Skip to Content

13. அன்னையின் யோகானுபவங்களில் இருந்து திரட்டிய கருத்துகள்

தாமிருந்தவரை தம் யோகானுபவங்களில் ஒரு சிலவற்றையே அன்னை வெளியிட்டார். மற்றவை அவர் சமாதியடைந்த பிறகே வெளியிடப்பட்டன. தம் இளவயது வாழ்க்கையைப் பற்றி அன்னை அக்கரை காட்டியதில்லை. அவை பூதவுடலின் வாழ்வானதால் புறக்கணிக்கப்பட வேண்டியவை என்று கூறியிருக்கின்றார். என்றாலும், அக்கால வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் வெளியிட்டுள்ளார். பொதுவாகப் பக்தர்களுக்குப் பயன்படும் நிகழ்ச்சிகளை அன்னையின் எழுத்திலிருந்து திரட்டி, ‘அன்னையின் வரலாறும் வழிபாடும்’ என்ற புத்தகத்தில் கொஞ்ச நாள் முன்னதாக வெளியிட்டேன். அங்கு நிகழ்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்தது போல், இங்கு கருத்துகளுக்கு முதலிடம் கொடுத்து சிலவற்றை எழுத முற்படுகிறேன்.

அன்னை எழுதியவை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “நான் கொடுக்கும் ஆன்மீகச் சக்தியைப் பெற வேண்டுமானால், மூலமான பிரெஞ்சில் படித்தால்தான் அது கிடைக்கும். மொழிபெயர்ப்பில் அச்சக்தி ஒரு துளியே இருக்கிறது” என்கிறார் அன்னை.

————

பொறுமை, பொறுத்துக்கொள்வது என்று இரு நிலைகளை நாம் அறிவோம். Tolerence பொறுத்துக்கொள்ளுதல் என்ற கருத்து உயர்வாக நம்மால் கருதப்படும். சத்தியத்தில் வாழ்வு நிலைக்க வேண்டுமானால், ‘இது சரி, இது தப்பு' என்ற நிலைகளைத் தாண்டி வந்து, அவையிரண்டும் எதன் பகுதிகளோ அதை அறிய வேண்டும். பொறுத்துக்கொள்ளுதல் தன்னை உயர்வாகக் கருதும் நிலை என்பதால், சத்தியத்தை நாடுபவர்களுக்கு அது பொருந்தாது என்கிறார்.

————

ஒரு விஷயத்தில் நமக்கு ஆசை அல்லது அக்கரையுள்ளவரை, அதன் உள்ளுறை இரகஸ்யம் புரியாது. எந்த விஷயத்தில் நமக்கு அக்கரையேயில்லையோ அதுதான் நமக்கு முழுவதும் புரியும்.

————

அவதாரங்களுக்குள்ள குறைகள் அவர்கள் அவதரித்த சூழ்நிலையிலுள்ள குறைகளால் ஏற்பட்டவையாகும்.

————

ஒரு செயலின் பகுதிகளை நுணுக்கமாக நம்மால் பார்க்க முடிகிறது என்றால், அதைச் செய்யும் திறன் நமக்கு ஏற்பட்டுவிட்டது என்று பொருள்.

————

பிறர் நம்மைத் தெய்வமாகக் கருதும்பொழுதுதான் நம்மில் உள்ள குறைகள் கண்ணுக்குத் தெரியும்.

————

ஆசை அழிந்த பின்னரே ஆனந்தம் பிறக்கும்.

————

1946இல் எந்தப் பராசக்தியின் அவதாரமாக அன்னை நம்மிடையே வந்தாரோ, அதே பராசக்தி அன்னைக்கு உதவ சூட்சுமமாக உலகில் வந்து ஆசிரமச் சூழலில் இறங்கி வந்தார். அதனால் கடினமாக வேலைகள் க்ஷணத்தில் நிறைவேறக்கூடிய மாறுதல் ஆசிரமச் சூழலில் ஏற்பட்டது. தம் சக்தியை எவரும் பயன்படுத்தாததால் அவர் திரும்பப் போய்விட்டார்.

————

பூரணமாகத் தம்மை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் வகைகளை அன்னை 3 வகைகளாகக் குறிப்பிடுகிறார். 

  1. முழு அடக்கத்துடன் தன் பெருமைகளைச் சரண் செய்து, இறைவன் திருவடிகளில் சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்வது.
  2. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை ஒரு புத்தகத்தைப் பிரிப்பதைப் போல் நம் ஜீவனை உண்மையுடன் இறைவன் முன்பு விரித்து வைப்பது.
  3. முழு நம்பிக்கையுடன் இறைவனின் கைகளில் குழந்தை போல் தவழ்ந்து, பக்தியால் கரைவது. 

