கைப் படலத்தை விரித்து, ஒவ்வொரு பகுதியாக அலசிப் பார்த்தால், பலனுக்காகவே நாம் செயல்படுவது தெரியும். அவற்றை எல்லாம் பலன் கருதாமல் செய்ய முடிவு செய்தால், அது எளிதல்ல. அது பூர்த்தியானால் யோகப் பாதையில் அடி எடுத்து வைக்க உதவும். விருந்தினர்களுக்காக சமையல் செய்து அவர்கள் வராத காலத்தில் வீட்டு மனிதர்கள் அதைச் சாப்பிட்டால் மனம் கசந்து போவது சாதாரண மனிதனுடைய நிலை. பலன் கருதாமல் செயல்பட வேண்டுமானால் ஒரு நாளில் பாதிக் காரியம் செய்ய மனமிருக்காது. மனத்தை அங்கு மாற்றுவது சிரமம். அதில் ஜெயம் கிடைத்தால், கடமை பூர்த்தியாகும். மனம் முன் போலவேயிருக்கும். நாம் செய்த காரியத்தின் பலன் மற்றவருக்குப் போனாலும், மனம் பூரிப்பது, பூரண யோகத்திற்குத் தன்னைத் தயார் செய்து கொள்வதாகும்.

பலன் பொருளாக இல்லாவிட்டாலும், நாம் செய்த காரியம் மற்றவர்களால் போற்றப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. சில ஆபீஸ்களில் திடீரென பொறுப்பு வரும். அது யாருக்குரியது என்று நியதியிருக்காது. யாராவது செய்தால் சரி என்றிருக்கும். ஒத்துக்கொண்டவருக்கு சிரமம் அதிகம். அந்தச் சிரமத்தை ஏற்றுக்கொண்டு, தன் கடமையில்லாத ஒன்றை அவர் நிறைவேற்றினார் என்பது யார் கண்ணிலும் படாது. ஆனால் அடுத்தமுறை அதுபோன்ற ஒரு பொறுப்பு வரும்பொழுது அனைவரும் அவர் தலையில் அதைக் கட்ட பெருமுயற்சி எடுப்பார்கள். பலன் கருதாது அவர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினால், அவரை எவரும் தியாகி என்று கருதமாட்டார்கள். ஏமாந்தவர் எனவே பட்டம் சூட்டுவார்கள். ஆபத்து சமயத்தில் உதவ முன் வருபவர்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படும். உதவி தேவைப்படும் வரை பெற்றுக்கொள்வார்கள். அது முடிந்தவுடன் திரும்பிப் பார்க்க முன்வரமாட்டார்கள். பெரிய குடும்பங்களில் அடிக்கடி இதுபோன்ற நிலை ஏற்படும். அதை ஏற்றுக்கொண்டவருக்கு பெரும் பொறுப்பு, தொடர்ந்த வேலை அமையும். காரியம் நல்ல முறையில் பூர்த்தியானபின் அவர் சொல்வது ஒன்றுதான்; நான் செய்த வேலை யார் கண்ணிலும் படவில்லையே! ஆதாயமில்லை என்றாலும், மனம் ஆதரவை நாடும். அதை நாடும் வரை நாம் வாழ்க்கையிலிருக்கிறோம். அதைவிட்டு யோகத்திற்குப் போகவில்லை. ஆதாயத்தையும், ஆதரவையும் மனம் நாடாவிட்டால் காரியம் யோகமாக மாறுகிறது. யாரும் குடியில்லாத வீட்டை தினமும் சுத்தமாகப் பெருக்கி, துடைப்பது என்றால் மனம் இடம் கொடுக்காது. யார் செய்தார்கள் இந்தக் காரியத்தை என்று எவருமே தெரிந்துகொள்ள முடியாதபடி நம் கடமை பலருக்குப் பலன் அளிக்கும். நாம் செய்ததன் பலன் பலருக்குப் போய்ச் சேருவதைப் பார்ப்போம். நாம் செய்தோம் என்று எவருக்கும் தெரிய முடியாத சூழ்நிலை. ஆனால் தினசரி வேலை தலைக்கு மேலிருக்கும். பொது ஸ்தாபனங்களில் இது போன்ற நிலையிருக்கும். பஸ் ஸ்டாண்டில் இலவச உணவு விடுதி இரவு பகலாக நடத்துவது போலிருக்கும் பலன் கருதாத மனித வாழ்வு.

ஸ்ரீ அரவிந்தர் 1945-இல் கிரிப்ஸ் மிஷன் வந்தபொழுது காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதி கிரிப்ஸ் சொல்வதை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். தலைமை ஸ்ரீ அரவிந்தர் சொல்லை ஏற்க மறுத்தது. ஸ்ரீ அரவிந்தரை ஒரு சாதகர் தலைமை உங்கள் அறிவுரையை மறுத்துவிடும் என்பது உங்களுக்கு தெரியாதா என்று கேட்டதற்கு பகவான் எனக்குப் ‘பதில் முன்கூட்டியே தெரியும் என்றாலும் நிஷ்காம்ய கர்மாவாக, பலன் கருதாமல் இதைச் செய்ய வேண்டும் என்ற செய்தேன்’ என்று பதில் அளிக்கின்றார். காரியம் பூர்த்தியாக ஒரு விஷயம் தேவையா என்பதைவிட சாதகனின் யோக முன்னேற்றத்தை அந்தக் கட்டத்தில் சாதகன் தன் கடமைகளை குறைவரச் செய்யவேண்டும் என்பதாலும் பலன் கருதாமல் செயல்பட வேண்டியிருக்கும். நாம் சொன்னால் பிள்ளை கேட்கப் போவதில்லை என்று தெரிந்தாலும், நாம் சொல்லாவிட்டால் நம் கடமையில் தவறியவர்களாவோம் என்பதால் தவறாமல் சொல்ல வேண்டிய சந்தர்ப்பங்களுண்டு.

யோகத்தைப் பொறுத்தவரை காரியத்தைவிட, பலனைவிட, செய்யும் மனநிலையே முக்கியமாதலால், மனத்தைப் பக்குவப் படுத்தும் வாயிலாக பலன் கருதாமல் செயல்பட வேண்டும்.

புத்தியில் இல்லாத தெளிவு ஆன்மாவிலிருந்து அது புத்தியில் பிரதிபலிப்பதே நம்பிக்கை எனப்படும். ஒரு காரியம் நடக்க அறிவுக்கு எந்த வழியும் தெரியவில்லை என்ற காலத்தில் அந்தக் காரியம் பூர்த்தியாகும் எனத் தெளிவாகப் புரிந்தால் அதுவே நம்பிக்கையாகும். எப்படி என்று புரியாவிட்டாலும், நடந்துவிடும் என்ற தெளிவு நம்பிக்கை. நம்பிக்கையை பகவான் விளக்க முன்வந்தவர் அதை நான்காம் கட்ட முயற்சியாக விவரிக்கின்றார். மனிதன் சக்தியால் செயல்பட்டு, அடுத்தாற்போல் வீரியத்துடன் முனைந்து தன் செயலைத் தெய்வச் செயலாக்கி அதையும் பூர்த்தி செய்தபின், மனத்தில் ஏற்படும் தெளிவால் நிதானமாகச் செயல்படும்போது அதை நம்பிக்கை என்கிறார். தன் திறனை நம்பிய மனிதன் பிறகு செயலை அர்ப்பணம் செய்து தெய்வச் செயலாக செய்த பின்னர், செயல் என்பது ஆண்டவனுடையது, அது தன்னாலேயே இயங்குகிறது, நான் ஒரு கருவியே என உணருகிறான். அவ்வுணர்வால் ஏற்பட்ட தெளிவே நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஏற்பட மனிதன் தன் முயற்சியையும், பிரார்த்தனையையும் முழுமையாக முடித்துவிட வேண்டும்.

மனித முயற்சியுள்ளவரை அகந்தைக்கு இடம் உண்டு. முயற்சி முடிந்தபின் அகந்தை அழிகிறது. ஆன்மா மீதிருந்த ஆணவமலம் அழிகிறது. ஆன்மா வெளிப்படுகிறது. அங்குள்ள தெளிவு புத்தியில் பிரதிபலிக்கிறது. அப்பிரதிபலிப்பே நம்பிக்கை எனப்படுகிறது. யோகப் பாதையில் அடி எடுத்து வைக்க எப்படி நம்பிக்கையை பயன்படுத்த முடியும். உதாரணமாக ஒருவருக்குத் தியானம் வரவில்லை. அதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து விரக்தியடைந்து விட்டார். இவரால் நம்பிக்கையைப் பயன்படுத்தி, தியானத்தை சித்திக்க வைக்க முடியுமா என்றால் முடியும். தன் மனதை இவர் சோதனை செய்து பார்த்தால் எனக்குத் தியானம் வராது என்ற நம்பிக்கை திடமாக இவர் மனதிலிருப்பது தெரியும். எனவே, இவர் மனம் நம்புவதே பலிக்கிறது என்பதே உண்மை. அது அவநம்பிக்கை. அந்த அவநம்பிக்கையை அழித்து எனக்குத் தியானம் வரும் என்ற நம்பிக்கையை அவர் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்குரிய முறைகளை அவர் நாட வேண்டும். நாள் முழுவதும் தியானத்தை நாடினால் தியானம் பலிக்கும். தியானம் பலிக்க வேண்டுமென அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் அது பலிக்கும். அது போன்ற முறையொன்றை கடைப்பிடித்து, தியானம் வராது என்பதை விலக்கி, தியானம் சித்திக்கும் என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டால், அன்றே தியானம் இதுவரை இல்லாததுபோல் பலிப்பதைப் பார்க்கலாம். ஆரம்ப கட்டத்திலிருந்து முடிவுவரை யோகப் பயிற்சிகள் அநேகம், சித்திகள் அநேகம். சமர்ப்பணத்தில் ஆரம்பித்து, திரிகால திருஷ்டியில் யோகம் முடிவடைகிறது. மனோமய புருஷனை காட்சியாகக் காண்பது பெரிய சித்தி. சமத்துவம் நிலைப்பது பூரண சித்தி. மனம், பிரபஞ்சத்தின் மனமாக விரிவடைவது உயர்ந்தது. காண்பவரெல்லாம் இறைவனாகக் காண்பது பூரணயோகத்தில் பெரிய கட்டம். மௌனம் நிலைப்பது, நெஞ்சில் ஆத்ம சூரியன் இருப்பது, சாந்தம் குடிகொள்வது, இடையறாத இறைநினைவு, இடையறாத திருவுள்ளக் காட்சி, ஒளி பிரவாகமாக உள்ளே வருதல், பக்தியின் பெருக்கம், தெய்வீக அன்பு எழுவது, சரணாகதி, உடலை விட்டு ஜீவன் வெளியே சென்று சஞ்சாரம் செய்வது, கடந்த காலத்தில் நம்மையறியாமல் நடந்தவை, இப்பொழுது தெரிவது, எதிர்கால நிகழ்ச்சிகள் முன்கூட்டித் தெரிவது போன்று ஏராளமான சித்திகள், சிறியவை பெரியவை என்றுள்ளன. நாமிருக்கும் யோக பக்குவ நிலைக்குரிய எந்த சித்தியையும் நம்பிக்கையால் பெற முடியும்.

மனம் அதற்குரிய அறிவைப் பெற்று, குழப்பத்தை விலக்கியவுடன் ஆன்மாவுக்கும் மனத்திற்குமிடையேயுள்ள திரை விலகி, ஆன்மாவில் இயல்பாக உள்ள தெளிவு மனத்தில் பிரதிபலிக்கும். அதுவே நம்பிக்கை. அதன் அடிப்படையில் செய்யும் முயற்சி முழுயோகப் பலனைக் கொடுக்கும்.

எனக்கு நம்பிக்கையில்லையே என்பவர்களுண்டு. நம்பியவர்களுக்குத்தான் தெய்வம். நம்பிக்கையில்லை என்றால், நம்பிக்கை வரும்வரை காத்திருக்க வேண்டும். நம்பிக்கையையும் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் அன்னை. நம்பிக்கையுள்ளவனே விடாமுயற்சியை மேற்கொள்கிறான். விடாமுயற்சியை மேற்கொண்டால் நம்பிக்கை பிறக்கும் என்கிறார் அன்னை. பிடிவாதத்துடன் மேற்கொள்ளும் விடாமுயற்சி நம்பிக்கையை உற்பத்தி செய்யாது. மூட நம்பிக்கையை வெளிப்படுத்தும். அதைத் தவிர்த்து, விடாமுயற்சியை மேற்கொள்பவன் மனநிலையைப் பார்த்தால், இனி இந்தக் காரியம் நடக்காது என்று தெளிவாகத் தெரிந்து எவரும் அதை மேற்கொள்ள மாட்டார்கள். விடாமுயற்சியிருக்கிறது என்றால், நம்பிக்கைக்கு வித்து இருக்கிறது என்று பொருள், அதனால் நம்பிக்கை வளரும்.

மனம் அறியாமையை ஒரு காரியத்தில் ஏற்றுக்கொண்டால், ஒரு வகையில் இல்லாவிட்டாலும், மற்றொரு வகையில், ஒரு நேரமில்லாவிட்டாலும், மற்றொரு நேரத்தில் மனதிற்கு அறிவு புகட்டலாம். மனம் அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. உடலுக்கு அத்திறனில்லை. தான் ஒருமுறை கற்றதை லட்சம் முறையானாலும் திரும்பத் திரும்பச் செய்யும் பாங்குள்ளது உடல். உடலால் கற்றுக்கொள்ள முடியும், மறக்க முடியாது (can learn, cannot unlearn). ஒரு பழக்கம் தவறானால், அதை மாற்றி வேறு பழக்கம் ஏற்படுத்தலாம். அதை கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்தினால், அப்பழக்கம் வெளிவராமலிருக்கும், அழிந்து போகாது. சினிமா பார்க்கும் பழக்கத்தை மாற்றி நாவல் படிக்கும் பழக்கமாக்க முடியும். அதாவது அதன் வெளிப்பாட்டை மாற்றலாம். பழக்கம் வேரில் அழிந்து போக வழியில்லை. ஒரு நாள் கூட தண்ணீரில் இறங்காத மாடு ஒன்றை ஏரியில் விட்டால், உடனே நீச்சலடிக்கும். நீச்சலடிக்கும் பழக்கம் மாட்டின் உடலில் அதாவது உடல் உணர்வில் ஆதிகாலத்தில் ஏற்பட்டது. அது இன்றும் நிலைத்துள்ளது. பழக்கம் மறைந்திருக்குமே தவிர அழியாதது. பூரண யோகத்தை ஆரம்பிக்க பழக்கங்கள் அழிய வேண்டும். பூரண யோகம் உடலிலேயே பூர்த்தியடைவது. எனவே உடலின் பழக்கம் அழியாமல் பூரணயோகம் பூர்த்தியாகாது. உடலுடைய திறன் திரும்பத் திரும்ப ஆயிரமாயிரம் வருஷமாகத் தான் செய்ததையே செய்வது. இதற்கு நிகரான மனித முயற்சி விடாமுயற்சி. மனிதனுடைய விடாமுயற்சி, உடலின் விடமுடியாத திருப்பித் திருப்பிச் செய்யும் பழக்கத்தை அழிக்கும் திறனுடையது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். அத்துடன் விடாமுயற்சி, நம்பிக்கையை உற்பத்தி செய்யுமாதலால், நம் வாழ்வில் விடாமுயற்சியை ஓர் அம்சமாக ஏற்றுக்கொண்டால், நம்பிக்கை உற்பத்தியாகும். யோகத்திற்கு வழிசெய்யும்.

