Skip to Content

05. தெய்வீக வாழ்வு

5. தெய்வீக வாழ்வு

மனிதனுள் தெய்வம் உறைகிறது. மனிதன் தெய்வத்தைவிட மேம்பட்டவன். உலகம் தெய்வத்தின் சிருஷ்டி. நடப்பதெல்லாம் அவன் செயல். அவன் அன்றி ஓரணுவும் அசையாது. பூமாதேவியே தெய்வத்தின் திருவுருவம். அவனுடலே பூமி என்பதெல்லாம் இந்திய மரபு. நடைமுறையில் மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக இல்லை. துன்பம், வறுமை, நோய், மரணம், மூப்பு நிறைந்தது மனித வாழ்வு. சுயநலத்தால் மனிதன் செயல்படுகிறான். பொறாமையும் அதன் விளைவான போராட்டமும் அவன் வாழ்வை நிரப்பியுள்ளன. இருளின் அம்சங்களை விலக்கி, ஒளியின் அம்சங்களால் மனித வாழ்வை நிரப்பி, இறைவன் வெளிப்படும் நடைமுறையாக உலக வாழ்வை மாற்ற வேண்டும் என்பது பரிபூரண யோகத்தின் இலட்சியம். அந்த மாற்றத்தைக் கொணரும் தத்துவங்கள் எவை? தத்துவங்கள் நடைமுறையாக மாறும் உபாயங்கள் என்ன? அதற்குரிய பூவுலகக் கருவி எது? அம்மாற்றத்தின் பாதையில் உள்ள படிகள் எவை?

மனிதன் ஆதிநாளில் தன்னை உடலாகவே அறிந்தான். நவநாகரிகம் சிறந்த இன்று தன்னை மனம் என அவன் உணருகிறான். உண்மையிலேயே மனிதனின் உள்ளுறை இரகஸ்யம் எது? அடிப்படையில் அவன் யார்? தன்னையறிந்து, அறிந்த உண்மையை தன் வாழ்வில் சித்திக்கப் பெறுவதே வாழ்வின் இலட்சியம்.

சமூகத்திற்காகவே வாழ்நாள் முழுவதும் தன்னை செப்பனிட்டுக் கொண்டவன் வாழ்க்கை சிரமமான ஒரு கட்டத்தையடைந்த நேரத்தில் எந்தச் சமூகத்திற்காக வாழ்ந்தானோ, அது விலகிப் போனதையும், சில சமயம் துரோகம் செய்வதையும் கண்டதுண்டு. அறிவைப் பாராட்டி அதையே பேணி வளர்த்தவனுக்கு அறிவு கைநழுவ விடும் நேரம் உண்டு. சாக்ரடீஸுக்கே கடைசி நேரத்தில் தன் அறிவு கை கொடுக்கவில்லை. எனவே வாழ்வோ, மனமோ மனிதனுடைய அந்தரங்க அடிப்படையில்லை. அவற்றைக் கடந்த நிலையில் உள்ளது சிருஷ்டிக் கர்த்தாவான இறைவன். மனிதனுள் இறைவன் உறைவது உண்மை. அவனைக் கண்டு, அவனை வாழ்வில் வெளிப்படும்படி கொண்டுவருவதே மனித வாழ்வில் அர்த்த புஷ்டியுள்ள இலட்சியமாகும்.

அது நடைபெற அவன் வாழ்வு உயர வேண்டும். வாழ்வின் அடிப்படையான உள்ளுணர்வு உயர வேண்டும். உயர்வு உச்சக்கட்டத்தையடைந்தால் அவ்வுணர்வின் மூலம் மனித வாழ்வில் இறைவன் வெளிப்படுவான்.

