Skip to Content

01. அன்னையின் அருள்

 

ஸ்ரீ அரவிந்த அவதாரத்திற்குரிய சிறப்புகள் அநேகம். பரம்பொருளை ஸ்ரீ அரவிந்தர் கேட்ட வரம் அவற்றுள் ஒன்று. புவியில், ஜடமான இப்பூவுலகத்தில், பரம்பொருள் வந்து இருந்து அனுக்கிரஹம் செய்ய வேண்டும் என்ற வரத்தை பகவான் பரம்பொருளிடம் கேட்டார். பரம்பொருள் தம் அருளால் (Supreme Grace) பகவானுக்கு அவ்வரத்தை அளித்தார். பூவுலகம் பரம்பொருளைப் பெற்றுவிட்டது. அதன் தெய்வீகப் பலனை மனிதன் அடைய அவன் பூரணச் சரணாகதியை மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வருள் காத்து இருக்கிறது.
 
அருள் என்றால் தெய்வம் தானே செயல்படுவது எனப் பொருள். அது போன்று செயல்பட்டால் அற்புதம் நிகழும். நம் நாட்டுப் பரம்பரையில் அது போன்ற எண்ணற்ற அற்புதங்களை நாம் அறிவோம். அருளின் செயலுக்கும், மற்ற நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வது நல்லது.
 
உலகில் நடைபெறும் எல்லாச் செயல்களும் அருளால் நிகழ்கின்றன என்பது உண்மையானாலும், அருளின் சிறப்பைப் பிரித்துப் பார்ப்போம். ஒரு பையன் படித்துப் பட்டம் பெற்று வேலைக்குப் போனால், வேலை அவனுடைய பட்டத்தால் கிடைத்தது என்றாகிறது. தாழ்த்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்தவருக்கு ஆபீஸர் உத்தியோகம்  கிடைத்தால், இன்றைய புது அரசியல் அமைப்பால் ஏற்பட்ட சலுகையால் அது கிடைத்தது என்கிறோம். 300 பேர் போட்டியிடும்பொழுது 8 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டால், அது பையனுடைய புத்திசாலித்தனத்தால் கிடைத்ததாகும். போதிய மார்க் இல்லை என்றாலும் பையன், ‘தான் ஆதரவற்றவன்' என்பதைக் கமிட்டித் தலைவருக்குச் சொல்லி உத்தியோகம் பெற்றால் அது அனுதாபத்தால் நிகழ்ந்தது. அதே போல் அதிர்ஷ்டத்தால் நிகழ்பவை சில. திறமைக்காக இல்லாமல், படிப்புக்காக இல்லாமல், சலுகையால் இல்லாமல், அனுதாபத்திற்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ இல்லாமல் பெரிய காரியங்கள் நடப்பதை நாம் கண்ணுறும்பொழுது இது அருளால் நடந்ததுஎன்று
அறிகிறோம். தெய்வச் செயல், எப்படி நடந்தது என்று புரியவில்லை என்று எல்லோரும் நினைக்கும் ஒன்றாக அமைவது அருளின் செயலாகும். யார், எதை நம்புகிறார்களோ, அது அவருக்குப் பலிக்கிறது. எதையும் நம்பாமல், மனத்தைத் தெளிவாக வைத்துக் கொண்டு, எதையும் எதிர்பார்க்காதவர்க்கு அருள் செயல்பட்டுக் காரியம் செய்கிறது.
 
தெய்வத்தை நம்பும் மனித மனமும், அதைத் தேடி வரும் தெய்வீக அருளும் உண்மை, சத்தியம், கற்பனை இல்லை என பகவான் சொல்கிறார். இடையறாது அருள் நம் வாழ்வில் செயல்பட நாம் என்ன செய்ய வேண்டும்?
 
இடையறாது ஒருவர் வாழ்வில் அருள் செயல்பட்டால் அவர் வாழ்வு யோகமாக மாறிவிடும். எளிமையாக இதை விளக்கலாம். குடும்பம் நடத்துவதும், யோகம் செய்வதும் ஒன்றுதான். முறை ஒன்று, நிலை வேறு எனலாம்.
 
குடும்பம் நடத்த
யோகம் செய்ய
 
கடமையைப் பூர்த்தி செய்ய
வேண்டும்
வேலையை முறைப்படுத்திக்
கொள்ள வேண்டும்
அறிவோடு செயல்பட வேண்டும்
 
பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்
 
முழுத் திறமை வேண்டும்
 
 
 
பாசத்தோடு செயல்பட வேண்டும்
பக்தியைப் பூர்த்தி செய்ய
வேண்டும்.
மனத்தை முறைப்படுத்திக்
கொள்ள வேண்டும்
ஆன்ம நினைவோடு செயல்பட
வேண்டும்
பொறுப்பை இறைவன் கையில்
விட வேண்டும்
முழுத் திறமை இருந்தாலும்
நம்பிக்கை அதிலில்லாமல்
இறைவன் மீதிருக்க வேண்டும்
 
அன்போடு செயல்பட
வேண்டும்
 
 
பரிதாபம், அனுதாபம், கிருபை, அருள் (pity, sympathy, compassion, grace) ஆகியவற்றை அன்னை பிரித்துக் காட்டுகிறார். ஒருவர் படும் கஷ்டத்தை நமக்குப் பார்க்க முடியவில்லை, பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாமல் அவருக்கு நாம் உதவி செய்வது பரிதாபத்தால் ஏற்படுவது. பிறர் கஷ்டப்படக்கூடாது, அது சரியில்லை என்று செயல்படுவது அனுதாபம். பரிதாபம் நமக்காகச் செயல்படுகிறது. அனுதாபம் பிறருக்காகச் செயல்படுகிறது. கிருபை என்பது உயர்ந்தது. அது நமக்காகவோ, பிறருக்காகவோ செயல்படுவதில்லை. எவரும் துன்பப்படக்கூடாது என்பதே அதன் கொள்கை. துன்பப்படுபவன் நல்லவனா, கெட்டவனா என்பதும் பிரச்சினையில்லை. மனிதன் துன்பப்படக்கூடாது என்று செயல்படுவது கிருபை. ஒருவன் மற்றவனைக் கொலை செய்ய முயன்றால், இருவருக்கும் காயம் ஏற்படுகிறது. டாக்டர் இருவருக்கும் சிகிச்சை செய்கிறார். நல்லவனுக்குத் தான் சிகிச்சைகெட்டவனுக்குச் சிகிச்சை இல்லை என்பதில்லை. அதே போல் மனிதனாகப் பிறந்தவன் துன்பம் அடையக்கூடாது என்று கிருபை செயல்பட்டுத் துன்பத்தைத் துடைத்து எறிகிறது. அருள் அடுத்த உயர்ந்த கட்டத்தில் செயல்படுகிறது. துன்பத்திற்கு உயிரோடு இருக்க உரிமையில்லை என்பது அருளின் வழி. துன்பமே உலகில் இருக்கக்கூடாது என்பது அருளின் கருத்து. மனிதனை துன்பத்திலிருந்து விடுவிக்க முயல்வதைவிட,  துன்பத்தையே அழிக்க முயல்வது அருள்.
 