சிலமுறை முயன்று தோற்றபின் இது நமக்கு வராது என்று விட்டுவிடுகிறோம். வகுப்பில் 6-ஆம் மாணவனாக இருப்பவன் சில ஆண்டுகள் முதல் மாணவனாக முயன்று பிறகு விட்டுவிடுகிறான். ஒரு சிறு கடையை ஆரம்பித்து சற்றுப் பெரிதானவுடன், மேலும் வளர முயற்சி செய்து முடியாமல் போனவுடன் இது நமக்கில்லை, இதுவே நம் வளர்ச்சிக்கு முடிவு என்று முயற்சியை கைவிட்டு விடுகிறான். அதுபோல் நாம் கைவிட்டவை பல. நம் அன்றாட வாழ்விலுள்ள 50 அம்சங்களில் 47, 48 நாம் அதுபோல் கைவிட்டதாக இருக்கும். இதைவிட என்னால் நல்ல காபி போட முடியாது, எனக்குப் பேசத் தெரியவில்லையே, எந்தப் போட்டியிலும் இதுவரை நான் பரிசு வாங்கியதேயில்லை. வீட்டைச் சுத்தமாக அடுக்கி வைக்கப் பல முயற்சிகள் தோற்றுப் போயின. இனிமேல்தானா முடியப் போகிறது. யாரோடு பேசினாலும் சண்டை வருகிறது, நான் மாறப் போவதில்லை, 25 வருஷமாக சமைத்தாலும் நான் செய்யும் சாம்பார் யாருக்கும் பிடிக்கவில்லை. நானும் ரிடையராகி விட்டேன். கடிதம் அழகாக எழுதக் கற்றுக்கொள்ளவில்லை. எவரோடும் பேசி எந்தக் காரியத்தையும் சாதிக்கும் திறன் எனக்கில்லை. நான் தொட்ட காரியமெல்லாம் கரியாகப் போய்விட்டது என்றெல்லாம் நம் வாழ்வில் உள்ள அம்சங்களிருக்கும். இனி ஒரு காரியத்தில் வெற்றி காண முயல்வோம். வெற்றி காணும்வரை முயல்வோம் என்ற முடிவு பலன் தரும். அது வாழ்க்கையில் வெற்றி மட்டுமாகாது. அது யோக முயற்சியின் வெற்றி. யோகப் பாதையை வகுத்துக் கொடுக்கக் கூடியது. ஒரு வெற்றிக்குப்பின், நம் அன்றாட வாழ்வில் பல வெற்றிகளைப் பெறலாம். அதுவே சிறப்பு.

பவழமல்லிகை என்று நாம் சொல்லும் மலரை பாரிஜாதம் என்பார்கள். அன்னை இம்மலருக்கு தெய்விக ஆர்வம் எனப் பெயரிட்டுள்ளார்கள். யோகத்தை நாடுபவர்கள் இறைவனை நாடுகிறார்கள். அவனையடையும் முறைகளில் ஆர்வம் ஒன்று. தெய்விக ஆர்வம் என்றால் தெய்வத்தையடைய நம்முள் பிறக்கும் ஆர்வம் எனப்படும். ஆர்வம் என்பதை அக்கறை என்பதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அக்கறைக்கு தீவிரம் ஏற்பட்டால் அது ஆர்வமாகிறது. மனிதன் நான்கு பகுதிகளையுடையவன். பூரண யோகம் என்பதால் இங்கு ஆன்மா முதல் உடல் வரை அனைத்துப் பகுதிகளிலும் ஆர்வம் உடையவனாக இருத்தல் அவசியம். எப்பொருளில் ஆர்வம் ஏற்படுகிறதோ மனம் அப்பொருளை நாடிச் சென்றுவிடும். என் மனம் என் வயத்திலில்லை என்ற நிலையே ஆர்வத்திற்குரிய நிலை. அதுவே தீவிரமாக இருக்கும்பொழுது நம் மனம் ஆர்வத்திற்குரியதாகி அங்குச் சென்று தங்கி விடுகிறது. நாமிருக்கும் இடத்தில் அது இருப்பதில்லை. உணர்வும், உடலும் இறைவனையடைந்து அங்கேயே தங்கிய காலத்து, நாம் ஜடமாக இருக்குமிடத்திலிருப்போம். மீராவின் நிலை அது. இது பூரண யோகமாதலால், வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட யோகமாதலால், வாழ்க்கையை விட்டு இறைவனிடம் போக அனுமதியில்லை. எனவே வாழ்வில் உள்ள இறைவனையே தீவிர ஆர்வம் தேட வேண்டும். அதாவது மனிதன் தனக்காகச் செயல்படுவதற்குப் பதிலாக, வாழ்வில் உறையும் இறைவனுக்காக தீவிர ஆர்வத்துடன் இடையறாது செயல்பட வேண்டும் என்றாகிறது. நம் செயலை, இறைவன் செயலாகக் கண்டால் வாழ்வில் இறைவனைக் காண்பதாகும். நம் செயலாகச் செய்வதைத் தவிர்த்து ஒரு காரியத்தை இறைவன் செயலாகச் செய்வதில் காண்பிக்கும் ஆர்வம் தெ#விக ஆர்வமாகும். மனம் ஏற்றுக்கொண்டதை உணர்வு எல்லாச் சமயங்களிலும் ஏற்றுக்கொள்வதில்லை. அவையிரண்டும் ஏற்றுக்கொண்டதை உடலால் ஏற்றுக்கொள்வது கடினம். மனத்திற்குள்ள இறை ஆர்வத்தை உணர்வும், உடலும் பகிர்ந்துகொண்டால் ஆர்வம் பூரணம் பெறுகிறது. எந்நேரமும் அவ்வார்வமிருந்தால் அது காலத்தால் பூர்த்தியாகிறது. நம்மால் அதிகபட்சம் செலுத்தக்கூடிய ஆர்வமானால் ஆர்வம் தீவிரமாகிறது. தீவிரமான ஆர்வம் சத்திய ஜீவிய சக்தியாகும் என்கிறார் அன்னை.

நம்முள் இறைவனை வாழ்வில் நாடும் ஆர்வம் எழுந்து, எல்லாப் பகுதிகளையும் தன் ஆட்சியில் கொண்டு வந்து, அதிகபட்ச சக்தியுடன் எந்நேரமும் செயல்படும் பொழுது மனித உணர்வு, சத்திய ஜீவ சக்தியாகிறது. நம் தினசரி வாழ்வில் இதை முழுவதும் கடைபிடிக்க முடியாவிட்டாலும், ஓரளவு ஆரம்பிக்க முடியும். சில விஷயங்களில் பூர்த்தி செய்ய முடியும். குறிக்கோள் யோகமானதால், பலன் பொருட்டாகாது. உள்ளுறை உணர்வு சிறப்பதே பலனாகும். புற நிகழ்ச்சிகளில் சில சமயம் பெரும்பலன் இருக்கும், பல சமயம் பலன் இருக்காது. மனத்துள் உறையும் உணர்வு நிமிஷத்திற்கு நிமிஷம் சிறப்படைவது தெரியும். சிறப்பு சிகரத்தை எட்டும் நிலையில் வாழ்வு யோகமாக மாறுகிறது.

தியானம் என்றால் புறவழிச் செல்லும் புலன்கள் தம் பாதையை நேர் எதிராகத் திருப்பி, அகவழிச் சென்று, மனத்திலுள்ள இறைவனின் ஒளியில் குவிந்து அடங்கி மனத்தை இறை உணர்வில் நிலைக்கச் செய்வதாகும். இது பொதுவாக உயர்ந்த யோக நிலை. பூரண யோகத்தில் அந்த உயர்ந்த நிலையைத் தியானத்திற்கு அளிக்கவில்லை. ஆத்ம சமர்ப்பணத்திற்கே அன்னை அளிக்கின்றார். ஆத்ம சமர்ப்பணத்தால் செய்யப்படும் வேலை தியானத்தை விட அதிக யோக முன்னேற்றத்தைத் தரவல்லது என்கிறார் அன்னை. ஆத்ம சமர்ப்பணத்தால் செய்யப்படும் வேலையில் தியானச் சூழல் ஏற்படும். அது சாதாரண தியானத்தைவிட சிறந்த தியானமாக இருக்கும். ஒரு காரியத்தை மேற்கொண்டு அதைச் செய்யும் பொழுது, முழுப்பொறுப்புடனும், குறைவற்ற திறமையுடனும், மனத்தை வேலையில் அளவுகடந்து ஈடுபடுத்திச் செய்யும் பாங்குடையவர்கள் வேலையின் ஒவ்வொரு பகுதியையும், சமர்ப்பணம் செய்தால், வேலையை ஆரம்பித்தவுடன் அவர் மனத்தில் தன் முயற்சியின்றி தியானம் வருகிறது. வேலையில் தியானச் சூழல் ஏற்படுகிறது. அதில் கலந்து கொள்பவர்கள் மனதில் தியானம் உதிக்கின்றது. அந்த இடமும் அந்த வேலையும் அன்னையைத் தாங்கிச் செல்வதை நாம் உணர்கிறோம். இதுவே அன்னை விரும்பும் தியானம். தியானங்களில் சிகரமானது. இதன்றி வழக்கமாக காலை, மாலையில் நாம் ஏற்றுக்கொள்ளும் தியானத்தை மேற்கூறிய இலக்ஷணத்திற்குரியதாகச் செய்தால், தியானம் என்ற வேலை தியானத்தை உற்பத்தி செய்யும் புதுமையைக் காணலாம். எந்த மனப்பான்மை, வேலையில் தியானத்தை ஏற்படுத்துமோ, அதே மனப்பான்மையுடன் தியானம் என்ற வேலையைச் செய்தால் சிறப்பான தியானம் தானாக அமையும். இதுவும் போக நாள் முழுவதும் நம்மை இந்தத் தியானத்திற்காகத் தயார் செய்து கொள்ள முனைந்தால் அவ்வப்பொழுது சில நிமிஷம் தியானம் வந்து போகும். நாம் தியானத்திற்காக நம்மைத் தயார் செய்துகொள்ள நாம் தியானத்தை முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு, நாள் முழுவதும் தியான நேரத்தை ஆர்வமாக எதிர்நோக்கும் மனப்பான்மையால் செயல்பட்டால் போதும்.

நாம் அன்பு என்றறிவது ஒருவருக்கு மற்றவர் மீதுள்ள பிரியம். பெற்றோர் குழந்தைகள், நண்பர்கள்; தம்பதிகள்; தலைவர் - தொண்டன்; குரு-சிஷ்யன் ஆகியோரிடையே நிலவும் பாசம், பற்று, பிரியம், நட்பு உணர்வுள்ள உறவு ஆகியவற்றை தெய்விக அன்பு குறிக்காது என்று அன்னை பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறார். மனித ஹிருதயத்தில் தோன்றும் உணர்வுகளின் வகை இவை. ஹிருதயத்திற்குப் பின்னால் உள்ள சைத்திய புருஷன் இறைவன் மீது கொண்டுள்ள அன்பை தெய்விக அன்பு என்று கூறுகிறோம். மனிதகுலம் இதைப் பெற இன்று தகுதியற்றது. இறைவன் தன் அன்பை இன்று வெளிப்படுத்தினால் அதை தாங்க முடியாமல் சிருஷ்டி அழிந்துவிடும் என்கிறார் பகவான். இந்த விபரீதம் நடக்காமலிருக்க, இறைவனின் திறனை (power) முதலில் மனிதன் பெற வேண்டும். திறன் உடலில் அமைவது. திறன் முதலிலும், தெய்விக அன்பு அடுத்தாற் போலும் வந்தால் அது நிலைக்கும் என்கிறார் அன்னை.

மனிதனில் தெய்விக அன்பு சரணாகதிக்கு முன் வெளிப்படும். சரணாகதியே யோகப் பாதையின் இறுதி. சரணாகதி வெளிப்படுமுன் ஜீவன் பூரிப்படைகிறது. ஜீவனின் பூரிப்பே சரணாகதிக்கு அவனைத் தயார் செய்கிறது. அதற்கு முன் கட்டம் தெய்விக அன்பு. சரணாகதிக்கு முன் ஜீவன் பூரிப்படைவதைப் போல், தெய்விக அன்பு எழும் முன் இதயம் பூரிப்படைகிறது. பூரிப்பில்லாமல் சிருஷ்டியில்லை. மரம் பழுப்பதன் முன் மலர்ந்து மணம் வீசி பூரிப்படைகிறது. வானம் பொழியுமுன் மேகம் குளிர்ந்து பூரிப்படைகிறது. மேதையின் மனதில் ஞானம் எழுமுன் அவர் அறிவு சிறந்து பூரிக்கின்றது. அதேபோல் தெய்விக அன்பு ஹிருதய குகையின் அடியில் முளைப்பதன் முன் இதயம் பூரிக்கிறது. இதைச் சாதகன் அறிய முடியும். அறிந்து வளர்க்க முடியும். அது யோகப் பயிற்சியாகும்.

ஆன்ம ஞானம் அறிவில் பிரதிபலித்து எழும் அசையாத நம்பிக்கை உணர்வை நிரப்பி துதிபாடத் தூண்டுகிறது. துதிபாடி மகிழ்ந்தபின் வாயால் பாடிய துதியை உடலால் பூர்த்தி செய்ய சேவையை நாடுகிறான் சாதகன். சேவகமே சிறந்த பக்தி. பணிந்து செய்யும் பணிவிடையே பிறவிப்பயன் பெற உதவும் என்றிருந்த அவனுடல் சேவகத்திற்காகத் துடிக்கும் நிலை உயர்ந்த நிலை. அறிவு நம்பிக்கையாலும், உணர்வு ஸ்தோத்திரத்தாலும், உடல் சேவகத்தாலும் நிறைவு பெருகின்றன. இதனால் ஏற்பட்ட பக்குவத்தால், இதயம் இறைவனைப் போற்றி மகிழ்கிறது. இறைவனைக் காண முடியவில்லை என்றால் குழந்தையின் புன்சிரிப்பில், தாய்மையின் தியாகத்தில், பொழியும் மழையின் குளிர்ச்சியில், மலையுச்சியின் கம்பீரத்தில், வீரனின் செயலில், கடலின் அகன்ற அழகில் இறைவனைக் கண்டு இதயம் போற்றி, அதனால் பேரின்பமடைந்து, தன்னை இறைவனைக் காணுமிடத்திலெல்லாம் வழங்க, ஜீவன் அகன்று, விரிந்து, மலர்ந்து, மனித நிலையைத் தெய்வ அருளுக்கும் பாத்திரமாக்கிய பின்னரே தெய்விக அன்பு அவனுள் ஊறும். ஊறிய அன்பு தெய்வத்தை நோக்கி பிரவாகமாகச் செல்லும். அது உன்னத நிலை. அந்நிலைக்கு முன் உள்ள பூரிப்பையே நான் இங்கு விவரிக்கின்றேன். மலர்ந்த ஜீவன் கண்ணில் தெய்வாம்சம் உள்ள செயல்கள் தவறாதுபடும். குழந்தையின் புன்சிரிப்பில் எளிமையாக அதைக் காணலாம். அதுவே குப்பை மேட்டிலும் இருப்பது உண்மையானால் சித்தியடைந்த யோகி மட்டுமே அறியக் கூடிய உயர்ந்த காட்சி அது. மலர்ந்த முகம், இனிய சொல், பலன் கருதாத உதவி, பூரணமான அழகு, பால் மணம் மாறாத பக்குவம், உயர்ந்த பொறுமை போன்றவை தினமும் நம் கண்ணில் படுவதுண்டு. அங்கு மனம் பூரிப்படைவது சாத்தியம். அத்தகைய நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து வாடியமுகம், உதவியை நாடும் உறவு, கொடுமைக்காளான சிறுவன் போன்ற செயல்களிலும் அதே பூரிப்பைக் காண முயன்றால் அது முடியும். அது தெய்விக அன்பிற்கு வித்தாகும்.