தாழ்ந்த வாழ்வு உள்ள இடத்தில் தாழ்ந்த உணர்வும், உயர்ந்த வாழ்வு உள்ள இடத்தில் உயர்ந்த உணர்வும் இருப்பதை நாம் அறிவதால், வாழ்வு மேலும் மேலும் உயர, உணர்வு தொடர்ந்து உயர வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

அடுத்த கட்டத்தில் உணர்வு அதன் இன்றைய உச்ச கட்டத்தையும் தாண்டி உயரவேண்டும் என்றேன். உணர்வு உயர வேண்டுமானால் உணர்ச்சியை செயல்படுத்தும் திறன் உயரவேண்டும். திறனில்லாதவனுடைய நல்லுணர்வு பலன் தராது. நல்லுணர்வுக்குத் திறன் ஏற்பட்டால், அது பொன் மலர் நாற்றமுடைத்து என்கிறார் புலவர். ஒருவனுக்கு கஷ்டம் வந்த காலத்து, அநீதி இழைக்கப்பட்டபொழுது, நல்லுணர்வால் உந்தப்பட்ட மற்றொருவன் அக்கஷ்டத்தை விலக்க முயன்றால், அநீதியை அழிக்க முயன்று வெற்றி பெற்றால் அதை நாம் போற்றுகிறோம். எந்தச் சமுதாயம் தனி மனிதனுக்கேற்பட்ட துன்பத்தைத் துடைக்க முன்வருகிறதோ அதை உயர்ந்த சமுதாயமாகக் கருதுகிறோம். முன்னூறு ஆண்டுகட்குமுன் இருந்த நிலையை இன்றுள்ள சமுதாய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், சமூகமும் அதன் உணர்வும் பல்வேறு காரணங்களால், இன்று தன் உணர்வின் திறனை உயர்த்திக் கொண்டுள்ளது என அறிவோம். பெரியம்மையிலிருந்து இன்று மனிதனைக் காப்பாற்றும் திறன் சமூகத்திற்குண்டு. கொத்தடிமைக்கு விடுதலை கொடுக்கும் திறனும் உண்டு. அதுபோன்று பல திறன்களை இன்று சமூக உணர்வு பெற்றிருக்கிறது. என்றாலும், ஒரே குழந்தையை இழந்த தாயின் சோகத்தை அழிக்கும் திறனோ, மூப்பிலிருந்து விடுதலையளிக்கும் திறனையோ, மரணத்தை அழிக்கும் திறனையோ சமூக நல்லுணர்வு பெறவில்லை. அத்திறனைப் பெறமுடியும். ஆனால் மனத்தாலும், புத்தியாலும், மனித யுக்தியாலும், பொருள் வளத்தாலும், சர்க்கார் சட்டத்தாலும் அதைப் பெற முடியாது.

தன்னை முழுமையாக அறிந்து, தன் சூழ்நிலையை அடக்கியாளும் தன் திறனையுணர்ந்து, ஆனந்த ஊற்றை தன்னுள் பெருக்கி, பிரபஞ்சம் முழுவதும் தனக்குரியது என்று அறிந்து, தன்னையுயர்த்திக் கொண்டு, தன்னுள் உறையும் இறைவனை வெளிப்படுத்தினால் மேற்சொன்ன ஆற்றல் மனிதனுக்குக் கிடைக்கும்.

தன்னை அறிவது என்றால் தன்னை ஜீவாத்மா என்று அறிய வேண்டும். தான் பிரபஞ்சத்தின் ஆத்மா எனவும் உணர வேண்டும். தான் பிரபஞ்சத்தின் ஆத்மா எனவும் உணர வேண்டும். மேலும் தான் பரமாத்மா என்றும் அறிந்தால்தான் தன்னை முழுமையாக உணர்ந்ததாக அர்த்தம்.

