Skip to Content

4. தவப்பயன்

சித்தியடைந்த புருஷர்களைப் போய் தரிசனம் செய்வது புண்ணியம் என்பது மரபு. பெரிய ஸ்தலங் களை நாடி தெய்வ தரிசனம் செய்வதை யாத்திரை, தீர்த்த யாத்திரை என்கிறோம்.

அவதாரப் புருஷர்கள் நம்மை நாடி வருவதை விளக்க ஒரு சொல் இல்லை. ஏனெனில் அது இதுவரை வழக்கில் இல்லை. வழக்கிலில்லாத கருத்திற்குச் சொல் ஏற்படாது.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஏன் புதுவை வந்து தங்கினார் என்பதற்கு அவர் கொடுத்த பதில் சுருக்கமானது. "உள்ளிருந்து குரல் எழுந்து புதுவைக்குப் போ என்றது, வந்தேன்'' என்றார். பகவான் இங்கிருப்பதால் அன்னை அவரை நாடி வந்தார். இரு அவதாரங்கள் ஒன்றாக இதுவரை புவியில் தோன்றியதில்லை. இவர்கள் ஒன்றாகத் தோன்றி னார்கள். இணைந்து செயல்பட்டார்கள். இது ஆன்மிகச் சரித்திரத்திற்குப் புதிய மரபை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாடு செய்த தவப்பயனாக அவதார புருஷர்கள் அதை நாடி வந்தார்கள் என்ற கருத்தை நான் பல நாள்களாகச் சிந்தித்து, என் முடிவை ஒரு கருத்தாக இங்கு எழுதுகிறேன்.

உலகத்திற்கு இந்தியா தலைமை வகிக்க வேண்டும். அத்தலைமையை ஏற்க 300, 400 பிரிவாக இருந்த நாடு ஒன்றுபட வேண்டும், இந்தியா உலகத்தின் குருவாகும்

தகுதியுள்ளது' என்றெல்லாம் பகவான் எழுதினார். பல நூறு பிரிவுகளாக இருந்த நாட்டை அந்நிய ஆட்சி ஒன்றாக உருவாக்கியது. சுதந்திரம் வரும் நேரத்தில் அது இரு துண்டுகளாகியது. இன்று மூன்று துண்டுகளாக இருக்கிறது.

"உலகத்தில் ஆன்மிகம் அதிக அளவு வளர்ந்த நாடு இந்தியா. இன்றும் முக்கால் பங்கு மக்கள் அந்த ஆன்மிகப் பரம்பரையை அழியாமல் காத்து வருகிறார்கள்'' என்றவர், ஏன் தமிழ் நாட்டைத் தேடி வந்தார்? பாரதியார் ஸ்ரீ அரவிந்தரை ஆப்பிரிக்கா வுக்குப் போகலாம் அங்கேயே தங்கலாம் என ஆர்வமாக அழைத்தபொழுது ஸ்ரீ அரவிந்தர், "பாரதி! யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் போங்கள். நான் புதுவையை விட்டு அசையப் போவதில்லை'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

கடலால் சூழப்பட்டதாலும், அந்நிய ஆக்கிரமிப்பு அடிக்கடி ஏற்படும் வட மேற்குப் பகுதியிலிருந்து தொலை தூரம் தள்ளியிருப்பதாலும், தமிழ் நாட்டு வாழ்வு வட இந்திய மக்கள் வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, அதிக அமைதி தவழும் வாழ்வாகக் காணப்படுகிறது.

அமைதியான சூழல் அறிவு, இலக்கியம், தத்துவம், மதக் கோட்பாடுகள் ஏற்பட வசதியுண்டு. தென்னிந்தியப் பகுதிகளான ஆந்திரம், மலையாளம், கன்னடம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலக்கியம் பெருவாரியாக ஏற்பட்டது நாம் அறிந்ததே. அத்துடன் தத்துவ விசாரம்

இப் பகுதிகளில் ஏராளமாக உற்பத்தியாயிற்று. அத்துவைதம், துவைதம், விசிஷ்டாத்துவைதம் ஆகிய கோட்பாடுகள் இன்று இந்தியாவின் தலையாய மதக் கோட்பாடுகளாக விளங்குகின்றன. இதன் கர்த்தாக்களான சங்கரர், மத்துவர், இராமானுஜர் மலையாளத்திலும், கன்னடத்திலும், தமிழ்நாட்டிலும் பிறந்தவர்கள்.