உலகம் இறைவனின் படைப்பு. நன்மை, தீமை என்று நாம் அறிவது இறைவனின் சிருஷ்டியே. இறைவனுக்கு அந்தப் பாகுபாடு கிடையாது. நமக்குத் தீமை என்பதும், அவனுக்கு அவசியமானதே. நம் அறியாமையால் நாம் தீமை என்றுணர்வதை ஞானக்கண்ணால் பார்த்தால், தீமையாகத் தெரியாது. ஹிரண்யனும், இராவணனும் வதம் செய்யப்பட்டார்கள். மனிதனுக்கு அது வதம். அவர்கள் இருவரும் விஷ்ணுவைச் சீக்கிரத்தில் அடைய பயன்படுத்திய உபாயம் அது. இறைவனைப் பக்தியால் அடைவதைவிட எதிர்ப்பால் சீக்கிரம் அடையலாம் என அறிந்த அவர்கள், இறைவனை எதிர்த்து, அவனால் ஆட்கொள்ளப்பட்டார்கள். குழப்பம், கலகம் என நாம் காண்பது அற்புதக் காட்சியாகும். சரணாகதியே கடைசி கட்டம். அதன் வெளிப்பாடு தெரியுமுன், உலகம் ஓர் அற்புதமாகக் காட்சியளிக்கும் என்கிறார் அன்னை. நம் வாழ்வில் சரணாகதியைப் பூரணமாக கடைப்பிடிக்காவிட்டாலும், சிற்சில இடங்களில் பூரணமாக ஏற்றுக்கொள்கிறோம். மேல் அதிகாரி சொல்வதை யோசனையே செய்யாமல் செயல்படுத்தும் அளவுக்கு நம் மனம் பக்குவப்பட்டுள்ளது. வீட்டிலும், ஆபீஸிலும், நண்பர்களிடையேயும் அதுபோல் நாம் ஏற்கனவே செயல்படும் இடங்கள் உள்ளன. அங்கெல்லாம் நமக்கு பிரச்சினையே வருவதில்லை. அது போன்ற செயலை யோகச் சிறப்புறச் செய்ய வேண்டுமானால், நம் மனதை ஆராய்ந்து பார்த்தால், ஓரளவுக்கு அப்படியே ஏற்றுக்கொண்டாலும், மனம் அதற்கு மேலுள்ள கட்டங்களில் பல கேள்விகளை எழுப்பும். அவற்றை ஒதுக்கிச் செயல்படுவோம். மனத்தின் கேள்விகளை ஏற்று சரணாகதியின் பாணியில் அதற்குப் பதில் சொல்லி மேலெழுந்தவாரியாக ஏற்றுக்கொண்ட கடமைகளை, முழுமையாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்தால், அந்தச் செயலைப் பொறுத்தவரை சரணாகதி பூர்த்தியடையும். பூர்த்தியடையுமுன், எவற்றை நாம் கசந்து விழுங்கினோமோ அவை தன் அழகு பொலிவுற மிளிர்வதைக் காணலாம். சிறு விஷயங்களில் இது பலித்தால், முழுமைப்படுத்துவது நம்மைப் பொறுத்தது. நெய்வேலி ஆரம்பிக்கும் காலங்களில் தமிழ் நாட்டு மந்திரியே அதை எதிர்த்துப் பேசினார். இன்று நெய்வேலி இல்லை என்றால் தமிழ் நாடில்லை என்ற நிலை மின்சாரத்தில் ஏற்பட்டுள்ளது. இன்றைய அனுபவம் அன்றே இருந்திருந்தால் அதற்கு விவேகம் என்று பெயர். உயர்ந்த விஷயங்களில் அதை ஞானம், திருஷ்டி என்போம். ஞானம் ஏற்பட்டபின், களேபரம்கூட கலையுணர்வு வாய்ந்த நிகழ்ச்சியாகத் தெரியும். இது சரணாகதி பூர்த்தியாகும்முன் உள்ள யோக நிலை. எந்தக் கோயிலுக்குப் போனாலும் எனக்கு அங்கு அன்னை வீற்றிருப்பதாகவே தெரிகிறது என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. பக்தி சிறந்து அன்னையை மற்ற இடங்களிலும், மற்ற சமயங்களிலும் உருவமாகவோ, ஒளியாகவோ, மனித ஒத்தாசையாகவோ, ஏதோ ஓர் உருவில் பலர் பல சமயங்களில் உணர்வதுண்டு. இறைவனும் மனிதனும் ஒரு நீண்ட பாதையில் இருகோடிகள் என நாம் நினைக்கிறோம். மாறாக, அன்னை இறைவனும் மனிதனும் இரண்டறக் கலந்த நிலையிலிருக்கிறார்கள். ஒரு பார்வையில் மனிதனாகத் தோன்றுவது மறு பார்வைக்கு இறைவனாகத் தோன்றும் என்று அன்னை தன் அனுபவத்தை உதாரணமாகக் காட்டுகின்றார். தன் தியானத்தில் இறைவன் தத்ரூபமாகத் தெரிந்த ஒருநாள் சிறிது அசைவு ஏற்பட்டவுடன் இறைவன் உருவம் ஒரு டாக்டர் உருவமாக மாறியதாகக் கூறுகிறார். அதாவது எந்தக் காட்சி இறைவனாகத் தோன்றியதோ, அதேக் காட்சி டாக்டராக மாறியது. காணும் காட்சி நம் மனநிலையிலுள்ளது என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது. இறைவன் உருவமாகவும், ஒளியாகவும், தியான நிலையாகவும், எந்த உருவிலும் நம் மனநிலைக்கேற்ப தோன்றுவான். பொதுவாக நாம் சுவரை சுவராகவே பார்க்கிறோம். மனத்தின் பக்குவம் உயர்ந்தபொழுது சுவரும் பிரம்மமாக ஒரு சமயம் தோன்றும். நம் மனநிலையை கூடியவரை அதே இடத்தில் நிறுத்தி வைப்பது ஒரு யோகப் பயிற்சி. மாறி, மாறித் தோன்றினாலும், தெய்வ தரிசனம் அடிக்கடி ஏற்படுவதால் இது சிறந்த மனநிலை, உயர்ந்த உளப்பாங்கு.

வாழ்வு பெரியது, யோகம் அதனினும் பெரியது. பொதுவாகப் பார்க்கும்பொழுது அவை முரண்பாடானவை. அன்னைக்கு அவையிரண்டும் ஒன்று. வாழ்வு முழுவதும் யோகம் என்பதே அன்னையின் கொள்கை. இரண்டும் ஒன்று என்பதும் சரி. முரண்பாடானவை என்பதும் உண்மை. அதாவது நேர் எதிரான இரு தத்துவங்கள் ஒன்றோடொன்று இணைந்தும் பிரிந்துமுள்ளன. அடிப்படையில் ஒன்றான வாழ்வும், யோகமும், செயலில் பிரிந்து நிற்கின்றன. சாதகன் அடிப்படை உண்மையை உணர்ந்து, செயலில் அவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டும். பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் குழப்பமும், இணைத்துப் பார்க்க முடியாத நிலையில் அஞ்ஞானமும் ஏற்படும். இணைத்துப் பார்ப்பது ஞானமானால், பிரித்துச் செயல்படும் திறன் யோகமாகும். யோகத்தை மேற்கொண்ட பின், அதற்குரிய முறைகள் அநேகம். ஒவ்வொரு முறைக்கும் அதற்குரிய பலன் உண்டு. முறைகளுடைய பலன் அளவானது. முறைகளைக் கடந்த நிலைகளும் உண்டு. அதுபோன்ற சில நிலைகளை அன்னை அடிக்கடி குறிப்பிடுகிறார்.

சிறிய பலன் அளிக்கும் முறைகளைக் கடந்து வந்தபின், பெரிய நிலைகளை ஏற்றுக்கொண்டால் அவை பார்வைக்கு எளிமையாகவும் பயிற்சிக்கு கடினமாகவும் இருக்கும். பொய் சொல்லக் கூடாது என்பது எளிமையான விளக்கம். அனைவருக்கும் எளிதில் புரியக்கூடியது. பின்பற்றுதல் கடினம். பிராணாயாமத்தைப் பயிலுவதைவிட, நிஷ்டையிலிருப்பதை விட, கீதைப் பாராயணம் செய்வதைவிட, சித்து விளையாடுவதை விட பொய் சொல்லாமலிருப்பது கஷ்டம். தியானத்திற்காக உட்கார்ந்தால் மனம் அலைபாய்கிறது. தியானம் யோக மார்க்கம். அலைபாயும் மனம் வாழ்க்கை. ஓடிக் கொண்டேயிருக்கும் மனத்தை மனிதனால் கட்டுப்படுத்த முடியாது. மௌனத்தையடைய யோக மார்க்கம் 3 வழிகளைக் கூறுகிறது. அவற்றை நெடுநாள் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குப்பதிலாக எளிமையாக விவரிக்கக்கூடிய உயர்ந்த முறை ஒன்றை அன்னை சொல்கிறார். அலைபாயும் மனத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாது இறைவனே, நீயே இப்பொறுப்பை ஏற்றுக்கொள் என்று இறைவனிடம் அப்பொறுப்பை விட்டுவிட்டால், மனம் உடனே அமைதி பெறும். பல ஆண்டு மௌனப் பயிற்சியில் கிடைக்கக் கூடிய பலன் உள்ளபடி தன் பலஹீனத்தை அறிந்து, இறைவனை அழைத்து அவனிடம் நம் பாரத்தை அளித்தவுடன், சித்திக்கிறது. என்னால் முடியாது, என் பாரத்தை நீ ஏற்றுக்கொள் என்று இறைவனை அழைக்கும் இம்முறை உடனே பலன்தர வல்லது என்றாலும், பலன் தரும் அளவில் உண்மையுடன் இறைவனை அழைக்க மனத்தில் பவித்திரம் வேண்டும். ஒரு வகையில் இது கடைசி கட்டமான முறை என்றாலும், நம்மில் இதுபோன்ற பவித்திரமான உள்ளம் உள்ளவர் பலருண்டு. அவர்கள் மனத்தூய்மையுடையவராக இருப்பார்கள். அவர்கள் இம்முறையை ஏற்றுக்கொண்டால், அன்றாட வாழ்க்கையில் பல இடங்களில் இம்முறையைப் பயிலலாம். முழுப் பலன் இருக்கும். நெறியான போக்கும், நேர்மையான நெஞ்சமும் உடையவர் நம்முள் அநேகம் பேர். அவர்களுக்கெல்லாம் உகந்த உயர்ந்த முறை இது. எந்த யோகப் பலனையடையவும் இம்முறையைப் பயன்படுத்தலாம். அன்றாட வாழ்வில் இம்முறையை பல இடங்களில் பயின்று தன்னை தயார் செய்து கொள்ள முடியும். அதற்குள்ள பலன் அதிகம்.

இறைவன் சிருஷ்டியை மேற்கொண்டு முதலில் சிருஷ்டித்தவர்கள் இறைவனுக்கு எதிராகப் போய் விட்டார்கள். அவர்களே அசுரர்கள். உலகமும், தெய்வகளும் பின்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். முதலில் வந்தவர்கள் என்பதால் அசுரர்களை மூத்தவர்கள் எனவும், மூத்த கடவுள்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள். சிருஷ்டியிலுள்ள மனிதன், இறைவனை நாடிப்போய் அவனை அடைவதை எப்படியும் தடுப்பதையே தங்கள் முக்கிய இலட்சியமாகக் கொண்டவர்கள் அசுரர்கள். மனிதனில் 99% அசுரத் தன்மையுடையது என்கிறார் பகவான்.

மனிதனில் வக்ரபாவம் அதிகமாக உடையது மனம். மனத்தை குரங்குக்கு ஒப்பிடுவார்கள். எதைப் பார்த்தாலும் எதைக் கேட்டாலும் மறுத்துப் பேசும் பழக்கம் மனத்திற்குண்டு. புத்தி அதிகமாகவுள்ள மனம் வக்ரமடைந்தால் குதர்க்கம் தோன்றும். மேலும் திறமையுள்ள மனம் ஆணவமாக இருக்கும். ஆணவம் முதிர்ச்சியடைந்த நிலையில் தீமை உற்பத்தியாகும். கடைசி கட்டமாக தீமை அசுரத் தன்மையாக மாறுகிறது. அது மனிதனில் 99% இருப்பதாக ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். அத்துடன் அசுரர்கள் இறை வடிவமானவர்கள், நம் தூய்மையைப் பரிசோதிக்கவே அவர்களிருக்கிறார்கள். நம் ஜீவன் நூற்றுக்கு நூறு தூய்மை அடைந்தால் அசுர சக்தி நம்மைத் தொடாது என்கிறார். மறுத்துப் பேசுபவர்களுக்கு நண்பர்களிருக்க மாட்டார்கள். குதர்க்கமானவர்களுக்கு நாணயமிருந்தாலும் எவரும் நம்பமாட்டார்கள். ஆணவம் நிறைந்தவர்களை திறமையுள்ளவர்கள் அண்டியிருக்க மாட்டார்கள். தீய மனமுடையவனின் இரகஸ்யம் எளிதில் வெளிப்பட்டுவிடும். அசுரத்தன்மையுடையவன் ஆண்டவனையடைய முடியாது. மனித சுபாவத்தில் இவையெல்லாம் இருப்பதால், யோக மார்க்கத்தை நாடுபவர்களுக்கு இவற்றைப் போக்குவது அவசியமாகிறது. பிறர் சொல்வதை மறுத்துப் பேசாமலிருக்கும் பயிற்சி வாழ்க்கைக்கு நல்லது. அதுவே இறைவனையடைய அதிக பலன் கொடுக்கும் மார்க்கமுமாகும். இதில் வெற்றி கிடைக்க முழுமுயற்சியை எடுக்க வேண்டும். முழுமுயற்சி பலித்தால், முடிவு யோகப் பலனாக அடையும். குதர்க்கமாகப் பேசுபவர்கள் இதுபோன்ற முயற்சியில் வெற்றி பெறுவது எளிதல்ல. பேசுவதை குதர்க்கமில்லாமல் பேசுவதே பெருமுயற்சி. யோகப் பலன் வேண்டுமானால், குதர்க்கம் மனத்தைவிட்டே போக வேண்டும். குயவனுக்குப் பல நாள் வேலை. தடியனுக்கு சில நாள் வேலை என்பதை குதர்க்க மனப் பான்மையுடையவர்கள் அடிக்கடி பார்க்கலாம். தன்னிலைக்கு அதிகமாக ஒரு திட்டத்தைப் பல நாள் பெரு முயற்சி செய்து வெற்றிகரமாக முடிக்கும் தருவாயில் பழைய குதர்க்க எண்ணம் ஒன்று மனதில் குறுக்கிட்டால், அதுவரை கூடிவந்த அனைத்தும் விரயமாகப் போகும். அதுவே குதர்க்கத்தின் தன்மை. ரிஷி பல ஆண்டு செய்த தவத்தின் பலனை தெய்வலோக மங்கை ஒரு நாளில் அழிப்பது போல் குதர்க்கம் செயல்படும். ஆணவத்தை அழிக்க வேண்டும் என்பதே ஸ்ரீ அரவிந்தர் யோகத்தின் அடிப்படை. தீய மனமுள்ளவன் எனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவனுக்கு இரு கண்களும் போக வேண்டும் என்று செயல்படுபவன். அசுரகுணம் இதையும் தாண்டியது. யோகப் பயிற்சியாக, ‘என் அசுரத்தன்மையை தெய்வத்தன்மையாக மாற்று’ என்ற மன நிலையை ஏற்றுக் கொண்டு எண்ணத்தாலும், செயலாலும் அதை நிறைவேற்ற முற்பட்டால், பலன் பெரிது. உடன் தெரியும். மனிதனில் அசுரகுணம் ஊறிப் போயிருப்பதால், இந்த எண்ணமே நம் ஜீவனுக்கு ஒத்துவராது. இதையே பிரார்த்தனையாக ஏற்றுக்கொண்டவர் தன் பிரார்த்தனையை கவனமாகப் பார்த்தால் மனம் பிரார்த்தனையை தலைகீழே சொல்லும். ஆழ்ந்து ஊறிய தீமை என்பதால் இதைத் தொட விடாது. மனம் இதை ஏற்றுக்கொள்ளாது. மனம் ஏற்றுக்கொண்டால் பெரிய காரியம். பிரார்த்தனையை பிழையில்லாமல் சொல்வது அரிது. சொல்லிவிட்டால் பெரிது. தொடர்ந்தால் உடன் தெரியும் பலன் பொன்னிறமான சத்தியஜீவிய ஒளியாகும். தன்னிடம் தீமை நிறைந்திருப்பதை மனம் ஏற்றுக் கொள்ளாது. அசுரகுணமே என் குணம் என்று தனக்கே சொல்லிக்கொள்ள முன் வருவது உயர்ந்த ஞானம், சிறந்த பண்பு யோக சித்தி பெறும் அடக்க உணர்வுள்ளவர்களாலேயே அதை ஏற்றுக் கொள்ள முடியும். அதையும் அன்றாட நிகழ்ச்சிகளில் காண முயன்று, விலக்க முயலுதல் கடைசி கட்டமான பயிற்சி என்றாலும், எவரும் பயிலக் கூடியதே. கொட்டம் செய்யும் குழந்தையை அடிக்கும் பொழுது சில சமயம் அடிப்பதில் பிரியம் ஏற்பட்டு மனத்தின் தீமை வெளிவருவதைக் காணலாம். நண்பருக்கு சிரமம் வந்தாலும், மனத்தில் ஏதோ ஒரு சமயம் சந்தோஷம் ஏற்படுவதையும் கண்டுபிடிக்கலாம். தவறான செய்தி பொதுவானதாலும், கேட்டவுடன் முகம் மலர்ந்து சிரிக்கும் மனப்பான்மையுள்ளதையும் சிலர் காணலாம். உங்கள் மீது அன்பு செலுத்தும் ஒருவரைப் பார்த்து பிரியமாகப் பேசும் நேரத்தில், அவர் மீது மனத்தில் அவதூறு ஏற்படுவது தெரியும். சாதாரணமாக இவை கண்ணுக்குத் தெரியாது. தெரிந்தாலும் மனம் மாற்றிப் பேசும். ஏற்றுக்கொண்டாலும் அகற்ற மனம் வராது. முனைந்தாலும் முதல் முறையிலேயே கைவிட்டு விடுவார்கள். ஒரு நாளைக்கு 400, 500 முறை நாம் செயல்படுகிறோம். சில ஆயிரம் எண்ணங்கள் உதிக்கின்றன. அவற்றையெல்லாம் சோதனை செய்யும் மனப்பான்மை சிரமம். உண்மையாக நினைப்பது கடினம். ஆனால் தூய்மையை நாடுபவர்கள், யோகத்தை விழைபவர்கள் இவற்றை விரும்பி ஏற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து பயிலலாம், எவராலும் முடியும் என்பதால் எளிமையாகாது.