அருளை உபநிஷதக் காலத்திலிருந்து உலகம் அறியும். சைவம், வைஷ்ணவம் ஆகிய மதங்களும் அருளின் பெருமையை அறிந்தவை. அருள் என்ற கருத்து உலகத்திற்குப் புதியதன்று. அருளில் நம்பிக்கை இல்லாத யோகங்களும் உண்டு.
 
சில நல்ல மாற்றங்கள் தவிர்க்க முடியாதபடி ஏற்படுகின்றன. படித்தவன் வேலைக்குப் போவதும், வயது வந்தபின் திருமணமாவதும், கிராமத்தில் பணம் அதிகமானால் புதிய வீடுகள் கட்டுவதும் இயல்பான செயல்களாகும். இயல்பாக இல்லாமல், திடீரென்று ஒன்று தோன்றுவதும் உண்டு. 1928இல் சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் ஏற்பட்டது. அது ஏற்பட எந்த அவசியமுமில்லை. செட்டியார் அப்படி ஒன்று செய்ய வேண்டும் என்றால், அதற்குரிய இடம் செட்டிநாடு.
சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் ஏற்பட்டது எதிர்பாராதது. அது உள்ளூரில் உள்ளவர்களுக்குப் பெரிய சௌகரியமாகிவிடுகிறது. சிற்பி ஒரு சிற்பம் செய்ய 50 கற்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அது வணக்கத்திற்குரிய விக்கிரகமாகிவிடுகிறது. மற்ற 49 கற்களுக்கும், இந்தக் கல்லுக்கும் வித்தியாசமில்லை. சிற்பியின் பார்வை இதன் மீது விழுந்ததால், கல் விக்கிரகமாகிவிடுகிறது. அருள் செயல்படுவது அது போலாகும். அது செயல்பட வேண்டிய அவசியமோ, நிர்ப்பந்தமோ, சந்தர்ப்பமோ இல்லாத இடத்தில் தானே செயல்பட்டு, ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்கின்றது.
 
அருள் மற்றொரு வகையாகவும் செயல்படுவதுண்டு. நெடுநாள் மனிதன் அருளுக்காகத் தன்னைத் தயார் செய்துகொள்கிறான். முடிவில் அருள் செயல்பட்டுப் பெரும் பலனைக் கொடுக்கிறது. 40 ஆண்டு எதையும் எதிர்பாராமல் காமராஜர், கட்சிக்காக உழைத்ததில் பெருந்திறமை உருவாயிற்று. அருள் அத்திறமையை நாடி வந்து பலனைக் கொடுத்தது. சாதாரண ஸ்தாபனங்களில், குடும்பங்களில் அது போல் பலன் கருதாமல் உழைப்பவருண்டு. கடைசிக் காலத்தில் அருள் அவர்களுக்குப் பெரிய பரிசு அளிப்பதுண்டு.
 
ஞானத்திற்கும், அறியாமைக்கும் உள்ள வித்தியாசம் ஆன்மாவின் அருள் என்கிறார் பகவான். அறியாமையால் பீடிக்கப்பட்ட  ஒருவன் அதிலிருந்து மீள வேண்டும் என்ற அவசியமில்லாதபொழுது, ஏதோ காரணத்தால் - ஒரு மகானைத் தரிசனம் செய்வது, ஒரு புண்ணிய ஸ்தலத்திற்குப் போவது போன்றவை - ஆன்மா
விழிப்படைந்து, அதன் பார்வை அறியாமை மீது பட்டவுடன் அது ஞானமாக மாறிவிடுகிறது. இதை ஆன்மாவின் அருள் என்கிறார்.
 
தவம், நெடுநாளைய உழைப்பு, மனத்தைத் தூய்மைப்படுத்திச் சிறப்படைதல் ஆகியவை அருளைக் கொடுக்கும் (Supramental Grace). சத்தியஜீவ லோகத்து அருள் செயல்பட விரும்பினால், அது க்ஷணம் தாமதிப்பதில்லை; தவம் முடியும் வரை அது காத்திருப்பது இல்லை; நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது இல்லை; உடனே செயல்பட்டுவிடும்.
 
அருளைப் பலவிதமாக ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுவதுண்டு. Grace, Mother’s Grace, Divine Grace, Supreme Grace, Super-Grace) அருள், அன்னையின் அருள், இறைவனின் அருள், பரம்பொருளின் அருள், அருளைவிடச் சிறந்த அருள் என்றெல்லாம் அவர் குறிப்பிடுவார்.
 
அருளுக்குப் பொதுத்தன்மை, சிறப்புத் தன்மை உண்டு. பொதுவான அருளை இறை அருள் எனவும், அருள் எனவும் சொல்வது உண்டு. பரம்பொருளில் உற்பத்தியாகி வரும் அருளை பரம்பொருளின் அருள் எனவும், இந்த அவதாரத்தில் அன்னை தம்முடன் கொண்டு வந்த அருளை அன்னையின் அருள் எனவும், பொதுவாக அருள் செயல்படாத வழியில் செயல்படும் அருளை அருளைவிடச் சிறந்த அருள் எனவும் குறிப்பிடுகிறார்.
 
