Skip to Content

5. பேரின்பம்

கலெக்டர் அதிகாரத்தைக் கண்டு வியந்து, தமக்கு அந்த அதிகாரம் வேண்டும் என ஆசைப்படுபவர், கலெக்டர் எழுந்து போனபின் அவர் ஆபீசில் நுழைந்து, அவருடைய நாற்காலியில் உட்கார்ந்து தமக்கு அதிகாரம் வந்து விட்டதாக நினைத்தால், நமக்கு அது சிறுபிள்ளைத்தனமான செயலாகத் தெரிகிறது. ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவி, பேராசிரியர்களை நியமித்து, தரமான மாணவர்களைச் சேர்த்து, உலக அறிவைச் சுருக்கமாக 2 ஆண்டு பாடமாக மாற்றி, அதை மாணவர்களுக்குப் போதித்து மாணவர்களை மணியாக மாற்றியதற்கு அடையாளமாக பல்கலைக்கழகம் பட்டம் வழங்கினால், அறிவு பட்டத்திலிருக்கிறது என்று கருதி, தரமில்லாத மாணவன் முறையில்லாத வழியில் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, பாடத்தை மனதில் வாங்கிக் கொள்ளாமல், வாங்கிக் கொண்டு மணியாக மாறாமல், மண்ணாகவே இருக்கும் நிலையில் எப்படியாவது பட்டம் என்று பெற்றால் போதும் என்று நினைப்பது நமக்குச் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்ற வில்லை. இது சகஜமாகிவிட்டது.

இறைவன் ஆனந்தமயமானவன். உலகிலுள்ள ஜடப் பொருள்கள் இறைவனின் வடிவம். மனிதன் என்பவன் ஆத்மா. மனிதனுள் உள்ள ஆன்மா, ஜடப்பொருளை இறைவனின் திருவுருவமாகக் காணமுடிந்தால், அதனுள்ளிருந்து ஆனந்தம் பிறக்கும் என இறைவன்

முயலும் பொழுது, மனிதன் அப்பொருளை, பட்டத்தை நாடுவதைப் போல் நாடி, அங்கு ஆனந்தத்தைக் காணாது, அதற்கெதிரான துன்பத்தைக் காண்கிறான் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர். கலெக்டர் நாற்காலிக்கு அதிகாரமில்லை. எப்படியாவது பெற்ற பட்டம் வேலை வாங்கித் தாராது, வந்தாலும் போய் விடும். ஜீவனில்லாமல் தொழுதால் விக்ரஹம் வெறும் கல்லாகி விடும். மனிதனுக்கு ஏற்படும் துன்பத்திற்கு இதுவே காரணம். உள்ளுறைச் சிறப்பை விலக்கி, வெளித்தோற்றத்தை நாடுவதால் நாம் துன்பத்திற்கு ஆளாகிறோம். உண்மையான சிறப்பை நாடினால் மேல் உலகத்தில் பெறும் பேரின்பம், சிற்றின்பத்திற்கே உரிய பூவுலக வாழ்வில் கிடைக்கும் என்கிறார் பகவான்.

சித்த தத்துவத்தை எளிய பாஷையில் எப்படிச் சொல்வது? மனிதன் வசதியை நாடி, அதன் சின்னமான பணத்தைத் தேடுகிறான். அந்தஸ்தை நாடி, அந்தஸ்துள்ளவர்கள் வீடுகளில் உள்ள பொருள்களைத் தம் வீட்டில் வாங்கி வைக்கின்றனர். படிப்பின் பெருமையை அறிந்து, அதன் அடையாளமான பட்டத்தைப் பெற முயன்று பெறுகிறான். மௌனத்தை அடைந்த முனிவர் பேசுவதில்லை என்பதால், நாமும் பேசாமலிருந்தால் முனிவராகலாம் என நினைக் கின்றான். கூட்டுக் குடும்பமாக இருந்தால் அன்பு, பண்பு, தெம்பு, சிறப்பு வரும் என அறிந்து, அன்பில்லாத, பண்பில்லாத உறவினரைச் சேர்த்துப் பிடித்து, கூட்டமாக வைத்து, அதைக் குடும்பம் எனக் கருதி அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கின்றான்.