காய்தல் உவத்தலின்றி ஒரு பொருட்கண் நின்று ஆய்தல் அறிவுடமை என்பது தமிழ் இலக்கியச் சொல். உனக்கு எந்த மடையன் வேலை கொடுத்தவன் என்று திட்டிய அதிகாரிக்குப் பதில் சொல்லாமல் நின்றவனை அதட்டிக் கேட்டபொழுது அந்த வேலையைக் கொடுத்தவர் தானே (இந்த அதிகாரி) தான் என்று தெரிந்து கொண்டார். இதுவே மனித அறிவு செயல்படும் வகை. நேற்று செய்த காரியம் இன்று அறியாமையாகப் படுவதால் மீண்டும் அதை செய்யத் தவறுவதில்லை. தீர விசாரிப்பதே மெய். கண்ணால் கண்டதும் காதால் கேட்டதும் பொய் என்ற வாக்கை நம் செயல்களுக்கு முன் வைத்துப் பார்த்தால், தினமும் நாம் செய்யும் பல காரியங்கள் தவறு என்றும் நம் அபிப்பிராயங்களில் பெரும்பாலும் அர்த்தமற்றவை என்றும் தெரியும். தான் விரும்பியது சரி. தனக்குப் பிடிக்காதது தவறு என்பதே மனிதன் செயல்படும் முறை. உயர்ந்த முறையில் செயல்படுமுன், உயர்ந்த கருத்தை தெரிந்துகொள்ளுமுன், உள்ளதை அறிய வேண்டியது முக்கியம். அதற்கு விருப்பும், வெறுப்பும் தடையாக இருக்கும். மருமகள் வருஷத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் கொள்வது அடிக்கடி என்றும், மகள் வாரத்திற்கொருமுறை குளிப்பது தாமதமானதென்றும் நினைக்கும் தாயார் நமக்குக் கேலிக்கூத்தாக இருக்கலாம். மாத சம்பளம் முதல் தேதி வருகிறது. வாடகை முதல் தேதி. மனத்தைச் சந்தித்தால் வாடகை அடிக்கடி கொடுப்பதாகவும் சம்பளம் எப்போதோ ஒரு முறை வருவதாகவும் மனம் சொல்லும். இதுவே நிதர்சனம். இந்த மனப்பான்மையால் நமது தெளிவு குறைகிறது. நாம் செய்வது சரியானாலும், தவறானாலும் தடையில்லா விட்டால், தொடர்ந்து அதையே செய்கிறோம். அதை சரியென்று நினைக்கிறோம். சமூகம் மாறியபின் அதுபோன்ற தவறுகள் வெளிவரும். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்று அன்று வாழ்த்தியது இன்று 30 கோடி மக்களை 70 கோடியாக்கியிருக்கிறது என்று புரிகிறது. காய்தல், உவத்தலின்று ஆராய்ந்தால் இன்றைய அறிவே அன்று ஏற்பட வழியுண்டு. தன் 40வது வயதில் உடலும், பணமும், செல்வாக்கும் ஓட்டமாக ஓடும் நிலையில் ஒருவர் தன் 70 வயதை நினைத்துப் பார்த்தால் 70 வயதில் தன்னைப் போன்றவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று யோசனை செய்தால் பாதிக்குமேல் தான் செய்வது சரியில்லை என்று விளங்கும். தன் சொந்த அறிவையும், தகப்பனார் தனக்குப் போதித்ததையும், தன் அனுபவத்தையும் நீதிமன்றமாக்கி அதன் முன் தன் இன்றைய வாழ்வை சீர் தூக்கிப் பார்த்தால் மேலும் கால் பாகம் சரியில்லை என்று தெரியும். அதற்கு மேல் ஆராய்ச்சியில் வெறுப்பு ஏற்படும். ஆராய்ச்சியை முடிந்த வரை தொடர்ந்தால், தன் வாழ்வில் 10%க்கு குறைவான பகுதியே சரியானது என்று விளங்கும். மீதி 90 பங்கை அவர் மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். அதைப் பூர்த்தி செய்தபின் ஒவ்வொரு காரியத்தையும் இந்த நியதிப்படி சீர் தூக்கிப் பார்த்துச் செய்ய முடிவு செய்தால், வாழ்க்கை விளக்கம் பெறும். யோக முயற்சிக்கு அதிகமாக உதவக் கூடியது அது.

தர்மங்களைக் கடைப்பிடிப்பவன் கிருகஸ்தன். யுக தர்மத்தை நிலைநிறுத்துபவன் ரிஷி. சர்வதர்மங்களையும் உதறி விட்டு என்னைச் சரணடைந்தால், உன் பாவங்களிலிருந்து உன்னை விடுதலை செய்து, உன்னை ஆட்கொள்வேன் என்கிறார் கிருஷ்ணபரமாத்மா. உயர்ந்த தர்மங்களும் இறைவனையடையத் தடையாகும் என்பதே இதன் உட்கருத்து. தர்மங்களைப் புறக்கணித்து நல்லது, கெட்டது என்ற பாகுபாட்டை மட்டும் கைக்கொண்டு, நல்லதை மட்டும் செய்தால் போதும் என்பது ஓர் உயர்ந்த இலட்சியம். பெர்னார்ட்ஷாவின் கதையில் ஓர் இளைஞன் தன் தகப்பனாரிடம் இதைச் சொல்கிறான். தகப்பனார் ஏசுவுக்கும், புத்தருக்கும் விளங்காத இந்த வேறுபாடு உனக்கெப்படி விளங்கும் என்கிறார். நல்லது எது என்று கண்டுகொள்ள மனித அறிவு போதாது. நமக்கு சௌகரியப்பட்டதை நல்லது என்று கொள்கிறோம். தொழிற்சாலைகள் நல்லது என உலகம் அன்று கொண்டது. இன்று தொழிற்சாலைகளை மூடாவிட்டால் (acid rain) மழை உயிரை மாய்க்கும் ரசாயன மருந்தாகப் பெய்து உலகை அழித்துவிடும் என கண்டுகொண்டார்கள். Spare the rod and spoil the child என்பது பழமொழி. அடிக்காமல் வளர்த்தால் குணம் கெட்டு குழந்தை கெட்டு விடும் என்று பொருள். அடித்து வளர்த்தால் மனம் கருகி வாழ்வு நலிந்து விடும் என்பது இன்றைய நாகரிகம். எது நல்லது என்பதை உலகம் வகுத்துக்கொடுக்கவில்லை. ஒரு காலத்துப் பழக்கம் அடுத்த காலத்தில் தவறாகிறது. எது தர்மம் என்று காண முடியாது. தர்மத்தைக் கண்டு அதைக் கடைப்பிடிப்பது கடினம். தர்மங்களை உதறிவிட வழியை விளக்குவது சுலபம். கடைப்பிடிப்பது சுலபமல்ல. அன்னையை ஏற்றுக்கொண்டு, அன்னை நினைவாகவே செயல்பட்டு, அன்னை நம் வாழ்வில் வெளிப்படுவதைப் பார்க்கும்பொழுது மனதில் ஒரு புது அமைதி, தெளிவு, ஒளி, தெம்பு ஏற்படும். பிறகு அது நிலைத்துவிடும். அது அன்னை உருவமாகவும் சில சமயம் காட்சி அளிப்பதுண்டு. மனம் அன்னை வழிகளை ஏற்றுக் கொண்டு, நெஞ்சத்தில் அவர் குடியேறியபின், மறந்தும் நம் கையால் அன்னைக்குப் பிடிக்காததை செய்வதில்லை என்றால், ஓரளவு அன்னை நம்முள் நிலைத்துவிடுவார். இது நாம் அன்னையை ஏற்றுக்கொண்டதற்கும், அன்னை நம்மை ஏற்றுக்கொண்டதற்கும் ஓர் அளவு கோல். இதிலிருந்து உயர்ந்து, அதிகமாக அன்னையை ஏற்றுக்கொள்ள முயன்றால் இந்நிலை சிறப்புறுவது உணர்வில் தெரியும். இங்கிருந்து இறங்கி வந்தால் மனத்தெளிவு குறைந்து அது சரியில்லை என்பதை விளக்கும். இந்த (scale) அளவு கோலை நாம் நம்முள் ஏற்படுத்திவிட்டால், அதைப் பயன்படுத்தி தர்மங்களைக் கைவிடுதல் எப்படி என்று விளக்க முடியும். எந்த உயர்ந்த தர்மத்தையும் பின்பற்ற வேண்டிய நிலை வந்தவுடன், இந்த அளவுகோல் கொண்டு அளந்தால் அது பின்பற்ற வேண்டியதா இல்லையா என தெளிவாகத் தெரியும். இந்த அளவுகோல் அனுமதிப்பதைச் செய்யலாம். அனுமதிக்காததை கைவிட முன்வர வேண்டும். சமூகத்திலுள்ள கடமைகள் ஒரு நிலை, மனச்சாட்சி அறிவுறுத்துவது அடுத்த நிலை. இலட்சியங்களை கடைப்பிடிப்பது உயர்ந்த நிலை. பண்புடன் செயல்படுவது சிறந்த நிலை. இவை நாம் அறிந்ததே. என்றாலும் இந்த தர்மங்களை கடைப்பிடிக்க மனத்திலுள்ள அன்னையின் ஆன்மிக அளவுகோலை முடிவானதாகச் செய்தால், ஆன்மிக முன்னேற்றத்திற்கும் புறதர்மங்களுக்கும் முரண்பாடு ஏற்படும்பொழுது இந்த அளவுகோல் நமக்கும் அறிவுறுத்தும். அளவுகோலின் அழைப்பை ஏற்று தர்மங்களை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், யோகத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். இந்தச் சட்டத்தின்படி அன்றாட நிகழ்ச்சிகளை சீர்தூக்கிப் பார்த்து, செயல்படுவது உயர்ந்த யோகப் பயிற்சியாகும்.

நம் வாழ்க்கை செயல்களால் நிறைந்தது. செயல்களைப் பழக்கங்களால் நிறைவேற்றுகிறோம். பழக்கத்தாலில்லாமல் செய்யக் கூடிய செயல் ஒன்றில்லை. பழக்கமில்லை என்றால் மனிதனில்லை. பழக்கத்தை மாற்றுவது கஷ்டம். புதிய பழக்கத்தைக் கற்றுக்கொள்வது சிரமம். ஒரு செயலைக் கற்றுக்கொண்டபின் அது பழக்கமாகும் வரை, அதை நம்மால் சரிவரச் செய்ய முடிவதில்லை. சரிவரச் செய்ய அது பழக்கமாகும்வரை காத்திருக்கின்றோம். பூரண யோகத்தைப் பூரணமாகப் பயில வேண்டுமானால், பழக்கங்களை அழித்து, எதையும் செய்ய புதிய பழக்கத்தை நாடாமல், அதைச் செய்யும் முறையைக் கற்று முதன்முதலில் செய்வதுபோல் செய்ய வேண்டும். இது அசாத்தியமானது. இப்படிச் செய்தால் ஓர் அளவுகடந்த சக்தி நம்முள் பிறந்தபடியிருக்கும். முதன்முறையாக கார் ஓட்டுபவர், முதல் மேடைப் பேச்சு, முதன்முறையாக ஓர் ஆபீஸில் வேலைக்குப் போவது, பயத்தைக் கொடுப்பதே வழக்கம். பயம் தெளிந்தவுடன் கார் ஓட்டுவதோ, பேசுவதோ, ஆபீஸ் வேலையோ செய்யும்பொழுது அளவுகடந்த தெளிவு இருப்பதைப் பார்க்கலாம். முதலில் விமானத்தில் செல்வது, முதல்முறையாக மந்திரி பதவி வகிப்பது போன்றவற்றுக்கும் இதே அனுபவம் உண்டு. முதலில் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்பவர்களுக்கு இந்த அனுபவமுண்டு. கடை ஆரம்பித்து முதல்நாள் வியாபாரம் செய்பவர், கல்லூரிக்கு முதல்நாள் செல்லும் மாணவன், மாமியார் வீட்டிற்கு மருமகள் வந்த முதல்நாள் ஆகியவற்றிலும் இதே அனுபவமுண்டு. புதிய மொழி கற்றுக்கொள்ளும்பொழுதும் இப்படித் தெரிவதுண்டு.

புதியதாக கற்றுக்கொள்பவற்றை பழக்கமாக்காமலும், பழைய பழக்கங்கள் அழித்து அவற்றை புதியதுபோல் செய்வதும் யோகப் பாதையில் எடுத்து வைக்கும் அடி. இதைக் கடைப்பிடிப்பது மிகக் கடினம். முதலில் புரியாது. புரிந்தால் பின்பற்ற முடியாது. ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன். முக்கியமான காரியமாக மேலதிகாரியைச் சந்திக்கப் போகும் பொழுது அவரிடம் என்ன சொல்ல வேண்டும் என்று மனதை தயார் செய்து கொண்டு போகிறோம். நாம் எதிர்பாராத ஒன்றை அவர் கேட்டவுடன், மனதில் பதில் தயாராக இல்லை. என்ன செய்வது என்று புரியாத நேரம், புது யோசனை ஏற்பட்டு புதிய எண்ணம் தோன்றி பேசும்பொழுது அற்புதமான உணர்வு ஏற்படுகிறது. எதிர்பாராத நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படிப் பேசினேன் என்று தெரியாது. என்ன பேசினேன் என்று தெரியாது. ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. என்னால் மறக்க முடியாது, என்று நாம் சொல்கிறோம். ஏனெனில் அந்த நேரம் பதில் அளிக்க நமக்குத் தெரிந்த பழக்கம் ஏதுமில்லை. பழக்கத்தை சந்தர்ப்பம் விலக்கியது. மனிதன் புதிய உணர்வுடன் செயல்படுகிறான். அந்த நேரத்தை சிருஷ்டி என்பார்கள். அதே அனுபவத்தை நம் வீட்டில் அண்ணனுடன் பேசும்பொழுதும் பயிலலாம். ஜீவன் மலரும் தருணம் அது. அதுபோல் நாம் பழக்கத்தை ஒதுக்கிப் புதியதாகப் பேச முயன்றால் உடனே அண்ணன் என்ன இது இன்று நீ வேறு மாதிரியாக இருக்கிறாய். உன்னுடன் பேசவே சந்தோஷமாக இருக்கிறதே என்பார்.

