Skip to Content

1. மனம் மாற வேண்டும்

அன்னைக்கு வேண்டிக் கொண்டால் பலிக்க வில்லை என்பதில்லை. பெரும்பாலான பிரார்த் தனைகள் உடனேயும், மற்றவை காலம் தாழ்ந்தும் நிச்சயமாகப் பலிப்பதுண்டு. மனத்தின் நிலையும், பிரார்த்தனையும் தொடர்புள்ளவை. சில சமயங்களில் மனம் அலை பாய்வதுண்டு. அளவு கடந்தும் அலை பாய்வதுண்டு. அந்தச் சமயங்களில் எந்தக் காரியமும் கூடி வாராது. ஒரு சில சமயங்களில் மனம் சலனமற்றிருக்கும். அப்பொழுது செய்யும் காரியங்கள் அனைத்தும் கூடிவரும். பழைய பாக்கியான காரியங்களும் எதிர்பாராமல் பூர்த்தியாகும். இதனால் மனத்திற்கும், செயலுக்கும் உள்ள தொடர்பைக் காண்கிறோம்.

அன்னையிடம் பிரார்த்தனை செய்யும்பொழுது காரியம் பூர்த்தியாவது அன்னையை மட்டும் பொருத்தது என்ற சமயங்களுண்டு. மற்ற சந்தர்ப்பங்களையும் பொருத்தது என்ற நிலையும் உண்டு. மனத்தைப் பொருத்தது என்பதும் உண்டு. இவற்றுள் மனநிலையைப் பற்றிய கட்டுரை இது.

பிராமிசரி நோட் மீது பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொடுக்க கோர்ட்டிற்கு உரிமையுண்டு என்பது உண்மையானாலும், எழுதிய 3 வருஷங்களுக்குள் கோர்ட்டிற்குப் போக வேண்டும். சட்டம் சாதகமாக இருந்தாலும், அதற்குரிய (rule) முறையையும் பொருத்தது

பலன் என்று தெரிகிறது. இதுவரை தீராதது, உலகில் இதற்கெல்லாம் தீர்வு இல்லை என்ற பிரச்னைகளுக்கு அன்னை தீர்வு அளிக்கின்றார். என்றாலும், அதைப் பெற மற்ற சந்தர்ப்பங்களும், நம் மனநிலையும், சிறு சிறு காரியங்களில் நம் மனப் போக்கும் பலனைப் பெற ஒத்துழைக்க வேண்டும். இதுவே முழு உண்மை என்றாலும், பக்தர்களுக்கு மாறான அனுபவமும் உண்டு. எனக்கு இனி வழியேயில்லை என முடிவு செய்து என் பிரச்னையை மறந்து 5 வருஷங்களான பிறகு அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஆசிரமம் சென்று திரும்பும்போது, புதிய நிலை உருவாகி, என் தீராத பிரச்னை தானே தீர்ந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. நானே எதுவும் செய்யவில்லையே என்பவரும் உண்டு. இனி வழியேயில்லை என்று நாம் கைவிட்ட விஷயங்களை நாம் மறந்தது போல், உலகமும் மறந்திருக்கும். அன்னையை அழைத்தவுடன், அவர் மின்னல் போல் செயல்படும்பொழுது நம் மனம் குறுக்கே நிற்காது, எந்தச் சந்தர்ப்பமும் நம்மை நினைக்காததால் அன்னைக்குத் தடையாக இருக்காது. அதனால் விஷயம் கூடிவரும். நாம் நாடிச் செல்லும் விஷயங்களை மனம் இதுபோல் மறந்திருக்காது. மற்ற சந்தர்ப்பங்கள் தடை ஏற்படுத்த முனைந்திருக்கும். அதனால்தான் அன்னையின் சக்திக்குத் தடை ஏற்படுகிறது. மனத்தால் ஏற்படும் தடையைப் பற்றிய கட்டுரை இது. மனம் நெகிழ்ந்த நிலையில் பக்தர்கள் இருப்பதுண்டு. அப்படியிருப்பதை ஒருவர் வர்ணித்திருப்பதைக் கீழே எழுதுகிறேன்.

"மனம் மகிழ்வோடு இருக்கிறது. அவ்வப்போது அன்னை மணம் கமழ்கிறது. மலர் பலவகைகளும் நிறையக் கிடைக்கின்றன. எதிரே வருபவர்கள் இனிமை யாகவும், நல்ல வார்த்தைகளையும் கூறுகின்றனர். அதிகாரிகளும் மேல் நிலையில் உள்ளவர்களும் அன்பைச் சொரிகின்றனர். முன் எப்பொழுதும் காணா அமைதி பரிமளிக்கின்றது. அன்னையை அழைத்துக் கொண்டேயிருக்கின்றேன். தியானத்தைவிட, அழைப்பு இனிமையாகவும், இயல்பாகவும் உள்ளது. அன்னை அவர்கள் priority basisஇல் என் குறைகளைத் தீர்த்து வருகிறார்''.