அருளால் எதையும் செய்ய முடியும். ஆனால் பக்தனுடைய பூரணச் சம்மதத்தின் பேரில்தான் அதைச் சாதிக்க முடியும் என்கிறார். மின்சாரம் எதையும் செய்யும். ஆனால் அதற்குரிய சாதனம் அவசியம் என்பது போன்றது இது. எதையும் மின்சாரம் செய்யும் என்றால், பல்ப் இல்லாமல் மின்சாரத்தால் ஒளி வீச முடியாது. எந்தக் காரியம் மின்சாரத்தால் ஆக வேண்டுமோ அதற்குரிய கருவி (e.g.மோட்டார்
விசிறியை) நாம் கொண்டு வந்தால் மின்சாரம் செயல்படும். மனிதன் தன் மனத்தில் எந்த விஷயத்தை ஏற்றுக்கொள்கிறானோ, அதை அருள் சாதிக்கும். மனிதனுக்குள்ள நம்பிக்கை அருள் செயல்படத் தேவையான சாதனம்.
 
திறமையுள்ள வலிமை (strength) சாதிக்கவல்லது. (Sincerity) உண்மை அதைவிட அதிகமாகச் சாதிக்கும். அருள் அவற்றையெல்லாம் கடந்தது. அதனால் சாதிக்க முடியாததே கிடையாது. அருள் செயல்படுவதற்கு அடையாளம் ஒன்றுண்டு. தானே செயல்பட்டால் அது அருள் செயல்படுவதற்கு அடையாளம். பக்தன் தன்னை அருளுக்குப் பாத்திரமாக்கிக்கொள்ள வேண்டும். அவனுக்குத் தன் திறமையில் நம்பிக்கையுள்ளவரை, திறமைதான் பலன் தரும்; அருள் செயல்படாது. தன் திறமையிலும், உண்மையிலும், நியாயத்திலும், தர்மத்திலும் உள்ள நம்பிக்கையைப் பூரணமாக இழந்த பின்னரே பக்தன் அருளைப் பெறத் தகுதி பெற்றவனாகிறான்.
 
அருள் உலகத்தில் காற்றைப் போல், ஆகர்க்ஷண சக்தியைப் போல் நிரம்பியுள்ளது. எவரை விட்டும் அருள் கணமும் விலகுவது இல்லை. நம்மைச் சுற்றியுள்ள காற்றும் அதிலுள்ள ஆக்ஸிஜனும் நம்மை விட்டு விலகுவதேயில்லை. அதே போல் அருள் மனிதனை விட்டு க்ஷணமும் விலகுவதில்லை. மனிதன்தான் முனைந்து அருளை விட்டுப் போகிறான். ஒருவனிடம் அருள் செயல்பட ஆரம்பித்தால், அவனுக்கு அப்பொழுதுதான் அர்த்தமற்ற காரியம் செய்ய அவசியமாகத் தோன்றும் என்று அன்னை கூறுகிறார். வலிந்து அருள் மனிதனை நாடினால் 'இது என்ன தொந்தரவாகிவிட்டதே' என முனைந்து அவன் அருளை விலக்குகின்றான் என்று அன்னை கூறுகிறார். தங்கக் கட்டியைப் பாதையில் போட்டாலும், மனிதனுக்குக் கண்ணை மூடி நடக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்பது கதை. ஒவ்வொரு முறை நாம் தவறு செய்யும்பொழுதும் அருளை விலக்குகிறோம்  என்கிறார் அன்னை.
 
பெண்ணே கதியாக இருந்த St. Augustine புனித அகஸ்டீனுக்கும், வில்வமங்கள் என்ற வைஷ்ண பக்தருக்கும் அருள் மழையாகப் பெய்து அனுக்கிரஹம் செய்தது. இவர்கள் அருணகிரி நாதரைப் போன்றவர்கள். பாவத்தில் மனிதன் மூழ்கியிருப்பதால் அருள் அவர்களை விலக்குவதில்லை. பாவத்தை அவர்களிடமிருந்து விலக்க அருள் செயல்படுகிறது.
 
பொதுவாக அருள் அங்கு நிலவும் சட்டப்படிதான் செயல்படும்;
யுகதர்மத்தின்படிதான் செயல்படும். அருளாக, அவற்றை ஒதுக்கி, செயல்படுவது அரிது!
 
கிருஷ்ண பரமாத்மாவின் அருள் பிரேமை நிறைந்தது. பக்தனுக்குப் பிரேமை போதும்; அதைத் தாண்டி அவன் எதையும் நினைக்கமாட்டான்.
 
ஆழ்ந்த நம்பிக்கையுள்ள பக்தன் வாழ்வில் அருள் செயல்படும் பொழுது, வீட்டில் ஆபத்திருந்தால், அருள் அவனை வெளியே போகச் செல்லும்; வெளியே ஆபத்திருந்தால் வீட்டிலிருக்கச் சொல்லும். பம்பாயிலிருந்து பெங்களூர் வர விமானத்தில் டிக்கட் வாங்கிய பக்தரை, அருள் வேறு வேலை ஏற்படுத்தி, வாங்கிய டிக்கட்டை கான்சல் செய்யச் சொல்லிற்று. அடுத்த நாளைக்குப் பிரயாணத்தை
ஒத்திப்போட்டார் பக்தர். அவர் செல்ல இருந்த விமானம் விபத்துக்கு
உள்ளாகிவிட்டது. இது போன்ற நிகழ்ச்சிகள் பக்தர்கள் வாழ்வில் நடப்பதைப் பலரும் காணலாம்.
 
The Mother அன்னை என்ற சிறு புத்தகத்தில் ஸ்ரீ அரவிந்தர் அருளைப் பற்றி எழுதும்பொழுது 14 முறைகளை விவரித்து, மனிதன் இவை மூலம் அருளிலிருந்து தப்பித்து விலகிப்போகிறான் என்கிறார்.
 