மனப்பாடம் செய்தே காலேஜ் வந்த மாணவன், இன்று பாடத்தை மனப்பாடம் செய்வதில்லை, புரிந்து கொண்டே படிப்பது என்று ஆரம்பித்தால் இதுபோன்ற புதுஉணர்வு மனதில் ஏற்படும். நாம் பழகிய நண்பர்கள், வீட்டு மனிதர்களை முதல்முறையாகச் சந்திப்பதாகக் கொண்டு பழகினால், உள்ளத்தில் புது உணர்வு ஏற்படும். நடப்பது, எழுந்து நிற்பது, எழுதுவது போன்ற செயல்களை இதுபோல் செய்ய முயற்சித்தால் ஆயிரம் யானை பலம் வந்ததுபோல் தோன்றும். பழக்கம் ஜீவனற்றது. புது முயற்சி, மனிதன் மலரும் வேளை. மல்லிகை சித்திரையில் பூக்கிறது. மல்லிகைச் செடி இதைப் பின்பற்றினால் அதற்கு பருவமில்லை. வருஷம் முழுவதும் பூக்கும். வாழ்க்கை முழுவதும் மலரும் பருவமாக வேண்டுமானால், பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். சமையலை இதுபோன்ற புது உணர்வுடன் செய்தால் சாப்பிடுபவர்களுக்கு அது அமிர்தமாக இருக்கும். நமக்கு ஒருவர் மீது அளவுகடந்த பிரியம் ஏற்பட்டு, நம் உயிரையே அவர்மீது வைத்திருந்தால் அவர் உளறுவது கூட இனிமையாக இருக்கும். அவருடன் இருப்பதே முக்கியம், அவர் பேச்சின் கருத்து முக்கியமில்லை. பழக்கங்களை அழிக்க முற்பட்டால், செயல்களுக்கு ஜீவன் ஏற்படும். உடலுக்கு உயிர் வரும். நாள் நிமிஷமாகப் போகும். இதுவே பூரண யோகத்தின் ஜீவநிலை. இந்த நிலை ஏற்பட்டவுடன் அன்னை அங்கிருப்பார். யோகத்தை அவர் மேற்கொள்வார். ஜடமான மனிதனுக்கு ஜகத்குருவைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படும்.

பகவானுக்கு மௌனம் பூரணமாக சித்தித்து மனம் சாந்தத்தில் அமிழ்ந்துள்ள நேரம் உத்தரபாராவில் பிரசங்கம் வந்தது. புத்தி செயலற்றிருந்த நேரம். எப்படிப் பேச முடியும். கூட்டத்திற்கு சென்றுச் மேடையில் எழுந்து நின்று அவையோருக்கு நமஸ்காரம் செய்தார். தலையில் ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை. திடீரென்று ஒரு பிரசங்கம் வெள்ளமாக மனதில் உதித்துப் பிரவாகமாகச் சென்றது. அறிவை நம்ப மறுத்தால், அறிவு செயலற்ற நிலையில் ஆன்மா அளவிறந்து செயல்படும். பூரண யோகத்திற்குச் செயல்படும் முறை இதுவே. நம்மால் முடியாத நேரத்திலேயே இந்த அற்புதம் நம் வாழ்வில் ஏற்படுகிறது. அது அரிபொருள். இந்திரன், வருணன் போன்ற தெய்வங்களை அழைத்து இறைவன் ஒரு துரும்பை நகர்த்தச் சொன்னார். இறைவனுடைய உத்தரவு இல்லாமல் எவராலும் அதை நகர்த்த முடியவில்லை. இதில் உள்ள உண்மையை மனம் ஏற்றுக்கொண்டால், அறிவின் மீதுள்ள நம்பிக்கை அழிந்து போகும். மேலும் ஆன்மாமீது நம்பிக்கை ஏற்படும். முக்கியமான காரியங்களிலும் அறிவு விலகியிருக்காது. இடைவிடாது பேசிக் கொண்டேயிருக்கும். மௌனம் சித்தித்தால் சாதகனுக்கும், ஒன்றுமே தெரியவில்லை என்றால் சாமானிய மனிதனுக்கும் அறிவு செயல்படாது. ஏனெனில் அதனால் செயல்பட முடியாது. மற்ற சமயங்களில் செயல்படாமலிருக்க முடியாது. இவற்றிலிருந்து வேறுபட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு கடமையைப் பூர்த்தி செய்யும் பொழுது நம் அறிவைப் பூரணமாக விலக்கி, மேலிருப்பவர் செய்வதை அப்படியே செய்ய முடிவதுண்டு. இந்தத் திறமை எல்லோர்க்கும் உண்டு. ஆனால் ஏதோ ஒரு சமயத்தில்தான் செயல்படும். நம் தினசரிக் கடமைகளில் இந்த மனப்பான்மைக்கு ஒத்துவரக்கூடும் செயல்களில் ஒன்றை எடுத்து சோதனையாக அறிவை விலக்கிச் செயல்பட்டால் அது பூர்த்தியாவதைப் பார்க்கலாம். அதே நேரம் நம் அடிப்படை திறமை அதிகமானது தெரியும். திறமையாக அது தெரிந்தாலும், அறிவு விலகியவுடன் ஆத்மா செயல்பட்டு ஜீவனுக்கு உயர்வை அளிப்பதே அது. ஒரு விஷயம் பலித்தால், மேலும் பலிக்கக் கூடிய இடங்களைக் கண்டு, அங்கும் இதைப் பயிலவேண்டும். நாளாவட்டத்தில் அறிவு தானே விலக முன்வந்தால் அது உயர்ந்த நிலை. ஒரு கடமை வந்தவுடன் ஆன்மா தயாராக செயல்பட முன்வந்தால் அதுவும் சிறப்பு.

ஆர்வமாகச் செயல்படுவோர் திறமையும் வெற்றியும் உடையவர். யோகத்திற்கும் ஆர்வம் தேவை. அது ஆன்மாவின் ஆர்வம். உணர்ச்சியின் ஆர்வத்தை விலக்கிய பின் ஏற்படும் ஆர்வமே ஆன்மாவின் ஆர்வம். புத்தகம் படிக்க நமக்குப் பிடிக்கும். ஆர்வமாகப் படிக்கிறோம், இது மனித செயல். யோகத்தை மேற்கொண்டபின், யோகத்திற்குரிய காரியங்களையும் செய்ய வேண்டும். அதற்கு ஒருநாளில் உள்ள 24 மணிநேரம் போதாது. எனவே நம் பயிற்சிக்கேற்ப நாள் முழுவதும் கடமைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பிரித்திருப்போம். குடும்பத்திலுள்ளவரும் யோகப் பயிற்சியை மேற்கொண்டால் தம் அன்றாடக் கடமைகளை யோகமாக மாற்றிச் செய்வதால், தினசரி வழக்கமான காரியங்களும் யோகமாக மாறுவதால் ஒரு நாளில் எந்த நேரத்திற்கும் உரிய வேலையிருக்கும். அதில் பொழுதுபோக்கு இடம்பெறாது. வீட்டுக்காரியங்கள், தியானம், யோகத்தைப் பற்றிப் படிப்பது யோகத்தில் நாம் ஏற்றுக் கொண்ட முறைகளைப் பயிலுவது ஆகியவை எல்லா நேரத்தையும் எடுத்துக் கொள்வதால் நமக்கு ஆர்வமுள்ள புத்தகம் படிப்பதற்கு நேரமிருக்காது. ஒரு கடமையைத் தவிர்த்து அந்த நேரத்தை நம் ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய அளிக்க வேண்டும். இது தவிர்க்கப் படவேண்டியது. நடைமுறையில் அடிக்கடி கடமைகளைத் தவிர்த்து ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய பல சந்தர்ப்பங்கள் எழும். தினமும் 10, 15 சந்தர்ப்பங்கள் கூடவரும். ஒருமுறை கூட கடமை ஜெயிக்காது. தவறாமல் ஆர்வம் ஜெயிக்கும். கடமை ஜெயிக்கும் இடத்திலும் செயல் அளவில் கடமை ஜெயித்தாலும், மனம் ஆர்வத்தையே நாடியபடி இருப்பது தெரியும். அதை மாற்றுவதே உண்மையாக யோகம். மனம் ஆர்வத்தை நாடாமல் கடமையை ஒரு முறை தானே நாடினால் சிறப்பு. இது வெற்றிக்கு அறிகுறி. முதல் அறிகுறியில் ஆரம்பித்து கடைசிச் சின்னம் வரை செல்வது நீண்ட பயணம். இதற்கடுத்த கட்டமும் உண்டு. மனம் ஆர்வத்தை விட்டுக் கடமையை நாடுவதிலிருந்து, கடமையை ஆர்வத்துடன் செய்யும் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும். கடமைக்காக செய்வதற்குப் பதிலாக அவற்றை ஆர்வத்திற்காகச் செய்யும் நிலை முடிவானது.

குறை கூறக்கூடாது என்பது நல்ல குணம். ஆனால் குறைகூறாமலிருப்பது ஒரு யோகப் பயிற்சியாகும். பிறர் மனம் புண்படக்கூடாது என்று குறைகூறாமலிருப்பது நல்ல மனித குணம். குறை சொல்லும் பொழுது என்ன நம் மனதில் நடக்கிறது. குறை சொல்லாமலிருந்தால் மனம் எப்படி மாறுகிறது என்று தெரிந்து கொண்டு, குறை சொல்லாமலிருப்பதன் ஆன்மிக பலன் கருதி குறை சொல்லாமலிருப்பது யோகப் பயிற்சி. யோக சட்டப்படி ஒருவர் மீது குறை சொன்னால், அவரைத் திருத்தும் வாய்ப்பை நாமிழந்து விடுகிறோம். குறை சொல்லாமலிருந்தால் அவர் திருந்தும் வாய்ப்பு அதிகம்.

பிறரிடம் நாம் காணும் குறை பலவிதமாக இருக்கும். முதலில் நமக்கு குறையாகத் தெரிவது, உண்மையில் குறையாக இருக்காது. அதன் உண்மை என்ன என்று தெரிந்துகொண்டால், நாம் குறையாக நினைத்தது தவறு என்பது தெரியும். வேறு ஒரு வகையில் நாம் காணும் குறைக்கு ஓர் அவசியம் இருக்கும். மற்றொரு கோணத்தில் நாம் குறையாகக் காண்பது உண்மையில் நிறைவாக இருக்கும். அதுவே அதன் ஆன்மிக உண்மையாகவும் இருக்கும். பிறருடைய குறை நம் குறையின் பிரதிபலிப்பாக இருப்பது ஒரு நிலை. பிறர் குறை நம் குறையைப் பூர்த்தி செய்யும் நிறைவாகவுமிருக்கும். ஒரு காரியம் நடக்கும்பொழுது அதன் ஆன்மிக உண்மைப்படி நாம் காணும் பிறர் குறைக்கு அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்வது ஞானம். அதன்படி நடந்து நம் நடைமுறையால் அவர் குறை நீங்கினால் அது யோகம். இந்த தத்துவப்படி நம்மைச் சுற்றியுள்ளவர் குறைகளை எல்லாம் கவனித்து, புரிந்துகொண்டு, அதை, நம் அகவுணர்வின் மாற்றத்தின் மூலம் விலக்க முற்பட்டு வெற்றி காண்பது யோகப் பயிற்சியில் உயர்ந்த நிலை. தன் பையன் ஏராளமாகப் பொய் சொல்கிறான் என்று வருஷக்கணக்காக வருத்தப்பட்ட தாயார், தான் அளவுகடந்து பொய் சொல்வதின் பிரதிபலிப்பே பையனுடைய நடைமுறை என உணர்ந்து, தான் சொல்லும் பொய்யை விட்டுவிட முடிவு செய்தவுடன், பையன் பள்ளி வாழ்வு மாறி, அவனைத் திட்டிய ஆசிரியர்கள் எல்லாம் போற்ற ஆரம்பித்தார்கள். பையனைக் குறை கூறுவதை விட்டுவிட்டு, தன்னைத் திருத்திக் கொள்ள முன்வரும் முறை இது. எப்பொழுது எந்தக் கடைக்குப் போய் எது வாங்க முனைந்தாலும் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதால் எல்லோரையும் குறை சொன்னவர், தான்படும் அவசரத்தால், அதன் பிரதிபலிப்பாக மற்றவர்கள் தாமதப்படுத்துகிறார்கள் என அறிந்து, தன் அவசரத்தை மாற்ற முயன்று, அதன்பின் எங்கு போனாலும் காரியங்கள் தாமதமில்லாமல் நடப்பதைப் பார்த்தார். நம்முள் உள்ள அவசரம், புறச் சூழ்நிலையில் தாமதமாகப் பிரதிபலிக்கிறது.

குறை கூற நினைக்கும் முன் இந்த நிலைகளை யோசித்துப் பார்த்து ஒவ்வொரு கட்டமாய்த் தாண்டி வந்து, குறை கூறாதிருப்பதை யோகப் பயிற்சியாக ஏற்றுக்கொண்டு, அதில் முன்னேற்றம் கண்டால், இறைவனின் அற்புதம் ஏதோ ஓர் இடத்தில் தெரியும். அவல நிகழ்ச்சியை, அற்புதப் பேரொளியாகக் காணும் பேறு ஒரு க்ஷணம் ஏற்படும்.

