Skip to Content

2. அன்பர் அனுபவம் II

14. ஒரு சமயம் அமெரிக்கா, கனடா, ஹாலந்து ஆகிய நாடுகளிலிருந்து பக்தர்கள் வந்திருந்தார்கள். பொதுவாக இவர்கள் வெவ்வேறு மாதங்களில் வருவது வழக்கம். இம்முறை இம்மூவரும் ஒரே சமயத்தில் வந்திருந்தார்கள். மாதம் முதல் தேதியும், ஒவ்வொரு திங்களன்றும் இங்கு (calling) அழைப்புண்டு. இந்த நண்பர்கள் தங்கள் நாட்டில் "அழைப்பை'' மேற்கொண்டதைப் பற்றி விவரமாகச் சொல்லிய பொழுது, அழைப்புக்குரிய நிபந்தனைகளையும், அதன் பல்வேறு முக்கியத் துவங்களையும் விளக்கமாகச் சொன்னேன். கனடாவிலிருந்து ஜான் வந்திருந்தார். அவர் மாலை தியானத்தில் கலந்து கொண்டு பிறகு தம் விடுதிக்குப் போய்விட்டார். அவர் வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. அவர் 15 நாள்கள் தங்குவார். ஊருக்குப் புறப்படுமுன் நான் அவரை ஒருமுறை சந்திப்பேன். மற்றவர்கள் வந்து 15, 20 வருஷங்கள் ஆகின்றன. இவர்கள் தங்கள் நாட்டில் அன்னைக்குரிய சேவையை மேற் கொண்டுள்ளார்கள். என்னுடனேயே இங்கு இத்தனை வருஷங்களாகத் தங்கியிருந்தவர்கள்.

அழைப்பின் சிறப்புகளை மேலும் மேலும் சொல்லும் பொழுது அமெரிக்க நண்பர் மறுநாள் அழைப்பில் கலந்து கொள்ள ஜான் விரும்புவார்

என்றார். நான் அழைப்புக்கு ஒருவரை அனு மதிக்கும் முன் அவருடைய வீட்டில் அழைப்பை மேற்கொண்டு அதை எனக்கு விளக்கமாக எழுதச் சொல்லி, அதன் பிறகே முடிவு செய்வது வழக்கம். ஜான் புதியவர் என்பதால் எனக்குத் தயக்கம். அமெரிக்க நண்பர், ஜானைப் பற்றிச் சொன்னார். அவர் அழைப்பை மேற்கொண்டு கடைப்பிடிக்கும் முறையை விளக்கினார். அதனால் அவரை மறுநாள் அழைப்பில் கலந்து கொள்ள நான் சம்மதித்தேன். நேரம் இரவு 9.30 மணி. ஜான் விடுதிக்குப் போய்விட்டார். அவர் அறையில் ஃபோன் இல்லை. டிரைவர் வீட்டிற்குப் போய் விட்டான். விடுதி சுமார் 2 மைல்கள் தூரத்தில் உள்ளது. அனுப்ப ஆள் இல்லை. மறுநாள் காலையில் அழைப்பு 8 மணிக்குத் தொடங்கும். ஹாலந்து நண்பர் ராபர்ட் தாம் போய் ஆசிரமத்தில் ஜான் தியானத்திலிருக்கிறாரா எனப் பார்த்துச் சொல்லிவிட்டு வருவதாகப் போனார்.

ஜான் ஆசிரமத்தில் இல்லை. ராபர்ட் அவரைத் தேடி விடுதிக்குப் போனார். அவரைச் சந்தித்து மறுநாள் அழைப்புக்கு வரும்படிச் சொன்னார். "நானிருப்பது 15 நாள். அடுத்த அழைப்புக்கு முன் நான் கனடா புறப்பட்டு விடுவேன். நாளை அழைப்பில் கலந்துகொள்ள எனக்கு அளவு கடந்த ஆர்வமுண்டு. ஸான் பிரான்ஸிஸ்கோவிருந்து மாக்பர்லேன் சென்ற மாதம் என்னை ஃபோனில் அழைத்து அவர்