————

மேற்சொன்ன நிலைகளுக்குரிய சூத்திரங்கள் பின்வருமாறு:

  1. திருவுள்ளம் நிறைவேற வேண்டும்; என் விருப்பம் நிறைவேற நான் விரும்பவில்லை.
  2. உன் சித்தப்படியே நடக்கட்டும், உன் சித்தப்படியே நடக்கட்டும்.
  3. யுகாந்தர காலத்திற்கும் உனக்கே நான் உரியவன். நெறியோடு இவற்றைப் பயின்றால் அகந்தை கரைகிறது. 

————

1956, பிப்ரவரி 29ஆம் தேதி சத்தியஜீவியம் உலகில் இறங்கியதால் பூமாதேவிக்கு "நேரம் வந்துவிட்டது".

————

சத்தியஜீவியம் உலகில் வந்ததை ஏற்கனவே சத்தியஜீவியம் உள்ளவர்கள் மட்டுமே அறிய முடியும்.

————

ஆசிரமத் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தபொழுது, அன்னை அவர்களையும், ஆசிரமவாசிகளையும் சமமாகவே நடத்தினார். ‘ஏன் சாதகர்களுக்கு நான் பரிந்து பேச வேண்டும்?' என்று கேட்டார்.

————

அன்னைக்கும், பக்தர்களுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட தொடர்பு உண்டு. இது அவர்களுடன் வந்து, அவர்களைக் காப்பாற்றுகிறது. அதிகமாக அன்னையை ஏற்றுக்கொண்டவர் ஆன்மாவில் அன்னையின் அம்சம் வந்து நிரந்தரமாகத் தங்கி, உள்ளிருந்து அவர்கள் வாழ்வை நடத்திச் செல்கிறது.

————

இறைவனிடம் மனிதன் எதிர்பார்ப்பதைப் போல் இறைவன் மனித வாழ்வில் செயல்படுகிறான். நாத்திகனுக்கு இறைவன் நாத்திகமாகவும், பக்தனுக்குப் பக்தியாகவும், மனிதன் எதிர்பார்ப்பதைப் போல் அவனுக்கு இறைவன் காட்சி அளிப்பது சிருஷ்டியின் அற்புதம் என்கிறார் அன்னை.

————

அடக்கம் என்பது கீழ்ப்படிதல் மட்டும் அன்று. பணிவும் அடக்கம் ஆகாது. இறைவன் திருவுள்ளம் எது என்று தன்னால் அறிய முடியவில்லை என்ற தெளிவே அடக்கமாகும். மற்றொரு வகையாகச் சொன்னால், ஒவ்வொரு காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பாங்கே அடக்கம் எனப்படும்.

————

(பிரகிருதி) இயற்கையின் வளம் அளவு கடந்தது. ஒரு வருஷமும், ஓராயிரம் வருஷமும் இயற்கையைப் பொருத்தவரை ஒன்றுதான். யுகங்கள் அவள் காலம். இயற்கை நிதானமாகத் தன் சிருஷ்டியை ரசித்து உற்பத்தி செய்கிறது.

————

சத்தியஜீவியம் தன்னை ஒதுக்கவில்லை என்று (பிரகிருதி) இயற்கை அறிந்துகொண்டு, ‘சத்தியஜீவியத்தின் இலட்சியத்தை உலகில் நிறைவேற்றத் தான் ஒத்துழைப்பேன்' என்று அன்னைக்கு வாக்களித்தது.

————

சத்தியஜீவியக் கப்பல்.

  • பிப்ரவரி 3, 1958இல் அன்னைக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவத்தில் சில அம்சங்களைக் குறிப்பிடுகிறேன்.
  • சத்தியஜீவ லோகம் நிரந்தரமாக உள்ளது.
  • அதில் சத்தியஜீவ உடலுடன் அன்னை நிரந்தரமாக வசிக்கின்றார்.
  • சத்தியஜீவப் பொருளால் கப்பல் செய்யப்பட்டுள்ளது.
  • சிவப்பும், பொன்னிறமும் கலந்து பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் கப்பல் காணப்பட்டது.
  • அவ்வுலகில் நிழல் விழுவதில்லை.
  • ஆனந்தம் நிறைந்த உலகம் அது.
  • கப்பலிலிருந்தவர்கள் அதிக உயரமானவர்கள்.
  • இதற்கு முன் மனிதப் பிறவி எடுத்தவர்களில்லை அவர்கள்.
  • மேலுலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஜீவன்கள் அவர்கள்.
  • கப்பல் கரையை அடைந்தவுடன் முழுப் பயிற்சி பெற்றவர்களையே கரைக்கு அனுப்பினார்கள்.
  • துணி பருத்தியாலோ, மற்றதாலோ செய்யப்படவில்லை; உடலே துணியாக மாறியிருந்தது.
  • மனத்தின் எண்ணத்தால் செயல்கள் நடைபெற்றன.
  • கரையிலிருந்த ஜீவன்கள் உயரமானவர்கள்.
  • அவர்களுக்கு ஆரஞ்சு நிறமில்லை.
  • அவர்களால் எந்த ரூபமாகவும் மாற முடியும்.
  • இடுப்புக்குக் கீழே மட்டும் உடல் திடமாக இருந்தது.
  • ஆசிரமத்திலிருந்தவர்களில் சிலர் அங்கிருந்தனர்.
  • நாம் நல்லது, கெட்டது என்று அறிபவை அங்கு இல்லை.
  • அங்கிருந்து மீண்டும் நம் உலகுக்கு வந்த பின் அன்னைக்கு இங்குள்ள எதைக் கண்டாலும் கேலிச் சிரிப்பேற்பட்டது. நெடுநாள் தன்னால் அடக்க முடியாத சிரிப்பு தன்னை மீறி வர முயன்றது என்றார். 