இடைவிடாத அழைப்புக்குத் தவறாது இணங்குவது அருள் என்கிறார்; ஆனால் அருள் சத்தியத்திற்காக மட்டுமே செயல்படும். பொய்மைக்கு ஆதரவாக ஒருபோதும் செயல்படாது; உன் ஜீவனின் ஒரு பகுதி சரணடைந்து, மற்றொரு பகுதி சரணடைய மறுத்தால்,  சரணாகதி மூலம் உன்னுள்ளே வந்த அருள் அந்தப் பகுதியின் மறுப்பின் மூலம் வெளியேற்றப்படும். அது அருளின் தவறன்று; உன்
ஆசைக்காக நீ செயல்பட்டு அருளை அழைத்தால், அருள் வாராது;  என்பன போன்ற 14 கருத்துகளை 1920இல் இருந்த சாதகர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் எழுதுகிறார்.
 
அத்துடன், அன்னையின் அருள் ஒரு துளி உள்ளவரை நீ எதற்குப் பயப்பட வேண்டும்! யார் உன்னைத் தொட முடியும்! இவ்வுலகிலும், மற்ற உலகங்களிலும் உள்ள எந்தச் சக்தியும் உன்னைத் தீண்டாது என்றும் கூறுகிறார்.
 
சிருஷ்டி பல நிலைகளில் உள்ளது. ஒவ்வொரு நிலைக்குரிய ஆன்மீக சக்தியும் அந்த அந்த நிலைகளில் செயல்படுகிறது. அந்த ஆன்மீக சக்திகளுக்கு அருள் உண்டு. நிலைக்கேற்ற சக்தி பெற்றது அருள். ஜபம் அடியிலும், சச்சிதானந்தம் உச்சக்கட்டத்திலும் அமைந்து, இடையில் சத்தியஜீவியம், மனம், வாழ்வு போன்ற நிலைகள் உள்ளன. பரம்பொருள் சச்சிதானந்தத்திற்கு அப்பாற்பட்டது. பரம்பொருளுக்கும் அருள் உண்டு. அதை Supreme Grace பரம்பொருளின் அருள் என்கிறார். அந்த அருளைப் பூவுலகில் இடையறாது செயல்படுத்துவதற்காக அன்னை அவதாரம் எடுத்தார். அன்னை பூவுலகில் வாழ்ந்தது (is contant grace) அவ்வருளை நிரந்தரமாகச் செயல்படுத்துவதற்காக என்கிறார் பகவான். மின்னல் தெறிப்பதைப் போல் செயல்படும் அருளை நிரந்தர அருளாகச் செய்வது வானத்தில்
மின்னலை நிலையாக இருக்கச் செய்வதாகும். உலகம் அருளை எப்பொழுதோ ஒரு முறை பெறுகிறது. அது தொடர்ந்து அருள் மழையைப் பெற வேண்டும்; அருள் நிறைந்து, இருள் விலக வேண்டும். அதைச் செய்யும் வழி ஒன்றில்லை என்பதை அறிந்து, அருள் வடிவமான அன்னை தம் உடலில் அருளைத் தாங்கி, உலகில்
அவதரித்துச் செயல்பட்டார். (Psychic being) சைத்திய புருஷனாகிய ஆத்மா வெளிவந்தால் அது அருளுடன் நேரடியான தொடர்புகொள்ளும். அதனால் அதன் வளர்ச்சி அருளின் செயலை அதிகப்படுத்தும்.
 
அன்னை விரும்பி தம் அருளை ஒருவருக்குக் கொடுத்தாலும், அவரது ஆன்மாவுக்குச் சம்மதம் இருந்தால்தான் அவ்வருள் செயல்படும்; சம்மதமில்லாவிட்டால் அது விலகும்.
 
இரண்டு நாடுகள் போர் தொடுத்தால், அருள் எந்த நாட்டை  ஆதரிக்கும் என்ற கேள்விக்குப் பதிலாக, அன்னை சொல்கிறார்: ஒரு நாட்டுக்கு எதிராக அடுத்த நாட்டை ஆதரிப்பது அருளின் வழி இல்லை. பிணக்குகளைக் கடந்த உண்மை நிலைக்க அருள் செயல்படுகிறது என்கிறார். அன்னையிடம் வந்து, தீரும் சண்டைகளில் இரு சாராருக்கும் பலன் ஏற்படும். ஒருவரைத் தண்டித்து மற்றவரை
ஆதரிப்பது வாழ்வின் வழி. இருவரிடையேயுள்ள உண்மையையும்  ஆதரித்து, இருவரிடையேயுள்ள பொய்யை விலக்கித் தீர்வு காண்பது அருள் வழி.
 
நோயுற்றபோது அருள் நம்முள் வந்து, நோயைக் குணப்படுத்த  வேண்டுமானால், வியாதியிலிருந்து மனத்தை விலக்க வேண்டும். வியாதியை நினைத்தால், அது வளரும். வியாதியை மறந்து அருளை நினைத்தால், அருள் செயல்பட்டு நோய் குணமடையும். அன்னை எழுதியவற்றைப் படித்தால் மனம் வியாதியை விட்டு விலகும். தியானத்தாலும் அது போல் விலகுவதுண்டு. நோயைக் குணப்
படுத்துவது அருள். மருந்து உடலுக்கு நம்பிக்கையூட்டி, அதன் மூலம்
உடலைத் தன்னைத் தானே குணப்படுத்தத் தூண்டுகிறது.
 
அருளால் குணப்படுத்த முடியாத நோய் ஒன்றில்லை என்கிறார் அன்னை. ஒருவருடைய வாழ்வில் அவரை அறியாமல் அருள் செயல்பட முடியும். மனித முயற்சி தேவையில்லை என்பதால் மனிதனுக்குத் தெரியாமல் அருள் செயல்படும்.
 
ஒரு பிறவியில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அடுத்த  பிறவியிலும் அவருக்குத் துரதிர்ஷ்டம் தொடர்ந்தது. அந்த நிகழ்ச்சியை அன்னை விளக்கமாக எடுத்துச் சொல்லி, ஆன்மா ஒரு க்ஷணம் அருளுடன் தொடர்புகொண்டால் அத்தனைப் பிறவிகளில் ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தைத் துடைத்துவிட முடியும் என்கிறார்.
 