நடத்தும் அழைப்பின்போது, என்னையும் அழைப்பில் உட்காரும்படிக் கேட்டுக் கொண்டார். நான் மாதந்தோறும் அழைப்பை மேற்கொள் கிறேன். இங்கு வந்தபொழுது எனக்கு அழைப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிக அவா. என்னை நீங்கள் அழைக்காதது எனக்கு ஏமாற்றம். உங்கள் வீட்டிலிருந்து நேரே சமாதிக்குப்போய் அன்னையிடம் என் குறையைச் சொல்லிவிட்டு அறைக்கு வந்துவிட்டேன். இரண்டு மணி கழித்து நீங்கள் வந்து என்னை அழைப்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது'' என்று ஜான் பதில் சொன்னார்.

15. மாக்பர்லேன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாயாரும், சிறிய தாயாரும் தினமும் இன்றும் சர்ச் செல்பவர்கள். அதே காரணத்தால் சர்ச் இல்லாத ஊருக்குப் போக மாட்டார்கள். மாக்பர்லேன் கத்தோலிக்கப் பாதிரியாகப் போக வேண்டும் என்பது அவரது குடும்ப விருப்பம். அவர் 1970இல் ஆசிரமம் வந்து இங்கேயே தங்கிவிட்டார். ஒரு சமயம் அவருடைய சிறிய தாயாரிடம் ஃபோனில் பேசும்பொழுது, தம் காருடைய பின்புறக் கண்ணாடியை மாற்ற வேண்டும், அதற்கு அதிகச் செலவாகும். ஓய்வு பெற்ற நிலையில் அது தமக்கு அதிகச் செலவு என்று சிறிய தாயார் சொன்னார். அந்தக் கண்ணாடியை முதல் பொருத்திய ஒர்க்ஷாப்

பில்லுடன் காரைக் கொண்டு போய்விட்டால், தவறு அவர்களுடையது என்பதால், அவர்களே செலவில்லாமல் மாற்றி விடுவார்கள் என்றும், அந்த ரசீதை இந்த 3 வருஷத்திற்குப் பின் தேட முடியவில்லை என்றும் சொன்னார், 70 வயதான பெண்மணி. சமீபத்தில் வீடு மாற்றியவர். பழைய ரசீதை எங்கு போய்த் தேடுவது? அது கிடைத்தால் இப்பொழுது 1000 டாலர் மிச்சம். தேடியும் பார்த்து விட்டார். கிடைக்கவில்லை. ரசீதைக் கண்டுபிடிக்கும் மார்க்கம் மாக்பர்லேனுக்குத் தெரியும். சிறிய தாயார் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் ரசீது கிடைக்கும். ஆழ்ந்து ஊறிய கத்தோலிக்கரிடம் எப்படி அதைச் சொல்ல முடியும்? எந்தத் தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்தாலும், உண்மையான பிரார்த்தனைகளை அன்னை அந்த தெய்வத்தின் மூலம் ஏற்பார் என்பது அவருக்குத் தெரியும். தன் சிறிய தாயாரிடம் அவர் பின் வருமாறு சொன்னார்:

"உங்களுக்கு இயேசுமீது அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறதல்லவா? இயேசுவுக்குப் பிரார்த்தனை செய்தால் ரசீது கிடைக்கும்'' என்றார். இந்த 70 ஆண்டுகளாக அது போன்ற அனுபவம் தமக்கில்லை என்று பதில் வந்தது. "கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், மனத்தைப் புறக்கணித்துச் சில நிமிஷம் இயேசுவுக்குப் பிரார்த்தனை செய்துவிட்டு, ரசீதைத் தேடுங்கள்'' என்று சொல்விட்டுப் போனை வைத்து விட்டு,