ஜாதிக்கு உயர்வு ஒரு காலத்தில் இருந்ததால், உயர்வில்லாதவன் தான் பிறந்த உயர்ந்த ஜாதியை வலியப் பற்றிக் கொண்டு அதன் பெருமையை அவனே போற்றிக் கொண்டிருக்கிறான். சாஸ்திரங்களைப் பயின்று ஞானம் அடைந்தவர்களைக் கண்டு, அதற்குரிய பக்குவமில்லாதவன் சாஸ்திரங்களை மனப்பாடம் செய்தால் ஞானம் வரும் என நினைக்கிறான். பக்தியுள்ளவன் தினமும் பூஜை செய்வதைக் கண்டு, தினமும் பூஜை செய்தால் பக்திவரும் என நினைத்து பூஜையை மேற்கொண்டு வருவது எரிச்சல், ஏமாற்றம் என்று காண்கிறான். அன்பை வெளிப்படுத்தும் வாயிலாகக் குழந்தைகட்கும், மற்றவர்கட்கும் பரிசு கொடுப்பதைக் கண்டு, பரிசே அன்பு என நினைத்து பரிசு கொடுப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டு முடிவில் அன்பை எதிர்பார்க்கும்பொழுது, கிடைப்பது அன்பில்லை என்று தெரிகிறது. பரிசு பெற்றவர்கள் மேலும் பரிசை எதிர்பார்க்கிறார்கள், கொடுக்கா விட்டால் கடிந்து கொள்கிறார்கள் என்று தெரிகிறது.

மனிதன் தன் வாழ்வில் சந்தோஷத்தை எதிர்பார்க் கிறான். வாழ்வின் முடிவில் சந்தோஷத்தை எதிர்பார்க்க முடியாது, இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறான். வசதியை அனைவரும் விரும்பு கின்றனர். சிலருக்குக் கிடைக்கிறது. பலருக்கு முயற்சியோடு முடிவடைகிறது. பெரும்பாலோர்க்கு ஏமாற்றம் கிடைக்கிறது. நிம்மதியை வேண்டாதவர் இலர். கிடைப்பது அபூர்வம் என்ற ஞானம் கிட்டுகிறது. விஸ்வாசத்தைப் போற்றி விரும்பாதவர் இலர். ஒரு

சமயம் கிடைக்கிறது. ஒரு சிலரிடம் கிடைக்கிறது. சந்தோஷம், வசதி, அன்பு, பண்பு, நட்பு, விஸ்வாசம், நிம்மதி போன்றவை மனித வாழ்வைப் புனித வாழ்வாக்கும் அம்சங்கள்.

இளமையில் நம்மை மறந்திருக்கிறோம். வாலிப வளமை நிறைந்துள்ள பொழுது கவலை தெரிவதில்லை. சொந்த வீட்டிலிருக்கும்வரை விஸ்வாசம் உயர்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. திருமண மானபின், வெளியூர் போனபின் மாற்றாருடன் பழகும் பொழுது விஸ்வாசத்தின் அருமை தெரிகிறது. இளமை, வாழ்நாள் முழுதும் நீடிக்குமா? தாய் வீடும், அதன் இனிமையும், மாமியார் வீட்டில் இருக்குமா? வாழ்வின் ஆரம்பகால நிறைவு, பிற்காலத்தில் இருக்குமா என்றால் முழு அனுபவம் உள்ளவர்கள் "அதெல்லாம் எதிர்பார்த்தால் முடியாது. இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். போகிற கதியில் பேரின்பம் நாட வேண்டும்'' என்பார்கள். இதுவே வயது, அனுபவம், முதுமை நமக்களிக்கும் அறிவுரை.

வாழ்வு என்று நாம் அறிந்ததில் வளமைக்குப் பருவ முண்டு, வசதிக்கு அளவுண்டு, நிம்மதிக்கு நிபந்தனை உண்டு.

வரையறை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் இளமையின் வளமும், அளவில்லாத வசதியை அனைவரும் பெறும் நிலையும், நிபந்தனையற்ற நிறைவான நிம்மதியை எல்லாரும், எக்காலத்திலும் பெறலாம் என்றால், அது அன்னையின் கூற்று என்றாலும், மனம் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது.

தயக்கம் இயற்கை. இதுவரை எத்தனைப் பேருக்குக் கிடைத்திருக்கிறது? அன்னையை வணங்குபவர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்று நினைக்கி றோம்.