மனிதனுக்கு அருளில் நம்பிக்கை ஏற்பட்டு, அருள் கண்ணுக்குத் தெரிந்து, ஆழ்ந்து அழைப்பை அவன் மேற்கொண்டால், அருள் அவன் குரலைக் கேட்கும். அவனுள் உள்ள முடிச்சு அவிழும், உடைந்து புது உலகம் தெரியும். உள்ளே ஓர் ஆன்மீகப் புரட்சி ஏற்பட்டு, ஆர்வம் வானளாவ உயர்ந்து அற்புதமான அன்பும் அருளும் மழையாகப் பொழியும் என்கிறார் அன்னை.
 
வாழ்வில் இது ஒரு முறை நடந்தால் ஊருக்குப் புறம்போக்காக  இருந்தவன் ஊருக்குத் தலைவனாவான். இதை அன்றாட நிகழ்ச்சி ஆக்குவது பூரண யோகம்.
 
அருள் நுழைந்து, கர்மத்தின் கட்டுடைவதுண்டு. அந்நேரம் அந்தக் குறிப்பிட்ட கர்மம் ஏற்பட்ட காரணம் தெளிவாக மனதில் தோன்றும்.
 
தோல்விகளுக்குப் பின்னால் வெற்றி மறைந்துள்ளது. வலிக்குப் பின்னால் ஆனந்தம் ஒளிந்துள்ளது. அதே போல் எல்லா இடையூறுகளுக்கும் பின்னால் அருள் காத்திருக்கின்றது என்பது அன்னையின் வாக்கு.
 
சொல் மனத்தில் எழுவது. அருள் மனத்தைத் தாண்டிய நிலையில் உள்ளது. அதனால் அருளின் அற்புதத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆசையைப் பூர்த்தி செய்து பெறும் சந்தோஷத்தைவிட ஆசையை வென்று பெறும் ஆனந்தம் பெரியது. அருளைப் பெறும் வழிகளில் இதுவும் ஒன்று. அருளுக்குத் தன்னை
அர்ப்பணம் செய்ய முன்வந்தால், அர்ப்பணத்தைப் பூரணமாக்கும் பொழுது, ஒளிமயமான நெகிழ்ந்த இன்பம் தோன்றி நெஞ்சை நிறைத்து, பேரின்ப நிலைக்கு இட்டுச் சென்று அருளின் ஆதிக்கத்தை நம்மில் ஏற்படுத்துகிறது.
 
அருள் கர்மத்தை அழிக்கும். கர்மத்தை வளர்க்கும் மடமைக்கு  நாம் உட்பட்டிருப்பதால் கர்மம் நிலைக்கிறது. கர்மத்தை ஒட்டி வந்த அறிவற்ற செயலைக் கைவிட்டுவிட்டால், அருள் கர்மத்தை அழிக்கும்.
 
முன்னேற்றம் படிப்படியாகத்தான் வர வேண்டும் என்ற நிபந்தனையில்லை. மனிதன் தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்து வைத்திருக்கின்றான். அதனால் முன்னேற்றம் மெதுவாக ஏற்படுகிறது. அருளை வேண்டி அழைத்தால் அது அவனுடைய கூட்டை உடைத்து எறியும்.
 
புதிய உலகைத் திறந்து காட்டும் திறன் அருளுக்குண்டு.
 
நான் எளியவன். என்னால் மாற முடியாது. என்னை மாற்றிக் கொள்ளும் திறன் எனக்கில்லை என்பவற்றையெல்லாம் அன்னை ஏற்றுக்கொள்வதில்லை. மாற்றிக்கொள்ளும் முடிவுக்கு வாராதவர் சொல்லும் சொல் எனக் கருதுகிறார் அன்னை. அருள் ஒருவரை மாற்றும், திருத்தும், மாற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவருக்கு மாற வேண்டிய திறனை அருள் அளிக்கும்.
 
நம்பிக்கை என்பதே அருள் கொடுத்த வரப்பிரசாதமாகும்.
 
ஒரு முறை நம் வாழ்வில் அருள் செயல்பட்டு ஓர் அற்புதத்தை  நிகழ்த்தியபின், அடுத்த முறை அருளைச் செயல்பட வைக்க நாம் முயன்றால், நம் மனம் குறுக்கிடும் முறைகளும், நம் செயலில் ஏற்படும் பிணக்குகளும், நம்முள் உள்ள அனைத்தும் நமக்கு எதிரி போல் வேலை செய்வதையும் காணலாம். நம் ஜீவனில் உள்ள தடையைக் கண்டவர் உலகத்தில் அருளுக்கு ஏற்பட்டுள்ள தடையை ஓரளவு
புரிந்துகொள்ள முடியும்.
 
அளவு கடந்த வலியை அனுபவிப்பவன் வலிஎப்படி ஏற்படுகிறது என்று அறிவான். சாட்டையால் அடித்தால் வலிஏற்படுகிறது. அதனால் சாட்டை அடி வலியை உற்பத்தி செய்கிறது என நாம் அறிகிறோம். அது உண்மையன்று என்கிறார் அன்னை. அதே சாட்டையடி அளவு கடந்த சந்தோஷத்தைக் கொடுக்க முடியும் என்கிறார். வலியும், சந்தோஷமும் மனதில் உற்பத்தியாகின்றன. மனம் எந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்கிறதோ அந்த எண்ணத்திற்குரிய உணர்வை மனிதன் உணர்கிறான் என்கிறார். அப்துல் பாஹா என்பவர் புதிய மதத்தை
ஸ்தாபித்தார். அதைப் பின்பற்றியவர்களை அரசாங்கம் சித்ரவதை செய்தது. அப்துல் பாஹாவின் மகன் அது போன்ற ஒருவரை ஜெயிலில் பார்க்கப் போனார். அவர் உடம்பில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருந்தனர். மெழுகு முடிந்தவுடன் உடல் எரியும். உடலெல்லாம் எரியும் மெழுகுவர்த்தியால் நிரம்பப்பெற்றவரைப் பார்த்து, "என் தந்தை இலட்சியத்திற்காக நீங்கள் வதைகின்றீர்கள்'' என்றார். "வதையாவது! என் வாழ்க்கையிலேயே அளவு கடந்த சந்தோஷம் நிறைந்த நேரம்
இதுதான்'' என்று மலர்ந்த புன்னகையுடன் அவர் சொன்னார். அவருடைய மனம் இலட்சியத்தை ஏற்றுக்கொண்டது. இலட்சியத்திற்காகத் தியாகம் செய்யும் நினைவோடு அவர் இரண்டறக் கலந்து விட்டதால் எரியும் வர்த்தி அவருக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது. சுண்ணாம்புக் காளவாயில் எரியும்பொழுது "எந்தை இணையடி நீழல் மாசில் வீணை''யாகியது நாயனாருக்கு.
 