க்ஷணம் தவறாமல் ஒரே விஷயத்தைக் கருதும் மனப்பான்மை உள்ளவர்க்கு உகந்த பயிற்சி க்ஷணம் தவறாமல் இறைவனை ஆர்வமாக நாடுதல். தன் கடமைகளை ஆர்வமாகச் செய்பவர், க்ஷணம் தவறாமல் தன் கடமையுணர்வில் மனத்தை நிலை நாட்டியவருண்டு. அவர்கள் தங்கள் இலக்கை மாற்றிக்கொள்ள முடியும். கடமைக்குப் பதிலாக அங்கு இறைவனை நாடுவதை வைத்தால் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். இடையறாத இறைவன் நினைவு ஏற்பட்ட பின்னரே மேற்கொள்ளும் முயற்சி இது. இறைவனை ஆர்வமாக நாடுதல் என்றால் எப்படி அதைச் செய்வது? நிகழ்ச்சிகள், செயல்கள், அசைவுகள், இறைவனே என்பதை நாம் ஏற்றுக்கொண்டோம். ஆனால், அவற்றை நம்மால் இறைவனாகக் காண முடியவில்லை. தியானத்தைச் சடங்காகச் செய்யலாம். அர்த்தபுஷ்டியோடு தியானத்தை மேற்கொண்டால் தெய்வ தரிசனம் கண்டது போலிருக்கும். ஒருவர் நம் வீடு வந்து தான் தேடும் நபரைப் பற்றி விசாரித்தால் நமக்குத் தெரியாது என்பதற்குப் பதிலாக, அவர் தன் நபரைக் காண உதவி செய்தால், அது நல்ல செயல். வந்தவரைப் பார்த்தவுடன் அதைச் சமர்ப்பணம் செய்து, அவரை அன்னையாகக் கருதி நம்மால் செய்யக் கூடிய அத்தனையும் செய்ய வேண்டும் என முடிவு செய்து வீட்டை விட்டிறங்கினால் அவர் தேடும் நபர் எதிரில் வருவார். நம்மைப் பொறுத்தவரை அது சமர்ப்பணமான க்ஷணம். சமர்ப்பணமாக செயல். வந்தவர் தேடுவது மனிதரை. அச்செயலில் நாம் தேடுவது இறைவனை. அதற்குரிய மனநிலையுடன் நாம் செயலில் இறங்கியவுடன், வந்தவர் காரியம் பூர்த்தியாகிறது. இறைவன் செயலில் வெளிப்படுகிறார். வந்தவருடைய சந்தோஷத்தில் இறைவனைக் காண்கிறோம். மனத்தில் சாந்தியில், நெஞ்சத்தின் பூரிப்பில் இறைவனைக் காண்கிறோம். இந்தச் செயலைப் பொறுத்தவரை இந்த க்ஷணத்தைப் பொறுத்தவரை தெய்வத்தைத் தரிசனம் கண்டாயிற்று. எந்நிலையில் மனம் இருந்தாலும், அடுத்த நிலைக்குச் செல்லும். தெய்வம் என்பது வானுலக ஜீவனில்லை. கோயில் விக்ரஹமில்லை. கீதோபதேசமில்லை. நம்முள் இந்த நேரம் உணரும் புலன் வழிப் பெருகும் உயர்ந்த உணர்வே, ஜோதியாக இதயத்தில் தோன்றும் பேரொளியே, நிதர்சனமான உணர்வுபூர்வமான உயிர் ஓவியமே எனக் காண்போம். சும்மா இருக்கும்பொழுதும் மனத்தில் எழும் எண்ணங்களையும் தெய்வமாக அறிய முற்படலாம். உணர்ச்சியையும் அதே போல் காண முயலலாம். கனவிலும் அன்னையைக் கூப்பிட முடியும் என்று பக்தர்களுக்குத் தெரியும். கனவிலும், நனவிலும், அசைவிலும், ஆர்வத்திலும், அனைத்திலும் தெய்வத்தைக் காண நாம் செய்ய வேண்டியது நம்மால் முடிந்தவற்றையெல்லாம் அறிவோடும், ஆர்வத்துடனும், நல்லெண்ணத்துடனும், நெகிழ்ந்த உணர்வுடனும் செய்துவிட்டு அன்னையை நம்முள் அழைப்பதுவேயாகும். க்ஷணம் தவறாமல் தரிசனத்தை நாடினால் க்ஷணமே, இறைவனாக மாறி, காலம், காலத்தைக் கடந்தவனை வெளிப்படுத்தும். காலம் கடந்த அனந்தனுடைய அடையாள முத்திரை இனிமை என்கிறார் அன்னை.

அகவுணர்ச்சியை நேரடியாக அறியும் திறமை உயர்ந்த தெளிவு. அது இல்லாதவர் புற நிகழ்ச்சிகளைப் பார்த்து, அதை அகவுணர்வுகளின் பிரதிபலிப்பாக அறிவதை ஒரு யோகப் பயிற்சியாக அன்னை கூறுகிறார். இந்தக் கருத்தை மனத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ள அறிவில் பூரண அடக்கமும், மனத்தில் உச்ச கட்ட பக்குவமும் தேவை. ஒருவரால் இதை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் அவரால் அதன் முழு யோகப் பலனையும் அடைய முடியும் என்றாகிறது. இதை ஏற்றுக்கொண்டால் முதலாவதாக நம்மைப் பற்றி நமக்கு கொஞ்சமும், உயர்ந்த எண்ணம் இருப்பது கடினம். இதுவரை நம் வாழ்நாளில் நமக்கிழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள், தவறுகள், அத்தனையும் நம் அகவுணர்வால் ஏற்பட்டது என்றாகும். அதை மனம் ஏற்றுக்கொள்ள முன்வந்தால்தான், இது முடியும். வாயாடி மனைவி அமைந்தது, பொறுப்பற்ற கணவன் வந்தது, ஆபீஸில் கிடைக்காத பதவியுயர்வுகள், பக்கத்து வீட்டிலுள்ளவர் நம் வீட்டுத் தோட்டத்து காய்கறிகளைப் பறித்து போவது, ரிக்ஷாக்காரன் அடாவடி செய்வது, நம்மிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள் என நீண்டப் பட்டியல் நம் மனத்துள் எண்ணமாக ஒளிந்திருக்கின்றன என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வருகிறது. அன்னையைப் பொறுத்தவரை அத்தனையும் உண்மை. நாம் அன்னையை யோகத்திற்காக முழுமையாக ஏற்றுக்கொள்ள இக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சுருக்கமாக தவறுக்கு உள்ள இடம் ஒன்றே. அது நம் மனமே. ஏனெனில் மனம் நம் தவறுக்கு மட்டும் உரிமையுடையதல்ல. நம் வெற்றிகளுக்கெல்லாம் உறைவிடம் அதுவே. வெற்றியை ஏற்றுக்கொள்ளும் மனம், குறையை ஏற்றுக்கொள்ளாது.

இந்தத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டபின், நடப்பவைகளைப் பார்த்தால் நாம் உள்ள நிலை தெரியும். நடப்பவற்றைக் கொண்டு மனநிலையை அறிந்து, அதை திருத்த முன்வர வேண்டும். உண்மையில் மனம் திருந்தினால் புறச் சூழ்நிலை திருந்த வேண்டும். அதுவரை பயிற்சியைத் தொடர வேண்டும். எவரையும் சொல்லிப் பயனில்லை. நம்விதி என்று நாம் அடிக்கடி கேட்பதை மாற்றி எவரையும் எதுவும் சொல்ல வேண்டாம். அத்தனையும் உள்ளே இருக்கிறது என்றால் பொருத்தம். ஒருவர் சேவையை மேற்கொள்ள விரும்பி, தானிருந்த வேலையை இராஜிநாமா செய்துவிட்டு ஒரு சேவை ஸ்தாபனத்தில் முக்கிய ஊழியராகச் சேர்ந்தார். ஸ்தாபனம் அடுக்கடுக்காக வெற்றிகரமாக பல சேவைகளைச் செய்கிறது. பலன் கிடைக்கும் வண்ணம் செய்கிறது. ஆனால் எவரும், பலன் பெறுபவர் உள்பட, ஸ்தாபனத்தைப் பாராட்டிப் பேசுவதில்லை. அத்துடன், ஏதாவது ஒரு குறை சொல்ல ஆரம்பித்து அளவுகடந்த அவதூறைப் பலவாறாக எழுப்பினார்கள். அவதூறுக்கு இம்மி அளவும் இடம் இல்லை என்று தெரிந்தவர்களே அதைக் கிளப்பினார்கள். யாருடைய கையால் சேவை நடக்கிறதோ, அவரே அவதூறையும் நம்புகிறார். கொஞ்சமாக இருப்பதை அதிகமாகச் சொல்வதுண்டு. இல்லாததை இங்கு சொல்கிறார்கள். இருக்க முடியாததைச் சொல்கிறார்கள். சுமார் 4, 5 வருஷங்களுக்குப்பின் ஊர் முழுவதும் வதந்தியால் நிரம்பிய நேரத்தில் முக்கிய ஊழியர், ஸ்தாபனத் தலைவரை அணுகி ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டார். தலைவர் இதுவே அகவுணர்ச்சியின் புறப்பிரதிபலிப்பு என்றார். ஊழியர் அதிர்ந்து போனார். தலைவர் அவரை உங்கள் மனதிலில்லாத அவதூறு ஒன்று ஊரில் அடிப்படுகிறதா எனக் கேட்டார். ஊழியர் தலை குனிந்து ஊரில் பேசுவதெல்லாம் என் மனதில் உள்ளவையே என்று பதில் அளித்தார். இந்த ஸ்தாபனத்திற்கு ஊர் முழுவதும் உயர்ந்த நல்ல பெயர் இருக்கும்பொழுது நீங்கள் வந்து சேர்ந்து உயர்ந்த சேவையைச் செய்தீர்கள். ஆனால் உங்கள் மனதில் எந்த ஸ்தாபனத்திற்கு சேவை செய்கிறீர்களோ அதன்மீதே அவதூறு அளவு கடந்திருக்கிறது. உங்கள் மனதிலுள்ளதை உலகம் பேசுவதே அன்னை விளக்கம். அதில் தவறொன்றில்லை என்று தலைவர் விளக்கம் அளித்தபின் ஊழியர் தான் சிறு பிள்ளையாக இருப்பதிலிருந்து எவரைப் பார்த்தாலும், எந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலும், எந்தச் செய்தியைக் கேட்டாலும் அதை எப்படித் திரித்து வதந்தியாக்கினால் அனைவரும் நம்புவார்கள் என்ற பயிற்சியை திறம்பட பயின்றுள்ளதாகச் சொன்னார். பிறகு அந்த ஊழியர் ஸ்தாபனத்தை விட்டு விலகினார். வதந்தியும் விலகியது.

நம்மிடம் வக்கீல் பொய் சொல்லும்பொழுது நம் மனதில் பொய்யிருக்கிறது என அறிய, நம்மிடம் புரோக்கர் அதிகக் கமிஷன் கேட்கும்பொழுது நாம் பேராசைக்காரன் என்று ஏற்றுக்கொள்ள, நம் பெண்ணுக்குத் திருமணம் தாமதமாகும்பொழுது நாம் பொறுப்பற்றவர் என உணர, நாமிருக்கும் கம்பெனியை இழுத்து மூடும்பொழுது நாம் இந்தக் கம்பெனியில் உண்மையாக உழைக்கவில்லை என்று ஏற்றுக்கொள்ள மனம் உயர்ந்த அடக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். அதுவே சிரமம். அதையும் ஏற்றுக்கொண்டால் இந்தச் சூழ்நிலை மாறும் அளவுக்கு நம் மனத்தை மாற்றுவது எவ்வளவு சிரமமானாலும் அது யோகப் பயிற்சி ஆகும் என்பதுடன் எவரும் செய்யக் கூடியதே. மனத் தூய்மையை நாடினால் மட்டுமே பூரண யோகம் பலிக்கும் என்பதால், முதற்படியாக மனதில் அடக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் தாங்கள் இருக்குமிடத்திலிருந்தே செய்யக் கூடிய மனமாற்றம் இது.

பிரார்த்தனை தேவையில்லை, சமர்ப்பணம் வேண்டாம். தியானம், திருவுருமாற்றம் ஆகியவையும் வேண்டாம். இறைவா, உன் திருவுள்ளப்படி நடக்கட்டும், என் இச்சைப்படி வேண்டாம் என்று சொல்பவருக்கு, இறைவனின் திருவுள்ளத்தை உணர்ந்து ஏற்றுக்கொள்பவருக்கு தன்னிச்சையை விலக்க முடியுமானால் அவர் நிலை தியானம், திருவுருமாற்றம், பிரார்த்தனை, சமர்ப்பணம் ஆகியவற்றைவிட உயர்ந்தது என்று அன்னை கூறுகிறார். அவர் அத்துடன் நிற்கவில்லை. அதுவும் தேவையில்லாத அமைதியான உள்ளம் உண்டு. அதுவே முடிவான மோன நிலை. அந்நிலையின் அமைதியை அடைந்தவர்க்கு எதுவும் தேவையில்லை. அமைதியே தன்னுள் அனைத்தையும் கொண்டது. கடைசி கட்டம், உச்சநிலையை கடந்தவர்க்கு ஏற்ற ஆன்மிக உயர்வு பெற்ற அசைவற்ற அமைதி இது. இதுவும் ஆரம்ப கட்டத்திலுள்ளவர்க்கும் சில சமயம் ஒரு சிறு அளவில் பலிக்கும். எளிமையான வாழ்விலுள்ளவரும் சில சமயம் எவரும் நிலையிழக்கும் காரியங்களிலும் தன்னிலை இழக்காமலிருப்பதுண்டு. அது போன்றவர் அரிது என்றாலும், பலருண்டு. அவர்களுக்கு இது உகந்த பயிற்சி. செயலில் உதாசீனமாகவும் மனத்தில் கொந்தளிப்பும் உள்ளவர்க்கு இந்நிலை பயன்படாது. செயலில் விலகியிருப்பதைப் போலவே, மனத்திலும் விலகியிருப்பவருக்கே இது உதவும். இலாக்கா தலைமை டைரக்டருக்கு கெஜட் பதவியில்லாத அதே இலாக்கா ஆபீஸர் மீது பிரியம் வந்துவிட்டது. தலைவர் உச்சகட்டம். இவர் கடைசி நிலை அதிகாரி. டைரக்டர் இவரை காலையிலும், மாலையிலும் தன் வீட்டுக்கு வரச்சொல்வார். அதனால் இவருடைய சிபாரிசைத் தேடியவர்கள் பலர். ஆனால் தன் சொந்தப் பதவியுயர்வை டைரக்டரிடம் கேட்க இவருக்குத் தோன்றவில்லை. கேட்கவேயில்லை. இது பரிபக்குவம். சாதாரண சர்க்கார் அதிகாரிக்கு உள்ள உயர்ந்த மனநிலை இது. யோகத்தை நாடுபவர்கட்கு இது போன்ற மனநிலை இருப்பது சாத்தியம். அவர்கள் இதை நல்ல குணமாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, யோகப் பயிற்சி முறையாக ஏற்றுக்கொண்டு தங்கள் காரியங்களில் இதைப் பயின்றால், பயிற்சி பலன் அளிக்கும்.

தியானம் என்பது முறைப்படி கடைப்பிடிக்கப்பட்டால் நல்ல பலன் உண்டு. தியானத்தை அன்னை முதன்மையாகச் சொல்லாவிட்டாலும், தியானம் அனைவருக்கும் அமைவதில்லை. இயல்பாகத் தியானம் அமைவது உயர்வு. அவர்கள் அதைப் போற்றி வளர்த்தல் நலம். தியானத்தை வளர்க்க அதிக நேரம் தியானத்திலமர்வது ஒருவகை. தியான நிலையை மேலும் மேலும் உயர்த்தி உயர்ந்த நிலைகளை எட்ட முயல்வது மற்றொரு வகை. முதல்வகை அகலத்தால் பெரியது. இரண்டாம் முறை ஆழத்தால் சிறந்தது. அரைமணி தியானம் செய்பவர் அதை நீட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக 4, 5 மணி நேரமும் கொண்டு போகலாம். ஏதோ ஒரு சமயம் 10, 12 மணியும் அமைவதுண்டு. நாள் முழுவதும் இயல்பாகத் தியானத்தில் பல நாள் அமரும் பக்தர்களும் உண்டு. ஆழமற்றதான தியானமானாலும், அகலம் கருதி சிறப்பானது. 2, 3 நாள் முக்கிய கடன்கள் தவிர, தியானத்திலிருப்பது ஆத்ம நிறைவைக் கொடுக்கக் கூடியது. தியானத்திலிருந்தால் முதலில் தூக்கம் வரும். தூக்கத்தைத் தாண்டிய பின்னரே உண்மையான தியானம். முதலில் புலன்களிலிருந்து விடுபட்டு மனத்தில் நிலைப்பது வழக்கம். அப்பொழுது மனம் அமைதியுறும். பிறகு உள்மனம் விழிப்படைந்து அபரிமிதமான தெளிவுடன் செயல்படும். அடுத்த நிலையில் மீண்டும் மனம் செயல் அற்றுப் போகும். அதற்கடுத்த நிலையுமுண்டு. தியானம் கலைந்தபின் தன் நிலைக்கு வர சில நிமிஷங்களாகும். அடுத்த நிலையில் உடலும் செயலற்று உடல் உணர்வுபெற அதிக நேரமாகி புலன்கள் தெளிவுற நேரமாகும். அதன் பின்னரே செயல்பட முடியும். மாறாக எவ்வளவுக்கெவ்வளவு தியானம் ஆழ்ந்திருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரம் தெளிதலும் உண்டு. தியானத்தை மட்டுமே முக்கியமாகக் கருதினால் அதுவே பெரும் பலனைத் தரவல்லது. தினமும் காலை, மாலை 2 மணி தியானம் செய்பவர் நாள் முழுவதும் மற்ற வேலைகளைத் தன் மாலை தியானம் சிறப்புற அமையும் வண்ணம் தயார்செய்தல் சிறந்த முறை. அதை முடிக்க முக்கியமாகத் தன் கடமைகளில் திறமை மிகுந்திருக்க வேண்டும். முதலில் நம் வேலைகளில் எந்தத் திறமை குறைவாக இருக்கின்றதோ, அதை நிறைவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் செயல்களை நிதானத்துடனும், அவசரமில்லாமலும் செய்யப் பழக வேண்டும். செயல்களை முறைப்படுத்துதல் அவசியம். வரிசையாக செய்யும்பொழுது முறை தவறாமலிருக்கும். திறனிருந்து, முறைப்படுத்தி, நிதானமாகச் செய்யும் செயல்கள் தியானத்திற்கு நம்மை தயார் செய்ய வேண்டுமானால், மற்ற விஷயங்களில் நெறியைக் கடைப்பிடித்தல் அவசியம். பொதுவான விஷயங்களில் நெறியோடு செயல்படுபவர், காரியங்களை சிறப்பாக தியானத்திற்கு உதவும் வகையில் செய்தால், காலை மாலை தியானம் சிறப்பாக அமையும், நீளும். அத்துடன் நாமே தியானத்திற்கு உட்கார்வதற்குப் பதிலாக, அந்த நேரம் வரும்பொழுது தியானம் நம்மைத் தேடி வந்து ஆட்கொள்ளும். பொதுவாக மற்ற நேரத்தில் வேலை செய்யும் பொழுது நாம் சுறுசுறுப்பாக இருக்கும் பொழுதே தியானம் அமைகிறது என்றால் அதுவே உச்சகட்டம்.