பட்டத்தின்மீது ஆர்வம் ஏற்பட்ட பின், பட்டத்தை நாடுகிறோம். வேலைக்காகப் பட்டத்தை நாடுகிறோம் என்று நினைத்தால், பட்டம் பெற்றவர்க்கெல்லாம் வேலை கிடைத்திருக்கிறதா என்ற கேள்வியை நாம் கேட்பதில்லை. ஏனெனில் பட்டமில்லாமல் வேலை கிடைக்காது என்று தெரியும். அத்துடன் நமக்குப் பட்டத்தின் உயர்வு தெரிந்து விட்டது என்பதால், பட்டத்தை நிச்சயமாக நாடுகிறோம்.

இதுவரை அன்னையை நாடியவர்களுக்கெல்லாம் இவை கிடைத்திருப்பதை, கிடைத்துள்ள அளவை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இரண்டாவதாக, எவரும் பெறவில்லை என்று வைத்துக் கொண்டாலும், பெறமுடியும் என்றால், ஏன் பெற முயலக் கூடாது என்று நினைப்பது நல்லது. அன்னை சொல்வதை, சரியாகப் புரிந்து முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வளமும், வசதியும், இளமையும், நிம்மதியும் எல்லா அளவுகளிலும் நிச்சயமாகக் கிடைக்கும் என்றாலும், அதை நான் இக் கட்டுரையில் வலியுறுத்திச் சொல்லவில்லை. அதிலிருந்து கீழ்நோக்கி வந்தால் இன்று நாமிருக்கும் நிலைவரை 10 நிலைகள் இருக்கின்றன. நாம் இன்றுள்ள நிலையிலி ருந்து அடுத்த நிலைக்கு நிச்சயமாகப் போகலாம். அதிக முயற்சியுள்ளவர்கள், தமது முயற்சிக்கேற்றவாறு

முன்னேறலாம். அதைப் பெற முடியும், பெற வேண்டும். அது இன்று வாழ்வு நமக்கு அளிக்க முடியாதது. அன்னை அளிப்பது என்று விளக்குவதே என் நோக்கம். வாழ்வின் நிலைகள் சுமார் 100 ஆனாலும் ஒரு 10 நிலைகளை உதாரணமாக எழுதுகிறேன்.

  1. இரண்டாயிரம் ரூபாய் வருமானமுள்ள 8 பேருடைய சிறிய சர்க்கார் ஆபீசர் குடும்பம்.
  2. 20,000 ரூபாய் வருமானமுள்ள 4 பேருடைய வியாபாரியின் குடும்பம்.
  3. 10,000 ரூபாய் சம்பாதிக்கும் 4 பேருடைய கம்பெனி ஆபீசர் குடும்பம்.
  4. சிறிய தொழில் அதிபர்.
  5. உயர் சர்க்கார் அதிகாரி.
  6. சற்றுப் பெரிய தொழில் அதிபர்.
  7. பெரிய அந்தஸ்துள்ள பெரிய மனிதர்.
  8. செல்வாக்கில்லாத கோடீஸ்வரன்.
  9. பெருஞ்செல்வமில்லாமல் கோடீஸ்வரன் செல்வாக்கையுடையவர்.
  10. செல்வாக்குள்ள கோடீஸ்வரரான பெரிய தொழில் அதிபர்.

இவற்றுள் எந்த நிலையிலிருந்தும் அடுத்த நிலைக்குப் போக மனிதன் பிரியப்படுவான். நடைமுறையில் அது யாரோ ஒருவருக்குத்தான் கிடைக்கும். கீழ்க்காணும் முறையில் அன்னையை

ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் அது கிடைக்கும். அதன் தத்துவம். தோற்றத்தைப் புறக்கணித்து ஜீவனை நாடுவது நல்லது.

தோற்றம்

ஜீவன்

பூஜை

பக்தி

பட்டம்

படிப்பு, அறிவு

கூட்டம்

குடும்பம்

சாமர்த்தியம்

சாதுரியம்

அறிவு

ஞானம்

ஜாதி

உயர்வு

பரிசு

பிரியம்

பேசாமலிருப்பது

மௌனம்

நாற்காலி

அதிகாரம்

பகட்டு

பண்பு

நடிப்பு

உண்மை

நெருங்கிய உறவு

விஸ்வாசம்

 

அன்றாட வாழ்வில் உண்மையை அதிகமாக நாடும் பொழுது நாம் தோற்றத்தைவிட்டு ஜீவனை நாடுகிறோம். இதில் ஈடுபாட்டுடன் முழுமையைத் தேடும் அன்னை பக்தர்களுக்கு அகவாழ்வின் நெகிழ்ச்சியிலும், புறவாழ்வின் பொலிவிலும் தொடர்ந்த உயர்வுண்டு.

******



book | by Dr. Radut