சித்திரவதையைச் சிறப்பான இன்பமாக்குவது அருள் என்கிறார் அன்னை. மனிதனால் அருளைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. 'ஏன் என்னை வந்து உயிரை எடுக்கிறது' என்று மனிதன் அருளை அடித்து விலக்குகின்றான் என்கிறார் அன்னை.
 
நம் காரியம் கெட்டுப்போனால் நாம் வருந்துகிறோம். அருளின் செயல் நமக்கு புரியாததால் நாம் அப்படி நினைக்கின்றோம். கொஞ்சம் பொறுத்து விஷயம் பூர்த்தியான பிறகு பார்த்தால் உண்மையிலேயே இது பெரிய விஷயம்' என்று அருளைப் போற்றத் தோன்றும் என்கிறார் அன்னை.
 
சட்டங்கள், முறைகள், தர்மங்கள் ஆகியவற்றைப் பின்பற்றினால் அருள் நம்மை விட்டு விலகும். நாம் இவற்றை எல்லாம் விட்டு விலகிய பின்னரே அருள் நம்மை நாடி வரும்.
 
நாம் பெறும் அருளின் அளவு நாம் பெற்றுள்ள கஷ்டங்களின் அளவைப் பொருத்துள்ளது. அதிகக் கஷ்டத்தை ஏற்றுக்கொண்ட பொழுது அதிக அருள் வரும்.
 
மனிதன் வலிந்து அருளை விரட்டியபின், அருள் தன்னைக் கைவிட்டுவிட்டது என்பது வழக்கம். உண்மையை ஆராய்ந்து பார்த்தால் அருளை விலக்க முடியாது; அருள் விலகுவதில்லை. எவ்வளவுதான் மனிதன் அருளை விரட்டினாலும், அருள் அவனை விட்டு விலகுவதில்லை. அதன்பின் மனிதன் தன் மனத்தால் அருளிலிருந்து விலகிச் சென்று, அருளால் செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்திவிடுகிறான்.
 
அருளை நாடி வருபவனுக்குத் தன் குறை புரியவில்லை என்றால், ஏன் அருள் தன்னை விட்டு அகன்று செல்கிறது என்று தெரியவில்லை என்றால், அருளே அதை இவனுக்கு உணர்த்தும். அருள் மீது நம்பிக்கை வைத்து, தன் குறையை அகற்ற முடிவு செய்தால், எதை மாற்ற வேண்டும் என்று அருள் அவனுக்குத் தெளிவு படுத்தும். யோகப் பலன் பெற அது பெரிய வாய்ப்பு.
 
மனிதன் பல நிலைகளில் வாழ்கிறான். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பு அருளாகும். அடுத்த நிலைக்குச் செல்லும் முயற்சி அருளைக் கொண்டுவரும்.
 
அருளை மனிதன் முழுவதும் உணர்ந்தபின் தன் திறமைகளுக்கு அர்த்தமில்லை என்று புரிந்துகொள்கிறான். சமூகமும், சட்டமும், தர்மமும் தன்னைக் காப்பாற்றாது என்றும் புரிந்து கொண்டால், அருளின்றி வாழ முடியாது என்பது தெளிவுபடும்.
அதுவே ஆன்மீக அடக்கத்திற்கு வித்து. அருளின்றி நானில்லை என்ற ஞானம் ஒருவருக்கு அருளைப் பெற்றுத் தரும். அறிவு இல்லாதவர்களும் தங்கள் இயலாமையை உணர்ந்தபின் அருளை அழைக்கின்றார்கள்; இறைவனை நினைக்கின்றார்கள். அந்நினைவு அருளை அழைத்து வருகிறது.
 
அருளால் மட்டுமே முடியும் என்பது தெளிவானால் அருளை அழைக்க ஆர்வம் பெருகுகிறது. அந்த ஆர்வம் விழிப்பைத் தரும்.
 
சிரமம் வந்த காலத்து அதிலிருந்து தப்பியது அருளால் மட்டுமே  என அறிந்தால் அருள் தொடர்ந்து செயல்படும். நம் திறமையால் காப்பாற்றிக்கொண்டோம் என அறிந்தால் அருளை நாம் விரைந்து விலக்குகிறோம்.
 
அருளைப் பெற போதுமான ஆர்வமும், அதற்குரிய பிரார்த்தனையும் தேவை. மனித குலத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்ட பேறு அது. மற்ற ஜீவராசிகளுக்கு இறைவன் அதை அளிக்கவில்லை.
 
சாதகர்கள் அன்னையை நெருங்கி, "எங்கள் வீட்டுக் குழந்தைகள் நாம் ஏன் ஆசிரமத்திலிருக்கிறோம்?’ என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை'' என்கிறார்கள். "இறைவனின் திருவுள்ளத்தால் நாம் ஆசிரமத்திற்கு வந்திருக்கின்றோம். இது அருளின் செயல் என்று குழந்தைகளிடம் சொல்லுங்கள். எதிர்காலம் சிறப்பாக இருக்கும்'' என்று அன்னை பதில் அளிக்கின்றார்.
 
பல பேரை நிர்வாகம் செய்யும் சந்தர்ப்பம் அருள் நிறைந்தது என்கிறார் அன்னை. அற்புதமான அருளை வழங்கும் நிலை அது. கல்வி, செல்வம், பதவி, தலைமை, தாய்மை போன்ற எந்தப் பொறுப்பும் அருளைப் பெறும் நிலையாகும். ஒவ்வொருவரும் தவறாது அருளைப் பெறுகிறார்கள் என்று அறியும் ஞானம், அருளைப் பெறும் ஆன்ம நிலையாகும்.
 