இடைவிடாது ஒரு பொருளை மனிதன் நினைத்தால் அந்நினைவின் திறத்தால், அவன் அப்பொருளாகவே மாறுவான் என்பது அடிப்படைத் தத்துவம். இடையறாது ஒருவன் இறைவனை நினைத்தால், அந்நினைவின் திறன் அதிகம். திறன் செயல்பட்டால், மனிதனை இறைவனாக்கும் வாய்ப்பு அதனுள் அமைந்துள்ளது. இது பலித்தால் அடுத்த கட்டத்தில் இடையறாத தரிசனம் ஆன்மாவில் எழும்.

இடைவிடாமல் நாம் செய்வது எதுவுமில்லை. செய்ய முயன்றால் அது இயற்கைக்கு ஒவ்வாது என்பதால் அது முடியாது. இதயத் துடிப்பு, மூச்சு, இரத்த ஓட்டம் ஆகிய இயங்கு தசைகளின் செயல் மட்டுமே அவ்வாறு நிகழ முடியும். மனித வாழ்வும், செயலும் அவன் அறிவுக்குட்பட்டிருத்தலால், தானே இயங்கவல்லதல்ல என்பதால் மனிதனால் இடையறாது செய்யக்கூடியது என்று ஒன்றில்லை. மனித அறிவுக்குக் கீழ்ப்பட்ட உடல் இயக்கத்தில் இடையறாத பூரணம் இருக்கிறது. மனிதனுக்கு மேற்பட்ட நிலையில் இறைவன் செயல்படும் இடங்களிலும் இப்பூரணமுள்ளது. மனிதனுக்கு இடையறாத பூரணமில்லை. இடையறாத நினைவு சித்திக்க வேண்டுமானால், மனிதன் தன் நிலையை உயர்த்தி இப்பூரணமுள்ள உயர்நிலைக்கு வரவேண்டும். அம்முயற்சியுள்ளவர்க்கே அமையக்கூடிய சித்தி இது. முயற்சியாலும், இடைவிடாத பயிற்சியாலும் இதையடைய பல உபாயங்களுண்டு. நினைவு மனத்தைப் பற்றியது. மனம் இப்பொழுது இடைவிடாமல் ஒன்றைப் பற்றியுள்ளது. அது எண்ண ஓட்டங்களாகும். சிந்தனை என நாம் கருதும் எண்ணங்கள் இடைவிடாமல் மனதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. யோகத்தைப் பொறுத்தவரை இந்த எண்ணங்கள் தடையானவை. குறைவை வெளிப்படுத்துபவை என்றாலும், இடையறாத தன்மையையுடையதால், மனிதனால் முடியாத ஒன்றை தன் அறிவால் சாதிக்கமுடியாத ஒன்று இதன் மூலம் செயல்படுவதால், அத்தன்மையை அவ்வெண்ணங்களிலிருந்து பிரித்து, எண்ணங்களுக்குப் பதிலாக இறைவனை அங்கு வைக்க முடியுமானால், தற்சமயம் இடைவிடாத எண்ண அலைகளாக இருப்பது மாறி, இடைவிடாத இறைவன் நினைவு ஏற்படும். அது ஒரு யோக சித்தி.

எண்ண அலைகள் பல நிலைகளில் அமைந்துள்ளன. கடைசி நிலையில் எளிமையாக விலக்கக்கூடிய வலிமையற்ற எண்ணங்களும், முதன்மையாக மனத்துடன் இரண்டறக் கலந்து மனம் அழியும் வரை அதன் பகுதியாக அமைந்துள்ள எண்ணங்களும் உள்ளன. நம்மால் விலக்கக் கூடிய எண்ணங்களை விலக்கி அதனிடத்தில் இறை நினைவை ஏற்படுத்தினால், மிச்சமாக நம்மால் விலக்க முடியாத எண்ணங்கள் நிற்கும். பகுத்தறிவின் தெளிவு மீதியுள்ளவற்றில் ஒரு பகுதியை அழிக்கும். அறிவுக்குப் புறம்பானதாகத் தெரிந்தாலும் ஆர்வம் விட முடியாதவை அடுத்தவை. நம் ஆர்வத்தை அதனின்று விலக்கினால், அவை விலகும். எஞ்சியுள்ளவை மிக ஆழத்தில் வேரூன்றியவை. அவை தானே தன்னை அறியாமல் மீண்டும் மீண்டும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும் தன்மையுடையவை. அவற்றை மீற மனிதனுக்குள்ள ஒரே உபாயம் விடாமுயற்சி. அர்த்தமற்ற எண்ணங்கள் எப்படி அலைமீது அலையாய் மீண்டும் மீண்டும் எழுகின்றனவோ, அதேபோல் மீண்டும் மீண்டும் அவை அழிய வேண்டும் என்று இடைவிடாத பிரார்த்தனையை மேற்கொண்டால் அது பலிக்கும். இதுவே ஜபத்தின் அடிப்படை. உடலைத் தெய்விகமாக்கும் முறை ஜபம். சிருஷ்டியில் உள்ள பிடிவாதத்திற்கு இணையான பிடிவாதம் ஜபத்திற்கு ஏற்பட்டால், அந்நிலையிலுள்ள எண்ணங்கள் விலகி அங்கும் இடையறாத தெய்வ நினைவு ஏற்படும்.

எண்ணங்களை விலக்க முயலுதல் மௌனத்தை நாடுதல். தியானத்தில் இயல்பாக மௌனம் இருப்பதை தியானத்தைவிட்டு எழுந்தபின்னும் தொடர முயன்றால் அது ஓரளவு பலிக்கும். பலித்த அளவுக்கு மௌனத்தை மாற்றி இறைவன் நினைவாகச் செய்தால், அமைதியான மௌனம், ஆர்வமான நினைவாகும். இப்பயிற்சியைத் தொடர்ந்தால், ஒரு நிலையில் வந்து நின்று விடும். அதற்கு மேல் முயன்றால் எல்லாம் எப்படி முடியும்? நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் பிறகு என்ன இருக்கிறது என்று தோன்றும். இது சாதாரண எண்ணமல்ல. மனம் விளங்கி ஏற்றுக்கொண்ட கருத்து. எளிமையில் விலக்க முடியாது என்று தோன்றும். அந்நிலையில் செய்யக்கூடியது இரண்டு. ஒன்று அன்னை இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்றறிய வேண்டும். அன்னை இக்கருத்திற்கு மாறாக எழுதியிருக்கிறார். அன்னை எழுதியதை ஏற்றுக்கொண்டு, நம் மனம் அறிந்ததைவிட முயற்சி செய்தால், அது விலகும். அப்படி விலகாவிட்டால், உங்கள் அனுபவத்தை ஆராய்ந்தால், இதுபோல் நடக்கமுடியாதது என்று நாம் அறிந்தது நடந்திருப்பது தெரியும். அன்னையின் சொல்லை ஏற்றுகொள்வதாலோ, நம் அனுபவத்தை ஏற்றுக்கொள்வதாலோ, இந்த எண்ணத்தை விலக்கலாம். இதுபோன்ற நம் மனத்தைப் பற்றியவை 50 அல்லது 100 எண்ணங்களாகும்.

நமக்கு ஓர் அளவுண்டல்லவா என்பது போன்றவை அவை. அன்னை நமக்கு அளவில்லை என்கிறார். புத்திசாலித்தனம் இனி வளராது, எதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும், ஜாதகம் பொய்க்காது, கர்மம் விலகாது, நமக்கு எவரும் உதவி செய்ய மாட்டார்கள், சாமர்த்தியம் பலிக்கும், நல்ல குணம் பலிக்கும், நல்ல குணம் இருந்தால் நம்மை ஏமாற்றிவிடுவார்கள் என்பன போன்ற 50 அல்லது 100 எண்ணங்கள் நம் ஜீவனை ஆக்ரமித்துக் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து ஒவ்வொன்றாய் நாம் விடுதலை பெற்று, அவையிருந்த இடத்தில் இறைவன் நினைவை ஏற்படுத்த முயன்றால் அது பலிக்கும். அது முதற்கட்டமான சைத்திய புருஷன் வெளிப்பட நம்மைத் தயார் செய்யும்.

இடையறாத நினைவு பலித்து, பூர்த்தியாகி, பூரணம் பெற்றவர்கட்கு இடையறாத தரிசனம் சித்திக்கும். ஜீவன் என்பது மனம், நெஞ்சம், உடல், ஆன்மா ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டது. நினைவு மனத்தில் பல பகுதிகளான சிந்தனை, கற்பனை, அறிவு, நினைவு ஆகியவற்றுள் ஒன்று. மனம் ஒரு பகுதியாயினும் மனிதனில் சிறந்த பகுதி. நினைவு மனத்தின் ஒரு பகுதியானாலும் மனிதனை இறைவனுடன் தொடர்பு கொள்ளச் செய்யும் கருவி. எனவே சிறியதானாலும் நினைவு சிறப்புடையது. ஜீவன் அறியாமையிலிருக்கும்பொழுது இருளால் சூழப்பட்டு இருப்பதால் மனிதனுக்குப் புறவாழ்க்கையைக் காண கட்புலனும், கேட்கச் செவியும் ஆகிய புலன்கள் பயன்படுகின்றன. நம் கண்ணுக்கு ஊனக்கண் என்று பெயர். ஜீவன் அறியாமையிலிருந்து விடுபட்டால் ஜீவனுடைய புலன்கள் செயல்படும். ஊனமான புலன்கள் அதற்குத் தேவையில்லை. பயன்படா. ஜீவன் விழிப்புற்றால் சூட்சுமப் புலன் செயல்படும். விழிப்புற்ற ஜீவன் ஞானம் பெற்றால் சூட்சும திருஷ்டி ஞான திருஷ்டியாகும். இறைவனை தரிசிக்கும் பார்வை ஜீவனுடைய திருஷ்டிக்குண்டு. ஜீவன் இதயத்திற்குப் பின்னால் புதைந்துள்ள ஆன்மாவை தன்னுட் கொண்டது. இடையறாத நினைவு சிறப்பானதானால், இடையறாத தரிசனம் ஆன்மிக உயர்வு பெற்றது. நினைவு இழந்த நிலையில் தரிசனம் ஒரு முறை கிடைக்கும். அது பலருக்கும் கிடைக்கும். ஒரு முறை கிடைத்ததை நிலையாகப் பெற கீழ்க்கோடியிலிருந்து மேல் கோடிக்குப் போக வேண்டும். ஓரளவு வசதி பெற்றவர் எவரும் ஒரு முறை காரில் போகலாம். அது முதல் நிலை. எங்கு போனாலும் காரில் போவேன் என்ற நிலை அடுத்த நிலையில்லை. அளவுகடந்த உயர்ந்த நிலை. அதுபோல் இடையறாத தரிசனம் முதல் தரிசனத்திலிருந்து அதிக தூரத்திலுள்ளது. அதைப் பெற முடியும், அதற்குரிய அடிப்படை நிபந்தனை ஜீவனில் விழிப்புற்றிருக்க வேண்டும் என்பது. தரிசனத்தைக் காண்பது ஜீவன் என்பதால், இடையறாது தரிசனம் பெற ஜீவன் இடையறாது விழிப்புற்றிருக்க வேண்டும். ஜீவன் ஏதோ ஒரு சமயத்தில் தியானத்திலோ, சமாதி தரிசனத்திலோ, நெகிழ்ந்த உணர்ச்சியாலோ, விழிப்புற்ற சமயம் தரிசனம் கிடைக்கிறது. மற்ற நேரம் தியானம் இருப்பதில்லை, விழிப்பும் இருப்பதில்லை. அந்நேரம் செயல்படும்பொழுது நம் பழக்கத்தை ஒட்டிச் செயல்படுகிறோம். அது இருளில் செயல்படுவது. ஆர்வத்தை ஒட்டிச் செயல்பட்டாலும், அபிப்பிராயத்தையொட்டிச் செயல்பட்டாலும் அது இருளின் வகையைச் சேர்ந்தது. பழக்கத்தை விலக்கி, கடமையில் ஆர்வம் கொண்டு, நம் அபிப்பிராயத்தை சமர்ப்பணம் செய்து செயல்பட்டால் இருள் குறையும், விலகும், ஜீவனுக்கு விழிப்பேற்படும். ஒரு முறை கண்ட தரிசனம் அடிக்கடி வரும். அடிக்கடி வரும் தரிசனத்தை அற்புதமாக வரவேற்று, ஜீவன் மலரும் வகையில் மட்டும் செயல்பட்டால், ஜீவன் நிரந்தரமாக விழிப்புறும், தரிசனம் நிலையாகக் கிடைக்கும். இடையறாத தரிசனம் யோகசித்தி. ஏதோ ஒரு சிறு பகுதியில் செயல்பட்டாலும், கிடைத்த பலன் துளியானாலும், பலனின் தரம் உயர்ந்த ஆன்மிகச் சிறப்புடையது. திருவுருமாற்றத்தின் முதல் நிலையையடைய உதவும்.

ஆன்மிக விஷயங்களில் பலனின் அளவை நிர்ணயிப்பது நம் மனத்தின் திறன். திறன் மனத்தை நிலைப்படுத்துவதைப் பொறுத்தது. எந்த அளவுக்கு மனம் ஓரிடமாக நிலைக்க முடிகிறதோ அதுவே பயிற்சியின் பலனை நிர்ணயிக்கும். முறை எவ்வளவு உயர்ந்ததானாலும், பலன் நம் மனநிலையின் ஆழத்தைப் பொறுத்தது. எவ்வளவு பெரிய ஊருக்குப் போனாலும், நாம் அங்கு அனுபவிப்பதின் அளவை நம் கையில் உள்ள பணம் நிர்ணயிப்பதுபோல, மனநிலையின் ஆழம், ஆன்மிக முறைகளின் பலனின் அளவை நிர்ணயிக்கும். எனவே அதிகப் பலன் பெற மனத்தை அதிகமாக நிலைப்படுத்த வேண்டும். முழுப்பலன் பெற முழுமையாக நிலைப்படுத்த வேண்டும். நம் மனம் இன்றுள்ள நிலையையறிந்து அடுத்த கட்டம் எது என்று புரிந்து, அங்கு போக முயற்சி செய்வதே முதல்படி. சில்லரையாக, சிறு பிள்ளைத்தனமாக இருப்பவர்கள் தவிர, எதையும் பொறுப்புடன், தீவிரமாகச் செய்பவர்களுக்கு மனம் ஓரளவு நிலைப்படும். தியானத்தில் நிலைப்படுவதும், நடைமுறையில் அக நிகழ்ச்சியின் தீவிரம் மனத்தைப் பொருத்தும், புற நிகழ்ச்சியில் பொறுமை பழக்கத்தையும் பொருத்ததாகும்.