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் உலகை நடத்துபவர்கள் என்பதால், உலத்தை இயக்கும் திறன் உடையவர்கள் அவர்கள். திறனுடைய அறிவே அறிவின் இலக்கணத்தைப் பெற்றது. திறனற்ற அறிவை எவரும் பொருட்படுத்தமாட்டார்கள். அதுவும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் அறிந்த அறிவு திறனற்றதாயின் அது பொருத்தமாகாது. திறனற்ற ஆன்மா, ஆன்மா எனப்படாது என்கிறார் பகவான். சிருஷ்டியைப் பூர்த்தி செய்ய நாம் பெற்ற ஆன்மிக அறிவு திறனுடையதாக இருக்க வேண்டும் என்பது அவசியம். திறனே அறிவைப் பூர்த்தி செய்யக் கூடியது.

முழுமையை நாடுபவன் முழு சந்தோஷத்திற்குரியவனாகும். ஆனந்தமே அறிவையும் திறனையும் பூர்த்தி செய்யும். ஆனந்தத்தைப் பெறாத ஜீவன் அரை ஜீவனாகும். முழுமை பெற்றதாகாது.

பிரபஞ்சத்திலுள்ள ஜீவன்கள் அனைத்திலும் உறைவது தானேயாகும் என்ற ஞானம் பெற்றபின் தன்னை பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கும் ஜீவனாக மாற்றவேண்டியது அவசியம். அத்துடன் முழுமையை நாடும் ஜீவன் எதற்கும் கட்டுண்டிருக்க முடியாது என்பதால், காலத்திற்கும் கட்டுப்பட முடியாது. காலத்தைக் கடந்த நிலையையும் எய்த வேண்டும்.

இந்த ஞானமும், ஆனந்தமும் அவற்றைப் பூர்த்தி செய்யும் திறனும் நாம் பெற அகவாழ்வு விரிந்து மலர வேண்டும். இப்புதிய வாழ்வின் அஸ்திவாரத்தை அகவாழ்வில்தான் அமைக்க வேண்டும் என்று உபநிஷதம் கூறுகிறது. ஆன்மிக ஒருமையை உணர்ந்த அகவாழ்வில்தான் மேற்கூரியதை சாதிக்க முடியும்.

தனி மனிதனும், அவனைச் சூழ்ந்துள்ளவையும், அவனுடைய சமுதாயமும் இதே பூரணச் சிறப்பைப் பெற வேண்டியது அவசியம்.

ஒற்றுமை, பரஸ்பர உணர்வு, சுமுகம் ஆகியவை இவ்வுணர்வுக்குரியவை. இது சிறந்த நிலையில் பூவுலக இரகஸ்யங்களில் உயர்ந்த ஒன்றை மனிதன் காண்பான்; “ஜடமும், வாழ்வும் ஆத்ம சக்திக்குட்பட்டவை, உலக சக்தியை ஆன்மிக சக்தி தன்னுள் அடக்கியுள்ளது,” என்ற பேருண்மையை மனிதன் கண்டுகொள்வான்.

இதைப் பெற்றவன் தன் ஆன்மாவின் உண்மையை அறிவான்.
நேரடியாக பிறரை முழுமையாக அறிவான்.
சூட்சும சக்திகளை அவனால் நேரடியாக இயக்க முடியும்.
யோக ஞானத்தைப் பெற்றிருப்பான்.
செயலுக்குரிய சூட்சும ஞானம் இருக்கும்.
செய்யும் காரியத்தில் முழுமையான அறிவும் திறனுடையவனாக இருப்பான்.

பூவுலக வாழ்விலும், மனித சமுதாயத்திலும் இம்மாற்றங்களைக் கொண்டுவர தனி மனிதனே அவசியம். ஆரம்பம் அவனிடத்தில்தான் அமைய வேண்டும். இரகஸ்யம் அவனிடத்தே பொதிந்துள்ளது.

பொருளாதாரக் கண்ணோட்டமோ, விஞ்ஞானக் குறிக்கோளோ நம் இலட்சியத்தை அடைய உதவாது. சமூகத்தைப் பின்னேற்றும் சக்திகள் அவை.