கீழ்க்கண்டவை அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அருளைப் பற்றிச் சொல்லியவை:
 
  • யுகதர்மத்தை மாற்ற அருளால் மட்டுமே முடியும்.  
  • அருளை வெளிப்படுத்தவே அவதாரம் ஜனிக்கின்றது.  
  • அவதாரப் புருஷனுடைய சிஷ்யனாக இருப்பது அருளின் கருவியாக இருப்பதாகும். 
  • யுகதர்மம் செயல்படும் முறையை அறிந்து, அதற்கேற்ப அருளை வழங்கும் ஆற்றல் அன்னைக்குரியது.  
  • அன்னை உலகிலிருப்பதால் மனித ஆர்வம் அசைந்தவுடன் அருள் மழை பெய்கிறது.  
  • மனிதன் செய்யாத தவறில்லை. அன்னை அழிக்காதவை அவற்றுள் ஒன்றில்லை.
  • யுகதர்மம் கடுமை நிறைந்தது. இடைவிடாது அருள் செயல்பட்டு யுகதர்மத்தின் கடுமையிலிருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது.  
  • அருளை நாடி வந்தவர்களை இறைவனாலேயே சமாளிக்க முடிவதில்லை, என்றாலும் அருளால் முடியாததில்லை.  
ஆசிரமத்தில் பட்டுப்போன பெரிய மரத்தின் அடிப்பாகத்தை வெட்டி, ஒரு (crane) கிரேன் மூலம் லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த போது கிரேன் உடைந்து லாரி சாய்ந்து நின்று, பிரம்மாண்டமான அடிமரம் உருள ஆரம்பித்தது. அது கீழே விழுந்தால், உயிர்ச்சேதம் ஏற்படும் என்ற க்ஷணத்தில் காரணமேயின்றி அடிமரம் பாதியில் நின்று விட்டது. இந்த நிகழ்ச்சியை அன்னை குறிப்பிட்டு, "மரம் அருளால்
தடுத்து நிறுத்தப்பட்டது'' என்றார்.
 
(Divine Love, Divine Grace) தெய்வீக அன்பு, இறை அருள், இவை இரண்டும் அடிப்படையில் ஒன்றே. தனித்தனியாக அவை செயல்பட முடியும். மனிதன் அருளை அன்பாகக் காண்கிறான்.
 
இறைவனும், இறைவன் அருளும் வேறு வேறு. நாம் ஒன்றாகவும் கொள்ளலாம். அருள் அவன் செயல். மனிதனும், அவனுடைய செயலும் வேறு வேறு என்பதைப் போல் அருளும், அவனும் வேறு வேறு. உலகத்தின் அத்தனை நிகழ்ச்சிகளையும் நடத்துவது அருளேயாகும். அன்றாடக் காரியங்களில் நாம் அருளை அறிவதில்லை. பெருஞ் சிரமங்கள் வந்து மனிதனை உலுக்கும்பொழுது அருள் செயல்பட்டு விடுவித்தால், பெரிய வாய்ப்புகள் வந்து அருள் அவற்றைப் பூர்த்தி செய்தால் நம்மால் அருளை உணர முடிகிறது. உச்சக்கட்டமான உயர்ந்த இலட்சியங்களை இறைவனுக்காகப் பின்பற்றும்பொழுது அருள் வெளிப்படுகிறது. அழைப்பு தீவிரம் பெற்று, முழுமையடையும் பொழுது அருள் காட்சியளிக்கின்றது.
 
குழப்பம், கெட்ட எண்ணம் போன்றவை அருளுக்குத் தடை  ஆனவை. ஆர்வம், நம்பிக்கை, சுமுகம் அருளைச் செயல்படச் செய்பவை. நடக்க இருப்பவற்றைப் பற்றிப் பேசினால், சொல் தடையை உற்பத்தி செய்யும்.
 
பூர்த்தியாகாத ஆசைகள் இருப்பது அருள் கிடைக்க ஒரு சந்தர்ப்பமாகும். ஆசைகளைச் சரணம் செய்து, ஆனந்தத்தை அனுபவிப்பது, ஆசைகளைப் பூர்த்தி செய்து சந்தோஷப்படுவதைவிட மேல் என்ற உண்மையை அருள் அறிவுறுத்துவதற்காகவே, இந்தச் சந்தர்ப்பத்தை அவனுக்குக் கொடுத்துள்ளது.
 
நம் வாழ்வைச் சோதித்தால் நமக்கு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் அனைத்தும் அருளைப் பெறும் வழியை நமக்குக் காண்பிக்கும் வகையில் ஏற்பட்டுள்ளன என அறிவோம். அதை ஏற்றுக்கொண்டால்,  நம் இடையூறுகளைக் கடக்கும் திறன் நமக்கு ஏற்படும்.
 
அருளில் பூரண நம்பிக்கையுள்ளவர்க்குப் பெரும்பாலான வியாதிகள் வருவதில்லை.
 
சைத்திய புருஷன் அருளின் வெளிப்பாடாகும். அருளே சைத்திய புருஷனை ஏற்படுத்துகிறது. சைத்திய புருஷன் வளர்ச்சி அடைவதும் அருளால்தான்.
 
ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அநேகம் பேர் கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டாலும், ஒருவருக்கு நல்லெண்ணமிருந்தால் அவர் மூலம் அந்த வேலை பூர்த்தியாகும்.
 
சண்டையிட்டு வம்பில் மாட்டிக்கொண்டு, அறிவில்லாமல் செயல் படுபவருண்டு. இருப்பினும் அவர்களுக்கு அருளில் நம்பிக்கை இருந்தால் வம்பிலிருந்து அருள் அவர்களை மீட்கும்.
 
நன்றியறிதல் நமக்குச் செயலின் பின்னணியாகவுள்ள அருளை உணர்த்துகிறது.
 
அருள் வெற்றியாகவும் வரும்; தோல்வியாகவும் நம்மை அண்டி வரும்.
 
பூரண நம்பிக்கை பூரண பலனைத் தரும்.
 
நம் நம்பிக்கை எவ்வளவு பெரியதானாலும் அருளுக்குச் சமமாக  அது இருப்பதில்லை.
 