ஆபீஸுக்கு வேண்டிய பேப்பர்களை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான மாக்பர்லேன் ஃபோன் மணிச் சத்தம் கேட்டு ஃபோனை எடுத்தார். சிறிய தாயார், சிறு குழந்தை போல் ஃபோனில் ஆர்வமாகக் கண்களில் நீர் ததும்ப, பேச முடியாமல் சந்தோஷத்தில் மூழ்கி, "என் வாழ்நாளில் இல்லாத அனுபவம் இன்று கிடைத்தது. நீ சொன்னதுபோல் பிரார்த்தனை செய்தேன். அளவுகடந்த சந்தோஷம் ஏற்பட்டது. பிரார்த்தனையை முடித்து விட்டு, ரசீதைப் பிறகு தேடலாம் என வேறு வேலைக்குப் போகுமுன் டிராயரை மூடினேன். சரியாக வைக்க முயன்ற பொழுது அதனுள் நான் இத்தனை நாள் தேடிய ரசீது இருந்தது. எனக்கு அளவுகடந்த சந்தோஷம்'' என்று சொன்னார்.

16. "என் தம்பிக்கு மனநிலை சரியில்லாமல் இருந்தது. தங்களுக்கு எழுதியதன் பலன் நல்லபடியாய் முன்போல் ஆகி வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது''.

17. "ஞாயிற்றுக்கிழமை தியான மையம் ஆரம்பித்துள் ளேன்... அன்று முழுவதும் வீடு சந்தோஷத்தால் நிரம்பியிருந்ததைப் பார்க்கும்பொழுது தினமும் தியானம் நடத்த முடியாதா என்று நினைத்தேன்''.

18. "ஒரு பஸ் டிரைவருக்குக் கான்சர் முற்றிவிட்டது. டாக்டர் ஆபரேஷன் செய்தார். கான்சர், அளவுகடந்து முற்றிவிட்டதால், மீண்டும் அதை மூடிவிட்டார். வயிற்றை மூடிவிட்ட டாக்டரும், மற்ற டாக்டர்களும் டிரைவர் ஒரு வாரத்திற்குமேல் உயிரோடு இருக்கமாட்டார் என்றார்கள். ஆஸ்பத்திரியின் தலைவர் என்ற முறையில் என் தாயார் டிரைவரைப் பார்க்கப் போனார். அவர் ஒரு blessing packetஐ டிரைவரிடம் கொடுத்தார். இது நடந்து 5 மாதம் ஆகிறது. டிரைவர் குணமாகி வேலையில் சேர்ந்து விட்டார். வலி யில்லை''.

19. "சென்ற வாரம் என் நண்பரின் மகன் நோய் வாய்ப்பட்டிருந்தான். தாயார் குழந்தையுடன் தனியாக இருந்தாள். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. காரணம் தெரிய வில்லை. நான் குழந்தையைப் பார்க்கப் போனேன். அழுகை நிற்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தோம். அன்னை பிரசாதத்தைக் குழந்தை தலையணை யின் கீழ் வைத்தேன். ஆச்சரியமாகக் குழந்தை நிம்மதியாகத் தூங்கிவிட்டது''.

20. "மதர் கிருபையால் என் கணவருக்கு மதுரைலியிருந்து நானிருக்கும் ஊரான பெல்லாரிக்கு மாற்றல் கிடைத்துள்ளது''.

21. "உங்கள் கடிதம் கிடைத்த இருபது நாள்களில் என் சகோதரிக்கு ஒரு வரன் நிச்சயமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது''.

22. "மீண்டும் என் பெண்ணுக்கு மூலம் ஆபரேஷன் செய்ய 18 ஆம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதகருக்கு ஆபரேஷன் இல்லாமல் மூலம் குணமானதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நமக்கும் அதேபோலாகுமா என்ற ஐயத்துடன் பெண்ணை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பினோம். Blessing packetஐப் பெண்மீது தடவி அனுப்பினோம். சிறிது நேரத்தில் டாக்டர் வெளியே வந்து ஆபரேஷன் தேவையில்லை என்றார்''.

******



book | by Dr. Radut