————

‘பயித்தியம்' என்று நாம் கருதுவோர் சத்தியஜீவ லோகத்திற்கு உரியவர்கள்.

————

பூவுலகில் ஆன்மீகச் சக்தி படைத்தவன் அடிமையாக வேலை செய்வதுண்டு.

————

பூமியில் மௌனம் என்றால் சப்தமின்மையாகும். சத்தியஜீவிய லோகத்தில் மௌனம் தீவிர புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறது.

————

சூட்சும லோகம் பூவுலகத்தைவிட நிஜமானது. பொய்மை முழுவதும் அற்றுப் போனவுடன் சூட்சும லோகம் வெளிப்படும்.

————

எளிய மனமுள்ளவர்கள் சத்தியஜீவ லோகத்தை ஸ்பரிசிப்பது உண்டு. ஆனால் அதுவே சத்தியஜீவியம் என்று அறிவதில்லை.

————

அன்னையின் ஒரு பகுதியில் அனைத்துச் சாதகர்களும் உள்ளனர். அங்கு மயிரிழை மாற்றம் ஏற்பட்டால் ஒரு சாதகருடைய துன்பம் இன்பமாக மாறுகிறது.

————

தூய்மையான, எளிய மனமுடையவர்கள் அனைவரையும் புதிய உலகம் தன்னுள் ஏற்றுக்கொள்ளும்; வக்கிரமான குணமுடையவர்கள் அழிக்கப்படுவார்கள்.

————

தம் இதயத்தில் யோகத்தின் தலைவன் (யோக புருஷன்) வீற்றிருப்பதை அன்னை கண்டார்கள்.

————

தெய்வத்தின் அளவு கடந்த அதிகாரத்தையும், ரிஷியின் அசைக்க முடியாத சாந்தியையும் தியாகம் செய்து அன்னை சத்தியஜீவிய லோகப் பயிற்சியை மேற்கொண்டார்.

————

அன்னையின் உடலுக்குரிய யோகத்தை ஸ்ரீ அரவிந்தர் மேற்கொண்டார்.

————

"நீயே பராசக்தி' என்று ஸ்ரீ அரவிந்தர் அறிவித்தபோது, அன்னையின் உடலுக்கு எல்லையில்லாத திறனை அவர் அளித்தார்.

————

மேல்நாட்டவருடைய உடல் பொய்மையில் திளைக்கிறது. இந்தியருடைய (vital பிராணன்) உணர்வு பொய்மையால் நிறைந்து உள்ளது. இந்திய ரிஷிகளுடைய உடல் ஆன்மீக விளக்கம் பெற்றதால், இன்று எல்லா இந்தியருடைய உடலும் பொய்யின் பிடியிலில்லை.

————

இந்த யோகம் மிகக் கடுமையானது. அன்னை அதன் கடுமையை விலக்கிவிட்டார்.

————

ஆகர்ஷண சக்தி, காந்தம் போன்ற ஜடப் பொருள்களைப் பற்றிய விதிகளுக்குட்பட்டவர் அறியாமையிலிருப்பவர்.

————

மனத்தை விட்டு அகன்ற பின்தான் ஒரு பொருளை உண்மையாக அறிய முடியும்.

————

அன்னையின் யோகம் அதிவிரைவில் நடைபெறுகிறது.

————

ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்கு மௌனம் கொடுத்த பின், 3 நாட்கள் அன்னையின் மனம் சலனமற்றிருந்தது.

————

திருவுள்ளத்தோடு அன்னை 1910இல் ஐக்கியமானார்.

————

அன்னையின் உடல் இறைமயமானது. பூவுலகில் முதன்முதலாக ஜடம் தெய்வத் தன்மையைப் பெற்றதாகும்.

————

 *******



book | by Dr. Radut