அருளில் முழு நம்பிக்கை இருப்பதே விவேகம் எனப்படும்.
 
ஒரே குழப்பமான நிலையில், அதன் மூலம் ஒரு முறை உற்பத்தியாகிறது என அறிய அருள் செயல்பட வேண்டும்.
 
எல்லாம் போன பின்னும், முழுவதையும் காப்பாற்ற முடியும்.
 
உன் திறமையில் நம்பிக்கை போனபின் அருளில் நம்பிக்கை வைத்தால்
அது நடக்கும்.
 
உள்ளன்புடன் அருளில் நம்பிக்கை வைத்தால், அளவுகடந்த  அருள் உற்பத்தியாகும்.
 
அருளில் நம்பிக்கை ஏற்பட்டால், தைரியம் உற்பத்தியாகும்.
 
அருள் காரியங்களைச் சுமுகமாகச் செவ்வனே நடத்திச்  செல்லும் என்று நாம் நம்புவது உண்மையன்று. அருள் வெற்றியை உற்பத்தி செய்வதைப் போல் தோல்வியையும் உற்பத்தி செய்யும். முடிவில் முழு வெற்றி ஏற்பட இன்று எது தேவையோ, அதையே அருள் உற்பத்தி செய்யும்.
 
அருளில் நம்பிக்கை ஏற்பட்டால் பொறுமை வரும்.
 
அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அருளைப் பற்றிச் சொல்லியவற்றைத் தொகுத்து இது வரை எழுதினேன். மேலும் அருள் நம்மைத் தீண்டுமா? நாம் அருளை ஸ்பரிசிக்க முடியுமா? அன்னையின் அன்பர்கள் அனைவருக்கும் அன்னை அளித்துள்ள வரப்பிரசாதம் அது. அருளை அழைத்தால் நம்மை நோக்கி வந்து, நம் ஜீவனைத் தொட்டு மலரச் செய்யும்.
 
மனிதன் பழக்கத்தின் பிடியிலிருக்கின்றான்; சமூகத்திற்குக் கட்டுப்பட்டவன்; தன் மனச்சாட்சிக்கு உட்பட்டவன். இவற்றை எல்லாம் தாண்டி வாழ்க்கை நியதியும், யுகதர்மமும் அவனை ஆட்சி செலுத்துகின்றன. அருள் இவற்றையெல்லாம் கடந்தது. அருள் வாழ்வில் செயல்பட வேண்டுமானால், பழக்கத்தை விட வேண்டும். சமூக நியதிகளைப் புறக்கணிக்க வேண்டும். மனச்சாட்சியைவிட அருள்
உயர்ந்தது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையும், அதை நிர்ணயிக்கும் யுகதர்மமும் அருளுக்குத் தடையென்று ஆழ்ந்து உணர வேண்டும். மனத்தால் இந்த நிலையை ஒருவர் ஏதாவது ஒரு நிகழ்ச்சி சம்பந்தமாக ஏற்றுக்கொள்ள முடியுமானால், ஏற்றுக்கொண்டதில் இம்மியளவும் குறையில்லை என்றால், அவருடைய உள்ளுணர்வுக்கு அருள் தட்டுப்படும். உணர்வு கண்டுகொண்ட அருளை ஜீவன் நாடினால், தன்னை அர்ப்பணித்துக்கொள்ள ஜீவன் விழைந்தால்,
ஆர்வம் பெருகி, தன் நிலையிழந்து, அருளை நோக்கித் தான் செல்வதும், அருள் விரைந்து தன்னை நோக்கி வருவதையும் காணலாம். சமர்ப்பணத்தைத் தொடர்ந்தால் ஒரு கட்டம் தாண்டவுடன் அருள் வெள்ளமாகப் பெருகி ஆன்மாவையும், ஜீவனையும் தன்னுள் ஆட்கொள்வதைப் பார்க்கலாம். இது இறைவனின் ஸ்பரிசமாகும்.
 
அருள் வடிவமானவர் அன்னை. அவருடைய திருப்பாதங்கள் பட்ட இடங்கள் அருள் பெறுகின்றன. மரணப்படுக்கையிலிருந்த  சாதகர் ஒருவர் அன்னை பாதங்களைத் தம் இதயத்தில் பதிக்குமாறு விழைந்தார். அன்னையும் இசைவு தந்தார். அவரது ஆன்மா மலர்ந்து, ஆர்வம் பெருகி, ஆனந்தக் கண்ணீரால் அவருடல் நனையும்பொழுது அவர் அடைந்தது பெரும்பேறு. அன்னை இன்று ஸ்தூல உடலில் இல்லை. ஆனால் சூட்சும உடலிலிருக்கின்றார். சூட்சும உலகில் அவர் பாதங்கள் இன்றும் பக்தனுக்கு அனுக்கிரஹம் செய்யும். பிறவியின் பிடியிலிருந்து மனம் விலகி, ஆசையை அழித்து, அகங்காரத்தை விலக்கி, ஆன்மாவை வெளிக்கொணர முடிந்த பக்தருக்கு நெகிழ்ந்த நிலை அடிக்கடி ஏற்படுவதுண்டு. அந்நிலையில் தளைகள் உள்ளே தகர்வது தெரியும். தன் நிலையை இழந்து, பக்தியின் பரவச நிலையில் தான் சேர்வது தெரியும். தன் உள்ளேயுள்ள உலகம் பரந்து கடல் போல விரிவதைக் காணலாம். அந்நிலையில் அன்னையை அழைத்தால் உடனே வருவார். அவர் பாதங்களை நெஞ்சில் பதிக்கச் சொன்னால், அனுக்கிரஹம் செய்வார். பொற்பாதங்கள் நெஞ்சைத் தொடுவதை
உணரலாம். மரணப்படுக்கையி-ருந்த சாதகர் பெற்ற பேறு பெறலாம். அது அருளின் உச்சக்கட்ட அனுக்கிரஹமாகும். வாழ்வில் ஒரு முறை இது நிகழ்ந்தால் அது அற்புதம். நெகிழ்ந்த நேரமெல்லாம் நிகழும் அற்புதமாக பக்தனுக்கு அன்னை வரம் அருளியுள்ளார். 

 



book | by Dr. Radut