நம் பிரார்த்தனை பூர்த்தியாக நம் மனத்தின் அபிப்பிராயங்கள் தடைகளாக இருப்பதுண்டு. கணவனை அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் பழக்கமில்லாத மனைவி. அவராகக் கொண்டுவரும் நகை, புடவைகளை மட்டும் பெற்றுக் கொள்ளும் பழக்கம் உடையவர். ஆசையில்லை என்பதில்லை. ஆனால் கேட்டுப் பெறும் குணம் இல்லாதவர். வீட்டில் வசதி சற்று அதிகமாகும் நிலை. கைவளையல் உடைந்து போனதை ரிப்பேர் செய்ய வேண்டும். பழைய புடவைகள் எடுத்து நாளானதால், புதுத்துணி எடுக்க வேண்டும். பெண்ணின் தாயார், மற்ற உறவினர்கள் வரும்பொழுது அவர் உள்ள நிலையைக் கண்டு, "ஏன் இப்படியிருக்கவேண்டும்? உனக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கிக் கொள்வதில் என்ன தவறு?'' என்று சொல்லும்பொழுது அவர்கள் சொல்வது சரி என அவருக்குப்பட்டது. ஆனால் நீண்ட நாளைய நல்ல

குணத்தை விட மனமில்லை. தேவையைப் பூர்த்தி செய்யும் ஆசையும் அடங்கவில்லை. மனம் போராடியது. கேட்டால், கணவர் உடனே வாங்கிக் கொடுத்து விடுவார். பிரச்னையேயில்லை. கேட்பது தவறில்லை. அன்னை சட்டப்படி தேவையைக் கேட்பது சரி. நானும் கேட்கவில்லை. கணவர் மனத்தில் இத் தேவைகள் படவில்லை. மனத்தோடு போராடியவருக்கு ஒரு கேள்வி எழுந்தது. பிரச்னை என்ன? புடைவையா, வளையலா? அல்லது கேட்கலாமா, கூடாதா என்பதா? இதற்கு அன்னை முறை என்ன? இந்த நிலையில் கேட்பது சரி என்பது அன்னை முறையானாலும், அதைவிட உயர்ந்த ஒரு முறையையும் அன்னை சொல்லியிருக்கிறார் அன்றோ? நான் கேட்காமலிருந்தாலும், மனம் ஆசைப்படுகிறதன்றோ? ஏன் அந்த ஆசையை அழிக்க முற்படக்கூடாது என்று அவருக்குத் தோன்றியது. அதை மேற்கொண்டார். அந்தப் போராட்டம் மனத்தில் பல ஆயிரம் தவிப்புகளை ஒன்றரை நாளாக ஏற்படுத்தியதை உணர்ந்தவரே எழுதினால் அது உலகப் பேரிலக்கியத்தில் இடம்பெறும். முடிவாக ஆசை அடங்கியது. அன்று மாலை கணவர் மூன்று புடவைகளை எடுத்து வந்தார். உன் வளையல்களைக் கொடு மாற்றிக் கொண்டு வருகிறேன் என்றார். மனம் அடங்கியவுடன் பிரச்னை தீர்ந்தது அவருக்குப் புதியதில்லை என்றாலும், வியப்பைக் கொடுத்தது. புதுவீடு குடிபோனபொழுது வீட்டுக்காரர் ஓர் அலமாரி செய்து தருவதாகச் சொன்னார். அது வரும்வரை எல்லாப் பொருள்களையும் தரையில்

வைத்திருந்தார் பக்தர். 5 மாத வாடகையை அட்வான்ஸாகப் பெற்றுக் கொண்டவர் மாதங்கள் கடந்தும் அலமாரி செய்து தரவில்லை. அடுத்தவர் ஒருவரிடம், தாம் அலமாரி செய்யப் போவதில்லை என்று அறிவித்ததைக் கேட்டுக் குடியிருக்கும் பக்தருக்கு எரிச்சல் வந்தது. சரி, அலமாரி வந்தால்தான், இந்த மாத வாடகை கொடுப்பது என்று முடிவு செய்தார். தொடர்ந்து செய்திகள் வந்தபடி இருந்தன. கொஞ்சம் சாமான்கள்தாமே, தரையில் இருந்தால் என்ன என்று ஒரு செய்தி. இந்த மாதம் வேறு செலவு இருக்கிறது என்று மற்றொரு செய்தி. அலமாரி கொடுப்பது எங்கள் இஷ்டம். நிர்ப்பந்தமில்லை என்று மற்றொரு செய்தி. பக்தர், சரி செய்திகள் வரட்டும், வாடகை கொடுத்தால்தானே, என்ன செய்வார் பார்க்கலாம் என்று தீவிரமாக முடிவு செய்தார். அதன்பின் யோசனை பிறந்தது. வாடகையை நிறுத்திக் காரியத்தைச் சாதித்தால், எனக்குப் பிடிப்பில் நம்பிக்கையிருக்கிறது. அன்னைமீது நம்பிக்கையில்லை என்றாகிறது அன்றோ? என்ற நினைவு வந்தது. தேதி வந்தவுடன் வாடகையைக் கொடுக்க முடிவு செய்தார். நம்பிக்கையை அன்னைமீது வைத்தார். வாடகையைக் கொடுத்தார். அடுத்த நாள் அலமாரி வந்திறங்கியபோது அவருக்கு ஏற்பட்ட ஆச்சரியம் பெரியது.

பாத்ரூமில் தண்ணீர் தேங்கியுள்ளது என்று வீட்டுக்காரரிடம் சொன்னால் சில நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் அதுவரை எதிர் வீட்டில் போய் குளித்துக் கொள்ளுங்கள். பிறகு ரிப்பேர் செய்கிறேன்'

என்ற பதில் முனிவருக்கும் கோபத்தை ஏற்படுத்தும். வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, கோபம் வரக் கூடாது என்று பிரார்த்தனை செய்துவிட்டு ஆபீஸுக்குப் போய் திரும்பி வந்தால் ஆள்கள் பாத்ரூம் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.

அன்னைக்குள்ள முறைகளைத் தவறாமல் பின் பற்றினால் பிரார்த்தனை பலிப்பதில் தாமதமிருக்காது. அன்னையின் சக்தி பலிப்பதற்கு நம் மனமும் அவர்கள் முறையை ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.

*******



book | by Dr. Radut