வங்காளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய வற்றைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் பேசும்பொழுது, வங்காளி உணர்ச்சி வசப்பட்டவன், நாட்டுக்குத் தலைமை தாங்கக்கூடியவன், உலகத்திற்கே தலைமை வகிக்கக் கூடியவன். மராட்டியனும், தமிழனும் நிதானமாக உட்கார்ந்து தத்துவ விசாரம் செய்பவர்கள் என்று கூறுகிறார்.

பகவானுடைய யோகத்தில் அடிப்படையானது சைத்திய புருஷன், அவனுடைய பக்தி. ஆழ்வார்களும், நாயன்மார்களும் சைத்திய புருஷனால் ஆளப்பட்ட பக்தர்கள் எனப் பகவான் சொல்கிறார். அவர்களும், அவர்களுக்குப் பின் வந்த பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க சுவாமி, ரமண மகரிஷி போன்றவர்களும் சுமார் 100 பேர் சித்திபெற்ற புருஷர்களாக, தமிழ் நாட்டை அலங்கரிக்கின்றனர். இவர்களுடைய யோகத்திற்கு முக்கியமாக இருந்தது இவர்களுடைய சைத்திய புருஷன் என்கிறார்.

அமைதியுள்ள இடத்தில் அறிவு வளர வசதியுண்டு. அறிவு உள்ள இடத்தில் குதர்க்கம் ஏற்படுகிறது. தர்க்கம் அறிவின் சிகரம். அதன் விகல்பம் குதர்க்கம். இந்தியா

வின் பல பகுதிகளிலும் பிரயாணம் செய்தவர்கள், சென்னையை விட்டு வடக்கே போனபின் குதர்க்கமான சொல் காதில் விழுவது குறைவு என்று அறிவார்கள். நக்கீரர் நெற்றிக் கண்ணை ஏற்க மறுத்தது குதர்க்கத்தின் உச்சக்கட்டம். குதர்க்கம் காணப்படுவது, அறிவு அதிகமாக இருப்பதற்கு ஓர் அறிகுறி. உயர்ந்த அறிவும், சிறந்த பக்தியும் சேர்ந்து உற்பத்தியாவது சைத்திய புருஷன்.

சைத்திய புருஷன் வளர்ந்த மண் என்பதால் பூரண யோகத்தை ஏற்கும் வாய்ப்புடையது என்று சொல்லலாம். அதனால் பகவான் தமிழ் நாட்டை நாடிவந்தார் எனவும் நினைக்கலாம். சமீபகாலம்வரை பகவானை இந்தியாவின் மற்ற பகுதிகள் அறியும் அளவு தமிழ்நாடு அறியவில்லை. இப்பொழுது அறிய முற்பட்டுள்ளது.

ஆன்மிகத்திற்குரிய குணம் அடக்கம், பூரண யோகத்தை ஏற்றுப் பயனடைய அடக்கம் இன்றியமை யாதது. அடக்கத்தின் எதிரி குதர்க்கம். எதிரான குணமுள்ளவர் மாற ஆரம்பித்தால், அதிக அடக்கமுள்ளவராகக் காணப்படுவார். தமிழ்நாடு தன் தவப்பயனாக பகவானைப் பெற்றது. தனக்கே உரிய பாணியை மாற்றி அடக்கத்தை உச்சகட்டத்தில் பெற்றால், பகவானின் அருளை முழுவதும் பெறும் வாய்ப்புள்ளது. இது தமிழ்நாட்டிற்கு எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய அரிய வாய்ப்பு என்பது என் அபிப்பிராயம்.

******



book | by Dr. Radut