திருவுருமாற்றம் தவிர்க்க முடியாதது. அதற்கு மாற்றில்லை. அதை ஏற்றுக்கொண்டால் இன்றைய பண்புகள் உயர்ந்த உருவத்தில் புதிய சமுதாயத்தில் தோன்றும்.

உன்னோடு வாழ்தல் அரிது என்ற கொடுமையை உடல் இழந்துவிடும். வாழ்க்கையில் பிறந்தவனுக்கு உரியவை என்ற கடுமைகள் அன்று இருக்காது. புதிய வாழ்வு எளிமையாகவோ, வளம் நிறைந்ததாகவோ அடையலாம். இப்படித்தானிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை.

தெய்விக வாழ்வைத் திறந்து வழிவிடும் திருக்கதவு அனந்தத்துடன் நம்மை அழைத்துச் செல்லும். அனைத்து நிகழ்ச்சிகளின் ஆனந்தம் ஆனந்த இரகஸ்யமாகவும், அவற்றின் ரஸமாகவும் வெளிப்படும். அத்தனை செயல்களும் அவ்வாழ்வில் அற்புதச் செயல்களாக மட்டுமேயிருக்கும்.

*********

கட்டுரையிலுள்ள கருத்துகள்.  

  1. தன் உள்ளுறை இரகஸ்த்தை உணர்ந்து சித்தி பெறுவதே மனித வாழ்வின் இலட்சியம்.
  2. மனித சிருஷ்டியின் அடிப்பைட இறைவனே. மனமோ, வாழ்வோ அடிப்படையாகாது.
  3. உள்ளுறை இரகஸ்யத்தை மனிதன் உணர மனமும், வாழ்வும், உணர்வும் உயர வேண்டும். உணர்வு உயர்ந்தால் வாழ்வு உயரும். உணர்வின் திறன் உயர்ந்தால், உணர்வு உயரும்.
  4. உயர்ந்த உணர்வு முழுமை பெற வேண்டும். முழுமையான அறிவும், திறனும், ஆனந்தமும், ஜீவனுமே முழுமையை அளிக்கும்.
  5. முழுமையை அகவாழ்வில் மட்டுமே பெற முடியும். எனவே அகவாழ்வே இலட்சியத்தின் அடிப்படை.
  6. தனி மனிதன் பெற்ற முழுமையை அவன் சூழ்நிலையும், சமுதாயமும் பெற வேண்டும்.
  7. ஆன்மிக ஒருமைப்பாடு, பரஸ்பர உணர்வு, சுமுகம் இம்முழுமைக்குரியவை.
  8. இதன் மூலம் மனிதன் “அனைத்து சக்திகளும் ஆத்மிக சக்திக்குட்பட்டவை” என்ற பேருண்மையை அறிவான்.
  9. இப்புரட்சியின் ஆரம்பம் தனி மனிதனேயாவான்.
  10. பொருளாதாரக் கண்ணோட்டம் இலட்சியத்தையடைய உதவாது.
  11. திருவுருமாற்றமே தவிர்க்கமுடியாத உபாயமாகும்.
  12. தெய்விக வாழ்வில் இன்றைய பண்புகள் உயர்ந்து மீண்டும் வெளிப்படும்.
  13. நம்மைக் கொடுமைப்படுத்தும் வாழ்வும், உடலும், ஒளி நிறைந்தவையாக மாறும்.
  14. தெய்விக வாழ்வு எப்படியுமிருக்கும். எளிமையாகவோ, வளம் நிறைந்ததாகவோ இருக்கலாம்.
  15. தெய்விக வாழ்வு அனந்தத்துள் நம்மை அழைத்துச் செல்லும்.
  16. செயல்களும், நிகழ்ச்சிகளும், ஆன்மிக இரசனை பெற்றும் அனைத்தும் அற்புத நிகழ்ச்சிகளாக மட்டுமே அமையும்.

********



book | by Dr. Radut