நம் முயற்சிக்கு அகமும், புறமும் தேவைப்படுவதால், இருமுனைகளிலும் செயல்படவேண்டும். தியானத்தை உயர்த்தும் முறைகள் அகவுணர்ச்சியை செறிவுபடுத்தும். வாழ்க்கை வெற்றியை வழங்கும் முறைகள் புறத்திறனை அதிகப்படுத்தும். இவையிரண்டுக்கும் பயன்படுபவவை பல. அவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். கடமைகள் தவிர மற்றெதையும் பொருட்படுத்தாத மனநிலை; கடமை என்பதால் அதிகபட்ச ஆர்வம் கொள்ளுதல்; கடமைகளைத் தவிர்த்து ஆசைகளைப் பூர்த்தி செய்யும் பழக்கத்தை முழுவதுமாக தவிர்த்தல்; நமக்கு தெரிந்த குறைகளை அறவே அகற்றுதல்; செயல்களில் அன்னைவழியைக் கடைப்பிடித்தல்; சமர்ப்பணத்தை மேற்கொள்ளுதல் போன்றவை மனநிலையை ஆழப்படுத்த உதவும். முறைகள் சிறப்பானால் மனம் அதிகமாக நிலைப்படும். எனவே இருவகையிலும் இது உயர்ந்தமுறை. நம் யோகப் பக்குவத்தின் நிலையை உயர்த்தும் முறை இது.

ஏன் இறைவனை வழிபட வேண்டும். ஏன் மனிதன் இறைவனாகக் கூடாது என அன்னை வினவுகிறார். உலகிலுள்ள அனைத்தும் இறைவன் என்பதால், மனிதனும் இறைவனே. மனிதன் அதிகமான இறைத்தன்மையையுடையவன் என்பதால் அவனால் இறைவனாக முடியும் என்பது தத்துவம். இதயத்திற்குப் பின்னாலுள்ள சூரியன், யோகம் முதிர்ச்சியடைந்த நிலையில் வெளிப்பட்டு ஜோதி தரிசனம் கொடுக்கும். அப்படியே நிலைப்பதும் உண்டு. இறைவனுடைய அம்சங்களாக சாந்தி, மௌனம், அழிவின்மை, ஆனந்தம், அழகு, சத்தியம், அனந்தம், காலம் கடந்த நிலை, ஜோதி, அன்பு, பேரின்பம் சொல்லப்படுகிறது. சூரியனான ஜோதி இவற்றுள் ஒன்று. ஜோதி சூரியனாகப் பலித்தால் இறைவனின் ஓர் அம்சம் பலித்ததாகும். அதிலிருந்து மற்ற அம்சங்களை நாடலாம். மனித வாழ்வு இறை அம்சங்களுக்கு எதிரான அம்சங்களையுடையது. மனிதவாழ்வின் கூறுகளை, இறை நிலையின் கூறுகளாக மாற்ற முயல்வதே மனிதன் தன்னை இறைவனாக்கும் பாதையாகும். இதயத்தின் பின் இருக்கும் சூரியனைக் காண விழைந்து கண்ணை மூடி உள்ளே பார்த்தால் சிறு பொறி தெரிவதுண்டு. கருப்பும், விஷ ஜந்துக்களும் மறைந்து, பொறி தெரிந்து ஜோதியாகி, சூரியனாகக் காட்சி அளிப்பது ஓர் அம்சம் பூர்த்தியாவதாகும். அன்னை பூரண யோகத்தை மேற்கொண்டு அதைப் பூர்த்தி செய்யப் புதுவையிலேயே ஸ்ரீ அரவிந்தருடன் தங்கி அவருக்குப் பின்னும் யோகத்தை தொடரும்பொழுது சாதகர்களின் யோகத்தையும் தானே பூர்த்தி செய்ததன் விளைவாக, தான் சமாதியாகப் போவதற்கு 2, 3 வருஷங்களுக்கு முன் தன்னை இறைவனாக ஒரு நிமிஷம் கண்டதாகவும், பின்னர் 15 நிமிஷம் உடல் உள்பட தன்னில் அனைத்தும் இறைவனாகவே முழுமையாக மாறிவிட்டதாகவும் கண்டார். இது அனைவருக்கும் சித்திக்கக்கூடியது என்றும் கூறுகிறார். அதன் முதற்படியே நெஞ்சினுள் சூரியனைக் காணுதல். அதற்கும் முன் கட்டம் ஜோதி தரிசனம். இது முதலில் பொறியாகத் தெரிந்து ஜோதியாக மாறும்.

அன்னை என்பது ஒரு சக்தி. இறைவன் என்பது சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட - சிருஷ்டியை தன்னுள் அடக்கிய - பரம்பொருள் நிலை. பரம்பொருள் ஈஸ்வரனாகவும் சக்தியாகவும் சிருஷ்டியில் செயல்படும் பொழுது சக்தி அம்சம் அன்னை. மனிதன் பக்தியாலும் யோகத்தாலும் இறைவனாகலாம், அன்னையாகவுமாகலாம் என்பது பூரணயோகத்தின் அடிப்படை. அன்னையைச் சரணடைந்தால் யோகம் பலிக்கும். கடைசி கட்டத்தில் அன்னையாகவே மாறலாம். அன்னை முறைகள் அனைத்தையும் பூரணமாகக் கைக்கொண்டால், நம் புறவாழ்வு அன்னை வாழ்வாகும். இடையறாத அன்னை நினைவும், இடையறாத அன்னை தரிசனமும் ஏற்பட்டால் அகவுணர்வு அன்னையாகும். மனத்தில மௌனம் குடிகொண்டு, எண்ணம் விலகி, பின்னர் மனம் கரைந்து விலகினால், உணர்வு மேலோங்கி நிற்கும். மனம் அகன்றதைப் போல் உணர்வையும் அகற்றலாம். உடலின் செயல்களையும், உடலின் உணர்வையும் அகற்றலாம். அன்னை தன் எண்ணத்தில் பகவானைக் காண்கிறார். சாதகன் எண்ணத்தில் அன்னை உதிப்பார். உணர்விலும், செயலிலும் சமர்ப்பணம் பூர்த்தியானால் அன்னை அங்கும் தரிசனம் தருவார். தரிசனம் தந்தவர் நிலைத்திருப்பார். நிலைத்தவர் நீடிக்க நம் மனித அஸ்திவாரங்களை மாற்றி அன்னைக்குரிய அஸ்திவாரங்களாக மாற்றினால் நம் ஜீவனில் ஆழத்தில் அன்னை தோன்றி, தானே நம்முள் செயல்பட்டுச் சாதகனை அன்னையாகவே மாற்றுவார். எந்த நிலையையும் எய்த யோகம் தன் பாதைகளை வகுத்துள்ளது. தொடர்ந்த முயற்சியும், ஆழந்த ஈடுபாடும், இடைவிடாத தெய்வவுணர்வும் பாதைகளின் பலனைப் பெறத் தேவை.

நேரடியான யோகப் பாதைகள் மேற்சொல்லப்பட்டவை. வாழ்வின் சிறப்பையடைய நாம் கடைப்பிடிக்கும் உபாயங்கள் ஏராளம். ஒழுங்கு, விழிப்பு, விஸ்வாசம் போன்று சுமார் 30, 40 உபாயங்களைச் சொல்லலாம். அவற்றுள் சில யோகத்திற்கும், வாழ்க்கைக்கும் பொருந்தும். விஸ்வாசம் வாழ்க்கையில் சிறப்புற உதவும். எனினும், அதன் அடிப்படை ஆன்மிக உயர்வுக்கு வழி செய்யும். நாணயம் வாழ்க்கைக்கு மட்டுமே பயன்படக்கூடியது. தியானம் யோகத்திற்கே உரியது. மற்றவைகளில் சில யோகத்திற்கும், வாழ்க்கைக்கும் பயன்படக் கூடியவை. அவற்றைப் பட்டியலாக எழுதுகிறேன். சுத்தம், தூய்மை, உதாரகுணம், தன்னலமற்ற தன்மை, மற்றவர் கோணத்தில் பிரச்சினையை புரிந்துகொள்வது, குறித்த நேரத்தில் செயல்படுதல், உஷார், ஒழுங்கு, நாணயம், நேர்மை, அடிபடாமல் காப்பாற்றிக் கொள்வது, நம்பிக்கை, நம்பிக்கைக்குப் பாத்திரமாதல், சத்தியம், விஸ்வாசம், பொறுப்பு, நிதானம், திறமை, ஞாபக சக்தி, அறிவு, புத்தி, பொறுமை, மிருதுவான தன்மை, இனிமை, உழைப்பு, பகுத்தறிவு, விட்டுக்கொடுப்பது, பிறர் வெற்றியில் சந்தோஷமடைதல் போன்ற குணங்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும். யோகத்தை மேற்கொண்டபின் வாழ்க்கையில் குறையிருக்கக்கூடாது என்பதால், மேற்சொன்ன குணங்கள் வாழ்க்கையைப் பூர்த்தி செய்ய உதவும் என்பதால் இவற்றில் சிலவற்றை அல்லது எல்லாவற்றையும் பின்பற்றி வாழ்க்கையைப் பூர்த்தி செய்தால் அது யோகத்தின் வாயிற்படிக்கு கொண்டு போகும்.

யோகத்தை மேற்கொள்ளுதல் அரிது. இறைவனின் அழைப்பு இருக்கிறது என தீர்மானமாகத் தெரிந்தவரே யோகத்தை மேற்கொள்ளலாம். மேற்கொண்ட பின் தன்னுடைய தீர்மானம் முடிவானதாகவும், அசைக்க முடியாததாகவும் இருக்க வேண்டும். எந்தப் பலனையும் கருதி யோகம் செய்ய முடியாது. அன்னைக்கு ஏற்படும் திருப்தியே சாதகனுக்கு போதுமான முழுப்பலன். முதற்கட்டமான நிலையே உயர்ந்ததானதால், இக்கட்டுரையில் முதற்கட்டத்திற்குத் தன்னை தயார் செய்து கொள்ளும் பலமுறைகளைச் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். எல்லா முறைக்கும் பலன் உண்டு. முறைகள் உயர்ந்தவை. முறைகளைக் கடந்த நிலையும் உண்டு. முடிவாக, பூரணமாக, நெஞ்சத்தில் நிறைவாக இறைவனை யோகத்தில் அடைய உள்ளும் புறமும் பூரிக்கும் வகையில் தீர்மானமாக உள்ளவர்கள் முறையைக் கடந்தவர்கள். அவர்கள் முடிவு, எல்லா முறைகளையும் தாண்டி அவர்களை அழைத்துச் செல்லும். இரவும், பகலும், எந்நேரமும், கனவிலும், நனவிலும், உணர்விலும், செயலிலும், அவனின்றி எதுவுமில்லை என்ற மனப்பான்மையுடையவர்க்கு அன்னையின் அருள் யோக சித்தியாகத் தானே பலிக்கும். நினைவே வழிபாடு, நெஞ்சமே திருக்கோயில், உள்ளதே எல்லாம், உண்மையே நிலையானது, வாழ்வே யோகம், அன்பே முறை, ஆர்வமே சக்தி, அமைதியே முடிவான மோனநிலை என்றுணர்ந்தவர் நிலை யோகம் சித்தித்த நிலை. எந்த முறையும் பயன்படுத்தலாம். எல்லா முறையையும் விலக்கலாம். அது ஜீவனின் சிறப்பைப் பெற்றது.

யோகம் வாழ்க்கையை விடப் பெரியது. இன்றைய உலக வாழ்வில் யோகத்தைவிடப் பெரிய முயற்சியில்லை. இதுவரை யோகத்தை மனிதனில் உயர்ந்த பகுதியான ஆன்மா ஏற்றுக்கொண்டது. ஆன்மிக முயற்சியால் ஆண்டவனை அடைவது யோகமாக இருந்தது. பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய யோகம் இறைவனால் செய்யப்படக் கூடியது. மனிதனால் செய்யப்படுவதிலலை. ஆன்மாவின் அதிகபட்ச முயற்சியான சரணாகதி மட்டுமே பூரண யோகத்தில் மனிதனின் பங்கு. மோட்சத்தையடய ஆன்மா எடுப்பது முயற்சி. வாழ்விலிருந்து விலகும் முயற்சி. அதுவே ஆன்மாவின் ஆரம்ப கட்டம். ஆன்மா தன்னை அகந்தையிலிருந்து விடுவித்து, அதன்பின் சரணாகதியைப் பூர்த்திசெய்து, மனத்துள்ளிருந்தும், பிராணனிலிருந்தும், உடலிலிருந்தும் விழிப்புற்று, (பிரகிருதியை) அவற்றின் செயலை ஈஸ்வரனுக்குச் சரணம் செய்து, அம்ச ஸநாதனமாகி, பூரண யோகத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

எனவே வாழ்வில் மனிதன் எடுக்கும் எந்த முயற்சியையும் விட அதிக முயற்சி தேவை. பணம், பதவி, பெண் இவற்றை நாடுவதில் உள்ள ஆர்வத்தைவிட அதிக ஆர்வம் தேவை. யோகத்தின் முதல் அம்சங்களைச் சார்ந்தது பூரண மௌனம். மேலெழுந்த வாரியாகச் செயல்படும் நாம் விலகி உள்ளே செல்வது, புலன்கள் தானே அவிந்து இழந்து உள்ளே அமைதியுறுவது, பொதுவான சமர்ப்பணம் பூரணமாவது, அளவுகடந்த சக்தி உடலில் ஏற்பட்டு நிலைப்பது போன்ற பெரு நெறிகள்.

தெளிவாக இம்முறையைச் சுட்டிக் காட்ட பலவழிகள் உள. ஒன்று; இதுவரை நம் வாழ்வில் நாம் கண்ட பேரார்வத்தைவிட அதிகமான ஆர்வத்தை, அதன் இலக்கணத்தை வாழ்விலிருந்து ஆன்மிகத்திற்கு மாற்றி, நிலையாகப் பெற முடியுமானால், அவர் யோகத்தைத் துவக்கலாம். வாழ்வில் நாம் கண்ட அதிகபட்ச ஆர்வத்தைவிட அதிகமான ஆர்வத்தைப் பெற்றால் அது பிராணனுடைய முயற்சியாகும், ஆன்மிக முயற்சியாகாது. பிராணனுடைய முயற்சி வெற்றிபெற்றால் பிராணமய புருஷன் விடுதலையடைவான். அதன் மூலம் மோட்சம் அடையமுடியும். ஆன்மிக முயற்சியே சைத்திய புருஷனை வெளிப்படுத்தும். இதைப் பெற முயற்சியைவிட, முயற்சியை சமர்ப்பணம் செய்வதே முக்கியம். முயற்சியை சமர்ப்பணம் செய்வதே ஆர்வத்தின் இலக்கணத்தை வாழ்விலிருந்து, ஆன்மிகத்திற்கு மாற்றுவதாகும்.

இதுவரை நம்வாழ்வில் எடுத்த முயற்சி, ஆர்வத்தைவிட, அதிக முயற்சியும், அதிக ஆர்வத்தையும் பெற்று, அவற்றைச் சமர்ப்பணம் செய்பது பூரண யோக முதற்கட்டமான சைத்திய புருஷனை வெளிப்படுத்த நம்மை தயார் செய்ய உதவும்.

*********



book | by Dr. Radut